மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 13ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2 அரசர் 4:8-11,14-16அ|உரோமையர் 6:3-4,8-11|மத்தேயு 10:37-42

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இலட்சியம்‌ நிறைந்த வாழ்வு

மனிதர்‌ ஒருவரைப்‌ பின்பற்றி வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. பலர்‌ வார்த்தைகளால்‌ கவரப்படுகிறார்கள்‌. பலர்‌ கொள்கைகளால்‌ கவரப்படுகிறார்கள்‌. சிலர்‌ ஒரு சிலரின்‌ ஆற்றல்களால்‌, திறமைகளால்‌ கவரப்படுகிறார்கள்‌. ஒருசிலர்‌ நடிப்பால்‌ கவரப்படுகிறார்கள்‌. ஒருசிலர்‌ பொருளாதாரம்‌, அதிகாரத்தால்‌ கவரப்படுகிறார்கள்‌. ஆனால்‌ சிலர்‌ மட்டுமே இலட்சியம்‌ நிறைந்த வாழ்வால்‌ கவரப்பட்டுப்‌ பின்பற்றுகிறார்கள்‌.

இயேசு என்ற மாமனிதரைப்‌ பின்தொடர விரும்பியவர்கள்‌ பலர்‌. ஒருசிலர்‌ மட்டுமே அவரைப்‌ பின்தொடர்ந்தார்கள்‌. இவ்வாறு பின்தொடர்ந்த வச்சிர தூண்கள்தான்‌ புனித பேதுரு, புனித பவுல்‌ என்ற திருத்தூதர்கள்‌. இன்றைய வார்த்தை வழிபாடு மூன்று நிலைகளில்‌ சீடத்துவ நிலையை வலியுறுத்துகின்றது.

முதலாவது, நாம்‌ பாவத்தை விட்டு விலக வேண்டும்‌.

இரண்டாவது, உலகில்‌ உள்ள பொருள்‌ இன்பம்‌, அதிகாரம்‌, கவர்ச்சி அனைத்திற்கும்‌ மேலாக இறைவன்‌ முதல்‌ இடம்‌ பெற வேண்டும்‌ (மத்‌ 6 : 33). ஏனெனில்‌ மற்றவையெல்லாம்‌ அழிந்து போகும்‌ (யோவா. 6:27) அழிந்துபோகும்‌ உணவுக்காக உழைக்க வேண்டாம்‌.

மூன்றாவது இறையரசைக்‌ கட்டி எழுப்பும்‌ இறையடியார்‌களுக்கு உதவிக்கரம்‌ நீட்டி உற்சாகப்படுத்தி மதிக்க வேண்டும்‌.

தன்‌ சிலுவையைச்‌ சுமக்காமல்‌ என்னைப்‌ பின்பற்றி வருவோர்‌ என்னுடையவர்‌ அல்லர்‌. தன்‌ உயிரைக்‌ காக்க விரும்புபவர்‌ அதை இழப்பார்‌. என்‌ பொருட்டுத்‌ தன்‌ உயிரை இழப்பவரோ, அதைக்‌ காத்துக்‌ கொள்வார்‌ (மத்‌. 10:38, 39).

பாடல்‌
இயேசுவின்‌ பின்னால்‌ நானும்‌ செல்வேன்‌
திரும்பிப்‌ பார்க்கமாட்டேன்‌ (2)

சீடராக இருப்பவர்‌ நான்கு நிலைகளைக்‌ கடந்தாக வேண்டும்‌.

இலட்சியத்‌ தெளிவு

சீடத்துவம்‌ என்பது எளிதான ஒன்று அல்ல. உலகில்‌ ஒன்றை இழந்தால்தான்‌ மற்றொன்றைப்‌ பெற முடியும்‌. மலர்‌ மடிந்தால்‌ காய்‌ பிறக்கும்‌. நாம்‌ விதைக்கும்‌ நெல்‌, சோளம்‌ மடிந்தால்‌ பயிர்‌ முளைத்துப்‌ பலன்‌ தரும்‌. இதைத்தான்‌ இயேசு கோதுமை மணி தரையில்‌ விழுந்து மடியா விட்டால்‌ அது அப்படியே இருக்கும்‌. அது மடிந்தால்தான்‌ மிகுந்த விளைச்சலை அளிக்கும்‌ (யோவா. 12:24) என்கிறார்‌.

புனித அசிசியார்‌ உலகைத்‌ துறக்க விரும்பியவர்‌. ஆனால்‌ அவரது தந்தையோ தன்‌ ஜவுளிக்‌ கடையைப்‌ பெருக்கி பெரிய கோடீஸ்வரனாகத்‌ தன்‌ மகன்‌ வாழ விரும்பினார்‌. ஆனால்‌ மகனோ, தந்தையை விட்டு ஓடி பிச்சை எடுத்துப்‌ பிழைத்துத்‌ துறவற சபையை உருவாக்கத்‌ திட்டமிட்டார்‌. தன்‌ மகன்‌ செய்யும்‌ இந்த ஈனச்‌ செயலைக்‌ கண்டு அவர்‌ தங்கி இருந்த ஆயரிடம்‌ சென்று: இவன்‌ என்‌ மகனானால்‌ என்னோடு வந்து என்‌ வேலையைச்‌ செய்யட்டும்‌. இல்லையேல்‌ அவன்‌ கொண்டு வந்த பொருளை என்னிடம்‌ ஒப்படைத்துவிடச்‌ சொல்லுங்கள்‌ என்றார்‌. கொண்டு வந்த பணம்‌, உடுத்திய ஆடையையும்‌ களைந்து மூட்டை கட்டி பின்‌ தந்தையிடம்‌ கொடுத்து, எடுத்துச்‌ செல்லும்‌. நீர்‌ என்‌ தந்‌தை அல்ல. பரமபிதாதான்‌ என்‌ தந்த என்று கூறிப்‌ புறப்பட்டார்‌. இதுதான்‌ இலட்சியத்‌ தெளிவு.

இலட்சியத்‌ தயாரிப்பு

இலட்சியத்‌ தெளிவு கொண்டவர்‌ அதற்கான தயாரிப்பில்‌ இறங்க வேண்டும்‌ (லூக்‌. 14:28-32). வீடுகட்டுபவர்‌ கட்ட முடியுமா, பணம்‌ உண்டா, ஆள்பலம்‌ உண்டா என்றெல்லாம்‌ பார்ப்பார்‌ அல்லவா! விளையாட்டு வீரர்‌ தினமும்‌ காலை மாலை ஓடி பயிற்சி எடுத்தால்தான்‌ வீரன்‌ என்ற பட்டத்தைப்‌ பெற முடியும்‌. சீடத்துவம்‌ என்பது சிந்திக்காமல்‌ மூழ்கிவிடுவதில்லை. சீடத்துவம்‌ என்பது ஆபத்தான, குறுகிய பாதை. நம்‌ பரலோக அன்னை இதைத்தான்‌ தன்‌ வாழ்வில்‌ செய்தாள்‌. தன்‌ மகனோடு இணைந்து சிலுவையைத்‌ தூக்கி கல்வாரி மட்டும்‌ தன்னைத்‌ தயாரித்தவர்‌ அல்லவா?

இலட்சிய உறவு

இயேசுவைப்‌ பின்தொடர விரும்பும்‌ நாம்‌ இயேசுவின்‌ கொள்கையையும்‌, கொள்கை விடுக்கும்‌ ஆபத்துகளையும்‌ அறிந்தவராய்‌ ஓர்‌ ஆள்‌ தன்மை உறவு கொண்டிருக்க வேண்டும்‌. இது இரத்த உறவு அல்ல. இலட்சிய ஞான உறவு (மாற்கு 3:14). இயேசு சீடர்களைத்‌ தம்மோடு இருப்பதற்காக அழைத்தார்‌ அல்லவா (யோவா. 15:5). நான்‌ திராட்சைக்‌ கொடி நீங்கள்‌ அதன்‌ கிளைகள்‌ என்றார்‌.

இலட்சியப்‌ பயணம்‌

தெளிவு பெற்றவர்கள்‌ உறவை வளர்த்தார்கள்‌. அந்த லட்சியம்‌ நிறைவேறும்‌ வரைப்‌ பயணம்‌ செய்வர்‌. வரும்‌ தடைகளை எல்லாம்‌ கடந்து செல்வர்‌. இவர்களுக்கு வரும்‌ தடைகள்தான்‌ சிலுவைகள்‌. இதைச்‌ சுமந்தால்தான்‌ சீடராக இருக்க முடியும்‌.

அன்னை தெரசா கல்கத்தாவில்‌ தான்‌ நடத்திய அனாதை இல்லங்களில்‌ உள்ள மக்களின்‌ புண்களைக்‌ கழுவி, குப்பைத்‌ தொட்டியில்‌ கிடக்கும்‌ குழந்தைகளைத்‌ தூக்கி எடுத்து முத்தமிடுவார்கள்‌. இந்த நாற்றமெடுக்கும்‌ செயல்களை உங்களால்‌ எப்படிச்‌ செய்ய முடிந்தது என்று கேட்டார்‌ ஒரு பெரிய பணக்காரர்‌. அன்னை என்ன சொன்னார்கள்‌ தெரியுமா?

இந்த நாற்றமெடுக்கும்‌ சகோதரன்‌, சகோதரியில்தான்‌ இயேசு வாழ்கிறார்‌. அவரையல்லவா தூக்குகிறேன்‌, புண்களைக்‌ கழுவுகிறேன்‌ என்றார்‌ (மத்‌. 10:41-42). எனவேதான்‌ இன்றைய நற்செய்தியில்‌ இறைவாக்கினரை ஏற்பவர்‌, நேர்மையாளரை ஏற்பவர்‌. சின்னஞ்‌ சிறியவர்களுக்கு எதைச்‌ செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்‌ என்றும்‌ கூறுகிறார்‌ (மத்‌. 25:40).

ஒருநாள்‌ ஒரு நல்ல மனிதர்‌ இயேசுவைக்‌ காட்சியில்‌ கண்டார்‌. இயேசுவே! உண்மையிலே நீ அன்பு செய்கிறீரா என்று கேட்டார்‌. ஆம்‌! என்றார்‌ இயேசு! எவ்வளவு அன்பு செய்கிறீர்‌ என்று கேட்டான்‌ இரண்டாம்‌ முறையாக. இயேசு பதில்‌ சொல்லாமல்‌ சிலுவையில்‌ இரு கரங்களை விரித்துக்கொண்டு நான்‌ இவ்வளவு அன்பு செய்கிறேன்‌ என்றார்‌.

இதுதான்‌ இயேசுவின்‌ அன்பு. அவரை நாம்‌ பின்பற்றுவோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

போதும்‌ என்ற மனம்‌ நமக்குத்‌ தேவை !

ஒருநாள்‌ இறைவாக்கினர்‌ எலிசா சூனேமுக்குச்‌ சென்றார்‌. அங்கேயிருந்த பணக்காரப்‌ பெண்‌ ஒருவர்‌ அவரை உணவருந்தும்படி . வற்புறுத்தினார்‌. அதன்பின்‌ அவர்‌ அவ்வழியே சென்றபோடதல்லாம்‌ அங்கே உணவருந்திவிட்டுச்‌ செல்வார்‌ (2 அர 4:8]. அந்தப்‌ பெண்ணின்‌ கணவரும்‌ செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பவர்‌. இப்படிப்‌ பட்டவர்களுக்குக்‌ குழந்தை இல்லை. இதையறிந்த எலிசா இறைவாக்கினர்‌ வீட்டுத்‌ தலைவிக்கு, அடுத்த ஆண்டு இதே பருவத்தில்‌ மகன்‌ பிறந்திருப்பான்‌ (2 அர 4 : 16) என்று ஆசியளிக்க, அந்த தர்மச்‌ சிந்தனை மிக்கவர்‌ வீட்டிலே ஆண்‌ குழந்தை ஒன்று பிறந்தது.

பிறருக்கு நாம்‌ செய்யும்‌ உதவி ஒரு போதும்‌ வீண்போகாது என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குச்‌ சுட்டிக்காட்டுகின்றது .

இன்றைய நற்செய்தியிலே இயேசு, என்‌ சீடர்‌ என்பதால்‌ ஒரு கிண்ணம்‌ குளிர்ந்த நீராவது கொடுப்பவரும்‌ கைம்மாறு பெறாமல்‌ போகார்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்கின்றேன்‌ [மத்‌ 10:42) என்கின்றார்‌. தீர்ப்பு நாளில்‌, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்‌ மட்டுமே இறைவனின்‌ நிறை ஆசிரை, நிலை வாழ்வைப்‌ பெறுவர்‌ [மத்‌ 25:31-45].

நம்மிடமிருப்பதைப்‌ பிறரோடு பகிர்ந்து கொள்ளவிடாமல்‌ நம்மைத்‌ தடுப்பது எது? நமது இதயம்‌ நிரப்பமுழயாத பாத்திரமாயிருந்து, பேராசை கொண்டவர்களாய்‌ நாம்‌ வாழ்ந்தால்‌ நாம்‌ தர்மம்‌ செய்ய முன்வரமாட்டோம்‌.

ஒருமுறை பேராசை கொண்ட அரசன்‌ ஒருவனிடம்‌ துறவி ஒருவர்‌ பிச்சைக்‌ கேட்டார்‌. அரசனோ உங்களுக்கு என்ன வேண்டும்‌ என்றான்‌. துறவியோ தனது பிச்சைப்‌ பாத்திரத்தை நீட்ட, இது நிறைய எனக்குப்‌ பொற்காசுகள்‌ கொடுங்கள்‌ என்றார்‌.

இவ்வளவுதானா? என்று சொன்ன அரசன்‌ கைதட்ட பெரிய தாம்பாளத்‌ தட்டில்‌ பொற்காசுகள்‌ கொண்டுவரப்பட, அரசன்‌ அவற்றை துறவியின்‌ பாத்திரத்தில்‌ போட்டான்‌. போடப்பட்ட பொற்காசுகளையல்லாம்‌ பிச்சைப்‌ பாத்திரம்‌ விழுங்கிக்‌ கொண்டேயிருந்தது. மூட்டை மூட்டையாக பொற்காசுகளைப்‌ பாத்திரத்தில்‌ கொட்டியும்‌, பிச்சைப்‌ பாத்திரம்‌ நிரம்பவில்லை! அரசன்‌ அதிர்ச்சி அடைந்தான்‌!

துறவியோ சிரித்துக்‌ காண்டே, அரசே ! இந்தப்‌ பிச்சைப்‌ பாத்திரத்தை உங்களால்‌ மட்டுமல்ல, யாராலும்‌ நிரப்ப முடியாது என்றார்‌. அரசனோ, காரணம்‌ என்ன? என்று கேட்டான்‌. துறவியோ, இது சாதாரண பிச்சைப்‌ பாத்திரம்‌ அல்ல! பேராசைகளுடன்‌ வாழ்ந்து செத்துப்போன ஒரு மனிதனின்‌ மண்டை ஓடு! என்றார்‌. கதையில்‌ வந்த மண்டை ஓடு போன்ற மனம்‌ படைத்தவரால்‌ நிச்சயமாக மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியாது!

எப்போது நாம்‌, இதுபோதும்‌ எனக்கு, என்று சொல்கின்றோமோ அப்‌பொழுதுதான்‌ நாம்‌ மற்றவரின்‌ நலனில்‌ அக்கறை கொள்வோம்‌.

பிறரன்பு வாழ்வு வாழ அழகான வழி ஒன்று உண்டு! திருமுழுக்கு நாளன்று நாம்‌ இயேசுவோடு ஒட்டூப்‌ போடப்பட்டோம்‌! இயேசுவோடு இணைந்தோம்‌ ; நாம்‌ மறுகிறிஸ்துக்களாக மாற்றப்பட்டோம்‌. இன்று இயேசுவின்‌ இரத்தம்‌ நமக்குள்‌ பாய்ந்துகொண்டிருக்கின்றது (இரண்டாம்‌ வாசகம்‌). திருமுழுக்குப்‌ பெற்ற ஒவ்‌வாருவராலும்‌ பவுலழயாரைப்‌ போல, இனிவாழ்பவன்‌ நான்‌ அல்ல ; கிறிஸ்துவே என்னுள்‌ வாழ்கின்றார்‌ (கலா 2:20) என்று சொல்ல முடியும்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

அன்பிலார்‌ எல்லாம்‌ தமக்குரியர்‌; அன்புடையார்‌
என்பும்‌ உரியர்‌ பிறர்க்கு (குறள்‌ : 72).

பொருள்‌ : அன்பு இல்லாதவர்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ தமக்கே உரிமை பாராட்டுவர்‌. அன்பு உள்ளம்‌ கொண்டவர்‌ தம்‌ உடல்‌, பொருள்‌, ஆவி அனைத்தையும்‌ பிறர்க்கு வழங்குவர்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கொடுத்தலே பேறுடைமை

ஓர்‌ அம்மா திருப்பலி முடிந்து வீட்டிற்குத்‌ திரும்பியபோது பங்குத்‌ தந்தையின்‌ மறையுரையை கடுமையாக விமர்சனம்‌ செய்துகொண்டே சென்றார்‌. அவருடன்‌ சென்ற அவருடைய பத்து வயதான மகன்‌ அவரிடம்‌, “அம்மா! பேசாம வாங்க; நீங்க போட்ட பத்துப்‌ பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம்‌ வேணுமா?” என்று கேட்டு, அவருடைய வாயை அடைத்தான்‌. பத்துப்பைசா காணிக்கை கொடுத்துவிட்டு, பத்தாயிரம்‌ வினாக்கள்‌ எழுப்புகின்றவர்கள்‌ பலர்‌ இக்காலத்தில்‌ உள்ளனர்‌.

கடவுளுக்கும்‌ திருப்பணிக்கும்‌ நாம்‌ தாராளமாகக்‌ கொடுத்தால்‌ கடவுளும்‌ நமக்குத்‌ தாராளமாகக்‌ கொடுப்பார்‌. கிறிஸ்து தெளிவாகக்‌ கூறியுள்ளார்‌: “எந்த அளவையால்‌ அளக்கிறீர்களோ அதே அளவையால்‌ உங்களுக்கும்‌ அளக்கப்படும்‌” (லூக்‌ 6:38). திருத்தூதர்‌ பவுல்‌ கூறுகிறார்‌: “குறைவாக விதைப்பவர்‌ குறைவாக அறுவடை செய்வார்‌. நிறைவாக விதைப்பவர்‌ நிறைவாக அறுவடை செய்வார்‌” (2 கொரி 9:6).

இன்றைய முதல்‌ வாசகமும்‌ நற்செய்தியும்‌ நாம்‌ திருப்பணியாளர்களுக்குச்‌ செய்யும்‌ உதவிக்குக்‌ கடவுள்‌ கைமாறு அளிப்பார்‌ என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இன்றைய முதல்‌ வாசகம்‌ இறைவாக்கினர்‌ எலியாவின்‌ சீடராகிய எலிசாவைப்பற்றி உள்ளது. எலியாவின்‌ வாழ்வில்‌ நடந்தது எலிசாவின்‌ வாழ்விலும்‌ நடக்கிறது.

எலியாவின்‌ காலத்தில்‌ நாடெங்கும்‌ பஞ்சம்‌ ஏற்பட்டபோது, சாரிபாத்தில்‌ வாழ்ந்த ஏழைக்‌ கைம்பெண்‌, தனக்காகவும்‌ தனது பிள்ளைகளுக்காகவும்‌ அப்பம்‌ சுட வைத்திருந்த மாவையும்‌ எண்ணெய்யையும்‌ கொண்டு அப்பம்‌ சுட்டு அதை எலியாவுக்குக்‌ கொடுக்கிறார்‌. அதன்‌ விளைவு: பஞ்சம்‌ முடியும்வரை அவருடைய பானையில்‌ இருந்த மாவும்‌ கலயத்தில்‌ இருந்த எண்ணெய்யும்‌ சிறிதும்‌ குறையாமல்‌ இருந்தது (1 அர 17:1-16).

எலியாவின்‌ சீடர்‌ எலிசாவை, சூனேம்‌ ஊரைச்‌ சேர்ந்த பணக்காரப்‌ பெண்‌ ஒருவர்‌ தனது வீட்டில்‌ வரவேற்று, அவர்க்கு உணவளித்து, அவர்‌ தங்குவதற்கு தன்‌ வீட்டில்‌ தனி அறையை ஒதுக்கிக்‌ கொடுக்கிறார்‌. அதற்குக்‌ கைமாறாக, மகப்பேறின்றி இருந்த அவருக்கு மகப்பேறு கிடைக்கின்றது என்று இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ கூறுகிறது (2 அர 4:8-11, 14-16).

இன்றைய நற்செய்தியில்‌ கிறிஸ்து கூறுகிறார்‌: “இறைவாக்கினர்‌ ஒருவரை அவர்‌ இறைவாக்கினர்‌ என்பதால்‌ ஏற்றுக்கொள்பவர்‌ இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்‌” (மத்‌ 10:41). கிறிஸ்துவின்‌ சீடர்க்கு ஒரு கிண்ணம்‌ குளிர்ந்த நீராவது கொடுப்பவரும்‌ கையாறு பெறாமல்‌ போகமாட்டாா்‌ (மத்‌ 10:42)

திருப்பணியானர்களுக்கு உதவி செய்வது பெதுநிலையினரின்‌. கடமையும்‌ உரிமையுமாகும்‌, ஏனெனில்‌, “நற்செய்தியை அறிவிக்கிறவர்கள்‌. அந்தற்செய்தியில்‌. மூலமாகலே பிழைப்புக்குரியவற்றைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டுமென நம்‌ ஆண்டவர்‌ பணித்திருக்கிறா்‌” (1 கொாி 9:14) என்று பவல்‌ கூறுகிறா்‌ ஆண்டவரும்‌, "வேலையாள்‌ உணவுக்கு உரிமை உடையவரே” (மத்‌ 10:30) என்று ௯றுகிறார். திருசசபையின்‌ தேவைகளுக்கு உதவிபுரிய கிறிஸ்தவ விசுவாசிகள்‌ கடமைப்பட்டுள்ளனர்‌ என்று திருச்சபைச்‌ சட்டமும்‌ அறிவுறுத்துகிறது (திச 222, ப1)

பழைய ஏற்பாட்டில்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்கள்‌ வருமானத்தில்‌ பத்தில்‌ ஒரு பங்கைக்‌ கடவுளுக்குக்‌ காணிக்கையாகச்‌ செலுத்த வேண்டும்‌. அப்படி செலுத்தாதவர்கள்‌ கடவுளையே கொள்ளையடிக்கிறார்கள்‌ என்றும்‌, அதனால் தான்‌ வானம்‌ பொழிவதில்லை; பூமி விளைவதில்லை என்றும்‌ கடவுள்‌ இறைவாக்கினர்‌ மலாக்கியா வாயிலாகக்‌ கூறுகிறான்‌ (மலா 3-12)

பங்கு மக்கன்‌ தங்கள்‌ வருமானத்தில்‌ பத்தில்‌ ஒருபங்கு கொடுக்க வேண்டாம்‌; நூற்றில்‌ ஒருபங்கு கொடுத்தாலே போதும்‌. திருப்பணியாளர்களையும்‌ பங்கையும்‌ சிரமின்றிப்‌ பராமிக்க முடியும்

திருப்பணியாளர்களுக்குப்‌ பவல்‌ மனநிலை இருக்க வேண்டும்‌. அவர்‌ கொரிந்து நகர்வாழ்‌ கிறிஸ்தவர்களிடம்‌ கூறுகிறார்‌ "உங்களுக்குச்‌ சுமையாய்‌ இருக்கமாட்டேன்‌. உங்கள்‌ உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன்‌” (2 கொரி 12:14), அதே நேரத்தில்‌ பங்கு மக்களுக்குக்‌ கலாத்தியருக்கு இருந்த மனநிலை இருக்க வேண்டும்‌, அவர்கள்‌ பவல்‌ கிறிஸ்துவைப்போல்‌ ஏற்றுக்கொண்டு, அவரது கண்‌ நோயைப்‌ போக்கத்‌ தங்கள்‌ கண்களையே தானம்‌. செய்யவும்‌ தயாராக இருந்தனர் (கலா 4:14-15), திருப்பணியாளாகள்‌ பொருளாசை இன்றிப்‌ பணிசெய்ய வேண்டும்‌. பங்குமக்கள்‌ திருப்பணியாளர்கள்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்ய வேண்டும்‌ .

ஒரு சிறுமி ஓர் அருள்பணியாளரிடம்‌, “பாதர்‌ நீங்கள்‌ செத்துப்போனால்‌ யார்‌ அழுவாங்க? நாண்‌ அழட்டுமா?” என்று. கேட்டபோது அந்த அருள்பணியாளரின்‌ நெஞ்சம்‌ நெகிழ்ந்தது. குருக்கள்‌ சாகும்போது குருககளுக்காகக் குருக்கள்‌ அழுவதில்லை. பொதுமக்கள் தான்‌ அழுகின்றனர்‌. கிறிஸ்து சிலுவையை சுமந்து போனபோது பெண்கள்தான்‌ அவருக்காக மாரடித்தப்‌ புலம்பி ஆண்கள்‌ மனதைவிட பெண்கள்‌ மனது இளகியது. கிறிஸ்துவின்‌ தேவைகளைப்‌ பெண்கள்தான்‌ பூர்த்தி செய்தனர்‌ (லூக் 8:1-2)

சக்கேயுவைப்‌ பின்பற்றி நமக்கு உள்ளதிலிருந்து காணிக்கை. கொடுப்போம்‌ (லூக்‌ 138). எழைக்‌ கைம்பெண்ணைப்‌ பின்பற்றி நமக்கு உள்ளதையெல்லால்‌ கொடுப்போம்‌ (லூக்‌ 21.14). கிறிஸ்துவைப்‌ பின்பற்றி நம்மையே, உயிரையே கொடுப்போம்‌ (யோவா 15:13)

“பெற்றுக்‌ கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று. ஆண்டவர்‌ கூறியதை நினைவகூருங்கள்‌" (திப 20:35),

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தளிர்ப்பதற்கே தன்னிழப்பு

மனிதனாகப் பிறந்தவன் இசைபட வாழ வேண்டும். இசைபட வாழுதல் - எவ்வளவு அருமையான சொல்லாடல்! அதற்குப் பொருள்? இசையின் ஏழு சுரங்களாக வாழ்வு அமைய வேண்டும் என்பதே பொருத்தமான விளக்கம்.

சரி - நீ இந்த உலகில் பிறந்தது சரி. ஆகவே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை எடுத்த நீ, வாழ்நாள் முழுவதும் இறைவன் திருவுளத்துக்கு ஆகட்டும் என்று சொல்லப்பழகு.

கம - கமகமவென்று நறுமணம் கமழ அதாவது புகழுடம்பு பெறும் வகையில் வாழ முயற்சி செய். அது எப்படி?

பத - பதமாயிரு. அதாவது யாரிடத்தும் கடுமையான வார்த்தைகளைப் பேசிப் பிறர் உள்ளத்தைப் புண்ணாக்கி விடாதே; அதற்கு மென்மையான போக்கைக் கடைப்பிடி.

நி ச - உச்சரிப்பில் நெடிலாகி “நீ சா” என்று வரும். நீ சாக வேண்டும். அதாவது எதற்கெடுத்தாலும் 'நான் நான்' என்று சொல்லிக் கொள்ளாமல் உன்னிடத்தில் உள்ள தான் என்ற அகந்தையைச் சாகவிடு.

மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியை கேட்டார்: "மோட்சம் போக என்ன செய்ய வேண்டும்?” கடவுளை அன்பு செய்யணும்; கடமையைச் சரியாகச் செய்யணும் போன்ற பல்வேறு பதில்களுக்கிடையே ஒரு மாணவன் சொன்னான் “மோட்சம் போக வேண்டுமா? முதலில் சாக வேண்டும்."

1. இசைபட வாழ்தலின் ஒரு கூறு சாதல்: பொன்னைத் துறப்பதும், பொருளைத் துறப்பதும்/ பெண்ணைத் துறப்பதும் அல்ல தன்னைத் துறப்பதே தரமான துறவு. “கோதுமை மணி மண்ணில் விழுந்து ... மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோ. 12:24) இயேசுவே இந்த உண்மைக்கு இலக்கணம், எடுத்துக்காட்டு. காரணம்? பிறர் நல்வாழ்வுக்காகத் தம்மையே வெறுமையாக்கினார் (பிலிப் 2:7-8). எனவே இயேசு தன் சீடர்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே. "தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என்பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்" (மத். 10:39).

இயேசுவின் மானிடப் பிறப்பின் தொடர்ச்சியாக அவருடைய சீடர்கள் வாழ வேண்டும். இயேசு தன்னையே அழித்துத்தான் பிறர் வாழச் செய்தார். புண்பட்டோருக்கு, புறக்கணிக்கப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை இழந்தோருக்கு நலமும் மறுவாழ்வும் தரும் சவாலான பணி. அதற்காகப் புண்படவும் பொன்னானவற்றை இழக்கவும் தயாரா? துருப்பிடித்து அழிவதைவிட, எரிந்து சாம்பலாவது மேலானது.

"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" (மத். 6:24) அதனால்தான் “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ ... தம் மகனிடமோ மகளிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்'' (மத். 10:37) என்கிறார் இயேசு.

தூய பிரான்சிஸ் அசிசியார், காயங்களில்கூட இயேசுவின் சாயலைத் தாங்கிய மாபெரும் புனிதர். “நற்செய்தி வாழ்க்கை முறையும் இயேசுக் கிறிஸ்துவின் சாயலும் பிரான்சிஸ் அசிசியாரில் ஒளி வீசியது போல வேறு எவரி எக்காலத்திலும் விளங்கியதில்லை” என்பார் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர். பணக்காரத் துணி வியாபாரியின் மகனாகப் பிறந்த அவர் ஒரு நாள் தன் தந்தை இல்லாதபோது மாடியிலிருந்து தெருவில் போகும் ஏழைகளுக்குத் துணிகளை அள்ளி வீசியிருக்கிறார். கொடும் பனியில் தவித்த ஏழைக்குத் தன் போர்வையையே கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

புனித தமியான் ஆலயத்தில் தான், “பாழடைந்த என் ஆலயத்தைப் பழுதுபார்" என்ற இறை அழைப்புக்குச் செவிமடுத்தார். தன் தந்தை வைத்திருந்த துணிகளில் ஒரு கட்டுத் துணியை எடுத்து விற்றுக் கிடைத்த பணத்தை ஆலயப் பொறுப்பாளர் தந்தையிடம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டுக் கோபமடைந்த அவரது தந்தை அசிசிநகர் மறை ஆயரிடம் முறையிட்டுத் தன் மகன் தனக்கு வாரிசல்ல என்று கை கழுவினார். ஆயரும் பிரான்சிஸ் வைத்திருந்த பணத்தை அவருடைய தந்தையிடம் ஒப்படைக்குமாறு ஆணையிட்டார். பிரான்சிஸ் பணத்தோடு தான் உடுத்தியிருந்த ஆடையையும் கொடுத்துவிட்டு “இதுவரை பீட்டர் பெர்னடோனேயை அப்பா என்று அழைத்து வந்தேன். இனி விண்ணுலகில் இருக்கிற நம் தந்தையை மட்டும்தான் என் அப்பா என்று சொல்லப்போகிறேன்" என்று கூறி வெளியேறினார். இதுதான் பிரான்சிஸின் வாழ்வில் திருப்புமுனையானது.

2. இசைபட வாழ்தலின் இன்னொரு கூறு ஈதல்: "ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" (குறள் 231). முதல் வாசகம் இறைவாக்கினர் எலியாவின் சீடரான எலிசாவைப் பற்றியது (2 அர. 4:8-16) எலியாவின் வாழ்வில் நடந்தது (1 அர 17:1–16) எலிசாவின் வாழ்விலும் நடக்கிறது.

பஞ்சம் தலைவிரித்தாடியபோது தனக்கென வைத்திருந்த சிறிதளவு மாவையும் எண்ணெயையும் கொண்டு சாரிபாத்து ஊர் எழைக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவின் பசியை ஆற்ற, அதன் விளைவாகப் பஞ்சகாலம் முடியும் வரை அமுதசுரபி போல் மாவும் எண்ணெயும் எடுக்க எடுக்கக் குறையாமல் இருந்தது. கடவுளின் மனிதர் எலிசாவுக்கு சூணேம் நகர் செல்வச் சீமாட்டி அளித்த விருந்தோம்பல் குறிப்பிடத்தக்கது. அதற்கு நன்றியாக அவளுக்குக் குழந்தைப் பேறு வாக்களிக்க, அதுவும் பலிக்கிறது.

நற்செய்தியிலோ தனது சீடர்களை வரவேற்று ஏற்றுக் கொள்பவர்களுக்கு "இறைவாக்கினருக்குரிய கைம்மாறு", "நேர்மையாளருக்குரிய கைம்மாறு” என்று இயேசு வாக்களிக்கிறார். "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" (மத்.10:42).

உலகம் அழியாமல் இருப்பது ஏன்? உலகம் அழியாமல் இருப்பதற்குக் காரணம்? விண்ணுலகில் அமுதமே கிடைத்தாலும் அதைத்தான் மட்டுமே உண்ணாமல் பலரோடும் பகிர்ந்து உண்ணக்கூடியவர்களாக இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள். அதனால் தான் உலகம் அழியாமல் இருக்கிறது என்று கூறுகிறார் புறநானூற்றில் பாண்டிய மன்னன் இளம்பெருவழுதி.

தனக்கென வாழ்பவன் இருந்தும் இறக்கின்றான்
பிறர்க்கென வாழ்பவன் இறந்தும் இருக்கின்றான்

இளைஞனே!
புயலை நேசித்துப்பார். தென்றலின் இழப்பு சோகம் தராது.
நெருப்பை நேசித்துப்பார். ஏ.சி.இன்மை ஏக்கம் தராது.
இருளை நேசித்துப்பார். வெளிச்சமின்மை வெறுப்பாய் இராது.
கசப்பை நேசித்துப்பார். இனிப்பு இன்மை இழப்பாய் இராது.
வறுமையை நேசித்துப்பார் பசி என்பது பொருட்டாய் இராது.
எளிமையை நேசித்துப்பார் ஆடம்பர நாட்டம் அறவே வராது.
ஆம் இழப்புக்களை நேசிக்கக் கற்றுக் கொள். யுகத்தை
வெல்லும் வலிமை பெறுவாய்.

இழப்பை நேசிப்பதா? எப்படி?
"அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக்கொடிகள் கனிதராவிடினும் ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும் வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன். ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை. அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போல் ஆக்குவார். உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்" (அபக்கூக்கு 3:17-19).

வாழ்வதற்காகவே மனிதன் பிறக்கிறான். ஆனால் சாவதற்காகவே இயேசு பிறந்தார். சிலுவைச்சாவு வழியாகவே மீட்பும் வாழ்வும் தருவதற்காகவே பிறந்தார். இயேசுவின் உண்மைச் சீடராக, ஒருவர் சிலுவையைச் சுமந்து தன்னை இழந்து இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விருந்தோம்பலில் வளர...

இந்தியாவிலும், இலங்கையிலும், பயணங்கள் மேற்கொள்ளும் அயல்நாட்டவர், நாம் வழங்கும் வரவேற்பினால் பிரமிப்படைவதைக் காணலாம். நமது வரவேற்பையும், விருந்தோம்பலையும் பற்றி அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியபிறகும் பேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். நமது கலாச்சாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் விருந்தோம்பல் பண்பு, அண்மைய ஆண்டுகளில், தேய்ந்து, மறைந்து வருவது, மனதை பாரமாக அழுத்துகிறது. விருந்தோம்பலைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு, நம்மை அழைக்கிறது.

இந்தியப் பாரம்பரியத்தில், விருந்தினருக்கு உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டது. 'Atithi Devo Bhava' என்ற சொற்கள், இந்திய வேத நூல்களில் காணப்படுகின்றன. இதன் பொருள்: "விருந்தினர், கடவுளுக்குச் சமமானவர்". இதையொத்த எண்ணத்தை, 'விருந்தோம்பல்' என்ற பிரிவில் திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு. அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்போர், வானவர் மத்தியில் நல்ல விருந்தினர் ஆவார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமை நாம் விவிலியத்தில் சந்திக்கிறோம். (தொடக்க நூல் 18:1-8) ஆபிரகாம் பெற்ற இந்த அற்புத அனுபவம், கிறிஸ்தவர்களின் அடிப்படை அனுபவமாக விளங்கவேண்டும் என்று, எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகம் நமக்கு அறிவுறுத்துகிறது:

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. வந்திருக்கும் விருந்தினர் வானவராவதும், விருந்தினரை வரவேற்று, உபசரிப்பவர்கள், வானவர் நடுவே விருந்தினராவதும், விருந்தோம்பலின் அழகான விளைவுகள். இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியின் இறுதிப் பகுதியும் அமைந்துள்ளன.

சூனேம் நகரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இறைவாக்கினர் எலிசாவை வரவேற்று, உபசரித்ததை இன்றைய முதல் வாசகம் (2 அரசர் 4:8-11, 14-16) விவரிக்கின்றது. உணவு படைப்பதோடு துவங்கும் இந்த உபசரிப்பு, இறைவாக்கினர் வந்து தங்குவதற்கு உறைவிடம் உருவாக்கித்தரும் முயற்சியாக வளர்கிறது. அதுவும், சூனேம் நகரப் பெண்மணி, இறைவாக்கினருக்கென தன் வீட்டின் மேல்தளத்தில் புதிதாக அறை ஒன்றைக் கட்டி, அதை அவருக்கென ஒதுக்கி வைப்பதை இன்றைய வாசகம் விவரிக்கிறது. அப்பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, விவிலிய ஆய்வாளர், அருள்பணி யேசு கருணா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை: மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவதில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம்.

இத்தகைய விரும்தோம்பலால் உள்ளம் நிறைவடைந்த இறைவாக்கினர் எலிசா, குழந்தைப்பேறு இன்றி தவித்த சூனேம் நகரப் பெண்ணுக்கு குழந்தை வரம் கொடுக்கும் ஆசீரோடு இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது. விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும், பெறுவோரும் ஆசீர்வாதங்களால் நிறைவர் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஒருவரை ஏற்றுக்கொள்பவர், அதாவது வரவேற்று, உபசரிப்பவர், தகுந்த பலனைப் பெறுவார் என்பதை, இன்றைய நற்செய்தியில், இயேசு, ஓர் உறுதிமொழியாக வழங்குகிறார்.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, மத்தேயு பத்தாம் பிரிவின் இறுதிப் பகுதி. இயேசு, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் (மத். 10:8) அதிகாரங்களை வழங்கும் சக்தி மிகுந்த சொற்களுடன், இயேசுவின் அறிவுரை ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து, தன் சீடர்கள் சந்திக்கப்போகும் ஆபத்துக்களைக் குறித்து இயேசு வழங்கும் எச்சரிக்கைகள், இப்பிரிவின் அடுத்தப் பகுதியாக அமைந்துள்ளது (மத். 10: 16-32). இந்த எச்சரிக்கைகளின் ஒரு பகுதியை, நாம் சென்ற ஞாயிறு, நற்செய்தியாகக் கேட்டோம்.

சீடர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களை, மூடி மறைக்காமல் தெளிவாகக் கூறிய இயேசு, இப்பிரிவின் இறுதிப் பகுதியில், இன்னும் சில சவால்களை சீடர்கள் முன் வைக்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக ஒலிக்கின்றது. "தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்" (மத். 10:38) என்ற தெளிவான சவாலை விடுக்கும் இயேசு, கனிவு ததும்பும் சொற்களுடன் தன் அறிவரையை நிறைவு செய்கிறார்:

மத்தேயு 10: 40-42
உங்களை ஏற்றுக்கொள்பவர், என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை, அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர், இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை, அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர், நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும், தம் கைம்மாறு பெறாமல் போகார் என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

'ஏற்றுக்கொள்ளுதல்', அதாவது, 'வரவேற்று உபசரித்தல்', 'ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்' என்ற எண்ணங்களை இயேசு தன் சீடர்களிடம் கூறியபோது, தனது பணிவாழ்வில் கிடைத்த விருந்தோம்பலை அவர் உள்ளம் அசைபோட்டிருக்க வேண்டும். மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய நண்பர்களிடையே தான் பெற்ற வரவேற்பு, கானா திருமண விருந்து, தொழுகைக்கூடத் தலைவன் வீட்டில் கிடைத்த விருந்து, சமாரியப் பெண் தந்த குளிர்ந்த நீர்... இவை அனைத்தும் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்கும். தனக்குக் கிடைத்த விருந்தோம்பல் அனுபவங்கள், தன்னை வளமடையச் செய்துள்ளதுபோலவே, தன் சீடர்களின் வாழ்வையும் வளமையாக்கும் என்பதை இ

இயேசு சொல்லித்தந்த விருந்தோம்பலும், வரவேற்பும், ஆதிக் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால், அது மிகையல்ல. கிறிஸ்தவ மறையை இத்தனை நூற்றாண்டுகளாக வாழவைத்ததன் ஒரு முக்கிய காரணம், ஆதி கிறிஸ்தவர்கள், மற்றும் ஏனைய நல்ல உள்ளங்கள் சீடர்களுக்குத் தந்த வரவேற்பும், விருந்தோம்பலும். இந்த வரவேற்பு இன்றி, கிறிஸ்தவ மறை உயிர் வாழ்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கிறிஸ்துவின் சீடர்கள், ஊர், ஊராக, அல்லது, நாடுவிட்டு நாடு சென்றபோது, அவர்களை வேட்டையாடி, கொல்வதற்கு, பல்வேறு குழுக்கள் இருந்தாலும், அவர்களை வரவேற்பதற்கு ஒரு சில இல்லங்கள் திறந்திருந்தன. இந்த இல்லங்களில், சீடர்களுடன் கூடிய மக்கள் நடுவே, நற்செய்தி பகிர்ந்துகொள்ளப்பட்டது; இயேசுவின் இறுதி உணவு, நினைவுகூரப்பட்டது. ஆழமாகச் சிந்தித்தால், சீடர்களை வரவேற்ற இந்த இல்லங்களே, முதல் ஆலயங்களாக விளங்கின.

உரோமையப் பேரரசன் கான்ஸ்டன்டைன், 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே, கிறிஸ்தவர்களின் வழிபாட்டிற்கென, ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதுவரை, கிறிஸ்தவர்கள், மறைவிடங்களில், பூமிக்கடியில், இரகசியமாக கூடி வழிபட்டனர் என்பதை அறிவோம். முதல் மூன்று நூற்றாண்டுகள், சாதாரண மக்கள் வாழ்ந்த இல்லங்களே, கிறிஸ்தவ மறையை வளர்த்த நாற்றங்கால்களாய் விளங்கின. அத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில், கிறிஸ்தவர்களிடையே நிலவிய வரவேற்பு, விருந்தோம்பல், பகிர்தல் ஆகிய பண்புகளே, கிறிஸ்தவம் நோக்கி மக்களை ஈர்த்தன.

இன்று கிறிஸ்தவ விருந்தோம்பலின் நிலை என்ன? பொதுவாக, இவ்வுலகில் விருந்தோம்பல் என்ற பண்பு குறைந்து, மறைந்துவருவது போலவே, கிறிஸ்தவ சமுதாயங்களிலும் மறைந்து வருகின்றது. இன்று, உலகெங்கும், நகரங்களில் வாழும் ஒவ்வொருவர் இல்லமும், பல்வேறு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட அரணாக மாறியுள்ளது. அயலவர்மீது அச்சமும், சந்தேகமும் அதிகரித்துவிட்டதால், வரவேற்பு, விருந்தோம்பல், ஆகிய அழகிய அம்சங்கள், காற்றோடு கரைந்துவிட்டன. நமது சுயநல நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதால், 'தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும்' அடிப்படை ஈரமும் நமக்குள் வறண்டு வருவதை உணர்கிறோம்.

அயலவரை, உறவினரை முகமுகமாய் சந்திப்பது ஆபத்து என்பதால், கருவிகளின் துணையை நாடுகிறோம். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தொடர்புசாதனக் கருவிகள் தூரங்களை அழித்துவிட்டன என்று பெருமைப்படுகிறோம். ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருப்போரையும், நம் கருவிகள் வழியே சந்தித்து, கைகுலுக்கும் அளவுக்கு நம் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. இவ்வுலகத் தொடர்புகள் போதாதென்று, விண்வெளியில் உள்ள கோளங்களையும் தொட்டுவிடுமளவு நம் தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

2015ம் ஆண்டு, ஜூலை மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், NASA ஏவிய ஒரு விண்கலம், சூரியக் குடும்பத்தின் எல்லையில் சுற்றிவரும் கோளமான புளூட்டோவை நெருங்கி, அங்கிருந்து தெளிவான புகைப்படங்களை அனுப்பியது. 2006ம் ஆண்டு, சனவரி மாதம், விண்ணில் ஏவப்பட்ட 'புதியத் தொடுவானங்கள்' (New Horizons) என்ற இந்த விண்கலம், மணிக்கு, ஏறத்தாழ 50,000 கி.மீ. வேகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் தூரத்து உறவினரைத் தொட்டுவிட்டது. பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடையே உள்ள தூரம் ஏறத்தாழ 600 கோடி கி.மீட்டர்கள் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் 600 கோடி கி.மீட்டர்களைக் கடந்து, புளுட்டோவைத் தொட்டுவிட வழிகளை கண்டுபிடித்த நாம், பக்கத்து வீட்டாரைத் தொட்டுவிட, அவர்களை வரவேற்க வழிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுகிறது. விண்வெளியை வெல்லும் நாம், நம் மனவெளியை வெல்ல முடியவில்லையே என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், Bob Moorehead என்பவர் எழுதிய வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன. 1995ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் குறுங்கட்டுரையில், இடம்பெறும் வார்த்தைகள், இன்று நமக்கு முன் கேள்விகளைத் தொடுக்கின்றன:

பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்த வீட்டுக்காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். விண்வெளியை வென்றுவிட்டோம், ஆனால், ஆழ்மன வெளியை வெல்லவில்லை. (We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbor. We conquered outer space but not inner space.)

வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழ் பண்பை, நம் இந்தியப் பண்பின் ஆணி வேர்களில் ஒன்றான விருந்தோம்பலை, கிறிஸ்தவத்தின் துவக்க காலத்தில், நம் முன்னோரிடையே விளங்கிய வரவேற்பை, விருந்தோம்பலை, மீண்டும் உயிர்பெறச் செய்வோம். நாம் விருந்து படைப்போர் மத்தியில் வானதூதர்களும், இறைவாக்கினர்களும் இருக்கலாம். வானதூதர்களும், இறைவாக்கினர்களும் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கும் வாய்ப்பை உருவாக்குவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தன்னையே தருவதில் முழுமை பெறும் சீடத்துவம்

ஒரு பங்குக் கோயிலில் நடைபெறவிருந்த அசன விருந்திற்கு, அந்தப் பங்குக் கோயிலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள், அவ்வூரில் மிக அருகருகே இருந்த கோழிக்குப் பண்ணைக்கும் ஆட்டுப் பட்டிக்கும் சென்று, அதன் உரிமையாளரிடம், “பங்குக்கோயிலில் நடைபெறுகின்ற இருக்கின்ற அசன விருந்தில் நாங்கள் மட்டன் பிரியாணி வழங்கலாம் என்று இருக்கின்றோம்; கூடவே ஒரு முட்டையும் வழங்கலாம் என்று இருக்கின்றோம். விருந்திற்கு எப்படியும் ஆயிரம் பேராவது வருவார்கள். அதனால் நூற்று ஐம்பது கிலோ ஆட்டுக்கறியும், ஆயிரம் முட்டைகளும் நாங்கள் சொல்கின்ற நாளில் நீங்கள் எங்களுக்குத் தந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

அவர்கள் பேசியதை அருகருகே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு கோழியும் ஓர் ஆடும் இவ்வாறு பேசிக்கொண்டன. “பங்குக் கோயிலில் நடைபெறும் அசன விருந்துக்கு கோழிகளாகிய நாங்கள் எங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் தருகின்றோம். ஆடுகளாகிய நீங்கள் உங்களுடைய பங்கிற்கு வெறும் நூற்று ஐம்பது கிலோ கறிதான் தருகின்றீர்கள் போல!” என்றது கோழி. அதற்கு ஆடு கோழியிடம், “நீங்கள் உங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் வேண்டுமானால் தரலாம். ஆனால், அந்த ஆயிரம் முட்டைகளும் உங்களிடம் இருக்கின்ற ஒரு பகுதிதான். நாங்கள் அப்படிக் கிடையாது. நாங்கள் நூற்று ஐம்பது கிலோ கறி தருவதாக இருந்தாலும், எங்களையே தருகின்றோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு” என்றது. இப்படிச் சொல்லிவிட்டு ஆடு கோழியிடம் இப்படிச் சொல்லி முடித்தது: “சீடத்துவ வாழ்வு கூட தன்னிடம் இருக்கின்ற ஏதோவொன்றைத் தருவதல்ல, தன்னையே தருவது.”

ஆம், உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே தருவது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எது உண்மையான சீடத்துவம் என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருதல்

நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம், என்னைவிடத் தன் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரிடம் மிகுதியாக அன்பு கொண்டிருப்பவர் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்வதால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை வெறுக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களைவிட இயேசுவை அன்பு செய்யவேண்டும், அவருக்கு முதன்மையான இடம் தரவேண்டும். இத்தகைய வாழ்விற்கு இயேசுவே மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபிறகு, தன்னுடைய இரத்த உறவுகளை விட இறைவனுக்கும் இறையாட்சிக்குமே முதன்மையான இடம் கொடுத்தார். இதனை, இயேசு தன்னைத் தேடிவந்த தாயிடமும் சகோதரர் சகோதரிகளிடம் பேசக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு (மத் 12: 48-50) மிக எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால், இயேசுவின் சீடர் தன்னுடைய இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவதில் கருத்தாய் இருக்கவேண்டும்.

தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம்தரவேண்டும்

தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவ வாழ்வின் முதல்நிலை என்றால், தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவவாழ்வின் இரண்டாம் நிலையாகும். இதுகுறித்து இயேசு தொடர்ந்து பேசுகின்றபொழுது, “...தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்” என்கின்றார். ஆம். இயேசுவின் சீடர் அவருக்காகத் தன் உயிரையும் இழக்கத் துணிகின்றபொழுது, அதை காத்துக் கொள்பவராக இருக்கின்றார். இயேசுவின் பொருட்டு எத்தனையோ புனிதர்கள், மறைச்சாட்சிகள் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அவர்கள் அன்று தங்களுடைய உயிரை இழந்தாலும், இன்று அவர்கள் இறைவனின் திருமுன் மகிழ்ந்திருக்கின்றார்கள். நாமும்கூட நம்முடைய உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தோமெனில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

போரில் குண்டடிபட்டுக் கைகளையும் கால்களையும் இழந்திருந்த படைவீரர்கள் நடுவில், மருத்துவப் பணியும் ஆன்மிகப் பணியும் செய்துவந்த அருள்பணியாளர் ஒருவர், போரில் தன் இரு கைகளையும் இழந்ததுகூடத் தெரியமால் படுத்துக்கிடந்த படைவீரர் ஒருவரிடம் மிகவும் அமைந்த குரல், “போரில் உங்களுடைய இரண்டு கைகளையும் இழந்துவிட்டீர்கள்” என்றார். இதைக்கேட்டு சிறிதும் பதற்றமடையாத அந்தப் படைவீரர் அருள்பணியாளரிடம், “போரில் நான் கைகளை இழந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். நாட்டிற்காக நான் என்னுடைய இரண்டு கைகளை தந்திருக்கின்றேன் என்று சொல்லுங்கள்” என்றார். ஆம், கிறிஸ்துவுக்காக நம் உயிரை இழக்கின்றபொழுது அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பதே உண்மை.

சிலுவைகளைச் சுமக்கத் துணிதல்

தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர், தன்னுடைய இரத்த உறவைவிட, தன்னுடைய உயிரைவிட தனக்கு முதன்மையான இடம் தரவேண்டும் என்று சொல்லும் இயேசு, அவர் தன் பொருட்டு சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் காலத்தில் சிலுவை என்பது இழிவானதாகவும் அவமானத்தின் சின்னமாகவும் கருதப்பட்டது (1 கொரி 1: 23). ஆகவே, தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் சிலுவையைச் சுமக்கவேண்டும் என்று இயேசு சொல்கின்றபொழுது, அவர் அவமானங்களையும் துன்பங்களையும் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தன் இரத்த உறவைட, தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கும் தன் சீடர்களுக்கு உதவிகள் செய்யகூடியவர்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு அளிப்பார் என்று இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சீடர்கள் அவருடைய பதிலாளிகளாக இருக்கின்றார்கள். எனவே, அவருடைய சீடர்களுக்கு குளிர்ந்த நீரோ, உணவோ, தேவைப்படுகின்ற உதவிகளோ செய்யக்கூடியவர்கள் இயேசுவுக்கே செய்பவர்களாக மாறுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசாவிற்கு உதவிகள் செய்துவந்த சூனேமைச் சார்ந்த பெண்மணிக்கு இறைவன் குழந்தைப் பேற்றினைத் தருவதாக வாசிக்கின்றோம்.

ஆதலால், இயேசுவைப் பின்பற்றுகின்றவர்கள் தம் உறவுகளை விட, உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையாக இடம் தந்து பணி செய்யக்கூடியவர்களாக இருக்கட்டும். இப்படிப்பட்ட பணிகளைச் செய்கின்ற இயேசுவின் சீடர்களுக்கு இறைமக்கள் தக்க உதவிகளைச் செய்பவர்களாக இருக்கட்டும். இப்படி வாழ்ந்தால், எல்லாரும் இறைவனுடைய அருளைப் பெறுவது உறுதி.

சிந்தனை

‘இயேசுவின் சீடராக இருப்பதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்ற ஒருவரால் மட்டுமே, மற்றவர்களை இயேசுவின் சீடராக முடியும்’ என்பார் Follow me: A Call to Die. A call to live என்ற நூலின் ஆசிரியரான டேவிட் பிளாட். ஆகையால், நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருந்து, மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

தோற்பதால் வெல்தல்

'வின் தெ க்ரவ்ட்!' (Win the Crowd) 'மக்களை வெற்றிகொள்!'

தன்னிடம் உள்ள மாக்ஸிமுஸ் என்னும் கிளாடியேட்டர் அரங்கத்திற்குள் செல்லுமுன் இப்படிச்சொல்லிதான் அவனுடைய தலைவன் வழியனுப்புவான்.

'வின்னிங்!' 'வெற்றி கொள்தல்!' - நாம் அனைவரும் விரும்பும் ஒன்று.

வெற்றிகொள்தலில் இருவகை உண்டு. முதல் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியைத் தாழ்த்தி அல்லது அழித்து வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய இரத்தம், காயம், கண்ணீர், அழுத்தம் இருக்கும். இரண்டாம் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியை அல்லது அடுத்தவரை உயர்த்தி வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய மகிழ்ச்சி, நிறைவு, கருணை இருக்கும். 

அல்லது, முதல் வகை வெற்றி, எடுப்பதால் பெறும் வெற்றி. இரண்டாம் வகை வெற்றி, கொடுப்பதால் பெறும் வெற்றி.

இந்தக் கொரோனா காலத்தில் நம் நாட்டில் செயல்படும் அரசு, முதல் வகை வெற்றிக்கே முயற்சிக்கிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் தொடங்கப்பட்ட ஊரடங்கு மற்றும் லாக்டவுன், மருந்து, கவச உடை, சோதனைப் பெட்டி வாங்கியதில் ஊழல், பி.எம் கேர்ஸ் என்ற பெயரில் வேகமாக சேகரிக்கப்பட்ட ஆனால் மூடியே வைக்கப்பட்ட பணம், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளைத் தனியார்வயப்படுத்துதல் என்ற நிலையில் செயல்பட்டு கொரோனா மேல் வெற்றிகொள்ள நினைக்கிறது. இம்முறைகளால் அரசுக்கும் வெற்றி இல்லை, மக்களுக்கும் வெற்றி இல்லை.

இன்னொரு பக்கம், சாதாரண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்கள் தங்களையே கொடுத்து மக்களை வெற்றிகொள்கிறார்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, கொடுப்பதால் பெறும் வெற்றியை, அல்லது இழப்பதால் பெறும் வெற்றியை, அல்லது தோற்பதால் பெறும் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 அர 4:8-11,14-16) எலிசா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். எலிசா சூனேம் என்ற நகருக்கு வருகின்றார். அங்கிருந்த பணக்கார மற்றும் செல்வாக்குநிறை பெண்மணி அவரை அழைத்து விருந்தோம்பல் செய்கிறார். தொடர்ந்து அவருக்கு உணவளிக்கிறார். ஒரு கட்டத்தில், 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும்போது இங்கே ஓய்வெடுக்கட்டும்' என்று தன் கணவனிடம் சொல்கின்றார். 

இங்கே நமக்கு மூன்று விடயங்கள் தெரிகின்றன: (அ) பெயரில்லா இந்தப் பெண்ணின் பரிவு - அதாவது, எலிசாவுக்கு என்ன தேவை என்பதை உணர்கிறார். அடுத்தவரின் தேவை என்ன என்பதை அறிதல்தான் பரிவு. பரிவு வந்தால் தான் பகிர்வு சாத்தியமாகும். (ஆ) எலிசா மேல் பரிவுகொள்வதோடு நிறுத்தாமல் அந்தப் பரிவை பகிர்வின் செயல்பாடாக மாற்றுகிறாள். எலிசாவுக்கென மாடியில் ஓர் அறையையும், படுக்கை, மேசை, விளக்கு போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறாள். (இ) பெண்கள்தான் இல்லத்தின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். ஏறக்குறைய நம் முந்தைய தமிழ்ச் சமூகம் போல. குறிப்பாக, வள்ளல் பாரி ஆண்ட பறம்பு நாட்டில் குடும்பத்தலைவியர்களே வீட்டின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். (ஈ) எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஓர் ஆண்டவரின் மனிதர் என அறிகிறார். 

ஆக, பரிவு கொண்ட ஒருத்தி, பகிர்ந்து கொள்ளத் துணிந்து, முன்பின் தெரியாத ஒரு அந்நியரை ஆண்டவரின் அடியவர் புனிதர் என வரவேற்கின்றார். இப்பெண்ணின் இச்செயலுக்கு எலிசா ஏதாவது கைம்மாறு செய்ய நினைக்கின்றார். 'அரசரிடமோ படைத்தலைவரிடமோ ஏதாவது பரிந்து பேச வேண்டுமா?' (காண். 2 அர 4:13) எனக் கேட்கின்றார். அப்பெண் மறுக்கிறாள். 'வேறு எந்த விதத்தில் உதவி செய்யலாம்' என நினைக்கின்ற எலிசா, குழந்தையின்மை என்னும் அவளது குறையைப் போக்குகின்றார்: 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்!' குழந்தையின்மை என்பது கடவுளின் சாபம் என்று மக்கள் கருதிய அக்காலத்தில், கடவுளின் சாபத்தை நீக்குகின்றார் எலிசா.

இங்கே, சூனேமியப் பெண் தன்னிடம் உள்ளதை இழந்ததால் எலிசாவின் நல்மனத்தினை வெற்றிகொள்கின்றார். எலிசாவின் கொடையினை வெற்றிகொள்கின்றார். தன்னுடைய ப்ரைவஸி, வசதி, பொருள்கள் என அனைத்தையும் கொடுத்தார். ஆனால், அப்படி இழந்ததால் கடவுளின் மனிதரின் நல்மனத்தை வெற்றிகொண்டார். அவருடைய வசதிகளும், பணமும், செல்வாக்கும் பெற்றுத்தராத குழந்தைப்பாக்கியத்தை கைம்மாறாகப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 10:37-42) மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கின்றது:

அ. சீடத்துவத்தின் அடையாளம் சிலுவை சுமத்தல்

ஆ. இயேசுவை ஏற்றுக்கொள்தல்

இ. இயேசுவின் சீடர்களுக்கு (சிறியோருக்கு) உதவுதல் மற்றும் அதன் கைம்மாறு

நற்செய்தி வாசகத்தின் மையமாக இருக்கின்ற வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது: 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.'

இழத்தலில்தான் ஒருவர் வெற்றி பெறுகிறார் அல்லது காத்துக்கொள்கிறார் என்பது இயேசுவின் புரட்டிப் போடுதலாக இருக்கிறது.

இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். தேவையில் இருக்கும் ஒருவர் திடீரென்று என்னைத் தேடி வருகிறார். அவரிடம் நான் என்னிடம் உள்ள 1000 ரூபாயைக் கொடுத்துவிடுகிறேன். அப்படி என்றால் எனக்கு 1000 ரூபாய் இழப்பு தானே? 

இல்லை!

அந்த 1000 ரூபாயை நான் இழக்கவில்லை. மாறாக, அந்த 1000 ரூபாயை நான் இன்னொருவருடைய கையில் கொடுத்து, இப்போது நான் அவரைப் பிடித்துக்கொள்கிறேன். ஆக, என்னிடமிருக்கும் 1000 ரூபாய் அப்படியே இருப்பதுடன், என் கைக்குள் இன்னொரு நபரும் இருக்கிறார். அப்படி என்றால் எனக்கு வெற்றிதானே! நான் எதையும் இழக்கவில்லைதானே!

இந்த உலகில் நாம் எதையும் இழக்கவும் முடியாது! எதையும் பெறவும் முடியாது! இன்னொருவரிடம் இருந்த ஒன்று என்னிடம் சற்று நேரம் இருக்கிறது. என்னிடம் சற்று நேரம் இருக்கும் ஒன்று இன்னொருவரின் கைக்கு மாறுகின்றது. 

சூனேம் பெண் செய்ததும் அதுதான். எலிசாவுக்கு உணவு தந்ததால் அவருடைய பாத்திரம் காலியாகிப்போகவில்லை. மாறாக, தன் பானையில் இருந்த சோற்றை எலிசாவின் வயிற்றுக்கு மாற்றிக்கொள்கின்றார். பாத்திரத்தில் இருந்தால் சோறு கெட்டுப் போயிருக்கும். ஆனால், எலிசாவின் வயிற்றை அவள் சோற்றால் நிரப்பியதால், அவளின் வயிற்றை இறைவன் குழந்தையால் நிரப்புகின்றார். 

இப்படி நாம் பார்க்கத் தொடங்கிவிட்டால், நாம் அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

இந்நாள்களில் நான், திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய, 'வேள்பாரி' என்னும் புதினத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பறம்பு நாட்டுத் தலைவன் பாரியைப் பற்றியது அது. 'முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி' என்று நாம் கேள்விப்பட்டிருப்பதை இவரைக் குறித்தே.

அந்த நிகழ்வு இப்படி நடக்கிறது.

பாரிக்கும் ஆதினிக்கும் திருமணம் நடக்கிறது. ஆதினி குறிஞ்சி நாட்டின் கால் பதித்த முதல் நாளில் அவளுக்கு தன் நாட்டின் ஆச்சர்யமான தீக்கக்கி மரத்தைக் காட்ட இரவில் அவளை அழைத்துச் செல்கின்றார். தன் தேரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லும் இவர்கள் அடுத்த நாள் மதியம்தான் அந்த இடம் வருகிறார்கள். அதற்குள் ஒரு முல்லைக்கொடி இவர்களுடைய தேரின் சக்கரத்தில் படர ஆரம்பிக்கிறது. மெதுவாகக் கொடியை விலக்கித் தேரை நகர்த்தலாம் என்கிறாள் ஆதினி. ஆனால், பாரிக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தன்னுடைய தேரை தன்னுடைய பொருளாக அல்லது உடைமையாகப் பார்க்காமல், காட்டில் நிற்கும் ஒரு மரமாகப் பார்க்கிறார். அப்படியே அதை விட்டுவிட்டு நகர்கிறார். ஆக, மரத்தின் நீட்சிதான் தேர். தேரின் எச்சம்தான் மரம். இதை அவர் கைக்கொண்டதால் அப்படியே தேரை 'இழக்க' துணிகின்றார். அவர் தேரை அன்று இழந்ததால் இன்று மாபெரும் புகழை அடைந்தவராக மாறுகின்றார். ஆக, இழத்தல் ஒருபோது இழப்பு அல்ல.

இழப்பதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது.

அதாவது, எனக்கு இதைவிட அதிகம் கிடைக்கும் என நினைத்து நான் இழப்பது. 

எடுத்துக்காட்டாக, எனக்கு மேலிருக்கும் அதிபர் அல்லது ஆயர் அவர்களுக்கு நான் ஒன்று செய்தால், அது எனக்கு வேறொரு வகையில் கிடைக்கும் அல்லது இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் இழப்பது தவறு. ஏனெனில், அப்படிச் செய்யும் போது நான் எதையும் இழக்கவில்லை. மேலும், அவர்களை நான் எனக்காகப் பயன்படுத்திக்கொள்பவன் ஆகின்றேன். மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப்பொருள்கள் அல்ல. அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அதனால்தான், இயேசு, 'இறைவாக்கினரை இறைவாக்கினர் என்பதற்காகவும், நேர்மையாளரை நேர்மையாளர் என்பதற்காகவும்' என வரையறுக்கின்றார்.

இழத்தலையும் பெறுதலையும், அல்லது தோற்பதால் வெல்தலையும் இரண்டாம் வாசகம் (காண். உரோ 6:3-4,8-11) உருவகமாகச் சொல்கிறது. கிறிஸ்து இயேசுவோடு நம் பாவத்திற்கு இறந்த அல்லது நம் பாவத்தை இழந்த நாம் அவரோடு சேர்ந்து உயிர்க்கின்றோம். நம் இறப்பு நமக்கே வாழ்வாக மாறுகிறது.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சூனேம் பெண் தன் வீட்டின் சிறு பகுதியையும், தன் பாத்திரத்தின் சிறு உணவையும் இழக்கின்றார். ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், பாவத்தின் வழியாக நாம் இறக்கின்றோம். அந்த இறப்பே புதுவாழ்விற்கான கதவுகளை நமக்குத் திறந்துவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், உயிரை இழப்பவர் பெறுகின்றார். தன் உறவுகளை இழப்பவர் அவற்றைவிட பெரிய உறவைக் கண்டுகொள்கின்றார். சீடர்களுக்கு உதவி செய்பவர் கைம்மாறு பெறுகிறார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

அ. தோற்கப் பழகுதல்

அன்றாடம் நாம் கொரோனோ முன்னால் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய தனிமனித விலகலும், சமூக விலகலும், ஊரடங்கும், முகக்கவசமும், சானிட்டைசரும், நம் மருந்துகளும், நம் அறிவியல் கண்டுபிடிப்புக்களும் நமக்கு வெற்றியைத் தரவில்லை. ஆனால், நாம் தோற்கும் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், தடுப்பு மருந்து வெற்றி என்று நல்ல செய்திகள் நம் காதுகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. நாம் இவ்வளவு நாள்கள் இழந்தது நம்மிடம் தேவையில்லாதவற்றைத்தான். இவை யாவும் இல்லாமல், ஏன் இறை யாவும் இல்லாமலும் நான் இருக்க முடியும் என்று நமக்குக் கற்பித்து வருகிறது கொரோனா. ஆக, தொடர்ந்து தோற்கப் பழகுதல் வேண்டும். தோற்றலும் வெற்றியே என உணர்தல் நலம்.

ஆ. தாராள உள்ளம்

தேவையில் இருப்பவர்களை நான் என்னுடைய நீட்சியாகப் பார்க்கும் உள்ளம் வரவேண்டும் என்றால், 'ஒவ்வொரு விருந்தினரும் ஒரு ஆசீர்' என உணர வேண்டும். சில இல்லங்களில் இன்றும் திண்ணைகள் வைத்துக் கட்டுகின்றனர். சிலர் விருந்தினர்களுக்கென்று சிறப்பான பாத்திரங்களையும் தட்டுக்களையும் அறைகளையும் ஒதுக்கி வைக்கின்றனர். சிலர் அன்றாடம் ஒரு கை எக்ஸ்ட்ரா அரிசி சமைக்கிறார்கள். கைகளை விரித்துக் கொடுப்பதால்தான் இந்த உலகை நம் கைக்குள் வைத்துக்கொள்ள முடியும் எனக் கற்றுத் தந்தவர் கிறிஸ்து பெருமான். சூனேம் பெண்ணின் தாராள உள்ளத்தை நாமும் கொண்டிருக்க முயற்சிக்கலாம்.

இ. சிலுவை சுமத்தல்

சூனேம் பெண்ணுக்கு எலிசாவின் இருப்பு சில நேரங்களில் துன்பமாக, இடையூறாக இருந்திருக்கலாம். நம் வாழ்விலும் சில சுமைகள் சிலுவைகளாக அழுத்தலாம். ஆனால், சிலுவைகள் சுமக்காமல் வெற்றி இல்லை. நாம் சுமக்கும் கொரோனா என்னும் கொடிய சிலுவை விரைவில் மறைந்து போகும். சிலுவையைச் சுமப்பவர் வேறெந்தச் சுமையையும் தன்மேல் வைத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு கட்டத்திலும் நான் இழக்கத் துணியும்போது இழத்தலும் இன்பம் என அறிவேன்.

ஒருவர் மற்றவருக்கு பேரன்பு காட்டுதல் நலம். ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல, 'ஆண்டவரின் பேரன்பை நாம் எந்நேரமும் பாடுகிறோம்' (திபா 89:1).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிளவுபடாத அன்பு – மறுக்காத சிலுவை – மறுக்கப்படாத கைம்மாறு

முதல் வாசகப் பகுதி எலிசாவும் சூனேம் பெண்ணும் என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து வரும் பகுதியில் சூனேம் நகரில் உள்ள செல்வந்தப் பெண் எலிசாவுக்கு உதவி செய்கிறார். எலிசா ஓரிடத்தில் செய்த உதவிக்கு அவருக்கு இன்னோர் இடத்தில் கைம்மாறு கிடைக்கிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் செய்த உதவிக்கான கைம்மாறு இன்னொருவருக்கு என பிரபஞ்சம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொண்டே நகர்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூனேம் பெண் எலிசாவுக்கு விருந்தோம்பல் செய்கிறார். உணவு தருவதுடன் அவர் தங்குவதற்குத் தன் வீட்டில் மேலறை ஒன்றைக் கட்டிக் கொடுக்கிறார். எலிசா அதற்குக் கைம்மாறாக குழந்தையில்லாத அப்பெண்ணிடம், 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி கொடுக்கிறார்.

முதல் ஆதாமுக்கும் இரண்டாம் ஆதாமுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிப் பதிவு செய்த பவுல், தொடர்ந்து பாவத்தை விட்டு கிறிஸ்துவோடு வாழ்தல் பற்றி உரோமை நகர மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பாவத்தை விடுகிற எவரும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர் ஆகிறார். பாவத்திற்கு இறந்த ஒருவர் கிறிஸ்துவில் வாழத் தொடங்குகிறார். இது தானாக நடக்கிற நிகழ்வு அல்ல. மாறாக, ஒருவர் தம் செயல்கள் வழியாகத் தொடர்ந்து அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும்.

திருத்தூதுப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவைப் பின்பற்றுதல் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்துகிற பிளவையும், பிளவையும் பொருட்படுத்தாமல் சீடத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டிய அவசியத்தையும், சீடர் பெறுகிற கைம்மாற்றையும் எடுத்துரைக்கிறது. சீடத்துவத்திற்கு அடிப்படையாக இருத்தல் சிலுவை ஏற்றல் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது.

இந்நாளின் இறைவார்த்தைப் பகுதிகளை, 'பிளவுபடாத அன்பு,' 'மறுக்காத சிலுவை,' 'மறுக்கப்படாத கைம்மாறு' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்துகொள்வோம்.

(அ) இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்.
(ஆ) சிலுவையை விரும்பி ஏற்றல்.
(இ) கடவுள் தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்.

அ. இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்

மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக விலங்குகள். அதாவது, ஒருவர் மற்றவரோடு உறவு ஒன்றிப்பை ஏற்படுத்திக்கொள்கிற விலங்குகள். உறவு ஒன்றிப்பு அடிப்படையாக இருப்பது அன்பு. நாம் மற்றவர்களுக்குக் காட்டும் அன்பு ஆள்கள், இடம், நெருக்கம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள்மேல் காட்டும், பிள்ளைகள் பெற்றோர்கள்மேல் காட்டும் அன்பு, கணவன்-மனைவி அன்பு, சகோதர அன்பு உறவு என அன்பில் பல படிநிலைகள் உள்ளன. நாம் ஒரே நேரத்தில் பலரிடம் அன்பு உறவில் இருக்கிறோம். பெற்றோரிடம், பிள்ளைகளிடம், இணையரிடம், உடன்பிறந்தவர்களிடம், நண்பர்களிடம், உடன்பணிபுரிபவர்களிடம் என நிறைய நபர்களோடு நம் அன்பில் நிலைத்திருக்கிறோம். இயேசுவை அன்பு செய்ய ஒருவர் தொடங்கும்போது மற்ற அன்புறவுகளும் பிணைப்புகளும் சில நேரங்களில் இடையூறாக அமையலாம். ஆக, ஒருவர் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இறைவனை மட்டும் பிடித்துக்கொண்டு மற்றவர்களை மற்றவற்றை விட்டுவிடுதலே அத்தெரிவு. இத்தகைய தெரிவை மேற்கொள்வதற்குத் துணிவும் மனத்திடமும் விடாமுயற்சியும் அவசியம். கடவுளை அன்பு செய்ய வேண்டுமெனில் மற்றவர்களை அன்பு செய்யக் கூடாதா? மற்ற அன்பு உறவுகளும் கடவுள் நமக்குக் கொடுத்ததுதானே? என்னும் கேள்விகள் எழலாம். இதற்குப் புனித அகுஸ்தினார் இவ்வாறு பதில் கூறுகிறார்: 'நாம் அன்பு செய்கிற அனைவரையும் கடவுளில் அன்பு செய்யும்போது, அன்பு தூய்மையாக்கப்படுவதுடன் நீடித்த தன்மையையும் பெறுகிறது.'

உறவுகளில் உள்ள முதன்மைகளைச் சரி செய்வது சீடத்துவத்தின் அடிப்படையான கூறு. சொத்து மற்றும் பணம் எப்படி சீடத்துவத்துக்கு இடையூறாக இருக்குமோ, அவ்வாறே உறவுகளும் இடையூறாக அமையலாம். அன்பில் முதன்மைகள் தெளிவானால் அது பிளவுபடாத அன்பாக இறைவன்மேல் கனியும்.

ஆ. சிலுவையை விரும்பி ஏற்றல்

'தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்' என்கிறார் இயேசு. அன்பின் முதன்மைகளைச் சரி செய்வதும், பிறழ்வுபட்ட அன்புநிலைகளுக்கு மறுப்புச் சொல்வதும் சீடருக்குச் சிலுவையாக மாறிவிடும். முதல் வாசகத்தில், எலிசா என்னும் இறைவாக்கினர் தன் ஊருக்கு வந்து செல்வதைக் காண்கிற சூனேம் பெண், அதைப் பற்றித் தன் கணவரிடம் எடுத்துச் சொல்கிறார். அந்தப் பெண்ணைப் பொருத்தவரையில் அது ஒரு சிலுவை. மற்றவர்கள்போல எனக்கென்ன? என அவர் ஓய்ந்திருப்பதற்குப் பதிலாக, எலிசாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். வெறும் விருப்பமாக அதை நிறுத்திக்கொள்ளாமல் அச்செயலைச் செய்தும் முடிக்கிறார். இரண்டாம் வாசகத்தின் பின்புலத்தில், பாவத்திலிருந்து விடுபட நினைக்கும் எவருக்கும் பாவத்தை விட்டுவிடுவது சிலுவை போலப் பாரமாகவே இருக்கும். இருந்தாலும் அவர் அதை விரும்பி ஏற்கிறார். நமக்குச் சுமையாக இருக்கிற ஒன்று, நாம் மேற்கொள்கிற தெரிவு, எடுக்கிற செயல் என நிறையச் சிலுவைகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன.

சிலுவையை விரும்பி ஏற்றல் என்பதும் ஒரு தெரிவே. முணுமுணுக்காமலும் தாராள உள்ளத்தோடும் செயல்படும் ஒருவரே சிலுவையை ஏற்றுக்கொள்ள முடியும்.

இ. கடவுள்தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்

'இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்' என மொழிகிறார் இயேசு. இறைவாக்கினர் எலிசாவை ஏற்றுக்கொண்டு விருந்தோம்பல் செய்ததால் அதற்குரிய கைம்மாறு பெறுகிறார் சூனேம் பெண். 'உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி தருகிறார் எலிசா. அப்பெண் எந்தவொரு கைம்மாற்றையும் எதிர்பார்க்காமலேயே விருந்தோம்பல் செய்கிறார். சீடர்கள் கடவுளைத் தெரிவுசெய்யும்போது கடவுள் அவர்களுடைய தேவைகளைக் கரமேற்கிறார் என்பது இங்கே தெளிவாகிறது. அதே வேளையில், சீடர்கள் மற்றவர்களிடம் உள்ள அனைத்தும் தங்களுக்கானது என்றும் எண்ணுதல் கூடாது.

எதிர்பார்ப்பு இல்லாத விருந்தோம்பல் கைம்மாறு தரும்போது நம் இறைவன் வியப்புகளின் இறைவனாக நமக்குத் துணைநிற்கிறார்.

நிற்க.
இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 89), 'ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்' என மொழிகிறார் ஆசிரியர். ஆண்டவரின் பேரன்பை அனுபவிக்கும் ஒருவர் தாம் பற்றிக்கொண்டிருக்கும் சிறிய அன்புநிலைகளை விட்டுவிடும் துணிச்சல் பெறுகிறார். நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகிறது (காண். 1 கொரி 13:10). சிறிய அன்புநிலைகளை விட்டுவிடுதல் சிலுவைபோலப் பாரமாகத் தெரிகின்றன. சிலுவையை ஏற்றுக்கொள்ளும்போது, அதற்குரிய கைம்மாறு கடவுளிடமிருந்து வருகிறது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser