“இயலாதவை சாத்தியமாகட்டும்”
"ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37)
மனிதனாகப் பிறந்த எவரும் கடவுளின் சொந்தப் பிள்ளயாக ஆக முடியுமா? “இத்தகைய உறவுக்கு வாய்ப்பே இலலை” என்றுதான் நமது சிற்றறிவுக்குத் தோன்றுகின்றது. ஆனால், “கடவுளின் விருப்பம் இயலாதவற்றையும் சாத்தியமாக்கும்” என்று இன்றைய இரணடாம் வாசகத்தில் புனித பவுலடியார் கூறுகிறார்.
“அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம்” என்று எபேசு திருஅவைக்குத் திருத்தூதர் புனித பவுல் எழுதுகிறார். ஆம்! “இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மைத் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்” ஒரு சிற்றூரில் வாழ்ந்த ஏழை இளம்பெண்ணைச் சந்திக்கின்ற வானதூதர், “அருள்மிகப் பெற்றவர் நீர்; ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று உரைக்கிறார். மேலும், “இறைமகனை உம் உதரத்தில் சுமக்கப் போகிறீர், அந்தக் குழந்தை “பெரியவர்”, “உன்னதரின் மகன்”, “தூயவர்” என்றெல்லாம் கூறுகிறார்.
இதைக் கேட்ட மரியா வியப்படைகிறார்; “இது எப்படி நிகழும்? கன்னி ஆகிய நான் ஒரு குழந்தைக்குத் தாய் ஆக இயலாதே?” என்று மரியா கலக்கமடைகிறார். மரியாவின் கேள்விகளுக்கு அந்த வானதூதர் தெளிவான மறுமொழியோ, உறுதியான அறிவுரையோ, எதிர்வரும் கடினமான நாள்களுக்கான வழிகாட்டுதலோ ஏதுவும் சொல்லவில்லை. மாறாக, “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை; அவருடைய வல்லமை உம்மோடு இருக்கும்” என்னும் உறுதிமொழியை மட்டும் கொடுக்கிறார். இந்த உறுதிமொழியை முற்றிலுமாக மரியா நம்புகிறார்; ‘கடவுளால் எல்லாம் சாத்தியம்’ என்று ஏற்றுக்கொள்கிறார்; ‘உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று சொல்லித் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறார்.
இறைவா! ஞானத்தின் ஊற்றாக இருப்பவரே! அன்னை மரியாவை கருவிலேயே மாசற்றவராக நீர் உருவாக்கினீர். உம் திருமகன் இவ்வுலகில் மனிதனாகத் தோன்றுவதற்கு அவரைக் கருவாகத் தன் உதரத்தில் தாங்குவதற்குச் சம்மதிக்கின்ற மனௌறுதியை, துணிவை அன்னை மரியாவுக்குக் கொடுத்தீர். எங்கள் வாழ்வில் உமது வழிகாட்டுதலின் தூண்டுதலை நாங்கள் பற்றுறுதியோடு ஏற்றூக்கொள்ளும் வரத்தை எங்கள்மேல் பொழிந்தருளும்.