திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 1-ஆம் நாள் - திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு
“படைப்பின் விந்தையான ஆச்சரியத்தில் அமைதி”

வாசகங்கள்: எரேமியா 33:14-16; 1 தெசலோனிக்கர் 3:12-4:2; லூக்கா 21:25-28,34-36


மறைநூல் வாக்கு:

“கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும்...” (லூக்கா 21:25)

சிந்தனை:

கடவுளுடைய படைப்புகளின் இயக்கம் நமக்கு வியப்பளிக்கின்றது. சடசடவெனப் பெய்யும் மழையின் சத்தமும், மழைநீரை உறிஞ்சிய மண்தரையின் தோற்றமும், மழைநீரால் கழுவப்பட்டுப் புதிய எழிலுடன் ஆடுகின்ற மரங்களின் இலைகளும் வியப்பளிக்கின்றன. ஆனால், மழை ஓய்ந்து நின்றவுடன் எங்கும் ஆழ்ந்த அமைதி சூழ்கின்றது. இதைப் போலப் பல சமயங்களில் நம்மைச் சுற்றிலும் கலகலப்பாக, உற்சாகமாக இருக்கின்ற சூழல், திடீரென முற்றிலும் மாறிவிட்டதாகத் தெரிகிறது. நொடிபொழுதில் நமது சுற்றுபுறமும், நமது மனமும் அமைதியில் உறைந்து போகின்றன.

உலகின் மீட்பராம் இயேசு இம்மண்ணுலகிற்கு மீண்டும் வருவார் என்பதையே திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று தரப்பட்டுள்ள விவிலிய வாசகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஒப்பற்ற தனது வல்லமையோடும், மாட்சியோடும் இயேசு வருவார் என்றும், நாம் “நினையாத நேரத்தில்” அவரது இரண்டாம் வருகை நடைபெறும் என்றும் இன்றைய வாசகங்கள் நினைவூட்டுகின்றன.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் “படைப்பின் செயல்பாடுகளைக் கவனமுடன் கண்டுணர வேண்டும்” என்று தன் சீடர்களுக்கு இயேசு அழைப்பு விடுக்கிறார். வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்துகின்ற சூரியனும், சந்திரனும், வானமெங்கும் பரவியிருக்கின்ற எண்ணற்ற விண்மீன்களும், கடவுளின் வல்லமையையும், மனிதர்மேல் அவர் கொண்டுள்ள அன்பின் மேன்மையையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. “நமது கண்ணுக்குப் புலப்படாத வண்ணம் விண்ணுலகிலிருந்து செயலாற்றுகின்ற ஒரு நிலைப்பாட்டை நம் இறைவன் தேர்ந்து கொள்ளாமல், தான் அன்பு செய்கின்ற மக்களோடு நேரிடையாக உறவாடி வாழ்ந்திட இறைவனின் திருமகன் இந்த உலகில் மனிதனாகப் பிறக்கத் திருவுளம் கொண்டார்” என்பதை இந்தத் திருவருகைக் காலம் முழுவதும் நமது சிந்தனையில் எண்ணி மகிழ்கிறோம்.


உலகெங்கும் உள்ள படைப்புப் பொருள்களிலெல்லாம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்ற மாற்றங்கள் குறிப்பிட்ட அடையாளங்களைக் காட்டுகின்றன. அவற்றில் வெளிப்படும் இறைவல்லமையை நாம் கண்டுணர முயலுவோம்.

இறைவேண்டல்:

எங்களைப் படைத்துக் காப்பவரே, இறைவா! உமது வல்லமையால் படைக்கின்ற அனைத்திலும் உம்மையே நீர் வெளிப்படுத்துகின்றீர். அவையெல்லாம் நல்லவை என்றும் காண்கிறீர். உமது படைப்பின் வடிவமாகத் திகழ்கின்ற இயற்கையை மதித்து நடக்கும் பண்பை எம்மில் வளரச் செய்வீராக! படைப்புகள் எல்லாவற்றிலும் உறைகின்ற உமது உடனிருப்பை நாங்கள் கண்டுணரும் ஞானத்தை எங்களுக்கு வழங்குவீராக!


அன்பின்மடல் முகப்பு

0