“செயலாற்றுவதற்கு மக்களைப் பயிற்றுவித்தல்”
“நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” (மத்தேயு 9:29)
கால் பந்து அல்லது கிரிக்கேட் ஆகிய விளையாட்டுகளின் நுணுக்கங்களை விளையாட்டு வீரர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்களைத் திறம்படச் செயலாற்றச் செய்பவர் “கோச்” எனப்படும் பயிற்சியாளர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் ஆற்றலையும், செயலாற்றும் திறனையும் கண்டறிந்து, அவற்றை அவர்கள் உணர்ந்து சரியான சமயத்தில் வெளிப்படுத்துவதற்கு ஏற்றவாறு அவர்களைத் தயார் செய்வது அந்தப் பயிற்சியாளர் தான். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஒரு பயிற்சியாளரப் போலவே இயேசு நடந்து கொள்கிறார்.
விடாமல் பின்தொடர்ந்து வந்த இரண்டு பார்வையற்றவர்களும் கேட்பதற்கு முன்பே, அவர்களின் தேவை என்ன என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே, காலந்தாழ்த்தாமல், வெகுதூரம் நடக்கவிடாமல், உடனடியாக அவர்களுக்குப் பார்வை அளித்திருக்க முடியும். அருங்குறிகள் செய்வதற்கு இறைமகனாகிய இயேசுவுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை தான். ஆனாலும், இங்கு வேறொரு அணுகுமுறையை இயேசு கையாளுகிறார். தன்னிடம் உதவி நாடி வருகின்றவர்களும் நலடைவதில் விருப்பம் கொண்டு இணைந்து செயலாற்றுகின்ற திறனைப் பெற்றிட அவர்களைப் பயிற்றுவிக்கிறார். எனவே தான் அவரை நெருங்கிவந்து, வீடுவரை கத்திக் கொண்டே பின்தொடர்ந்து வந்து, ‘இயேசு தான் தங்களுக்கு நலம் அளிக்க முடியும்’ என்ற நம்பிக்கையை வெளிபடுத்திய பிறகு தான் இயேசு அவர்களைக் குணப்படுத்துகிறார்.
பொம்மலாட்டத்தில் பொம்மைகளின் அசைவுகளை இயங்குகின்றவரைப் போல, நமது வாழ்வின் ஒவ்வொரு சலனத்தையும் இயக்குபவர் அல்ல நம் கடவுள். மாறாக, நம்முடைய வாழ்வில் சிக்கலான இடர்பாடுகளை நாம் எதிர்கொள்கின்ற நேரத்தில், நம்பிக்கையோடு முயற்சி செய்யவும், அதற்கான பரிசைப் பெற்றுக் கொள்ளவும் உறுதியாகச் செலாற்றுவதற்கு நம்மைத் தயார் செய்கின்ற பயிற்சியாளர், அவர்,
மூவொரு கடவுளே, இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள், ஒருவருக்கொருவர் உதவும் விதமாகப் பயனுள்ள திடமான உறவுநிலைகளை வளர்த்துக் கொள்ளவும், எங்கள் வாழ்க்கைப் பாதையில் ஊக்கத்தோடு இணைந்து பயணம் செய்யவும் எங்களுக்கு அருள் தாரும்.