செசாருக்கு உரியதை செசாருக்குச் செலுத்துங்கள்
அடிக்கடி ஏதாவது ஓர் அரசு கவிழப் போகின்றது என்ற செய்தியைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் வாசித்தும், பார்த்தும் இருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆட்சியைப் பார்க்கும் இந்தியர்களுக்கு இது புதிதல்ல. ஆச்சரியம் தரும் செய்தியுமல்ல. ஆனால் ஏன் இந்த நிலை என்று ஆழமாகச் சிந்தித்தால் காரணம் கண்டுபிடிப்பதும் கடினமல்ல. எல்லாம் அதிகாரம்தான். இன்றைய மக்களிடம் தாங்கள் அதிகாரத்தில் ஆட்சியில் அமர வேண்டும். அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும். தனக்குரியதைச் சம்பாதித்தால் போதும் என்ற தன்னல நோக்கம்தான் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையானது இன்று மனித சமுதாயத்தில் ஊறிக்கிடக்கும் ஒரு வகையான புற்றுநோய் என்றால் மிகையாகாது.
இன்றைய வார்த்தை வழிபாட்டு வாசகங்கள் இந்த அதிகாரத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. இயேசு வாழ்ந்த காலத்தில் அர்த்தமுள்ள முறையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயேசுவின் சொற்களைக் கேட்கச் சென்றவரும் உண்டு. மாறாக அவரை எப்படிச் சிக்க வைத்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று அவரைச் சுற்றித் திரிந்தவரும் உண்டு. எனவே நல்லெண்ணம் இல்லாத பரிசேயர் கூட்டம் இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்க, தம்மோடு ஒத்துப் போகாத ஏரோதியருடன் கூட்டுச் சேர்ந்து சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். வரி செலுத்துவது முறைதான் என்றால் பரிசேயரின் வலையில் விழுந்து விடுவார். யூத மக்களுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்யப் போதுமான ஆதாரமாகிவிடும். இல்லை என்றால் ஏரோதியரின் வலையில் சிக்கிவிடுவார் - எனவே நாட்டுத் துரோகி என்ற பட்டத்தைப் பெற்றுச் சிலுவைச் சாவுக்கு உள்ளாக்கலாம் என்ற நிலையில் சூழ்ச்சியோடு தேன் சொட்டும் வார்த்தைகளால் இயேவைப் புகழ்வது போல நச்சு நாக்குடன் நடிக்கின்றனர்.
ஆனால் ஞானத்தின் இருப்பிடமான இயேசு ஆண்டவர், உள்ளங்களை ஊடுருவி அறிகின்ற இயேசு, நாணயத்தைக் கொண்டு வரச் சொல்லி - இதில் பொறிக்கப்பட்டிருக்கிற உருவம் யாருடையது எனக் கேட்கிறார். செசாருடையவை என்றார்கள். எனவே இயேசு, செசாருக்கு உரியதை செசாருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று ஞானத்தோடு அவர்கள் வாயை அடைக்கின்றார்.
முதல் வாசகத்திலே கோடிட்டு எசாயா காட்டுவதுபோல், உண்மையான கடவுள் ஒருவர் உண்டு. அவரால் படைக்கப்பட்டு அதிகாரம் பெற்ற மனிதர்களும் உண்டு. கடவுளை மட்டுமோ, மனிதனை மட்டுமோ உண்மையென்று நினைத்து ஒருவரை வெறுத்து, மற்றவரை அன்பு செய்யும் அனைவரும் பொய்யர்களே. அவர்கள் விசுவாசம் உண்மையான விசுவாசம் ஆகாது. அவர்கள் ஒருபோதும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதைப் புனித பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தெரிவிக்கிறார். இதைத் தெளிவுபடுத்தும் பொருட்டுதான் செசாருக்கு உரியதை செசாருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று இயேசு அழகாக இன்றைய மூன்றாம் வாசகத்தில் தெளிவுபடுத்துகிறார். அதேநேரத்தில் அதிகாரம் எங்கிருந்து வருகிறது என்பதையும் இன்றைய வாசகங்களிலே தெளிவு படுத்துகிறார். யோவான் எழுதிய நற்செய்தியிலே உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு. உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா என்று பிலாத்து இயேசுவை நோக்கிச் சொன்னான். இயேசுவோ மேலிருந்து உனக்கு அருளப் படாதிருந்தால் உனக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது (யோவா. 19:10-11) என்றார்.
இன்றைய வாசகங்கள் ' முக்கியமான ஒரு செய்தியை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களுக்கும் தர விரும்புகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலிலோ அல்லது திருச்சபையில் எந்த துறையிலோ இருந்தாலும் சரி, அந்த அதிகாரம் மனிதன் சம்பாதித்த சொத்து அல்ல. கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு கொடை, என்பதை உணர்ந்து ஆட்சி செய்ய வேண்டியவர்கள். இவர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுத்தாக வேண்டும். ஆனால் இன்றைய தலைவர்கள் எல்லாம் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து தங்களை நாசமாக்கி நாட்டையும் நாசக்காடாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்கு உரிய செயலாக உள்ளது.
அதிகாரத்தின் கீழ் இருப்பவர்கள் கடவுள் இந்த அதிகாரம் மூலமாக செயல்படுகிறார் என்பதை இனம் கண்டு மதிக்கவும், மரியாதை செய்யவும், ஒத்துழைப்புக் கொடுக்கவும் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும். ஆனால் அவர்களைத் தெய்வங்களாக வழிபடுவது முட்டாள்தனம். நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு எதிரானவை என்பதையும் உணர வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு கதை என் முன் காட்சித் தருகிறது. கிராமப்புறப் பாதை. மேடு பள்ளங்களுக்கிடையே மாட்டு வண்டிச் சக்கரம் பெரும் சத்தம் போட்டு உருண்டு கொண்டிருந்தன. சக்கரம் அச்சாணியை வம்புக்கு இழுத்தது. என்னைப் பார் ! தரையில் மேடு, பள்ளம், முள் என்றும் பாராமல் உருண்டு, உருண்டு பல மைல்கள் தூரம் பலரைக் கூட்டிப் போகிறேன். நீயோ சும்மா உட்கார்ந்து குண்டு குழி வரும்போது குதித்து குதித்து ஆனந்தம் அடைகிறாய். உனக்குத் திமிறு அதிகம்தான் என சக்கரம் அச்சாணியைத் திட்டியது. இப்படித் திட்டிய நேரத்தில் வண்டி குழியில் விழுந்து அச்சாணி முறிய வண்டி தூக்கி எரியப்பட்டு குடை சாய்ந்து சக்கரமும் உடைந்தது.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது, சக்கரமும் தேவை, அச்சாணியும் தேவை என்பதுபோல, அதிகாரமும், ஆளப்படுபவர்களும் தேவை. இருவரும் இணைந்தால் இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதையும் இன்று ஆண்டவர் உணர்த்துகின்றார்.
நாம் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் மனிதனுக்கு உரியதை மனுதனுக்கும் கொடுப்பதில் தேவைப்படும் பக்குவத்தையும் இன்று ஆண்டவர் இயேசு விளக்குகின்றார். உண்மையான கிறிஸ்தவன் கடவுளுக்கு மட்டுமே வரி செலுத்தக் கடமைபட்டவன் என்ற குறுகிய மனதை நீக்கி, அரசுக்குச் செலுத்த வேண்டிதையும் நேர்மையோடுச் செலுத்த வேண்டும் என்பதை இயேசு இன்று வலியுறுத்துகின்றார்.
செசாருக்கு உரியது இவ்வுலகில் உள்ள பொருட்கள் - பணம். கடவுளுக்கு உரியது - நாமோ ஆண்டவருக்கு நம்மைக் கொடுக்க வேண்டும்.
நாணயமற்ற பேச்சு வேண்டாம்
இன்றைய நற்செய்தியிலே இயேசுவைப் பார்த்து, போதகரே, நீர் உண்மையுள்ளவர் [மத் 22:16அ) என்று கூறுகின்ற பரிசேயர்கள் பொய் சொல்வதைக் காண்கின்றோம். அந்தப் பரிசேயர்கள் மனத்தில் நினைத்தது ஒன்று, வெளியில் பேசியது மற்றொன்று! நாணயமில்லாதவர்கள் நாணயமுள்ளவரிடம் நாணயத்தைக் காட்டி. நாணயமில்லாத கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்க அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். சீசருக்கு வரி செலுத்து என்று இயேசு சொன்னால், யூதர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றார் எனக் குற்றம் சாட்டலாம் : சீசருக்கு வரி செலுத்தாதே என்றால், சீசருக்கு எதிராகச் செயல்படுகின்றார் என்று குற்றம் சுமத்தலாம் என்று அவர்கள் திட்டமிட்ரருந்தார்கள். அவர்களுடைய தீய நோக்கத்தை (மத் 22:18) அறிந்த இயேசு அவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கின்றார். இயேசு-அவர் ஒருபோதும் எவெளிவேடத்தைப் பாராட்டுவதில்லை. வெளிவேடத்திற்கு மறுபெயர் பொய்.
பழைய ஏற்பாட்டில் பொய் சொன்ன காயினுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் (தொநூ 4:1-12), புதிய ஏற்பாட்டில் பொய் சொன்ன அனனியாவக்கும், சப்பிராவுக்கும் என்ன நடந்தது என்பதையும் [திப 51-10] நாமறிவோம். நானே ஆண்டவர் வேறு எவரும் இல்லை [எசா 45:63 விய 201-5) என்று ஆண்டவர் கூறிய உண்மைக்கு எதிராக நடந்த இஸ்ரயேல் மக்கள், இறைவனின் சினத்திற்கு உள்ளாவதைப் பார்க்கின்றோம் [விப 321-10).
இயேசுவின் அன்புக்குரியவர்களாக, அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக வாழ நாம் விரும்பினால், இயேசு விரும்புகின்ற கலப்படமில்லாத உண்மை வாழ்வை (யோவா 18:37] அவருக்கு அளிக்க நாம் முன்வரவேண்டும். இதோ நாம் எப்போதும் உண்மையைப் பேச நமக்கு உதவி செய்யும் நிகழ்வு ஒன்று! இரண்டாவது உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளில் இதுவும் ஒன்று!
உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகின்றோம்! உடம்பிலிருந்து எல்லா இரத்தத்தையும் வெளியேற்றினால் நீங்கள் எப்படி துடிதுடித்துச் சாவீர்கள் என்று பார்க்கப்போகின்றோம் என்று சொல்லிவிட்டு, முதலில் பரிசோதனை செய்துபார்க்க, இரண்டு கைதிகளைப் படுக்கவைத்து இரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தார்கள்! கைதிகளின் உடலிலிருந்து வெளியேறிய இரத்தம் பக்கத்திலிருந்த பாட்டிலில் டப் டப் என்ற ஒலியுடன் விழ ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த இரண்டு கைதிகளின் கண்களையும் படைவீரர்கள் கறுப்புத் துணியால் கட்டினர். பிறகு ஒரு கைதியின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதை நிறுத்தினர். அதே நேரத்தில் பாட்டிலில் டப் டப் என்று இரத்தம் விழும் ஒசை கேட்குப்படி மாற்று ஏற்பாடு செய்தார்கள். டப் டப் சத்தத்தில் அச்சமுற்ற அந்தக் கைதி இரத்தம் அவர் உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக நம்பினார். பரிசோதனையின் முடிவில் இரண்டு கைதிகளுமே இறந்து போனார்கள்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அது நமக்கு நடக்கும். எந்தச் சூழ்நிலையிலும் என்னால் உண்மையைப் பேசமுடியும் என நாம் நினைத்தால், நம்மால் எப்பொழுதும் உண்மையைப் பேசமுடியும்.
மேலும் அறிவோம் :
உள்ளத்தால் பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (குறள் : 294).
பொருள் : ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது வாழ்ந்தால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் இடம் பெறுவான்!
ஓர் ஊரில் ஓர் இந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவர் இறந்தபோது கிறிஸ்தவர்கள் அவரைக் கிறிஸ்தவ மரபுப்படி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அவருடைய இந்து உறவினர்களோ அவரை இந்து மரபுப்படி எரிக்க வேண்டும் என்றனர். இரு சமூகத்தினரிடையே சண்டை மூண்டது சிக்கலைத் தீர்த்து வைக்க ஊர் நாட்டாண்மையிடம் சென்றனர் நாட்டாண்மை பின்வருமாறு தீர்ப்பு வாங்கினார்: "இறந்தவர் உடலை முதலில் கிறிஸ்தவ முறைப்படிக் கல்லறையில் புதையுங்கள், பிறகு அதைக் கல்லறையிலிருந்து எடுத்து இந்து முறைப்படி எரித்துவிடுங்கள்" நாட்டாண்மையின் தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு அவரின் புத்திக்கூர்மையை பெரிதும் பாராட்டினர். சிக்கலைத் தீர்த்து வைப்பது எளிதல்ல.
பரிசேயர் கிறிஸ்துவை சிக்கலில் மாட்டிவிட விரும்பினர். "சீசருக்கு வரி செலுத்துவது முறையா?" என்று பரிசேயர்கள் கிறிஸ்துவிடம் கேட்டபோது தம்மைச் சிக்க வைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் என்பதைக் கிறிஸ்து நன்கு புரிந்து கொண்டார். "சீசருக்கு வரி செலுத்தலாம்" என்று கிறிஸ்து கூறினால், அவர் யூதர்களுக்கு எதிரியாகிவிடுவார், ஏனெனில் யூதர்கள் உரோமையருடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. "சீசருக்கு வரி செலுத்தக் கூடாது" என்று கிறிஸ்து கூறினால், அவர் உரோமை ஆட்சிக்கு எதிராளி என்று கருதப்படுவார். அவர் எந்தப் பதில் கூறினாலும் அது அவருக்கு வினையாக அமைந்துவிடும்.
ஆனால் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் (1 கொரி 124). அவர் பரிசேயரிடம் கூறியது: "நீங்கள் சீசருடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்." இவ்வாறு பதிலளித்து அவர்களது தீய உள் நோக்கத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டார் மக்கள் அவருடைய பதிலைக் கேட்டு வியப்படைந்தனர்.
அரசும் சமயமும் மோதத் தேவையில்லை. இரண்டுமே மக்களின் நலனை மையப்படுத்தி இயங்குகின்றன. அரசு மக்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது. சமயமோ மக்களின் ஆன்மிகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அரசு ஊர்களைச் சாலைகளால் இணைக்கிறது. கடவுள் ஒரு புள்ளி, மனிதர் ஒரு புள்ளி இவ்விரு புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடுதான் சமயம், புனித பவுல் கூறுவதுபோல, "கடவுள் ஒருவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்" (1 திமொ 2:5) கிறிஸ்து ஆற்றிய அதே இணைப்பாளர் பணியை அவருடைய திருச்சபையும் மனித வரலாற்றில் ஆற்றி வருகிறது.
கிறிஸ்தவர்கள் நமது நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த தெர்த்துல்லியன என்ற அறிஞர் உரோமை வாழ் மக்களிடம் கூறினார்: "உங்கனைப்போல் எங்களுக்கும் அறிவும் ஆற்றலும் உண்டு உங்களைப்போல் எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு. ஆனால் நாங்கள் சிலுவையைப் பின்பற்றுகிறோம்" ஆம் கிறிஸ்தவர்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
முறையான அரசின் அதிகாரத்திற்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ளனர் ஏனெனில் முறையான எல்லா அதிகாரமும் கடவுளிடமிருந்தே வருகிறது (யோவா 19:11) புனித பேதுரு கூறும் அறிவுரை "அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பரிந்திருங்கள்" (1 பேதுரு 213) புனித பவுல் கூறும் அறிவுரை "ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள் ஏனெனில் கடவுளிடமிருந்து வாத அதிகாரம் எதுவுமில்லை (உரோமை 13:1)
இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. பிற இனத்தவாகிய சைரசு மன்னருடைய கைகளைக் கடவுள் பலப்படுத்துகிறார். அவரும் யூதர்களுக்கு ஓர் ஆலயம் கட்டித் தருகிறார் நமது நாடு சமய சார்பற்ற நாடு. எனவே எல்லா சமயத்தினரையும் அது சமமாக நடத்த வேண்டும். கிறிஸ்தவர்களுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடாது அவர்களுடைய ஆலயங்களையும் நிறுவனங்களையும் சமய வெறியர்கள் அழிப்பதைப் பார்த்துக் கொண்டு செயலற்று இருக்கக்கூடாது சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அந்நாட்டைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். அப்போது ஆப்பிரிக்க ஒருவர் ஆங்கிலேயர்களைப் பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தபோது நாடு எங்கள் கையில் இருந்தது. பைபிள் உங்கள் கையில் இருந்தது. இப்போது பைபிள் எங்கள் கையில் இருக்கிறது; நாடு உங்கள் கையில் இருக்கிறது என்றாம்!
சமயத்தைப் பரப்பி மக்களை அடிமைப்படுத்துவது கிறிஸ்தவப் பண்புக்கு எதிரானது கட்டாய மனமாற்றம் மனித மாண்புக்கும் மனச்சாற்றுக்கும் எதிரானது என்று திருச்சபைச் சட்டமே தெளிவாகக் கூறியுள்ளது (திச. 748 ப2). அதே நேரத்தில் ஒரு சமயத்தை ஏற்க, போதிக்க பரப்ப அனுமதி உண்டு என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 25 தெளிவாகக் கூறுகிறது. சமய சுதந்திரத்தை மறப்பதும் தவறு கட்டாயப்படுத்தி அல்லது ஆசைகாட்டிமதம் மாற்றம் செய்வதும் தவறு. கிறிஸ்துவைப்போல் ஞானமும் விவேகமும் உள்ளவர்களாக வாழக் கற்றுக் கொள்வோம். நல்ல சமயப் பற்றும் நல்ல நாட்டுப் பற்றும் இணைந்து செல்ல வேண்டும். கிறிஸ்தவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்பதை எண்பித்துக் காட்ட வேண்டும். கடவுளுக்கு உரியதும், உரியவர்களும்!
சமயமும் அரசியலும்
பொது நிலையினரின் பாதுகாவலர் என்ற சிறப்புக்கு உரியவர் ஆங்கில மறைசாட்சி புனித தாமஸ்மூர். சீசருக்கு உரியது எது, கடவுளுக்கு உரியது எது என்ற அவருடைய மனப்போராட்டத்துக்கு நாடக வடிவம் கொடுத்தார் இராபர்ட் போல்ட் என்பவர், “எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற ஒரு புனிதர்” என்ற தனது நூலில்.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்தவன் மன்னர் 8ஆம் ஹென்றி. அவனது அரசவையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் தாமஸ் மூர். குழந்தை இல்லை என்று காரணம் காட்டி, முறைப்படி மணமுடித்த தன் மனைவி கத்தரீனை ஒதுக்கிவிட்டு ஆன்போலின் - என்பவளை மனைவியாக்கிக் கொள்ளத் திருத்தந்தையின் இசைவினைக் கோரினான். “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிக்கட்டும்' என்று இறைவாக்கு இருக்கப் பிரித்துவிடத் திருத்தந்தைக்கு உரிமை உண்டா என்ன! திருத்தந்தை மறுத்தார். “இங்கிலாந்து நாட்டுக்கு மட்டுமல்ல, இங்கிலாந்துத் திருஅவைக்கும் நானே தலைவன்” என்று பறைசாற்றினான். ஆங்கிலிக்கன் சபை தோன்றியது இப்படித்தான். அப்போது எழுந்த சமயப் புயலுக்குத் தன்னையே தயார் செய்து கொண்டார் தாமஸ் மூர்.
இங்கிலாந்து நாட்டின் பெரும்பாலான ஆயர்கள் கூடி அரசனின் இச்செயலுக்கு ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தாமஸ் மூர் மட்டும் தன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நாட்டுத் துரோகக் குற்றம் சமத்தி, 15 மாதச் சிறை அதன்பின் தூக்குத் தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டார். தீர்ப்பைக் கேட்ட புனிதர் கூறியது: “தூக்கு மேடையில் நான் சாகப் போகிறேன். அரசனின் பணிவான கஊளழியனாகவும், ஆனால் அதைவிடக் கடவுளிடம் முதற்கண் உறுதி தவறாதவனாகவும் சாகின்றேன்”.
சிறையில் தவித்தபோது அவரது மனைவியே வந்து, “உங்களுக்கு ஏன் இந்த வம்பு? ஊரோடு ஒத்துப்போங்களேன்”” என்று வற்புறுத்தியபோது தாமஸ் மூர் என்ன சொன்னார் தெரியுமா?
“இரண்டு ஆன்மாக்கள் இருந்தால் ஒன்றை அரசனுக்கும் மற்றதை ஆண்டவனுக்கும் கொடுக்கலாம். இருப்பதோ ஒன்று. அது ஆண்டவனுக்கு உரியது”.
தூக்குமேடையைப் புனிதர் அடைந்ததும் தன் தலை துண்டிக்கப்படுமுன் கொலையாளியை ஒரு நொடி தாமதிக்கக் கேட்டுக் கொண்டார். “இந்த மரத்தடிகளுக்கிடையில் என் தலை செலுத்தப்பட்டதில் என் தாடி மாட்டிக் கொண்டது. இந்தச் சிக்கலிலிருந்து அதை எடுத்துவிட விரும்புகிறேன். என் தாடி என்ன குற்றம் புரிந்தது?” என்றாராம்.கடவுளின் சாட்சியாக உயிர்கொடுக்கும் கடைசித் தருணத்திலும் அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி, நகைச்சுவை வியப்பூட்டும்!
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது வாழ்வியல் வழக்கு. கீரியும் பாம்புமாய்ச் சிறிக் கொண்டிருந்த பரிசேயரும் ஏரோதியரும் இயேசுவைப் பொது எதிரியாக்குவதன் மூலம் தங்களுக்குள் நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். உரோமை அரசின் அடிவருடிகள் ஏரோதியர். மண்ணின் மைந்தர்களாய் நின்று சீசரின் இறையாண்மைக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் பரிசேயர். இரு தரப்பினரும் இயேசுவுக்கு எதிராக வரிந்து கட்டியிருப்பது, இயேசுவை வம்புக்கு இழுப்பது, குற்றம் காண வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இயேசுவை அணுகியது வஞ்சக அடிப்படையில்தானே!
என்ன பதில் சொன்னாலும் இயேசு மாட்டிக் கொள்வார் என்று வரி கொடுப்பது பற்றிய சர்ச்சையை எழுப்ப, அவர்களின் வஞ்சக நெஞ்சத்தை முகத்தில் கண்ட இயேசு, ““சீசருக்குரியவற்றை சீசருக்கும் கடவுளுக்குரியவற்றைக் கடவளுக்கும் கொடுங்கள்” (மத். 22:21) என்றபோது அவர்களது முகத்திரைகள் கிழிந்தன. இயேசு நேரடிப் பதில் தராமல் அதிரடிக் கேள்வி எழுப்பிச் சரியான பதிலடி தருகிறார்.
கேள்விகள் பலவிதம். அறிவை வளர்த்துக் கொள்ளக் கேட்கப்படும்: கேள்விகள். தான் அறிவாளி என்பதைத் தம்பட்டம் அடிக்கக் கேட்கப்படும் கேள்விகள். பிறரை முட்டாளாக்கக் கேட்கப்படும் கேள்விகள். பிறரின் அறிவைச் சோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள். ஆனால் இங்கே கேட்கப்படும் கேள்வி இயேசு போதித்த இறையரசை இவ்வுலக அரசோடு மோதச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்படும் கேள்வி.
இயேசுவின் பதிலோ எதிர்பாராதது. பரிசேயரின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் சரியான பதிலைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் நோக்கமன்று; மாறாக, சமுதாய வாழ்வின் நெறிகளை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதே!
சீசருடைய உருவமும் எழுத்தும் நாணயத்தில் இருந்ததால் அது சீசருக்குச் சொந்தம். அதுபோலக் கடவுளுடைய உருவும் சாயலும் நம் ஒவ்வொருவரிலும் இருப்பதால் (தொ.நூ. 1:26) நாம் கடவுளுக்குச் சொந்தம். கடவுளுக்கு உரியவர்கள். வாகனத்தில் உள்ள மாற்றுச் சக்கரமாக, அவசரத்தில் பயன்படுத்தப்படும் மாற்றுச் சக்கரமாக மட்டும் கடவுளைக் கருதக்கூடாது.
இவ்வுலக அரசனின் மூலமாக - அதுவும் ஒரு பிற இனத்தவனான சைரஸ் என்ற அரசன் மூலமாக இறைவன் தன் அரசை நிறுவ விழைகிறார். அனைத்து அரசர்களுக்கும் இறைவன் மேலானவர், விண்ணரசுக்கு ஏற்றபடி மண்ணரசையும் மாற்ற வலிமையுள்ளவர் என்பதையும் எடுத்துரைக்கிறது முதல் வாசகம். அரசியலை மதமாக்கி மதத்தை அரசியலாக்க நினைப்பவர்களுக்கு இயேசு தரும் படிப்பினை இன்றையச் சூழலுக்கு எவ்வளவு இன்றியமையாதது! சமயச் சார்பற்ற நாடு என்பதை மறந்து சமயமும் அரசியலும் மோதிக் கொள்கின்றன என்றால் ஆழமில்லாத ஆன்மிகமும் அக்கறையில்லாத அரசியலும்தாம் காரணம். மனித மாண்பை மதிக்கும், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசியல் தேவை. மதத்தை மட்டுமே அரசியலாக்குவது ஆபத்தானது. நாம் இறைவனின் சாட்சியாக, நாட்டின் மனச்சாட்சியாக வாழ வேண்டியவர்கள்.
கிறிஸ்தவன் இறையாட்சி, குடியாட்சி என்று இரு உலகுக் குடியுரிமை வெற்றவன். இறையாட்சிக்குரியவர்கள் என்று சொல்லி குடியாட்சிக்குரியவர்கள் என்ற நிலையைப் புறக்கணிக்கத் தேவையில்லை. இயேசுவின் சீடர்கள் இவ்வுலக அரசுக்கும் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதை, தலைமைத் திருத்தூதர் “அனைத்து மனித அமைப்புக்களுக்கும் ஆண்டவன் பொருட்டுப் பணிந்திருங்கள் ” (பேதுரு 113) என்கிறார். திருத்தூதர் பவுலும் “ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள். ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவும் இல்லை” (உரோ. 19:1) என்கிறார். “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது” (யோ. 19:11) இயேசு சொன்னது.
நாம் நல்ல குடிமக்களாக இருந்து கொண்டே நமது நாட்டையே இறையாட்சியின் மதிப்பீடுகளால் மாற்றுவோமானால் அதுவே சிறந்தது. ஆறையாட்சியின் விமுமியங்கள்: 1. உண்மையின் அடிப்படையில் நீதி; 2. மனித உரிமையின் அடிப்படையில் சுதந்திரம்; 3. அன்பின் அடிப்படையில் தோழமை.
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு உண்மை உண்டு. எங்கே நாட்டின் விதிகளும் கடவுளின் விதிகளும் முரண்படுகின்றனவோ, அங்கு நாம் பின்பற்ற வேண்டியது கடவுளின் விதிகளையே! எடுத்துக்காட்டாக, கருக்கலைப்பை ஒர் அரசு அங்கீகரித்தால் அதைக் கிறிஸ்தவன் எதிர்க்க வேண்டும்.
சீசருக்குரியதைசீ சீசருக்குக் வகாடுப்போம். சீசருக்கு உர்மையில்லாததை, அந்த ஆனானப்பட்ட சீசரே நேரில் வந்து கேட்டாலும் கல்லைலயன்று எசால்லுவோம். கடவுள் சீசரீலும் மேலானவர்!
சீசரும் கடவுளும்... கலப்பது சரியல்ல?
அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கொடுக்கப்பட்டால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான், உலகம், சிறிது சிறிதாக, நரகமாக மாறி வருகிறதோ, என்று எண்ணத் தோன்றுகிறது. “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ்பெற்ற வரிகளை, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய இப்புகழ் மிக்கக் கூற்றையும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும், இந்த ஞாயிறு சிந்தித்து, பயன் பெறுவோம்.
சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த உவமைகள் வழியே, இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை, பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.
மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை, நாம் பயிலமுடியும். முயல்வோம் வாருங்கள்.
கடந்த மூன்று வாரங்களாய் இயேசு தன் உவமைகள் வழியே கசப்பான உண்மைகளை பரிசேயர்களுக்கு உணர்த்த முயன்றார். அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள், இயேசுவை எப்படியாவது சிக்கவைத்துவிடும் குறிக்கோளுடன், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.
பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில், கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால்விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள். ஏரோதியர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகள் செய்தனர். கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்துவிட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.
அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை, நாம், இந்தியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும், பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பல முறை வெட்கி, வேதனையடைந்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.
அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம். ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால், நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.
கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்த பாடம். இயேசுவை வீழ்த்தும் எண்ணத்துடன் கூட்டணி சேர்ந்துவரும் இவ்விரு குழுவினரும் இயேசுவைப் புகழ்ந்து பேசுவது, நம்மை மீண்டும் வெட்கி தலைகுனிய வைக்கிறது. உதட்டளவில் புகழ்மாலைகளையும், உள்ளத்தில் நஞ்சையும் சுமந்து வந்த இவர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கின்றனர்.
இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:
மத்தேயு நற்செய்தி 22: 18-21
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட 'தெனாரியம்' என்ற நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை, நமக்கு மூன்றாவது பாடமாக அமைகின்றன. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம், உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex Maximus' அதாவது ‘குருக்களுக்கெல்லாம் பெருங்குரு’ என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர், தன்னை, வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு, அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.
சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள்’ என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.
மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு, மதச்சாயங்கள் பூசப்படுவதையும், நாம், அதிக அளவில் கண்டு வருகிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.
அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள், ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர். பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.
இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியல் கலந்திருப்பது மறுபக்கம். மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்துவிட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், அரசியல்வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.
மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. மதமும், அரசியலும் கலக்கும்போது, அரசியலுக்கே உரிய அதிகார வேட்கை, வெறுப்பு, பழிதீர்க்கும் வெறி ஆகியவை மதத்தின் பெயரால் வெளிப்படுகின்றன. அரசியல் வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, யாரையும், எதையும் பயன்படுத்த தயங்குவதில்லை. எனவே, மதமும் அவர்களுக்கு ஒரு பகடைக்காய்தான். அரசியலாக்கப்பட்ட மதத்தின் அவலங்கள், இந்தியாவில், அண்மைய ஆண்டுகளில், அதிகமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தற்போது புனித பூமியில் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல்களும், அதற்கு பதில் அளிக்கும் வண்ணம், அப்பாவி பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் வெறித்தனமான தாக்குதல்களும், மதத்தின் அடிப்படையில் உருவான அரசியல் வெறியின் அடையாளங்கள்.
இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?
"நம்பிக்கை செயலில் வெளிப்பட வேண்டும்!
இரு சிறு நகரில் இருந்த அருள்பணியாளர் ஒருவர் தன்னுடைய போதனைகளில் பெரும்பாலான நேரங்களில் நம்பிக்கையைப் பற்றியே பேசி வந்தார். ஒருநாள் கோயிலுக்குத் தவறாமல் வரும் வங்கி மேலாளர் ஒருவர் அவரிடம், “எப்போதும் நம்பிக் கையைப் பற்றியே போதித்து வரு கிறீர்கள். நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வகையில் வேறு எதைப் பற்றியாவது போதிக்கலாமே[!” என்றார். அப்போது அருள்பணியாளர் அவருக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
சில நாள்கள் கழித்து ஒரு மதிய வேளையில் அருள்பணியாளர் பணி நிமித்தமாக வெளியே சென்று கொண்டிருந்தபோது, மக்கள் கூட்டமாக ஒரு வங்கியின் முன்பாக நின்று கொண்டு ஆர்ப்பாட்டம். செய்து கொண்டிருந்தார்கள். அந்த வங்கியில் தான் கோயிலுக்குத் தவறாமல் வரு கின்ற வங்கி மேலாளர் பணிசெய்து கொண்டிருந்தார்.
உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம், “ “எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்துகொண் டிருக்கின்றீர்கள் ?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “வங்கி நிர்வாகம் எங்களுடைய பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டது. அதனால்தான் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று இப்படி ஆர்ப் பாட்டம் செய்துகொண்டிருக்கின்றோம்” என்று வேதனையோடு சொன்னார்.
அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர். பின்னொரு நாளில் அவர். வங்கி. மேலாளரைக் கோயிலில் சந்திக்க நேர்ந்தது. அச்சந்திப்பின் போது அவர் அருள்பணியாளரிடம், “நடந்த அனைத்தையும் . கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு எங்கள். மீதான நம்பிக் கையே போய்விட்டதால், வங்கியை இழுத்து மூடிவிட்டோம்'. என்றார். அப்போது அருள்பணியாளர் அவரிடம், “இப்போது புரிகிறதா நம்பிக்கை யானது எந்தளவுக்கு நடைமுறை வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கின்றது என்று. எந்த இடத்தில் உண்மையான நம்பிக்கை இருக் கின்றதோ, அந்த இடத்தில் எல்லாமும் இருக்கும்” என்றார்.
அன்றாட வாழ்விற்கும் சரி, ஆன்மிக வாழ்விற்கும் சரி நம்பிக் கையை விடவும் இன்றியமையாதது வேறு எதுவும் இல்லை. அந்த நம்பிக்கை செயலில் வெளிபட்டால், அதை விட வேறு எதுவும் ஒருவருக்கு ஆசிகளைப் பெற்றுத் தந்துவிடாது. பொதுக் காலத்தின் இருபத்து ஒன்பதாம் ஞாயிறான ஒன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, “நம்பிக்கை செயலில் வெளிப்பட வேண்டும்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
தெசலோனிக்கர்களின் உயர்ந்த நம்பிக்கை!
பிறவினத்தாருக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டு சென்றவர்களில் முன்னோடி பவுல். இவர் தன்னுடைய இரண்டாவது திருத்தூதுப் பயணத்தின்போது மாசி தோனியாவிலிருந்த ஒரு துறைமுக நகரமான தெசலோனிக்காவிற்கு நற் செய்தி அறிவிக்கச் சென்றார். அங்கு யூதர்கள் மிகுதியாக இருந்தாலும் பிறவினத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் நடுவில் இவர் நற்செய்தியை அறிவிக்கையில் எதிர்ப்பு வந்தது. அதனால் இவர் அங்கிருந்து எதெனசிற்கு வந்தார்.
பவுல் எதென்சிற்கு வந்தபோதும் தெசலோனிக்கர்களைப் பற்றிய எண்ணமே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. இதனால் அவர்கள் நடுவில் திமொத்தேயுவை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர். தெசலோனிக்கர்களைப் பற்றிய நல்ல செய்தியோடு, அதாவது அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு நடுவிலும் நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதைக் கண்டு, தெசலோனிக்கருக்கு முதல் திருமுகத்தை எழுதுகின்றார் பவுல். அதில். அவர், “உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம். செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை யையும்... உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள் முன் நினைவு கூருகிறோம்'” என்கிறார்.
வாழ்க்கையில் எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கையில் நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது ஒன்றும் பெரிதில்லை. பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் சந்திக்கின்றபோது நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதுதான் பெரிது. தெசலோனிக்கர்கள் பல்வேறு துன்பங்களுக்கு நடுவிலும் தங்கள் நம்பிக் கையில் மிக உறுதியாய் இருந்தார்கள். இதனாலேயே பவுல் அவர்களை நினைத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றார்.
பரிசேயர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடு
தெசலோனிக்கர்களின் நம்பிக்கை பெயரளவில் நில்லாமல், செயலில் வெளிப்பட்டது; ஆனால், இதற்கு முற்றிலும் நேர் எதிராக இருந்தது பரிசேயர்களின் நம்பிக்கை. யூதச் சமூகத்தில், சமயத் தலைவர் களாக இருந்தவர்கள் பரிசேயர்கள். இவர்கள் எருசலேம் திருக்கோயிலில் நடந்த முறைகேடுகளைக் களைவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும்; ஆனால், இவர்கள் அப்படி எந்தவொரு முயற்சி யையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் அங்கு நடந்த முறைகேடுகளைக் கடுமை யாகச் சாடிய, எருசலேம் திருகோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த இயேசுவுக்கு எதிராகச் செயல்படுகின் றார்கள்; அவரை எப்படி ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கின்றார்கள்.
இன்றைய நற்செய்தியில் ' அவர்கள் இயேசுவிடம் சீசருக்கு வரி செலுத்துவது முறையா ? இல்லையா ? : என்ற கேள்வியைக் கேட்பது இதனுடைய வெளிப்பாடுதான். இயேசு கடவுளின் ஞானம்: (1 கொரி 1:17). அதனால் சீசருக்கு வரி செலுத்து முறை, அல்லது முறையில்லை என்று எப்படிப் பதில் சொன்னாலும் தனக்குச் சிக்கல் வரும் என்று அவருக்கு நன்றாகவே தெரிந் திருந்தது. அதனால் அவர் ஒரு நாணயத்தைக் கேட்டு வாங்கி, அதில் பொறிக்கப்பட்டிருந்த உருவம் யாருடையது எனக் கேட்டு அறிந்து கொண்டு, சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்கிறார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது. பரிசேயர்களின் எதிரான செயல்பாடுதான். உண்மையில் அவர் கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுளின் ஒரே மகனாம் இயேசு வுக்கு எதிராகச் செயல்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களிடம் இருந்தது போலியான நம்பிக்கை. அதனால் அவர்கள் இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.
நாம் கடவுளுக்குரியவர்கள்
இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கின்ற பதிலில், “கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று சொல்லியிருப்பார். இதற்குத் திருவிவிலிய அறிஞர்கள் விளக்கம் அளிக்கும்போது, சீசர் உரோாமையின் அரசராக இருந்தாலும், கடவுள் அனைத் துலகின் அரசர் என்பதால், அவரும் கடவுளுக்கு உரியவர் என்பதால், அவர் கடவுளுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்பர்.
இந்த உண்மையை நன்றாக உணர்ந்துகொள்ள, இன்றைய முதல் வாசகத்தை நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம். முதல் வாச கத்தில் பாரசீக மன்னன் சைரசைப் பற்றி வாசிக்கின்றோம். கடவுள் இவரைப் பாபிலோனில் அடிமை களாக இருந்த யூதா நாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு விடு தலை செய்து அனுப்பத் தேர்ந்தெடுக்கின்றார். அடிப்படையில் சைரஸ் மன்னர் பிறவினத்தாராக இருந்தாலும், அவர் கடவுளுக்கு உரியவராய்ச் செயல்படுகின்றார்.
எனவே, நாம் யாராக இருந் தாலும் கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, அவரது உண்மையான மக்களாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு
“நம்பிக்கை செயல் வடிவம் பெறா விட்டால், தன்னிலே அது உயிரற்ற தாயிருக்கும்” (யாக் 2:17) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, கடவுளுக்கு உரியவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இதயங்களும் பாதங்களும்
இன்று ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு. இந்த நாளை அகில உலக மறைபரப்புப் பணி (நற்செய்தி அறிவிப்பு பணி) ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம் என்பதையும், இந்த உலகத்தில் நாம் கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகரும் அழைப்பைப் பெற்றுள்ளோம் என்பதையும் இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது. 'பற்றியெரியும் இதயங்கள், பயணப்படும் பாதங்கள்' என்னும் தலைப்பில் இந்த ஆண்டு மறைபரப்புக் கொண்டாட்டத்துக்கான செய்தியை வழங்கியுள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
பற்றியெரியும் இதயங்கள் நம் வேர்களையும், பயணப்பட வேண்டிய பாதங்கள் நாம் தர வேண்டிய கனிகளையும் அடையாளப்படுத்துகின்றன. இறையன்பில் வேரூன்றி, பிறரன்பில் கனிதருதல் நற்செய்தி அறிவிப்பு பணி. எருசலேம் நோக்கித் திரும்ப வேண்டிய கால்கள், இயேசுவின் சொற்களால் பற்றியெரியும் உள்ளங்களால் உந்தப்பட வேண்டும்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 45:1,4-6), இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை ஆற்றுப்படுத்தும், நம்பிக்கை தரும் பகுதி இது (எசா 44:24 - 45:8). இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அனுபவித்த சிறைவாசமும், நாடுகடத்தப்பட்ட நிலையும், பாரசீக அரசர் சைரஸ் அவர்களால் நிறைவுக்கு வருகிறது. கிமு 539-இல் பாபிலோனியாவை வெற்றிகொள்ளம் சைரஸ், சிறையில் இருக்கும் அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்ற ஆணை பிறப்பிக்கின்றார் (காண். 2 குறி 36:22-33). எசாயாவைப் பொருத்தவரையில், கடவுளே சைரஸ் அரசரில் செயலாற்றுகிறார். அல்லது, நெபுகத்னேசர் அரசரைக் கொன்று இஸ்ரயேலைக் காயப்படுத்திய கடவுள், சைரஸ் அரசரைக் கொண்டு அக்காயத்திற்கு மருந்திட்டுக் குணமாக்குகிறார். ஆக, நெபுகத்னேசர் மக்களை அடிமைப்படுத்தினாலும் அவரது அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதே. ஏனெனில், அவருக்கு எதிராகக் கடவுள் சைரஸ் அரசரை எழுப்புகிறார். சைரஸ் அரசரை எசாயா, 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்' என அழைக்கிறார். 'திருப்பொழிவு செய்யப்படுதல்' என்பது இஸ்ரயேல் மக்களின் அரசர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். ஆனால், சைரஸ் அரசர் இஸ்ரயேல் மக்களை அவர்களது அடிமைத்தளையிலிருந்து விடுவித்ததால், 'யாக்கோபை முன்னிட்டும் கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஊழியராக' அவர் மாறுகின்றார்.
ஆனால், இது சைரஸ் அரசருக்கே தெரியாது. ஆகையால்தான், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்' என்றும், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்' என்றும் ஆண்டவர் சொல்கின்றார். இது நமக்குச் சொல்வன இரண்டு: ஒன்று, வரலாற்று நிகழ்வுகள் அனைத்தின் காரணர் கடவுள் ஒருவரே. இரண்டு, நம்மை அறியாமலேயே கடவுள் நம்மைப் பயன்படுத்திச் செயலாற்ற வல்லவர்.
இவ்வாசகம் மூன்று விடயங்களைக் கொண்டிருக்கிறது: கடவுளின் அருள் எல்கைகளைக் கடந்து விரிகிறது. கடவுள் வரலாற்றைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார். கடவுள் எல்லாம் வல்லவர்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 1:1-5), புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவைக்கு எழுதிய திருமடலின் வாழ்த்து மற்றும் முன்னுரைப் பகுதியாக அமைந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் முதன்முதலாக எழுதப்பட்ட (கிபி 51) இந்நூலை, பவுல், கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார். தெசலோனிக்கத் திருஅவை என்பது மாசிதோனியாவில் உள்ள ஒரு குழுமம். இந்தக் கடிதத்தின் அமைப்பே பவுலின் மற்றக் கடிதங்களிலும் காணப்படுகின்றன. தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தல் மற்றும் இயக்கம் குறித்துக் கடவுளுக்கு நன்றிகூறுகிறார் பவுல். 'உங்கள் அனைவருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்' என்னும் பவுலின் வார்த்தைகள், தெசலோனிக்கத் திருஅவையை ஒரே குழுமமாக இணைத்தது இறைவன்தான் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதை முன்வைக்கின்றன. மேலும், 'செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள நம்பிக்கை' என இறைமக்களின் மதிப்பீடுகளையும், நற்பண்புகளையும் பாராட்டுகின்றார். ஆக, தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் காரணம் தான் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்குக் காரணம் இறைவன் என்றும், இறைமக்கள் என்றும் அறிக்கையிடுகிறார் பவுல்.
இங்கேயும் மூன்று விடயங்கள்: நம்பிக்கை செயலில் வெளிப்பட வேண்டும். நாம் உழைக்கிற உழைப்பு அனைத்தும் அன்பினால் தூண்டப்பட வேண்டும். மனவுறுதி நம் எதிர்நோக்கை அணையாமல் காக்க வேண்டும்.
நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 22:15-21) பாடச் சூழல் எருசலேமில் இயேசு. வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபின், அவருடைய உவமைப் பொழிவு முடிந்து, நான்கு குழுவினர் அவரை வௌ;வேறு கேள்விகளால் சோதிப்பதாக மத்தேயு பதிவு செய்கின்றார். எருசலேம் நகருக்குள் நுழைகிற இயேசு முதலில் கோவிலைத் தூய்மையாக்குகிறார். இதுவே அவருடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டியது. தொடர்ந்து, 'இரு புதல்வர்கள்,' 'கொடிய குத்தகைக்காரர்,' 'திருமண விருந்து' உவமைகள் வழியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் நிராகரிக்கப்பட்டதையும், விண்ணரசின் அழைப்புக்கு அவர்கள் தகுந்த பதிலிறுப்பு செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறது. இது அவர்களுடைய கோபத்தை அதிகமாக்கியது. இயேசுவுக்கு எதிராகச் செயல்படவும் அவரைப் பேச்சில் சிக்க வைக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
அவ்வகையில், பரிசேயர்கள், ஏரோதியர்கள் சிலரோடு இணைந்து, அவரைப் பேச்சில் சிக்கவைக்குமாறு அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்புகின்றனர்: 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனெனில், 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் இயேசுவுக்கு ஆபத்து. 'முறையே' என இயேசு சொன்னால், அவர் மக்களை மீட்க வந்த அரசர் அல்லர், அவர் இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தை விரும்புகிறார் என மக்களை அவருக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள். 'முறை இல்லை' எனச் சொன்னால், அவர் உரோமைக்கும் உரோமையின் ஆட்சியாளர்களுக்கும் எதிராகச் செயல்படுவதாக அவர்மேல் குற்றம் சுமத்துவார்கள்.
அவர்களின் தீய நோக்கத்தை அறிகின்ற இயேசு, 'வெளிவேடக்காரரே' என அவர்களை அழைத்து, 'வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் கொடுங்கள்' என்று கேட்க, அவர்களும் நாணயம் ஒன்றைக் கொடுக்கின்றனர். அதில், 'இறைவனான அகுஸ்து பேரரசரின் மகன் திபேரியு' என எழுதப்பட்டுள்ளது. கடவுள் வாக்களித்துக் கொடுத்த நாட்டில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அல்லது யூதர்கள், தங்களின் கைகளிலும் பைகளிலும் உரோமை அரசின் நாணயத்தை, அதுவும், 'இறைவனான அகுஸ்து' என்னும் எழுத்துகள் கொண்ட நாணயத்தை வைத்திருப்பது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. 'நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என அன்றாடம் செபித்துவிட்டு (காண். இச 6:4), இன்னொருவரை இறைவன் எனக் கொண்டாடுவது தவறு என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றார் இயேசு. ஆகையால்தான், வெளிவேடக்காரரே என அவர்களை அழைத்து, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' எனக் கூறுகிறார்.
இப்படிச் சொல்வதன் வழியாக, உரோமைப் பேரரசின் அரசாட்சியை ஏற்றுக்கொள்வதோடு, உரோமைக்கு வரி செலுத்துவதை ஏற்றுக்கொள்வதோடு, 'சீசருக்கு உரியது அவருடைய நாணயமே தவிர வேறு அல்ல!' என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கின்றார். மேலும், சீசருக்கு உரிய நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, 'கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்' - அதாவது, 'உங்கள் நல்வாழ்வு, நற்செயல், நற்பண்பு, ஆற்றல், அன்பு, வலிமை அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுங்கள்' என்கிறார். இப்படிச் சொல்வதன் வழியாக, சீசருக்கு உரியதையும் தாண்டியவை இருக்கின்றன என்றும், சீசர் ஒருபோதும் இறைவன் அல்லர் என்றும், இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டதே அனைத்து அதிகாரம் என்றும் ஒருசேர உணர்த்துகிறார். சீசர், பாலஸ்தீனம் அல்லது எருசலேமின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலைக் கட்டுப்படுத்தலாமே தவிர, மனித வாழ்வையும், மனித இலக்கையும் கட்டுப்படுத்த அவரால் இயலாது. ஆக, மனித அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டதே.
சீசருடைய வரையறையை தம் சமகாலத்தவர்க்கு நினைவூட்டுவதோடு, சீசரையும் தாண்டிய கடவுளின் செயல்களுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். எப்போதும் ஆண்டவரே கடவுள், சீசர் அல்லர் என முன்மொழிகிறார்.
சைரசு, சீசர் என அனைத்துப் பேரரசர்களுக்கும் மேலாக இருக்கக் கூடியவர் ஆண்டவர். இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 96) குறிப்பிடுவது போல, 'அவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும்.'
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?
(அ) அனைத்தும் ஆண்டவருடைய கையில்!
இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றது நெபுகத்னேசர். ஆனால், ஆண்டவரே அனுமதித்ததால்தான் அது நடந்தேறியது. பாரசீகப் பேரரசர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றி மீண்டும் மக்களைத் தம் சொந்த நாட்டுக்கு அனுப்புகிறார். இதை நடத்துபவரும் ஆண்டவரே. ஆக, 'அவரே இதைச் செய்கிறார். அவரே ஆண்டவர். வேறு எவரும் இல்லை'. உலகில் உள்ள எந்த அதிகாரமும் வரையறுக்கு உட்பட்டதே. யாரும் எல்லா நாட்களும் எல்லா இடத்திலும் ஆட்சி செலுத்துவதில்லை. எல்லா அதிகாரமும் முற்றுப்பெறும். ஆக, நாம் இன்று அதிகாரத்தில் இருந்தால் இதை உணர்ந்து கொஞ்சம் தாழ்ச்சியாக நடந்துகொள்வோம். அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்.
(ஆ) செயல்-உழைப்பு-மனவுறுதி
நாம் கொண்டிருக்கிற கிறிஸ்தவ நம்பிக்கை வெறும் கோட்பாட்டு நம்பிக்கையாக நின்றுவிடக் கூடாது. மாறாக, அது பிறரன்புச் செயலாக வெளிப்பட வேண்டும். நம் உழைப்பு அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். இயேசுவைப் பற்றிய எதிர்நோக்கு மனவுறுதி தர வேண்டும். செயல், உழைப்பு, மனவுறுதி இம்மூன்றின் வழியாக நாம் நமக்கென்று ஓர் அதிகாரத்தைக் கட்டி எழுப்ப முடியும். நம்மை ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இருந்தாலும், நான் என்னை முதலில் ஆட்சி செய்ய வேண்டும், எனக்குரிய வாழ்வை என் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். என் சொற்களுக்கும் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் எண்ணிப்பார்ப்போம். அவற்றுக்கு ஏற்ற உழைப்பை நாம் கொடுக்கிறோமா? நம் செயல்கள் பயனற்றதாகத் தெரியும்போது மனவுறுதியோடு தொடர்ந்து பயணிக்கும் பக்குவம் பெறுகிறோமா?
(இ) சீசருக்கு உரியதும் கடவுளுக்கு உரியதும்
சீசருக்கு வரி செலுத்துவது முறையா? எனக் கேட்ட பரிசேயர்களும் ஏரோதியர்களும் வாழ்வின் இன்னொரு பக்கத்தை மறந்துவிட்டதை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். சீசருக்கு உரியது எது, கடவுளுக்கு உரியது என நாம் தேர்ந்து தெளிய வேண்டும். உலகுசார்ந்த மற்றும் கடவுள்சார்ந்த செயல்களுக்கு உரிய நேரத்தை, ஆற்றலை நாம் கொடுக்க வேண்டும். தனிநபர், குடும்பம் என நம் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளாமல், சமூகம், பங்கு, மறைமாவட்டம் ஆகிய தளங்களில் நம்மையே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சமூக அக்கறை, வறியோர் மேம்பாடு, இயற்கை பேணுதல் என நம்மையே விரித்துக்கொடுக்க வேண்டும். சமூகத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் நிறையவற்றைப் பெறுகிற நாம் ஒரு சிலவற்றின் வழியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இறுதியாக,
இறைவார்த்தை கேட்டு நம் உள்ளங்கள் தூண்டப்பட்டால், நம் பாதங்கள் பயணங்களைத் தொடங்கும். மறைபரப்புப் பணி என்பது நம் நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல. மாறாக, தேவையிலிருப்பவர்களை நாடிச் செல்வது, வலுவற்றவர்களுக்குத் திடம் தருவது, ஒருவர் மற்றவரை ஊக்குவிப்பது போன்றவையே. 'மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 96).
நம் பணிகளின் இலக்கு ஆண்டவரின் மாட்சியாக அமையட்டும்!
இதயங்கள் இறைவனிலும் பாதங்கள் உலகிலும் இருக்கட்டும்!
"உழைப்பு உலகிற்கு…. உள்ளம் …. உன்னதருக்கு"
இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை, நமது வாழ்வை கட்டுப்படுத்தும் இரண்டு விதமான அதிகாரங்களை குறித்து சிந்திக்க அழைக்கின்றது. 1) விண்ணக அதிகாரம் 2) மண்ணக அதிகாரம். இறைவனை நம்பும் ஒவ்வொருவரும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இந்த இரண்டு அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டவர் ஆகிறார்கள்.
உலகை இறைவன் பொது உடமையாக அனைவருக்காகவும் படைத்த போதிலும், மனிதன் அதனை பிரித்து அவரவர் வசதிக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒவ்வொரு இடங்களில் வாழ பழகிக் கொண்டான். பிற்காலத்தில் இதுவே நாடுகளாக, அரசுகளாக, தனித்தனி மனித சமூகமாக, மலர்ந்து இன்றும் உலகில் நிலை பெற்று நிற்கின்றது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது பலவிதமான பிரிவுகள் கொண்ட நாடுகள் இருந்தன அவரும் யூதேயா என்ற நாட்டில் தான் வாழ்ந்து வந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் ஆண்டவர் இயேசுமுன் ஒரு கேள்வி வைக்கப்பட்டது.
" நாங்கள் சீசருக்கு வரி கொடுப்பது சரியா அல்லது தவறா? " என்பதே அக்கேள்வி. முதலில் "சீசர்" என்பவர் யார் என்பதை யோசிப்போம். அவர் யூத மக்கள் அடிமைப்பட்டு இருந்த ரோம சாம்ராஜ்யத்தின் அரசர் அவருடைய ஆளுமையில் யூதேயா நாடு இருந்தது. அன்றைய வழக்கப்படி மட்டுமல்ல, இன்றைய வழக்கப்படியும் நாட்டை ஆளும் அரசனுக்கு அரசாங்கத்திற்கு மக்கள் வரி செலுத்துவது நடைமுறையாக இருக்கின்றது.
இனி முதல் வாசகத்துக்கு வருவோம் ஏசாயா 45: 1, 4-6 வசனங்களில் ஒன்றும் அறியாத குறிப்பாக ஆண்டவரையே அறியாத சைரஸ் என்பவரை ஆண்டவர் அழைத்து பேரும் புகழும் கொடுத்து, அரசன் ஆக்குவதையும் அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவருக்கு சகல வல்லமைகளையும் தருவதை நாம் படிக்கின்றோம். இதில் கவனிக்க வேண்டியது மக்கள் அறியும்படி இதைச் செய்கிற ; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. என்று இறைவனே அறிக்கை விடுகின்றார். அப்படி எனில் மக்களை பாதுகாக்கவும் வழி நடத்தவும் உருவாகும் அரசன் அல்லது அரசாங்கம் இறைவனின் திட்டப்படி உருவாக்கப்படுகினன்றது என்பது தெளிவாகின்றது.
நாம் ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது நமது தேவைகள் பாதுகாப்பு என அனைத்தும் அடுத்தவரைச் சார்ந்து இருப்பதை நாம் மறுக்க முடியாது. இந்த அடுத்தவர் என்பது பொதுவாக அவ்விடத்தை ஆளுமையில் வைத்திருக்கும் அதிகாரத்திற்கும் அரசாங்கத்திற்கும் பொருந்துவதாக இருக்கின்றது. இது உலக பொது வழக்கு. இதே சூழ்நிலையில்தான், அன்று யூதர்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர். இயேசு ஆண்டவர், எனவே தெளிவாக -
சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று கூறினார்.
இன்று நமது நாட்டில் நடைமுறையில் எத்தனை விழுக்காடு மக்கள் அரசாங்கத்திற்கு உரிய வரியை முழுமையாக கட்டுகிறார்கள்?.. இது இந்திய நாட்டில் பதில் கிடைக்காத மாபெரும் கேள்வியாகும். அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நமக்கு உடனடியாக வேண்டும். ஆனால், அதை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு தேவைப்படும் பொருளாதார அடிப்படை வருமானமான வரியை; இயன்ற அளவு குறைவாகவோ அல்லது செலுத்தாமலோ இருப்பதில் நாம் பெருமை அடைகின்றோம். எனவே தான் ஆண்டவர் மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகின்றார் யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை முழுமையாக தர வேண்டும் என்று.
அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, நம்மோடு பயணிக்கும் அயலானுக்கும் பகிரப்பட வேண்டும். இன்று கலாச்சாரமும் உறவுகளின் மதிப்பீடுகளும் நிறைந்த இந்திய நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ந்து உள்ளது. காரணம், எழுபது விழுக்காடுகளுக்கு மேல் இந்த முதியவர்கள் கவனிப்பாரற்று பொருளாதார பற்றாக்குறையுடன் பிறரால் ஒதுக்கப்படுகிறார்கள். இவர்களை - இன்று, இப்படி நிராகரிப்பவர்கள்; இன்றுமட்டுமல்ல - என்றும் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய வாழ்கையில்தான் உயிர்வாழ்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். அரசாங்கம் ஆனாலும் அடுத்தவர் ஆனாலும் அவர்களுக்கு தர வேண்டிய உறவின் மதிப்பீடுகள், மதிப்பு மரியாதைகள், பொருளாதார கட்டணங்கள் - உதவிகள், பாதுகாப்புகள் என அனைத்தையும் ஏறெடுக்க….…சீசருக்கு (அயலானுக்கு) தரவேண்டியது என இயேசு நினைவு படுத்துகிறார்.
இயேசு கடவுளுக்கு தர வேண்டியதையும் தரவேண்டும் என்கிறார்.
எதைத் தருவது ?... தசமபாகமா?... அகிலமும் அதில் உள்ள அனைத்தும் அவர் படைப்பாக இருக்கும்போது …. நமது என்று நாம் எதைத் தருவது.?.
இதற்கு புனித பவுல் அடிகளார் இரண்டாம் வாசகத்தின்(1தெ: 1-5a)
வழியாக நல்ல ஒரு செய்தியை நம் முன் வைக்கின்றார். செயலில் வெளிப்பட்ட தெஸலோனிக்கர்களின் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட அவர்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதில் அவர்கள் பெற்றுள்ள மனவுறுதியையும் நினைவு கூறுகின்றார். தெசலோனிக்கர்கள் இதனால் இறைமுன் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறுகின்றார்.
இப்படி தெசலோனிக்கர் பற்றி பவுல் அடிகளார் பெருமைப்பட காரணம் திருத்த தொண்டர்கள் மன உறுதியோடு தூய ஆவியாரின் துணையோடு நற்செய்தியை பகிர்ந்து கொண்டதும் ; அவர்களிடையே அவர்கள் நடந்து கொண்ட வழிகாட்டுதல் கொண்ட வாழ்வியல் நடை முறையும்தான் என நினைவு கொள்கிறார். ஆக கடவுளுக்கு தரக்கூடியது நமது வாழ்க்கையாக மட்டுமே இருக்கும், இருக்க வேண்டும் என்பதை பவுல் அடிகளாரின் வாழ்வியல் நடைமுறை நமக்கு பாடம் புகட்டுகின்றது.
கானாவூர் தொடங்கி கல்வாரிவரை மனிதர்கள் கடினம் இது முடியாது என நினைத்தவற்றை - இயேசு இறைவன் முன்னும் மனிதர்கள் முன்னும் முடியும் என முடித்துவைத்தார்.. இப்படிப்பட்ட உன்னத வாழ்க்கையை இறைவனுக்கு தந்திட நமக்கும் அன்பினால் உந்தப்பட்ட உழைப்புடன்கூடிய மன உறுதி தேவை. வாருங்கள் உடல் உழைப்பின் பயன்களை உலகிற்கும் -. கடவுள் நமக்குத் தந்த வாழ்வை கடவுளுக்கும் தந்து காலம் எல்லாம் மகிழ்ந்திருப்போம்.
உலகம் இவர்கள் இறைவனால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்கள் என்று பறைசாற்றட்டும்.
இறைவன் நம்மோடு.
