திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 2-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் முதல் வாரம் - திங்கள்கிழமை


“படைப்பின் விந்தையான ஆச்சரியத்தில் அமைதி”


வாசகங்கள்: எசாயா 2:1-5; மத்தேயு 8:5-11


மறைநூல் வாக்கு:

“இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்”. (மத்தேயு 8:7)

சிந்தனை:

உலகெங்கும் கட்புலனாகாத தொற்றுப் பரவிக்கொண்டிருந்த காலம். வீட்டைவிட்டு வெளியே வராமல் எல்லாப் பணிகளையும், கடமைகளையும் வீட்டின் உள்ளிருந்தே செய்யவேண்டிய கட்டாயம். ஆலயங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்ததால் வழிபாடும், ஜெபங்களும் கூட வீட்டிற்குள்ளேயே தான். தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து கொண்டு திருப்பலியிலும், ஏனைய திருவழிபாடுகளிலும் நாம் பங்கேற்றுக் கொண்டிருந்தோம். “எவ்வள்வு சீக்கிரத்தில் இந்நிலை மாறுமோ?” என்னும் எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்தது. நேரிலே திருப்பலியில் பங்கேற்று பெறுகின்ற மனநிறைவு இல்லையென்றாலும், ஒரு ஆழமான நம்பிக்கை நம் உள்ளங்களில் இருந்தது: “இறைவன் இங்கேயும் பிரசன்னமாயிருக்கிறார்”.

நூற்றுவர் தலைவர், “என் பையன் முடக்குவாதத்தால் வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்று கூறியபோது, “அவனைத் தொழுகைக்கூடத்திற்கோ அல்லது தான் இருக்கின்ற இடத்திற்கோ கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்று கூறுகிறார். அதாவது, “நான் உன் இல்லத்திற்கே வருகிறேன்” என்கிறார். இவ்வாறு இயேசு சொல்லும்போது, “எந்த இடத்திலும் அவருடைய தெய்வீக பிரசன்னத்தை நாம் எதிர்கொள்ள முடியும்” என்னும் கருத்தை நமக்கு எடுத்துரைக்கிறார். ஆலயத்தில் ஒன்றிணைந்து ஜெபிப்பது ஒரு மாபெரும் கொடை தான். ஆயினும், நாம் அன்றாடம் புழங்குகின்ற சாதாரண இடங்களில் கூடக் கடவுளின் உடனிருப்பு இருக்கிறது. எளியதோர் மாட்டுத் தொழுவத்தில் குழந்தையாகப் பிறக்கத் திருவுளம் கொண்ட இறைமகன் இயேசு, மிகச் சாதாரணமான நமது இல்லங்களிலும் நம்மைச் சந்திக்க வருகிறார்.

இறைவேண்டல்:

கருணை வடிவான கடவுளே! எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நிலையான உமது உடனிருப்பைக் காண்பதற்கு எங்கள் புலன்களுக்கு வலுவூட்டுவீராக. எங்கள் அன்றாட அலுவல்களின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு இடத்திலும், முக்கியமாக நாங்கள் தனித்திருக்கின்ற வேளைகளில், உமது பிரசன்னத்தின் அண்மையை நாங்கள் உணரச் செய்தருளும்.


அன்பின்மடல் முகப்பு