திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

21.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - புதன்கிழமை

ஆண்டவரின் பிரசன்னத்தில் பேருவகையால் துள்ளிய குழந்தை

அருள்மொழி:

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்கா 1:42-45)

வார்த்தை வாழ்வாக:

இறையன்னையாம் மரியாவைப் பார்த்து எலிசபெத்து சொன்ன இந்த மறைநூல் பகுதியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை பல உள்ளன. முதலில், பாசம் நிறைந்த வழக்கமான ஒரு வாழ்த்து. கடவுளின் தாயாரையும், அவருடைய திருஉதரத்தில் கருவாகக் குடிகொண்டிருக்கின்ற தன் ஆண்டவரையும் நேரிலே சந்தித்தவுடன், எலிசபெத்தின் உள்ளத்தில் பொங்கிய உண்மையான மகிழ்ச்சியை இந்த வாழ்த்தொலியில் புரிந்துகொள்ள முடிகிறது.

“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” - எதிர்பாராத வகையில் தன் வீட்டிற்கு வந்த மரியாவை நேருக்கு நேராகச் சந்தித்தபோது எலிசபெத்திடம் உண்டான ஆச்சரியத்தையும், உண்மையான மகிழ்ச்சியையும் இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. மரியாவை விட எலிசபெத்து மிகமிக மூத்தவர் என்றாலும், இந்தச் சந்திப்பைத் தனக்குக் கிடைத்த பெரும் ஆசீர்வதமாக எலிசபெத்து கருதினார். ‘வயதில் இளையவரான ஒருவர் முதியவரான தனக்குச் செய்யவேண்டிய கடமை தானே’ என்று மரியாவின் வருகையை எலிசபெத்து சாதாரண ஒரு நிகழ்வாகக் கருதாமல், மனப்பூர்வமான நன்றியுணர்வோடு மரியாவை வரவேற்றார்.

அன்னை மரியாவையும், அவரது வயிற்றில் உள்ள குழந்தையையும் சந்தித்ததால் ஆசி பெற்றதாக உணர்ந்தவர் எலிசபெத்து மட்டுமல்ல; அவர் வயிற்றிலிருந்த குழந்தையும் தான். அந்நேரத்தில் எலிசபெத்தின் வயிற்றில் ஆறுமாத குழந்தையாக இருந்த திருமுழுக்கு யோவான், இந்தச் சந்திப்பில் அடைந்த உவகையின் வெளிப்பாடாகத் தன் தாயின் உதரத்திலேயே துள்ளிக் குதிக்கிறார். ஆம்! அன்னை மரியாவின் இந்த வருகை மிகவும் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

இந்த நிகழ்வு நமது மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. கிறிஸ்து நம்மிடம் வருகின்றபோது, அவருடைய பிரசன்னத்தை நமக்குள்ளே உணர்கிறோமா? எடுத்துகாட்டாக, ஒரு ஆலயத்தினுள் நுழைகின்ற தருணத்தில், நம் ஆண்டவருடைய தெய்வீக பிரசன்னத்தையும், அருகாமையையும் நாம் உணர்கிறோமா? அதே போல, திருவிருந்தில் பங்கெடுத்து நற்கருணையைப் பெற்றுக் கொள்ளும்போது, ஆண்டவரும் மீட்பருமான கிறிஸ்துவின் உடனிருப்பை மெய்யான ஆர்வத்தோடு நம்முள்ளே அனுபவிக்கிறோமா? எலிசபெத்திடம் இருந்ததைப் போல ஆழமான நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிந்தனை:

ஆண்டவர் நம்மை அணுகி வரும்போது அவருடைய தெய்வீக பிரசன்னத்தை நம் உடலிலும், உள்ளத்திலும் கண்டுரணர்கின்ற வரத்தைத் தரவேண்டுமென்று வேண்டுவோம். சிறப்பாக, திருவிருந்தில் நற்கருணை வடிவில் ஆண்டவர் இயேசு நம்முள்ளே வரும்போது, நமது மனமும், இதயமும் கவனம் சிதறாமல் ஒருமனப்பட்டு, அவரை வரவேற்கவும், அவருடைய உடனிருப்பை உண்மையாகவே உணரவும் வரம் கேட்போம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உம்மைக் கண்டுணரவும், உம்மை அறிந்து கொள்ளவும் ஆவலாயிருக்கிறேன். நீர் என்னிடம் வருகின்றபோது, உமது பிரசன்னத்தை என்னைச் சுற்றிலும் உணரவும், உமது உடனிருப்பை உளப்பூர்வகாம அனுபவிக்கவும் எனக்கு அருள் செய்வீராக! இவ்வாறு உமது வருகையை நான் உணரும்போது, என் இதயம் உவகையால் துள்ளுவதாக! இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி