திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 7ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் முதல் வாரம் - சனிக்கிழமை

“பரிவு கொண்ட நோக்கு”

வாசகங்கள்: எசாயா 30:19-21, 23-26 மத்தேயு 9:35-10:1, 5 - 8


மறைநூல் வாக்கு:

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார் (மத்தேயு 9:36)

சிந்தனை:

நமது வாழ்க்கைப் பாதையில் திடமான ஊன்றுகோலாக இருப்பது, நம்பிக்கையுடன் கூடிய எதிர்நோக்கு. நம்முடைய பள்லி - கல்லூரி நாள்களில் பாராட்டத் தக்க வகையில் சிறப்பான தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்று எதிர்நோக்கியிருக்கிறோம். வேலைவாய்ப்புகளைத் தேடி அலையும்போது, நிரந்தரமான வருமானம் கிடைக்கின்ற வேலை வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறோம். அதன் பின்னர், சந்தோஷமான இல்லறம், குழந்தைகளுடன் மனநிறைறைவான குடும்ப வாழ்க்கை அமைந்திடும் என எதிர்நோக்கியிருக்கிறோம். ஆனால், எல்லோருடைய எதிர்நோக்கும் நினைத்தவண்ணம் நிறைவேறாமல் போவதை பார்க்கிறோம்.

வாழ்க்கைப் பயணத்தில் ஏமாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை தான். அது போன்ற நேரங்களில் கடவுளின் இரக்கம் நம்மைக் கைவிடுவதில்லை. இயேசுவின் உள்ளம் அளவற்ற பரிவோடு செயலாற்றுவதை நற்செய்திகளில் காண்கிறோம். தன்னுடைய பொதுவாழ்வின்போது மக்களுடைய இன்னல்களை நேருக்கு நேராகக் கண்டு, உணர்ந்து, தெரிந்து கொள்ளும் விதத்தில் இயேசு மக்களோடு நெருக்கமாக இருக்கிறார். அவர்களுடைய துன்பங்களைக் காணும்போது, பரிவு காட்டுகிறார். அடுத்திருப்போரின் வலியை, மனக்குமுறலைக் கண்டு அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார்.

கைவிடப்பட்டோருக்கும் கருணையோடு உதவி செய்கிறார். ஆம்… தவறிப்போன ஆட்டின் மீது இறைமகன் இயேசு தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார். அவரைப் பின்பற்றி வருகின்ற எல்லா ஆடுகளும் பாதுகாப்பாகக் கொட்டிலுக்கு வந்து சேரும் வரை ஒரு உறுதியான நல்ல ஆயனைப் போல உடனிருந்து காக்கிறார்.

இறைவேண்டல்:

இரக்கம் நிறைந்த இறைவா! உம்மையே நம்பியிருக்கின்ற மக்களுக்கு நீரே புகலிடமும், அரணுமாக இருப்பீராக! போராட்டங்களும், மனௌளைச்சலும் ஆட்கொள்ளும் வேளையில், உமது அன்பும், ஆதரவும் அவர்களைத் திடபடுத்துவதாக!


அன்பின்மடல் முகப்பு