மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 13-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1அரசர்கள் 19: 16b, 19-21 |கலாத்தியர் 5: 1, 13-18 |லூக்கா 9: 51-62

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஓர் அரசன் தன் போர் வீரர்களோடு எதிரி நாட்டுக்குப் போர் தொடுக்கச் சென்றான். இடையில் ஒரு பாலம்தான் இரண்டு நாட்டையும் பிரித்துக் கொண்டிருந்தது. கடும் சண்டை நடந்து கொண்டிருந்தபோது, போர் வீரர்கள் பயந்து எதிரிகளிடமிருந்து தப்பி பாலத்தின் வழியாக தங்கள் நாட்டுக்கு ஓடிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் போர் நடந்தது. மீண்டும் அதே பாலத்தின் வழியாக ஓடிவிட்டனர். இறுதியாக அந்த அரசன் மீண்டும் தனது போர் வீரர்களை எதிரி நாட்டுக்கு அழைத்துச் சென்றான். பாலம் இருக்கும் வரை எனது வீரர்கள் கோழைகளாகத் தான் இருப்பார்கள். போர் தொடங்கியபின், பின்நோக்கும் எண்ணம் வீரர்களுக்கு வரக்கூடாது என்று நினைத்து யுத்தம் நடந்துக் கொண்டிருந்தபோதே அரசன் அந்த பாலத்தை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினான். போர் வீரர்களிடம், நாம் தோற்றுப்போனால் நாடு திரும்ப முடியாது. ஆகவே முன் வைத்த காலைப் பின் வைக்காது போரிட்டு வெற்றி பெற்று, வெற்றிக்கொடியை இங்கே நாட்டிவிட்டு, புதிய பாலம் கட்டிய பிறகுதான் நமது நாட்டுக்கு போக முடியும் என்றான். யுத்தம் மும்முரமாக நடந்தது. பாலம் உடைக்கப்பட்டுவிட்டதால் இனி திரும்ப முடியாது என்று அறிந்த வீரர்கள் தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி யுத்தம் செய்து வெற்றியும் கண்டனர்.

கலப்பையில் கை வைத்தப் பின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசுக்குத் தகுதியற்றவன் (லூக். 9:62).

இன்றைய முதல் வாசகத்தில் எலியாவின் வழியாக எலிசேயு அழைக்கப்படுகிறார். அனைத்தையும் விட்டு விட்டு எலியாசின் சீடரானார். இறைவன் அவரிடம் எதிர்பார்த்தது முழுமையான ஈடுபாடும் சம்மதமும் ஆகும். இதை எலிசேயுவிடம் இறைவன் கண்டுகொண்டார். அதனால் மக்களை வழி நடத்தும் பணியை மேற்கொண்டார் (1 அர. 19:20). இறைவன் விரும்புவது அன்பு நிறைமனமே. அன்பே உருவான ஆண்டவரின் சாயலில் படைக்கப்பட்ட நாம் பல நேரங்களில் அன்பில்லாமலே வாழ்கிறோம். இதைத்தான் புனித பவுல் உள்ளத்தில் இருக்கும் அன்பைச் செயல்களில் வெளிப்படுத்துங்கள். நீங்கள் அன்பின் அடிமைகளாக இருங்கள் என்கிறார் (இரண்டாம் வாசகம்)

இன்றைய நற்செய்திவழி பார்க்கும்போது இயேசுவின் எதிர் நீச்சல் ஒரு சமுதாய மாற்றத்தின் உயிர் மூச்சு எனலாம். இயேசு வழக்கத்துக்கு மாறாக சமாரியா வழியாக எருசலேம் சென்று வரலாற்றுக் கரையை அடைகின்றார். இயேசுவை எதிரியாகப் பார்த்த சமாரிய மக்களை நண்பர்களாக்கினார். இறையரசு என்னும் கலப்பையில் கை வைத்தப் பின் சாதி, மத, இனம் எனத் திரும்பி பார்க்காதே என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இது அமைகிறது. நரிகளுக்கு வலைகள் உண்டு. பறவைகளுக்கு கூடுகள் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை என்று கூறித் தான் தலைசாய்ப்பது சிலுவையில்தான் என்ற எண்ணத்தோடு எருசலேம் நோக்கிச் செல்கிறார். சீடத்துவப்பணி என்பது பளபளக்கும் பட்டுத் துணியில் பாவாடை தைப்பது அல்ல. மாறாக பாறையில் நீர் சுரப்பது போன்று கடினமானது. இயேசுவின் இறையரசு மதிப்பீடுகளை விதைப்பவன் அவரின் பாதையில் பயணப்படுபவன் ஆவான்.

 • இறைவனின் அழைப்பை ஏற்று, செயல்படுவது என்பது, அவரின் அனைத்து இன்ப துன்ப நிலைகளையும் அனுபவிப்பதாகும். இதைத்தான் இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது.
 • முதலாமவன் நீ எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின் செல்வேன் (லூக். 9:57) என்று சொன்னான். செயலில் காட்ட மறுத்துவிட்டான். திறந்த மனம் அவனிடம் இல்லை எனலாம்.
 • இரண்டாமவன் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும் (லூக். 9:59) என்று குடும்பத்தை முதன்மைப் படுத்துகிறான். அழைப்புக்கு அவன் முழு சம்மதம் கொடுக்க வில்லை. என்னிடம் வருகிறவன் தன் தாய் தந்தையை, ஏன்? தன் உயிரையுமே வெறுக்காவிடில் என் சீடனாயிருக்க முடியாது என்பது இயேசுவின் நிபந்தனை. ஆனால் அதை இவனால் மேற்கொள்ள முடியவில்லை.
 • மூன்றாமவன் கலப்பையில் கை வைத்தப் பின் திரும்பிப் பார்ப்பவன். அவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன் (லூக். 9:62). இயேசுவின் அழைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

இவ்வாறு இந்த மூவரையும் அழைத்த இயேசு நம்மையும் அழைக்கின்றார். ஆதாயம் தேடும் மனிதர்களை இயேசு சீடர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. தனது சொந்தம், செல்வம் இவைகளை விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்களையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளத்தில் நிறை அன்பும் இறையரசின் மதிப்பீடுகளில் தெளிந்த பார்வையும் கொண்ட சீடர்களையே அழைக்கின்றார்.

இன்று நாம் காணும் சீடத்துவம் எத்தகைய மதிப்பீடுகளை முதன்மைப்படுத்துகிறது என்று சிந்திக்க வேண்டும். விடுதலை இறைவனே நம் கடவுள், ஏழைகளின் நண்பனே இயேசு. துன்பப்படும் மக்களே நமது குடும்பம், சமத்துவ சமூகமே நமது இலக்கு, உண்மையான விடுதலை வாழ்வே நமது இலட்சியம். மதிப்பீடுகளை செயலாக்கம் பெறச் செய்வதே நமது அணுகு முறையாக அமைய வேண்டும். மக்களை ஆன்மீக, சமய, சமுதாய, பொருளாதார விடுதலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால் சீடத்துவ வாழ்வில் அர்த்தமேதுமில்லை எனலாம்.

இயேசுவிற்காக வாழப்போகிறேன் என்று
முடிவெடுத்துவிட்டால் மனித நேயத்துக்காக
வாழப்போகிறேன் என்பதுதானே பொருள்.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசுவைப் பின்செல்ல நமக்கு வேண்டிய தகுதி என்ன?

இன்றைய நற்செய்தி இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றது.

இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தப் பிறகு, வேறு எந்த உறவுக்கும் பொருளுக்கும் நமது வாழ்க்கையில் இடமிருக்கக்கூடாது என்பதை இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாகத் தெளிவாக்குகின்றார்.

இளைஞன் ஒருவனுக்குத் துறவியாக ஆசை. அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்றான். வயல் வரப்பைத் தலையணையாக வைத்துக்கொண்டு படுத்திருந்தான். குளத்திலே தண்ணீர் எடுக்கச் சென்ற கிராமத்துப் பெண்கள் அவனைப் பார்த்துவிட்டு, துறவியாக விரும்புகின்ற இவனுக்கு இருக்கும் ஆசையைப் பாருங்கள்! இவனுக்கு தலையணை சுகம் கேட்கின்றது! என்றார்கள்.

அந்தப் பெண்கள் கூறியதைக் கேட்ட அந்த இளைஞன், வரப்பிலிருந்த தன் தலையை எடுத்துவிட்டு, தனது வலது கை மீது தன் தலையை வைத்துப் படுத்திருந்தான். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பிய பெண்கள், ஊரில் இருப்பவர்கள் இவனைப் பற்றி என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள ஆசைப்படும் இவனால் எப்படித் துறவியாக முடியும்? என்று கேட்டபடி நடந்து சென்றார்கள்.

அந்த இளைஞன் உண்மைத் துறவறத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான், உணர்ந்து கொண்டான். தன் உணர்வுகள், எண்ணங்கள், சொற்கள், செயல்கள், பொருள்கள், சொந்தங்கள், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து ஒப்பற்ற துறவியானான்.

துறவிகளுக்கெல்லாம் துறவியாக விளங்கும் இயேசு தனக்குத் தலை சாய்க்கக்கூட இடமில்லை என்றார். முற்றும் துறந்த வாழ்க்கை மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை இன்றைய முதல் வாசகத்தில் எலிசா சுட்டிக்காட்டுகின்றார். முற்றும் துறந்த வாழ்கை அவரின் பின்செல்ல விரும்புகின்றவரிடமிருந்து ஏன் இயேசு எதிர்பார்கின்றார் என்பதற்குக் காரணம் உண்டு.

நம்மிடமுள்ள அனைத்தையும் இழக்க நாம் தயாராக இருக்கும்போதுதான் திருச்சட்டம் முழுவதற்கும் நிறைவாக விளங்குகின்ற அன்புக் கட்டளையை நம்மால் பின்பற்ற முடியும் (இரண்டாம் வாசகம்) ; அன்பே உருவான இயேசுவுக்குச் சான்று பகர முடியும்.

சேர்த்துவைக்க விரும்புகின்றவர்ளால் எப்படி மற்றவர்ருக்குக் கொடுக்க முடியம்? சுயநலவாதிகளால் எப்படி பிறர்நலவாதிகளாக வாழமுடியும்? ஊனியல்பின் இச்சையின்படி நடக்கின்றவர்களால் எப்படி தூய ஆவியாரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?

மேலும் அறிவோம் :

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் :
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேர்வில் 'பெயில்' ஆகி விட்டான், இருந்தாலும் அவன் அதற்காக வருத்தப்படாமல் விழுந்து விழுந்து சிரித்தான். ஏனெனில் அவன் பேப்பரைப் பார்த்து 10 பேர் 'காப்பி" அடித்தனர். அவர்களின் கதியும் அதே கதிதான். அதை நினைத்து அவன் சிரித்தான்.

வாழ்க்கையில் நாம் பலரைக் காப்பி அடிக்கின்றோம்; திரைப்பட நடிகர் நடிகைகளை, கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை, பணக்காரர்களை. அரசியல்வாதிகளைப் பொதுவாக மக்கள் காப்பி அடிக்கின்றனர். ஆனால் இவர்களுடைய வாழ்வு இறுதியில் சூன்யத்தில் முடிவடைகிறது. நேற்றுவரை இவர்கள் ஹீரோ, இன்று யாரோ? என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் 'காப்பி' அடிக்க வேண்டியவர். அதாவது பின்பற்ற வேண்டியவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிறிஸ்து ஒருவரே (எபி 13:8). கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டுமென்றால் நாம் அவருடைய சீடராக வேண்டும். இன்று கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்; ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள்தான் எவருமில்லை!

ஒருவர் கிறிஸ்துவின் சீடராக மாற வேண்டுமென்றால் அவர் தமக்குள்ள எல்லாவற்றையும் துறக்க வேண்டும் - “உங்களுள் தம் உடைமையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராக இருக்க முடியாது" (லூக் 14:33). இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து அவருடைய சீடர்கள் முழுமையாகத் துறக்க வேண்டும் என்று கேட்கிறார். கிறிஸ்து பணம், பதவி, பாதுகாப்பு. சொந்தம் பந்தம் எல்லாவற்றையும் இரண்டாவது நிலைக்குத் தள்ளிவிடுகிறார். அவர் ஒருவரே தனிமுதல் நிலை; மற்றவை அனைத்தும் சார்புநிலை. கிறிஸ்துவோடு ஒப்பிடும்போது மற்றனைத்துமே வெறும் குப்பையாக மாறிவிடுகிறது (பிலி 3:8).

இன்றைய நற்செய்தியிலே ஒருவர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார். ஏனெனில் இயேசுவைப் பின்பற்றினால் அவருக்கு எக்குறையும் இருக்காது; எல்லாப் பாதுகாப்பும் கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் இயேசு அவரிடம்: 'நண்பா! நீ என்னைப் பின்பற்றினால் என்னைப் போல் நீயும் தெருவிலே வாழ வேண்டும். நரிகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் இருக்கும் பாதுகாப்புக்கூட எனக்குக் கிடையாது. வெறுங்கையாக என்னைப் பின்பற்றத் தயாரா?" என்று கேட்கின்றார்.

இன்று பலர் துறவற வாழ்வை விரும்புவது தங்களுடைய வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் என்பது கசப்பான உண்மையாகும். இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் இயேசுவைப் போலவே கடவுளிடம் மட்டுமே தங்களது முழுப்பாதுகாப்பை தேட வேண்டும். அவர்களின் வாழ்வையும் நிர்ணயிப்பது: "ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து" (திப 16:15); "ஆண்டவர்தாமே என் கற்பாறை; என் கோட்டை: என் கேடயம்: என் புகலிடம்"(திப 18:1-2). கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் விட்டுவிட்டவர்கள் அனைத்தையும். பெற்றுக்கொள்வர். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும், நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்" (2 கொரி 6:10).

முற்றும் துறந்தவரே துறவி. மற்றவரெல்லாம் போலித் துறவிகள். அவர்கள் ஆசை வலையில் சிக்கி அவதிப்படுவார்கள் என்று இனம் காட்டுகின்றார் பொய்யா மொழிப்புலவர்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர் (குறள் 348)

மற்றொருவர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார். ஆனால் அவர் அப்பா இறந்தபின் வருவதற்கு இயேசுவிடம் அனுமதி கேட்கிறார். இயேசு அவருக்கு அனுமதி மறுக்கின்றார். அதற்கு அவர் கூறும் காரணம்: “உன் அப்பா இறக்கும்வரை நீ உன் வீட்டில் இருந்தால், அதன் பிறகு என்னைப் பின்பற்றுவது உறுதியில்லை. உன் அப்பாவை அடக்கம் செய்வதற்குத் தேவையான ஆள்கள் உள்ளனர். இரத்த உறவைவிட விசுவாச உறவு மேலானது. நீ உன் அப்பாவுக்குச் செய்யவேண்டிய கடமையைவிட நற்செய்தி அறிவிக்க வேண்டிய கடமை முதலிடம் பெறுகிறது."

மூன்றாவது நபர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார். ஆனால் அதற்குமுன் அவர் தம்முடைய உறவினர்களிடமிருந்த விடைபெற்றுக் கொண்டு வருவதற்கு இயேசுவிடம் அனுமதி கேட்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா தம்முடைய சீடர் எலிசாவுக்கு அத்தகைய அனுமதி அளிக்கிறார். ஆனால் இயேசு அத்தகைய அனுமதியை மறுக்கின்றார். அதற்கு இயேசு கூறும் காரணம்: "அன்பனே ! உனக்கு இன்று இருக்கும் ஆர்வம் நாளைக்கு இருக்காது, உனது நல்லெண்ணத்தை ஒத்திப் போடாதே: திருப்பிப் பார்க்காதே; இறை ஆட்சியில் "Reverse Gicar" என்பது கிடையாது!"

இயேசு கூறுவது மிகவும் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் ஒருவர் அவரைப் பின்பற்ற விரும்பினால், வேரோட்டமாகப் பின்பற்ற வேண்டும்; மேலோட்டமாகப் பின்பற்ற முடியாது. ஆற்றிலே ஒரு காலு சேற்றிலே ஒரு காலு என்னும் இரண்டுங்கெட்டான் நிலையை இயேசு சகிப்பதில்லை. இன்று துறவறத்தார்முன் வைக்கப்படும் சமரசத்துக்கு இடமில்லாத சவால்: "வேரோட்டமான சீடத்துவம்," (Radical Discipleship).

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவது துறவறத்தாருக்கு மட்டுமல்ல, இல்லறத்தாருக்கும் பொருந்தும். இல்லறத்தாருக்கும் துறவு மனநிலை இருக்க வேண்டும். உண்மையில் இன்றைய உலகை மீட்க இல்லறத் துறவிகள் தேவை அவர்களுக்குத் திருத்தூதர் பவுல் கூறுவது: "இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல் இருக்கட்டும்... இவ்வுலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது"(1கொரி 7:29-31). இவ்வுலக இன்பங்களைச் சுவைப்பவர்கள் அவற்றில் மூழ்கிவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

'குமுதம்' என்ற வார இதழைப் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் , "பைபிள் படிப்பதுண்டா?" என்று நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டு. "இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் பாதர்" என்றார். நாளை என்பது இல்லை என்பதற்குச் சமம். எனவே, என்றும் ஒன்றே செய்வோம்; ஒன்றும் நன்றே செய்வோம்; நன்றும் இன்றே செய்வோம்.

"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன், திரும்பிப் பார்க்க மாட்டேன்."

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

முன்னால் சிலுவை பின்னால் உலகம்

இலக்கு இல்லாத பயணம் இமயத்தைத் தொடாது. இழப்பு இல்லாத கிறிஸ்தவ வாழ்வு இயேசுவின் அழைத்தலாக இருக்க முடியாது.

அந்த இளைஞன் லாரன்ஸ் பிரபுக்கள் வம்சத்தில் பிறந்தவன். செல்வக் குடும்பத்தில் வளர்ந்தவன். ஒரு நாள் கப்புச்சின் துறவுசபைத் தலைவர் முன் நிற்கிறான். "என்னையும் உங்கள் சபையில் ஒரு துறவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்ற மன்றாடுகிறான். புன்முறுவல் தவழ இளைஞனை உற்றுப்பார்த்து, "தம்பி, மிக வசதியான குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த உனக்கு இந்தத் துறவு வாழ்வு ஒத்துவருமா? இங்கே மிக எளிய உணவே கிடைக்கும், படுக்கை கூட சொரசொரப்பான பலகையாக இருக்கும். இந்தக் கடுமையான வாழ்வு வாழ உன்னால் இயலாது. எனவே நீ வீட்டுக்குத் திரும்பிவிடு" என்று வருந்திக் கேட்டுக்கொண்டார்.

''தந்தையே, ஒரே ஒரு பாடுபட்ட சுருபத்தை மட்டும் எனது சிறிய அறையில் வைத்துக் கொள்ள அனுமதி கொடுங்கள். எனக்காக இயேசு செய்ததை நான் எண்ணிப் பார்க்கும்போது, நான் அவருக்காகச் செய்யும் எந்த தியாகமும் மிகவும் சிறியதே என்பதை நான் உணர இயலும். எந்தத் துன்பத்தையும் ஏற்க எனக்குத் துணிவு பிறக்கும்” என்று தயங்காமல் பதில் அளித்தான் அந்தப் பணக்கார இளைஞன்.

இயேசுவைப் பின்தொடர எவ்வளவு அருமையான உள்நோக்கம்! அந்த இளைஞன் அதே துறவற சபையில் சேர்ந்து பிற்காலத்தில் புனிதரானார். அவர்தான் புனித பிரின்டிசி லாரன்ஸ் (திருவிழா ஜூலை 21).

இந்த இளைஞனைப் போல், துறவறத்தினரோ இல்லத்தினரோ எல்லோரையும் ஏதோ ஒரு பணி வாழ்வுக்கு இறைவன் அழைக்கிறார். அந்த அழைப்பினை உணர்ந்து ஏற்று, இடர்கள் தடைகள் எதையும் கடந்து முன்னோக்கி முன்னேற வேண்டாமா?

இன்றைய நற்செய்தியில் இறை அழைப்பைச் சந்தித்த மூன்று இளைஞர்களிடம் இயேசு சொன்னதன் பொருளை மூன்று சொற்றொடர்களில் அடக்கி விடலாம்.

1. உன்னையே மறந்திடு: "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை" (லூக். 9:58). இயேசுவின் இந்த வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன? ஏழ்மை, எளிமை என்ற புண்ணிய நிலையை மட்டுமா? இலக்குத் தெளிவும் இலட்சிய உணர்வும் கொண்டவனின் சொகுசு தேடாத ஈடுபாட்டையன்றோ!
மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார் (நீதிநெறிப் பாடல்).

பகட்டும் புகழும் பாமர மக்களிடம் இயேசுவுக்கு இருந்த செல்வாக்கின் பளபளப்பும் இயேசுவைப் பின்பற்றுகிறவனுடைய இலக்காக இருக்க முடியாது. "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத். 16:24, மார்க். 8:34, லூக். 9:23).

2. தடைகளைத் தாண்டிடு: "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" (லூக். 9:60). 'தாய் தந்தை பேண்’ என்பது யூதனைப் பொருத்தவரை சமயக் கடமையாகும். இப்படிச் சட்டமாக, சமயக் கடமையாகத் தோன்றும் தடைகளைக் கூடத் தாண்டி இறையழைப்பை ஒத்திபோடாமல் தாமதத்தைத் தவிர்க்க இயேசு அழைக்கிறார். “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்'' (மத். 10:37). "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" (மத். 6:24). அதனால் திருத்தூதர் பவுல் சொல்வார்: "நான் மனிதனுக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது” (கலா. 1:10)

. 3. நிபந்தனையின்றி உன்னைக் கையளித்திடு: "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதி உள்ளவர் அல்ல” (லூக். 9:62). இயேசுவைப் பின்பற்றுகிற எவனும் முன்வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது. கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பாராமல் இருக்க இயேசுவின் மீது கண்களைப் பதிப்போம். நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவரும் இயேசுவே (எபி. 12:2)

உழுது கொண்டிருந்த எலிசாவை இறைவாக்கினர் எலியா திருநிலைப்படுத்திய வேளையில், பெற்றோரிடம் விடை பெற்று வர அரைமனதுடன்தான் அனுமதி கொடுக்கிறார் எலியா. ஆனால் எலிசா இறையழைத்தலின் தீரத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்! அழைத்தலோடு உடன்பிறந்தது அர்ப்பணம். அது நிபந்தனையற்றது. நிபந்தனையோடேயே செபிக்கவும், நேர்ச்சை செய்யவும், நல்லது புரியவும் பழக்கப்பட்டவர்கள் அல்லவா நாம்!

இயேசுவின் சீடன் மதில்மேல் பூனையாக இருக்கலாமா?

"கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்" (பிலிப். 3:12-14). அழைப்பே பெரும் பரிசு என்று பெருமிதம் கொள்ளும் திருத்தூதர் பவுலின் கூற்றில் 2 அம்சங்கள். I. கடந்ததை மறப்பது. 2. இலக்கைக் கண் முன் கொள்வது. பந்தயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டால் இலக்கை அடையும்வரை வேறு எதையும் சிந்திக்க முடியுமா?

மாவீரன் அலெக்சாண்டர் ஒரு நாட்டைப் பிடிப்பதற்காகத் தன் படைவீரர்களைக் கப்பலில் ஏற்றிக் கடலைக் கடந்து செல்கிறான். கரையை அடைந்து வீரர்கள் அணிவகுத்துநிற்கப் படை முன்னோக்கிப் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் 'திரும்புங்கள்' என்று மன்னர் ஆணையிடுகிறார். திரும்பிப் பார்த்தால் அதிர்ச்சி. தாங்கள் ஏறிவந்த கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது மன்னர் முழக்கமிடுகிறார்: "வீரர்களே, நாம் வந்த கப்பல் எரிந்து அழிய ஏற்பாடு செய்தேன். நாம் இங்கிருந்து வெற்றி பெறாமல் நான்தான் திரும்பிச் செல்லப்போவதில்லை என்ற மன உறுதியுடன் போரிட வேண்டும். நாம் உயிரோடு திரும்ப வேண்டும் என்பதை மறந்து வெற்றி என்ற இலட்சியத்திற்காக மட்டுமே செயல்பட வேண்டும். வீறு கொண்டு செல்லுங்கள். வெற்றி நமதே".

இலட்சிய வாழ்வு வாழ முடிவெடுத்த பிறகு காலப்போக்கில் மதிப்பீடுகளை மறந்து, கொள்கைப்பிடிப்பின்றி வாழ்ந்தால் அது அடித்தளமின்றி அடுக்கு மாடி கட்ட முயற்சிப்பதாகும். குன்றுகளைத் தாண்டாமல் சிகரத்தை எட்ட முனைவதாகும்.

அழைத்தலோடு கூடப் பிறந்தது அருப்பணம். எலிசாவைப் பாருங்கள். போர்வை தன் மீது விழுந்தவுடன் கலப்பையை விறகாக்கி காளையை அடித்து பிறருக்கு விருந்து கொடுத்துவிட்டுச் சீடராகப் புறப்பட்டுவிடுகின்றார். அழைப்பைக் கொடையாகப் பெற்றிருக்கலாம். ஆனால் முயற்சி இன்றி, உழைப்பு இன்றி, அர்ப்பணம் இன்றி அழைத்தால் நிலைக்காது. இந்த அருப்பணம் என்பது அனைத்தையும் இழக்கின்ற தன்மை. “அவர்கள் ... அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்" (லூக். 5:11).

இயேசு சபையை நிறுவிய இஞ்ஞாசியாரின் செபம் இது:

"கணக்குப் பார்க்காமல் கொடுக்கவும்
காயத்தைக் கவனியாமல் போரிடவும்
ஊதியத்தை எதிர் நோக்காமல் ஊழியம் செய்யவும்
ஓய்வைத் தேடாமல் உழைக்கவும்
எனக்கு வேண்டிய மன நிலையைத் தந்தருளும்
ஒன்று மட்டும் போதும், ஒ இறைவா
உமது திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும்
இன்பம் ஒன்றையே நான் தேடும் வரமருளும்."
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“எருசலேமை நோக்கி”

என் கால்தடங்களில் உன் கால்களை வை:

பொஹிமியா நாட்டின் அரசராக இருந்தவர் புனித வென்ஸ்லஸ் (911-935). இந்த மண்ணில் வெறும் இருபத்து ஐந்து ஆண்டுகளே வாழ்ந்த இவர், இறைநம்பிக்கைக்கும் பிறரன்புச் செயல்களுக்கும் பெயர் போனவர்.

இவர் ஒவ்வொருநாளும் மாலை வேளையில், அருகில் உள்ள கோயிலுக்கு இறைவனிடம் வேண்டுவதற்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும்போது கால்களில் காலணிகளை அணிவதில்லை. இவருடன் இவரது பணியாளரும் கோயிலுக்குச் செல்வார். அவரும் அரசரைப் போன்று கால்களில் காலணிகளை அணிவதில்லை.

ஒருநாள் மாலைவேளையில் வழக்கம் போல் அரசர் கோயிலுக்கு இறைவனிடம் வேண்டச் சென்றார். அரசரைப் பின்தொடர்ந்து பணியாளரும் சென்றார். அன்றைய நாளில் வழக்கத்திற்கு மாறாகப் பனிபொழிவு மிகுதியாக இருந்தது. அரசர் அதைப் பொருட்படுத்தாமல் கோயிலை நோக்கி நடந்தார். அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பணியாளரால் பனியில் நடந்து செல்ல முடியவில்லை, நடுங்கிக் கொண்டேதான் வந்தார்.

அரசர் அதைப் பார்த்துவிட்டு, “பனியில் நடந்து வர உனக்குச் சிரமமாக இருக்கின்றதா? என்னுடைய கால்தடத்தில் உன் காலடிகளை எடுத்து வைத்து வா! அப்போது உனக்குச் சிரமம் இருக்காது” என்றார். பணியாளரும் அவ்வாறே செய்ய, இருவரும் கோயிலை அடைந்து, இறைவனிடம் வேண்டிவிட்டுத் திரும்பி வந்தார்கள்.

ஆம், அரசரின் கால்தடத்தில் தன் காலடிகளை எடுத்து வைத்து நடந்தபோது, பணியாளரால் மிக எளிதாக நடக்க முடிந்தது. இயேசுவைப் பின்தொடர்ந்து நடக்கவேண்டிய நாம், அவரது காலடிகளில், அவரது அடிச்சுவட்டில் நடந்தால், மிக எளிதாக அவரைப் பின்தொடரலாம். பொதுக் காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசுவின் வழியில், அவரைப் பின்தொடர்ந்து நடப்போம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

முன்னோக்கி நடக்கவேண்டும்:
நமது நம்பிக்கை வாழ்விற்கு இயேசுவே மிகப்பெரிய முன்மாதிரி. ஏனெனில், அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினர் (லூக் 24: 19); தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவர் தன்னுடைய போதனையால் மட்டுமல்ல, வாழ்வாலும் வாழ்ந்து காட்டியவர்.

நற்செய்தியில் இயேசு, தனது ‘நேரம்’, அல்லது விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வருவதை அறிந்து, எருசலேம் நோக்கிச் செல்லத் தீர்மானிக்கின்றார். எருசலேம் நோக்கிச் செல்லத் தீர்மானித்த இயேசு, அதன்பிறகு அங்கிருந்து திரும்பிப் பார்க்கவே இல்லை அல்லது முன்வைத்த காலைப் பின் வைக்கவே இல்லை. இவ்வாறு அவர் தன்னைத் தொடர்பவர்களுக்கு முன்மாதிரி காட்டினார்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் மூவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகிறார்கள். முதலாமவரிடம் இயேசு, “....மானிட மகனுக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்று சொன்னபோது, அவர் இயேசுவைப் பின்தொடர்வதில் உள்ள துன்பத்தைக் கண்டு, தன் வழியில் செல்கின்றார். இரண்டாமவர் இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட்டதால், அவரால் இயேசுவைப் பின்தொடர முடியவில்லை. மூன்றாவர் திரும்பிப் பார்த்ததால், இயேசுவைப் பின்தொடர முடியாமல் போய்விடுகின்றது. இப்படி மூன்றுபேரும் இயேசுவைப் போன்று முன்னோக்கி – இலக்கை நோக்கிப் பார்க்காமல் – திரும்பிப் பார்த்ததால், அவர்களால் இயேசுவைப் பின்தொடர முடியாமல் போய்விடுகின்றது.

இதற்கு முற்றிலுமாக, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா, ஏர்பூட்டி உழுது கொண்டிருந்த எலிசாவை அழைத்ததும், அவர் தான் உழுதுகொண்டிருந்த ஏர் மாடுகளைப் பிடித்து இறைச்சி சமைத்துக் கொடுத்துவிட்டு, எலியாவைப் பின்தொடர்கின்றார். இவ்வாறு எலிசா பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கிப் பார்த்து, சீடத்துவ வாழ்விற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

வெறுப்புப் பதில் அன்பு:
இயேசுவின் சீடர்கள், அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் கூறுவதுபோல, பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்க வேண்டுமே ஒழிய, வெறுப்பை வளர்க்கக் கூடாது.

யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையே பல்லாண்டுகளாகவே பூசல்கள் இருந்தன. அது இயேசுவின் காலத்திலும் தொடர்ந்து என்பதுதான் வேதனை (யோவா 4:9). இந்நிலையில், இயேசு எருசலேமிற்குச் சமாரியர்களின் ஊர் வழியாகச் செல்ல நேர்ந்ததால், சமாரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் கண்டு யாக்கோபும் யோவானும், “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?” என்று கேட்கும்போது, இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். இயேசு யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருந்த பகைமையை வளர்க்க நினைத்திருந்தால், அவர் சீடர்கள் சொன்னதை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், அவர்களைக் கடிந்து கொள்கின்றார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான செய்தி, தூய்மைவாதம்’ பேசும் யூதர்கள் சமாரியர்களின் ஊர்கள் வழியாகச் செல்வதில்லை. இத்தனைக்கும் அது தூரம் குறைவுதான் என்றாலும்! அதனால் அவர்கள் யோர்தான் ஆற்றைச் சுற்றி, கிழக்குப் பகுதி வழியாக எருசலேமிற்குச் செல்வார்கள். இயேசு தூய்மைவாதம் பேசிய மற்ற யூதர்களைப் போன்று இருக்கவில்லை. அவர் பகைமையை மறந்து, சமாரியர்களின் ஊர் வழியாகவே எருசலேம் செல்கின்றார். அப்படியிருந்தும் அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளாதபோது, அதற்காக அவர் அவர்களிடம் வெறுப்பை வளர்க்காமல் வேறோர் ஊர் வழியாகச் செல்கின்றார். இதன்மூலம் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்கள் பகைமையை வளர்க்காமல், அன்பையும் நட்பையும் வளர்க்கவேண்டும் என்ற செய்தியைக் கற்றுத் தருகின்றார்.

தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழவேண்டும்:
‘இடியின் மக்கள்’ என அழைக்கப்பட்ட யாக்கோபு மற்றும் யோவானிடம் சமாரியர்கள் மீதான வெறுப்புணர்வு ஏற்பட்டதற்குக் காரணம், இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்வதுபோல, அவர்களிடம் இருந்த ஊனியல்பே என்று சொல்லலாம். அந்த ஊனியல்பு ஒருவரையொருவர் கடிந்து விழுங்க வைத்து, அழிவுக்கு இட்டுச் செல்லும். ஆண்டவர் இயேசு இப்படி ஊனியல்புக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் அடிமை வாழ்வுக்கு அழைக்கவில்லை. மாறாக, உரிமை வாழ்விற்கு அழைத்துள்ளார். அந்த உரிமை வாழ்வு நம்மை வேறு எதற்கும் அடிமையாகாமல் அன்பிற்கு மட்டுமே அடிமையாய் இருந்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டும். இவ்வாறு ஒருவர் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்கின்றார்.

ஆம், இயேசுவைப் பின்தொடர்பவர் ஊனியல்புக்கேற்ப அல்ல, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்பவே வாழவேண்டும். அத்தகையதொரு வாழ்க்கை வாழும்போது அவர் இயேசுவைப் போன்று முன்னோக்கி நடப்பார்; பகைமையை வளர்க்காமல் அன்பை மட்டுமே வளர்ப்பார் எனவே, நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழத் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்வோம்.

சிந்தனைக்கு:
‘ஒவ்வொரு மனிதனும் மரணத்தை ருசிப்பது நிச்சயம். ஆனால், சிலர் மட்டுமே வாழ்க்கையை ருசிப்பார்கள்’ என்ற ரூமி. நாம் வாழ்க்கையை ருசிப்பதற்கு தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்ந்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு