திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

04.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

மனமற்றத்திற்கான காலம்

அருள்மொழி:

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.(மத்தேயு 3:1,2)

வார்த்தை வாழ்வாக:

இறைவாக்கினர்களில் உண்மையிலேயே மிகவும் முக்கியமான குறிப்பிடத்தக்க ஒருவர் திருமுழுக்கு யோவன். எத்தனையோ இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்திருந்தாலும், உலக மீட்பர் தன் பணியை தொடங்குவதற்கு மிக அண்மையில் ஒரு முன்னோடியாக செயலாற்றுவதற்காக தேர்ந்து கொள்ளப்பட்டவரே திருமுழுக்கு யோவான். இயேசுவைத் தன் உதரத்தில் சுமந்தவராக தூயக் கன்னி மரியா எலிஸபெத்தை சந்தித்த நேரத்தில் தன் தாயின் வயிற்றிலேயே திருமுழுக்கு யோவன் அருள்பொழிவு பெற்றார் என திருமறை பாரம்பரியம் குறிப்பிடுகிறது. “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” என்று புனித லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். மேலும், “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என இயேசுவே குறிப்பிடுகிறார். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் இந்த ஆச்சரியமான அறிக்கை ஒன்றே சரியான காரணமாக இருக்கிறது.

திருமுழுக்கு யோவான் தனது முன்னறிவிப்புப் பணியை முதன்முதலில் யூதேயாவின் பாலைநிலப் பகுதியிலிருந்துத் தொடங்குகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அரச அரியணையில் அமர்ந்தவராகவோ அல்லது யூதத் தலைவர்களின் மதிப்பை பெற்றவராகவோ அவர் தன் பணியைத் தொடங்கவில்லை. மாறாக, பாலைவனத்தில் தங்கியிருந்து தவவாழ்வில் ஈடுபட்டவராக, மக்களைத் தன்னிடம் வரவழைக்கின்ற எளிமையான ஒரு இறையடியாராக அவர் விளங்கினார். மக்கள் அவரிடம் வந்தபோது, தயக்கமின்றித் துணிவுடன் தனது செய்தியை எல்லோருக்கும் பறைசாற்றினார்.

பாலைநிலத்தில் அவரிடம் வந்தவர்களில் பரிசேயர்களும், சதுசேயர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பொறாமையோடும், காழ்ப்புணர்ச்சியோடும் வந்தார்களேயன்றி, நேர்மையான எண்ணத்தோடு வரவில்லை. எனவே, அவர்கள் தன்னிடம் வந்தபோது திருமுழுக்கு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" என்று கூறினார். மேலும், தனக்குப் பின் தன்னை விட வலிமை மிக்க ஒருவர் வருகிறார் என்றும், அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூடத் தனக்குத் தகுதியில்லை என்றும், பலருடைய மீட்புக்கு வழியாகவும், மற்றோரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பவராகவும் அவர் இருப்பார் என்றும் எடுத்துரைக்கின்றார்.

திருமுழுக்கு யோவானைப் பற்றி இன்னும் நிறையவே சொல்லலாம். வலிமை மிக்க அவருடைய போதனைச் செய்தியை தவறாமல் சிந்திப்பதும், அவருடைய வார்த்தைகள் நமது அடிமனதை அசைத்திட அனுமதிப்பதும் இந்தத் திருவருகைக் காலத்தில் தேவையானதே. யோவானின் அறைகூவலுக்கு நாம் செவிமடுக்க வேண்டிய அவசியம் எந்தெந்த வகையில் நமக்கு அவசியமாகிறது? எந்தெந்த வகையில் பரிசேயர்-சதுசேயர்களைப் போல நாம் நடந்து கொள்கிறோம்? எந்தெந்த வகையில் சுயநலம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தற்பெருமை கொண்டோராக நாம் நடந்து கொள்கிறோம்? இத்தனை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திருமுழுக்கு யோவான் சாடிய பரிசேயர்-சதுசேயர்களை விடவும் நல்லவர்களாகவே இருக்கிறோம் என்று நாம் நினைப்போமானல், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றே பொருள். தாழ்மையான உள்ளம் தன்னுள் இருக்கின்ற குற்றங்களைக் கண்டுணரச் செய்து, திருமுழுக்கு யோவானும், நமதாண்டவர் இயேசுவும் உரைக்கின்ற வலுவான வார்த்தைகள் செம்மையான மனமாற்றத்தை நோக்கி நம் மனதை உயர்த்தத் தூண்டுகிறது.

சிந்தனை:

‘நாம் மனம் மாறியே ஆகவேண்டும் என்பது சந்தேகமில்லாத நிச்சயமான உண்மை’ என்னும் கருத்தை இன்று நம் சிந்தனையில் நிறுத்துவோம். நாம் எல்லோருமே மனமாற்றம் அடைவதற்கான முயற்சிகளை ஒவ்வொரு நாளும் முன்னெடுக்க வேண்டும். மூவொரு கடவுளோடு எந்நேரமும் இடைவிடாத முழுமையான ஒன்றிப்பிலும் தோழமையிலும் இணைந்திருக்கின்ற புனிதமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே மனமாற்றம் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், இத்தகைய புனித வாழ்க்கை மேற்கொள்வோர் வெகு அரிது என்பது உண்மையே. எனவே, பரிசேயரையும், சதுசேயரையும் நோக்கி புனித திருமுழுக்கு யோவான் கூறுகின்ற அழுத்தமான அறிவுரைகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். அந்த அறிவுரைகளெல்லாம் நமக்கென்றே கூறப்பட்டவை என்றெண்ணி, அவற்றை தாழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொள்வோம். மனிதனாக உருவெடுத்த உன்னதக் கடவுளை நம் உள்ளத்தில் வரவேற்பதற்காக தயாரிக்கின்ற இந்தத் திருவருகைக் காலத்தில் திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை முழுமையாக நம் மனதில் ஏற்று அதன்வழி நடப்போம்.

இறைவேண்டல்:

வல்லமை மிக்கவரான என் ஆண்டவரே! உம்மையும், மனமாற்றம் பெறுவதற்காக நீர் வெளிப்படுத்திய உண்மை நெறியையும் ஏற்றுக் கொள்வதற்கு மனித இதயங்களை தயார் செய்வதற்காக புனித திருமுழுக்கு யோவானை உமக்கு முன்னதாக அனுப்பி வைத்தீர். அன்புமிக்க ஆண்டவரே, திருமுழுக்கு யோவான் அருளிய அறிவுரைகளுக்கு செவிமடுப்பதற்கு ஏற்ற தாழ்ச்சியை எனக்குத் தாரும். அந்த அறிவுரைகளை என் முழு இதயத்தோடு பின்பற்றி நடந்து, என் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நான் மனமாற்றம் அடைந்திட அருள் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு