ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
குறுகிய எண்ணம் கொண்ட பரிசேயரில் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்தோடு, போதகரே! திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது என்று கேட்டார். உள்ளத்தை அறியும் உன்னத ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியிலே அவருக்குப் பதில் சொல்கிறார். அன்பே அனைத்திலும் சிறந்த கட்டளை என்றும், யாரை அன்பு . செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
இஸ்ரயேல் நாட்டிலே மோசேயைப் பற்றிய ஒரு கதை உண்டு. மோசே காட்டிலே வாழ்ந்த, ஒரு வேட்டைக்காரரின் வீட்டிலே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் அந்த வேட்டைக்காரர் கிண்ணத்திலே பால் ஊற்றி அக்கிண்ணத்தைக் கொண்டு போய் காட்டிலே ஒரு புதரிலே வைத்துவிட்டு வந்தார். எதற்கு இந்தப் பாலைக் கொண்டுபோய் அங்கு வைத்தாய் என மோசே கேட்டபோது, இரவில் கடவுள் வந்து அந்தக் கிண்ணத்திலே உள்ள பாலைக் குடித்துவிட்டுச் செல்வார் என்றார் வேட்டைக்காரர். மோசே சிரித்துக் கொண்டே, கடவுளா...! அவர் வந்து பாலைக் குடிக்கிறாரா! நிச்சயமாக இருக்காது. நாளை இரவு என்ன நடக்கிறது என்று நீயே பார் என்றார் மோசே.
மறுநாள் இரவு வைத்த பாலை நரிக்குட்டி வந்து குடித்தது. இதைப் பார்த்த வேட்டைக்காரர் காட்டில் பால் வைப்பதை நிறுத்தினார். கனவிலே கடவுள் மோசேக்குத் தோன்றி, மோசேயைப் பார்த்து, எனக்குக் கிடைத்த பாலை ஏன் கிடைக்காமல் செய்தாய்? என்றார். மோசே, ஐயோ நான் நரிக்கு வைக்கப்பட்ட பாலைத்தான் தடுத்தேன் என்றார். அதற்குக் கடவுள், நான் இல்லாத ' இடமொன்றை இந்த உலகில் எனக்குக் காட்டு என்றார். மோசே தன் மனதை மாற்றிக் கொண்டு வேட்டைக்காரரைத் திரும்பவும் காட்டிலே பாலை வைக்கச் சொன்னார்.
ஓர் ஆசிரியர் மாணவரைப் பார்த்து, எத்தனை கடவுள்? என்று கேட்டார். மாணவரோ, ஒரே கடவுள். அவர் எங்கும் இருக்கிறார் என்றார். ஏன் இரண்டு கடவுள்கள் இருக்க முடியாது? எனக் கேட்ட ஆசிரியருக்கு, ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறாரே, இரண்டாவது கடவுள் இருக்க இடம் எங்கே? என்று கேட்டார் அந்த மாணவர்.
- ஆம்! கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. ஆகவே கடவுளை அன்பு செய்பவர் இந்த உலகத்திலே உள்ள அனைத்தையும், அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். இன்றைய நற்செய்தி அன்பின் இரண்டு பரிமாணங்களை இணைத்துக் காட்டுகிறது. இறையன்பும், பிறர் அன்பும் பிரிக்க முடியாத ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இறைவனை அன்பு செய்யாமல் மனிதனை அன்பு செய்ய முடியாது. கண்ணால் காண்கின்ற மனிதனை அன்பு செய்யாமல் கண்ணால் காணாத இறைவனையும் அன்பு செய்ய முடியாது
(1 யோவா. 4:20-22).
- யூதர்களைப் பொறுத்தவரையில் இறைவனை முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு இதயத்தோடும் அன்பு செய்வதைத் தலையான ஆன்மீகக் கடமையாகக் கொண்டிருந்தார்கள். இதற்கு விளக்கம் தரும் . 613 ராபினிய பாரம்பரியங்களையும் தெரிந்து வைத்திருந்தனர்.
ஆனால் பிறர் அன்பை இரண்டாம் தரக் கட்டளையாகக் கருதினார்கள். இயேசுவைப் பொறுத்தவரையில் இரண்டு அன்புக் கட்டளைகளையும் இன்றியமையாதவைகளாக்கி மிகப் பெரிய புரட்சியே செய்தார். இறையன்பில் ஆழ்ந்தவர்கள், பிறரில் தன்னையே ஈடுபடுத்துவதின் வழியாகத்தான், குறிப்பாக ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், அடிமைகள், ஒடுக்கப்பட்டோர், நோயாளிகள், விதவைகள், ஊனமுற்றோர், சமுதாயத்தில் முகவரி இல்லாதவர்கள் இந்த இறைவனின் உருவகங்கள், மொழிகள், அடையாளங்கள். இவர்களை அன்பு செய்வதன் வழியாகத்தான் கடவுளை அன்பு செய்ய முடியும். இத்தகைய நலிந்தவர்களிடம் காட்டும் அன்பும், பரிவும் ஆண்ட வருக்குக் காட்டும் அன்பாகும் என்பதை ஆண்டவர் இயேசு தன் போதனையாலும், தன் வாழ்வாலும் காட்டியவர். ஏனெனில் மனிதர் கடவுளின் சாயல் (தொ. நூ. 1:26).
மனிதரை மறந்து தெய்வ சந்நிதானம் தேடுவது அநாகரிகம். தெய்வத்தை மறந்து. மனிதனே கதி என்று கிடப்பதும் காட்டுமிராண்டித்தனம். பாடலில் பாடுவதுபோல ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் என்பதை உணருவோம். கடவுளை மதித்து , அன்பு செய்யும் நாம் மனிதனையும் வேறுபாடு காட்டாது மதிப்போம், அன்பு செய்வோம். ஆமென்.
பாடுபடுவோம் ! பலன் பெறுவோம்!
தலைசிறந்த கட்டளை எது என்பதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு பதில் சொல்கின்றார். அன்பே அனைத்திலும் சிறந்தது. நாம் யாரை அன்பு செய்ய வேண்டும் என்பதற்குக் கதை ஒன்று பதில் சொல்லும்.
இஸ்ரயேல் நாட்டிலே மோசேயைப் பற்றிய கதை ஒன்று நின்று நிலவுகின்றது. மோசேக்கு காட்டிலே வாழ்ந்த ஒரு வேட்டைக்காரனின் வீட்டிலே தங்க வேண்டிய சூழ்நிலை ! இரவு படக்கச்சல்வதற்கு முன் அந்த வேட்டைக்காரன் கிண்ணத்திலே பால் ஊற்றி அக்கிண்ணத்தைக் கொண்டு போய் காட்டில் ஒரு புதரின் பக்கத்தில் வைத்துவிட்ட வந்தான். மோசே, எதற்கு அந்தப் பாலைக் கொண்டு போய் அங்கு வைத்துவிட்ட வருகின்றாய் ? எனக் கேட்டதற்கு, அந்த வேட்டைக்காரன், இரவில் கடவுள் வந்து அந்தக் கிண்ணத்திலிருக்கும் பாலைக் குழத்துவிட்டுச் செல்வார் என்றான். அதைக் கேட்ட மோசே சிரித்துக்கொண்டே, கடவுளா... அவர் வந்து பாலைக்குழக்கின்றாரா? நிச்சயமாக இருக்காது. நாளை இரவு என்ன நடக்கின்றது என்று நீயே பார் என்றார்.
மறுநாள் இரவு ஓர் அழகிய நரிக்குட்டி வந்து அந்தப் பாலைக் குடித்தது! அடுத்த நாள் வேட்டைக்காரன் பாலை வெளியில் எடுத்துச் செல்லவில்லை! அன்று இரவு மோசே ஒரு கனவு கண்டார். அந்தக் கனவிலே கடவுள் தோன்றி மோசேயைப் பார்த்து, எனக்குக் கிடைத்து வந்த பாலை ஏன் கிடைக்காமல் செய்தாய்? என்றார். அதற்கு மோசே, ஐயோ! நான் நரிக்கு வைக்கப்பட்ட பாலைத்தான் தடுத்தேன் என்றார். அதற்குக் கடவுள், நான் இல்லாத இடமொன்றை இந்த உலகத்திலே காட்ட என்றார். மோசே தனது மனத்தை மாற்றிக்காண்டார். வேட்டைக்காரனின் பால் கொண்டு போய் காட்டுக்குள் வைக்கும் பழக்கம் தொடர்ந்தது.
ஓர் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, எத்தனைக் கடவுள்? என்றார். பதில் : ஒரே கடவுள் . அவர் எங்கே இருக்கின்றார்? பதில் : எல்லா இடங்களிலும் இருக்கின்றார். ஏன் இரண்டு கடவுள் இருக்க முடியாது? பதில் : ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! இரண்டாவது கடவுள் இருக்க இடம் எங்கே இருக்கும்?
ஆம். கடவுள் எங்கும் இருக்கின்றார் ! அவரில்லாத இடமே இல்லை. அவரது பிரசன்னத்தின் தன்மை மாறலாம். ஆனால் அவர் எங்கும் பிரசன்னமாயிருக்கின்றார்.
ஆகவே, கடவுளை அன்பு செய்கின்றேன் என்று சொல்கின்றவர் அனைவரும் இந்த உலகத்திலுள்ள அனைவரையும், அனைத்தையும் அன்பு செய்யவேண்டும்.
மனிதர்களை, குறிப்பாக அன்னியர், விதவைகள், அனாதைகள் ஆகியோரை வெறுப்பவர்களுக்கு கடவுள் ஆசியளிப்பதில்லை [முதல் வாசகம்].
இன்றைய உலகம் எப்படி இருக்கின்றது?
நீதி தேவதையே உன் கண்களைத் திறந்து பார்!
தராசுத் தட்டில் உள்ள புறாவின் சதையை
சிபிச் சக்கரவர்த்தி உண்ணத் துணிந்துவிட்டார்! - அப்துல் ரகுமான்
சுயநலத்தை எதிர்த்துப்போராடி நமது அன்பு செயல்வடிவம் பெற (இரண்டாம் வாசகம்) பாடுபடுவோம் : பலன் பெறுவோம்.
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்
அன்பு செய்.
வின்செண்ட் சர்ச்சிலைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் "அவர் இறந்துவிட்டார் இப்போது உயிரோடில்லை" என்று எழுதியிருந்தான் இரண்டாம் குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் எழுதிய பதில்:"இரண்டாம் குலேத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்கசோழனுக்கு பின்னால் வந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்" அமெரிக்காவை ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி அபிரகாம் லிங்கனைக் கேட்டதற்கு அவர் கூறியது: உழைப்பு.
ஒருவரைப் பற்றிச் சுருக்கமாக விளக்குவது என்பது மிகவும் கடினம் அப்படியானால் 73 புத்தகங்களைக் கொண்ட விவிலியத்தை முழுவதுமாக இரண்டே வரிகளில் விளக்க முடியுமா? இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விவிலியம் முழுவதையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார். "கடவுளை முழு மனத்துடன் அன்புசெய் உன்னை நீ அன்பு செய்வதுபோல உனக்கு அடுத்து இருப்பவரையும் அன்பு செய் (மத்தேயு 5 22:37-38):
கடவுளை முழுமையாக அன்பு செய் (இச 3:5) என்று இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ளதையும், உனக்கு அடுத்து இருப்பவரை அன்பு செய் (லேவி 19:18) என்று லேவியர் நூலில் சொல்லப்பட்டிருப்பதையும் கிறிஸ்து இணைத்துக் கூறியுள்ளார். இறையன்பும் பிறரன்பும்தான் சட்டம் மற்றும் இறைவாக்குகள் அனைத்தின் அச்சாணி.
நலமுடன் இருந்த ஒருவர், மேலும் உடல் நலம் பெற விரும்பி பல மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் வெவ்வேறு மருந்துகளை கொடுக்க, அவர் அவற்றையெல்லாம் சாப்பிட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் தமது உறவினர்களிடம் அவரது கல்லறையில் பின்வரும் வரிகளை எழுதும்படி கேட்டுக்கொண்டு கண்ணை மூடினார்: "நான் நலமுடன் இருந்தேன். மேலும் நலம்பெற விரும்பி பல மருத்துவர்களிடம் சென்றேன். அதனால் இப்போது இக்கல்லறையில் இருக்கிறேன்."
அவ்வாறே இன்று விவிலியததைக் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு சில கத்தோலிக்கர் பின்வருமாறு கூறுகின்றனர்: "எனக்கு ஓரளவு விவிலியம் தெரிந்திருந்தது விவிலியத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினேன் பல விவிலிய விளக்கக் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் விளைவாக நான் இப்போது கததோலிக்கத் திருச்சபையைவிட்டு வெளியேறி பெந்தகோஸ்து சபையில் இருக்கிறேன்."
விவிலியத்தை விலா வாரியாகப் படித்து என்ன பயன்? விவிலியப் பட்டிமன்றங்கள் கருத்தாங்குகள் நடத்தி என்ன பயன்? இன்று பெத்தகோஸ்து சபைகளில் நடப்பதெல்லாம் "விவிலிய சிலை வழிபாடு" என்று கூறுகிறார் ஒரு விவிலியப் பேராசிரியர் விவிலியம். கூறும் சாரத்தை விட்டுவிட்டு வெறும் சக்கையைச் சாப்பிடுகின்றனர் விவிலியத்தை ஒரு சிலையாக வழிபடுகின்றனர்.
விவிலியத்தின் சுருக்கம் கடவுளை அன்பு செய் உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய். விவிலியத்தில் உள்ள மற்ற அனைத்தும் இந்த இரண்டு கட்டளைகளின் விளக்கமும் விரிவாக்கமும் என்பதை அறிக.
கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால் அவரை முழுமையாக அன்பு செய்வது கடினம் கடவுள் நமது முழு அன்பை பிளவுபடாத அன்பை எதிர்பார்க்கின்றார். ஆனால் நாம் கடவுளையும் இவ்வுலகையும் அன்பு செய்கிறோம். இவ்வுலகச் செல்வங்களுக்கு அடிமையாகின்றோம். உலக மாயையில் நம்மை இழந்து விடுகிறோம். இருமனப்பட்ட உள்ளத்தினராய் வாழ்கின்றோம். இத்தகைய நிலையில் கிறிஸ்து நமக்குக் கூறுவது நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24)
நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும். பிறரன்பு இறையன்பின் வெளி அடையாளம். அன்பு செய்யாதவர் கடவுளை அறிய முடியாது. ஏனெனில் கடவுள் அன்பாயிருக்கிறார் (1 யோவா 4:16). பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமைமாடு தெரியுமா? அவ்வாறே. நாம் கண்ணால் காணாத அடுத்திருப்பவரை அன்பு செய்ய முடியவில்லையென்றால், கண்ணால் காணாத கடவுளை எவ்வாறு அன்பு செய்யமுடியும் என்றுவினவுகிறார் புனித யோவான் (1 யோவா 4:20)
இன்றைய முதல் வாசகம் நாம் பிறக்கு குறிப்பாக விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் தீங்கிழைக்கக் கூடாது எனக் கூறுகிறது. ஏழைகளுடைய குரலைக் கடவுள் கேட்கிறார். பிறர்க்கு இப்போதே நன்மை செய்ய வேண்டும்.
ஒரு பசுவிடம் பன்றி கேட்டது உன்னை மட்டும் மக்கள் வரவேற்கின்றனர் என்னை ஏன் அவர்கள் விரட்டுகின்றனர்? அதற்குப் பசு கூறியது: "நான் உயிரோடு இருக்கும்போதே மக்களுக்குப் பயன்படுகிறேன். ஆனால் நீ செத்த பிறகுதான் மக்களுக்குப் பயன்படுகிறாய்." செத்த பிறகு நமது சொத்துக்களை பிறர்க்கு எழுதி வைப்பதால் பயனில்லை. உயிரோடு இருக்கும்போதே நம் சொத்துக்களை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இளமைப் பருவத்திலேயே பிறர்க்கு உதவ வேண்டும் முதுமைக் காலத்தில் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. நாம் பிறர்க்குச் செய்த உதவிதான் நாம் சாகும்போது நமக்குக் கைகொடுக்கும் என்கிறார் வள்ளுவர்.
அன்றுஅறிவாம் என்னாது ஆறஞ்செய்க மற்றுஅது
பொன்றும் கால்பொன்றாத்துணை. (குறள் 36)
என்றும் ஒன்றே செய்க
ஒன்றும் நன்றே செய்க
நன்றும் இன்றே செய்க
ஏழையின் சிரிப்பில் இறைவன்
பழங்கால ஆங்கில இலக்கிய வகையைச் சார்ந்தது லெய்ஹன்ட் (Leigh Hunt) எழுதிய அபு பென் ஆதெம் (Abau Ben Adhem) என்ற அருமையான கவிதை. ஒரு நாள் இரவில் ஆதேம் கனவொன்று கண்டார். வானதூதர் ஒருவர் “இறைவனைத் தம் முழு மனத்தோடு நேசிப்பவர்களின்” பட்டியலை எழுதிக் கொண்டிருந்தார். ஆதேம் மெதுவாகச் சென்று தன் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தார். திகைத்து நின்றார். அதில் அவருடைய பெயர் இல்லை. “ஐயோ, வான தூதரே நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் எப்பொழுதும் என் முழு உள்ளத்தோடும் என் முழு ஆற்றலோடும் முழுக்க முழுக்க இறைவனை அன்பு செய்ய எல்லா முயற்சிகளும் எடுத்து வந்துள்ளேன். எப்படி என் பெயர் இல்லாமல் போயிற்று?” என்று பரபரத்தார். அடுத்த நாள் இரவு அதே வானதூதர் இன்னொரு புதிய பட்டியலைக் கொண்டு வந்தார். “இறைவனால் நேசிக்கப்படுபவர்கள்”” என்று தலைப்பிட்டிருந்தது. ஆதெம் ஒடிச் சென்று ஆவலோடு உற்றுப் பார்த்தார். அந்தப் பட்டியலில் அவர் பெயர்தாம் முதலில் இருந்தது; ஆனந்தப் பெருமூச்சுவிட்டார்.
நாம் அன்பு செய்கிறோமோ இல்லையோ, கடவுள் நம்மை அன்பு செய்கிறார். இறைவனது அந்தப் பேரன்புக்கு நாமெல்லாம் சாட்சிகள், தூதர்கள்!
“நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது (1 யோ. 4:10). கடவுள் அவ்வாறு அன்பு கொண்டார் என்றால் (நாமும் கடவுளை அவ்வாறு என்றல்ல) நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்” (1 யோ. 4:11) என்கிறார் அன்பின் திருத்தூதர் யோவான்.
இயேசு உடல் எடுத்து வாழ்ந்த உலக வாழ்க்கை முழுவதுமே பேரன்பின் செயல்பாடு. “கிறிஸ்தவனுடைய இறை நம்பிக்கையை இரண்டு வார்த்தைகளில் சுருக்க வேண்டுமா? இயேசு, அன்பு என்பவைதாம் அவை” என்று திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் 2005 செப்டம்பர் 5ஆம் நாளன்று நற்கருணை ஆண்டு நிறைவு விழாவில் குறிப்பிட்டார். இயேசுவின் அன்புக்கட்டளையை மட்டும் நம்மால் வாழ்வாக்க முடிந்தால், திருவிவிலியத்தில் உள்ள மற்ற அனைத்தையும் மறந்தாலும், திருச்சட்டம், இறைவாக்கு நற்செய்தியில் அடங்கிய அனைத்தையும் கடைப்பிடித்தவர்களாவோம். “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு” (ரோமை. 13:10) இயேசு நமக்குத் தரும் அழைப்பு அது. “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்... நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” (யோ. 15:10,12).
“நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது”. (ராமை 5:5) அந்த இறையன்புக்கு எப்படிப் பதிலன்பு காட்டுவது? ஒரே வழி பிறரன்புதான் - இதுதான் இன்றைய வழிபாடு நமக்குச் சொல்லும் நற்செய்தி. “கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, நம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது” (1யோ. 4:20).
இறைநம்பிக்கை அன்புச் செயல்களில் அடங்கி இருக்கிறது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. “நம்பிக்கையும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்” (யாக். 2:17). “ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாக இருந்தது. என்னை அறிதல் என்பதே இதுதானே என்கிறார் ஆண்டவர்” (எரே. 22:15, 16).
பிறரன்பில் வெளிப்படும் இறையன்பு முதல் வாசகத்தில் விளக்கம் பெறுகிறது (வி.ப. 22:21-26). கைம்பெண்கள், ஆதரவற்றவர்கள் ஏழைகள் இவர்கள் மீது இறைவனுக்குள்ள அக்கறையை நாமும் புரிந்து கொண்டு பகிர்ந்து வாழ வேண்டும் என்கிறார் ஆண்டவர்.
இப்ராஹிம் என்ற இஸ்லாமியத் துறவி தன்னுடைய சீடர்களுடன் வெளியூர்ப் பயணம் போனபோது பள்ளிவாசல் ஒன்றில் தங்க நேர்ந்தது. அது ஒரு பழைய கட்டடம். அதன் சுவர் ஒன்றில் இருந்த ஒட்டை வழியாக வீசிய பனிப்புயல் உள்ளே தங்கி இருந்தவர்களைப் பெரிதும் பாதித்தது. ஊசி குத்துவது போன்ற குளிர்ப்பாதிப்பால் அவர்கள் சுருண்டு அவதிப்பட்டார்கள். இதைக் கவனித்த இப்ராஹிம் எழுந்துபோய் அந்த ஓட்டையை தன் முதுகால் அடைக்கும் வகையில் சுவரில் அழுந்தச் சாய்ந்துகொண்டார். பனிப்புயலின் பாதிப்பை அவர் ஒருவரே தாங்கிக் கொண்டதால் மற்றவர்கள் நிம்மதியாக உறங்கினார்கள். அப்படி அவர் செய்ததால் அவரது வழக்கமான பின்னிரவுத் தொழுகை தடைப்பட்டுப் போயிற்று. இந்த உறுத்தலில் இரண்டு நாட்களாக தொழுகையைத் தவறவிட்டதை இறைவனிடம் எடுத்து இயம்பி வருத்தப்பட்டார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு குரல் ஒலித்தது: “இப்ராஹிம், கடந்த இரண்டு நாள்களாக நீ செய்த பின்னிரவுத் தொழுகை இறைவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று'. “ஐயோ, அன்று நான் தொழவே இல்லையே”, பதறினார் இப்ராஹிம். “இன்று நீ செய்த சேவையே இறைவனுக்கு மிகவும் பிடித்த சிறப்புத் தொழுகை” என்றது அந்த அசரீரி.
கடவுளை நேசிப்பது என்பது அவரை வணங்குவதும் புகழ்ச்சி அஞ்சலி செலுத்துவதும் மட்டுமல்ல. பிறர் நல்வாழ்வுக்காகத் தன்னையே தியாகம் செய்வதுதான் உண்மையான கடவுள் அன்பு. எனவே விவிலியம் சொல்கிறது: “அயலாரை அன்பு செய்தல் எரிபலிகளை விட முக்கியமானது” (ஒசே. 6:6). “ஏழைகளுக்கு இரங்குதலே இறைவன் விரும்பும் நோன்பு” (எசா. 58:7). “ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உன்மீது அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக”” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது” (கலா. 5:13,14).
எனக்கு ஒரு கண் போனால் போகட்டும் எதிர்வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் போகட்டும் என்று விரும்புவதும் அப்படி நடந்தால் மகிழ்வதும் தன்னைப் போல் தன் அயலானை நேசிப்பது ஆகாது.
பிறரன்பு இன்றி இறையன்பு இல்லை என்பது உண்மை என்றாலும் இறைவன் பொருட்டே அயலான் அன்புக்குரியவன். அன்னை தெரசா நடத்தும் தொழுநோயாளர் இல்லம் ஒன்றில் தொழுநோயாளர் ஒருவரின் எதிரே அமர்ந்து அவரது சிதைந்த காலைத் தன் மடிமீது வைத்து காயத்தைக் கழுவி மருந்திட்டுக் கொண்டிருந்தார் ஒர் அருள் சகோதரி. அப்போது அதைப்பார்த்த ஒருவர் முகம் சுளித்து “எனக்கு ஓர் இலட்சம் ரூபாய் கொடுத்தாலும் நீங்கள் செய்யும் இவ்வேலையை நான் செய்ய மாட்டேன்” என்று சொன்னார். அதற்கு அந்தச் சகோதரி “ நான் மட்டும் என்ன, ஒரு கோடி ரூபாய் கிடைப்பதாய் இருந்தாலும் நான் செய்திருக்க மாட்டேன். ஆனால் என் ஆண்டவர் இயேசுவுக்காக இதைச் செய்கிறேன்” என்றாராம். கேட்டவர் அதிர்ந்து போனார்.
காலை தோறும் அன்பு முயற்சியாக நாம் செபிப்பது இது: “என் இறைவா, நீர் அளவற்ற அன்புக்குரியவர் என்பதால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனத்தோடு அன்பு செய்கிறேன். மேலும் உம்மை முன்னிட்டு மற்ற எல்லாரையும் அன்பு செய்கிறேன். ஆமென்”.
இறையன்பும் பிறரன்பும் ஒன்றா? உன்னை நீ அன்பு செய்வதுபோலப் பிறரையும் அன்பு செய் என்று இறைவன் சொன்னாரே தவிர என்னை அன்பு செய்வதுபோலப் பிறரையும் அன்பு செய் என்று சொல்லவில்லை. கடவுளைக் கடவுளுக்காகவும் பிறரையும் கடவுளுக்காகவும் அன்பு செய்வோம்.
கடவுளிடம், அயலவரிடம் அன்பு செலுத்து
அக்டோபர் 7ம் தேதி முதல், இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் போரைக் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தை வேதனைப்படுத்துகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, உலகின் பல மதத் தலைவர்கள், அப்பாவி பாலஸ்தீன மக்களை, குறிப்பாக, குழந்தைகளை பலியாக்கிவரும் இந்த போரை முடிவுக்குக் கொணர, வேண்டுகோள்களை வெளியிட்டு வருகின்றனர். அக்டோபர் 27, வெள்ளியன்று, புனித பூமியில் அமைதி திரும்புவதற்கு, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் உண்ணா நோன்பு மேற்கொண்டு செபிக்கும்படி திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.
இத்தகையைச் சூழலில், இன்றைய ஞாயிறு வழிபாட்டு வாசகங்கள், கடவுள் அன்பையும், அயலவர் அன்பையும் வலியுறுத்தும் எண்ணங்களை வழங்கியுள்ளன. இன்றைய முதல் வாசகம் - விடுதலைப் பயணம் 22:21-27 - அன்னியர், கைம்பெண்கள், அனாதைகள் ஆகியோருக்கு காட்டவேண்டிய தனிப்பட்ட அக்கறையைப் பற்றி கூறுகிறது. "அன்னியரைத் துன்புறுத்தாதீர்கள், ஏனெனில் நீங்களும் எகிப்து நாட்டில் அன்னியராக இருந்தீர்கள்" என்று இறைவன் வழங்கும் எச்சரிக்கை, விடுதலைப் பயணம், லேவியர், மற்றும் இணைச்சட்டம் ஆகிய நூல்களில் மீண்டும், மீண்டும் பதிவாகியுள்ளது. இதே நூல்களையும், இறைவன் வழங்கும் இந்த எச்சரிக்கையையும், இஸ்ரேல் நாட்டில் தற்போது வாழ்ந்துவரும் யூதர்கள், தங்கள் இல்லங்களிலும், தொழுகைக் கூடங்களிலும் கட்டாயம் வாசித்திருக்கவேண்டும். இருப்பினும், அவர்கள், தாங்கள் குடியேறிய பாலஸ்தீன நாட்டில், அங்கு வாழ்ந்துவந்த பாலஸ்தீனியருக்கு செய்துவரும் கொடுமைகளையும், தற்போது, காசாப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல்களையும் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம்.
இதேபோல், இஸ்லாமிய இறைவாக்கினர் முகம்மது அவர்கள், இறைவன் அன்பையும், அயலவர் அன்பையும் குறித்து வழங்கியுள்ள கருத்துக்களை இஸ்லாமியர்களும் நன்கு அறிந்துள்ளனர். யூதர்களும், இஸ்லாமியரும், ஆணவம் நிறைந்த தங்கள் அரசியல் வெறியைக் கைவிட்டு, தங்கள் மறைநூல்கள் வழங்கியுள்ள அன்பை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க இறைவன் அவர்களது உள்ளங்களைத் திறக்கும்படியாக இன்றையத் திருப்பலியில் உருக்கமாக வேண்டிக்கொள்வோம்.
ஆணவம் கொண்ட பரிசேயர், சதுசேயர் மற்றும் ஏரோதியர், இயேசுவை, ஏதாவது ஒரு வழியில், சிக்கவைப்பதற்கு மேற்கொண்ட கேள்வி-பதில் முயற்சிகள், சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும் வழங்கப்பட்டுள்ளன.
"சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" (மத்தேயு 22:17) என்ற கேள்வி, சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்பட்டது. "திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது. இன்றைய நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். (மத்தேயு 22:36) என்ற அறிமுக சொற்கள், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.
திருச்சட்ட அறிஞர், இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததில், ஏளனம், ஏராளமாய் ஒலித்தது. திருச்சட்டங்களையும், திருமறை நூல்களையும் கற்றுத்தெளிந்து, மக்களுக்கு அவற்றைப்பற்றி தெளிவாக விளக்கிக்கூறுபவரே, 'போதகர்' என்று அழைக்கப்படவேண்டும். இவை எதையும் படிக்காத, தச்சுத்தொழிலாளியான இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததன் வழியே, அவர் ஒரு 'போலிப்போதகர்' என்று, திருச்சட்ட அறிஞர், குத்திக்காட்ட விழைகிறார். அதைத் தொடர்ந்து அவர், 'தலைசிறந்த கட்டளை எது?' என்று கேட்டது, உண்மையிலேயே, இயேசுவை வீழ்த்த அவர் பதித்துவைத்த நிலத்தடி கண்ணிவெடி என்றே சொல்லவேண்டும்.
யூதப் பாரம்பரியத்தில், 613 கட்டளைகள் உண்டு. அவற்றில், 'நீங்கள் செய்யவேண்டியது' என்பதைக் கூறும், கட்டளைகள், 248 ஆகவும், 'நீங்கள் செய்யக்கூடாதது' என்பதைக் கூறும் கட்டளைகள், 365 ஆகவும் இருந்தன. இந்த 613 கட்டளைகளில், ஓய்வுநாள், கோவிலில் அளிக்கப்படும் பலிகள், காணிக்கைகள், விருத்தசேதனம் ஆகியவை குறித்து சொல்லப்பட்டுள்ள கட்டளைகள், மதத்தலைவர்களுக்கு, மிக, மிக முக்கியமானவை. இவற்றில், தலைசிறந்தது எது என்பதை இயேசு கூறுவார்; அதைக் கொண்டு, அவரைச் சிக்கவைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், திருச்சட்ட அறிஞர் இந்தக் கேள்வியைத் தொடுத்திருக்கவேண்டும். ஆனால், இயேசு அவருக்கு வழங்கிய மறுமொழியோ, காலத்தால் அழியாத ஒரு கவிதை.
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி, மிக அழகான, ஆழமான கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் தருகிறார். மனிதவாழ்வின் அடித்தளமாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய், இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 22: 37-40
“‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன”.
இயேசு கூறிய இந்த பதிலில், இணைச்சட்டம், லேவியர், என்ற இரு நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இணைச்சட்ட நூலில், கூறப்பட்டுள்ள பகுதியில், "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!" (இணைச்சட்டம் 6:5) என்ற இச்சொற்கள், இஸ்ரயேல் மக்களின் மனங்களில் பதியவேண்டும்; அவர்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் பதியவேண்டும்; அவர்கள் வீட்டில் இருக்கும்போது, பயணம் செய்யும்போது, படுக்கும்போது, எழும்போது இக்கட்டளையைப்பற்றி பேசவேண்டும்; இஸ்ரயேல் மக்களின், கைகளிலும், கண்களுக்கிடையிலும் இச்சொற்கள் கட்டப்படவேண்டும்; வீட்டின் கதவு நிலைகளிலும், நுழை வாயில்களிலும் இந்தச் சட்டம் எழுதப்படவேண்டும் (காண்க. இணைச்சட்டம் 6:6-9) என்ற தெளிவான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
இயேசுவை சோதிக்கும் நோக்கத்துடன் வந்திருந்த திருச்சட்ட அறிஞர், ஒருவேளை, இந்தக் கட்டளையை தன் கைகளிலும், கண்களுக்கிடையிலும், கட்டிவைத்தபடி, இயேசுவிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். ஒரு சில வேளைகளில், நமக்கு மிக அருகே இருப்பவை, அல்லது, நமக்கு மிகப் பழக்கமானவை நம் கவனத்தை ஈர்க்காமல், நம்மிடம் மாற்றங்களை உருவாக்காமல் போவதை நாம் உணர்ந்திருக்கிறோம். அத்தகையதொரு நிலை, திருச்சட்ட அறிஞருக்கும் உருவானது. எனவே, இயேசு, அவரது கவனத்தை அந்த முக்கிய கட்டளை பக்கம் திருப்பினார்.
இவ்வளவு முக்கியமான இந்தக் கட்டளையின் முதன்மையை, பரிசேயரும், திருச்சட்ட அறிஞர்களும் படிப்படியாகக் குறைத்து, அதற்குப்பதிலாக, ஒய்வுநாள், பலிகள், விருத்தசேதனம் குறித்த கட்டளைகளை மக்கள் மனதில் பீடமேற்றி வந்தனர். அவர்கள் பீடமேற்றியிருந்த அந்த பொய் தெய்வங்களை இறக்கிவைத்துவிட்டு, இறைவன் தந்த தலைசிறந்த கட்டளையை, இயேசு, அந்த திருச்சட்ட அறிஞர் மனதிலும், சூழ இருந்த மக்கள் மனதிலும் பீடமேற்றி வைத்தார்.
இறைவனை அன்புகூரவேண்டும் என்று கூறிய அதே மூச்சில், இயேசு, பிறரன்பு என்ற கட்டளையையும் இணைத்தார். "உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!" (லேவியர் 19:18) என்ற அந்தக் கட்டளையும், இறைவன் வழங்கிய கட்டளையே என்பதை, இயேசு, சூழ இருந்த அனைவருக்கும் நினைவுறுத்தினார்.
அனைத்து மதங்களும், இறையன்பையும், பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்கிறோம். இயேசு கூறிய இந்த பதில் மொழியில், இறையன்பிற்கும், பிறரன்பிற்கும் இயேசு வழங்கும் அளவுகோல்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இறைவன் மீது காட்டப்படும் அன்புக்கு, இயேசு கூறும் அளவுகோல், முழுமை. முழுமையான இதயம், உள்ளம், மனம் ஆகியவற்றால் இறைவன் மீது அன்புகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல..." என்ற சொற்றொடர், அயலவர் மீது காட்டப்படும் அன்புக்கு, அளவுகோல். தன் மீது அன்புகொள்ள இயலாத ஒருவரால், அடுத்தவர் மீதும் அன்புகாட்ட முடியாது என்பது, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.
திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி எழுப்பும் இந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்த மூன்று நற்செய்திகளும், இந்நிகழ்வை வெவ்வேறு வகையில் கூறியுள்ளன. இந்த வேறுபாடுகளைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். குறிப்பாக, மாறுபட்ட கருத்து கொண்டவர்கள், எவ்வாறு, நேர்மையான விவாதங்கள் வழியே உண்மையைக் கண்டுகொள்ளமுடியும் என்பதையும், மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவர்களும், எவ்விதம், ஒருவரையொருவர் மதிப்புடன் நடத்தமுடியும் என்பதையும், இந்த நற்செய்திப் பதிவுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன.
மத்தேயு நற்செய்தியில், இயேசு கூறிய இந்த பதிலோடு, இந்நிகழ்வு நிறைவடைகிறது. மாற்கு நற்செய்தியில், இயேசு கூறிய பதிலால் மகிழ்வடைந்த மறைநூல் அறிஞர், இயேசுவைப் புகழ்கிறார். இயேசுவும் அந்த அறிஞரின் அறிவுத்திறனைக் கண்டு, "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" (மாற்கு 12:34) என்று அவரைப் புகழ்வதாக இந்நிகழ்வு நிறைவடைகிறது. இயேசுவும், மறைநூல் அறிஞரும் எதிர் அணிகளைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒருவரையொருவர் புகழ்வது, நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித்தருகிறது. ஒருவர் தன்னைப்பற்றி உண்மையான மதிப்பு கொண்டிருந்தால், அடுத்தவரை, அவர், தன் எதிரியே ஆனாலும், அவரையும் மதிக்கும் பண்பு கொண்டிருப்பார் என்பது, மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12:28-34) கூறப்பட்டுள்ள இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பாடம்.
லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மாறுபட்ட ஒரு சூழலை நாம் காண்கிறோம். திருச்சட்ட அறிஞரின் குதர்க்கமான கேள்விகள் தொடர்வதை நாம் காண்கிறோம். இறைவனையும், அடுத்தவரையும், அன்பு செய்வதே, அனைத்து சட்டங்களின் அடிப்படை என்ற இந்த அழகான பதிலை, தானே கூறாமல், கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரின் வாயிலிருந்தே இயேசு வரவழைக்கிறார் என்று லூக்கா நற்செய்தி சொல்கிறது. அவர் தந்த நல்ல பதிலைப் புகழ்ந்த இயேசு, அவரிடம், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” (லூக்கா 10: 28) என்று சொல்லி, அவரை வழியனுப்புகிறார். ஆனால், திருச்சட்ட அறிஞர் விடுவதாக இல்லை. தனது திறமையை, இயேசுவிடமும், சூழ இருந்தவர்களிடமும் காட்டும் நோக்கத்துடன், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியைத் தொடுக்கிறார். அந்தக் கேள்விக்கும், இயேசு, பொறுமையாய் பதில்தருகிறார். இயேசு கூறிய இந்தப் பதில், காலத்தால் அழியாத புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையாகத் தரப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இவ்வுவமையின் துவக்கத்திலும், முடிவிலும், இயேசு, அந்த அறிஞரிடம் கூறிய ஓர் அறிவுரை, நமக்கு ஒரு வாழ்வுப்பாடமாக அமைகிறது. நல்ல சமாரியர் உவமைக்கு முன்னர், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” (லூக்கா 10: 28) என்றும், உவமைக்குப் பின், “நீரும் போய் அப்படியே செய்யும்” (லூக்கா 10: 37) என்றும் இயேசு சொல்கிறார்.
திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப்பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்துகொள்வது முக்கியமல்ல; அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு, ஆகியவற்றிற்கு, செயல்வடிவம் தருவதே முக்கியம் என்பதை, இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.
இறை அன்பும், அயலவர் அன்பும் செயல்வடிவம் பெறவேண்டும், வாழ்வாக மாறவேண்டும் என்பது இயேசு சொல்லித்தந்த பாடம். இந்த எளிய பாடங்களுக்குப் பதில், இன்றைய விளம்பர, வியாபார உலகம், அன்பை பல்வேறு வழிகளில் விற்பனை செய்து வருகின்றன. பல்வேறு கருவிகள் வழியே நாம் அன்பை வெளிப்படுத்தலாம் என்ற மாய, மெய் நிகர் உலகை உருவாக்கியுள்ளன. உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் அனைவருமே அன்னியராகத் தெரிகின்றனர்.
அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.
விடுதலைப் பயணம் 22:21-22, 25-27
ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். ... உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.
அயலவருக்கு நாம் ஆற்றவேண்டிய அடிப்படை பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். தேவையான அருளை வேண்டுவோம்.
தலைசிறந்த கட்டளை!
அது ஒரு மழலையர் பள்ளி. அப்பள்ளியில் ஒர் ஆசிரியை ஒருசில வார்த்தைகளைக் கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு, அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர் களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பூனை, நாய், சிங்கம், கரடி போன்ற வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த அவர், அந்த விலங்கு கள் எப்படிச் சப்தமிடும் என்றும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டு வந்தார். இதனால் அந்த வகுப்பறையே கலகலப்பாக இருந்தது.
ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இருந்த “அன்பு' என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியை, வகுப்பில் இருந்த மேரி என்ற சிறுமியை எழுப்பி, “மேரி! இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் ?” என்றார். அவள் எதுவும் பேசாமல், நேராக ஆசிரியையை நோக்கி வந்து, அவரது கன்னத்தில் முத்தமிட்டு, “அன்பு என்ற வார்த்தையை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும்; எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் : கூட, அன்பு என்ற வார்த்தையை இப்படித் ' தான் உச்சரிப்பார்கள்” என்றாள்.
அப்போது ஆசிரியை அவளிடம், “அன்பு என்ற வார்த்தையை வேறு எப்படி உச்சரிக்கலாம் ' என்றார். உடனே மேரி, ஆசிரியரின் மேசையில் கலைந்துபோய்க் கிடந்த புத்தகங் களையும் நோட்டுகளையும் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, “இப்படி ஒரு வருக்கு உதவி செய்வதனம் மூலமாக அன்பு என்ற வார்த்தையை உச்சரிக் கலாம்” என்றாள். இதைக் கேட்டதும், ஆசிரியை மட்டுமல்லாது, மாணவர் களும்கூட அவளை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அன்பு என்பது வெறும் சொல் மட்டுமல்ல, அது செயல். அன்பிற்குச் செயல்வடிவம் கொடுக்கின்றபோது, அது முழுமை பெறுகின்றது. பொதுக் காலத்தின் முப்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறை வார்த்தை, கடவுளை அன்பு செய்வதும், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் தான் தலைசிறந்த கட்டளை என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
தெளிவு பெறவா? சோதிக்கவா?
“பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே ' என்ற பழைய பாடல் வரியை நாம் கேட்டிருக் கலாம். கேள்விகள் கேட்ட தனாலேயே இங்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கேள்விகள் கேட்க வேண்டும். அது மிகவும் நல்லது. ஏனெனில், கேள்விகள் மூலமாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ள முடியும். ' அதே நேரத்தில் எல்லாக் கேள்விகளும் நல்ல நோக்கத்திற்காகவும், ஒன்றைத் தெரிந்து கொள்வதற்காகவும் கேட்கப் படுவதில்லை. ஒருசிலர் அடுத்தவரைப் பேச்சில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே கேள்விகள் கேட்ப துண்டு. இன்றைய நற்செய்தியில் திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட் கின்ற கேள்வியும் அந்த வகையைச் சார்ந்ததே.
பரிசேயர்கள் நடுவில் இருந் திருச்சட்ட அறிஞருக்குத் திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது என்று நன்றாகவே தெரிந்திருக்கும். எனினும் அவர் இயேசுவிடம் இக் கேள்வியைக் கேட்கின்றார். எனில், அது இயேசுவைச் சோதிக்கவே ! முன்னதாக, இயேசு எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித் திருந்தார். இயேசுவின் இத்தீரமிக்க செயல், அதிகாரத்தில் இருந்தவர் களை மிகவும் அசைத்துப் பார்த்தது. இதனாலேயே ஒருவர் பின் ஒருவராக வந்து இயேசுவிடம் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு, அவரைப் பேச்சில் சிக்க வைக்கத் துடித்தார்கள். அவர் களுடைய முயற்சிகளெல்லாம் வீண் போகவே, இறுதியில் அவர்கள் திருச் சட்ட அறிஞரை இயேசுவிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.
தன்னைச் சோதிக்க வந்த திருச்சட்ட அறிஞரிடம் இசைச்சட்ட நூல் 6:5, லேவியர் 19:18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதி களையும் இணைத்து, கடவுளை அன்பு செய்தல், அடுத்திருப்பவரை அன்பு செய்தல் ஆகிய இவ்விரு கட்டளைகள் திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறை வாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன என்று தெளிவாகப் பதிலளிக்கின்றார். அன்னியரிலும் ஆண்டவர் இருக்கின்றார்
இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் வந்த. திருச்சட்ட அறிஞருக்குப் பதிலளிக்கும்போது, “உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத் திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை” என்று சொல்லி யிருப்பார். எனில், கடவுளை முழுமை யாய் அன்பு செய்கின்றவர் தனக்கு அடுத்திருப்பவரையும் முழுமை யாய் அன்பு செய்யவேண்டும். ஒரு வேளை ஒருவர் தனக்கு அடுத்திருப் பவரை அன்பு செய்யாமல், கடவுளை மட்டும் அன்பு செய்துகொண்டிருந்தால் அவர் கடவுளை முழுமையாய் அன்பு செய்ய வில்லை என்பதே பொருள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் அன்னியருக்கோ, விதவைக் கோ, அனாதைக்கோ எந்தவொரு தீங்கும் இழைக்கக்கூடாது என்கிறது. இஸ்ரயேல் மக்கள் அன்னியருக்கு ஏன் தீங்கு இழைக்கக்கூடாது எனில் அவர்களும் ஒரு காலத்தில் அன்னியர் களாய் இருந்தார்கள் என்பதால். அதைவிடவும் அவர்கள் அன்னியர் களுக்குத் தீங்கிழைத்தால், ஆண்டவர் அந்த அன்னியர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, தீங்கிழைத்தோரை அழிக்கக்கூடும்.
ஆகையால், ஒவ்வொருவரும் மற்றவரைத் தனக்கு அடுத்திருப்ப வராகப் பார்த்து அன்பு செய்ய வேண்டும். அவ்வாறு அன்பு செய் கின்றவர் கடவுளையே அன்பு செய் கின்றவராக இருக்கின்றார்.
முன்மாதிரியாய் வாழ்ந்த தெசலோனிக்கர்
பவுல் தனது இரண்டாவது திருத்தூதுப் பயணத்தில் துறைமுக நகரமான தெசலோனிக்காவில் நற் செய்தியை அறிவித்தார்.. அவர் அறி வித்த நற்செய்தியைக் கேட்டு, தாங்கள் செய்து வந்த சிலைவழிபாட்டினை விட்டுவிட்டு, உண்மைக் கடவுளை வழிபடத் தொடங்கினார்கள் தெச லோனிக்கர்கள். இதனால் அவர் களைப் பற்றிய செய்தி மாசிதோனியா விற்கும் அக்காயாவிற்கும் மட்டுமல்லாது, பிற பகுதிகளுக்கும் பரவியது. இதை நினைத்துப் பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றார்.
ஒருவர் கடவுளை முழுமையாய் அன்பு செய்கின்றார் எனில், அவர் கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காமல், அவரை அன்பு செய் கின்றோம் என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. தெச லோனிக்காவில் இருந்த வர்கள் கடவுளை உண்மையாய் அன்பு செய் வதைத் தங்கள் நம்பிக்கையில், செயல்களில் வெளிப்படுத்தி, எல்லாருக்கும் எடுத்துக் காட்டாய் விளங்கினார்கள். நாமும் கூட கடவுளை, அடுத்திருப்பவரை உண்மையாய் அன்பு செய்கின்றோம் என்பதை நமது செயல்களில் வெளிப்படுத்தி, நம்பிக் கைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கு வோம், அப்போது நம்மால் கடவுளை நம் நடுவில் குடியிருக்கச் செய்ய முடியும்.
சிந்தனைக்கு
“தனக்கு அடுத்திருப்பவருக்கு நண்பராக இருக்க முடியாத ஒருவரால், இயேசுவுக்கும் நண்பராக இருக்க முடியாது” என்பார் ஆர். ஹச். பென்சன் என்ற அறிஞர். எனவே, நாம் நமக்கு அடுத்திருப்பவருக்குள்ளும் ஆண்டவர் இருக்கின்றார் என்பதை அறிந்து, அவர்களை அன்பு செய்வதன் மூல மாகக் கடவுளை அன்பு செய்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
"ஆதலால் இறைவனோடு காதல் கொள்வீர்"
இறைவன் மனிதன் உலகம் என்று உற்றுப் பார்க்கும்போது, இறைவனையும் இயற்கையையும் சார்ந்து வாழும் மனிதன் யாரோடு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இணைந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் உள்ளத்தில் உலா வருகின்றன. இந்த எண்ணங்களுக்கு முடிவாகப் பதில் தரும் வண்ணம் இன்றைய வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் தன்னை மனிதனாக அடையாளப்படுத்திக் கொள்ள எதை எல்லா நேரமும் செய்ய வேண்டும் என்பதை நற்செய்தி இன்று தெள்ளத் தெளிவாக வரிசைப்படுத்துகின்றது.
"போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" என்ற பரிசேயரின் கேள்விக்கு இயேசு, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. என்றார் (மத்தேயு நற்செய்தி 22:37-38) அதாவது நமது இதயம், உள்ளம், மனம் ஆகிய மூன்றும் முழுமையிலும் முழுமையாக இறைவனோடு, இறைவனுக்குள் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இறை கட்டளை என்றார்.
இது நடைமுறையில் சாத்தியமா? மனித வாழ்க்கையில் அவன் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகள் என்று வரிசைப்படும்போது மேற்கூறிய நிலையில் இறைவனில் ஐக்கியமாக முடியுமா?.-
முடியும்…. மரியாளின் மைந்தனைப் போல்.
"மனிதனே இறைவனாக. இறைவனே மனிதனாக "- பயணிக்க நேர்ந்தால் இது சாத்தியமே. ஒரு மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் அன்பு, பாசம், நேசம், உரிமை, உறவு இப்படி பல பரிமாணங்களில் தன்னை பிறருள் இணைக்க முயற்சி செய்கின்றான். அமைதியாகக் கவனித்தால் இந்தப் பரிமாணங்களில் பயணிக்கும்போது அவனுள் ஒரு புரிதல், எதிர்பார்ப்பு, நிபந்தனைகள் என ஏதோ ஒரு சுயநல நோக்கு நின்று கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது… சுயநலம் இல்லாமல் பொதுநலம் இல்லை ஆனால் பல நேரங்களில் இந்தச் சுயநலமே பொதுநலத்தை அழித்து விடுவதையும் நாம் மறுக்க முடியாது. சுயநலமற்ற நிலையில் தன்னையே மறுத்து ஒருவன் இறைவனை தேடிச் செல்லும்போது இயேசு கூறும் தலையாய கட்டளை தனிச்சிறப்போடு நமக்குள் பயணிக்கும் என்பதும் உண்மை.
ஆதலால் இறைவனோடு
காதல் கொள்வீர்
இந்தக் காதல் என்ற ஒரு நிலை மட்டுமே எல்லையற்ற எதிர்மறை நிகழ்வுகளை எளிதாக நேர்மறைகளாக மாற்றி ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு வாழ்வு நிலையைத் தரக்கூடியதாகும். முழுமையாக - ஏற்றுக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கவும் வியப்படையாத ஒரு நிலை….. சேர்க்கை ஆனாலும் இழப்பானாலும் ; மகிழ்ச்சியானாலும் - துக்கமானாலும் - முழுமையாக இணைந்து காலமெல்லாம் காத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை : அர்ப்பணம் என்ன என்பதை வலிமையாக வாழ்க்கைக்குள் கொண்டு வரும் ஒரு சக்தி…… இந்தக் காதல் என்ற மாயைக்குள் முழுமையாக உயிரோடு செயல்படுகின்றது. இந்த நிலையைத்தான் விவலியத்தில் சாலமோனின் உன்னத சங்கீதங்கள் உயிருள்ள கவிதைகளாக, ஓவியமாகப் படைக்கின்றன. குறிப்பாக ஒருமையில் உறவாடும் உன்னத நிலை ஐக்கியத்தின் உச்சத்தை வெளிச்சம் இடுகின்றன. உறவுகளின் நடுவில் இந்த நிலையை அடையும்போது இருவர் இடையில் ….
1) ஒற்றுமையுண்டு விரிசல் இல்லை...
2) மரியாதை உண்டு பெருமை இல்லை...
3) காத்திருப்பு உண்டு கண்மூடும் நிலை இல்லை...
4) கண்டிப்பு உண்டு தண்டனை இல்லை…
5) அர்ப்பணிப்பு உண்டு ஆளுமை இல்லை…
6) நம்பிக்கை உண்டு ஏமாற்றம் இல்லை...
இப்படி கூறிக் கொண்டே போகலாம். இந்த உன்னத பரவச நிலைக்கு இறைவன் என்றும் உறுதியாக உண்மையாக நிற்கின்றார் என்பதற்கு கல்வாரியே கண்கொள்ள காட்சி, அழியா சாட்சி.
தொடக்கத்தில் கடவுளோடு, கடவுளாகவும் இருந்த (யோவான் நற்செய்தி 1:1) அதே வார்த்தையின் கைகள் ; இன்றும் நம் உறவைத் தேடி உயர்ந்து நிற்கின்றன …. இணைந்து இசை(ஓசை) எழுப்ப இகமதில் வாழும் இம்மாந்தர்களின் கைகள் உயரத் தயாரா…?. மறக்க வேண்டாம் ஓசை உருவாக இரு கைகள் கண்டிப்பாகத் தேவை. ஆம், இணைவதில் இழப்பு இல்லை, இசைக்க வாய்ப்பு உண்டு… கூடவே மீட்பும் உண்டு… உயர்த்துவோம் நமது கரங்களை.
அடுத்து இரண்டாம் கட்டளை "உன்னைப் போல் உன் அயலானையும் நேசி." இதைக் கேட்கும்போது ஏன் நேசிக்க வேண்டும்?.. என்ற கேள்வியும் தொடர்கின்றது. பாருங்கள்… தொடக்கநூல் 2:18ல் - ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்… என்கிறது. அப்படி நமக்காக, நமது தனிமையை தகர்க்க - துணையாக உருவாக்கப்பட்ட அந்த மனிதனுக்கு நாம் துன்பத்தை - துக்கத்தைத் தராமல் இருப்பதே மிகச்சிறந்த செயல்பாடாக, அயலானை நேசிப்பதின் அடையாளமாக இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் - விடுதலைப் பயணம் 22: 21-27 எடுத்துக் கூறுகின்றது. எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியை மட்டும் மனித குணம் தேடுகின்றது. ஒருமையில் அல்ல, பன்மையில் - பகிர்வதில் மட்டுமே மகிழ்ச்சி உயிர் பெறுகிறது….. என்ற நினைவோடு நம்-துணையோடு பகிர்வோம்- மகிழ்வோம் தூயவனின் அருள் பெறுவோம்.
தெசலோனிக்கர்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை - இணையற்ற இந்த இரண்டு கட்டளைகளை ஏற்றுக்கொண்டு. திருத்தொண்டர்களைப் போலவும், ஆண்டவரைப் போலவும் வாழ்ந்ததால்; எல்லா இடங்களிலும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானார்கள் - என்று இன்றைய இரண்டாம் வாசகம் 1 தெசலோனிக்கர் 1 5c-10ல்- மறந்து போன நமக்கு நினைவு படுத்துகின்றது. நமது வாழ்க்கையும் முன் மாதிரியான வாழ்க்கையாக அமைந்திட வாழ்த்துகின்றது - அழைப்பு விடுக்கின்றது.
நிறைவாக
"கடவுளைக் காதலிப்போம்…" எனக்குத் தரப்பட்ட என் தனிமை போக்கும் அயலானை - அன்பினால் அரவணைப்போம்.
காதல் ஒன்றுக்கு மட்டுமே துன்பம் துயரம் துக்கம் என்ற அனைத்து எதிர்மறைகளையும் நேர்மறையாக மகிழ்ச்சி இன்பம் அன்பு என்று ஏற்றுக்கொள்ளும் வலிமையும் பக்குவமும் இருப்பதால் மகிழ்ச்சியாக முழு மனதோடு முந்தமுந்த இறைவனைக் காதலிப்போம். இது நடந்தால் என் துணைவனாம் - அயலானும் என்னோடு என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டவனாக இறைவனுக்குள் இருப்பான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இன்றைய நவநாகரீக உலகில் ஊடகங்களின் கொண்டாட்டங்களின் நடுவில் காதலைப் பற்றி எடுத்துக் கூற அவசியம் இல்லை, அதேவேளை யாரை? ஏன்? எப்படி? காதலிக்க வேண்டும் என்பதில் உள்ள களைகளை அடையாளப் படுத்திக் களைய வேண்டியதும் - அவசியத் தேவை என்பதில் ஐயமில்லை.
கடவுளைக் காதலிப்பதா? என்று கேட்க வேண்டாம் இயேசு, கெத்ஸமனேக்குள்ளும் இறைவனைக் காதலித்தார்….. நேசித்தார்……. கீழ்ப்படிந்தார்…… காலங்கள் அவருடைய தாயின. இயேசுக் கிறிஸ்தின்றி உலக சரித்திரம் இல்லை என்ற நிலைப்பாடு இன்றும் தொடர்கின்றது. தயக்கம் ஏன்?.. வாய்ப்பு உண்டு;
வாருங்கள் காலத்தை நமதாக்குவோம்.
காலத்தைக் கடந்தவன் நம்மோடு.
அன்பாய் இருப்போமா!
அன்பு என்ற இந்த ஒரு பண்பை தான் எல்லா சமயங்களும் போதிக்கின்றன. அதே வேளையில் அந்த ஒன்றை தான் நாம் எல்லாருமே கடைபிடிக்கத் தவறுகிறோம். அதற்காகவே அன்பைபப் பற்றி நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. ஆம் இன்று முதன்மைக் கட்டளையான அன்பைப் பற்றி நாம் மீண்டும் சிந்திக்க இருக்கிறோம்.
இயேசுவை சோதிக்க விரும்பியவர்கள் அவரிடம் முதன்மை கட்டளையைப்பற்றி கேட்க அவரும் கடவுளை முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கூறினார். பின் அதற்கு இணையான கட்டளை ஒன்றையும் கூறுகிறார். அதாவது பிறரை அன்பு செய்வது. ஆக இறையன்பையும் பிறரன்பையும் நம்மால் பிரிக்க இயலாது. பிரித்துப்பார்த்தால் பொருளும் இருக்காது.
இக்கட்டளையை நாம் சிந்திக்கும் போது இரு கருத்துக்களை சிந்திக்க வேண்டும். முதலாவதாக " முதன்மைக் கட்டளைக்கு இணையான கட்டளை" அப்படியென்றால் கடவுளன்புக்கு இணையானது பிறரன்பு. இரண்டுமே சமம். இரண்டில் எதுவும் உயர்ந்ததுமில்லை. தாழ்ந்ததுமில்லை. கடவுளை அன்பு செய்யாதவன் பிறரை அன்பு செய்ய இயலாது.ஆம் கடவுள் மேல் பக்தியில்லாதவன், அவர் தரும் உள்ளுணர்வுகளைப் புரியாதவன் எவ்வாறு பிறரை அன்பு செய்ய இயலும்?
அதுபோல தன்னோடு வாழும் பிறரை அன்பு செய்யாதவன் கண்காணாத கடவுளை நிச்சயம் அன்பு செய்ய இயலாது. பசியாய் இருக்கும் அயலாருக்கு ஒரு வேளை உணவு கொடுக்க மனமில்லாதவன் கோடி கோடியாய் காணிக்கை கொடுப்பதால் அது கடவுள் மேல் கொண்டிருக்கும் அன்பாகிவிடுமா? இல்லை. அது வெறும் வீண் பகட்டு, வெளிவேடமே.
இரண்டாவதாக நாம் சிந்திக்கவிருப்பது "தன்னை நேசிப்பது போல பிறரை அன்பு செய்ய வேண்டும் " என்பது. தன்னை உண்மையாக நேசிக்கின்ற எவரும் தன் உடல், மன,ஆன்ம நலன்களைக் குறித்து கவலைகொள்வான். அக்கறை எடுப்பான். தன்னை நேசிப்பவரிடத்தில் சுயமரியாதை, தன்னம்பிக்கை, நன்றியுணர்வு, தன்குற்றமுணர்ந்து மனம்மாறுகிற பண்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் பிறருக்கும் மரியாதை கொடுப்பர். பிறரை மதிப்பர். பிறர் குறித்து கவலையும் அக்கறையும் கொள்வர்.
தன்னுடைய வலியின் வீரியத்தை உணர்ந்த ஒருவர் அதே வலியை பிறருக்கு கொடுக்க எண்ணமாட்டார். பசியால் வாடி வதங்கிய ஒருவரால் பிறருடைய பசியை எவ்வாறு உணராமல் இருக்க இயலும்? இதைத்தான் தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும் என இயேசு சொல்கிறார்.
அன்பு என்பதை எல்லாராலும் உணர முடியும். ஆறறிவு இல்லாத விலங்குகூட தன்னை அன்போடு வளர்த்த எஜமானரின் பிரிவைத் தாங்க இயலாமல் அவர் கல்லறையிலேயே குழியை அமைத்து படுத்துக்கிடந்த காணொளியை சமீபத்தில் கண்டேன்.அன்பு உயிர்களை வளர்க்கும் அருமருந்து. உறவுகளை செம்மையாக்கும் பாலம். அந்த அன்பை நமதாக்குவோம். கடவுளை பிறரில் கண்டு, நம்மில் கண்டு, இயற்கையில் கண்டு வாழ்வோம். அன்பை செயல்களில் காட்டி அன்பாய் இருப்போம். இது நமக்கு கடவுள் கொடுக்கும் அழைப்பல்ல மாறாக கட்டளை.
இறைவேண்டல்
அன்பே இறைவா! உம்மைப் போல நாங்களும் அன்பாய் இருக்க வரமருளும். ஆமென்.
