திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

23.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - வெள்ளிக்கிழமை

செக்காரியா நம்பிக்கை அடைகிறார்

அருள்மொழி:

“குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நாக்கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா 1:62 - 64)

வார்த்தை வாழ்வாக:

திருமுழுக்கு யோவானின் தந்தையாகிய செக்காரியாவைக் குறித்து மறுபடியும் இன்று நாம் சிந்திக்கிறோம். பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறின்றியிருந்த செக்காரியா - எலிசபெத் ஆகிய இருவருக்கும், முதிர்ந்த வயதில் குழந்தைபேறு அளித்துக் கடவுள் ஆசீர்வதித்தார். வானதூதர் கபிரியேல் ஆலயத்தில் தோன்றி இந்த அதிசய நிகழ்வை அறிவித்தபோது, செக்காரியா அதை நம்புவதற்கு தயங்கினார். அவருடைய நம்பிக்கையின்மையின் விளைவாக, குழந்தை பிறக்கின்ற நாள் வரையிலும் அவர் பேச்சற்றவராக இருந்தார்.

செக்காரியாவுடைய நம்பிக்கையில்லா நிலைமையின் கட்டுகள் எவ்வாறு அவிழ்ந்தன என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துகாட்டுகிறது. வானதூதர் கூறியபடியே, குழந்தைக்கு ‘யோவான்’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று செக்காரியா எழுதிக் காட்டுகிறார். பாரம்பரிய முறைப்படி, அவர்களுடைய குடும்பத்தில் பிறக்கும் தலைபிள்ளைக்கு ‘செக்காரியா’ என்னும் தந்தையின் பெயரையே சூட்டுவது வழக்கம். ஆனால், அந்தக் குழந்தைக்கு ‘யோவான்’ என்று பெயரிட வேண்டும் என்று ஏற்கனவே கடவுள் வானதூதர் வழியாகச் சொல்லியிருந்ததால், அந்தக் கட்டளைக்குப் பணிந்து, தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தும் விதமாக ‘யோவான்’ என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள்.

இந்த இடத்தில், தான் முன்னொரு தடவை செய்த பிழையை இப்போது திருத்திக் கொள்கிறார் என்றே நாம் கருத வேண்டும். கபிரியேல் தூதரை முதன்முதல் ஆலயத்தில் சந்தித்தபோது தன் மனதில் எழுந்த ‘நம்பிக்கையின்மை’ என்ற பிழையை, இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து அதனைச் செயலிலும் காட்டிய இத்தருணத்தில் செக்காரியா சீர்செய்து கொள்கிறார். ஏதாவதொரு வகையில், ஏதோ ஒரு நேரத்தில் கடவுளின் மீது நம்பிக்கைக் கொள்ள தவறுகிற நமக்கு, செக்காரியாவின் இந்தச் செயல் ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. பேசும் திறனைச் செக்காரியாவிடமிருந்து நீக்கியபோது, கடவுள் அவரைக் கடுமையாகவே தண்டித்துவிட்டார். ஆனால், அடிப்படையில் அது தண்டணையல்ல என்பதையும்,  செக்காரியாவின் நம்பிக்கையில் கடவுளின் மாட்சியை வெளிப்படுத்தவே இது நடந்தது என்பதையும்  என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம். பிறந்தக் குழந்தைக்கு ‘யோவான்’ என்று பெயர் சூட்டி, தனது இறைநம்பிக்கையை செக்காரியா வெளிபடுத்தியபோது, ‘எல்லாரும் வியப்படைந்தனர்’. பேச்சற்ற நிலை அகன்று, செக்காரியா மீண்டும் பேசியது, இறைமாட்சியை அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் நிகழ்வாக இருந்தது.

கடவுள்மீது நம்பிக்கைக் கொள்ளாத நிலையை நமது வாழ்வில் பலமுறை நாம் வெளிபடுத்துகிறோம். அதன் விளைவாக, சில நேரங்களில், நமக்கும் கடுமையான தண்டனையைக் கடவுள் விதிப்பதாக உணர்கிறோம். கடவுளின் குரலுக்கு முழுமனதோடு செவிசாய்க்க தவறுகின்ற நேரங்களில், நாமும் சில வேதனைகளுக்கு உள்ளாவது நமக்குத் தெரிகிறது. ஆனால், அத்தகைய வேதனைகளும், துன்பங்களும் கடவுளுடைய பெருஞ்சினத்தின் விளைவு அல்ல என்றும், அவற்றை விலக்கிட இறைவன் திருவுளம் கொள்ளும்போது இன்னும் மேலான நன்மைகளை நமக்குச் செய்யவிருக்கிறார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்தனை:

நம்முடைய பாவங்கள், பலவீனங்கள் மற்றும் நம்பிக்கையின்மையின் விளைவாக நாம் அனுபவித்த வேதனைகளை இன்று நம் சித்தையில் நிறுத்துவோம். இந்த வேதனைகளையும், துன்பங்களையும் நமக்கு ‘தண்டனை’யாகக் கடவுள் தந்ததாக நாம் கருதுதல் வேண்டாம். மாறாக, கடவுளின் மாட்சியை வெளிப்படுத்தும் சாட்சிகளாகிட ஒரு வாய்ப்பைக் கடவுள் தருகிறார் என்று உறுதி கொள்வோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். நீர் என்னோடு பேசுவதிலெல்லாம் நம்பிக்கைக் கொள்ளாமல் இருக்கிறேன். அதன் விளைவாக, உமது வார்த்தைகளைச் செயலில் காட்டுவதற்கு தவறுகிறேன். அன்பு மிகுந்த இறைவா! உமது வார்த்தையின் மீதான நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும், எனது பலவீனத்தின் காரணமாக வருகின்ற துன்பங்களெல்லாம் முடிவில் உமக்கு மாட்சி அளித்திடும் வழிகளே என்று நான் உணர்ந்திட எனக்கு உதவி செய்தருளும். செக்காரியாவைப் போல, நானும் உம்மிடம் திரும்பி வருவதற்கு வரம் தாரும். ஆண்டவரே, உமது மாட்சியை எடுத்துரைக்கும் கருவியாக என்னைப் பயன்படுத்தும்!. இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி