திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

17.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - சனிக்கிழமை

கடவுளின் நிறைவான திட்டம்

அருள்மொழி:

எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு (மத்தேயு 1:15,16).

வார்த்தை வாழ்வாக:

கிறிஸ்து பிறப்புக்கு சிறப்பான வகையில் நம்மையே தயாரிப்பதற்குகந்த முக்கிய தினங்களான ‘எண்கிழமை’யை இன்று நாம் தொடங்குகிறோம். இந்த எட்டு நாள்களுக்குப் பின்னர் மாட்சிமிகு கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டங்களில் நுழையவிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகமாக இயேசுவின் மூதாதையரின் மரபுவழி பட்டியல் நமக்குத் தரப்படுகிறது. மத்தேயு நற்செய்தியின் முதல் அதிகாரத்தின் 2 முதல் 16 வசனங்களில், ஒவ்வொன்றிலும் பதினான்கு மூதாதையரைக் கொண்ட மூன்று பகுதிகளை வாசிக்கிறோம். ஆபிரகாமை முதல் ஆளாகக் கொண்டு தொடங்குகின்ற இந்தப் பட்டியலின் கடைசி ஆளாக இயேசு வருகிறார். "தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:" என்றுத் தொடங்குகின்ற முதல் வசனம், இந்தப் பட்டியலின் முக்கியமான கருத்தை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி, இறைமகன் இயேசுவில் நிறைவேறுவதை தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றது.

கடவுள் தனதுவாக்கில் என்றும் மாறாத உண்மையுள்ளவர் என்பதை அவர் ஆபிரகாமுக்குத் தந்த வாக்குறுதி இயேசுவில் நிறைவேறியது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த ‘வாக்குறுதி நிறைவேற்றம்’ என்பது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் நிகழ்ந்தது என்பது உண்மையே. அவர் தன் திட்டத்தை நிறைவேற்றுகின்ற நேரமும், காலமும், வழிகளும் நாம் நினைப்பதைக் காட்டிலும் வேறுபட்டது. வாழ்வின் ஓட்டத்தில் நாம் பற்பல நல்ல செயல்பாடுகளைத் திட்டமிடுகிறோம். ஆனால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போகும்போது, ஊக்கமிழந்து தளர்ச்சி அடைகிறோம்.

எனவே, கடவுள் நமக்கென வைத்திருக்கும் திட்டங்களை எல்லாம் தவறாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை என்பதை நாம் மறக்கலாகாது. மீட்புக்கும், அமைதிக்கும் இட்டுச் செல்லும் பாதையில் படிப்படியாகவும், கருத்தாழத்துடனும் கடவுள் நம்மை நடத்திச் செல்கிறார். கடவுளின் வழிமுறைகள் நமது செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தாலும், அவை சரியான, நேரிய வழிகளே.

சிந்தனை:

நம்முடைய வாழ்க்கைக்காகக் கடவுளுடைய திட்டங்கள் என்னவென்று சிந்திப்போம். நீண்ட காலமாக நாம் துன்பங்களையே சந்திக்கிறோம் என்றால், கடவுள் நம்மிடம் பொறுமையை எதிர்பார்க்கிறாரா? என்றும் மாறாத, உறுதியான நம்பிக்கையை அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறாரா? நம்முடைய மனதில் உள்ள கருத்துக்களை, திட்டங்களை அவரிடம் கையளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? சிந்திப்போம். விண்ணகத் தந்தை நமக்கென வைத்திருக்கின்ற நேரிய திட்டங்களை நிறைவேற்றவும், வழிநடத்தவும் அவரிடம் சரணடைவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உம்முடைய திட்டங்கள் சரியானவை என்றும், என் சிந்தனைக்கு எட்டாதவை என்றும் உணர்கிறேன். எனது சொந்த விருப்பங்களையும், திட்டங்களையும் விடுத்து, நீர் எனக்காகத் தயாரித்துள்ள திட்டங்களில் முழு நம்பிக்கை வைத்து உம்மிடம் சரணடைய எனக்கு உதவி புரிந்தருளும். உம்முடைய ஞானம் சிறப்பானது என்பதை என் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள எனக்குத் துணை செய்வீராக. இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி