“யாருக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கிறோம்?”
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:43)
இறைமகனைத் தன் உதரத்தில் சுமந்திட சம்மதம் தெரிவித்த மரியா, உடனே தன் உறவினரும், வயதில் மூத்தவருமான எலிபெத்தை சந்திப்பதற்காக நசரேத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், மரியாவின் இந்தப் பயணம் கடினமானது; அபாயமும், இடையூறுகளும் நிறைந்தது. ஆயினும், முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கின்ற எலிசபெத்திற்கு அந்த நேரத்தில் உடனிருந்து உதவி செய்யவேண்டியது அவசியம் என்று மரியா உணர்ந்தார். மரியாவின் எதிர்பாராத வ்ரவை க்ண்ட எலிசபெத், அவரை மிக்க ம்கிழ்ச்சியோடு வரவேற்கிறார். எலிசபெத்தும், மரியாவும் சந்திக்கின்ற இந்த நேரத்தில், தத்தம் அன்னையரின் வயிற்றிலிருக்கின்ற இயேசுவும், திருமுழுக்கு யோவானும் கூடச் சந்தித்துக் கொள்கின்றனர்.
ஒருவருக்கு உதவி தேவைப்படுகின்ற சமயத்தில் தவறாமல் துணையிருந்து ஆதரவளிக்கின்ற அன்பின் மேன்மையை, அன்னை மரியா செயலில் காட்டுகிறார். பரபரப்பும், அவசரமும் நிறைந்த நம் வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கின்ற பலரில் நமது உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற ‘எலிசபெத்’களும் இருக்கிறார்கல் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? அத்தகையோருக்குத் தயங்காமல் உதவி செய்ய முன்வருவோம். இது போன்ற கைம்மாறு கருதாது உதவிகள் செய்யும்போது, இறையன்பின் விளைவான பிறரன்பு நம்மிடம் வெளிப்படுகிறது.
எங்களோடு என்றும் உடனிருந்து உறவாடுகின்ற இறைவா! உம்முடைய மக்கள் எல்லாரும் ஒற்றுமையுடனும், தோழமையுடனும் வாழ்ந்திட நீர் அழைக்கின்றீர். எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கின்ற ‘எலிசபெத்’களை அடையாளம் கண்டுகொள்ளவும், அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யவும் எங்களுக்கு அருள்தாரும்.