திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

08.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - வியாழக்கிழமை

அன்பின் பாதை

அருள்மொழி:

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரேயென நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 11:11)

வார்த்தை வாழ்வாக:

கடந்த ஞாயிறன்று புனித திருமுழுக்கு யோவனின் அறைகூவலைக் குறித்து நாம் தியானித்ததைப் போல, இன்றைய நற்செய்தி வாசகமும் அவருடைய சாட்சியப்பணியை எடுத்துச் சொல்லும் பகுதியாக உள்ளது. அவருடைய பணிவின் காரணமாகத் திருமுழுக்கு யோவான் பெரியவராகவும், முதன்மையானவராகவும் குறிப்பிடப்பட்டார். ஆனால், ‘விண்ணரசின் உறுப்பினர் ஒருவர், இறைவாக்கினர் எல்லோரிலும் மேலானரான திருமுழுக்கு யோவனை விடவும் பெரியவர்’ என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார்.

விண்ணரசின் நமது குறிக்கோள். நமது வாழ்வின் நோக்கமும் அதுவே. இவ்வாறிருக்க, இந்த மண்ணுலகில் நாம் மேன்மையும், முக்கியத்துவமும் அடைந்துவிட்டு, விண்ணரசின் சென்றடைய முடியாது போனால், அதனால் பயன் என்ன? ‘விண்ணரசின் உறுப்பினர் ஒருவர், திருமுழுக்கு யோவனை விடவும் பெரியவர்’ என்று இந்த இடத்தில் இயேசு கூறும்போது, யோவானின் மேன்மையைக் குறைத்துக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. திருமுழுக்கு யோவானின் தன்னடக்கம் மற்றும் அவருடைய முன்னறிவிப்பு பணிகளால் மட்டுமின்றி, விண்ணரசில் ஒருவராக முடிவில்லா வாழ்வின் கனிகளை அவர் சுவைத்துக் கொண்டிருப்பதாலும் ‘மற்ற எல்லா இறைவாக்கினரிலும் மேலானவர்’ என்று இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.

உலகத்தின் பார்வையைக் கொண்டு நாம் எப்போதும் நமது வாழ்க்கையை அளவிட முற்படுகிறோம். இவ்வுலகில் மேன்மையைப் பெற முயலுகின்ற நாம், முடிவில்லா விண்ணக வாழ்வே நமது நோக்கம் என்பதை அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். முடிவில்லா நிலைவாழ்வில் நமக்கு மகிழ்ச்சி தருவது எது? இவ்வுலக வாழ்வில் நாம் செய்துமுடித்த சாதனைகளா? சேர்த்து வைத்துள்ள அளவற்ற செல்வமா? பற்பல நிலைகளில் பலரிடமிருந்து பெற்ற புகழ்ச்சியும், பாராட்டுகளுமா? நிச்சயமாக இல்லை. விண்ணரசின் பார்வையில் இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. விண்ணரசில் பெரிதான மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஒன்று உண்டு. அது தான்: அன்பு, சகோதர அன்பு!

இந்த உலக வாழ்க்கையில் இன்றைய நாளில் நாம் செய்கின்ற அன்புச் செயல்களின் கனிகள் தான், மூவுலக வாழ்வில் நம்மிடம் ஒளிவீசும் சுடர்களாக வெளிப்படுகின்றன. மண்ணுலகில் நமது அன்புச் செயல்களை எவரும் கண்டுகொள்ளாதிருந்தாலும், விண்ணகத்தில் அவை சிறப்பானதாக ஏற்றுக்கொள்ளப்படும். இயேசுவுக்கு நம்மை முழுமையாகக் கையளித்து வாழ்கின்ற வாழ்க்கையின் விளைவே சகோதர அன்பு.

சிந்தனை:

விண்ணரசில் உறுப்பினராக இணைவதே நமது பிறப்பின், நமது வாழ்க்கையின் இறுதி குறிக்கோள் என்பதை இன்று நமது சிந்தனையில் நிறுத்துவோம். மேலும், அன்றாடம் நாம் செய்கின்ற பிறரன்புச் செயல்களே இந்தக் குறிக்கோளைச் சென்றடைவதற்கான பாதை என்பதையும் நினைவில் கொள்வோம். இந்தக் கருத்துக்களை நமது கவனத்தில் கொண்டுள்ளோமா? இல்லையென்றால், நமது அன்றாடச் செயல்பாடுகளில் எவற்றிக்கு முன்னுரிமை தருகிறோம் என எண்ணிப் பார்த்து, நிலைவாழ்விற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ள மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.

இறைவேண்டல்:

மன்றாட்டு: ஆண்டவரே! என்றென்றைக்கும் விண்ணகத்தில் உம்மோடு வாழ்ந்திட நான் ஆசிக்கிறேன். முடிவில்லாத நிலைவாழ்வே எனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை என்றும் கவனத்தில் கொண்டு செயலாற்ற எனக்குத் துணை புரியும், எனது வாழ்வில் இப்போது நான் செய்கின்ற பிறரன்புச் செயல்களின் பயனாக விண்ணகத்தில் மாட்சிமிகு நிலைவாழ்வைக் கட்டியெழுப்ப உதவி செய்தருளும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி