திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 3-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் முதல் வாரம் - செவ்வாய்கிழமை

புனித பிரான்ஸிஸ் சவேரியார் திருவிழா

“சிறியவற்றில் வெளிப்படுகின்ற பேருண்மை”

வாசகங்கள்: எசாயா 11:1-10; லூக்கா 10:21-24

மறைநூல் வாக்கு:

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும் (எசாயா 11:1)

சிந்தனை:

கடலூர் நகரத்திற்கு அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் பத்து ஏக்கர் பரப்பளவில் மூலிகைத் தோட்டம் ஒன்றை சித்தமருத்துவர் ஒருவர் பராமரித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் அலைந்து திரிந்து சேகரித்து வந்த அபூர்வமான மூலிகைச் செடிகளும், பயிர்களும், மரங்களும் நூற்றுக்கணக்கில் அந்தத் தோட்டத்தில் இருந்தன. அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள், சுற்றுவட்டாரத்தில் பல கிராம மக்களுக்கு நோய் நீக்கி நலமளித்து வந்தன. ஒரு கார்காலத்தில் கடலூர் மாவட்டத்தைத் தாக்கிய கடுமையான புயற்காற்றில் அந்தச் செடிகளும், மரங்களும் முற்றிலும் சேதமடைந்து, பாதிக்கும் மேலான தாவரங்கள் அழிந்து போயின.


ஆயினும், அந்தச் சித்தமருத்துவர் மனம் தளரவில்லை. கொல்லி மலை, ஏலகிரி, சதுரகிரி, பர்வதமலை, குற்றாலம் ஆகிய இடங்களில் தனக்குப் பரிச்சயமாயிருந்த மருத்துவர்கள், நண்பர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு, தன் தோட்டத்தில் அழிந்து போன மூலிகைச் செடிகளின் விதைகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி, மிகுந்த முயற்சியோடு அவற்ரை தோட்டத்தில் நட்டு வளர்த்தார். நிலத்தடியில் நிகழும் வளர்ச்சிக்குக் கால அவகாசமும், ஆழமான நம்பிக்கையும் அவசியமல்லவா? ஆறேழ ஆண்டுகளில் செடிகள் நன்றாக வளர்ந்ததால் தோட்டமும் பழைய பொலிவைப் பெற்றது. அளவிலும், வடிவிலும் சிறியதாக இருக்கின்ற விதைகளில், நம்மைப் பிரமிக்க வைக்கின்ற அற்புதமான வளர்ச்சியின் அதிசயம் மறைந்திருப்பது வியப்பூட்டும் உண்மையல்லவா?


விண்ணையும், மண்ணையும் படைத்த கடவுளின் திருமகனும், ஒரு இளம்பெண்ணின் உதரத்தில் அடங்கும் அளவுக்குத் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டார். ஆம், திருவருகைக்காலம் நம் சிந்தனைக்கு எழுச்சியூட்டுகின்ற மகத்தான காலம். சின்னஞ்சிறிய செயல்களிலிருந்து வெளிப்படவிருக்கின்ற பெரும் பேறுகளை எண்ணி ஆழ்ந்த எதிர்நோக்கோடு நாம் காத்திருக்க வேண்டிய காலம். ஆன்மீக வளர்ச்சியின் உருவாக்கம் சிறிய செயல்களிலிருந்தே தொடங்குகின்றது. சின்னஞ்சிறு தீப்பொறியிலிருந்து பிறக்கின்ற சுடரொளி, இருளை நீக்கிப் புதிய காட்சிகளைக் காட்டுகின்ற திறன் பெற்றிருக்கிறது. பிறரன்பைத் தூண்டுகின்ற கருத்துச் செறிவுள்ள ஒரு சிறிய செயலை (எடுத்துகாட்டாக, சிறியதொரு ஜெபமுயற்சியை) இன்றிலிருந்து தொடங்குவோம்.

இறைவேண்டல்:

இறைவா! எங்கள் எதிர்நோக்கை நிறைவேற்றுகின்ற கடவுளே! ஒரு தூய கன்னியின் உதரத்தில் கருவாகி உமது திருமகன் இவ்வுலகில் பிறப்பதற்குத் திருவுளம் கொண்டார். எங்கள் அன்றாட வாழ்வில் அயலாருக்கு பயனளிக்கும் வகையில் சின்னஞ்சிறு அன்புச்செயல்களைச் செய்திட எங்களுக்கு அருள் தாரும்.


அன்பின்மடல் முகப்பு