திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

24.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - சனிக்கிழமை

தனது நம்பிக்கையைச் செக்காரியா அறிக்கையிடுகிறார்

அருள்மொழி:

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில், பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும்இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.” (லூக்கா 1:76 -79)

வார்த்தை வாழ்வாக:

தன் மகன் யோவான் பிறந்தவுடன், இறைவார்த்தையில் நம்பிக்கையை வெளிப்படுத்திய செக்காரியா மீண்டும் பேசும் திறனைப் பெறுகிறார். அந்நேரத்தில் செக்காரியா பாடிய புகழ்ப்பாடலையே இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். கடவுளுடைய வார்த்தையிலும், ஆற்றலிலும் தான் அடைந்த ஆழமான, தெளிவான, உள்ளார்ந்த நம்பிக்கையை இந்தப் பாடலில் செக்காரியா வெளிப்படுத்துகிறார்.

இறைவனின் கொடையால் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளைச் செக்காரியா கூறுகிறார். பல நாள்களாகப் பேச்சற்று இருந்த நிலையின் விளைவாக, அவரால் இறைவார்த்தையின் மறையுண்மைகளை கண்டுணரவும், கேட்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது. பிறந்திருக்கும் குழந்தை, ‘ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வதற்கான பணியைச் செய்ய வந்த ஓர் இறைவாக்கினர்’ என்பதை ஐயந்திரிபுற அவர் உணர்ந்து கொண்டார். கதிரவனின் உதயத்தை உலகிற்கு அறிவிக்கின்ற ‘விடியல்’ போன்றவனே தன்னுடைய மகன் என்பதையும் செக்காரியா கண்டுகொண்டார்.

பல மாதங்களாகச் செக்காரியா பேச்சற்றிருந்த காலத்தில், கடவுள் அவருக்குள் செயலாற்றி, இந்தப் புகழ்ப்பாடலை பாடச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கின்ற திருஅவையின் குருக்களும், இதர துறவற நிலையினரும் தங்கள் அன்றாட இறைவேண்டலில் ஒரு பகுதியாக இந்தப் புகழ்ப்பாடலை தினமும் ஜெபிக்கிறார்கள். தனது பேச்சற்றத் தன்மையிலிருந்து மீண்டெழுந்த செக்காரியா, தான் பெற்ற நம்பிக்கையின் குறிக்கோளை இந்தப் பாடலின் வழியாக நிறைவு செய்தார்.

இத்தகைய ஆழமான நம்பிக்கை தான் நம்முடைய வாழ்விலும் மலர வேண்டும். பல மாதங்களாகப் பேச்சற்றிருந்த செக்காரியா, கடவுளால் கைவிடப்பட்டதாக உணர்ந்து, எளிதாகக் கோபம் கொள்ளவும், மனசஞ்சலமும், வெறுப்பும் அடையவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. கடவுள்மீது நம்பிக்கைக் கொண்டு காத்திருந்த அவர், அந்த நம்பிக்கையின் கனிகளைக் காணுகின்ற காலம் வந்தபோது, இந்த அழகான இறைப்புகழ்ச்சிப் பாடலைப் பாடினார்.

சிந்தனை:

செக்காரியாவிடம் இருந்த உயர்வான நற்பண்புகளாகிய நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அவர் இறைவார்த்தையின் மீது கொண்ட சந்தேகத்தை ஒரு குறையாகச் சிலர் நோக்கலாம். ஆனால், கடவுள் அவ்வாறு செய்யாமல், காலங்களைக் கடந்தும் உலக மாந்தர் இறைவனைப் போற்றிப் பாடுவதற்குகந்த ஒப்பற்ற புகழ்ப்பாடலை தருவதற்கு ஒரு வாய்ப்பினை செக்காரியாவுக்கு அளிக்கிறார். கடந்த நாள்களில் நமது வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் வழியாகக் கடவுள் நமக்குத் தருகின்ற வாய்ப்புகளைக் கவனிப்போம். செக்காரியாவின் முன்மாதிரியை நாமும் பின்பற்ற முயலும்போது, அதன் வழியாகத் தனது அளவற்ற ஆற்றலைக் கடவுள் வெளிப்படுத்துவார் என்று உறுதியோடு நம்புவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என்னுடைய கடந்த கால வாழ்க்கையையும், உம்மீது நம்பிக்கையற்று இருந்த கணங்களையும் உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன். எனது பலவீனங்கள், தற்பெருமை, ஏமாற்றங்கள் - இவை அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். பாவநிலையிலிருக்கின்ற என்னை முழுவதும் உம்மிடம் கையளிக்கின்றேன். உமது திருவுளப்படி என்னை மாற்றியமைத்தருளும். உம் திருவருள் என்னில் செயலாற்றவும், செக்காரியாவைப் போல நானும் என்றென்றும் உமது புகழைப் போற்றிப் பாடவும் எனக்கு வரமருளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி