திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

30.11.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - புதன்கிழமை

மக்களின் மீது இயேசு கொண்டுள்ள அக்கறை

அருள்மொழி:

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்”என்று கூறினார். (மத்தேயு 15:32)

வார்த்தை வாழ்வாக:

இந்த விவிலிய வாசகப் பகுதியில் பொதிந்துள்ள முதன்மையான கருத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிடலாம். மக்கள் கூட்டத்தின் இயேசு கொண்டிருந்த ஆழமான அக்கறையும், பரிவும் இந்த விவிலிய வரிகளில் வெளிப்படுகின்றன. தன்னைச் சுற்றியிருக்கின்ற மக்களின் ஆன்மநலனைப் பற்றி மட்டுமல்லாமல், அவர்களுடைய உடல்நலனைப் பற்றியும் அவர் அக்கறை காட்டுகிறார். அந்த மக்கள் பசியோடு அங்கிருந்து செல்வதற்கு அவர் விரும்பவில்லை. தன்னைப் பின்பற்றுவோரின் நலனில் இயேசு முழு அக்கறை கொண்டுள்ளார் என்பதையே இந்த விவிலிய வரிகள் காட்டுகின்றன.

தனிப்பட்ட முறையில் நோக்கும்போது, எல்லாம் வல்லவராகிய கடவுள், அங்குக் கூடியிருந்த மக்களின் உடற்பசியைப் போக்க அடுத்த வேளை உணவளிப்பது குறித்து ஆழ்ந்த பரிவு காட்டி நிகழ்த்திய பெரும் அருங்குறி இது. நிலைவாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் மீட்பைப் பற்றி மட்டுமல்லாமல், நமது அன்றாடத் தேவைகளைக் குறித்தும் கடவுள் அக்கறை காட்டுகிறார் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

இந்த நற்செய்தி பகுதியில் அடுத்து என்ன நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரியும். சீடர்கள் இயேசுவிடம் கொண்டு வந்த ஏழு அப்பங்களையும், சில மீன்களையும் பெருகச் செய்து, கூடியிருந்த நாலாயிரம் பேருக்கும் மேற்பட்ட மக்களுக்கு வயிறார உணவு அளித்தார். உலகியல் கண்ணோட்டத்தில் இஃது ஒரு நம்ப இயலாத அதிசயமாக இருந்தாலும், தனிப்பட்ட வகையில் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வு பெரும் அற்புதம் தான்.

“நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்…. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை.” என்று இயேசு கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். மிகவும் தனிப்பட்ட முறையில் மனிதாபிமானத்தோடு இயேசு காட்டுகின்ற இந்தப் பரிவு, ‘கடவுள் நம்மீது கொண்டுள்ள அக்கறை ஆழமானது மட்டுமல்ல; முழுமையானதும் ஆகும்’ என்று சுட்டிகாட்டி நமக்குப் பெரும் ஆறுதல் தருகிறது.

இவ்வாறு தன்னைப் பின்பற்றுவோரின் உடற்பசிக்கு உணவளிப்பது பற்றிய இயேசு அக்கறை, அவர்களுடைய ஆன்மநலனிலும் இயேசு அக்கறை கொண்டுள்ளார் என்று எடுத்துக் காட்டுகிறது. இந்த அளவுக்குத் தன் சீடர்களின் உடல்நலனில் பரிவு காட்டும் இயேசு, அவர்களுடைய ஆன்மநலனிலும், நிலைவாழ்விற்குத் தேவையான நன்மைகளால் அவர்கள் ஊட்டம் பெறுவதற்கும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

சிந்தனை:

நம் மீது இயேசு கொண்டுள்ள ஆழமான, முழுமையான அக்கறையைப் பற்றி இன்று சிந்திப்போம். நமது வாழ்வின் எந்தவொரு விவரமும் அவருடைய கவனத்தைப் பெறாமல் போகாது. சில நேரங்களில் இதனை நம்புவது கடினமாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மை என்பதை நாம் உணர்தல் வேண்டும். நம்முடைய ஒவ்வொரு தேவைகளிலும் நம்மைத் தேடி வந்து துணை நிற்க நமதாண்டவர் இயேசு இருக்கிறார் என்பதை உணர்ந்து, நம்மையே அவருக்கு ஒப்புக் கொடுத்து, அவரிடத்தில் முழுமையாகச் சரணடைவோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! எனது வாழ்க்கையின் தேவைகளை நுணுக்கமாகக் கண்ணோக்கி, அவற்றின் மேல் நீர் காட்டுகின்ற மேலான அக்கறைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்மீது காட்டுகின்ற நிறைவான பரிவின் மேல் நம்பிக்கை வைத்து, உமது தெய்வீக பாதுகாப்பின் அரவணைப்பில் நான் சரணடைய வரம் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு