திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

28.11.2022 திருவருகைக் காலம் முதல் வாரம் - திங்கள்கிழமை

தூய்மை மிகு திருநற்கருணையில் நம்பிக்கை

அருள்மொழி:

“ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்" (மத்தேயு 8:8)

வார்த்தை வாழ்வாக:

நமக்கு மிகவும் பரிச்சயமான இந்த விவிலிய வார்த்தைகள் உரோமை நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கைப் பகுதியாகும். தன் பையனை குணமாக்க வேண்டும் என்று நூற்றுவர் தலைவர் முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று, தான் வந்து அவனை குணமாக்குவதாக இயேசு கூறுகிறார். அதற்கு, இயேசுவின் மேல் தான் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை எடுத்துக்காட்டும் வண்ணம் அந்த நூற்றுவர் தலைவர் சொன்ன மறுமொழியில் இரண்டு கருத்துகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன: 1) இயேசு தன் இல்லத்தில் அடியெடுத்து வைக்க தனக்குத் தகுதியில்லை என்னும் பணிவு 2) தான் இருக்கின்ற இடத்திலிருந்தே இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே தன் பையன் நலமடைவான் என்னும் உறுதியான நம்பிக்கை.

நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியப்படைந்த இயேசு, தொலைதூரத்திலிருந்தே அவருடைய பையனுக்கு உடல்நலம் அளிக்கிறார். மேலும், அந்த நூற்றுவர் தலைவரை நம்பிக்கையின் முன்மாதிரியாக எல்லோருக்கும் எடுத்துக் காட்டுகிறார். நூற்றுவர் தலைவரின் திடமான இந்த நம்பிக்கை அறிக்கை, திருநற்கருணையின் மீதுள்ள நமது உறுதியான நம்பிக்கையை சுட்டிகாட்டும் விதமாக திருப்பலியில் பயன்படுத்தப்படுகிறது: 1) திருநற்கருணையை பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள் 2) ஆயினும், நம்முள்ளே எழுந்தருளி நமது ஆன்மாவை குணப்படுத்த வரவேண்டும் என்று இயேசுவை நாம் வரவேற்கிறோம்.

இறைவன் மனிதனான திருஅவதாரத்தின் மறையுண்மையை, மனிதவுருவிலே உலகில் பிறந்து நம்மோடு வாழுகின்ற பேருண்மையை நாம் சிறப்பாகத் தியானிக்கின்ற காலமே இந்தத் திருவருகைக் காலம். கடவுள் மனிதனாக பிறந்த உண்மை நிகழ்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தாலும், இன்றைக்கும் ஒவ்வொரு திருப்பலியிலும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

சிந்தனை:

திருநற்கருணையில் உயிருள்ள இறைஇயேசு நம்மிடம் வருகிறார் என்ற மறையுண்மையில் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை நமது சிந்தனையில் நிறுத்துவோம். உலக மாந்தரோடு இணைந்து வாழ மானிடவுரு எடுத்த கடவுள், நம்மோடு ஒன்றித்து வாழ வருகிறார் என்பதன் வெளிப்பாடே திருப்பலி ஆகும். இந்த நூற்றுவர் தலைவரை போன்ற ஆழமான நம்பிக்கையை நாமும் கொண்டிருந்தால், அளவற்ற வகையில் கடவுள் நம்மையும் ஆசீர்வதிப்பார் என்பது திண்ணமே.

இறைவேண்டல்:

ஆண்டவரே! நான் நம்புகிறேன். என்னில் நம்பிக்கையின்மை அகன்றிட உதவி செய்தருளும். ஒவ்வொரு முறையும் திருவிருந்திற்கு நான் தயாராகும் போது எனது தகுதியின்மையை உணர்ந்திடச் செய்தருளும். உள்ளத்தின் தாழ்ச்சியில் எனது தகுதியின்மையை நான் கண்டுணரும்போது, நலமருளும் உமது உடனிருப்பை என் வாழ்வில் நான் ஏற்றுக்கொள்ள வரம் தந்தருளும். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு