திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

03.12.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - சனிக்கிழமை

கடவுளின் கொடை

அருள்மொழி:

கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். (மத்தேயு 10:8)

வார்த்தை வாழ்வாக:

நாம் ‘கொடையாக’ பெற்றது என்ன? வாழ்வில் நாம் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு நலன்களும் நாம் விலை எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே நமக்குக் கிடைத்தன என்பது உண்மையே. நல்லன எல்லாமே கடவுளிடமிருந்து இலவசமாக நமக்குக் கிடைத்த கொடைகளே. இறையருளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நாம் எதுவுமே செய்ய இயலாது என்பதை நாம் நம்புகிறோமா?

தன் பெயரால் போதிக்கவும், நலமாக்கவும், பேய்களை ஒட்டவும் பன்னிரண்டு திருத்தூதர்களையும் அனுப்பும்போது, இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரையின் ஒரு பகுதியே மேலேயுள்ள விவிலிய மேற்கோள். அவர்கள் தன்னிடமிருந்து பெற்றுக் கொண்டவை எல்லாமே இலவசமாகப் பெற்ற கொடைகளே என்பதைப் பன்னிருவருக்கும் நினைவூட்டிய இயேசு, ‘இலவசக் கொடையாகப் பெற்றுக் கொண்ட நற்செய்தியை இலவசக் கொடையாகவே அவர்களும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பணிக்கிறார்.

கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடத் தயாராகின்ற திருவர்கைக் காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பு கடவுளின் பெருங்கொடை என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். கிறிஸ்துமஸ் விழாக் நாள்களில் நாம் அன்பளிப்புகள் கொடுப்பதும், பெறுவதும் வழக்கமே. ஆனால், ‘கொடை’ மற்றும் ‘அன்பளிப்பு’ - இவை இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘அன்பளிப்பு’ என்பது எதிர்பார்க்கப்படுவது. எடுத்துக்காட்டாக, பிறந்த நாள்கள் அல்லது வாழா நாள்களின்போது இல்லத்தில் உள்ள கணவர், மனைவி அல்லது குழந்தைகள் அன்பளிப்பு ‘நமக்குக் கிடைக்கும்’ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொடை என்பது அன்பளிப்பு என்னும் நிலையிலிருந்து மேலானது. ஒருவர் எதிர்பாராத வகையில், தகுதியற்ற நிலையில் இலவசமாகப் பெறுவதே கொடை. எந்தவொரு நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்பின் அடிப்படையில் கொடுக்கப்படுவதே கொடை. கிறிஸ்து மனிதனாகப் பிறந்தததும், மனிதகுலத்திற்கு இறைவன் அளித்த மாபெரும் கொடையே.

தகுதியற்ற நமக்கு நிபந்தனையில்லா கொடையாகத் தன்னையே தருவதற்காகக் கடவுள் இவ்வுலகில் மனித அவதாரம் எடுத்த நிகழ்வைத் தியானிக்கின்ற காலமே இந்தத் திருவருகைக் காலம். இயேசுவின் மண்ணுலக வாழ்க்கை உலக மாந்தருக்கு இலவசமாகக் கிடைத்த மாபெரும் கொடை. இவ்வாறு நாம் இலவசமாகப் பெற்றுக் கொண்ட கிறிஸ்து என்னும் கொடையை யாவரும் எடுத்துரைப்பதற்காகக் கடவுள் நமக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பதை உணர்ந்து சிந்திக்கின்ற நாள்களே திருவருகைக் காலம்.

சிந்தனை:

இயேசுவை நமது வாழ்வில் கொடையாகப் பெறுவதையும், மற்றவருக்குக் கொடுப்பதையும் இந்த நாளில் சிந்திப்போம். இந்தத் திருவருகைக் காலத்தில் நன்றியுணர்ச்சியால் நமது இதயம் நிறைவதாக! அதன் விளைவாக, இயேசு என்னும் கொடையை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முனைவோமாக!

இறைவேண்டல்:

ஆண்டவரே! உமது வாழ்வை எமக்குக் கொடையாகக் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். தகுதியற்ற எனது வாழ்வில் கலந்து உறவாடுவதற்காக இவ்வுலகில் பிறந்தீர். உம்மை அறிந்து, அன்பு செய்து மகிழச் செய்தீர். இந்தப் பேரன்பிற்காக உமக்கு நன்றி. இந்த மகிழ்ச்சியின் பயனாக, உம்மை மற்றவர்களுக்குக் கொடையாக அளிப்பதற்கான கருவியாக என் வாழ்வை மாற்றிக் கொள்ள வரம் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு