திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

09.12.2022 ஒருவருகை காலம் இரண்டாம் வாரம் - வெள்ளிக்கிழமை

அவதூறு பேச்சுகளை விலக்குதல்

அருள்மொழி:

வார்த்தை வாழ்வாக:

"எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள்". (மத்தேயா 11:18-19)

‘அவதூறு சொல்லுதல்’ என்னும் அருவருப்பான ஒரு பாவத்தை இந்த நற்செய்தி பகுதியில் இயேசு சுட்டிகாட்டுகிறார். உண்மைகளைத் தவறாகச் சித்தரித்து, வேண்டுமென்றே திரித்துக் கூறுவதே, ‘அவதூறு’ என்னும் குற்றச் செயல் ஆகும். இது, அடிப்படையில் மற்றொருவருக்குத் தீங்கு விளைக்கும் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற பொய்

தானும், திருமுழுக்கு வானும் பாவம் செய்பவர்களாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, பரிகாசம் செய்யப்படுவதை இயேசு இங்குச் சுட்டிகாட்டுகிறார். எடுத்துகாட்டாக, திருமுழுக்கு யோவான் வெகுவாக நோன்பிருந்தார். இது ஒரு சீரிய நற்பண்புதான். ஆனால், அது ‘பேயின் செயல்’ என்று பரியர்கள் மாற்றிக் கூறினார்கள். இயேசுவோ பலருடைய வீடுகளுக்கும் விருந்தினராகச் சென்று அவர்களோடு அளவளாவி மகிழ்ந்தார். நோன்பிருந்த யோவானை ‘பேய் பிடித்தவன்’ என்று கூறிய அதே பரியர்கள், நண்பர்களோடு உண்டு உறவாடிய இயேசுவை ‘பெருந்தீனிக்காரன், குடிகாரன்’ என்று குற்றம் சாட்டினார்கள்.

ஒருவர் மற்றொருவரைப் பற்றி அவதூறு சொல்லும்போது, அந்த மற்றொருவரிடமுள்ள நற்பண்புகளை திருத்துக் கூறி, அவரைத் தவறாகச் சித்தரிக்க முயலுகிறார். பொதுவாக, பொறாமையினாலும், காழ்ப்புணர்ச்சியாலுமே இத்தகைய அவதூறுகள் சொல்லப்படுகின்றன.

நமது வாழ்க்கையில் அயலாரோடு கொண்டுள்ள உறவிலும், நட்பிலும் நாம் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறோம் என்பதைச் சோதித்துப் பார்க்க, இன்றைய நற்செய்தி பகுதி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. நாம் மற்றவர்களிடத்தில் நற்குணங்களைக் காணும்போது, அதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறோமா? நமது அயலாரிடம் காணப்படுகின்ற நற்குணங்களுக்காக உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி சொல்ல விழைகிறோமா? அல்லது, நற்செய்தியில் சொல்லப்படுகின்ற பரியர்களைப் போல, அயலாரின் நற்குணங்களைத் திரித்துக் கூறி, அவதூறு பரப்ப முனைகிறோமா?

சிந்தனை:

நம்மைச் சுற்றி இருப்போரை நாம் எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்பதை இன்றைய சிந்தனையில் நிறுத்துவோம். ஒருவர பற்றி மற்றவரிடம் பேசும்போது நமது மனநிலை என்ன? ஒருவருடைய நற்குணங்களுக்காக அவரை மதிக்கக் கொள்வோம். மாறாக, நம் மனதிலே பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் தோன்றுமானால், அத்தகைய எண்ணம் ‘அவதூறு பரப்புதல்’ என்ற பாவத்தைச் செய்ய நம்மைத் தூண்டாதிருக்க கருணைக் கடலாம் நம் கடவுளிடம் சரணடைவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என்னைச் சுற்றி இருப்போரைத் தாழ்ச்சியுடனும், உண்மையுடனும் கண்டுணரவும், அந்த நற்பண்புகளுக்காக நான் மகிழ்ச்சியடையவும் எனக்கு உதவி செய்தருளும். தவறான எண்ணங்களையும், அவதூறு பரப்பும் குணத்தையும் என்னிடமிருந்து அகற்றிவிடும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி