திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

22.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - வியாழக்கிழமை

தூய அன்னை மரியாவின் மட்டற்ற மகிழ்ச்சி

அருள்மொழி:

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்". (லூக்கா 1:47-49)

வார்த்தை வாழ்வாக:

இறையன்னையின் இதயத்தில் எழுந்த மகிழ்ச்சியை இந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றது. கடவுள் தனக்குச் செய்த அரும்பெரும் செயல்களைப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, தனது நிறைவான மகிழ்ச்சியை இந்தப் பாடலில் எடுத்துரைக்கிறார். இந்தப் புகழ் பாடலில், தன் ‘உள்ளம்’, ‘மனம்’ இரண்டிலும் எழுந்த உணர்ச்சிகளை அன்னை மரியா குறிப்பிட்டுகிறார். அவரது உள்ளம் “போற்றிப் பெருமைப்படுத்துகின்றது” அவரது மனம் “பேருவகைக் கொள்கின்றது”.

கடவுள் அன்னை மரியாவுக்குச் செய்த நன்மைகளையும், அவற்றைப் பெற்றுக் கொண்டதால் அன்னைக்குக் கிடைத்த மனநிறைவையும் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவருடைய மனதிலும், சிந்தையிலும் நிறைவாகியிருந்த மனித இயல்பின் திறன்களை ‘உள்ளம்’ என்ற சொல் குறிக்கிறது. இத்தகைய எல்லா மனித இயல்பின் திறன்களையும் கொண்டு, அன்னை மரியா கடவுளின் மகத்துவத்துவத்தைப் போற்றி, பெருமைப்படுத்துகிறார். அவருடைய உள்ளமும், உடலும் இறைவனின் மாட்சியால் முற்றிலும் நிறைந்துள்ளன.

அன்னை மரியாவின் மனமும் ‘பேருவகை’ என்னும் இறைமாட்சியின் கொடையால் நிரம்பியுள்ளது. கடவுளின் மகத்துவத்தை அன்னை போற்றிப் புகழ்ந்தபோது, தனது அருள்கனிகளால் மரியாவின் ஆன்மாவை நிரப்புகிறார். நம் அன்றாட வாழ்வில் நம்மைத் துடிப்புடன் இயங்கச் செய்கின்ற மகிழ்ச்சி என்னும் வரத்தைக் கடவுளிடமிருந்தே பெறுகிறோம். தூயஆவியாரின் கனிகளில் ஒன்றான இந்த ‘மகிழ்ச்சி’யை மரியா முழுமையாகப் பெற்றிருந்தார்.

சிந்தனை:

நம்முடைய உள்ளத்தையும், மனதையும் இன்று பரிசோதித்துப் பார்ப்போம். தன் முழு உள்ளத்தோடும், ஆற்றலோடும் அன்னை மரியா கடவுளை அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும், போற்றிப் புகழவும் முனைகிறார். இந்தச் சீரிய முன்மாதிரியை நாமும் ஆர்வத்தோடு பின்பற்றுகிறோமா? தூயஆவியார் மகிழ்ச்சி என்னும் கனியால் நம் உள்ளத்தை நிறைத்திட நாம் அனுமதிக்கிறோமா? கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிச் செல்கின்ற இந்த வேளையில், நமக்காக வேண்டிக்கொள்ளும்படி இறையன்னையிடம் மன்றாடுவோம். அவருடைய திருமகனின் பிறப்பைக் கொண்டாட தயாராகின்ற தருணத்தில், அவரோடு இணைந்து நாமும் பேருவகைக் கொண்டு கடவுளைப் போற்றிப் புகழ்ந்திட வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்:

அன்பின் அன்னையே! மாட்சிமிகு கடவுளுக்குப் பணிந்து நடக்கின்ற உண்மையான பணியாளனாக வாழ்வதற்கு உம்முடைய வாழ்க்கையே எமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கடவுளின் மாட்சியை உமது முழு உள்ளத்தோடும், ஆற்றலோடும் போற்றிப் புகழ்ந்தீர்; அவருடைய வருகையின் மகிழ்ச்சியால் நிறைவடைந்தீர். உமது நம்பிக்கையைப் பின்பற்றவும், என் முழு உள்லத்தோடும், ஆற்றலோடும் கடவுளை அன்பு செய்யவும் உம்முடைய வல்லமையான பரிந்துரை வழியாக எனக்கு உதவி செய்தருளும். இறைவனின் அன்னையான கன்னி மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி