திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

18.12.2022 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு

யோசேப்புவின் இரக்கக் குணமும், குன்றாத பற்றுறுதியும்

அருள்மொழி:

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். (மத்தேயு 1:22-24)

வார்த்தை வாழ்வாக:

யோசேப்புவின் தடுமாற்றத்தை கற்பனை செய்து பார்ப்போம். அவர் மரியாவை நேசித்தார். ஆனால் மரியா திடீரென்று கருவுற்றிருக்கிறார். மரியாவின் வாயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தான் தகப்பன் இல்லை என்று யோசேப்புவுக்குத் தெரியும். இருந்தாலும், மரியாவை கேள்வி கேட்கவோ, கேலி செய்யவோ தண்டிக்கவோ எண்ணவில்லை. மாறாக, யோசேப்பு “மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை” என்று நற்செய்தி வாசகம் கூறுகிறது. நற்செய்தி நூலின் இந்த வரிகள் புனித யோசேப்புக் கொண்டிருந்த இரக்கக் குணத்திற்கும், நற்பண்புகளுக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது. எதிர்பாராத வகையில் மரியா கருதரித்திருப்பதை அறிந்ததும், சுயநலத்தோடு செயல்படாமல், மரியாவை அவமானத்திற்கு ஆளாக்கக் கூடாது என்பதில் யோசேப்பு அக்கறை காட்டுகிறார்.

இந்நிலையில், ஆண்டவரின் தூதன் யோசேப்புவுக்குக் கனவில் தோன்றி, "மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்" என்றும், அந்தக் குழந்தை "தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றும் விளக்கிக் கூறுகிறார். இவ்வாறு உண்மைநிலையை அறிந்து கொண்ட யோசேப்பு, “ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்” என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆக, யோசேப்புவிடமிருந்த இரக்கக் குணத்தையும், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவர் கொண்டிருந்த பற்றுறுதியையும் இன்றைய நற்செய்தி வாசகம் சிறப்பக எடுத்துரைக்கிறது. புனித யோசேப்புவிடமிருந்த இந்த இரண்டு நற்பண்புகளை நாமும் கைக்கொண்டால், நம்முடைய வாழ்க்கைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்க்கைப் பயணத்தில் நாமும் இரக்கக் குணம் உடையோராக இருத்தல் வேண்டும். அடுத்தவர் நலத்திலும் நாம் அக்கறை காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். நமது வாழ்க்கைப் பாதையில் முரண்பாடுகளை அல்லது எதிர்பாராத இடையூறுகளைச் சந்திக்கும்போது, பெரும்பாலும் நம்முடைய நலன்களை மட்டுமே பெரிதாகக் கருதுகிறோம். அத்தகைய நேரங்களில் அடுத்தவருடைய நலனிலும் அக்கறை காட்டுகின்ற இரக்கக் குணத்தை நம்முள்ளே வளர்த்துக் கொள்ளுதல் நல்லது.

புனித யோசேப்புக் கொண்டிருந்த நற்பண்புகளிலேயே உன்னதமான ஒன்று, நிலையான பற்றுறுதி. ஆண்டவர் தம் தூதர் வாயிலாக வெளிப்படுத்தியவாறே, மரியாவைத் தன் மனைவியாக ஏறுக்கொள்வதிலும், இறைவனின் விருப்பத்திற்குப் பணிந்து நடப்பதிலும் இந்தப் பற்றுறுதியை கடைபிடித்தார். அன்று யோசேப்புவுக்குக் கடவுளின் திருவுளம் வானதூதர் வழியாகச் சொல்லப்பட்டது. இன்றைய நாள்களில் கடவுளின் சித்தத்தை நமக்கு வெளிப்படுத்த வானதூதர்கள் வரவில்லை என்றாலும், நற்செய்தி நூல்களும், திருஅவையின் போதனைகளும், புனிதர்களின் தூய வாழ்க்கை நெறிகளும் இறைவனின் விருப்பத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மேலும், கவனம் சிதறாத உண்மையான இறைவேண்டலின் வழியாக நமது உள்ளத்தைக் கடவுளுக்காகத் திறந்து வைக்கும்போது, அவர் தன் திருவுளத்தை நம் உள்மனதிலே பதியச் செய்கிறார். கடவுளின் விருப்பத்தை ஏற்று, அதை நிறைவேற்றுவதில் குன்றாத பற்றுறுதியோடு செயலாற்றுவதே நமது கடமையாகும்.

சிந்தனை:

மேலே குறிப்பிட்டபடி, புனித யோசேப்புவிடம் இருந்த இரண்டு நற்பண்புகளையும் நமது வாழ்வில் எவ்வாறு கடைபிடிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம். நம்மை அடுத்திருப்போருக்கு எல்லா நிலையிலும் இரக்கம் காட்டவும், இறைசித்ததை நிறைவேற்றுவதில் உறுதியுடனும் இருக்கவும் முயற்சி செய்வோம்.

இறைவேண்டல்:

இரக்கத்தின் ஊற்றாகிய இயேசுவே, புனித யோசேப்புவைப் பின்பற்றி, எல்லலோருக்கும் இரக்கத்தோடு உதவி செய்யவும், எல்லா நிலைகளிலும் இறைசித்ததை நிறைவேற்றவும் எனக்கு அருள்தருவீராக. எந்நாளும் உமது திருவுளத்திற்குச் செவிமடுக்கவும், முழுப் பற்றுறுதியோடு அதனைச் செயல்படுத்தவும் எனக்குத் துணை செய்தருளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி