திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

29.11.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - செவ்வாய்கிழமை

நம்பிக்கை என்னும் மறையுண்மை

அருள்மொழி:

“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" (லூக்கா 10:21)

வார்த்தை வாழ்வாக:

மேற்கண்ட விவிலிய வாசகத்தின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி: நாம் யாரைப் போல இருகிறோம்? “ஞானிகள்-அறிஞர்கள்” போலவா அல்லது “குழந்தைகள்” போலவா? நமது வாழ்க்கைமுறை நம்மை எந்த நிலையில் வைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் கடினமாகத் தோன்றலாம். குழந்தைகளைப் போல மாசற்ற மனநிலை கொண்டிருப்பது மேன்மையானது என்று இயேசு கூறுவதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்; இல்லையெனில் நாம் நம்மை “ஞானிகள்-அறிஞர்கள்” நிலையிலேயே எண்ணிப் பார்த்திட விழைவோம்.

ஞானிகள்-அறிஞர்கள் போல இருப்பதில் தவறேதும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் “ஞானிகள்-அறிஞர்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, யாரை இயேசு சுட்டிகாட்டுகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். உண்மைக்குப் புறம்பான வகையில் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொண்டு, ‘எல்லாம் எமக்குத் தெரியும்’ என்ற மனநிலையில் பகட்டான வாழ்க்கைமுறைகளைக் கடைபிடிப்போரையே “ஞானிகள்-அறிஞர்கள்” என்று குறிப்பிடுகிறார்.

‘எல்லாம் எமக்குத் தெரியும்’ என்ற மனநிலையில் இருப்போர் உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை. அத்தகைய மனநிலை கொண்டிருப்போர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்பதே உண்மை. ஒரு குழந்தையைப் போலப் பணிவோடும், திறந்த மனதோடும் எதையும் கற்றறிந்து கொள்ளுகின்ற மனநிலையே ஏற்புடைய பண்பு என்று இயேசு எடுத்துச் சொல்கிறார். பணிவும், திறந்த மனமும் கொண்ட குழந்தை மனநிலையே விண்ணக ஞானத்தை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்தை நமக்குள் உண்டாக்குகின்றது.

நம்பிக்கையின் மறையுண்மைகளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக இயேசு வானகத் தந்தையைப் போற்றுகிறார். இயேசுவின் இந்தக் கூற்று, திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைக்கின்ற நமது சிந்தனைக்கு ஏற்றக் கருப்பொருள் ஆகும். இறைவன் மனிதனாக உருவடுத்த திருஅவதாரத்தின் மறையுண்மைகளை நாம் ஆய்ந்து அறிந்துகொள்ள முயல்கின்ற இந்தத் திருவருகைக் காலத்தில் குழந்தைகளையொத்த நம்பிக்கையும், திறந்த மனமும் கொண்டிருப்பது அவசியமானதே. இத்தகைய பணிவும், திறந்த மனமும் இல்லையென்றால், இந்தக் கிறிஸ்து பிறப்பு விழா நாள்களில் கடவுளிடமிருந்து வரும் வியத்தகு கொடையை நாம் முழுமையாக அறிந்து கொள்ள இயலாது.

சிந்தனை:

நாம் திறந்த மனதோடு இருக்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்மோடு உடனுறைந்து வாழ்ந்திட மனிதனாக உருவெடுத்த கடவுளின் திருஅவதாரத்தின் மறையுண்மைகளில் மூழ்கிட நாம் விருப்பத்தோடு தயாராக இருக்கிறோமா? நமது நம்பிக்கையின் பேருண்மைகளை ஆய்ந்தறிந்திட தேவையான குழந்தை மனநிலையை ஆர்வத்தோடு பற்றிக்கொள்ள நாம் தயாராக உள்ளோமா? இந்தக் கேள்விகளுக்கு நமது பதில் “ஆம்” என்றிருக்குமானால், இந்தத் திருவருகைக் காலமும், வரவிருக்கின்ற கிறிஸ்து பிறப்பு விழாக் காலமும் சிறப்பானதாக அமைந்திடும்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! சிறு குழந்தையைப் போன்ற எளிய மனதையும், பணிவான நம்பிக்கையையும் எனக்குத் தந்தருளும். நீர் இருப்பது போலவே உம்மைக் காணவும், இவ்வுலகிலே பிரசன்னமாக இருக்கின்ற உமது உடனிருப்பு என்னில் ஊடுருவிச் செல்லவும் அருள் தாரும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு