திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

14.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - புதன்கிழமை

ஆண்டவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுதல்

அருள்மொழி:

இயேசு மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்”என்றார். (லூக்கா 7:22, 23)

வார்த்தை வாழ்வாக:

இந்த நற்செய்தி பகுதியில் பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், தொழுநோயாளர், காது கேளாதோர், இறந்தோர், ஏழைகள் ஆகியோரைக் குறித்துப் பேசுகின்ற இயேசு, இவர்களெல்லாம் இயேசு செய்கின்ற இறைப்பணியின் விளைவாகப் பேறு பெற்றவர்கள் என்று அடையாளம் காட்டுகின்றார்.

கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், நமது பலவீனங்களைக் கண்டுணர்வதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். இயேசு குறிப்பிடுகிறவர்கள் ஒவ்வொரு வகையில் குறைபாடு உடையோராக இருப்பது போலவே, நாமும், உடலில் இல்லையென்றாலும் ஆன்மாவில், பலவீனர்களாக, குறைபாடுகள் உடையவர்களாக இருக்கிறோம்.

இயேசுவின் மேற்சொன்ன சொற்களில் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். “என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்” என்று இயேசு கூறுகிறார். நாம் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்க வேண்டும்? சில நேரங்களில் உண்மை நம்மைக் காயப்படுத்துகிறது.

இவ்வுலக வாழ்வில் நமது பயணம் பிரச்சினைகள் ஏதுமின்றி நன்றாகவே இருப்பதாக நாம் நினைக்கிறோம். அதன் விளைவாக, இயேசு எடுத்துரைக்கின்ற உண்மைகள் நமக்குத் தேவையற்றவை என்றும் எண்ணுகிறோம். இத்தகைய சூழலில், நமது பாவநிலை என்னும் உண்மையை எதிர்கொண்டு போராடுகின்ற தருணங்களில், இயேசுவை ஏற்றுக்கொள்ள நாம் தயக்கம் காட்டலாம்.

சிந்தனை:

நற்செய்தி எடுத்துரக்கின்ற உண்மைகளை நாம் எந்த அளவுக்குத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று சிந்திப்போம். நற்செய்தி நூல்களிலே காணப்படுகின்ற இயேசுவின் போதனைகள் எல்லாவற்றையும் விருப்பமுடன் செவிமடுத்து கடைபிடிக்க நாம் தயாராக இருக்கின்றோமா? நம் ஆண்டவர் காட்டுகின்ற நன்னெறிகளை உற்றுக் கேட்கவும், அவற்றின்படி ஒழுகவும் உறுதி செய்வதற்கு இந்தத் திருவருகைக் காலம் ஒரு சிறந்த களமாக அமையட்டும்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! எனது இதயத்தை உமக்கென்று தாயார் செய்வதற்கு இந்தத் திருவருகைத்தில் எனக்கு உதவி செய்தருளும். உமது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, நீர் சொல்கின்ற நன்னெறிகளுக்கேற்ப நான் வாழ்ந்திட உதவி செய்தருளும். எல்லா விதத்திலும் உம்மைப் பின்பற்றவும், உமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயக்கம் காட்டதிருக்கவும் எனக்கு அருள் தாரும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி