திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

15.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - வியாழக்கிழமை

கடவுளின் தூண்டுதல்

அருள்மொழி:

திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். ஆனால், பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். (லூக்கா 7:29,30)

வார்த்தை வாழ்வாக:

இறைநம்பிக்கையில் நாம் வளர வேண்டுமென்றால், அதற்கான சிறு முயற்சியாவது நாம் செய்ய வேண்டும். இன்றைய நற்செய்தியின் பாடம் இதுவாகத் தான் இருக்க முடியும். ஏனெனில், திருமுழுக்கு யோவனைச் சுற்றி நின்று அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் மட்டும் நம்பிக்கையோடு முன்வந்து, ‘கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, திருமுழுக்கு பெற்றார்கள். யோவானிடம் திருமுழுக்குப் பெறாதவர்கள், அவர்களுக்கென்று ‘கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்’.

இந்த உண்மை நம் வாழ்க்கையின் பல கட்டங்களுக்குப் பொருந்துவதாக இருக்கும் என்பது தெளிவு. முதலாவதாக, நாமெல்லாம் ஏற்கனவே கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றிருப்பதால், ‘யோவானின் திருமுழுக்கு’ பெறவேண்டிய அவசியம் நம்க்கு இல்லை. ஆனால், திருமுழுக்கு பெற்றுக் கொள்ள யோவான் விடுக்கின்ற அழைப்பை, நமது வாழ்வில் தூய ஆவியார் விடுக்கின்ற முதன்நிலை அழைப்பாக நாம் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ‘இந்த நூலை வாசி’ என்று கடவுள் நமக்குச் சொல்லுவதாக வைத்துக் கொள்வோம். கடவுளின் இந்தத் தூண்டுதலை நாம் புறக்கணிக்கும்போது, நமது வாழ்க்கைக்கென்று கடவுள் வைத்துள்ள திட்டங்களையும் நாம் நிராகரிக்கிறோம். மேலும், நமக்குத் தீங்கிழைத்த ஒருவரை மன்னித்திடவோ அல்லது அதிகமான நேரத்தை இறைவேண்டலில் கழித்திடவோ அல்லது இன்னும் கூடுதலான நேரத்தைக் குடும்பத்தினரோடு செலவிடவோ கடவுள் நமக்குத் தூண்டுதல் தருகிறார் என்பதை உணர்ந்து, அவ்வாறே நாம் செய்யும்போது, வியப்பான இறையருளை அதிகப்படியாக நம் வாழ்விலே அடைவதற்கான கதவுகள் திறக்கப்படுவதை நாம் காணலாம்.

சிந்தனை:

சற்று நேரம் நம் மனதை ஒருமுகப்படுத்தி, நாம் செய்து முடித்திட அல்லது ஏற்றுக்கொள்ளவென்று கடவுள் நம்மை அழைக்கின்ற, நம்முன்னே வைக்கின்ற திட்டங்களை எண்ணிப் பார்ப்போம். அந்தத் திட்டங்கள் எந்தவகையிலும் மதிப்பற்றவையாக, அற்பமானவையாக இருந்தாலும், அத்தகைய முதன்நிலை அழைப்பினை புறந்தள்ளாமல் முழுமனதோடு ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது, நாம் ஒருபோதும் கற்பனை செய்ய இயலாத வகையில் இறையாசீர் நமக்குக் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! எனது வாழ்க்கையில் அன்றாடம் எனக்காக நீர் விடுக்கின்ற அழைப்புகளை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும். உம்முடைய விருப்பத்தைத் தயக்கமின்றி நான் ஏற்றுக்கொள்ளவும், அதன்படி வாழ்ந்திடவும் எனக்கு வரம் தாரும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி