மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப்பயணம் 19:2-6|உரோமையர் 5:6-11|மத்தேயு 9:36-10:8

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


உலகத்தையே உலுக்கியது இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமி என்ற இராட்சசப் பேரலை! இதனால் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு மடிந்தனர். இதனால் வீடு இழந்தோர், உடமை இழந்தோர் கணக்கிலடங்கா! இத்தகைய பயங்கர பேராபத்து வந்தவுடன் உலக நாடுகளும் சரி, ஏன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் உதவிக் கரம் நீட்ட முன் வந்தனர். இதற்காகப் பணமாக, உடையாக, உணவாக, மருந்தாக, ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துபவராக மக்கள் திரண்டு வந்தனர். விவேக் ஓபேராய் என்ற இந்தி நடிகர்கூட தன் சுகபோக வாழ்வை விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்து உதவி செய்ய முன் வந்தார். இதுபோல எத்தனையோ பேர் உதவிக் கரம் நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இரக்கப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத். 5:7) என்பது நம் ஆண்டவர் இயேசு தந்த வாக்குறுதி. இரக்கம் என்பது ஏதோ துன்பப்படுவோரைப் பார்த்து பரிதாப மனநிலையோடு நோக்கும் பார்வையல்ல, மாறாக துன்பப்படுவோருடன் உடலால், உள்ளத்தால், உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கும் ஒரு நிலை. இத்தகைய உயர் இரக்க நிலையைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் விடுதலைப் பயணத்திலே (விப. 19:4-6) இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததை நீங்கள் காண்பீர்கள். எனக்கு நீங்கள் குருத்துவ அரசராகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள் என்று உடன்படிக்கையை நினைவூட்டுகிறார். ஆனால் இந்த மக்கள் இறைவனின் உடன்படிக்கையை மீறி, தேவ கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தவறினாலும் ஆண்டவர் சலிப்படையாது வெறுப்பும் அடையாது இரக்கத்தால் திரும்பத் திரும்ப அரவணைக்கின்றார். ஆம்! மீட்பின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால், கடவுள், ஏழை, எளியவர், கைவிடப்பட்டவர், துன்பப்படுபவர், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆரோக்கியம் அளிப்பவராகவும் இருப்பதைப் பார்க்கிறோம். அதேபோல புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய எல்லா இடங்களிலும் அல்லல்படுவோர், அவதிப்படுவோர், ஒடுக்கப்படுவோர், ஏழைகள், பாவிகள் மத்தியில்தான் இயேசுவைச் சந்திக்கிறோம்.

இன்றைய நற்செய்தியிலே கூறப்பட்டதுபோல (மத். 9:36) ஆயனில்லா ஆடுகளைப்போல் அலைக்கழிக்கப்பட்ட மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது பரிவு கூர்ந்தார் என்று வாசிக்கிறோம். சமுதாயத்தில் கடை நிலையில் வாழ்ந்தவர்களை வாழ வைக்க, இயேசு தன் உயிரையும் கொடுத்தார் (உரோ. 5:6) என்றும் வாசிக்கிறோம். இது கடவுளின் மாறாத, குறையாத அன்பைக் காட்டுகிறது. இதை முன் வைத்துத்தான் எசாயா தீர்க்கத்தரிசி நூலிலே (எசாயா 54:10) மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும், உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது என்கிறார் ஆண்டவர். இதை இன்னும் ஆழப்படுத்தும் வகையில், உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன் (எரே. 31:3) என்று எரேமியா நூலில் கூறுகின்றார்.

ஓர் அழகான கோவில். அதன் உள்ளே அன்பு இயேசுவின் திருவுருவம். புயலால் கோவில் இடிந்து, சுரூபம் சுக்கு நூறாக வெடித்து, சிதைந்த நிலையில் கிடந்த ஆலயத்தைத் திரும்ப எழுப்பி கலைமிக்க ஆலயமாகக் கட்ட நிதி திரட்ட புறப்பட்டார் ஒரு துறவி. கடவுள் அவருக்குக் கனவில் தோன்றி, எனக்கு நீ இப்போது கோவில் கட்ட வேண்டாம். ஏழைகள், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் படும் அவல நிலையைப் பார். அவர்கள் உள்ளம்தான் நான் வாழ விரும்பும் உகந்த இடம் என்று கூறியவுடன் துறவி கோவில் கட்டுவதை நிறுத்தி, ஏழை, எளியவரைத் தூக்கிவிடப் புறப்பட்டார்.

இன்று நாச சக்திகளான சாதி வெறி, மத வெறி, இன வெறி. அதிகார வெறி, பெண் அடிமை போன்ற பல சுனாமிகளால் இன்று எத்தனையோ மக்கள், நம் மத்தியில் அவதிப்படுகிறார்கள். மடிந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடையே எத்தனையோ பஞ்சங்கள் தலைவிரித்து ஆடுகின்றன! நாங்கள் என்ன தவறு செய்தோம் இத்தகைய பிறப்புக்கு! வாழத் தெரியவில்லையே என்று கண்ணீர் வடிக்கும் உள்ளங்கள் எத்தனை! எத்தனை!! இதற்கு நாம் செய்வதென்ன?

இயேசுவுக்கு மறுபெயர் பரிவு, பாசம், நேசம், கனிவு, கருணை ஆகும். அவரது சீடர்களாகிய நமக்கும் இத்தகைய பேறு கிடைத்தால்தான் நாம் அவரது மக்களாக இருப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வந்திடுவாய் என் அருகில் !

அது ஓர் அழகான கோயில். அந்தக் கோயிலுக்குள்ளே அன்பே உருவான இறைவனின் திரு உருவம்! அதற்கு எல்லாருடைய இதயங்களையும் கொள்ளை கொள்ளும் இதம் இருந்தது ; காண்போர்க்கு ஒரு கலைக் கூடமாகவே அது காட்சியளித்தது!

திடீரென ஒருநாள் பெரும்புயல் வீசியது! அந்த இறைவனின் உருவமிருந்த திருக்கோயில் தரைமட்டமானது! அந்த உருவம் பல ஆண்டுகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், பருவ மாற்றங்களால் அலைக்கழிக்கப்பட்டும் கிடந்தது. அதைப் பார்த்த ஒரு துறவி மீண்டும் அக்கோயிலைப் புதுப்பிக்க நிதி திரட்டினார். அச்சமயத்தில் அவர் கனவில் கடவுள் தோன்றி, எனக்குக் கோயில் வேண்டாம். மக்கள் படும் அவலங்களுக்கும். அல்லல்களுக்குமிடையே என்னை விட்டுவிடு. அதுதான் எனக்கு உகந்த இடம் என்று கூறியதால் கோயில் கட்ட நிதி திரட்டுவதை துறவி நிறுத்திவிட்டார்.

மீட்பின் வரலாற்றைப் படித்துப்பார்த்தால், கடவுள் ஏழை. எளியவர்கள், கைவிடப்பட்டவர்கள், துன்பப்படுகின்றவர்கள், அடிமைப் படுத்தப்பட்டவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதை நாம் காண்போம். பழைய ஏற்பாட்டிலே கடவுள் ஏழை மக்களுக்காக எகிப்து நாட்டை, பார்வோனை எதிர்த்ததை [முதல் வாசகம்] நாம் அறிவோம்.

புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே அவலங்களுக்கும், அல்லல்களுக்கும் நடுவில் வாழ்பவர்கள் நடுவில்தான் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம். தன்னை முதன் முதலில் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது இயேசு தன்னை ஒரு விடுதலை வீரராக அறிமுகப்படுத்திக்கொள்கின்றார் (லூக் 4:18-19). இன்றைய நற்செய்தியில் கூட ஆயன் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டவர்கள் நடுவில்தான் இயேசுவை நாம் காண்கின்றோம்.

சமுதாயத்தில் கடைநிலையில் வாழ்ந்தவர்களை வாழவைக்க இயேசு தன் உயிரைக் கொடுக்கவும் தயங்கவில்லை (இரண்டாம் வாசகம்). இந்த உண்மை கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு என்ற நிலையில் வாழ்பவர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்க வேண்டும்.

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை!
கண்ணீரில் கதையெழுதி சொன்னாலும் புரியவில்லை!
என்று அழுகின்ற பெண்கள் ஆயிரம்!
இதயம் என்பது ஒரு வீடு - அன்றும் இன்றும் அவள் வீடு.
அது மாளிகை ஆனதும் அவளாலே -
பின் மண்மேடானதும் அவளாலே!
என்று அழுகின்ற ஆண்கள் ஆயிரம்!
ஊருமில்லை நாட்டிலே!
உறவுமில்லை வீட்டிலே!
யாருமில்லை வாழ்விலே! ஏன் பிறந்தேன் உலகிலே?
என்று அழுகின்ற மானிடர் ஆயிரம்!

இவர்களையெல்லாம் பார்த்து இயேசு, என் மகளே ! என் மகனே! உனக்காகவே நான் நாளும் நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் எந்தன் உள்ளம். உன்னை நான் வாழவைக்க என்னையே தந்திடுவேன். வந்திடுவாய் என்னருகில் என்கின்றார்.
மேலும் அறிவோம் :

துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி? (குறள்: 1299).

பொருள்:

ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நேர்முகத் தேர்வுக்குச் சென்ற ஓர் இளைஞர் நிறையக் கைக்குட்டைகளை தன்னுடன் எடுத்துச் சென்றார். ஏன்? என்று கேட்டதற்கு, "நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு” என்றார். இக்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி ஆள்களை வேலைக்குத் தெரிவு செய்கின்றனர். ஆனால் கிறிஸ்து நற்செய்திப் பணிக்காகச் சீடர்களைத் தெரிவு செய்வதற்கு நேர்முகத் தேர்வு எதுவும் நடத்தவில்லை. மாறாக, ஓர் இரவு முழுவதும் ஒரு மலையில் கடவுளிடம் வேண்டிய பிறகு (லூக் 6:12), தாம் விரும்பியவர்களைத் தெரிவு செய்தார் (மாற் 3:13).

கடவுள் தமது பணிக்காகத் தகுதியுள்ளவர்களை அழைப்பதில்லை. மாறாக, தாம் அழைத்தவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். திருத்தூதர் பவுல் கூறுவதுபோல. உலகம் மடமை என்றும் வலுவற்றது என்றும் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்து கொள்கிறார். கடவுள்முன் எவரும் பெருமை பாராட்டாதபடி அவர் இவ்வாறு செய்கின்றார் (1 கொரி 1:27-29), இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து படிப்பறிவில்லாத சாதாரண, சாமானிய மனிதர்களை, பெரும்பாலும் மீனவர்களைத் தேர்ந்து கொள்வதை வாசிக்கிறோம். இதனால் மனிதருடைய வல்லமையல்ல. கடவுளுடைய வல்லமையே துலங்குகிறது என்பது தெளிவாகிறது.

இன்றைய முதல் வாசகம், கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்து, அவர்களை எல்லா மக்களினங்களிலும் தமது சொத்தாக, தூய மக்களினமாகத் தெரிவு செய்கிறார். காரணம், அவர்கள் பெரிய இனம் என்பதற்காக அல்ல, மாறாக எல்லா மக்களிலும் அவர்கள் சிறிய இனம் என்பதற்காக, அவர்கள்மீது அன்பு கூர்ந்து அவர்களைத் தெரிவு செய்கிறார். கிறிஸ்து தம் சீடர்களிடம், "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" (யோவா 15:16) என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து தம் சீடர்களைத் திருத்தூதுப் பணிக்கு அனுப்பிய பொழுது அவர்களுக்கு ஒருசில இன்றியமையாத அறிவுரைகளை வழங்குகிறார். முதலாவது. அவர்கள் தங்களுடன் பணப்பையோ, கைப்பையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். இக்காலத்தில் காசு இல்லாமல் பேருந்தில் பயணம் செய்ய முடியுமா? *இயேசு வருகிறார்" என்னும் தலைப்புடன் அச்சடிக்கப்பட்ட பிரதிகளை பைபிள் போதகர் ஒருவர் ஒரு பேருந்தின் நடத்துனரிடம் கொடுத்தபோது அவர், "இயேசு வந்தாலும் கண்டிப்பாகப் பயணச்சீட்டு வாங்க வேண்டும்". என்றாராம்! நற்செய்தியை அறிவிப்பவர் தன்னுடன் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியதன் உட்பொருள்: நற்செய்தி அறிவிப்பவர்கள் பணத்தை நம்பியல்ல, கடவுளையே நம்பித் தங்களதுபணியை ஆற்ற வேண்டும். பேதுருவிடம் பொன்னும் வெள்ளியும் இல்லாதிருந்ததால்தான் அவரால் புதுமை செய்ய முடிந்தது என்பதை நினைவுகூர வேண்டும் (திப 3:6).

இரண்டாவதாக, நற்செய்தியை அறிவிக்கவிருக்கும் தம் சீடர்களுக்குக் கிறிஸ்து நோய்களைப் போக்கவும், பேய்களை ஓட்டவும். இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும் வல்லமை அளிக்கிறார். இக்காலத்தில் புதுமைகள் செய்ய முடியுமா? ஓர் அருள்சகோதரி இளம் வயதில் இறந்து விட்டார். அவருடைய உடலுக்குமுன் நான் செபித்தேன், அவருடைய அம்மா என்னிடம், "சாமி! நீங்கள் செபம் பண்ணுவதால் என் மகள் எழுந்து உட்காரப் போவுதா?” என்று மனவேதனையுடன் கேட்டார். இக்காலத்தில் திருத்தூதர்களைப்போல் புதுமை செய்ய முடியாது. ஆனால் எல்லாப் புதுமைகளுக்கும் மேலான நம்பிக்கை என்னும் புதுமை செய்ய முடியும், அந்த அருள்சகோதரி இம்மை வாழ்வுக்கு இறந்து விட்டாலும் மறுமை வாழ்வுக்குப் பிறக்கிறார் என்னும் நம்பிக்கையை ஊட்ட முடியும். "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:2,5),

மூன்றாவதாக, நற்செய்தியை எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக அறிவிக்கப் பனர்க்கிறார் கிறிஸ்து, கொடையாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாகவே வழங்க வேண்டும் (மத் 9:8),

உறுதிப்பூசுதல் பெற்ற சிறுவர்களில் ஒருவன் ஒரு சுவரில் இருபது ரூபாய் வைத்து, ஒரு காகிதத் துண்டில், " பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டுமா?" என்று எழுதி இருந்தான் திருப்பலி நிறைவேற்றவும் அருள் சாதனங்களை வழங்கவும் மக்களிடமிருந்து பெறுவது கட்டணம் அல்ல, மாறாக விருப்பமுடன் கொடுக்கப்படும் காணிக்கை. இக்காணிக்கை திருப்பணியாளர்களின் பராமாப்பிற்காக. அவ்வாறு காணிக்கை பெறுவது நியாயமானது. ஏனெனில் "வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10:10). *கோவிலில் வேலை செய்வோர் கோவில் ருமானத்திலிருந்தே உணவு பெறுவர்" (1 கொரி 9:13). திருப்பலிக்குக் காணிக்கை பெறலாம் என்று திருச்சபைச் சட்டமும் கூறுகிறது (திச 945, ப.1).

அதே நேரத்தில் ஆன்ம நலன்களைப் பணத்திற்கு விற்பது "திருப்பணி விலைப்பழி" என்னும் மாபெரும் பாதகமாகும். இக்குற்றத்தைப் புரியும் திருப்பணியாளர்களுக்கு "திருப்பணிபுரிய இடைக்காலத் தடை" என்னும் தண்டனை வழங்க வேண்டும் என்று அதே திருச்சபைச் சட்டம் கூறுகிறது (திச 1380).

இறுதியாக, திருப்பட்டங்கள் பெற்ற திருப்பணியாளர்கள் மட்டுமல்ல, திருமுழுக்குப் பெற்ற அனைவருமே "அரச குருக்களின் கூட்டத்தினர்" (1 பேது 2:9). எனவே பொதுநிலையினரும் நற்செய்தி அறிவிக்க, குறிப்பாக, திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கத் தீவிரமான அழைப்புப் பெற்றுள்ளனர். உலகின் நடுவே வாழ்த்து. உலகக் காரியங்களைக் கிறிஸ்தவ மனப்பாங்குடன் செய்து, புளிப்புமாவுபோல் செயல்பட்டு (மத் 13:33) உலகில் இறையரசைக் கட்டி எழுப்புவது பொதுநிலையினரின் தனிப்பட்டட அழைப்பு ஆகும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது. "பொதுநிலையினர் உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர்" (திருச்சபை, எண் 34), முடிந்தவரை எல்லா விதங்களிலும் அறப்பணி ஆற்ற வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்(குறள் II)

அவ்வாறே கிறிஸ்துவின் விசுவாசிகள் எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் நற்செய்தியை அறிவிப்பதுடன், அவர்களே நற்செய்தியாக மாறுவது காலத்தின் கட்டாயமாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
அறுவடையும் அழைப்பும்

‘கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர்' என்ற பெருமைக்குரியவர் தூய சவேரியார். இந்தியாவில் அவர் நற்செய்திப் பணி தொடங்கி ஓர் ஆண்டுக்குப் பின்பு தூய இஞ்ஞாசியாருக்குக் கடிதம் எழுதினார்: “எத்தனை பேருக்குத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால், பல வேளைகளில் என் கைகள் வாதநோய் கண்டது போல உயர்த்த முடியாத அளவுக்கு மரத்துப்போய் விடுகின்றன. இவர்களின் மொழியில் விசுவாச அறிக்கை மற்றும் செபங்களைக் கற்றுக் கொடுத்து என் தொண்டையும் அடைத்துக் கொள்கிறது”.

மேலும் அவர் தொடர்கிறார்: "இங்கே இந்தியாவில் பலர் கிறிஸ்தவர்களாக முடியவில்லையென்றால் இயேசுவையோ நற்செய்தியையோ இவர்களுக்கு வழங்க ஆளில்லை என்பதுதான் காரணம். ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வெறிபிடித்தவனைப் போல நான் கதற வேண்டும் என்று தோன்றுகிறது. அங்கே பல கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே, அந்த மாணவர்கள் தங்கள் பாடங்களுடன் இறைவன் தந்த ஆற்றல்களு,ககு ஈடாக இறுதிநாளில் அவர் கேட்க இருக்கும் வாழ்க்கைக் கணக்கைப் பற்றி நினைப்பார்களா? அவ்வாறு நினைத்துவிட்டால் உடனே ஆன்மிக முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அது இறைவன் திருவுளத்தை உணர வைக்கும். இறைவா, நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர் எனக் கேட்கவும் முன்வருவார்கள்."

''அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" (மத். 9:37,38) என்ற இயேசுவின் ஆதங்கத்தை எதிரொலிக்கவில்லையா தூய சவேரியாரின் உணர்வுகள்?

வால்ட்டர் என்பவர் அறிவியல் அறிஞர். ஆனால் இறைநம்பிக்கையற்றவர்.அவர் சொன்னார், “என்னிடம் திறமையான 12 பேரைக் கொடுங்கள். நானும் இந்த உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என்று இயேசு திறமைசாலிகளையா அழைத்தார்? பாமரர்களை, படிப்பறிவில்லாதவர்களை அழைத்தன்றோ இந்த உலகைப் புரட்டிப் போட்டார்! (தி.ப. 17:6). அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். எடுத்துக்காட்டாக மத்தேயு உரோமைப் பேரரசின் அடிவருடி. தீவிரவாதியான சீமோனோ உரோமைப் பேரரசுக்கு எதிரான புரட்சிக் குரல். அவர்கள் பல சமயங்களிலும் இயேசு சொன்னதைப் புரிந்து கொள்ளாத இயல்பினர். “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?' என்ற கூற்றுக்கூட பேதுரு புரிந்து சொன்னதல்ல. “என் சதை உண்மையான உணவு என் இரத்தம் உண்மையான பானம்” (யோ. 6:55) என்கிறார் இயேசு. அப்போது “வாழ்வுதரும் சதை உம்மிடம்தான் உள்ளது” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் “வாழ்வுதரும் வார்த்தை” என்றல்லவா குறிப்பிடுகிறார்.

இத்தகையவர்கள் இறைவன் திட்டத்துக்கு எந்த அளவு உதவுவார்கள்? இயேசு நாள்தோறும் இறைத்தந்தையுடன் உறவாடினார். ஆயினும் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால் அவர் ஆழமாகச் செபித்தார் என்பதை நற்செய்தியாளர்கள் குறித்துக் காட்டத் தவறியதில்லை. இறையாட்சித் தூதர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இரவெல்லாம் செபத்தில் செலவழித்தார் (லூக். 6:12). தான் தேர்ந்து கொள்பவரெல்லாம் தனக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்றா செபித்திருப்பார்? அவர்கள் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்றுதானே மன்றாடியிருப்பார்!

பல்வேறு பின்னணியுடன் கூடிய பன்னிருவரைத் தேர்ந்து கொள்கிறார் இயேசு. இவர்களின் தனித்த இயல்புகளையும் திறமைகளையும் நம்பியல்ல. இவர்களை ஒன்றாக இணைத்து இறைத்தந்தை இவர்களை மாபெரும் சக்தியாக மாற்றுவார் எனும் நம்பிக்கையுடன் இயேசுவின் மறையுடலைக் கட்டிஎழுப்ப இறைவன் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இணைந்து அவரது திருவுளம் தேடினால் கடவுளின் கையில் மாபெரும் சக்தியாவார்கள்.

திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்குமுன் இயேசு செய்த செபம் எந்தவிதத்தில் அருத்தமுள்ளது? இரவெல்லாம் செபித்துத் திருத்தூதர் குழுவில் யூதாசைத்தானே சேர்த்துக் கொள்ள முடிந்தது! செபம் என்றால் தந்தை தன் திருவுளத்தை வெளிப்படுத்த மனிதர் அதனை இனம் கண்டு ஏற்றுக் கொள்வதாகும். இயேசுவைப் பொருத்தவரை, தந்தையின் திருவுளம் இயேசுவின் கல்வாரிச் சாவே! அதற்கு யூதாசு தேவை. எனவே இயேசுவின் செபம் அர்த்தமுள்ளது. திருத்தூதர் குழுவை உருவாக்கும்போதே இயேசு கல்வாரியைச் சுவைக்கிறார்.

அழைக்கப்படுவதற்குத் தகுதி "இறை ஒப்புதலே'. அந்த ஒப்புதலைப் பெற இறைத்தந்தையோடு அன்புறவில் சங்கமமாகிறார். இயேசுவின் செபம் இறைஒப்புதல் பெற்று நம்மில் அழைப்புக்கான அர்ப்பணத்தை நிகழச் செய்கிறது.

அழைப்பு, பயிற்சி, அனுப்புதல், அனுபவம் இவையனைத்தும் திருத்தூதர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம், இவர்கள் திருஅவையின் பன்னிரு தூண்கள். இஸ்ரயேலின் பன்னிரு குலங்களைப் போல இயேசுவின் பதிலாளிகளாக, இறையாட்சியின் பொறியாளர்களாக பணி நியமனம் பெறுகின்றனர். (மத். 19:28) திருஅவையில் எல்லோருமே இறைநம்பிக்கையாளர்களாக, இறையாட்சியின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்பன்னிரு திருத்தூதர்களுக்குத் தனிப்பொறுப்பும் சிறப்பும் உண்டு.

திருத்தூதர்களும் இயேசுவின் அடிச்சுவட்டில் கல்வாரிச் சாவைச் சுவைத்தவர்கள்தாம். மத்தேயு எத்தியோப்பியாவில் வாளால் வெட்டப்பட்டார். பேதுரு உரோமையில் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார். பெரிய யாக்கோபு எருசலேமில் வெட்டிக் கொல்லப்பட்டார். சின்ன யாக்கோபு பேராலய உச்சியிலிருந்து கீழே வீசி எறியப்பட்டார். யோவான் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டார். பர்த்தலோமேயு உயிரோடு எரிக்கப்பட்டார். அந்திரேயா சிலுவையில் பின்னப்பட்டு உயிர்துறந்தார். தோமா ஈட்டியினால் குத்தப்பட்டார். இவ்வாறாக இயேசுவினால் அழைக்கப்பட்டவர்களின் வரலாறு வீரமரணத்தில் முடிந்தது.

இயேசு இறப்பதற்கு முன் திருத்தூதர்கள் இருந்த நிலையை எண்ணிப் பார்த்தால் இவ்வெளிய மனிதர்கள் மீது அசாத்திய வியப்பே மேலிடும். இவர்கள்எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்களாக பதவி ஆசை பிடித்தவர்களாக, முன்கோபிகளாக, அவநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். தனது மக்களை அவல நிலையிலிருந்து தம்மை நோக்கி வழி நடத்திச் செல்ல ஞானிகளையும் செல்வர்களையும் அழைக்காது, பலவீனர்களை இயேசு தேர்ந்தெடுத்தது இறைத்தந்தையின் திருவுளம். நாம் பலவீனர்களாக இருக்கலாம். ஆனால் இயேசுவால் பலமூட்டப்படுவோம், பயனுள்ள கருவிகளாக மாறுவோம்.

சீடர்கள் ஆற்ற வேண்டிய பணிகளாக இயேசு குறிப்பிடுபவை இரண்டு. 1. நற்செய்தியை அறிவியுங்கள். இது இறையாட்சி வந்துவிட்டது என்ற அறிவிப்பு. 2. நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். இது அலகையின் ஆட்சி அகன்றது என்பதன் அடையாளம்.

இந்தப் பணிகளை ஆற்றச் சீடர்களுக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின் பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்பது மட்டுமே. “சீமோனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா?" (யோ. 21:15) இந்தக் கேள்விக்கான பதிலை மூன்று முறை உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேதுருவுக்குப் பொறுப்பளித்தார் இயேசு. எனவே பணி செய்யப்பணம், படிப்பு, பட்டங்கள் மற்றும் பதவியைக் காட்டிலும் இயேசுவின் மேலுள்ள அன்புதான் முதன்மையான தகுதி.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, செங்கடல் வழியாகக் கால் நனையாமல் கானான் நாட்டுக்குள் கடத்துகிறார். நீண்ட பயணம் செய்து அவர்கள் சீனாய் மலையை வந்தடைகிறார்கள். மோசே மட்டும் மலை ஏறிச் செல்கிறார். மக்கள் பாளையத்தில் குடியிருக்கிறார்கள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்கிறார். இது நிபந்தனை உடன்படிக்கை ஆகும். ஏனெனில், 'நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்தால்' என்னும் நிபந்தனை அதில் அடங்கியுள்ளது. மேலும், இந்த உடன்படிக்கை வழியாக அவர்கள் பெறுகின்ற உரிமைகளையும் முன்மொழிகிறார்.

கடவுளுக்கு ஏற்புடையவராக்கப்படுதல் (நியாயப்படுத்தப்படுதல்) என்னும் கருத்துருவை உரோமை நகரத்திருஅவைக்கு விளக்கும் பவுல், இயேசு கிறிஸ்துவின் இறப்பு வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என முன்மொழிந்து, கடவுள் தாமே இந்நிகழ்வை முன்னெடுத்தார் என்றும், ஒப்புரவின் கனியான மகிழ்ச்சியைத் தருபவர் கடவுள் என்றும் கூறுகிறார்.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், இயேசு கூட்டத்தின்மேல் பரிவு கொள்கிறார். அறுவடையின் ஆண்டவரை நோக்கி மன்றாடுமாறு சீடர்களை அழைக்கிறார். இரண்டாம் பிரிவில், பன்னிருவரைத் தம்மிடம் வரவழைத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். மூன்றாம் பிரிவில், பணிக்கான அறிவுரையை வழங்குகிறார். இன்றைய நாளின் வாசகங்களைப் பின்வரும் சொல்லாடல்களை அடிக்கோடிட்டுப் புரிந்து கொள்வோம்: பரிவு கொள்தல், பெயரிடப்படுதல், கொடையைப் பகிர்தல்.

  • அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்.
  • ஆ. கடவுளால் நாம் பெயரிடப்படுதல்.
  • இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்.

அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் காணுகின்ற இயேசு, ‘ஆயர் இல்லா ஆடுகளைப் போல அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டதை' கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கிறார். ‘பரிவு' என்பதை 'இரக்கம்' என்றும் புரிந்து கொள்ளலாம். எபிரேயத்தில், 'ரஹெம்', ('பரிவு') என்னும் சொல்லுக்கு 'ஒரு தாய் தன் மடியிலிருக்கும் பிள்ளையைக் குனிந்து பார்க்கும் சொல்லோ வியம்’ என்று பொருள் தரப்படுகிறது. அதாவது, கையறுநிலையிலிருக்கும் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து நோக்குகிற தாய், அக்கண்கள் வழியாகக் குழந்தையின் தேவை அறிந்து, அதை நிறைவு செய்கிறார். ஆக, இரக்கம் என்பது உணர்வாக எழுந்தாலும் அது செயலாகக் கனிகிறது. இயேசுவைப் பின்தொடர்ந்து நடந்த மக்கள் பொருளாதார, ஆன்மீக, அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலுவிழந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் கையறு நிலைகண்டு அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார் இயேசு. தாம் ஒருவரால் மட்டும் பணி. சாத்தியமில்லை என உணர்ந்தவராக, தம்மோடு உடனுழைக்க பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். அறுவடை செய்பவர்கள் சீடர்கள் என்றாலும், அறுவடையின் உரிமையாளர் கடவுளே என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சீடர்கள் தாங்கள் செய்கிற பணிகள் வழியாகக் கடவுளின் பரிவை மனிதர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பரிவு என்பது மேன்மையான உணர்வு. கடவுளின் பரிவை நாம் அன்றாட வாழ்வில் கண்டுணர்கிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் அல்லது துயரங்கள் நம்மை அலைக்கழிக்கும் போது கடவுள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிட்டதாக அல்லது கடவுள் தம் முகத்தை மூடிக்கொண்டதாக உணர்கிறோம். நம் கையறு நிலைகண்டு பரிவு கொள்பவர் நம் இறைவன் என்னும் நம்பிக்கை பெறுவோம். கடவுளின் பரிவை அல்லது இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்வோம்.

ஆ. கடவுளால் பெயரிடப்படுதல்

'எல்லா மக்களிலும் நீங்களே என் உரிமைச் சொத்து,' , 'நீங்களே குருத்துவ அரசர், ‘தூய மக்களினம்' என்று இஸ்ரயேல் மக்களுக்குப் பெயர்களைக் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். சீடர்கள் என, மொத்தமாகத் தெரிந்தவர்களில் பன்னிருவரை அழைத்து அவர்களுக்குப் புதிய பெயர்களை வழங்குகிறார் இயேசு. பெயரிடப்படுதல் என்பது உரிமை கொண்டாடப்படுதலைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தாம் கொண்ட பரிவின் காரணமாக இஸ்ரயேல் மக்களைத் தம் உரிமைச்சொத்து எனக் கொண்டாடுகிறார். மற்ற நாட்டினரை விடச் சிறிய இனமாக இருந்த மக்களை அரசர்கள் என்றும், கடவுளின் தூய இனம் என்றும் அழைத்து, அவர்களுக்கு மேன்மை அளிக்கிறார். சீடர்கள் என்ற நிலையில் இருந்தவர்களைப் பன்னிருவர் என்னும் நிலைக்கு உயர்த்துகிற இயேசு, தீயஆவிகளை ஓட்டவும் நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் தந்து அவர்களை ஆற்றல்படுத்தி, அவர்களைத் தம் உடனுழைப்பாளர்களாக மாற்றுகிறார்.

திருமுழுக்கு நிகழ்வில் நாம் அனைவரும் பெயரிடப்படுகிறோம். பெயரிடப்பட்டுள்ள நாம் அனைவருமே ஓர் அழைப்பைப் பெற்றுள்ளோம். அந்த அழைப்பை நாம் நினைவு கூர்ந்து, அந்த அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்கிறோமா?

இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்

தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசுவின் அறிவுரைப் பகுதி, 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்' என்று நிறைவு பெறுகிறது. இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே' என்று இரண்டாம் வாசகம் நிறைவு பெறுகிறது. கடவுள்தாமே ஒப்புரவின் மகிழ்ச்சியைக் கொடையாக வழங்குவதாக மொழிகிறார் பவுல். நம் ஒவ்வொருவரின் செயல்களைவிட கடவுளின் அருளே மேன்மையாக இருக்கிறது. இதையே திருப்பாடல் ஆசிரியர், ”ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்க வில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.(127:1) எனப் பதிவு செய்கிறார். நாம் எந்த முயற்சியை எடுத்தாலும், முயற்சியின் பலன் கடவுளின் மடியில் தான் உள்ளது. அனைத்தையும் கடவுளின் கொடையாகப் பார்ப்பதற்கு நமக்கு நம்பிக்கைப் பார்வை அவசியம். ‘இது என்னால் வந்தது, இதை நான் செய்தேன், இது என் முயற்சி" என நான் என் செயல்களுக்கு முதன்மையிடம் அளிக்கும் போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறேன். மற்றவர்களின் செயல்கள் மற்றும் முயற்சிகளோடு ஒப்பிட்டு வருத்தம் கொள்கிறேன். ஆனால் அனைத்தையும், அனைவரையும் கொடையாகப் பார்க்கிற உள்ளம் மனச்சோர்வு அடைவதில்லை. வருத்தம் கொள்வதில்லை. பன்னிருவராய் தெரிந்து கொள்ளப்பட்டதும், தீய ஆவியின் மேலும், நோய்களின் மேலும் கொள்ளும் ஆற்றலும், கடவுளின் கொடைகள் உணர்ந்தவர்களாகச் சீடர்கள் பணியாற்ற வேண்டும்.

கொடையாகப் பார்க்கும் உள்ளம் கணக்குப் பார்க்காது. கணக்குப் பார்க்கிற உள்ளம் கொடைகளைக் கொண்டாடாது. நம் ஆற்றல், திறன், வெற்றி, இருத்தல், இயக்கம் என அனைத்தையும் கடவுளின் கொடைகளாகப் பாவித்துக் கொண்டாடுகிறோமா? கொடையாகவே அவற்றை மற்றவர்களோடு பகிர்கிறோமா?

நிற்க.

கடவுளின் பரிவு, கடவுளின் உரிமை,கடவுளின் கொடை என் அனைத்தும் கடவுளிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன. இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர் பாடுவதுபோல, ‘ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்!" (திபா 100) என்று அவரிடம் சரணடைவோம். அவருடைய பரிவையும், கொடையையும் பெற்றுள்ள நாம் அவற்றை ஒருவர் மற்றவருக்கு, குடும்பத்தில், பங்குத்தளத்தில், சமூகத்தில் - வழங்க முயற்சி செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தந்தையின் அன்பு அளப்பெரியது! சீடத்துவ வாழ்வு வாழ நம்மை அழைக்கிறது!

இன்றைய நாளின் வாசகங்கள் நம் விண்ணகத்தந்தையின் அன்பை, அவர் நம்மை பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அளவற்ற இரக்கத்தை நமக்கு வெளிப்படுத்துவதாய் இருக்கிறது.அந்த தந்தையின் அன்பை நாம் உணர்வதோடு நின்று விடாமல் அவருடைய அன்பு நம்மிடம் எதிர்பார்ப்பதை நிறைவேற்றும் மக்களாக நாம் வாழவேண்டும் என்பதே இந்நாளுக்கான அழைப்பு.

ஒரு வீட்டில் தந்தையானவர் மிக வருந்தி உழைத்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்ற இயன்ற அளவு உழைத்தார். ஆயினும் அவருடைய மகன் அவருடைய விருப்பப்படி நடந்து கொள்ளவில்லை. படிப்பில் பின் தங்கினான். அப்போது ஒருநாள் அவர் தன் மகனை அழைத்து தன்னுடைய தியாகங்களையெல்லாம் சொல்லிப் புரியவைத்தார். மேலும் அவர் தன் மகனிடம் ,தன்னுடைய சொல் கேட்டு நடந்து நன்கு படித்து தேர்வுகளில் வெற்றி பெற்றால் தன்மகன் விரும்புவதை தான் செய்வதாகவும் கூறினார். மகனும் தந்தையின் சொல்லுக்கு கீழ்ப்படிந்தார்.

இத்தகைய நிகழ்வுகள் எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஒரு தந்தை தன் பிள்ளைகளின் நல்வாழ்வில் எந்த அளவு ஆர்வமாய் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறே விண்ணகத்தந்தையும்!

தந்தை கடவுள் மோசேயிடம் இஸ்ரயேல் மக்களுக்கு தான் புரிந்த வல்ல செயல்களையெல்லாம் எடுத்துச்சொல்லி, தன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடந்தால் அவர்களை தன் தனிச்சொத்தாக்கி கொள்வேன் என கூறுவது கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கொண்டுள்ள அளப்பெரிய அன்பைக் காட்டுகிறது.

இதே தந்தையின் மனநிலையை இயேசு நற்செய்தியில் வெளிப்படுத்துகிறார். மக்கள் ஆயனில்லா ஆடுகளாய் சிதறிக் கிடப்பதை கண்டு வருந்துகிறார். பரிவு கொள்கிறார். அவர்களை நல்வழிப்படுத்த, அவர்களுக்காக உழைக்க சீடர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்.

இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பது என்ன? நல்லவர்களுக்காக நேர்மையாளர்களுக்காக உயிரைக்கொடுக்க அல்லது தியாகச் செயல்கள் புரிய பலர் விரும்பாத நிலையில் வலுவற்ற பாவிகளாய் இருக்கிற வழிதவறிய ஆடுகளாய் இருக்கிற நமக்காக இயேசு தன்னை கையளித்தார். நமக்கெல்லாம் மீட்பினை உறுதி செய்தார்.

இவ்வாசகங்களை தியானிக்கும் நாம் செய்ய வேண்டியது என்ன?

முதலாவதாக நாம் தந்தையின் பிள்ளைகள் ,அவர் மேய்ச்சலின் ஆடுகள் என்பதை உணர்ந்து அவர் விருப்பப்படி வாழவேண்டும்.

இரண்டாவதாக தந்தையின் பிள்ளைகளாக நம்மை உணர்ந்த நாம் இயேசுவின் சீடர்களாக நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைச் செய்ய வேண்டும்.

ஆம். தந்தையின் அன்பு அளப்பெரியது. அவ்வன்பு கிறிஸ்துவின் வழியாய் நம்மேல் பொழியப்பட்டுள்ளது. இதை உணர்ந்து தந்தையின் பிள்ளைகளாய் கிறிஸ்துவின் சீடர்களாய் வாழ்ந்து அவ்வன்பை பிறர்க்கும் கொடுப்போம்.

இறைவேண்டல்

அன்பு தந்தையே! நாங்கள் உம் பிள்ளைகள் ;உமது மேய்ச்சலின் ஆடுகள் என்பதை உணர்ந்து சீடத்துவ வாழ்வு வாழ வரமருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser