“சீரற்ற இடத்தில் சிறப்பான அதிசயம்”
பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் (எசாயா 40:3)
ஒரு ஊரில் இருந்த ஆசான் ஒருவரின் மகன் அடிக்கடி காட்டுக்குள் வெகுதூரம் அலைந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த ஆசான் வருத்தமுற்றார். ஒருநாள் அவர், “மகனே! அவ்வப்போது இந்த அடர்ந்த காட்டினுள்ளே போகிறாய். அதிக நேரம் கழித்துத் தான் வெளியே வருகிறாய். காட்டினுள்ளே நீ எதைத் தேடிச் செல்கிறாய்?” என்று கேட்டார். “கடவுளைக் காண்பதற்காக நான் அந்தக் காட்டுக்குள் போகிறேன், அப்பா” என்று அந்த மகன் பதில் சொன்னான். அதைக் கேட்ட ஆசான், “மகனே! கடவுளைக் காண்பதற்கான முயற்சியில் நீ ஈடுபடுவது நல்லது தான். ஆனால், அதற்காக நீ காட்டினுள்ளே அலைந்து தேடவேண்டியதில்லை… ஏனெனில் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றார். அதற்கு அவருடைய மகன், “உண்மை தான் தந்தையே! கடவுளுடைய படைப்புகளில் அவருடைய பிரசன்னத்தைக் காண விழைகிறேன்” என்றான்.
ஆம்! அந்த ஆசான் சொன்னது முற்றிலும் உண்மைதான். கடவுளின் பிரசன்னம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கோவில் கருவறைகளில், வாழுமிடங்களில், இறையடியார்கள் உள்ளத்தில், தீங்கிழைப்போர் மத்தியில் - இப்படி எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாகக் கடவுள் இருக்கிறார். நம் வாழ்வில் கடவுளைக் கண்டு பேரானந்தம் அடைவதற்காக நாம் அங்குமிங்கும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. “கடவுளின் படைப்புகளில் அவரைத் தேடுகிறேன்” என்று மகன் கூறியதிலும் தவறில்லை. இறைமாட்சி இயற்கையில் வெளிப்படுவதைத் தான், "பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்" என்று இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். பண்பாடற்றதாகத் தெரிகின்ற இடங்களில் ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும். விண்ணையும், மண்ணையும், இந்தப் பிரபஞ்சத்துள்ள அனைத்தையும் படைத்தவர், ஒரு மானிடப் பெண்ணின் உதரத்தில் கருவாகி, இவ்வுலகில் மனிதனாகப் பிறக்கத் திருவுளம் கொண்டார். இதுவும் பண்பாடற்ற ஒரு செயலாகத் தோன்றுகிறதல்லவா?
ஆண்டவருக்கான வழியைப் பாலைவனத்தில் ஆயத்தபடுத்தவும், கடவுளின் வரவுக்கான நெடுஞ்சாலையைப் பாழ்நிலத்தில் சீராக்கவும் இறைவாக்கினர் எசாயா அறிவுறுத்துவது ஆச்சரியமான வழிமுறை தான். ஆம்! கடவுளின் வருகை நாம் எதிர்பாராத வகையில் தான் அமைகிறது.
அதிசயங்கள் செய்கின்ற ஆண்டவரே! மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், கரடுமுரடான இடங்களிலும் உமது மேலான மாட்சியை நீர் வெளிப்படுத்துகின்றீர். உம்முடைய தெய்வீக வல்லமையின் படைப்பான இந்தப் பூமியின் இயற்கை வளங்களை ஆசீர்வத்துக் காத்தருளும். பருவநிலை மாற்றங்களையும், அதன் விளைவுகளையும் சரியான முறையில் கணித்து எதிர்கொள்வதற்கான விவேகத்தை உலகில் உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அளித்தருளும்.