மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 5: 1-7|பிலிப்பியர் 4: 6-9|மத்தேயு 21: 33-43

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

ஒரு காட்டில்‌ உயிரினங்கள்‌ எல்லாம்‌ ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம்‌ நடத்தின. வாழ்க்கையின்‌ அர்த்தம்‌ என்ன? என்பதே அதன்‌ விவாதம்‌. இனிமையாகப்‌ பாடுவதே வாழ்க்கை என்றது குயில்‌. இருட்டில்‌ மூலை முடுக்கெல்லாம்‌ சுற்றித்‌திரிவதே வாழ்க்கை என்றது சுண்டெலி. மற்றவர்கள்‌ கண்‌ குளிர, பறந்து மகிழ்ந்து சுற்றிச்‌ சுற்றி வருவதுதான்‌ வாழ்க்கை என்றது வண்ணத்துப்‌ பூச்சி. இல்லவே இல்லை. உழைத்துக்‌ கொண்டே இருப்பதுதான்‌ உண்மையான வாழ்க்கை என்றது எறும்பு. அனைவரும்‌ பார்த்து வியக்கும்‌ அளவுக்கு உயர, உயரப்‌ பறந்து போவதுதான்‌ வாழ்க்கை என்றது அசோக மரம்‌. இல்லவே இல்லை! நீண்ட காலம்‌ வாழ்ந்து சிறந்த வாரிசுகளை உருவாக்குவதே வாழ்க்கை என்றது ஆலமரம்‌. சோகமும்‌ கண்ணீர்த்‌ துளிகளும்‌, அழுகையும்தான்‌ வாழ்க்கை என்றது திரண்டு நின்ற மேகம்‌. இவ்வாறு ஆளுக்கொரு பதில்‌ சொல்லி அலுத்துப்போய்‌ இறுதியில்‌ மரத்தடியில்‌ தவம்‌ செய்து கொண்டிருந்த துறவியிடம்‌ சென்று, வாழ்க்கையின்‌ அர்த்தம்‌ என்ன? என்று கேட்டார்கள்‌. படைப்புகள்‌ அனைத்தும்‌ நல்லதெனக்‌ கண்டார்‌ படைத்த இறைவன்‌. அவரவருக்குக்‌ கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை சுயநலமில்லாமல்‌, ஆசைப்படாமல்‌, பொறாமைப்‌ படாமல்‌, காலத்தையும்‌ நேரத்தையும்‌ சரியாகப்‌ பயன்படுத்தி யாருக்கும்‌ எந்தத்‌ தொந்தரவும்‌ செய்யாமல்‌ அடுத்தவர்‌ நலனில்‌ அக்கறையும்‌ அன்பும்‌ கொண்டு வாழ்வதே வாழ்க்கை என்றார்‌ துறவி.

இன்றைய நற்செய்தியானது குத்தகைக்காரன்‌ தனக்குக்‌ கிடைத்த வாய்ப்புக்களைச்‌ சரியான முறையில்‌ பயன்படுத்திக்‌ கொள்ளவில்லை என்பதைத்‌ தெளிவுபடுத்துகிறது. முதல்‌ வாசகத்தில்‌ வாசித்ததுபோல, இஸ்ரயேல்‌ மக்களைத்‌ திராட்சைத்‌ தோட்டத்திற்கு ஒப்பிடுகிறார்‌ எசாயா இறைவாக்கினர்‌. இஸ்ரயேல்‌ மக்கள்‌ கடவுளின்‌ திட்டத்திற்கு எதிராகச்‌ செயல்பட்டார்கள்‌.

ஆனால்‌ இம்மக்களைக்‌ கைவிடாமல்‌ தன்‌ ஒரே மகனையே உலகிற்கு அனுப்பி (யோவா. 3:16-17) மீட்பின்‌ திட்டத்தை நிறைவேற்றினார்‌ வானகத்‌ தந்தை.

இதை முன்வைத்துத்தான்‌ இன்றைய நற்செய்தியானது திராட்சைத்‌ தோட்டத்தை இஸ்ரயேல்‌ மக்களுக்கு ஒப்பிடுகிறது. இறைவன்‌ அதன்‌ உரிமையாளர்‌. அதை நிர்வகிக்கும்‌ பொறுப்பு இஸ்ரயேல்‌ மக்களிடமும்‌ தலைவர்களிடமும்‌ கொடுக்கப்படுகிறது. ஆனால்‌ ஒப்பந்தத்தை மீறி உரிமையாளரை அழிக்கத்‌ தூண்டிய சுயநலம்‌ அவர்களின்‌ இதயத்தில்‌ பற்றிக்‌ கொண்டது. இறைவன்‌ தந்த வாய்ப்புக்களைத்‌ தகுந்த விதத்தில்‌ பயன்படுத்திக்‌ கொள்ளத்‌ தவறிவிட்டார்கள்‌. இறுதியில்‌ அவர்களின்‌ சுயநலம்‌ அவர்களின்‌ அழிவுக்கே இட்டுச்‌ சென்றது!

ஆம்‌! இதுபோல இறையரசுப்‌ பணியில்‌ நமது சுதந்திரத்தைப்‌ பயன்படுத்தி நம்‌ திறமைகளையும்‌, படைப்புத்‌ தன்மைகளையும்‌ வெளிக்கொணர இறைவன்‌ வாய்ப்பு. அளிக்கிறார்‌. அதை நாம்‌ சரியாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள முன்வர வேண்டும்‌. நல்ல வாய்ப்புக்கள்‌ நம்மைத்‌ தேடி வந்தபோது அதைப்‌ பயன்படுத்தாமல்‌, விலக்கப்பட்ட கல்லாக வாழும்‌ சூழ்நிலைக்கு நாம்‌ தள்ளப்படுகிறோம்‌

.

விதைக்கின்ற காலத்தில்‌ வீணாக இருந்துவிட்டு, அறுக்கின்ற காலத்தில்‌ அரிவாளைத்‌ தூக்கினால்‌ அதனால்‌ பயன்‌ உண்டா? . பணம்‌ போனால்‌ வரும்‌. நல்ல வாய்ப்புக்கள்‌ போனால்‌ வராது. அழைப்பு என்பது வாழ்க்கையில்‌ கிடைக்கும்‌ ஓர்‌ அரிய வாய்ப்பு. இதைப்‌ பயன்படுத்தி இறைவன்‌ நமக்குத்‌ தரும்‌ ஆற்றல்களைப்‌ பயன்படுத்தி பலன்‌ தரும்‌ திராட்சை நிலமாக மாறுவோம்‌. ஆமென்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீங்கள்‌ வேண்டும்‌ அனைத்தையும்‌ கடவுள்‌ அருள்வார்‌

ஓர்‌ அடர்ந்த காட்டின்‌ வழியாக வழிப்போக்கன்‌ ஒருவன்‌ சென்றுகொண்டிருந்தான்‌. அவனைத்‌ திருடர்கள்‌ திடிரெனத்‌ தாக்கி, அவனிடமிருந்த பொருள்களையல்லாம்‌ பறித்துக்‌ கொண்டு அவனைக்‌ குற்றுயிராய்‌ விட்டுச்சென்றனர்‌. அவ்வழியாகக்‌ குதிரையில்‌ வந்த போர்‌ வீரன்‌ ஒருவன்‌ அடிப்பட்டுக்‌ கிடந்தவன்‌ மீது இரக்கப்பட்டு அவனைக்‌ குதிரையில்‌ ஏற்றி முதலுதவி அளிக்க தன்னுடைய வீட்டுக்குக்‌ கொண்டு சென்று கொண்டிருந்தான்‌. அப்போது அந்தப்‌ போர்வீரன்‌ சற்றும்‌ எதிர்பாராத ஒன்று நடந்தது. அதாவது அவன்‌ பின்னால்‌ அமர்ந்திருந்த வழிப்போக்கன்‌ போர்வீரன்‌ இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து போர்வீரனின்‌ முதுகில்‌ குத்தி அவனைக்‌ கீழே தள்ளிவிட்டு, குதிரையோடு தப்பித்துச்‌ சென்று விட்டான்‌. இவனை நன்றி கொன்றவன்‌ என்று நாம்‌ அழைப்பதில்‌ எந்தத்‌ தவறுமில்லை.

இதைப்‌ போன்றதோர்‌ உவமை ஒன்றை இன்றைய நற்செய்தியிலே இயேசு நமக்கு எடத்தியம்புகின்றார்‌. தங்களுக்கு உதவி செய்த நிலக்கிழாரின்‌ பணியாளர்களையும்‌, அவரின்‌ மகனையும்‌ குத்தகைக்காரர்கள்‌ நையப்‌ புடைப்பதையும்‌, கொலை செய்வதையும்‌ நாம்‌ இன்று வாசிக்கப்பட்ட உவமையிலே காண்கின்றோம்‌ (மத்‌ 21:35-39).

இந்த உவமையிலே வரும்‌ நிலக்கிழார்‌ கடவுள்‌. அவருடைய ஒரே மகன்‌ இயேசு! இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்‌ நடுவிலிருந்து இறையாட்சி (மத்‌ 21:43) அகற்றப்படும்‌ என்கின்றது இன்றைய நற்செய்தி. இறையாட்சி என்பது நீதி, அமைதி, மகிழ்ச்சி (உரோ 14:17) ஆகியவற்றில்‌ அடங்கியிருக்கின்றது என்கின்றார்‌ புனித பவுலடிகளார்‌.

தன்னை ஏமாற்றுகின்ற திராட்சைத்‌ தோட்டத்தை அதன்‌ சொந்தக்காரர்‌ அழித்துவிடுவார்‌ என்கின்றார்‌ இறைவாக்கினர்‌ எசாயா (எசாயா 5:1-6). நாம்‌ கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளாதது எது? நமது உடலும்‌, உயிரும்‌ கடவுள்‌ நமக்குக்‌ கொடுத்த மாபெரும்‌ எகொடைகள்‌. அவனன்றி ஒர்‌ அணுவும்‌ அசையாது என்பர்‌ ஆன்றோர்‌.

இன்று நாம்‌ எத்தனையோ வேண்டுதல்களை இறைவனின்‌ பாதத்தில்‌ சமர்ப்பிக்கின்றோம்‌:
உடல்‌ நலம்‌ வேண்டும்‌! உள்ள அமைதி வேண்டும்‌!
உக்க உடை வேண்டும்‌! இருக்க இடம்‌ வேண்டும்‌!
மான்‌ போல ஒட வேண்டும்‌! மயில்‌ போல ஆட வேண்டும்‌!
குயில்‌ போல பாட வேண்டும்‌! கிளி போல பேச வேண்டும்‌!
வேண்டாம்‌ என்று சொல்லும்‌ வரை வேண்டும்‌ என வேண்டுகின்றோம்‌. நமது மன்றாட்டு கேட்கப்படுமா? நமது வாழ்வு சிறக்குமா? சிறகடித்துப்‌ பறக்குமா?

புனித பவுலடிகளார்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தின்‌ வழியாக, நீங்கள்‌ நன்றியோடு கூடிய இறைவேண்டலில்‌ ஈடுபடுங்கள்‌. அப்போது கடவுளே உங்களோட தங்கி நீங்கள்‌ வேண்டும்‌ அனைத்தையும் ‌உங்களுக்கு அருள்வார்‌ என்கின்றார்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

எந்நன்றி கொன்றார்க்கும்‌ உய்வுண்டாம்‌ உயலில்லை
செய்ந்நன்றி கான்ற மகற்கு (குறள்‌ : 110).

பொருள்‌ : சான்றோர்‌ வரையறுத்த எந்த அறச்‌ செயலுக்கும்‌ மாறாகச்‌ சிசயலாற்றினாலும்‌ தப்பிப்‌ பிழைக்க உரிய கழுவாய்‌ உண்டு. ஆனால்‌ ஒருவர்‌ செய்த நல்ல உதவியை மறந்தவர்க்கு வாழ்வே இல்லை!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒருவர் தன் நண்பரிடம், "ஒரு பத்திரிகையால் என் வாழ்வு பாழாப் போச்சு" என்றார். "அது என்ன பத்திரிகை?" என்று நண்பர் அவரிடம் கேட்டதற்கு "திருமணப் பத்திரிகை" என்றார். ஒரு சிலர்க்குத் திருமணம் சொர்க்கம் வேறு சிலர்க்கு அது நாகம், ஒரு சிலர்க்குக் காதல் சாதாரணம்; வேறு சிலர்க்கு அது அசதாரணம். காதலில் வெற்றி அடைந்தவர்களை விடத் தோல்வி அடைந்தவர்களே அதிகம். ஒருவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அவர் கல்லறையில் வந்து விழுந்தன மலர் வளையங்கள்.

மனிதர் மட்டும் காதலில் தோல்வி அடைவதில்லை. கடவுளும் கூடக் காதலில் தோல்வி அடைந்ததாக இன்றைய முதல் வாசகத்தில் (எசா 5:1-7) கடவுளே கூறுவது நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. கடவுள் தமது வேதனையை ஒரு காதல் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். அவர் நல்லதொரு திராட்சைத் தோட்டத்தை நட்டு வளர்த்தார். ஆனால் அத்தோட்டமோ கனி தரவேண்டிய காலத்தில், நற்கணிகளைக் கொடுப்பதற்குப் பதிலாகக் காட்டுக் கனிகளைக் கொடுத்தது. திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் மக்களே அவர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்த்தக் கனி நீதி, ஆனால் அவர்கள் தந்த கனியோ வன்முறை கடவுள் அவர்களிடம் நேர்மை என்ற கனியை எதிர்பார்த்தார். அவர்கள் கொடுத்த கனியோ முறைப்பாடு.

முதல் வாசகத்தின் கருத்தையே கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உவமை வாயிலாக விளக்குகிறார் நிலக்கிழார் ஒருவர் தமது திராட்சைத் தோட்டத்தைக் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு வெளியூர் சென்றார். பழம் பறிக்கும் காலம் வந்தவுடன் தமக்குரிய பழங்களைப் பெற்று வரும்படி அவர் அனுப்பிய பணியாளர்களைத் தோட்டத் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர். கடைசியாக அவர் அனுப்பிய அவருடைய சொந்த மகனையும் அவர்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டனர். இதைக்கண்ட நிலக்கிழார் அக்கொடிய தோட்டத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டு, முறையாகக் குத்தகை கொடுக்கும் வேறு தொழிலாளர்களிடம் தமது திராட்சைத் தோட்டத்தை ஒப்படைக்கிறார்.

இந்த உவமையின் உட்பொருள் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் நீதி, நேர்மை, அன்பு பிரமாணிக்கம் என்ற கனிகளைப் பெறத் தமது இறைவாக்கினர்களை அனுப்பினார். ஆனால் அம்மக்களோ அவர்களைத் துன்புறுத்திக் கொன்றனர். கடைசியாகக் கடவுள் தமது ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். ஆனால் அவர்கள்கிறிஸ்துவையும் எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறைந்து கொன்றனர்.

மறைக்கல்வி வகுப்பில் அரட்டை அடித்துக்கொண்டு ஆசிரியரைப் பாடம் நடந்த விடாமல் செய்த மாணவர்களிடம் ஆசிரியர் லூக்கா நற்செய்தி பிரிவு 19, சொற்றொடர் 41-ஐ வாசிக்கக் கேட்டார். அதில் என்ன எழுதி இருந்தது? "இயேசு எருசலேம் நெருங்கி வந்ததும் அதைப்பார்த்து அழுதார்" (லூக் 19:41) கிறிஸ்து எருசலேமைப பார்த்து புலம்பிக் கூறியது: "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே. உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே கோழி தன் குஞ்சுகளைத தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே இதோ உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்" (மத் 23:37) கடவுள் அழுதார்; அவர் தம் காதல் தோல்வி அடைந்துவிட்டதே என்று அழுதார்.

இருப்பினும் கடவுளுடைய மீட்பின் திட்டம் தோல்வி அடையவில்லை. இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாக புதிய இறைமக்களைத் தேர்ந்து கொண்டு அவர்களிடம் தமது திராட்சைத் தோட்டத்தை (இறை ஆட்சியை) ஒப்படைத்தார். அப்புதிய இறைமக்கள் கிறிஸ்துவின் விசுவாசிகள் என அழைக்கப்படும் திருச்சபை நாம் பலன் தரவேண்டும், அது நிலைத்திருக்க வேண்டும் என விரும்பி நம்மைத் தேர்ந்து கொண்டார் (யோவா 15:16).

நாம் கொடுக்க வேண்டிய கனிகள் என்ன என்பதைத் திருந்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவை முறையே உண்மை, கண்ணியம், நேர்மை, தூய்மை, பாராட்டுக்குரியவை, நற்பண்புகள் போற்றுதற்குரியவை ஆகியவை.

இறந்தவர்கள் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டி வைப்பதேன்? வாழும்போது நாணயம் இல்லாது வாழ்ந்தவர்கள் செத்த பிறகாவது நாணயத்துடன் போகவேண்டும் என்பதற்காக நாம் நாணயம் உள்ளவர்களாக, கண்ணியவான்களாக வாழ வேண்டும் கண்ணியமாக வாழ்வது எப்படி என்பதைத் தூய பவுல் பின்வருமாறு கூறுகிறார்: "பகலில் ஒழுகுவதுபோல் கண்ணியமாக நடக்க வேண்டும், காமம், குடிவெறி, களியாட்டம், ஒழுக்கக்கேடு சண்டை, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து ஆண்டவர் இயேசுவை அணிந்து கொள்ளுங்கள்" (உரோ 13:13)

நற்பண்புகள் நம்முடைய வாழ்வில் இடம் பெற வேண்டும்.
அவையாவை? இங்கும் உள்ளம், பரிவு தாழ்ச்சி, சாந்தம், பொறுமை, மன்னிப்பு அன்பு ஆகியவை" (கொலோ 3:12-15).

இவ்வுலகை விரைவில் அழிக்க முடியாது. ஏனெனில் இவ்வுலகில் நற்பண்பு உடையவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இல்லையென்றால், இவ்வுலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்கிறார் வள்ளுவர்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வதுமன் (குறள் 998)

நாம் காட்டுக் கனிகளைக் கொடுக்காமல் நற்பண்புகள் எனப்படும் நற்கனிகளைக் கொடுப்போம். கடவுளை மகிமைப்படுத்துவோம். உலகம் அழியாமல் பாதுகாப்போம்.

"படைகளின் கடவுளே மீண்டும் வாரும் இந்தத் திராட்சைக்
கொடிமீது பரிவு பாட்டும்" (திபா 80:14)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தோட்டம்‌ பாழாகிறது

ஆடிப்பட்டம்‌ தேடி விதைக்கிறான்‌ உழவன்‌. அறுவடையின்போது அவன்‌ தேடுவது என்ன? குத்தகைக்கு நிலத்தை விடுகிறான்‌ உடைமையாளன்‌. உழுபவனிடமிருந்து அவன்‌ எதிர்பார்ப்பது என்ன? பணத்தை முதலீடு செய்கிறான்‌ வணிகன்‌. கணக்கென்று வரும்போது அவன்‌ காணத்‌ துடிப்பது என்ன? பெற்ற மகனைப்‌ பள்ளிக்கு அனுப்புகிறார்‌ தந்தை. ஆண்டு இறுதியில்‌ அவர்‌ விரும்புவது என்ன?

எல்லாவற்றிற்கும்‌ ஒரே பதில்‌: எதிர்பார்ப்பதெல்லாம்‌ நல்ல பலனை, விளைவை, நல்லதோர்‌ அறுவடையை!

எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்றால்‌...? ஏற்படுவது ஏமாற்றம்‌! விளைவு? கடவுளின்‌ அரசைப்‌ பொறுத்தவரை எவ்வளவு கடுமையாக இருக்கும்‌ என்பதே இன்றைய நற்செய்தி. “உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்‌. அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில்‌ செயல்படும்‌ ஒரு மக்களினத்தார்‌ அதற்கு உட்படுவர்‌”” (மத்‌. 21:43).

நம்பிக்கைக்குரியவனாக ஒருப்பதே நல்லுறவுக்கான அழுப்படை.

தான்‌ தேர்ந்து கொண்ட இஸ்ரயேல்‌ மக்கள்‌ மீது இறைவன்‌ எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்‌!அந்த நம்பிக்கை மீண்டும்‌ மிண்டும்‌ துரோகத்தையே சந்தித்தது என்பதை வரலாற்றுத்‌ தெளிவோடு படம்‌ பிடித்துக்‌ காட்டுவதே இன்றைய நற்செய்தி.

இதற்கு இணையாகப்‌ பழைய ஏற்பாட்டில்‌ ஒரு பகுதி இறைவாக்கினர்‌ ஏசாயா வடித்த ஒரு கவிதை (எசா. 5:1-7). இஸ்ரயேல்‌ என்ற திராட்சைத்‌ தோட்டத்திற்கு இறைவன்‌ எவ்வளவோ செய்கிறார்‌! ஆனால்‌ நற்கனிகளைத்‌ தரும்‌ என்று காத்திருந்தார்‌. கண்டதோ காட்டுக்களனிகளை! அறம்‌ விளையுமென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்‌. விளைந்ததோ மறம்‌! முறைமை தழைக்குமென நினைத்திருந்தார்‌. எழுந்ததோ முறைப்பாடு! எனவே நீதியின்‌ கடவுள்‌ கூக்குரலிடுகிறார்‌: “நானே அதன்‌ வேலியைப்‌ பிடுங்கி எறிவேன்‌. அது தீக்கிரையாகும்‌”” (எசா. 5:5).

இந்தக்‌ கண்டனக்‌ குரல்தான்‌ இயேசு சொன்ன கொடிய குத்தகைக்காரர்‌ உவமையில்‌ எதிரொலிக்கிறது.

இறைவன்‌ தன்‌ மக்களை யூதத்‌ தலைவர்களிடம்‌ ஒப்படைத்தார்‌. வழிநடத்த இறைவாக்கினர்களை ஊழியர்களாக அனுப்பினார்‌. நேர்ந்தது என்ன? எசாயா தலை வெட்டுண்டார்‌. எரேமியா நாடு கடத்தப்பட்டார்‌. ஆமோஸ்‌ ஊரைவிட்டே துரத்தப்பட்டார்‌. மற்றும்‌ பலரை உதைத்தனர்‌. கல்லால்‌ அடித்தனர்‌. சிறையில்‌ அடைத்தனர்‌. இழிவுபடுத்தினர்‌. இறுதியாக இறைவன்‌ தன்‌ திருமகனையே அனுப்பினார்‌. அவர்‌ சந்தித்ததோ சிலுவைச்‌ சாவு.

இந்நிலையில்‌ இறைவனால்‌ என்ன செய்ய முடியும்‌ - குத்தகைக்காரர்களை ஒழித்துத்‌ தோட்டத்தை வேறு ஆள்களுக்கு விடுவதைத்‌ தவிர?

இந்த உவமையில்‌ இரண்டு உண்மைகள்‌ தெளிவுறுகின்றன.

1. இறைவனின்‌ திட்டத்தை எவ்வளவு தான்‌ எதிர்த்து நின்றாலும்‌, இறுதி வவற்றி இறைவனுக்கே! “கட்டுவோர்‌ புறக்கணித்த கல்லே, கட்டடத்துக்கு மூலைக்கல்‌ ஆயிற்று. ஆண்டவரால்‌ இது நிகழ்ந்துள்ள து. நம்‌ கண்களுக்கு இது வியப்பாயிற்று (மத்‌. 2442). சிலுவையில்‌ இறந்த இறைமகன்‌ இயேசுவின்‌ உயிர்ப்பே அந்த வெற்றி.

2. எதிர்ப்பு மனப்பான்மையே இழப்புக்கும்‌ எல்லாக்‌ கேடுகளுக்கும்‌ காரணம்‌. “உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்‌. அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில்‌ செயல்படும்‌ ஒரு மக்களினத்தார்‌ அதற்கு உட்படுவர்‌” (மத்‌. 21:43). இறைவனின்‌ அழைப்பையும்‌ அருளையும்‌ கொடையையும்‌ எதிர்ப்பவன்‌ தன்‌ தலையிலேயே மண்ணை வாரி இறைத்துக்‌ கொள்கிறான்‌.

என்றாலும்‌ இயேசுவின்‌ வார்த்தைகளில்‌ பெரிதும்‌ ஒலிப்பது வரப்போதும்‌ தண்டனையின்‌ அச்சுறுத்தல்‌ அல்ல. எதிர்காலம்பற்றிய முன்னெச்சரிக்கையே! “இஸ்ரயேலுக்கு நிகழ்ந்த இவையனைத்தும்‌ மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்‌ காலத்தில்‌ வாழும்‌ நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம்‌ நிலையாக நிற்பதாக நினைத்துக்‌ கொண்டிருப்பவர்‌ விழுந்துவிடாதபடி பார்த்துக்‌ கொள்ளட்டும்‌” (1 கொரி 10:11-12).

இன்று வாழும்‌ நாமே இறைவனின்புதிய திராட்சைத்‌ தோட்டம்‌. பயிரிடுகிறவன்‌ மிகுந்த கனிதரும்படி நிலத்தைப்‌ பண்படுத்தி, வேலியிட்டு, நீர்பாய்ச்சி, உரமிட்டுக்‌ கண்ணின்‌ விழியெனக்‌ காப்பது போல்‌, நற்கனிகளைக்‌ கொடுக்க இறைவன்‌ நமக்கு என்னவெல்லாம்‌ செய்திருக்கிறார்‌! “என்‌ திராட்சைத்‌ தோட்டத்துக்குச்‌ செய்யாது நான்‌ விட்டுவிட்டதும்‌ இனிச்‌ செய்யக்‌ கூடியதும்‌ ஏதும்‌ உண்டோ?” (எசா. 5:4).

தன்‌ உயிரையே, வாழ்வையே நம்மோடு பகிர்ந்து கொண்டார்‌. ஒளியூட்ட மனச்சான்று, வழிகாட்டக்‌ கட்டளைகள்‌, உணவூட்ட அருள்‌ சாதனங்கள்‌, உரமூட்ட இறைவார்த்தை, அரணாகத்‌ திருஅவை ... இன்னும்‌ என்ன குறை? இப்படியாக அத்தனை ஆன்மிகக்‌ கொடைகளையும்‌ வழங்கியவர்‌ நம்மில்‌ அருள்வாழ்வு என்னும்‌ நற்கனியை, புனித பலனை எதிர்பார்ப்பதில்‌ என்ன தவறு?

ஆனால்‌ நாம்‌ என்ன செய்தோம்‌? புண்ணிய மலர்கள்‌ அல்ல, பாவங்கள்‌ அன்றோ நம்‌ வாழ்வில்‌ காய்த்துக்‌ குலுங்கின!

நாம்‌ கொடுத்த பலனின்‌ *தரம்‌” நம்பிக்கை இழப்பு மட்டுமல்ல. நன்றி கெட்டதனம்‌. நம்பிக்கைத்‌ துரோகம்‌. ஏற்ற பலனைத்‌ தராதது மட்டுமல்ல, எப்படியெல்லாம்‌ நமது வாழ்க்கையில்‌ மனச்சான்று தூக்கிலிடப்படுகிறது. உண்மைகள்‌ கொலை செய்யப்படுகின்றன. இறை ஊழியர்‌ கொடுமைக்கு ஆளாகின்றனர்‌. இறைவனே இழிவுபடுத்தப்படுகிறார்‌!

விரும்பிய கனிகளைத்‌ தராமல்‌ போவதோ, வேண்டாத நச்சுக்கனிகளை ஏன்‌? எதனால்‌? இறைவனை எதிர்த்த வாழ்வு, இறைவனை மறந்த வாழ்வு? இந்த இழிநிலைக்கெல்லாம்‌ என்ன காரணம்‌? மாற்று என்ன? இறைவனில்‌ இணைந்த வாழ்வு, இறைவனில்‌ நிலைத்த வாழ்வு. அதுவே மிகவும்‌ பயன்தரும்‌ நிறைவாழ்வு! அதனால்தான்‌ “நானே திராட்சைச்‌ செடி. நீங்கள்‌ அதன்‌ கொடிகள்‌. ஒருவர்‌ என்னுடனும்‌ நான்‌ அவருடனும்‌ இணைந்திருந்தால்‌ அவர்‌ மிகுந்த கனிதருவார்‌. என்னை விட்டுப்‌ பிரிந்து உங்களால்‌ எதுவும்‌ செய்ய இயலாது” (யோ. 15:5) என்கிறார்‌ இயேசு. அதற்கு “என்‌ அன்பில்‌ நிலைத்திருங்கள்‌” (யோ 15:9) என்கிறார்‌ தொடர்ந்து.

அந்த அன்பு நெறிக்கு நாம்‌ மனந்திரும்புவோம்‌. மனந்திரும்புதல்‌ என்பது உண்மையான அன்பு நெறிக்கு வருவது - மாயையான அன்பு மயக்கத்திற்கு அல்ல. இறைவனோடு கொள்ளும்‌ போலி இணைப்பின்‌ பூரிப்பில்‌ எத்தனை பேர்‌ திளைக்கிறோம்‌, திருப்தி கொள்கிறோம்‌! அன்புக்‌ கட்டளையை மறந்து நற்கருணைப்‌ பக்தியில்‌ - பந்தியில்‌ பங்குபெற விழைவது முள்செடியில்‌ திராட்சைப்‌ பழத்தைப்‌ பறிக்கும்‌ முயற்சிதானே!

இறைவனில்‌ நிலைத்த வாழ்வு தடாகத்துத்‌ தாமரை போல்‌. தடாகத்தில்‌ வேரூன்றி இணைந்திருக்கிறபோது உயிர்‌ கொடுப்பது ஒளி. உயிர்‌ வளர்ப்பது நீர்‌. தண்டு அறுந்து தடாகத்தோடு உறவு துண்டிக்கப்பட்டால்‌ ... உயிர்‌ கொடுத்த ஒளியே உலரச்‌ செய்கிறது. உயிர்‌ வளர்த்த நீரே அழுகச்‌ செய்கிறது. அப்படித்தான்‌ அருள்‌ ஆசீராக இறைவன்‌ வழங்கும்‌ ஆன்மிகக்‌ கொடைகள்‌ நமக்கே சாபக்கேடாக முடியும்‌ - “இவனுடைய இரத்தப்பழி எங்கள்‌ மேலும்‌ எங்கள்‌ பிள்ளைகள்‌ மேலும்‌ விழட்டும்‌” (மத்‌. 27:25) என்பது போன்று. “நாங்கள்‌ உட்கொள்ளும்‌ திருஉடலும்‌ திருஇரத்தமும்‌ எங்களை நீதித்‌ தீர்ப்புக்கும்‌ தண்டனைக்கும்‌ உள்ளாக்காமல்‌...?”” திருப்பலிச்‌ செபம்‌ சிந்தனைக்குரியது.

இவற்றையெல்லாம்‌ உணர விரும்பாமல்‌ தொடர்ந்து இறைவனை எதிர்த்து வாழ்ந்தால்‌ ... இறுதி ஏமாற்றம்‌ இறைவனுக்கன்று!

எதிர்பார்ப்புக்கள்‌, ஏமாற்றங்கள்‌ இவற்றின்‌ கலவைதான்‌ நமது வாழ்க்கை. இது மனிதனுக்கும்‌ மனிதனுக்குமிடையே மட்டுமன்று. கடவுளுக்கும்‌ மனிதனுக்குமிடையே கூட வெளிப்படும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திட்டமிடப்பட்ட வன்முறை

வன்முறை என்ற சொல் ஒவ்வொரு நாளும் நமது செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெறும் சொல்லாக மாறிவிட்டது. நமது ஊடகங்கள் காட்டும் வன்முறைகள் நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அறியாத அளவு, நாம் வன்முறைக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கிறோம். எனக்குத் தெரிந்த தமிழ் அறிவைக் கொண்டு, இந்த வார்த்தையைப் பதம் பிரித்துப் பார்த்தேன். அப்படி பதம் பிரித்து பொருள் காணும்போது, இந்த வார்த்தை கொஞ்சம் புதிராகத் தெரிந்தது.

வன்முறை... வன்மை + முறை. வன்மை என்பது மென்மையின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், இந்த வார்த்தையுடன் ஏன் 'முறை' என்ற வார்த்தையை இணைத்துள்ளோம் என்பது எனக்குப் புரியாதப் புதிராக உள்ளது.

ஆனால், நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் வன்முறை என்ற இந்த வார்த்தையின் முழு பொருளும் விளங்குமாறு பல செயல்கள் நடைபெறுகின்றன. வன்மையானச் செயல்கள் முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை வன்முறை என்று சொல்வதும் பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப் படைகள், கொலைப் படைகள், ஏதோ ஓர் அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் பணி புரிவதுபோல், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப் போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று, வன்முறை, இப்போது விற்பனை செய்யப்படுகிறது.

வன்முறைகளின் உச்சகட்டமாக விளங்கும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் இந்நாட்களில், ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று அறியும்போது, மனம் வேதனைப்படுகிறது. தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே படித்தவர்கள், பட்டதாரிகள் என்று அறியும்போது மனம் இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடிவரும் காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில் மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில் மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவர் லால் பகதூர் சாஸ்திரியும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் நானும் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று அரசியல் என்றதும் அராஜகம், அடாவடித்தனம், வன்முறை, இவையே இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது வேதனையைத் தருகிறது.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும் உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.

வன்முறையைப் பற்றி இன்று எண்ணிப்பார்க்க மற்றொரு காரணம் நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத் தோட்டம் ஒன்றை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.

ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, அத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை நற்செய்தியில் இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்டத் தொழிலாளிகள் செய்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கும் வரிகள் இவை:

மத்தேயு நற்செய்தி 21: 35-36

தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களை நினைத்துப் பார்க்க வைத்தது. மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும், சிறிதும் எண்ணிப் பார்க்காமல், எதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பதுபோல் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை, இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூருவில் கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் வன்முறை, இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.

மற்றொரு கோணம் நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.

இறைவாக்கினர் எசாயா 5:1-2

செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.

இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.
பழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த வரிகளை வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது, ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை, இறைவனின் வேதனைகளாக, இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார். நம் குடும்பங்களில், இனிய சுவையுள்ள, நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளர வேண்டும் என்று, சிறப்பாக மன்றாடுவோம்.

மனித குலத்திற்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் எதிராக நாம் செய்யும் பல வன்முறைகளைப் பற்றியும், நற்கனிகளைத் தராமல் நம்மைச் சங்கடப்படுத்தும் நம் குழந்தைகளையும் பற்றி விரிவாகச் சிந்தித்ததால் நொந்து போன உள்ளத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வதா என்று நான் தயங்கியபோது, இன்றைய இரண்டாம் வாசகம் எனக்கு ஆறுதலான, உற்சாகமூட்டும் எண்ணங்களைத் தந்தது. புனித பவுல் அடியார் பிலிப்பியருக்கு எழுதிய வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 6-9

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்... அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்... சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கைமாறிய திராட்சைத் தோட்டம்

அது ஓர் அழகிய தோட்டம். அந்தத் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆணும் ஒரு பெண். தோட்டத்தின் உரிமையாளரின் உருவிலும் சாயலிலும் இருந்த அவர்கள் தோட்டத்தின் கண்காணிப்பாளர்களாகவும், அதைப் பண்படுத்தவும் நியமிக்கப்பட்டனர். தோட்டத்தில் இருந்த கனிகளைப் பறித்து உண்டு வாழ்ந்த அவர்களுடைய கண்கள் விலக்கப்பட்ட இரு மரங்கள்மேல் இருந்தன. பாம்பின் சூழ்ச்சியால் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பிடுங்கித் திண்கிற பெண், ஆணுக்கும் அதைக் கொடுக்கிறார். உரிமையாளர் மாலையில் வந்தபோது இவர்கள் இருவரும் ஒழிந்துகொள்கிறார்கள். மரத்தின் கனி குறைவுபடுவதை அறிவார் அவர். 'கனியை நீ உண்டாயா?' எனக் கேள்வி கேட்கிறார் உரிமையாளர். ஆண் பெண்ணையும், பெண் பாம்பையும் விரல் நீட்டிக் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள். பாம்பு, பெண், ஆண் என மூன்று பேரும் சபிக்கப்பட்டு, ஆணும் பெண்ணும் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். தோட்டம் மீண்டும் உரிமையாளரின் கைக்கு மாறுகிறது.

விலக்கப்பட்ட கனியின்மேல் ஆசை, கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் செருக்கு, எதிரியின் சொல்லைத் தேர்ந்து தெளிந்து பார்க்காத மந்த உள்ளம் ஆகியவற்றால் தோட்டத்தை இழக்கிறார்கள் நம் முதற்பெற்றோர்.

திராட்சைத் தோட்டம் கைமாறிய இரு கதையாடல்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கிறோம்.

முதல் கதையாடல் எசாயா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கினரின் பணித்தளத்தை வரையறுக்கிறது கவிதைபோல அமைந்துள்ள இப்பாடம். ஏனெனில், இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில்தான் எசாயா ஆண்டவராகிய கடவுளால் பணிக்கு அழைக்கப்படுகிறார்.

'படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே. அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே. நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார். ஆனால், விளைந்ததோ இரத்தப்பழி. நேர்மை தழைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் தழைத்ததோ முறைப்பாடு' என்று பாடல் நிறைவுபெறுகிறது.

ஓர் உரிமையாளர் தோட்டத்துக்குக் களையெடுத்து, கன்றுகளை நட்டு, கோபுரம் அமைத்து அதைக் காத்து, திராட்சைப் பழம் பிழிய ஆலையும் அமைக்கிறார். அதுபோல, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை மற்ற இனத்தாரிடமிருந்து தேர்ந்தெடுத்து, அவர்களைக் கால் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்து, சீனாய் மலையில் கூட்டி வந்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்' என அவர்களை அரவணைத்துக்கொள்கிறார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அவர்கள் உரிமையாக்குமாறு அளிக்கிறார். அவர்களும் தாங்கள் கட்டாத வீடுகளில் குடியிருக்கிறார்கள், நடாத மரங்களின் கனிகளை உண்கிறார்கள், தோண்டாத கிணறுகளில் நீர் பருகுகிறார்கள். ஆனால், கடவுளின் உடன்படிக்கையை மறந்துவிட்டு, சிலைவழிபாட்டின் வழியாக அவருக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள்.

திராட்சைக் குலைகளை எதிர்பார்த்திருந்த உரிமையாளருக்குக் கிடைத்ததோ காட்டுப் பழங்களே!

'எனக்கும் என் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையே நீதி வழங்குங்கள்!' எனக் கேட்கிறார் உரிமையாளர். தோட்டம் உரிமையாளருக்கு அநீதி இழைத்தது. ஏனெனில், உரிமையாளரின் நேரம், ஆற்றல், பணம், வளம் அனைத்தும் விரயமாகிவிட்டது. விரயமாகிவிட்ட எதுவும் ஈடுசெய்யப்பட வேண்டும் என்பதே நீதி.

உரிமையாளர் கோபம் கொண்டு வேலிகளை பிய்த்தெறிந்து தோட்டத்தைத் தீக்கிரையாக்குகிறார்.

ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை பாபிலோனிய அடிமைத்தனத்துக்கு விற்றுவிடுகிறார்.

உரிமையாளர் தான் விரும்பியதைத் தன் தோட்டத்துக்குச் செய்கிறார். உரிமையாளரின் நற்குணத்தை தோட்டம் உணரவில்லை. தான் உட்கொண்ட உணவுக்கு ஏற்ற ஊட்டத்தை அது தரவில்லை.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கி ஓர் உவமையை மொழிகிறார். நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, பிழிவுக் குழி வெட்டி, காவல் மாடமும் கட்டித் தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விடுகின்றார். அவர் அப்படி குத்தகைக்கு விடும்போது அவர்கள் நல்லவர்களாகத் தெரிகின்றனர். அல்லது நல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கென்று எந்தக் குறையும் இல்லாதவாறு தலைவர் பார்த்துக்கொள்கின்றார். ஆக, தலைவர் அளவுக்கு மீறி நல்லவராக இருக்கின்றார். அல்லது தாராளமாக இருக்கின்றார்.

அவரது தாராள குணத்தையும், நன்மைத்தனத்தையும் பணியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்கள் தலைவர் தங்களிடம் தாராளமாக இருக்கிறார், ஆகவே தாங்களும் தாராளமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அப்படியே அதற்கு எதிர்மாறாக நடக்கின்றனர்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வருகிறது. தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவரும்படி தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார்.

(அ) தலைவருக்கு உரிய கனிகளைக் கொடுக்க மறுத்தனர் பணியாளர்கள். இது அவர்களுடைய பேராசையின் வெளிப்பாடு. ஆக, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்ற மனப்பான்மை அவர்களிடம் வளர ஆரம்பிக்கிறது. இந்த மனப்பாங்குதான் திருட்டு மனப்பான்மை.

(ஆ) தலைவரது பணியாளர்களுக்குத் தீங்கிழைக்கின்றனர். இது அவர்களுடைய தீய எண்ணத்தைக் காட்டுகிறது. அதாவது, தலைவன்மேல் உள்ள கோபத்தைத் தலைவன்மேல் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவிகளான பணியாளர்கள்மேல் காட்டுகின்றனர். அவர்களது தீய எண்ணம் அவர்களுடைய கோபத்தைவிடக் கொடுமையானது.

(இ) தலைவரது ஒரே மகனைக் கொன்று போடுகின்றனர். இது அவர்களுடைய பொறாமை உணர்வைக் காட்டுகிறது. 'என்னிடம் இல்லாத ஒன்று அவனிடம் இருக்கிறது' என்று எண்ணுகின்ற அவர்கள், திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தலைவரது ஒரே மகனை அழிக்கத் துணிகின்றனர்.

(ஈ) இவை எல்லாம் செய்யக் காரணம் ஒருவேளை திராட்சைத் தோட்டத்தில் கனிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். அதாவது, குத்தகைக்குத் தோட்டத்தை எடுத்த இவர்கள் தங்கள் சோம்பல் மற்றும் கண்டுகொள்ளாத்தன்மையால் தோட்டத்தை மண்ணில் புதைத்த தாலந்துபோல வைத்திருந்தார்கள். தலைவர் தங்கள்மேல் கோபப்பட்டுத் தங்களை அழிப்பதற்கு முன்பாகவே, தாங்கள் தலைவருக்குரியவர்களை அழித்துவிட நினைக்கிறார்கள்.

தலைவருக்கு இப்போது நேரிட்டது அநீதி. ஏனெனில், ஓராண்டு முழுவதும் தோட்டம் பலனற்றுப் போய்விட்டது.

கோபம் கொள்கிற தலைவர் கொடிய குத்தகைதாரர்களை அழித்துவிட்டு, தோட்டத்தை நீதியோடு செயல்படுகிறவர்களுக்கு அளிக்க முன்வருகிறார்.

உருவகப் பொருளில் பார்க்கும்போது, தோட்டம் என்றால் இறையாட்சி, தோட்டத்தின் உரிமையாளர் கடவுள், குத்தகைதாரர்கள் இஸ்ரயேல் மக்கள் (தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், மூப்பர்கள்), பணியாளர்கள் இறைவாக்கினர்கள், மகன் இயேசு கிறிஸ்து. கட்டுவோரால் விலக்கப்பட்ட கல் புறவினத்து மக்கள். ஆக, யூதர்களுக்கு உரித்தான இறையாட்சி புறவினத்து மக்களுடைய கைக்குச் செல்லும் என்பது உருவகங்கள் மொழிகிற பொருள் ஆகும்.

இந்த உவமையைக் கேட்கிற தலைமைக் குருக்களும் மூப்பர்களும் இயேசுவின்மேல் மிகவே கோபம் கொள்கிறார்கள். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களை, 'நிராகரிக்கப்பட்ட மக்கள்' என்று புரட்டிப் போடுகிறார் இயேசு.

இவ்விரு கதையாடல்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இரு கதையாடல்களிலும் உரிமையாளருக்கு நீதி மறுக்கப்படுகிறது, உரிமையாளர் ஏமாற்றம் அடைகிறார், உரிமையாளரின் நற்குணம் நிராகரிக்கப்படுகிறது, உரிமையாளர் தோட்டங்களைப் பணியாளர்களிடமிருந்து பறித்து வேறு கைகளுக்கு மாற்றுகிறார்.

திராட்சைத் தோட்ட உருவகம் நமக்கு மூன்று நிலைகளில் பொருந்துகிறது:

(அ) திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை

நம்மைப் படைத்தவராகிய கடவுள் நம் ஒவ்வொருவருடைய கையிலும் வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தைக் கொடுத்துள்ளார். அத்தோட்டத்தை நாம் பராமரிக்குமாறு நமக்கு உயிரையும் ஆற்றலையும் திறன்களையும் வழங்குகிறார். தோட்டத்தின் கனிகளை அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நம் சோம்பல், கண்டுகொள்ளாத்தன்மை, பதற்றம், தள்ளிப்போடுதல், அவசரம் போன்றவற்றால் நாம் பலன்கள் தராமல் இருக்கிறோம். சில வேளைகளில் நிறைய வேலைகள் செய்கிறோம், எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறோம், பல்வேறு அலுவல்களில் ஈடுபடுகிறோம். ஆனாலும், இருக்கிற இடத்திலேயே இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் எசேக்கியா அரசருக்குச் சொன்னதுபோல, 'உன் நாள்கள் நெருங்கிவிட்டன. உன் இல்லத்தை ஒழுங்குபடுத்து' என்று நம்மிடமும் சொல்கிறார்.

(ஆ) திராட்சைத் தோட்டம் என்பது நம் கிறிஸ்தவ நம்பிக்கை

திருமுழுக்கின் வழியாக நாம் இறையாட்சி என்னும் தோட்டத்தின் உரிமையாளர்களாக மாறியிருக்கிறோம். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் இறையியல் மதிப்பீடுகளைப் பெற்றிருக்கிறோம். ஆளும் பணி, புனிதப்படுத்தும் பணி, கற்பிக்கும் பணி என்று இயேசுவின் மூன்று பணிகளைச் செய்ய அழைப்பு பெற்றிருக்கிறோம். இறையன்பு, பிறரன்பு என்னும் கட்டளைகளால் வழிநடத்தப்படுகிறோம். இருந்தாலும், நாம் பெற்றிருக்கிற அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை வாழாதபோது நம் கிறிஸ்தவ நம்பிக்கை பலன்தராத தோட்டமாக, அல்லது காட்டுப் பழங்களைத் தருகிற தோட்டமாக மாறுகிறது. இப்படி இருக்கிற தோட்டம் சீக்கிரம் கைமாறிவிடும். ஏனெனில், கிறிஸ்தவம் என்பது நமக்கு வெறும் தலைப்பாக மட்டுமே உள்ளது.

(இ) திராட்சைத் தோட்டம் என்பது நம் உறவுநிலை

மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக நபர்கள். உறவுநிலைகள் வழியாகவே நாம் இந்த உலகில் நிலைபெறுகிறோம். உறவுநிலைகள் நீதி, இரக்கம் என்னும் இரு தண்டவாளங்களில்தாம் பயணம் செய்கின்றன. ஒருவர் மற்றவரை நீதியுடன் நடத்த நமக்குக் கடமை உண்டு. பொறாமை, கோபம், மற்றவர்களை இகழ்ச்சியுடன் நோக்குதல், வன்மம் போன்றவற்றால் உறவு என்னும் திராட்சைத் தோட்டத்தை நாம் பலன்தர இயலாததாக மாற்றிவிடுகிறோம்.

நம் திராட்சைத் தோட்டம் கைமாறிச் சென்றுவிடாமல் காப்பாற்றிக்கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வழிகாட்டுகிறது.

'எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்' எனச் சொல்கிற பவுல், 'அறிவெல்லாம் கடந்த இறைஅமைதி அவர்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்' எனப் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதுகிறார். தொடர்ந்து, 'உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, பாராட்டுதற்கு உரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை போன்றவற்றை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்துகிறார்.

அறிவைக் கடந்த அமைதி வழியாகவும், மேற்காணும் நற்பண்புகள் வழியாகவும் நம் திராட்சைத் தோட்டத்தை பேணி வளர்த்துக் கனிகொடுக்க முயற்சி செய்வோம்.

இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் பாடுவது போல, 'இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!' (காண். திபா 80:14) என நாம் தோட்டத்தின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். ஏனெனில், நாளின் இறுதியில் அவரே நம்மைத் தீக்கிரையாக்கவும், நம்மைத் தழுவிக்கொள்ளவும் வல்லவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனிதநேய மாளிகையின் மூலைக் கல்லாக மாறுவோம், மாற்றிடுவோம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!" என்ற வாக்கியம் விவிலியத்தில் திருப்பாடல்18:22 மத்தேயு 21:42. மாற்கு 12:10 லூக்கா 30:17 என நான்கு இடங்களில் எழுத்து மாறாமல் எடுத்துக் கூறப்படுகின்றது. கவனிக்க, ஆண்டவர் இயேசு மண்ணைப் பற்றியோ மணலை பற்றியோ கூறாமல் இவைகளின் மூலமான கல்லைப் பற்றி இவ்வளவு அழுத்தமாகத் தெளிவாகக் கூறுகின்றார். ஏன், தனது நற்செய்தியை பரப்பும் பணியை வழிநடத்த தான் தேர்ந்தெடுத்த சீமோனுக்கும் பேதுரு அதாவது "பாறை - கல்" எனப் பொருள் படும்படி பெயிரிடுகின்றார்.

காலத்தின் பயன்பாட்டில், ஒரு நேரத்தில் புறக்கணிக்கப்பட்டாலும் - தன்மை மாறாமல் தரம் குறையாமல் நிலைத்து நிற்கும்போது, அஃது முறையான பயன்பாட்டிற்குரிய மூலைக் கல்லாக வாழ்வு பெறுகின்றது. காலங்களும் காட்சிகளும் மாறினாலும் எப்படிச் சீமோன் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்குள் கடந்து பயணித்தபோது, பாறையாக - கல்லாக அழுத்தமாக, உறுதியாக நின்றாரோ; அவ்வாறே இன்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை மதித்துத் தன் வாழ்வை அதன் வழிகளில் செயல்படுத்த விரும்புவோரின் மன உறுதி இந்தக் கல்லைப் போன்று இருக்க வேண்டும் என்பதே இதன் வெளிப்பாடு.

ஆம், அப்போது அந்தக் கல் மனித நேயம் எனும் மாளிகைக்கு மூலைக் கல்லாக நிலைக்கும் என்பதும் உறுதியாகும். யார் விலக்கினார்கள்?.. யார் நமக்காக இருக்கிறார்கள்!.. என்பது முக்கியமல்ல; நாம் நாமாக இருப்பது படைப்பின் துவக்கத்தில் எப்படி இறை சாயலும் இறை ஆவியும் கொண்ட மனிதனாக வாழ்வு பெற்றோமோ அப்படியே இன்றும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அதே மனிதனாகப் பிரதிபலிக்கச் செய்யும்போது ; கிறிஸ்துவை தன் மரணத்திலும் பிரதிபலித்த பேதுரு பெற்ற மாண்பை நாமும் நிச்சயம் பெறுவோம். தமிழ் மரபின் வழக்கச் சொற்களில் "பாரு எப்படி கல்லு மாதிரி நிற்கிறான்" என்ற ஒரு வாக்கியம் தனி மனிதனின் மன உறுதியை வெளிப்படுத்த இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. என்ற இந்த வார்த்தை ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; எனத் தொடர்கின்றது. ஆண்டவர் இயேசுவால் என்ன நிகழும்? நிச்சயம் அழிவு நிகழாது, நிகழ்ந்தால் கல்வாரி அத்தமற்றதாகிவிடும். நாம் ஏன் கயவர்களாகக் கள்வர்களாகக் கல்வாரி வரை செல்ல வேண்டும்?.. கானாவூர் திருமணம்வரை இயேசுவின் நண்பர்களாகச் சென்று மரியாளின் கூற்றுக்கு இணங்க அவர்(இயேசுவின்) சொற்படி செயலாற்றலாம்! தாகம் தணிக்கும் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" தண்ணீரை நிரப்பச் செய்து. (யோ 4:14) மனித உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை (திராட்சை ரசத்தைப்) பகிர்ந்திடுவோம்.

நற்செய்தியில் குறிப்பிடப்படும் தீய தோட்டத் தொழிலாளர்களாகவோ அல்லது முதல் வாசகத்தில் வரும் நற்கனிகள் தராக் கெட்ட திராட்சைக் கொடி போலவோ நமது வாழ்வு இருக்கலாகாது. புனித பவுல் அடிகளார் கூறுவது போல்:-

முடிவாக ஆனால் முழுமையாக, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்தி ; எதைப்பற்றியும் கவலைப்படாமல்- ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளோடு இணைந்து வாழ முனைப்புடன் இருக்க வேண்டும். (பிலிப்பியர் 4: 6,8) அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நமது உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலிப்பியர் 4:7)

வாருங்கள் மாறுவோம் பாறையாக, மனிதநேய மாளிகையின் மூலைக் கல்லாக; பயணத்தில் இளைப்பாறுதல் தரும் சிலுவை எனும் சுமை தாங்கியாக …. அப்போது அமைதியை அருளும் கடவுள் நம்மோடு இருப்பார். (பிலிப்பியர் 4:9)

இறைவன் நம்மோடு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பலன் தரும் வாழ்வு வாழ்வோமா?

"கடவுள் உனக்கு வாழ்வு தந்தார் வாழ்வுக்கு நீ என்ன தந்தாய் " என்று அழகிய பாடல் வரிகள் உண்டு. வாழ்வென்பது ஒரு கொடை. அதை நாம் கடவுளிடமிருந்து பெற்றோம். அதை நல்லதாக, சிறந்ததாக பெற்றுள்ளோம். அப்படியானால் அதை நாம் வாழும் போதும் பிறருக்கு கொடையாக வழங்கும் போதும் நல்லதாகவும் சிறந்ததாகவுமே வழங்க வேண்டுமல்லவா! இன்றைய நாளின் மூன்று வாசகங்களும் இத்தகைய பலன் தரும் வாழ்வு வாழ்பவர்களாய் இருக்க நம்மை அழைக்கின்றன.

ஒரு மாணவனை அழைத்து ஆசிரியர் " நான் உனக்கு கற்று தந்த பாடம் வேறு. நீ கண்டதை விடைத்தாளில் எழுதியிருக்கிறாய் " என்று திட்டிவிட்டு, "இனிமேல் தினமும் என்னிடம் சிறப்பு வகுப்புக்கு வந்து படிக்கவேண்டும் " என்று கண்டிப்பாய்க் கூறினார். சரி என்று அம்மாணவன் தலையாட்டினானே தவிர, அவனுக்கு அதில் சிறிதளவும் நாட்டமில்லை. சில நாட்கள் ஏதோ ஆசிரியர் சொன்னதற்காக சிறப்பு வகுப்புக்கு சென்றான். பின் நிறுத்திவிட்டான். ஆசிரியர் பல முறை அவனை அழைத்தும் சட்டை செய்யவில்லை. இறுதியில் படிப்பை கோட்டை விட்டான். தேர்வில் தோல்வி.தன்னோடு படித்த மற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினான் பின்னாளில்.
இன்றைய முதல் வாசகம் மற்றும் நற்செய்தி மேற்கண்ட நிகழ்வை ஒத்ததாக இருக்கிறது.

முதல்வாசகத்தில் திராட்சை தோட்ட உரிமையாளர் தன் திராட்சை தோட்டத்தை பண்படுத்தி நீர்பாய்ச்சி உரமிட்டு பாதுகாத்து வளர்த்த பின்பும் கனிகொடுக்கவில்லை. நற்செய்திவாசகத்தில் திராட்சை தோட்ட உரிமையாளர் குத்தகைக்காரர்களை நம்பி தன் நிலத்தை ஒப்படைத்தார். அவர்களை சுதந்திரமாக பலனை அனுபவிக்கவிட்டார். அவர் எதிர்பார்த்ததோ தனக்கு சேரவேண்டியதை மட்டுமே. குத்தகைக்காரர்களோ மறுத்தனர். இறுதியில் திராட்சை தோட்டமும், குத்தகைக்காரர்களும் அழிவுக்குள்ளாயினர்.

இப்படித்தான் நம் வாழ்வும் பாழாய்போகும், நாமும் கனி தராவிடில். பலனளிக்கும் வாழ்வு வாழவில்லை என்றால் நாமும் அழிவுறுவது நிச்சயமே.நமக்கு கடவுள் எவ்வளவு செய்கிறார்? நம் பெற்றோர் , மூத்தோர் ஆசிரியர்கள் ,ஆன்மீக வழிகாட்டிகள் ,இயற்கை, வாழ்க்கை அனுபவம், நண்பர்கள் என அனைவரின் மூலமாக கடவுள் நமக்கு தருக்கின்ற நன்மைகளும் ஆசிர்வாதங்களும் எத்தனை எத்தனையோ! அனைத்தின் மூலமும் அவர் நம்மை பேணி வளர்க்கிறார். பாதுகாக்கிறார். பண்படுத்துகிறார். அதே நேரத்தில் அதன் பலனையும் அவர் எதிர்பார்க்கிறார். அது தகுதியானதே. நீதீயானதே. நாம் பலன் தருகிறோமா? சிந்திப்போம்.

சிந்தித்தால் மட்டும் போதாது. பலன் தராவிடில் இனிமேலாவது கனிகொடுப்பவர்களோ வாழ முயல வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார். முதலாவது நாம் நன்றியோடு கூடிய இறைவேண்டலில் நிலைத்திருக்க வேண்டும். கடவுளும்,பிறரும் நமக்கு செய்த அனைத்திற்கும் நன்றியோடு நாம் இருத்தலே நம்மை நல்வாழ்விற்கு ,கனி கொடுக்கும் வாழ்விற்கு உந்தித் தள்ளும்.

இரண்டைவதாக நல்லவற்றை, கண்ணியமானவற்றை, கடவுளும் பிறரும் விரும்புபவற்றை நாம் மனமதில் இருத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கனிகொடாத திராட்சை செடிகளை போன்றோ அல்லது குத்தகைக்காரர்களைப் போன்றோ ஏமாற்றும் எண்ணமும் வராது. நாமும் அழிவதில்லை. சிந்தித்து வாழ்வோம். நம் வாழ்வு பலன்கொடுத்து வாழ்வு தந்த கடவுளை மகிழ்விக்கட்டும்.

இறைவேண்டல்
வாழ்வளித்த ஆண்டவரே! நீர் தந்த இந்த வாழ்வை பலன் கொடுக்கும் வண்ணம் வாழத் தேவையான அருவரங்களைத் தருவீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser