திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

01.12.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - வியாழக்கிழமை

செவிமடுப்போம், புரிந்து கொள்வோம், செயல்படுவோம்

அருள்மொழி:

“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது" (மத்தேயு 7:24,25)

வார்த்தை வாழ்வாக:

பல நேரங்களில் ஒருவர் சொல்வதைக் கவனத்தோடு செவிமடுத்து கேட்பது என்பது மிகவும் கடினமான செயலாகவே தோன்றுகிறது. நாம் எப்போதும் கவனத்தோடு செவிமடுக்கின்றோமா? ஒருவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பது எப்படி என்று நமக்குத் தெரியுமா? ஒருவருடைய கூற்றுக்குக் கவனத்துடன் செவிமடுப்பது பெரும்பாலும் நமக்கெல்லாம் ஒரு போராட்டமே.

‘கவனமாகச் செவிமடுப்பது’ என்பது சாதாரணமாகக் காதால் கேட்பதிலிருந்து வேறுபட்டது; அதனிலும் மேலானது. ஒருவர் சொல்வதைக் காதால் கேட்டு, உள்மனதில் ஏற்று, புரிந்துகொள்தலே ‘செவிமடுத்தல்’ எனப்படுகிறது. மேலும், ‘கேட்டுப் புரிந்து கொள்தல்’ மட்டுமே போதுமானதல்ல; அதன்படி நாம் செயல்பட வேண்டும் என்று இந்த விவிலியப் பகுதியில் தெளிவாகக் கூறுகிறார். நாம் இறைவார்த்தையின்படி செயல்படும்போது, அதனை உள்ளத்தில் ஏற்று, அவருடைய விருப்பத்திற்கு நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கின்றோம். நம்முடைய செயல்பாடுகளை இறைவார்த்தை நெறிபடுத்த அனுமதிப்பதே இதன் பொருள் ஆகும்.

இயேசு இங்கு எடுத்துச் சொல்லுகின்ற உருவகம் விளக்கமான ஒன்றாகவே உள்ளது. மணல் மேல் கட்டப்பட்ட வீட்டின் உறுதிதன்மை, பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டின் உறுதிநிலையிலிருந்து வேறுபட்டது தான். மணலின் மேலே கட்டப்பட்ட வீட்டின் உறுதியற்றத்தன்மையும், அதற்கு வரக்கூடிய இடர்பாடுகளும் நமக்குத் தெரிந்ததே. பலமான புயற்காற்று வீசும்போதும், மண்ணரிப்பினால் வீட்டின் அடித்தளம் பலவீனம் அடையும் போதும், மணலின் மேல் வீடு கட்டியவர் மிகுந்த பதட்டமும், மனக்கவலையும் கொள்கிறார். ஆனால், பாறையின் மீது அடித்தளமிட்டு வீடு கட்டியவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கவலைப்படுவதில்லை

சிந்தனை:

நமது வாழ்க்கையின் அடித்தளம் எத்தகையது என்பது குறித்து இன்று சிந்திப்போம். இயேசு தான் நம் வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறாரா என்று பரிசீலித்துப் பார்க்கின்ற காலமே இந்தத் திருவருகைக் காலம். நமது வாழ்க்கை என்னும் கட்டடத்திற்கு அடித்தளமாகக்கூடிய பாறையாக இருப்பதற்காகவே இயேசு மானிடனாக இவ்வுலகிற்கு வந்தார். இறைவார்த்தைக்குச் செவிமடுத்து, அதைப் புரிந்துணர்ந்து, அதன்படி செயலாற்றுவதே, நம் வாழ்க்கைக்கு வலுவூட்டும் அடித்தளமான இயேசு என்னும் பாறையைப் பற்றிக்கொள்ளூம் வழியாகும். இவ்வாறு இயேசு என்னும் பாறையை அடித்தளமாகக் கொண்டு நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, எந்தவொரு இடர்பாடும் நம் வாழ்க்கையைச் சிதைத்திட முடியாது.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உமது மனித வாழ்வில் நீர் காட்டிய நன்னெறிகள் எனது வாழ்வின் அடித்தளமாக அமையட்டும். பாறையான உம்மீது என் வாழ்க்கையின் அடித்தளத்தை நான் அமைத்துக் கொள்ள எனக்கு வரம் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு