திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

25.12.2022 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி!

அருள்மொழி:

வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது. (லூக்கா 2:10-14)

வார்த்தை வாழ்வாக:

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! ஆண்டவராகிய கிறிஸ்துவின் மாட்சிமிகு பிறப்புப் பெருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடுகின்ற தருணம். அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

அன்று முதன்முதலில் இயேசு குழந்தையைக் காணச் சென்ற இடையர்களுடைய மனநிலையில் நம்மை வைத்துப் பார்ப்போம். ஏழைகளான இந்த இடையர்கள். அல்லும் பகலும் ஊருக்கு வெளியே வயல்வெளியில் ஆடுகளைப் பாராமரித்து, மேய்ச்சலின்போது அவற்றைக் காவல் காத்து வந்தவர்கள்.  அன்றைய இரவில் தோழமையோடு வழக்கம்போலக் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். எப்போதும் போலத் தங்களுக்குள் உரையாடிக் கொண்டும், சிரித்து அளவளாவிக் கொண்டும் இருந்த அவர்கள், சற்று நேரத்தில் அவ்விடத்தில் தோன்றப் போகின்ற ஆச்சரியமான நிகழ்வைப் பற்றிச் சிறிதேனும் அறிந்திருக்கவில்லை.

இடையர்கள் எல்லாரும் ஒன்றாக இருந்த சமயத்தில், ஆண்டவரின் தூதர் அவர்களுக்குத் தோன்றி, ‘மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கூறியபோது, முதலில் அவர்கள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கக்கூடும். ஆனால் அதற்குப் பிறகு தான் அவர்களைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்திய அதிசய நிகழ்வு அங்கு நடந்தேறியது. உலக மீட்பரின் பிறப்பை அத்தூதர் அறிவித்து முடித்தவுடன், “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தவாறு எண்ணற்ற விண்ணக தூதர்கள் அணிஅணியாகத் தோன்றி இன்னிசை பாடியதை நேரிலேக் கண்டார்கள்.

புதிதாகப் பிறந்திருக்கின்ற அரசனை தரிசிக்கவும், அவரை வாழ்த்தி வணங்கிடவும், தாழ்நிலையிலிருந்த இந்த இடையர்களையே கடவுள் தேர்ந்தெடுத்தார். உலக மீட்பரைக் கண்டு தொழுவதற்காக, அந்தக் காலகட்டத்தில் இருந்த ‘பெரும் புள்ளி’களை கடவுள் அழைக்கவில்லை. எளிமையான இந்த ஆயர்களுக்கே கடவுள் முதல் அழைப்பை விடுத்தார் என்ற உண்மை நமக்குக் கூறுகின்ற செய்தி இதுதான்: கடவுளின் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமானவர்களே. உலகத்தின் பார்வையில் முக்கியமானவர்களாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தெரிவு செய்யவில்லை. நாம் யாராக இருந்தாலும் - செல்வந்தரோ அல்லது ஏழையோ, வலியவரோ அல்லது வலிமையற்றவரோ - எந்த நிலையில் இருந்தாலும், நம் ஒவ்வொருவருடைய உளப்பாங்கையும், நேர்மையையும், ஒழுக்கநெறியையும் சீர்தூக்கிப் பார்த்தே அவரை அணுகி வர அழைக்கிறார்.  

அடுத்ததாக, கடவுளை நெருங்கி வரவும், அவரோடு உறவு கொள்ளவும் நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையே உலக மீட்பரின் பிறப்பும், அவரை முதன்முதலாகத் தரிசிப்பதற்கு எளிய இடையர்களுக்குக் கிடைத்த வாய்ப்பும் எடுத்துரைக்கின்றன. கடவுளை நாம் அறிந்து கொள்ளவும், அவருடைய அளவற்ற அன்பின் ஆழத்தை உணரவும் வேண்டும் என்பதற்காகவே விவரிக்க முடியாத விதத்தில் கடவுள் தன்னையே தாழ்த்திக் கொண்டார். “அஞ்சாதீர்கள்” என்று இடையர்களுக்கு வானதூதர் அன்று சொன்னது போல, நமது மீட்பராகப் பிறந்த கிறிஸ்துவை நெருங்கி வருவதற்கும், உறவு கொள்வதற்கும், அன்பு செய்வதற்கும், ஆராதிப்பதற்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. மிகவும் எளிமையான, வலுவற்ற, மாசற்ற, சின்னஞ்சிறு குழந்தையாகக் கடவுள் நம் நடுவே வந்துள்ளார். அவருடைய உடனிருப்பை உணரவும், ஆசி பெருகும் அவருடைய திருவருகைக்காகக் கடவுளைப் போற்றிப் புகழவும் நாம் முன்வருவோம்.

சிந்தனை:

உற்சாகமூட்டுகின்ற பல சிறப்புகளும், கொண்டாட்டங்களும் நிறைந்ததே கிறிஸ்துமஸ் விழாக் காலம். உல்லாசக் கூட்டங்கள், பரிசுப் பரிமாற்றங்கள், விருந்து உபசார நிகழ்வுகள் ஆகியன பொதுவாக இந்தக் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. ஆனால், இவை எல்லாவற்றிக்கும் மேலாக, ‘கிறிஸ்து பிறப்பு’ என்னும் திருநிகழ்வின் ஆழமான பொருளைப் புரிந்து கொள்வது அவசியம். எல்லாம் வல்லக் கடவுள், தனது ஒப்பற்ற மாட்சியைத் துறந்து, நம்மைப் போன்ற மனித உருவெடுத்து உலகில் பிறந்தார். சாதாரண மனிதனாக வாழ்ந்தபோது, இவ்வுலக வாழ்வின் எல்லா நிறைகுறைகளையும் அனுபவித்தார்.

இறைவேண்டல்:

மன்றாட்டு: ஆண்டவரே! நான் உம்மை அன்பு செய்கிறேன்; ஆராதிக்கிறேன். எங்களோடு உறைகின்ற உம்முடைய உடனிருப்பு என்னும் தெய்வீக கொடைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மைத் தொழுதிட வருகின்ற ஏழை இடையர்களோடு நாங்களும் இணைந்து வருவதற்கு நீர் எங்களை அழைக்கிறீர். இந்த அழைப்பிற்காக, ஆண்டவரே! உமக்கு நன்றி கூறுகிறேன். உம்முடைய மக்களாகிய எம்மீது நீர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் மேன்மையை இன்னும் ஆழமாக நாங்கள் புரிந்து கொள்வதற்கு இந்தக் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்கள் துணை செய்வதாக! எங்களோடு உறவாடவும், எங்களுக்கு மீட்பு அளித்திடவும், உமது திருப்பாதம் தேடி வந்தும்மை தொழுவதற்கு அழைப்பு விடுத்திடவும் நீர் வந்தீர் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள செய்தருளும். விண்ணிலிருந்து இறங்கி வந்த வானக தூதர் அணிகளோடு சேர்ந்து நாங்களும் உம்மைப் போற்றிப் புகழ்ந்திடவும், தொழுது வணங்கிடவும் எங்களுக்கு அருள் தருவீராக! இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.   

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி