திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

20.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - செவ்வாய்கிழமை

அன்னை மரியாவின் உறுதியான முழுமையான நம்பிக்கை

அருள்மொழி:

வார்த்தை வாழ்வாக:

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூயஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்கா 1:34-38)

நேற்றைய தினம் செக்காரியாவுக்கு கிடைத்த இறைச்செய்தி நம் சிந்தனைக்குத் தரப்பட்டதைப் போல, இன்று அன்னை மரியா இறைத்தூது பெற்ற நிகழ்வினை சிந்திக்கிறோம். வானதூதர் உரைத்த செய்திக்கு, அன்னை மரியாவின் மறுமொழி என்ன? “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”. பணிவான, தெளிவான, உறுதியான ஒரு பதில். “ஆகட்டும்” என்ற தன் சம்மதத்தை அன்னை மரியா தாழ்ச்சியோடு சொன்ன இந்த பதில், இறை விருப்பத்தை தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளூம் நம்பிக்கைக்கு சான்றாக திகழ்கிறது.

அந்தச் சூழ்நிலையில், வானதூதரின் மிகச் சிறிய அளவிலான விளக்கத்தை சற்று நுட்பமாக ஆய்ந்து பார்த்தால், தூதரின் கூற்று பலருக்கும் நம்ப முடியாததாவே இருக்கும். தூதர் சொன்ன செய்தியில் இறைவனின் திருவுளம் தனக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை ஐயமின்றி அவர் நம்பியதால், தூதரின் விளக்கத்திற்கு மேலும் விளக்கம் கேட்கவில்லை. மாறாக, இறைசித்தத்திற்கு பணிந்து நடப்பதே தன் கடமை என்று கருதி, தன் முழு சம்மதத்தை தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார்.

சிந்தனை:

கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொள்வதில் நம் நிலை என்ன? கடவுள் விருப்பத்தின் முழுபரிமாணத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அதணை ஏற்றுக்கொள்கிறோமா? நமது மனித சிந்தனையின் முடிவுகளை விட, கடவுளின் விருப்பத்திற்கு அடிபணிய தயாராக இருக்கிறோமா? வரம்பிற்குட்பட்ட மனித அறிவை விட, கடவுளின் நடத்துதல் மேன்மையானது என்பதை நாம் உணர்வது நன்று. எனவே, அன்னை மரியாவை பின்பற்றி, இறைவிருப்பத்தை ஏற்று வாழ்வோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என் முழு மனதோடும், இதயத்தோடும், ஆற்றலோடும் ஆன்மாவோடும் உம்மேல் நம்பிக்கைக் கொள்ள ஆசிக்கிறேன். உமது வார்த்தைகளைக் கேட்டு, முழு நம்பிக்கையோடு உமக்கு மறுமொழி தர எனக்கு உதவி செய்தருளும். அன்னை மரியாவைப் பின்பற்றி, நானும் “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”என்று உம்மிடம் சரணடைய வரம் தாரும். இயேசுவின் அன்னையாம் புனித மரியாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி