திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

12.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - திங்கள்கிழமை

இயேசுவின் அதிகாரதிற்கேற்ப செயல்படுதல்

அருள்மொழி:

"இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள்". (மத்தேயு 21:23)

வார்த்தை வாழ்வாக:

தேவாலய வளாகத்தின் ஒரு பகுதியில், முடிவில்லா வாழ்வின் வார்த்தைகளை மக்களுக்குப் போதித்தவாறு இறைமகனாம் இயேசுவின் வடிவிலே எல்லாம் வல்ல கடவுள் இருக்கிறார். அங்கிருந்த தலைமைக் குருக்களும், மூப்பர்களும் இயேசுவால் கலக்கமும், மனகிளர்ச்சியும் அடைகிறார்கள். இயேசு வல்லமையோடும், அதிகாரத்தோடும் பேசுவதை குழுமியிருந்தோர் அறிந்து கொள்கிறார்கள்.

ஆனால், தலைமைக் குருக்களும், மூப்பர்களும் பொறாமையும், கோபமும் கொண்டு, “இத்தகைய அதிகாரத்தை எங்கிருந்து பெற்றீர்?” என்று அவரைக் கேள்வி கேட்கிறார்கள்.

கண்முன்னே நடைபெறுகின்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை உணர இயலாதவாறு அவர்களுடையக் கண்கள் மூடப்பட்டுள்ளன. இயேசுவை நோக்கி அவர்கள் கேட்கின்ற கேள்வி, ‘உண்மையையும், மீட்பிற்கான கடவுளின் திட்டத்தையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை’ என்பதை புலப்படுத்துகின்றது. சுயநலமும், தற்பெருமையும், காழ்ப்புணர்ச்சியும் அவர்கள் மனதில் நிறைந்துள்ளன.

இயேசு போதித்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தேவாலயப் பகுதியில் நாம் நின்றுகொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். அந்த இடத்தில் நமது மனநிலை எவ்வாறு இருக்கும்? அவரைப் பொருட்படுத்தாது புறக்கணிப்போமா? வியப்போடும், ஆர்வத்தோடும் அவரை நோக்குவோமா? அவரைக் கண்டு மனகிளர்ச்சி அடைவோமா? அல்லது அவருடைய தெய்வீக வல்லமை, அன்பு, அதிகாரம் ஆகியற்றைக் கண்டுணர்ந்து, அவரை நாடிச் செல்ல முயலுவோமா?

சிந்தனை:

அன்றாட வாழ்க்கைச் சூழலில் இயேசுவை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை சிந்திப்போம். அந்தத் தேவாலய வளாகத்திற்கு உண்மையிலேயே நேரடியாகச் சென்று இயேசுவின் போதனைகளுக்குச் செவிமடுக்க முடியாது என்றாலும், நம்மைச் சுற்றிலும் அத்தகைய வாய்ப்பு ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது. எண்ணற்ற வழிகளில் கடவுள் இன்றும் நம்மோடு பேசுகிறார் என்பது உண்மையே. அவருடைய உடனிருப்பை உணரவும், அவருடைய குரலைக் கேட்டுப் புரிந்து கொள்ளவும் நாம் முயல்கிறோமா? சிந்திப்போம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் உமது தெய்வீகக் குரலைக் கேட்பதற்கு எனக்கு உதவி செய்தருளும். நான் செல்லும் இடங்களிலெல்லாம் உம்மைக் கண்டுணர வரம் தாரும். அவ்வாறு நான் உம்மைக் கண்டுணரும்போது, மகிழ்ச்சியடையவும், உமது வார்த்தைகளில் முழு நம்பிக்கை வைத்துச் செயலாற்றவும் துணை புரியும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி