“வாக்களிக்கப்பட்ட உடனிருப்பு”
"சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" (திருப்பாடல் 23:4)
கடவுள் நம்மை அன்பு செய்கிறார். புண்பட்டிருக்கின்ற மனம் பிறருடைய இரக்கமற்ற வார்த்தைகளால் காயப்படும்போது, கடவுள் நம்மை அன்பு செய்கிறார். ‘கவலையளிக்கும் நோய் இருப்பது உண்மை’ என்று ஆய்வறிக்கை உறுதி செய்யும்போது, கடவுள் நம்மை அன்பு செய்கிறார். செய்யவிருக்கின்ற நற்செயலை நம் குற்றௌணர்வு அச்சுறுத்தித் தடுக்கும்போது, கடவுள் நம்மை அன்பு செய்கிறார். இரக்கத்துடன் பிறரன்புச் செயல்களைச் செய்யும் மனதிடம் இல்லாதபோது, கடவுள் நம்மை அன்பு செய்கிறார். ஆக, நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.
“கடவுள் நம்மை அன்பு செய்கிறார்” என்னும் நம்பிக்கையை உறுதியோடு உள்ளத்தில் ஏற்கவேண்டிய காலமே, இந்தத் திருவருகைக் காலம். இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், அளவற்ற அன்பால் நம்மை அரவணைக்கின்ற இறைவனின் உடனிருப்பு நம்மோடு இருக்கிறது. சில வேளைகளில், இருள்சூழ் பள்ளத்தாக்குகள் நம்மைத் தொடர்ந்து வரலாம்; தீராத நோயிலிருந்து நாம் குணம் அடையாமல் இருக்கலாம்; ஆயினும், என்றும் அணைத்துக் காத்து வருகின்ற நல்லாயனின் உடனிருப்பு, நமக்கொரு மாபெரும் கொடையல்லவா?
"உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" (திருப்பாடல் 23:6) என்று திருப்பாடல் ஆசிரியர் உறுதியோடு சான்றுரைக்கின்றார். இந்த வார்த்தைகளைத் திருவருகைக் காலத்தில் நம் இதயத்தில் ஏற்போம். கடவுளின் பேரன்பு எந்நாளும் நம்மைச் சூழ்ந்து காப்பதால், தொய்வடையும் நம் மனநிலை இறையருளால் புதுப்பிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
என்றும் எம்மோடு உறைகின்ற இறைவா! வாழ்வின் இன்ப துன்பங்களிலும், உயர்விலும், தாழ்விலும் நீர் எம்முடன் துணையாக உடனிருக்கின்றீர். வாழ்வின் எல்லா நிலைகளையும் துணிவோடு எதிர்கொள்வதற்கான அருளை எங்கள் உள்ளத்தில் பொழிந்து எம்மை வலுபடுத்துவீராக!