மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
மலாக்கி 1: 14 - 2: 1-2, 8-10|1 தெசலோனிக்கர் 2: 7-9|மத்தேயு 23: 1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


நாம்தான்‌ திருச்சபை.

நம்‌ பாரத நாட்டின்‌ விடுதலை வாங்கித்‌ தந்த காந்தி மகான்‌, தானே எழுதிய தன்‌ வாழ்க்கைச்‌ சரித்திரத்திலே பின்வரும்‌ நிகழ்ச்சியைக்‌ குறிப்பிடுகின்றார்‌. தென்‌ ஆப்பிரிக்காவில்‌ தன்‌ மாணவப்‌ பருவத்திலே வேதபுத்தகத்தைப்‌ படிக்கும்‌ ஆர்வத்தைப்‌ பெற்றாராம்‌. குறிப்பாக மலைப்பொழிவு அவரது உள்ளத்தைக்‌ கவர்ந்த முக்கியப்‌ பகுதி என்று குறிப்பிடுகின்றார்‌. அதோடு மட்டுமல்ல நம்‌ பாரத நாட்டிலே ஏற்பட்டுள்ள ஏற்றத்‌ தாழ்வுகளைக்‌ குறிப்பாக ஜாதியின்‌ அடிப்படையிலே பரவியுள்ள வேறுபாடு களைக்‌ களைவது என்றால்‌ கிறிஸ்தவ திருமறைதான்‌ பதில்‌ தரமுடியும்‌ என முடிவுக்கு வந்ததாகக்‌ குறிப்பிடுகிறார்‌. எனவே பல நாட்களாகக்‌ கிறிஸ்தவத்‌ திருமறையில்‌ சேரச்‌ சிந்தனைக்‌ கொண்டிருந்தாராம்‌. ஒருநாள்‌ ஆப்பிரிக்காவில்‌ ஞாயிறு நடைபெறும்‌ திருப்பலியில்‌ பங்கெடுக்கவும்‌, அங்கு கொடுக்கப்படும்‌ மறையுரையைக்‌ கேட்கவும்‌ சென்றாராம்‌. ஆனால்‌ அந்தோ பரிதாபம்‌! ஆலய வளாகத்தில்‌ தடுத்து நிறுத்தப்பட்டாராம்‌ வெள்ளையர்களால்‌. நீ பலியிலே பங்கெடுக்க வேண்டுமானால்‌ இங்கு அல்ல. கருப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆலயத்திற்குச்‌ செல்‌ என்று மறுக்கப்பட்டார்‌. ஆம்‌ இதுதான்‌ அவரைக்‌ கிறிஸ்துவன்‌ ஆகும்‌ எண்ணத்தை அடியோடு நிறுத்தியது. ஆலயம்‌ செல்வதை நிறுத்தினார்‌.

இந்த நிகழ்ச்சியானது எப்படி வார்த்தைக்கும்‌ செயலுக்கும்‌ முரண்பாடு உள்ளது என்பதைக்‌ காட்டுகிறது. பரலோகத்தி லிருக்கின்ற எங்கள்‌ பிதாவே என்று ஒரே தந்தையை ஏற்றுக்கொள்ளும்‌ நாம்‌ உண்மையிலே இன்றைய வார்த்தை வழிபாட்டை நோக்கும்போது குருக்களாக, ஆயர்களாக இருப்பவர்களுக்குத்தான்‌ போதிக்கப்பட வேண்டும்‌ என்ற சிந்தனை வருகிறது.

மலாக்கியா இறைவாக்கினர்‌ தரும்‌ செய்தியைப்‌ பாருங்கள்‌. கிறிஸ்து பிறக்கும்‌ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்‌ பாபிலோனில்‌ அடிமைகளாக இருந்த இஸ்ரயேல்‌ மக்கள்‌, உரிமை பெற்று, தம்‌ சொந்த நாடு வந்தபின்‌ இழந்த ஆலயத்தைக்‌ கட்டத்‌ தொடங்கினார்கள்‌. தம்‌ உண்மையான தேவனுக்கு வழிபாடு தொடங்கினார்கள்‌ ஆர்வமுடன்‌. ஆனால்‌ காலம்‌ கடக்கத்‌ தங்களில்‌ இருந்த ஆர்வம்‌ குறைய, சட்டங்களில்‌ தளர்ச்சிக்‌ காண, பழைய நிலைக்குத்‌ திரும்புகின்றார்கள்‌. ஞான வாழ்வில்‌ அக்கறையின்றி வாழத்‌ தொடங்குகிறார்கள்‌. இந்த நேரத்தில்‌ தோன்றிய இறைவாக்கினர்‌ மலாக்கியா, இஸ்ரயேல்‌ இனம்‌ பற்றி முழுவதுமே குறைபாடு கூறுவதைவிட, வழிநடத்தியத்‌ தலைவர்களையும்‌, குறிப்பாக அச்சகர்களையும்‌ குருக்களையும்‌ சாடுகின்றார்‌.

நொண்டியும்‌ நோயுமாய்‌ உள்ளதைக்‌ கொண்டு வந்து பலியிடுகிற அர்ச்சகர்களே, நம்‌ திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள்‌ உள்ளத்தை நீங்கள்‌ கருதாவிடில்‌ உங்கள்மேல்‌ சாபத்தை அனுப்புவோம்‌. உங்களுக்கு உரிய ஆசீர்வாதங்களைச்‌ சாபமாக மாற்றுவோம்‌ (மலா. 2:2).

இந்த நிலையானது மலாக்கியா இறைவாக்கினர்‌ காலத்தில்‌ மட்டுமல்ல, இயேசு வாழ்ந்த காலத்திலும்‌ தொடர்ந்த நாடகம்‌. பரிசேயர்கள்‌, மறைநூல்‌ வல்லுநர்கள்‌, யூதக்‌ குருக்கள்‌ வழிபாட்டுக்கு முக்கியத்துவம்‌ கொடுத்தார்கள்‌. அதற்காக சட்டங்களை ,இயற்றினார்கள்‌. ஆனால்‌ இந்தப்‌ பளுவானச்‌ சுமைகளை மக்கள்மேல்‌ சுமத்தித்‌ தாங்கள்‌ ஒரு விரலாலும்‌ தொடாதவர்போல வாழ்ந்தார்கள்‌. இவர்களைப்‌ பற்றி அவர்கள்‌ உங்களுக்குச்‌ சொல்வதெல்லாம்‌ கடைப்பிடித்து நடங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ செய்வதுபோல செய்யாதீர்கள்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ சொல்வார்கள்‌. செயலில்‌ காட்டமாட்டார்கள்‌ என்கிறார்‌ ஆண்டவர்‌ (மத்‌. 23:3).

அன்பார்ந்தவர்களே! இன்று நம்‌ திருச்சபை இதிலிருந்து மாறுபட்டு இருக்கின்றதா? அன்று காந்தி மகான்‌ ஆலய முற்றத்திலிருந்து வெளியேறியவர்‌. 2000 ஆண்டுகளை எட்டிப்பிடித்தும்‌ 2 சதவீதம்தானே நாம்‌ இருக்கிறோம்‌. காரணம்‌ என்ன? எசாயா பொருத்தமாகச்‌ சொல்கின்றார்‌.

ஆண்டவர்‌ கூறுகின்றார்‌ - இம்மக்களோ உதட்டால்‌ நம்மைப்‌ போற்றுகின்றனர்‌. அவர்கள்‌ உள்ளமோ நம்மை விட்டு வெகு தொலைவில்‌ இருக்கிறது. நம்மைப்‌ பற்றிய அவர்களுடைய அச்சம்‌ வெறும்‌.மனிதக்‌ கற்பனை. மனப்பாடமாகக்‌ கற்றது (எசாயா. 29:13).

உங்கள்‌ திருவிழாக்களை அருவருக்கிறோம்‌. உங்கள்‌ வழிபாட்டுக்‌ கூட்டங்களில்‌ நமக்கு விருப்பம்‌ இல்லை. தகனப்பலிகளும்‌, உணவுப்‌ பலிகளும்‌ நமக்கு நீங்கள்‌ கொடுத்தாலும்‌ நாம்‌ ஏற்கமாட்டோம்‌. மாறாக நீதி, நீரைப்போல்‌ வழிந்தோடட்டும்‌. நேர்மை நீரோடையைப்‌ போலப்‌ பாயட்டும்‌ (ஆமோஸ்‌ 5:21-24) என்கிறார்‌.

திருச்சபை என்றால்‌ யார்‌? துறவிகளால்‌, கன்னியர்களால்‌, குருக்களால்‌, ஆயர்களால்‌, திருத்தந்தையரால்‌ மட்டும்‌ ஆனதல்ல திருச்சபை. நாம்தான்‌ திருச்சபை.

நாம்‌ பணி செய்யவே அழைக்கப்பட்டவர்கள்‌. எவர்‌ ஒருவர்‌ உங்களுள்‌ பெரியவராக இருக்க விரும்புகிறாரோ, அவர்‌ உங்கள்‌ பணியாளராக இருக்கட்டும்‌. ஏனெனில்‌ மனுமகன்‌ பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும்‌, பலருடைய மீட்புக்கு விலையாகத்‌ தன்‌ உயிரையும்‌ அளிக்கவுமே வந்தார்‌ (மத்‌.20:26. 28)

உண்மைக்கு மாறாக நாம்‌ இருக்கின்றோம்‌. நம்மில்‌ பரிசேயத்‌ தன்மை இன்று வளர்ந்து வரும்‌ நோய்‌ என்பதை யாராலும்‌ மறுக்க முடியாது. இரட்டை வாழ்வு இன்று நம்மில்‌ உருவாகிக்‌ கொண்டிருக்கிறது. போதிப்பதுபோல்‌ வாழ்கின்றோம்‌ என்று கூறமுடியாது. நாம்‌ இன்று என்ன செய்ய வேண்டும்‌?

  • நாம்‌ எத்தனை தடவை நம்மில்‌ உள்ள குறையை மூடிமறைத்து அல்லது அறியாத நிலையில்‌ அடுத்தவரைச்‌ சுட்டிக்காட்டி இவன்‌ இப்படி, அவள்‌ அப்படி என்று கூறிக்கொண்டிருக்கிறோம்‌ ?
  • இருகாதுகள்‌, ஒரு வாய்‌ பெற்றிருந்தும்‌, இரு காதுகள்‌ செய்ய வேண்டிய வேலையையும்‌, நேரத்தையும்‌ கெடுத்து, பிறர்‌ கூறுவதைச்‌ செவி மடுக்காது நம்‌ ஒரு நாவினால்‌ பேசித்‌ தீர்த்திருக்கின்றோம்‌
  • மகிமைக்கு வழிகாட்ட வேண்டிய ஞானத்தலைவர்கள்‌, வழிகாட்டத்‌ தவறி இருக்கின்றார்கள்‌. வழிகாட்டியாக வாழ வேண்டிய பெற்றோர்‌, குழந்தைகளுக்கு வழிகாட்டத்‌ தவறி இருக்கின்றார்கள்‌.
  • செவிமடுப்போம்‌, பிறரை மதிப்போம்‌.
  • வழிநடத்த வேண்டியவர்‌ வழி தவறி செல்லாதபடி செபிப்போம்‌. நல்ல குடும்பங்களாக நம்‌ குடும்பத்தை மாற்றுவோம்‌. நல்ல அழைத்தல்‌ கிடைக்கட்டும்‌.

நான்‌ இந்த உலகத்தில்‌ என்‌ பெற்றோரால்‌ அன்பு செய்யப்பட வில்லையே, ஏற்றுக்கொள்ளப்படவில்லையே, என்‌ சமுதாயம்‌ எனக்கு இதைச்‌ செய்யவில்லையே என்று நீங்கள்‌ தப்பிக்கப்‌ பார்க்கிறீர்களா! ஆனால்‌ இன்று இயேசு சவாலாக விடுகின்றார்‌? நான்‌ உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும்‌ ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்யுங்கள்‌ (யோவா. 13:34).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எல்லாருக்கும்‌ தந்தை ஒருவரே

இன்றைய நற்செய்தியிலே இயேசு மக்களைப்‌ பார்த்து, நம்மைப்‌ பார்த்து, உங்கள்‌ தந்த ஒருவரே (மத்‌ 23:9] என்கின்றார்‌. இந்த உண்மையை நமது உள்ளத்திலே முள்ளெனத்‌ தைத்துத்‌ கொண்டோமானால்‌, இறை நம்பிக்கையை நமது இதயத்தில்‌ பதித்துக்‌ கொண்டோமானால்‌ [முதல்‌ வாசகம்‌] நம்மால்‌

வறியவரை நேசித்து வல்லமை நிறைந்தவராய்‌ உயர முடியும்‌!
பார்வையற்றவரை நேசித்து குலவிளக்காய்த்‌ திகழ முடியும்‌!
அனாதையை நேசித்து அமுதசுரபியாய்‌ மாற முடியும்‌!
ஊனமுற்றோரை நேசித்து உயர்ந்த வானில்‌ பறக்க முடியும்‌!
எதிரியை நேசித்து எதையும்‌ தாங்கும்‌ இதயத்தைப்‌ பெற முடியும்‌!
அனைவரையும்‌ நேசித்து அன்பே கடவுள்‌ என வாழ முடியும்‌!

கல்லூரிப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ ஒருநாள்‌ மாணவ, மாணவிகளைப்‌ பார்த்து: எந்தப்‌ போரும்‌, பூசலுமில்லாமல்‌ நம்மால்‌ வாழமுடியாதா?' என்றார்‌. பதில்‌: முடியும்‌ என்று வந்தது. நாம்‌ எல்லாரும்‌ ஒருவரையொருவர்‌ சகோதர, சகோதரியாகப்‌ பாவித்து வாழ முடியாதா? என்றார்‌. பதில்‌: முடியும்‌ என்று வந்தது. இந்த உலகத்திலுள்ள. எல்லாரும்‌ ஒருவர்‌ மீது ஒருவர்‌ தாயன்பைப்‌ பொழிந்து (இரண்டாம்‌. வாசகம்‌] ஒருவருக்கொருவர்‌ தாயாக வாழ முடியாதா? என்றார்‌. பதில்‌: முடியும்‌ என வந்தது.

பேராசிரியர்‌ : என்‌ மாணவ, மாணவிகளைக்‌ குறித்து நான்‌ மிகவும்‌ பெருமைப்படுகின்றேன்‌. முடியும்‌ என்ற வார்த்தைக்கு செயல்‌ வடிவம்‌ கொடுக்க நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌? என்றார்‌.

இரு மாணவன்‌ : அகில உலக மாநாடு நடத்தி ஒற்றுமை, அன்பு. சமாதானம்‌ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்‌.

மற்றொரு மாணவன்‌ : புதிய சிந்தனைகளைத்‌ தாங்கிவரும்‌ நல்ல நூல்கள்‌ வெளிவரவேண்டும்‌.

ஒரு மாணவி : நல்ல சினிமாக்கள்‌ எடுக்கப்படவேண்டும்‌...

இப்பழப்‌ பல பதில்கள்‌! இறுதியாக ஒரு மாணவன்‌, கடவுள்‌ நம்பிக்கை இல்லாத வரை, நம்மால்‌ ஒற்றுமையாக வாழமுடியாது என்றான்‌. பேராசிரியர்‌ : உனது பதிலைச்‌ சற்று விளக்க முடியுமா?' என்றார்‌. எல்லாருக்கும்‌ கடவுள்‌ ஒருவரே, எல்லாருக்கும்‌ தந்த ஒருவரே என்று நம்பும்வரை நம்மால்‌ அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றான்‌ மாணவன்‌. பேராசிரியர்‌, உன்‌ பதில்தான்‌ முழுமையான பதில்‌. என்றார்‌.

எல்லாருக்கும்‌ தந்தை ஒருவரே என்பதை நம்ப, இறை நம்பிக்கை என்னும்‌ வரத்தைக்‌ கேட்டு தூய ஆவியாரிடம்‌ மன்றாடுவோம்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

கோளில்‌ எமாறியில்‌ குணமிலலே எண்குணத்தான்‌.
தாளை வணங்காத்‌ தலை (குறள்‌ : 9).

பொருள்‌ :

இயங்காத உடல்‌, பேசாத வாய்‌, நுகராத மூக்கு, காணாத கண்‌, கேளாத சவி ஆகியவற்றால்‌ பயன்‌ எதுவும்‌ விளையாது. அதுபோன்று எண்ணரிய பண்புகளின்‌ இருப்பிடமாகத்‌ திகழும்‌ இறைவனின்‌ திருவடியை வணங்கி நடவாதவரின்‌ தலைகளின்‌ நிலையும்‌ பயன்‌ அற்றவை ஆகும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர்‌ அப்பா தன்‌ மகனிடம்‌, “மகனே! இரவு கேளிக்கை மன்றத்திற்குச்‌ செல்லாதே; அங்கே நீ பார்க்கக்கூடாதவற்றைப்‌ பார்க்க நேரிடும்‌” என்றார்‌. மகன்‌ அப்பா சென்னதை மீறி இரவு கேளிக்கை மன்றத்திற்குச்‌ சென்றான்‌. அவன்‌ அங்கே பார்க்கக்கூடாத ஒன்றைப்‌ பார்த்துவிட்டான்‌. அவன்‌ பார்த்தது அவன்‌ அப்பாவைத்‌ தான்‌. இன்று பெரியவர்கள்‌ இளைஞர்களுக்குப்‌ பற்பல அறிவுரை கள்‌ வழங்குகின்றனர்‌. ஆனால்‌, அவர்கள்‌ கூறும்‌ அறிவுரைகளை அவர்களே கடைப்பிடிப்பதில்லை. அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குவது எளிது; அதன்படி நடப்பது கடினம்‌.

“சொல்லுதல்‌ யார்க்கும்‌ எளிய; அரியஆம்‌
சொல்லிய வண்ணம்‌ செயல்‌” (குறள்‌ 664)

இன்றைய நற்செய்தியில்‌ கிறிஸ்து மறைநூல்‌ அறிஞரையும்‌ பரிசேயரையும்‌ கடுமையாகச்‌ சாடுகிறார்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌, செயலில்‌ காட்டமாட்டார்கள்‌. அவர்கள்‌ மக்கள்மீது சுமத்தும்‌ பழுவான சுமையைத்‌ தங்கள்‌ விரலால்‌ கூடத்‌ தொடமாட்டார்கள்‌ (மத்‌ 23:3-4).

இன்றைய நற்செய்தி, திருப்பணியாளர்களுக்கு ஒரு மாபெரும்‌ சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில்‌ அவர்கள்‌ போதிப்பதை வாழ்ந்து காட்டவில்லை என்றால்‌, மக்கள்‌ அவர்களை நம்பமாட்டார்கள்‌. எனவேதான்‌ குருப்பட்டம்‌ பெறும்‌ திருத்தொண்டரிடம்‌ ஆயர்‌ கூறுகிறார்‌: “நீர்‌ படிப்பதை விசுவசியும்‌; விசுவசிப்பதைப்‌ போதியும்‌; போதிப்பதைக்‌ கடைப்பிடியும்‌. நிறைவேற்றும்‌ பலிக்கு ஏற்ற வாழ்க்கை நடத்தும்‌”

பாவசங்கீர்த்தனம்‌ செய்ய வந்த ஒரு பயங்கரக்‌ குடிகாரர்‌ குருவிடம்‌, “சாமி! எனக்கு ஒரு மாதிரியா இருந்தா, யார்‌, எவர்‌ என்று பார்க்கமாட்டேன்‌. தலையை வெட்டிடுவேன்‌” என்றார்‌. குருவானவர்‌ பயந்துவிட்டார்‌. அவர்‌ குடிகாரரிடம்‌, “இப்போது எப்படி இருக்குது?” என்று கேட்க, குடிகாரர்‌, “இப்போதும்தான்‌ ஒருமாதிரியா இருக்குது” என்று கூற குரு எழுந்து ஓடிவிட்டார்‌.

குடிகாரர்களுக்கு எப்பொழுதும்‌ ஒரு மாதிரியாய்‌ இருக்கும்‌. ஆனால்‌ கிறிஸ்துவே நமக்கு ஒரு மாதிரி. அதாவது முன்மாதிரி. திருத்தூதர்களின்‌ பாதங்களைப்‌ பெரிய வியாழன்‌ அன்று கழுவி, அதன்பின்‌ அவர்களிடம்‌ கிறிஸ்து கூறினார்‌: “நான்‌ செய்ததுபோல்‌ நீங்களும்‌ செய்யுமாறு நான்‌ உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்‌” (யோவா 13:15). பேதுரு மேய்ப்பர்களுக்குக்‌ கூறிய அறிவுரை:

“உங்களிடம்‌ ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல்‌ மந்தைக்கு முன்மாதிரிகளாய்‌ இருங்கள்‌” (1 பேது 5:3).

“நான்‌ கிறிஸ்துவைப்போல்‌ நடப்பதுபோன்று நீங்களும்‌ என்னைப்போல்‌ நடங்கள்‌”(1 கொரி 11:1) என்று கூறிய திருத்தூதர்‌ பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ கூறுகிறார்‌ “உங்களுள்‌ எவருக்கும்‌ சுமையாய்‌ இராதபடி, எங்கள்‌ பிழைப்புக்காக இராப்‌ பகலாய்‌ வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப்‌ பறைசாற்றினோம்‌” (1 தெச 2:9). “உழைக்க மனமில்லாதவன்‌ உண்ணலாகாது” (2 தெச 3:10) என்று பவுல்‌ கூறினார்‌. அவரே உழைத்து உண்டார்‌. மற்றவர்களுக்கு முன்மாதிரி காட்டினார்‌. சொன்னதைச்‌ செய்தார்‌.

“முடிந்தவன்‌ சாதிக்கிறான்‌. முடியாதவன்‌ போதிக்கிறான்‌” என்று நக்கலாகச்‌ சொல்லப்படுகிறது. இன்றைய உலகிற்குத்‌ தேவை போதனையாளர்களைவிடச்‌ சாதனையாளர்களே, அதாவது சொன்னதைச்‌ செய்துகாட்டுபவர்கள்‌. திருப்பணியாளர்கள்‌ மட்டுமல்ல, பெற்றோர்களும்‌ தங்களது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய்த்‌ திகழ வேண்டும்‌. ஓர்‌ அப்பா தன்‌ மகனிடம்‌, “உன்னை இந்த ஜென்மத்தில்‌ திருத்த முடியாது” என்றார்‌. அதற்கு அவன்‌ அப்பாவிடம்‌, “சும்மா போப்பா! நான்‌ என்ன விடைத்தாளா? திருத்துவதற்கு!” இன்று மாணவர்களின்‌ விடைத்தாளைத்‌ திருத்த முடிகிறது; மாணவர்களைத்‌ திருத்த முடியவில்லை. பிள்ளைகளும்‌ மாணவர்களும்‌ பெற்றோர்களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ விடும்‌ சவால்‌: வாழ்ந்துகாட்டுங்கள்‌.

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ கடவுள்‌ இஸ்ரயேல்‌ மக்களின்‌ தலைவர்களிடம்‌ கூறுவது: “நீங்கள்‌ நெறிதவறி நடந்தீர்கள்‌. உங்கள்‌ போதனையால்‌ பலரை இடறி விழச்‌ செய்தீர்கள்‌” (மலா 2:8), பிறர்க்கு, குறிப்பாக, சிறுவர்களுக்கு இடறலாய்‌ இருப்பவர்களின்‌ கழுத்தில்‌ எந்திரக்கல்லைக்‌ கட்டி அவர்களை ஆழ்கடலில்‌ அமிழ்த்தி விடவேண்டுமெனக்‌ கடுமையாக எச்சரிக்கிறார்‌ கிறிஸ்து (மத்‌ 18:69.)

இன்று நற்செய்தி பரவாமல்‌ நாத்திகம்‌ பரவுகிறது. அதற்கு ஒருவேளை கிறிஸ்தவர்களும்‌ காரணம்‌ என்று ஒளிவு மறைவு இன்றி இரண்டாம்‌ வத்திக்கான்‌ சங்கம்‌ ஒப்புக்கொண்டுள்ளது. “கடவுள்‌ மறுப்புக்‌ கொள்கை தோன்றுவதற்கு நம்பிக்கை கொண்டோரும்‌ பெரும்‌ பொறுப்பாளிகளாக முடியும்‌. ஏனெனில்‌ ..... தம்‌ சமய, அறநெறி, சமூக வாழ்க்கை முறையில்‌ குறைபாடுகளைக்‌ கொண்டிருப்பதால்‌, சமயம்‌ மற்றும்‌ கடவுளுடைய உண்மையான உருவை இவர்கள்‌ மறைத்துவிடுகிறார்களேயன்றி அதை வெளிக்காட்டுவதில்லை” (இன்றைய உலகில்‌ திருச்சபை, எண்‌ 19). ஆலயத்தில்‌ “ஒரே கடவுளை விசுவசிக்கிறேன்‌ என்று அறிக்கை செய்துவிட்டு, அன்றாட வாழ்க்கையில்‌, “ராகுகாலம்‌, நாள்‌ நட்சத்திரம்‌, நவக்கிரகம்‌, எமகண்டத்தை விசுவசிக்கிறேன்‌” என்ற முறையில்‌ வாழ்க்கை நடத்தினால்‌, நாம்‌ கடவுளை வெளிப்படுத்துகிறோமா? அல்லது இருட்டடிப்புச்‌ செய்கிறோமா? நீட்சே என்ற அறிஞர்‌ கூறினார்‌: “சமயங்கள்‌ கடவுளைப்‌ புதைக்கும்‌ கல்லறைகள்‌.” தந்‌ பெரியாரின்‌ தாரகை மந்திரம்‌. “கடவுளை மற, மனிதனை நினை.” ஏன்‌? நாம்‌ சாட்சிய வாழ்வு வாழத்‌ தவறிவிட்டோம்‌.

இன்று, நான்கு நற்செய்திகளுக்கு மேலாக ஐந்தாவது நற்செய்தி ஒன்று தேவைப்படுகிறது. அந்த ஐந்தாவது நற்செய்திதான்‌ நமது சாட்சிய வாழ்வு. கிறிஸ்து யூதர்களிடம்‌ கூறினார்‌: “என்னை நம்பாவிடினும்‌ என்‌ செயல்களையாவது நம்புங்கள்‌” (யோவா 10:38). ஒருவர்‌ எத்தகையவர்‌ என்று நிர்ணயிக்க ஓர்‌ உரைகல்‌ உண்டு. அக்கல்‌ அவருடைய செயல்களே.

பெருமைக்கும்‌ ஏனைச்‌ சிறுமைக்கும்‌ தம்தம்‌
கருமமே கட்டளைக்‌ கல்‌ (குறள்‌ 202)

வாருங்கள்‌. வாழ்ந்து காட்டுவோம்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முன்‌னேற மூன்றுதடைகள்‌

'காப்பியால்‌ வரும்‌ கேடுகள்‌' என்று தலைப்பிட்டு எழுதத்‌ தொடங்கினார்‌ அந்த ஆசிரியர்‌. “காப்பி உடலுக்கு நல்லதல்ல. அதில்‌ உள்ள கேஃபின்‌ (caffeien) உடலுக்குப்‌ புத்துணர்ச்சியை, விறுவிறுப்பைக்‌ . கொடுத்தாலும்‌, நச்சுத்‌ தன்மை. கொண்டது. காலப்போக்கில்‌ கைகால்கள்‌ எல்லாம்‌ நடுநடுங்கிப்‌ படபடக்கும்‌ அளவுக்கு நரம்புத்‌ தளர்ச்சியில்‌ கொண்டுபோய்‌ நிறுத்தும்‌...” எழுதிக்‌ கொண்டிருந்தபோதே எப்படியோ இருந்தது. தலைக்குமேலே இரு கைகளையும்‌ உயர்த்தி வாயை அகலத்‌ திறந்து கொட்டாவி விட்டு சோம்பல்‌ முறித்துக்‌ கொண்டே சொன்னார்‌ “அது சரி தம்பி, போய்‌ உணவகத்திலிருந்து சுடச்சுட ஒரு காப்பி - தூள்‌ கொஞ்சம்‌ தூக்கலாப்‌ போட்டு - வாங்கிக்‌ கொண்டு வா... ஒடு... எழுத ஒடமாட்டேன்‌ என்கிறது”.

“புகைப்பது, குடிப்பது உடல்‌ நலத்துக்குக்‌ கேடு' சிகரெட்‌ பாக்கெட்டுகளிலும்‌ மதுப்‌ பாட்டில்களிலும்‌ நாம்‌ காண்பது எச்சரிக்கை எழுத்துக்களா? அல்ல. நம்மை நாமே பைத்தியக்காரர்களாக்கிக்‌ கொள்ளும்‌ பாசாங்குகள்‌.

“நீங்கள்‌ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்‌. அவை புறம்பே அழகாகத்‌ தோற்றமளிக்கின்றன. அவற்றின்‌ உள்ளேயோ இறந்தவர்களின்‌ எலும்புகளும்‌ எல்லா வகையான அழுக்குகளும்‌ நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும்‌ வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த்‌ தோற்றமளிக்கிறீர்கள்‌. ஆணால்‌ உள்ளேயோ போலித்தனமும்‌ நெறிகேடும்‌ நிறைந்தவர்களாய்‌ இருக்கிறீர்கள்‌” - (மத்‌ 23:27,28).

இந்திய முன்னேற்றத்துக்கும்‌ வளர்ச்சிக்கும்‌ இன்று முட்டுக்கட்டைகளாக இருப்பவை மூன்று:

  • 1. எல்லை மீறிய மக்கள்‌ வருக்கம்‌.
  • 2. சுற்றுப்புறச்கூழல்‌ துப்புரவின்மை.
  • 3. சொல்லுக்கும்‌ செயலுக்கும்‌ இடையே தொடர்பில்லாத இரட்டை வாழ்க்கை.

இந்த இரட்டைத்தனம்‌ நமது நம்பிக்கைகளுக்குள்ளும்‌ வைரசாகப்‌ புகுந்து விட்டதோ?

"இந்தியாவின்‌ மக்கள்தொகை என்ன?” என்று கேட்டதும்‌ “200 கோடி” என்றானாம்‌ ஒருவன்‌. அதிர்ந்து போய்‌ “என்ன இருநூறு கோடியா? 2000 மே 10 அன்று டில்லியில்‌ உள்ள சப்தர்சங்கு மருத்துவமனையில்‌ பாரதத்தின்‌ 100ஆவது கோடிக்‌ குழந்தை பிறந்தது. மக்கள்‌ தொகைப்‌ பெருக்கம்‌ கவலை தரக்கூடியது என்று பெருகிவரும்‌ மக்கள்தொகையைக்‌ கட்டுப்படுத்தத்‌ தனது தலைமையிலேயே 100 போர்‌ கொண்ட சம்போ குழு கூட அமைத்தாரே நமது பிரதமர்‌” என்று. சொன்னபோது தொடர்ந்து விளக்கினானாம்‌. “இந்த நாட்டில்‌ நினைப்பது ஒன்று, உரைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, நம்புவது ஒன்று, நடைமுறையில்‌ கடைப்பிடிப்பது ஒன்று என்று இந்தியன்‌ ஒவ்வொருவனும்‌ இரட்டை வாழ்க்கை வாழ்வதால்‌ 100 கோடி மக்களும்‌ 200 கோடி மக்களாகப்‌ பலுகிப்‌ பெருகிக்‌ கிடக்கிறார்கள்‌. 200 கோடிச்‌ சிக்கல்களுக்கு இலக்காகித்‌ தவிக்கிறார்கள்‌”. எத்துணை உண்மை!

“நீயோ வெப்ப நிலையிலும்‌ இல்லை. தட்பநிலையிலும்‌ இல்லை. வெதுவெதுப்பான நிலையில்‌ இருக்கிறபடியால்‌ உன்னை என்‌ வாயினின்று கக்கி விடுவேன்‌” - (திருவெளி 3:16).

எங்கோ படித்தது இதயத்தை உறுத்துகிறது: 

“மனிதனுள்‌ இரண்டாக இருப்பவை எல்லாம்‌ ஒன்றாகச்‌ செயல்படுகின்றன.
இரு கண்கள்‌ ஒன்றையே பார்க்கின்றன.
இரு காதுகள்‌ ஒன்றையே கேட்கின்றன. 
இரு கைகள்‌ ஒன்றையே செய்கின்றன. 
இரு கால்கள்‌ ஒரு திசைநோக்கியே நடக்கின்றன. 
ஆனால்‌ 
மனிதனுள்‌ ஒன்றாக இருப்பவை எல்லாம்‌ இரண்டாகச்‌ செயல்படுகின்றன. 
ஒரு இதயம்‌ இருவிதமாய்‌ நேசிக்கிறது. 
ஒரு மனம்‌ இருவிதமாய்‌ நினைக்கிறது. 
ஒரு நாக்கு இருவிதமாய்ப்‌ பேசுகிறது. 
ஒரே முகம்‌ பல வேடங்களைப்‌ போடுகிறது. 
நான்‌ ஒரு மனிதன்‌. 
இரட்டை வாழ்க்கை வாழ்கின்றேனோ?” 

பித்தலாட்டமான இரட்டை வாழ்க்கை இறைவனின்‌ அருவருப்புக்குரியது.

“இறைவார்த்தையைக்‌ கேட்கிறவர்களாக மட்டும்‌ இருந்து உங்களை ஏமாற்றிக்‌ கொள்ள வேண்டாம்‌. அதன்படி நடக்கிறவர்களாயும்‌ இருங்கள்‌” - யாக்கோபு 1:22.

தொழில்‌ அதிபர்‌ ஒருவர்‌ மார்க்‌ ட்வைன்‌ என்ற நாவலாசிரியரைப்‌ பார்த்து “நான்‌ சாவதற்குள்‌ எப்படியாவது ஒரு காரியத்தைச்‌ சாதித்துவிட நலஸ்மிம்‌ என்று ஆசைப்படுகிறேன்‌” என்றார்‌. “அப்படி என்ன ஆசை?” என்று நாவலாசிரியர்‌ கேட்க, தொழில்‌ அதிபர்‌ பெருமிதத்தோடு “ஒரு முறையாவது புனித பூமியை நான்‌ தரிசிக்க வேண்டும்‌. அதிலும்‌ குறிப்பாக சீனாய்‌ மலை மீது ஏறி அங்கிருந்து உலகறிய உரக்க பத்துக்‌ கட்டளைகளைச்‌ சத்தமாகப்‌ படிக்க வேண்டும்‌. அதுதான்‌ என்‌ ஆசை” என்றார்‌. மார்க்‌ ட்வைன்‌ அவரைப்‌ பார்த்து “அதற்கு உள்ளூரிலேயே இருந்து கொண்டு அந்தப்‌ பத்துக்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடிப்பது அதைவிட உன்னதமானது” என்றாராம்‌.

“பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்புமாவைக்‌ குறித்து நீங்கள்‌ எச்சரிக்கையாய்‌ இருங்கள்‌” (லூக்‌ 12:1).

முதல்‌ வாசகத்தில்‌ கடவுள்‌ இஸ்ரயேல்‌ மக்களின்‌ தலைவர்களிடம்‌ எச்சரிப்பது: “நீங்களோ நெறிதவறி நடந்தீர்கள்‌. உங்கள்‌ போதனையால்‌ பலரை இடறி விழச்‌ செய்தீர்கள்‌” (மலாக்‌ 2:8).

இப்படிச்‌ செயல்பட்டவர்களை நினைத்துத்தான்‌ இயேசு தன்‌ சீடர்களிடம்‌ பரிசேயரின்‌ போலித்தனத்தையும்‌ உண்மைக்குப்‌ புறம்பான இரட்டை வாழ்க்கையையும்‌ தோலுரித்துக்‌ காட்டுகிறார்‌.

இயேசுவின்‌ அடிச்சுவட்டில்‌ பொறுப்புள்ள தலைவர்கள்‌ எவறும்‌ கைகாடீடிகளாக அல்ல கைகாட்டிகள்‌ வழியைச்‌ சுட்டிக்காட்டும்‌. கூட வராது. எனவேதான்‌ இயேசு “அவர்கள்‌ என்னென்ன செய்யும்படி உங்களிடம்‌ கூறுகிறார்களோ அவற்றையெல்லாம்‌ கடைப்பிடியுங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ செய்வதுபோல _- நீங்கள்‌ செய்யாதீர்கள்‌” (மத்‌. 23:3) என்கிறார்‌. மூன்‌ எசல்பவர்களாக அல்ல தலைமைப்‌ பொறுப்பு தங்களுக்கே உரியது என்ற செருக்கில்‌ பிறர்‌ தங்கள்‌ பின்னேதான்‌ வர வேண்டும்‌ என்று ஆசைப்படுவர்‌. இதைக்‌ குறித்துத்தான்‌ “சந்தைவெளிகளில்‌ மக்கள்‌ தங்களுக்கு வணக்கம்‌ செலுத்துவதையும்‌ இரபி என அழைப்பதையும்‌ விரும்புகிறார்கள்‌"' (மத்‌. 29:7) என்கிறார்‌ இயேசு. மாறாக உடன்‌ நடப்பவர்களாக. அதாவது தன்னைப்‌ போல்‌ பிறரும்‌ விண்ணகப்‌ பயணிகளே என்ற உணர்வில்‌ பிறரது இன்ப துன்பங்களில்‌ பங்கேற்றுப்‌ பணி செய்பவர்கள்‌. “ஆண்டவரும்‌ போதகருமான நான்‌ உங்கள்‌ காலடிகளைக்‌ கழுவினேன்‌ என்றால்‌... நான்‌ செய்தது போல்‌ நீங்களும்‌ செய்யுமாறு நான்‌ உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்‌” (யோ. 13: 14-15).

தெசலோனிக்கேயர்கள்‌ திருத்தூதரின்‌ போதனைகளை மனிதரிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்து வந்ததாக ஏற்றுக்‌ கொண்டார்கள்‌ என்றால்‌ அவர்‌ போதித்ததைக்‌ கடைப்பிடித்தார்‌ என்பதால்தான்‌. (2 தெச. 3:9, பிலிப்‌ 3:17).

“ஊருக்கடி உபதேசம்‌ உனக்கில்லையடி பெண்ணே” என்பதுபோல போதனை ஒன்று அதற்கு முற்றிலும்‌ முரண்பட்ட செயல்பாடு என்று வாழலாமா?

இரட்டை வாழ்க்கையால்‌ நாம்‌ கடவுளை வெளிப்படுத்துவதில்லை. மாறாக இருட்டடிப்புச்‌ செய்கிறோம்‌. அதனால்தான்‌ “சமயங்கள்‌ கடவுளைப்‌ புதைக்கும்‌ கல்லறைகள்‌” என்றார்‌ நீட்சே.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

குருத்துவ மேலாதிக்கம் களைய...

ஞாயிறு திருப்பலி முடிந்து, மக்கள் கலைந்து சென்றுகொண்டிருந்தனர். திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர், கோவிலுக்கு முன்புறம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, அவரிடம், "சாமி, நீங்க கொடுத்த பிரசங்கம் பிரமாதமாக இருந்தது. நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும், எனக்குத் தெரிந்த யாராவது ஒருத்தருக்கு பொருத்தமாக இருந்தது" என்று கூறினார்.

அருள்பணி அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய “Taking Flight – A Book of Story Meditations” என்ற நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஒரு குறுங்கதை இது. மறையுரையில், அருள்பணியாளர், ஒவ்வொரு கருத்தையும் முன்வைத்தபோது, 'இது இவருக்குப் பொருந்தும், இது அவருக்குப் பொருந்தும்' என்று, அப்பெண்ணின் மனம், பலரை எண்ணிப் பார்த்ததேயொழிய, அந்த மறையுரையின் வழியே, அப்பெண், தனக்கென எந்தப் பாடமும் பயின்றதுபோல் தோன்றவில்லை.

அந்தப் பெண்ணின் நிலையில், நானும், என்னைப்போன்ற அருள்பணியாளர்கள் பலரும் பலமுறை இருந்திருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறன்றும் தரப்படும் விவிலிய வாசகங்களை நான் வாசிக்கும்போது, மற்றவர்களுக்கு, மறையுரையில் என்ன சொல்லலாம் என்பதிலேயே என் சிந்தனைகள் அதிகம் இருக்கும். அவ்வாசகங்களில் சொல்லப்படும் இறை வார்த்தைகள் என் வாழ்க்கையில் என்னென்ன அர்த்தங்களை, சவால்களைத் தருகின்றன என்று நான் அதிகம் யோசிப்பதில்லை.

பீடத்திலிருந்து மறையுரையாற்றும்போது, பீடத்திற்கு முன் அமர்ந்திருக்கும் மக்களைவிட நான் கொஞ்சம் உயர்ந்தவன் என்ற எண்ணம் எனக்குள் தலைதூக்கும். இத்தகைய எண்ணம், எனக்குள் மட்டுமல்ல; பல அருள்பணியாளர்களின் உள்ளங்களிலும் உதித்திருக்கும் என்பது என் கணிப்பு. ஒரு சில வேளைகளில், ஆலயத்தை, ஒரு நீதிமன்றமாக மாற்றி, மறையுரை வழங்கும் நான் நீதிபதியாக மாறி, மக்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று, தீர்ப்புக்கள் தருவதுபோல் ஒலித்த மறையுரைகளை நான் வழங்கியிருக்கிறேன். கேட்டுமிருக்கிறேன்.

இன்று... ஒரு பெரும் மாற்றம். இன்றும், இந்த ஆலயம், ஒரு நீதி மன்றமாகத் தெரிகிறது. ஆனால், இன்று, இங்கு, நான் நீதிபதி அல்ல. மாறாக, நானும், என்னையொத்த அருள்பணியாளர்களும் இறைவன் என்ற நீதிபதிக்கு முன் நிற்கிறோம்... அதிலும், குற்றவாளிக் கூண்டில் எங்களை நிறுத்தி வைத்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு, எனக்குள் இன்று அதிகம் எழுகிறது. இப்படி ஒரு காட்சி என் மனதில் எழுவதற்குக் காரணம்... இன்றைய ஞாயிறு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகமும் (மலாக்கி 1:14ஆ-2:2ஆ, 8-10), நற்செய்தியும் (மத்தேயு 23:1-12), யூத சமுதாயத்தின் குருக்களை, மறைநூல் அறிஞரை, பரிசேயரைக் கண்டித்து, கண்டனம் செய்து சொல்லப்பட்டுள்ள வாசகங்கள். இடியாய், மின்னலாய், நெருப்புக் கணைகளாய் உள்ளத்தை ஊடுருவித் தாக்கும் வார்த்தைகள், இவ்விரு வாசகங்களிலும் உள்ளன. முதல் வாசகத்தில், கடவுளே இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும், நற்செய்தியில், இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் இருப்பதால், இவ்வார்த்தைகளின் வெப்பமும், தாக்கமும் கூடியுள்ளன.

இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்தும், நற்செய்தி, மத்தேயு 23ம் பிரிவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்விரு வாசகங்களையும் வாசிக்கும் ஒவ்வோர் அருள்பணியாளருக்கும் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் அங்கே காத்திருக்கும். அந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, அருள்பணியாளர்கள், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். இந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ள கடினமான வார்த்தைகள், அக்காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞருக்கும், பரிசேயருக்கும் சொல்லப்பட்டவை, தங்களுக்கு அல்ல என்று கூறி, இக்காலத்து அருள்பணியாளர்கள் தப்பித்துக் கொள்ளமுடியும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அருள்பணியாளர்கள், ஆயர்கள், துறவியர் ஆகியோருக்கு எதிராக சொல்லப்பட்டுவரும் பல குற்றச்சாட்டுகள், நம் மத்தியில் ஒரு முக்கியத் தேடலை ஆரம்பித்து வைத்துள்ளன. எனவே, இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், யூத குருக்களுக்கு, அல்லது பரிசேயர்களுக்கு அல்லது நமக்குத் தெரிந்த அவருக்கு, இவருக்கு என்றெல்லாம் கூறி தப்பிக்காமல் சிந்திப்பது பயனளிக்கும். அதுவும், இந்த வாசகங்களை இன்று, கோவிலில், ஞாயிறுத் திருப்பலி நேரத்தில் வாசிப்பது, ஒரு பெரும் சவால். இறைமக்கள் முன், அருள்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பயனுள்ள ஓர் ஆன்ம ஆய்வாக இதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில், அக்டோபர் 4 முதல் 29 முடிய வத்திக்கானில் நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில், அருள்பணியாளர்களின் வாழ்வு முறையில் வெளிப்படும் குருத்துவ மேலாதிக்க நிலையின் (Clericalism) பல வெளிப்பாடுகளைப்பற்றி கவலைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அக்டோபர் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Clericalism பற்றி தன் கருத்துக்களை, பொது அவையில், சிறிது கடினமான மொழியில் வெளியிட்டார். அவர் கூறிய கருத்துக்களின் ஒரு சில வரிகள் இதோ:

அருள் பணியாளர்கள், ஆணாதிக்க மனநிலையுடன் சர்வாதிகாரப் போக்கில் மக்களை தவறாக நடத்தும்போது, திருஅவையின் முகத்தைச் சிதைக்கின்றனர். ஒருசில பங்கு அலுவலகங்களில், அருளடையாள பணிகளுக்கு விலைப்பட்டியல் வைக்கப்பட்டிருப்பது, ஒரு பல்பொருள் அங்காடியை நினைவுறுத்துகிறது. திருஅவையை, புனிதர்களும், பாவிகளும் இணைந்து நடக்கும் ஒரு வழியாக எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்கு மாறாக, திருஅவையை, மீட்பு வழங்கும் பல்பொருள் அங்காடியாக பார்த்தால், அங்கு பணியாற்றும் அருள்பணியாளர்கள், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பணியாளர்களைப்போல் தெரிகிறது. குருத்துவத்தின் மேலாதிக்கம் இவ்வாறு வெளிப்படுவது, திருஅவையின் பெரும் தோல்வி. இது உண்மையில் வேதனை தருவதாகவும், பெரும் இடறலாகவும் உள்ளது.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை, உரோம் நகரில் ஒரு சில இளம் அருள்பணியாளர்கள் நடந்துகொள்ளும் போக்கை குறிப்பிட்டுப் பேசுகிறார்: "உரோம் நகரில் அருள்பணியாளர்களின் உடைகள் விற்கப்படும் ஒரு சில கடைகளில், இளம் அருள்பணியாளர்கள் வலைப்பின்னல் வேலைப்பாடுடன் கூடிய உடைகளையும், விலையுயர்ந்த அங்கிகள், தொப்பிகள் ஆகியவற்றையும் அணிந்து அழகு பார்ப்பது, வாங்க முயல்வது ஆகியவற்றைக் காணும்போது, பெரும் இடறலாக உள்ளது" என்று திருத்தந்தை கூறுவதைக் கேட்கும்போது, இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களைப்பற்றி கூறும் ஒரு கூற்று மனதில் எதிரொலிக்கிறது: தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். (மத்தேயு 23:5)

இந்த ஞாயிறன்று ஒவ்வொரு ஆலயத்திலும், மத்தேயு நற்செய்தி 23ம் பிரிவின் முதல் பகுதி வாசிக்கப்படும்போது, அப்பகுதியில் இயேசு பட்டியலிட்டுக் கூறும் தவறுகளை அருள்பணியாளர்கள் அனைவரும் கேட்டு, ஓர் ஆன்ம ஆய்வினை மேற்கொள்வது நல்லது. இந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் விசாரித்து முடிவு சொல்ல பல நாட்கள் ஆகலாம். எனவே, இரண்டே இரண்டு குறைகளை மட்டும் ஓர் ஆன்ம ஆய்வாக எடுத்துக்கொள்வோம்.

இவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று; பிறருக்குப் போதிப்பார்கள், ஆனால், தங்கள் வாழ்வில் கடைபிடிக்க மாட்டார்கள் என்பது, இயேசு குறிப்பிடும் முதல் குறை. இரண்டாவது குறை... தங்களது புகழை வெளிச்சம்போட்டுக் காட்டும் இவர்கள், பிறரிடம் மரியாதையைக் கேட்டுப் பெறுவார்கள் என்பது. சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் என்ற முதல் குறையை ஒரு கற்பனை காட்சியுடன் சிந்தித்துப் பார்ப்போம். தந்தையொருவர், தன் 15 வயது மகனிடம் கண்டிப்பான குரலில் பேசிக் கொண்டிருக்கிறார். புகை பிடிப்பதால் வரும் ஆபத்துக்களை விளக்கிக் கொண்டிருக்கிறார். மகனும், தந்தை சொல்வதைக் கேட்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஆனால், முடியவில்லை. அவன் கவனம் எல்லாம் தந்தையின் கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் மீதே இருக்கிறது. ஆம், புகைப்பதன் ஆபத்துக்களை விளக்கிக் கொண்டிருக்கும் தந்தை, நிமிடத்திற்கொரு முறை, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருக்கிறார். அந்த இளையவன், தந்தை சொல்வதைக் கேட்பானா? அல்லது, அவர் விட்டுக் கொண்டிருக்கும் புகையை இரசிப்பானா?

அருள்பணியாளர்கள் வாழ்வில், சொல்லும், செயலும் முரண்பட்டிருக்கும் சூழலில், மக்கள் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் இவ்வாறு அறிவுரை தந்துள்ளார்: மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். (மத்தேயு 23: 3)

வாழ்ந்துகாட்டும் துணிவின்றி, வார்த்தைகளால் விளையாடும் தலைவர்களிடமிருந்து மக்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு இந்த அறிவுரையைத் தருகிறார். அதே நேரம், குருக்கள், மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருக்கு, இயேசு, மறைமுகமாகத் தரும் சாட்டையடி இது.

இந்தச் சாட்டையடியையும் புரிந்துகொள்ள மறுத்து, மக்கள் தங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதை மட்டும் சிந்தித்து, மதத்தலைவர்கள் பெருமைப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இவ்வாறு தவறாகச் சிந்திப்பதற்கு, அவர்கள் மனதை ஆக்கிரமித்திருந்த தற்பெருமையே காரணம். இவர்களிடம் காணப்பட்ட இந்த வீண் பெருமையை இயேசு விவரிக்கும் வரிகள் இதோ:
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; ... விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். (மத்தேயு 23:5-7)

குருக்களும், மதத்தலைவர்களும் மரியாதைக்குரியவர்கள்தாம். ஆனால், அந்த மரியாதை, அவர்கள் வாழும் முறையைப் பார்த்து, மக்கள் தாங்களாகவே மனமுவந்து தரும் மரியாதையாக இருக்கவேண்டும். செல்லும் இடங்களில் எல்லாம், நல்லவர்களை, புகழ் தேடி வருவது உண்மைதான். ஆனால், செல்லுமிடங்களில் எல்லாம், புகழைத் தேடிச் செல்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இயேசு இவர்களைத்தான் இங்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.

தற்பெருமை என்ற போதையில் மயங்கி, தங்களையே மறந்து வாழும் குருக்களை எண்ணிப்பார்க்கும்போது, கிரேக்கப் புராணத்தில் சொல்லப்படும் Narcissus நினைவுக்கு வருகிறான். உலகில் தன்னைப் போல் அழகானவன் யாரும் இல்லை என்று எண்ணி, தன்னைத் தானே இரசித்து வந்தவன் Narcissus. அவன் வாழ்ந்த காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் இல்லாததால், நீர் நிலையில் தெரிந்த தன் பிம்பத்தை இரசித்தபடி, பலநாட்கள் அமர்ந்திருந்தான், அந்த இளைஞன். தான் காண்பது வெறும் பிம்பம் என்பதை அவன் ஏற்க மறுத்ததால், உண்ணவும், உறங்கவும் மறுத்து, அந்த பிம்பத்தை பார்த்தவண்ணம் அமர்ந்து, அங்கேயே உயிர் துறந்தான் Narcissus.

Narcissus என்ற இந்த கிரேக்கப் பெயரின் அடிப்படை வார்த்தையான Narke என்பதன் பொருள், 'தூக்கம்' அல்லது 'மரத்துப் போதல்'. தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், மரத்துப்போன நிலையில் உள்ளவர்களை, narcissism என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட மதத்தலைவர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

இறைவாக்கினர் மலாக்கி நூல், நற்செய்தி ஆகிய இரு வாசகங்களில் குருக்களுக்கு எதிராக ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒரு மாற்றாக, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் இறைபணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார்.

1 தெசலோனிக்கர் 2: 6-10 (7-9)

கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம்.... நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற இரட்டை வேடம் இல்லாமல், நான் போதிப்பதை என் வாழ்வில் வாழ்ந்து காட்டும் மன உறுதியை இறைவன் எனக்குத் தர வேண்டும் என்று எனக்காக மன்றாடுங்கள். அதேபோல், செல்லும் இடங்களில் எல்லாம் முதன்மை இடங்களை, பெருமைகளைத் தேடாமல், பணியாளனாக மாறும் பணிவை இறைவன் எனக்குத் தரவேண்டும் என்று எனக்காக மன்றாடுங்கள். உலகில் வாழும் அனைத்து இறை பணியாளர்களுமே புனித பவுல் அடியாரின் கூற்றுக்களை தங்கள் வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடிக்க, அனைத்துத் திருப்பணியாளர்களுக்காகவும் மன்றாடும்படி உங்களை வேண்டுகிறேன்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூரம் குறைத்தல்!

படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி, ஆணிடமிருந்து பெண்ணை உருவாக்கி அவனிடம் அழைத்து வருகிறார் கடவுள். பெண்ணைக் கண்டவுடன் ஆண், ‘இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்’ எனத் துள்ளிக் குதித்து, அவளுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைக் கொண்டாடுகிறான். மேலும், தன் உடலைத் திறந்து கடவுள் விலா எலும்பை எடுக்கும் அளவுக்குக் கடவுளுக்கும் அவனுக்கும் நெருக்கம் இருந்ததை உணர்கிறான். ஆனால், விலக்கப்பட்ட கனியைத் தின்ற நிகழ்வுக்குப் பின்னர், ஆண்டவராகிய கடவுள் மனிதனோடு உரையாடுகையில், ‘நீர் என்னோடு இருக்குமாறு தந்த அந்தப் பெண் கனியை எனக்குத் தர, நானும் உண்டேன்!’ என்கிறான். கடவுளோடும் தன் சக மனிதரோடும் இருந்த நெருக்கம் மறைந்து தூரம் அவனைப் பற்றிக்கொள்கிறது.

இப்படி உருவான தூரத்துக்கும் ஏற்கெனவே இருந்த நெருக்கத்துக்கும் இடையே அவன் தன் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.

இன்றைய நற்செய்தி வாசகம், மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல் என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி ஆர்ப்பரிப்புடன் எருசலேம் நகருக்குள் நுழைகிற இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இந்த நிகழ்வு அவர்களுடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டுகிறது. அவரைப் பேச்சில் சிக்கவைக்கும் நோக்குடன் ஏரோதியர், சதுசேயர், மறைநூல் அறிஞர், பரிசேயர் என நான்கு குழுவினர் அவரிடம் வந்து கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளித்த இயேசு, அவர்களை நேரடியாகச் சாடுகிறார். இயேசுவின் சமகாலத்துச் சமயத்தில் நிலவிய வெளிவேடம், குறுகிய மனப்பான்மை, தூய்மை-தீட்டு பற்றிய புரிதல் ஆகியவற்றை இப்பகுதியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் பார்த்து உரையாடுகிறார். இந்த உரையாடலின் கருத்துருகள் மூன்று: (அ) மறைநூல் அறிஞரின் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள தூரம் கடிந்துகொள்ளப்படுதல். (ஆ) தலைப்புகள் தவிர்த்தல். (இ) தாழ்ச்சி கொண்டிருத்தல்.

மறைநூல் அறிஞர்களின் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே தூரம் உள்ளது. ஏனெனில், அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதன்படி செயல்படுவதில்லை. அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் இருக்கிறது. ஏனெனில், ரபி, தந்தை, ஆசிரியர் என்னும் தலைப்புகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்களிடமிருந்து தள்ளி நிற்கிறார்கள். தங்கள் உள்ளத்தில் இறுமாப்பு கொண்டவர்களாகக் கடவுளிடமிருந்தும் தள்ளி நிற்கிறார்கள்.

ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் இடையே தூரம், தலைப்புகளால் வரும் தூரம், இறுமாப்பால் வரும் தூரம் ஆகியவற்றைத் தம் சீடர்கள் தவிர்க்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம்.

இன்றைய முதல் வாசகம் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறுதி நூலாக இருக்கிற இந்நூல் ஏறக்குறைய கிமு 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பாபிலோனிய நாடுகடத்தலிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டி தங்கள் சமய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். செருபாபேல், எஸ்ரா, நெகேமியா, ஆகாய் போன்றவர்கள் நகரம், ஆலயம், குழுமம் கட்டியெழுப்பப்படுவதில் அக்கறை காட்டுகிறார்கள். மக்களோ தாங்கள் பெற்ற நாடுகடத்தப்படுதல் என்னும் தண்டனையை மறந்துவிடுகிறார்கள். சமய வாழ்விலும் சமூக வாழ்விலும் நிறையப் பிறழ்வுகள் ஏற்படுகின்றன. குருக்களோ இவற்றைக் கண்டித்து மக்களைத் திருத்தி வழிநடத்துவதற்குப் பதிலாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள், பிறழ்வுகளுக்குக் காரணமாகவும் இருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இறைவாக்கினர் மலாக்கி குருக்களைச் சாடுகிறார்.

அவர்கள் தங்கள் நெறிதவறிய நடத்தையால் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து தூரமாக நின்றார்கள். தவறான போதனையால் மக்களையும் கடவுளிடமிருந்து தூரமாக்கினார்கள். தூரம் குறைந்து நெருக்கம் வளரவில்லை என்றால், அவர்கள் தண்டிக்கப்பட்டு, தாழ்த்தப்படுவார்கள் என்பது கடவுள் வழங்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் மறைநூல் அறிஞர்களும், முதல் வாசகத்தில் காணும் குருக்களும் மக்களைவிட்டுத் தூரமாக இருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் பவுல், தெசலோனிக்க நகர் திருஅவைக்கு மிக அருகில் இருக்கிறார். ‘தாய் தன் குழந்தையைப் பேணி வளர்ப்பது போலக் கனிவுடன் தான் நடந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார். எபிரேயத்தில் ‘கனிவு’ என்னும் சொல்லின் உருவமே, ‘தாய் தன் குழந்தையைக் குனிந்து பார்த்தல்’ என்பதுதான். மேலும், ‘கடவுளின் நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்’ என்கிறார் பவுல். பவுலின் நெருக்கம் தற்கையளிப்பாக மாறி, திருஅவை உறுப்பினர்களோடு அவரையே இணைத்துக்கொள்வதாக இருக்கிறது.

இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் சவால் ஒன்றுதான்: தூரம் குறைத்தல்!

நம் சொல்லுக்கும் செயலுக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும், கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் குறைய வேண்டும்.

(அ) சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?

சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண் நம்மை மற்றவர்களின் பார்வையில் பொய்யர் அல்லது வெளிவேடக்காரர் என அடையாளப்படுத்துகிறது. இயேசுவே நமக்கு வழி கற்பிக்கிறார்: ‘உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் இருக்கட்டும்’. நம்மால் இயலாதவற்றை வாக்களிக்கக் கூடாது. நம்மால் எது இயலுமோ அதை மட்டுமே மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

(ஆ) மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?

‘ரபி,’ ‘போதகர்,’ ‘தந்தை,’ ‘ஆசிரியர்’ என்னும் தலைப்புகளால் மறைநூல் அறிஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இத்தலைப்புகள் மனிதர்களுக்கு அல்ல, கடவுளுக்கு உரியவை எனச் சொல்லிக் காட்டுகிற இயேசு, தம் சீடர்களின் பார்வையை அகலமாக்குகிறார். கிறிஸ்துவே போதகராகவும் ஆசிரியராகவும் இருக்க, கடவுள் தந்தையாக இருக்கிறார். மேலும், ‘நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்’ என்கிறார் இயேசு. நாம் கொண்டிருக்கிற தலைப்புகள் நம்மை மற்றவர்களிடமிருந்து தூரமாக்கிவிடக் கூடாது. கூட்டியக்கத் திருஅவையின் அழைப்பும் இதுவே. ‘திருத்தந்தை, கர்தினால், ஆயர், அருள்பணியாளர், அருள்சகோதரி, பொதுநிலையினர்’ என்னும் தலைப்புகள் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து தூரமாக்குகின்றன. ஆனால், ‘நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்’ என்னும் புரிதல் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கிறது.

(இ) கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?

‘பெரியவர் என்னும் நிலை தொண்டு ஏற்பதால்தான் வருகிறது’ என் சொல்கிற இயேசு, ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிற எவரும் உயர்த்தப்பெறுவர்’ என்கிறார். தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் கடவுள் மட்டுமே என்பதை இங்கே அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் இயேசு. தாழ்ச்சி நம்மைக் கடவுளுக்கு நெருக்கமாக்குகிறது. படைப்பின் தொடக்கத்தில் நம் முதற்பெற்றோர், ‘கடவுளைப் போல ஆக விரும்பி’ விலக்கப்பட்ட கனியை உண்கிறார்கள். விளைவு, அவர்களுடைய இறுமாப்பு கடவுளிடமிருந்து அவர்களைத் தூரமாக்குகிறது. நெருக்கம் வர வேண்டுமெனில் ‘தாழ்ச்சி’ அவசியம். தாழ்ச்சி என்பதற்கான ஆங்கிலப்பதம் ‘ஹியுமிலிட்டி’ என்பதாகும். இச்சொல்லின் இலத்தீன் மூலச்சொல் ‘ஹ்யூமுஸ்’. ‘ஹ்யூமுஸ்’ என்றால் ‘களிமண்’ என்பதாகும். களிமண்ணாக நாம் இருந்தபோதுதான் கடவுள் நம்மைத் தொட்டு மனிதராக உருவாக்கினார். களிமண்ணாக இருக்கும்போதுதான் கடவுளின் கரம் நம்மைத் தழுவி நிற்கிறது. நாம் வைத்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் இழக்க, இறுதியில் நிற்பது களிமண் மட்டுமே. இந்தக் களிமண் உணர்வே தாழ்ச்சி. இந்த உணர்வு நம்மைக் கடவுளோடு மட்டுமல்ல, ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது. இந்த உணர்வு ஒருவகையான உள்மனச் சுதந்திரத்தைத் தருகிறது. வெளிப்புறத்திலிருந்து வரும் அடையாளங்களைத் தாண்டிச் செல்ல உதவுகிறது.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 131), மிக அழகான சொல்லோவியத்தை நமக்குத் தருகிறது: ‘என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை, செருக்கு இல்லை, எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை’ எனச் சொல்கிற தாவீது, ‘அமைதியும் நிறைவும் கொண்ட நெஞ்சம் தாய்மடி தவழும் குழந்தைபோல’ இருக்கிறது என உருவகப்படுத்துகிறார்.

கடவுளின் தாய்மடியில் தவழும் குழந்தைபோல நாம் இருந்தால் நம் நெஞ்சில் அமைதியும் நிறைவும் குடிகொள்ளும். அமைதியும் நிறைவும் கொண்ட உள்ளம் கடவுளுக்கும் ஒருவர் மற்றவருக்கும் நெருக்கமாக இருக்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வார்த்தை வழிபாட்டுச் சிந்தனைகள்

வாய்ச் சொல்லில் வீரரடி என்று வாழாமல் சொல்லும் செயலும் இணைந்த வாழ்க்கை நமக்கு தேவை என்று நற்செய்தி நமக்கு இன்று கூறுகின்றது.

போட்டி மிகுந்த உலக வாழ்க்கையில், - சமூகத்தில் முதலிடத்தையும் மதிப்பும்- மரியாதையையும் தேடிக் கொண்டிருக்கின்ற மனிதர்களாக வாழ; வாழ்க்கைச் சூழல் நம்மை கட்டிப்போட்டுள்ளது. தவிர்க்க இயலாத இந்த வாழ்க்கைச் சூழலில், நாம் தேடும் மதிப்பும் மரியாதையும் - எதைச் சார்ந்து அல்லது எதனால் நமக்கு கிடைக்க இருக்கின்றது என்பதை; நன்கு ஆய்ந்து தேர்ந்து கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நவ நாகரீக வாழ்க்கையில் நமக்கு வேலைப்பளு குறைந்ததன் காரணமாக நம்மை அறியாமலேயே நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், மற்றவர்களும் இன்று நாம் செய்வதை போலவே, செய்யக்கூடியவர்களாக - நம் செயல்களை கண்காணிப்பவர்களாக இருப்பதை மறந்து விடக்கூடாது. எனவே, நமது செயல்கள் - முன்மாதிரிகையாகவும், மரியாதைக்கு உரியானாவாகவும், எளிதாக பிறர் ஏற்றுக் கொள்பவையாகவும் அவர்களுக்கும் பயன் தருவனவாகவும் அமைந்திட நமது செயல்களில் கவனம் கொள்ள வேண்டும்.

தனி மனிதனின் அடையாளம், அல்லது அழைப்பு - அற்பமானது; ஆனால் அற்புதமானது. ஒருவர் சமூகத்தில் நம்மை அடையாளப்படுத்தும் விதமாக நமது வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு, நம்மை அழைப்பது காலம் காலமாக மனிதர்கள் நடுவில் உள்ள ஒரு வழக்கம். இவர் விவசாயி, வியாபாரி ,மருத்துவர்,ஆசிரியர், பொறியியல் வல்லுநர், படைவீரர், அரசியல்வாதி, அரசர், மதகுரு - என்று மனிதர்கள் பலவிதமான அடையாள அழைப்புகளை தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் வழியாக பெற்றுக்கொள்கிறார்கள்.

வேறு வழி இல்லாமல் இத்தகைய அடையாள அழைப்புகளை நாம் அன்றாடம் வாழ்கின்ற வாழ்க்கை வழியாக பெற்றுக் கொள்ள வேண்டிய மனிதர்களாக இன்று வாழ்கின்றோம். அதாவது நமது வாழ்க்கை நமது அடையாளம் ஆக இருக்கின்றது என்பது உண்மை. மேலும்,குருடனை குருடன் என்றும் செவிடனை செவிடன் என்றுதான் அழைக்கின்றோம்.

நமக்கு கேட்கும் திறன் உண்டு, பார்வையும் உண்டு. நம்மை அழைப்பவர் யார் என்று நாம் பார்க்க முடியும், நமது அழைப்பு என்ன என்பதை கேட்டு உணரவும் முடியும். எனவே, நமது அடையாளம் - நமது வாழ்க்கை அற்பமானது அல்ல அற்புதமானது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மரியின் மைந்தன் வழியாக நாம் பெற்றுக் கொண்ட அடையாளமான அற்புத அழைப்பான "கிறிஸ்து அவன்/ அவள்" என்ற உன்னத அழைப்பிற்கு நாம் தகுதியுள்ளவர்களாகவும் சாட்சிய வாழ்க்கையை கொண்டவர்களாகவும் பயணித்திட அழைக்கப்பட்டு, கண்காணிப்புடன் வாழ கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

அடியோருக்கு அடியோராக தொண்டருக்கு தொண்டராக "சீடத்துவம் கொண்ட தலைவனாக செயல்பட" அழைக்கப்பட்டுள்ளோம். பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். அயலானுக்கு பணிவிடை புரிவதில் பெருமை கொள்ள வேண்டும்..

முடிவாக இறைமகன் கூறுகின்றார்‌‌…. தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். என்று. (மத்தேயு நற்செய்தி 23:12)

சரித்திர பார்வையாளர்கள் இயேசுவை பற்றி கூறும் போது 1) அவர் ஒரு மிகச் சிறந்த சமத்துவவாதி (கம்யூனிஸ்ட்)2) மிகச் சிறந்த போராளி 3) உணர்ச்சிப் பூர்வமான புரட்சியாளர் என்று கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒருவர் தம்மை தாமே தாழ்த்துகின்றவன் என்று கூறுவதை எப்படி நாம் பார்ப்பது. நமக்கேன் வம்பு என்று எல்லா நிலைகளிலும் நம் பாதுகாப்பிற்காக நம்மை தாழ்த்தி நகர்ந்து செல்லும் மனிதர்களைப்போல் இயேசுவையும் பார்ப்பதா?.. அல்லது எனக்குத் தெரியாது.. எனக்கு முடியாது.. என்று விலகி நிற்கும் மனிதர்களைப் போல இயேசுவை தாழ்த்தி பார்ப்பதா?.. இயேசு தன்னைத்தான் தாழ்த்தினார் என்பதில் சந்தேகம் இல்லை யார் முன் எதற்காக தன்னை தாழ்த்திக் கொண்டார் என்பதில் தான் நமக்கு சரியான புரிதல் இல்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருவர் முன் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார் ஒருவர் இறைவன் மற்றொருவர் அவர் நேசித்த, மற்றும் அவரை நேசித்த மனிதம் என்ற அயலான்.

இப்படி தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இயேசு யாரால் எப்படி உயர்ந்தார் என்பதை அறிந்து கொண்டோமா?.. இயேசு கூறுகின்றார் தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர் என்று. ஆம் அவர் உயர்வார் என்று கூறவில்லை உயர்த்தப் பெறுவர் என்றுதான் கூறினார் அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களாக உயர்வதில்லை பிறரால் அவர்கள் உயர்த்தப்படுகிறார்கள் என்பதை இயேசு தெளிவாக கூறுகின்றார் யார் முன் யாருக்காக தன்னை தாழ்த்துகின்றனரோ அவர்களால் அவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பதே உண்மை என்கின்றார். இறைவன் முன் தன்னை தாழ்த்திக் கொண்டதன் பலன் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அடிமையின் கோலம் பூண்டு, தன்னையே தாழ்த்தி, வெறுமையாக்கி - அயலானுக்காக தன்னை அர்ப்பணித்த அவர் அதே அயலானால் இன்று உலகம் முழுவதும் ஈராயிரம் ஆண்டுகளாக உயர்த்தப்பட்டவராக உயிர் உள்ளவராக போற்றப்படுகின்றார்.

வாருங்கள் இன்றைய முதல் வாசகத்தில் மலாக்கி 2:1-10ல் இறைவனை எப்படி அன்பு செய்ய வேண்டும்?.. அவன் முன் நம்மை எப்படி தாழ்த்திக் கொள்ள வேண்டும்?.. அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்..?.. இல்லை எனில் என்ன நடக்கும் என்பனவற்றை நமக்கு நினைவுறுத்துகின்றது.

இரண்டாம் வாசகத்தில் திருத்தொண்டர்களோ… மனித நேயத்தின் உச்சமாக மனிதன் வாழ்வு பெற நற்செய்தியை அவர்களுக்கு எவ்வாறு அறிவித்தார்கள் என்பதைக் கூறுகின்றனர். தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்தவர்களாக, தங்கள் வார்த்தைகளை கேட்கும் அவர்கள் அதை இறை வார்த்தைகளாகவே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு; திரு தொண்டர்கள் நடந்து கொண்டதையும் நினைவுபடுத்துகின்றார்கள். அதாவது, அயலான் வாழ்வு பெற தங்களையே இழக்கும் நிலைக்கும் திரு தொண்டர்கள் ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதையும் வாசிக்கின்றோம்.

தனி ஒருவன் செய்ய இயலாததை இயேசு எங்கும் எப்பொழுதும் கூறவில்லை. முழுமையாக, ஒருவர் செய்யக் கூடியதை செய்ததை; இயேசு சொல்லும் செயலும் ஒன்றென சான்று பகர்ந்து சென்று இருக்கின்றார். அவர் தம்மையே இறைவன் முன்னும் மனிதன் முன்னும் தாழ்த்தினார். அதே இறைவனால் மனிதத்தால் இன்று உலகெங்கும் உயிரோடு உயர்த்தப்பட்டுள்ளார். வாருங்கள், தாழ்த்தப்படுகிறவர்களாக இறைவன் முன்னும் மனிதத்தின் முன்னும் நாம் மாறும் போது என்றென்றும் நம்மை உயர்த்திட அதே மனிதமும் அந்த இறைவனும் உறுதியாக இருக்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம்.

இறைவன் நம்மோடு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வார்த்தையை வாழ்வாக்குவதே தாழ்ச்சியின் உச்சம்!

தாழ்ச்சி என்பது மிக உயர்ந்த குணம். முன்பெல்லாம் இதை புண்ணியம் என்று கூறுவார்கள். தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. மாறாக உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம். யாரோடும் தன்னை குறைத்தோ அல்லது உயர்த்தியோ பார்க்காமல் கடவுளுக்கும் சக மனிதருக்கும் முன்னால் தன்னிலையை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளுதலே தாழ்ச்சி.

இத்தாழ்ச்சியில் வளர்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. தாழ்ச்சியோடு உள்ள மனிதன் பல துன்பங்களை, ஏளனங்களை,பிரச்சினைகளைக் கடந்தாக வேண்டும். குறிப்பாக இறைவார்த்தையையும் தான் சொல்வதையும் போல வாழ்ந்து காட்ட வேண்டும். ......கடினமான காரியம்தான். ஆனால் இயலாத காரியம் இல்லை. கடவுளின் அருள் இருந்தால் இயலும்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு தம் போதனையில் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார் என்று கூறுவதோடு, பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தாழ்ச்சிக்கு உதாரணமாக வாழாததால் அவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்ற கருத்தையும் மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார்.

இயேசு ஏன் அவ்வாறு கூறுகிறார்? ஆண்டவருடைய சட்டம் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பின் இஸ்ரயேலை ஆண்ட நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் வழியாக தொடர்ந்து போதிக்கப்பட்டு இறுதியில் பரிசேயர் மறைநூல் அறிஞர்கள் வழி மக்களுக்கு கற்பிக்கப்பட்டது. இப்படி படிக்காத பாமர ஏழை எளிய மக்களுக்கு கடவுளின் வார்த்தையை கற்பிக்கும் அவர்கள் அவ்வார்த்தையை கொஞ்சமாவது கடைபிடிக்க வேண்டுமல்லவா? ஆனால் கடவுளின் வார்த்தையை போதித்த அவர்கள் அவ்வார்த்தைகளை வாழ்வாக்கி முன்னுதாரணம் காட்டவில்லை. இது கடவுளின் முன் தாழ்ச்சியற்ற செயலாகும். எனவேதான் இயேசு அவர்களைப் பின்பற்ற வேண்டாம் எனக் கூறுகிறார். ஆனால் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கச் சொல்கிறார். ஏனெனில் அவர்கள் சொல்வது கடவுளின் வார்த்தைகளை அல்லவா!

ஆம். கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதே தாழ்ச்சியின் உச்சம். நம் அன்னை மரியா "இதோ ஆண்டவரின் அடிமை. உம் வார்த்தையின் படியே எனக்கு நிகழட்டும் " என்று சொல்லி இறுதிவரை இறைவார்த்தைக்கு தன்னைத் தாழ்த்தி இறைவார்த்தையையே வாழ்ந்தார். நம் ஆண்டவர் இயேசு கடவுளின் வார்த்தையை வாழ்வாக்கி மீட்பினை நம் அனைவருக்கும் கொணர்ந்தவர். இறைவார்த்தைக்கு தன் வாழ்வால் உருவமும் அர்த்தமும் கொடுத்து தாழ்ச்சி என்ற புண்ணியத்தின் சிகரமானவர். என்றால் நாம் எவ்வாறு தாழ்ச்சியை கடைபிடிக்கப் போகிறோம்?

மிகச்சிறந்த வழி .......இறைவார்த்தையை வாழ்வாக்க ஒவ்வொருநாளும் முயல்வதே! இன்றைய முதல் வாசகம் நமக்கு கூறுவதும் அதுவே. இறைவார்த்தையை தானும் வாழ்வாக்காமல் ,பிறரையும் தவறாக வழிநடத்துபவரை தண்டிப்பதாக கடவுள் முதல் வாசகத்தில் கூறியுள்ளார். எனவே நாம் இறைவார்த்தையை வாழ்வாக்க முயலுவோம். சொல்வதை செய்ய கற்றுக்கொள்வோம். தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நமதாக்குவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! உம் வார்த்தைகளை எங்கள் வாழ்வாக்கி தாழ்ச்சியின் மக்களாய் வாழ அருள்வீராக ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser