திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

13.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - செவ்வாய்கிழமை

பாவிகளோடு உடனிருந்து உறவாடுதல்

அருள்மொழி:

“வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர்" (மத்தேயு 21:31,32).

வார்த்தை வாழ்வாக:

குருக்களும், மூப்பர்களும் யூத மதத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் கட்டிக் காக்கின்ற மதத் தலைவர்கள். வரிதண்டுவோரும், விலைமகளிரும் இந்த மதத் தலைவர்களுக்கு முன்பாக இறையாட்சியில் நுழைந்து விடுவர் என்று இயேசு சொல்வது நம்புவதற்கு கடினமாக இருக்கிறதல்லவா? மதத் தலைவர்களிடம் உள்ள புனிதநிலையை மிஞ்சும் வகையில் வரிதண்டுவோரும், விலைமகளிரும் புனிதநிலையில் உள்ளார்கள் என்று இயேசு சொல்கிறாரா? ஆம், இயேசு அப்படித்தான் கூறுகிறார்.

மதத் தலைவர்களிடமிருந்த தற்பெருமையினல், இயேசுவின் போதனைகளில் இருந்த உண்மைகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே உயர்வாக எண்ணிக் கொண்டதோடு, மற்றவர்களும் தங்களை உயர்ந்தவர்களாக மதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். “சுயமாகவே தாங்கள் நேர்மையாளர்கள்” என்னும் அவர்களுடைய நம்பிக்கை தரமற்றதாக இருந்தது.

இருந்தது. யூத மதத் தலைவர்களின் தற்பெருமையை தகர்க்கும் விதமாக, “வரிதண்டுவோரும், விலைமகளிரும் இந்த மதத் தலைவர்களுக்கு முன்பாக இறையாட்சியில் நுழைந்து விடுவர்” என்று இயேசு சொன்னது, அவர்களுடைய முகத்தில் அறைந்தாற்போல இருந்தது.

சிந்தனை:

நாம் யாரோடு நம்மை அடையாளப்படுத்திக் காட்ட முற்படுகிறோம்? ‘குருக்கள்-மூப்பர்களோடா? அல்லது ‘வரிதண்டுவோர்-விலைமகளிர்ஆகியரோடா? குருக்களோடும் மூப்பர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டால், நாமும் அவர்களைப் போலத் தற்பெருமை கொண்டிருக்கிறோமா? ‘வரிதண்டுவோர்-விலைமகளிர்’ இவர்களுடன் நம்மை அடையாளப்படுத்துவது நமக்கு அவமானமாக இருக்கும். ஆனால், அது தான் உண்மை. ஆம், நாமெல்லாம் பாவிகளே. ‘வரிதண்டுவோர்-விலைமகளிர்’ செய்த அதே பாவங்களை நாம் செய்யவில்லை என்றாலும், மனித பலவீனத்தினால் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் கடவுளுக்கு எதிராகப் பாவங்கள் செய்கிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற மனபக்குவமும், பணிவும் நமக்கு இல்லையென்றால், அந்த குருக்கள்-மூப்பர்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல என்றே பொருள். எனவே, தற்பெருமை தவிர்த்து, தாழ்ச்சியும், பணிவும் வளர்த்துக் கொள்ள முயலுவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என் இதயத்தைத் தாழ்ச்சியாலும், பணிவினாலும் நிறைத்தருளும். என் பாவநிலையையும், உம்மைப் பற்றிக் கொள்வதற்கான எனது வேட்கையையும் நான் கண்டுணரச் செய்தருளும். என் பாவநிலையிலும் நான் உம்மை நோக்கி வரவும், இறையாட்சியில் நுழைவோர் பெறுகின்ற விடுதலையின் சுகத்தையும், மகிழ்ச்சியையும் நான் அனுபவிக்கவும் வரம் தாரும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி