திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

05.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - திங்கள்கிழமை

கடவுளின் கருணையில் மெய்மறந்த நிலை

அருள்மொழி:

இதைக் கண்ட யாவரும் மெய் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக் கொண்டார்கள். (லூக்கா 5:26)

வார்த்தை வாழ்வாக:

இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டின் கூரையைப் பிரித்து அதன் வழியாக இறக்கப்பட்ட முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்தினார். இதனைக் கண்ணுற்ற மக்கள் கூட்டம் மெய்மறந்து நின்றது. ஆம், இயேசு நோயாளர் ஒருவருக்கு நலமளித்ததைக் கண்டு திரண்டிருந்த மக்கள் திகைத்துப் போயினர். ஆனால், முடக்குவாதமுற்றவருக்கு இயேசு உடல்நலம் அளித்தது மட்டுமே மக்களின் திகைப்பிற்குக் காரணம் இல்லை. இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறியதுதான் மக்களின் திகைப்பிற்கு முக்கியக் காரணம். முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தும் அருங்குறியை நிகழ்த்தியதன் வழியாக, தனக்குப் பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் உள்ளது என்பதை இயேசு எண்பித்தார்

மேற்கண்ட அருங்குறியை நேரிலே கண்ட மக்கள் அந்த முடக்குவாதமுற்றவர் நலமடைந்ததைப் பற்றியே உரையாடிக்கொண்டு வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும்போது, ‘பாவங்களுக்கு மன்னிப்பு’ என்னும் கருத்து அவர்களுடய உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டக்கியிருக்கும் என்பது திண்ணம். பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதன் உண்மையான பொருள் ஒருவேளை அவர்களுக்குப் புரியாமல் போயிருக்கலாம். ஆயினும் பாவமன்னிப்புக் குறித்த இயேசுவின் வார்த்தைகள் வலிமை மிக்கதாகவும், மனதில் தாக்கத்தை உண்டாக்குவதாகவும் இருந்தன.

சிந்தனை:

குற்றங்களுக்காகக் கடவுளிடம் மன்னிப்புப் பெறுவதற்காக நாம் மனத்தளவில் வேட்கைக் கொண்டிருக்கிறோமா எனச் சிந்தித்துப் பார்ப்போம். ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்னும் வார்த்தைகளை இயேசு நம்மிடம் சொல்லுவதைக் கேட்க ஆவலாயிருக்கிறோமா? நமது வாழ்வில் இயேசுவின் இரக்கத்தையும், அவருடைய மன்னிப்பையும் அனுபவிக்க ஆர்வமாக இருக்கிறோமா? நமது குற்றங்களுக்கு மன்னிப்பு அருள்வதற்காகவே இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார். கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெறுகின்ற அனுபவத்தின் முன்னே அருங்குறிகள் ஒரு பொருட்டல்ல. கடவுளின் கனிவான இரக்கம் ஒஃரு ஆச்சரியமான இறைகொடையாக நம் வாழ்வில் நிலைக்கும்போது, நாமும் மகிழ்ச்சியும், புனிதமும் நிறைந்த உள்ளத்தோடு கடவுளை மாட்சிபடுத்துவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உமது கனிவான இரக்கத்தையும், கருணைமிகு மன்னிப்பையும் என் வாழ்வில் பெற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று என்னிடம் நீர் சொல்லுவதைக் கேட்பதற்கு உகந்தத் தாழ்ச்சியும், பணிவும் என்னிலே வளர்வதற்கு வரம் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு