திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 8-ஆம் நாள் - திருவருகைக் காலம் - இரண்டாம் ஞாயிறு

“காலக் குறிப்புகளின் முக்கியத்துவம்”

வாசகங்கள்: பாரூக் 5:1-9; பிலிப்பியர் 1:4-6, 8-11; லூக்கா 3:1-6


மறைநூல் வாக்கு:

திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார் (லூக்கா 3:1)

சிந்தனை:

எல்லாவற்றிற்கும் மேலானவரும், எல்லாவற்றிலும் உறைபவருமான இறைமகன் இயேசுவை குறிப்பதற்கு, ‘உலகின் ஒளி’, ‘அனைத்துலகின் வேந்தர்’, ‘அமைதியின் அரசர்’ என்னும் பற்பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடவுளின் பெருமையை ஒரு சில வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. முதல் நூற்றாண்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள், வெவ்வேறு நிலப்பகுதிகளை ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்கள், மற்றும் மதத்தலைவர்ள் ஆகியோரைப் பற்றிய குறிப்புகளைப் புனித லூக்கா எழுதுகின்றார், உரோமைப் பேரரசின் ஆட்சியின் கீழ் ‘திபேரியு சீசர்’, ‘பொந்தியு பிலாத்து’, ‘ஏரோது’, ‘லிசானியா’, ‘அன்னா’, ‘கயபா’ ஆகியோர் ஆட்சியாளர்கலாகவும், மதத்தலைவர்களாகவும் இருந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில், இறைமகன் இயேசு இவ்வுலகில் மனிதவுரு எடுக்கத் திருவுளம் கொண்டார்.

அரசியல் அதிகாரப் போராட்டங்களும், மத வேறுபாடுகளும், வன்முறை கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. யூதேயா நாட்டில் சட்டம் ஒழுங்கு முறைகளை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்துவும், அவருடைய படைவீரர்களும் கட்டுப்படுத்தி வந்த நேரம். கடுமையான வரிச்சுமைகளுக்கு இடையே, யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவிய காலம். இத்தகைய குழப்பமும், கலக்கமும் நிறைந்த நேரத்தில் தான், இறைமகன் இயேசு குழந்தையாகப் பிறக்கிறார். கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட தயாரகின்ற நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை என்ன? இடர்பாடுகள் பலவற்றை நாம் எதிர்கொள்ள நேர்ந்தாலும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் நம்மோடு இருக்கின்ற கடவுளின் உடனிருப்பை உறுதியோடு நம்புவோம்.

இறைவேண்டல்:

எல்லாக் காலங்களிலும் எங்களோடு உறைபவரே, இறைவா! உம்முடைய உறுதியான நிலையான உடனிருப்புக்காக உமக்கு நன்றி சொல்கின்றோம். எதிர்வருகின்ற நாள்களில் உமது பிசன்னம் எங்கலை வழிநடத்திக் காத்திடவும், உமது அரவணைப்பில் எங்கள் முயற்சிகள் நலம் பெறவும் வரம் தாரும்.


அன்பின்மடல் முகப்பு