திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

27.11.2022 - திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

தயார்நிலையை வழக்கமாக்கி கொள்ளுதல்


அருள்மொழி:

“எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” (மத்தேயு 24:44)

வார்த்தை வாழ்வாக:

அன்பார்ந்தவர்களே! புனிதமான திருவருகைக் காலத்தில் மீண்டும் நாம் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறோம். சிறப்பான ஆன்மீக தயாரிப்புக்கான காலமே திருவருகைக் காலம். வாழ்நாளில் நமக்குக் கிடைப்பதற்கரிய உன்னதப் பரிசான இயேசு கிறிஸ்துவை பெறுவதற்கு நம்மையே கையளிக்கின்ற தயாரிப்பு நாள்களே திருவருகைக் காலம்.

உலகின் மீட்பராம் இயேசு இம்மண்ணுலகிற்கு மீண்டும் வருவார் என்பதையே திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று தரப்பட்டுள்ள விவிலிய வாசகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஒப்பற்ற தனது வல்லமையோடும், மாட்சியோடும் இயேசு வருவார் என்றும், நாம் “நினையாத நேரத்தில்” அவரது இரண்டாம் வருகை நடைபெறும் என்றும் இன்றைய வாசகங்கள் நினைவூட்டுகின்றன.

இறுதித் தீர்ப்பை நடத்திடவும், விண்னையும் மண்ணையும் புதுப்பிப்பதற்கும் நமதாண்டவர் எந்த நேரத்திலும் இவ்வுலகிற்கு வருவார் என்பது திண்ணமே; ஆனால், ஆண்டவரின் இரண்டாம் வருகை வெகுவிரைவில் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதை அநேகர் எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வாறன சூழ்நிலையில், “நினையாத நேரத்தில்” நடக்கக்கூடிய அவரது இரண்டாம் வருகையின் நாளுக்காகத் தங்களைத் தயாரித்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு எப்போதும் கடவுள் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்.

அந்த இரண்டாம் வருகையின் நாள் இன்றைய நாளாக இருக்குமானால், நாம் இந்த நாளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? ‘இன்றைக்கு அது நடக்க வாய்ப்பில்லை’ என்னும் அறிவு சார்ந்த வாதங்களைத் தவிர்த்து, உறுதியாக ஒருநாள் வரவிருக்கின்ற அந்தத் தருணத்திற்கான நமது ஆயத்தநிலை என்ன என்பதை ஆய்ந்துப் பார்ப்போம். இத்தகைய தயார்நிலையில் நாம் இருப்பது நமது வாழ்வின் புனிதத்தன்மைக்கு முக்கிய அம்சமாக உள்ளது. ‘ஆண்டவர் வருகையின் நாள் இந்நாளே’ என்பதை நினைவில் கொண்டு நாம் ஒவ்வொரு நாளும் வாழும்போது, தொய்வில்லாத எதிர்பார்ப்புடனும், தொடர்ந்த தயார்நிலையும் நாம் இருப்பதால், நமது வாழ்வில் புனிதத்துவம் நிறைவாகி நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தொடர்ந்து இத்தகைய தயார்நிலையில் நாம் வாழ்வதன் விளைவாக ஆண்டவர் இயேசு உண்மையாகவே வரும்போது அவரைச் சந்திக்க நாம் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதோடு, ஒவ்வொரு நாளும் எண்ணற்ற வழிகளில் அவர் நம்மிடம் வருவதைத் தவறாமல் உணர்வதற்கான கவனநிலையையும் பெறுகிறோம். இவ்வாறு தொடர்ந்து தயார்நிலையில் வாழ்வதால், அன்றாடம் நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலைக் கேட்கவும், அவர் நம்மில் பொழிகின்ற அளவற்ற இறையருளுக்குப் பதிலளிக்கவும் கூடிய உள்ளார்ந்த ஓர் ஆன்மீக பழக்கம் நம்முள் நிலைபெறுகிறது. இதன் பயனாகக் கிறிஸ்து நம்மில் வாழவும், இவ்வுலகில் அவருடைய மீட்பின் கருவிகளாக மாறவும் தேவையான நற்பண்புகளை நாம் பெறூகிறோம்.

சிந்தனை:

கிறிஸ்துவின் குரலுக்குச் செவிசாய்ப்பதற்கும், அவருடைய புனிதமான உடனிருப்பை வரவேற்று நம் வாழ்வில் ஏற்றுக் கொள்வதற்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் இயேசுவின் திருஇதயம் ஆவலாகக் காத்திருக்கின்றது. இந்தச் சிந்தனையை இன்று நமது உள்ளத்தில் தியானிப்போம். மேலும் தாமதம் செய்யாமல், இன்றே இப்போதே இயேசு நம்மிலே வருவதற்கு நம் இதயக் கதவுகளைத் திறந்து வைப்போம். இதன் பயனாக இயேசுவின் மாட்சி மிக்க இரண்டாம் வருகையின்போது அவரை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு நமது வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொள்வோம்.

இறைவேண்டல்:

எந்நாளும் என்னோடு இருக்கின்ற என் ஆண்டவரே! என் வாழ்வில் உமது அருளையும், இரக்கத்தையும் பொழிவதற்காக நினையாத நேரத்தில் என்னுள் வருகின்றீர். உமக்கும், உமது திருவுளத்திற்கும் எப்போதும் என்னையே நான் திறந்து வைத்து, உமது வருகைக்கான தயார்நிலையை ஏற்படுத்திக் கொள்ள எனக்குத் துணைபுரிவீராக! உம்மைச் சந்திப்பதற்கான தயார்நிலையை என்னுள்ளே பன்மடங்கு வளர்த்துக் கொள்ளும் நாள்களாக இந்தத் திருவருகைக் காலம் அமைவதாக! இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு