திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

10.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - சனிக்கிழமை

இத்திருவருகைக் காலத்தில் நம் பாவங்களுக்காக மனம் வருந்துவோம்

அருள்மொழி:

“நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே, மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்”. (மத்தேயு 17:12,13)

வார்த்தை வாழ்வாக:

திருமுழுக்கு யோவானைக் குறித்து தொடர்ந்து சிந்தித்து வருகின்றபோது, இறைவாக்கினார் எலியாவின் வார்த்தைகளை யோவான் நிறைவு செய்கிறார் என்பதை மறைநூல் அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று பார்க்கிறோம். ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்யும் பணியைத் திருமுழுக்கு யோவான் செய்கிறார் என்பதை மறைநூல் அறிஞர்கள் அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள்.

கிறிஸ்துவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கின்ற உறுதியான, நிகரற்றப் பணியைத் திருமுழுக்கு யோவான் செய்து வந்தார். இதே தயாரிப்புப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய கடமை நமக்கும் தரப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் மனிதனாக உலகில் பிறந்த இயேசு, இன்றும் நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு தொடர்ந்து வர ஆசிக்கிறார். அவருடைய வருகைக்காக நாம் தகுந்த முறையில் தயாரித்தால் தான் அவர் நம்மிடம் வர முடியும்.

“ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வது” எவ்வாறு? திருமுழுக்கு யோவானின் பணியை நாம் தொடர்ந்து செய்வது எப்படி? திருவருகைக் காலத்தில், யோவானின் முக்கியமான செய்திக்குக் கவனமாகச் செவிமடுப்பதன் மூலமாக ‘ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யும்’ பணியை நாம் செய்ய முடியும். பாவங்களுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைவதே திருமுழுக்கு யோவானின் முக்கியமான செய்தியாகும்.

மனித இயல்பின் காரணமாகப் பாவச் சூழ்நிலைகளோடு நாம் போராடிக் கொண்டிருந்தாலும், நன்னெறி நடந்து, நிறைவான வாழ்க்கை வாழ்வது தான் நமக்கான அழைப்பு என்பதை நாம் ஒருபோதும் மறந்திடலாகாது. விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது பாவங்களைக் கண்டுணர்ந்து, அவற்றிக்காக மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று, பாவத்திலிருந்தும், பாவச் சூழ்நிலைகளிலிருந்தும் விலகி இருப்பதே இந்த அழைப்பிற்கான பொருள். இத்தகைய தயாரிப்புச் செயலை நாம் செய்வதற்கு தகுந்த காலம் இந்தத் திருவருகைக் காலமே. இந்தாள்களில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று, நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறவேண்டியது அவசியம் என்பதை மனதில் கொள்வோம்.

சிந்தனை:

பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புப் பெறவேண்டியதன் அவசியத்தை நமது உள்ளத்திற்கு எடுத்துச் சொல்ல நாம் விருப்பமாக, தயாராக இருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்க்கைப் பாதையில் இயேசு நம்மோடு தொடர்ந்து வருவதற்கு நம்மைத் தயாரிப்பதற்காக மனமாற்றம் என்னும் அணிகலனை இந்தப் புனிதக் காலத்தில் அணிந்து கொள்வது சாலச் சிறந்தது.

இறைவேண்டல்:

ஆண்டவரே! திருவருகைக் காலத்தில் பயணிக்கின்ற இந்நாள்களில், என் பாவங்களை நான் உணர்ந்து மனம் வருந்த உதவி செய்தருளும். உம்மை விட்டு என்னைத் தூரமாகத் தள்ளிவைக்கின்ற குற்றச் செயல்களைக் கண்டுணர்ந்து, முழுமனதோடு உம்மிடம் திரும்பி வர எனக்கு அருள் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி