திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

02.12.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - வெள்ளிக்கிழமை

நான் பார்வை பெற விரும்புகிறேன்

அருள்மொழி:

அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்”என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால், அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள். (மத்தேயு 9:29-31)

வார்த்தை வாழ்வாக:

“யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்”- குணமடைய விரும்பி, இயேசுவின் இரக்கத்தை இறைஞ்சிக் கேட்டுக் கொண்டே அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பார்வையற்றவர்களிடம் மேற்கண்டவாறு இயேசு கூறுகிறார். இயேசு தங்களுக்குப் பார்வை தருவார் என்ற நம்பிக்கையோடு வந்த அவர்களுக்கு இயேசு பார்வை அளித்துக் குணமாக்குகிறார். ஆனால், தன்னால் அவர்கள் இருவரும் பார்வை பெற்றதைக் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு அவர்களிடம் கண்டிப்பாகக் கூறுவது நம் கவனத்தை ஈர்க்கின்றது. இயேசு அவ்வாறு கூறுவதன் காரணம் என்ன?

முற்றிலும் கடைபிடிக்க இயலாத ஒரு கட்டளையை இயேசு அவர்கள் முன் வைக்கிறார். அந்த இருவரையும் அறிந்த எல்லாருக்குமே அவர்கள் இதற்கு முன் பார்வையற்றிருந்தார்கள் என்பது தெரியும். இப்போது திடீரென எதிர்பாராத வகையில் அவர்கள் பார்வை பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒன்றை எவ்வாறு மறைத்து வைக்க முடியும்? இந்த அரிய நிகழ்வைப் பற்றி அவர்களால் யாரிடமும் கூறாமல் இருக்க முடியாது என்பது இயேசுவுக்கும் தெரியும் என்றாலும், ‘நீங்கள் பார்வை பெற்றதை யாரும் அறியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார். இவ்வாறு இயேசு கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அவர்களை நலமடையச் செய்ததன் நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தன்னிடம் நம்பிக்கை வைத்து இரக்கத்தை நாடி வந்த இரண்டு பார்வையற்றவர்களின் மீதும் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலேயே இயேசு அவர்களைக் குணப்படுத்தினார். பொதுமக்களின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காகவோ அல்லது வேறு வகையான ஆதாயம் பெறுவதற்காகவோ இயேசு இந்த அருஞ்செயலை செய்யவில்லை. மாறாக, அந்தப் பார்வையற்றவர்களின் மேல் கொண்ட அன்பாலேயே அவர்களுக்கு நலமளித்தார். மேலும், நம்முடைய இதயத்தில் இருக்கின்ற பார்வையற்ற நிலையையும் தன்னால் குணமாக்க முடியும் என்பதை நமக்கு எடுத்துரைப்பதற்காகவும், நலமடைந்த அந்த இருவரின் உள்ளங்களில் மட்டுமல்லாமல், நமது உள்ளங்களிலும் நம்பிக்கை வேரூன்றி நிலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அருங்குறியை நிகழ்த்துகிறார்.

ஆண்டவர் இயேசுவிடமிருந்து இத்தகைய பெருங்கொடையைப் பெற்றுக் கொண்ட அந்த இருவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ‘யாரிடமும் இதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேச வேண்டாம்’ என்று இயேசு கூறியிருந்தாலும், அவர்களால் தங்கள் மகிழ்ச்சியை மறைத்து வைக்க முடியவில்லை. நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் மேலோங்க ‘அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பி’ எல்லோரிடமும் தாங்கள் நலமடைந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்கள். தன்னுடைய கட்டளையை அந்த இருவரும் மீறிவிட்டார்கள் என நினைக்காமல், இஃது அவர்களுடைய ஆழமான நம்பிக்கையின் தவிர்க்க முடியாத விளைவு என்றுதான் இயேசு எண்ணியிருக்க வேண்டும்.

நமது நலை என்ன? நம்முடைய வாழ்க்கையில் கடவுள் நமக்குத் தருகின்ற கொடைகளைக் கண்டுணர்ந்து, அந்த மகிழ்ச்சியை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறோமா? கடவுளின் கொடைகளுக்குச் சாட்சிகளாக வாழ்ந்து, நம்மைச் சுற்றியிருப்போரும் கடவுள் நம்மகு செய்த அருஞ்செயல்களைக் கண்டுணரச் செய்கிறோமா?

சிந்தனை:

பார்வை இல்லாதிருந்து இயேசுவால் மீண்டும் பார்வை பெற்ற அந்த இரண்டு பேரின் மகிழ்ச்சியையும், கடவுள் நம் வாழ்வில் அருஞ்செயல்கள் செய்யும்போது நாம் அடைகின்ற மகிழ்ச்சியையும் நம் சிந்தனையில் நிறுத்துவோம். இறையருளால் நம் வாழ்வில் நல்லன நடக்கும்போது, நமது உள்ளத்தில் நன்றியும், மகிழ்ச்சியும் பொங்கிப் பெருக வேண்டும். இல்லையென்றால், நமது அகக்கண்களின் குறைபாடு நீங்கி நாமும் பார்வை பெற வேண்டுமென்று இந்த நாளில் நம்பிக்கையோடு ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! நான் பார்வை பெற உதவி செய்யும். உம்மைக் கண்டுணர்ந்த மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த மகிழ்ச்சி எல்லோரும் காணும்வண்ணம் எந்து வாழ்வில் பொங்கிப் பெருகவும் அருள் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு