மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலம் ஏழாம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
லேவியர் 19:1-2, 17-18|1 கொரி. 3:16-23|மத்தேயு 24: 38-48

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இன்றைய வாசகங்கள் நமது பகைவர்களை அன்பு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நமக்கெதிராக அநீதி இழைக்கப் பட்டால்கூட நாம் பழிக்குப்பழி வாங்கக்கூடாது என லேவியர் நூல் கூற, அன்பு செய்பவர்களுக்கு நாம் அன்பு செய்தால் அதனால் என்ன கைம்மாறு கிடைக்கும் என மத்தேயு நற்செய்தி கேட்கிறது.

நமக்கு அன்பு காட்டுகின்றவர்களுக்கு நாம் அன்பு காட்டிவிடலாம். ஆனால் நமது எதிரியை எப்படி அன்பு செய்வது? பகைவருக்கு அன்பு என்பது நடைமுறைக்கு ஏற்ற ஒரு பாடமா? 1981-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் மாலை மணி 5.19. ஐந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெள்ளை நிற ஊர்தியில் வலம் வந்து, வெள்ளை உள்ளம் படைத்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் மீது பாய்ந்தன. சுட்டவன் பெயர் முகமது அலி அஃகா. அவர் மீது பாய்ந்த குண்டுகளை ஐந்தரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெளியேற்றினர். திருத்தந்தை சுயநினைவைப் பெற்றதும் அவர் உலக மக்களுக்குத் தந்த நற்செய்தி, அவரைச் சுட்டவனை அவர் மன்னித்துவிட்டார் என்பதாகும்.

சட்டப்படி குற்றவாளியான கொலையாளி சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சந்திக்க திருத்தந்தைக்கு ஆசை. அந்த விருப்பமும் ஒருநாள் நிறைவேறிற்று. சந்திப்பிற்குப் பின்னர் திருத்தந்தை, உங்கள் எதிரிகளுக்கு அன்பு செய்யுங்கள். கிறிஸ்து பிறப்பின் திருநாள் சமயத்திலே, மீட்பின் புனித ஆண்டிலே நீங்கள் அனைவரும் நன்கு அறிந்த அலி அஃகாவை நேரிலே கண்டேன். நாங்கள் ஒருவரை ஒருவர் மனிதர்களாக, உடன் பிறப்புகளாக சந்திக்க ஆண்டவர் அருள் தந்தார். கடவுள் நம் தந்தை என்றார். ஆம், கடவுள் நம் தந்தை. நாமெல்லாம் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வுதான் அஃகாவைச் சந்திக்கத் திருத்தந்தையைத் தூண்டியது. இதே உணர்வு என்று நம் உள்ளத்தை ஆட்கொள்ளத் தொடங்குகிறதோ அன்றுதான் நமது பகைவர்களை நம்மால் மன்னிக்க முடியும்.

இத்தகைய உணர்வை நமது உள்ளத்தில் ஏற்படுத்தத்தான் இரண்டாவது வாசகம் குறிப்பிடுவதுபோல், நமது இதயத் திற்குள்ளே கடவுளின் ஆவியானவர் குடி கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த பாக்கியமே நாம் பெற்றிருக்கும் தூய ஆவி. இறைவனை அப்பா, தந்தையே (உரோ. 8:15ஆ) என அழைக்கும் உரிமைப் பேற்றினை நாம் அனைவரும் ஆவியின் அருளால் பெற்றிருக்கின்றோம். அந்த ஆவியின் தூண்டுதலுக்கும் அன்பின் வழிநடத்துதலுக்கும் (கலா. 5:22-26) தடைவிதிக்காமல் ஒத்துழைத்து பகை அறுத்து ஒரு பாச உலகத்தைப் படைப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பகையை அறுத்து பாச உலகத்தைப் படைப்போம்

நமக்கு அன்பு காட்டுகின்றவர்களுக்கு நாம் அன்பு காட்டிவிடலாம். ஆனால் நாம் விரும்புகின்றபடி நடக்காதவர்களை எப்படி அன்பு செய்வது?

நாம் யாரைப் பகைவர்களாக நினைக்கின்றோமோ அவர்களை அன்பு செய்ய வேண்டும் என்பது நடைமுறைக்கு ஏற்ற பாடமா?

இந்தக் கேள்விக்கு எனது வாழ்க்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி பதில் சொல்லும்!

அன்று இரவு என் மனம் குழம்பிப்போயிருந்தது! யாரோ : ஒருவர் காரணமில்லாமல் என்னைத் திட்டிவிட்டார். ஆகவே என் மனத்தில் கோபம் பற்றி எரிந்துகொண்டிருந்தது!

அப்போது ஆயர் இல்லத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இரவுக்காவலரை அழைத்து. நீ குருமடத்திற்குச் சென்று அங்கே வேதியர் இருந்தால் அழைத்து வா என்றேன்! நான் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அவருக்கு அதிர்ச்சிI காரணம். அவரை நான் அதுவரை நீ என்று அழைத்தது கிடையாது, நீங்கள் என்றுதான் அழைத்திருக்கின்றேன்.

அவர் குழம்பிய மனத்தோடு, குருமடத்திற்குச் சென்று திரும்பி வந்து, வேதியர் அவர் அறையில் இல்லை என்றார். இல்லேன்னு சொல்லத்தான் வாட்ச்மேனா! ரூம்ல இல்லேன்னா, சுத்திப்பார்க்கணும் என்றேன் கோபமாக. அதற்கு வாட்ச்மேன், கொடுக்கிற சம்பளத்துக்கு போய்தான் பார்த்திட்டு வரலாம்! சுத்தியெல்லாம் பார்க்க முடியாதுன்னாரு.

அதற்கு நான், மரியாதையா பேசனும்னேன்! அதற்கு வாட்ச்மேன், நீங்க முதல்லே மரியாதையா பேசக் கத்துக்கங்க அப்படின்னாரு!

ரொம்ப பேசுனா வாட்ச்மேன் சீட்டை கிழிப்பேன்னேன்! அதற்கு வாட்ச்மேன், நீங்க கிழிக்க வேண்டாம். நானே கிழச்சுக்கிறேன்னு சொல்லிட்டு போய், ராஜினாமா கடிதம் எழுதினாரு!

பொழுது விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை! என் உள்ளத்திலே போராட்டம்! காலையில் திருப்பலி நிறைவேற்ற வேண்டும்! மன்னிப்பு இல்லாமல், சமாதானம் இல்லாமல் எப்படித் திருப்பலி நிறைவேற்றமுடியும்?

அறையைவிட்டு வெளியே சென்றேன். இரவுக் காவலரின் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்து வந்தேன். கைகளைக் கூப்பி, என்னை மன்னித்துவிடுங்கள் என்றேன். அவர் அழ, நான் அழ. படம் எடுத்திருந்தால் நூறு நாள் ஓடியிருக்கும்.

நம் மனத்திலே தாழ்ச்சி என்னும் புண்ணியம் பூக்கும்போது நம் மனம் மன்னிப்பு என்னும் மணத்தைப் பரப்பும்.

தாழ்ச்சிதான் அனைத்துப் புண்ணியங்களுக்கும் தாய்! தாழ்ச்சியை நமக்குத்தர இரண்டாவது வாசகம் குறிப்பிடுவது போல, நமது உள்ளத்திற்குள்ளே கடவுளின் ஆவியானவர் குடிகொண்டிருக்கின்றார்.
மேலும் அறிவோம்:

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்(று) உலகு (குறள் : 874).

பொருள் : பகைமை பாராட்டுபவரையும் நண்பராகக் கருதிப் பழகும் பெருந்தகையின் பண்புச் சிறப்பை இவ்வுலகம் போற்றிப் பாராட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கோழிக் குஞ்சுகளுடன் ஒரு கழுகுக் குஞ்சும் வளர்ந்தது. ஒருநாள் அந்த கழுகு குஞ்சு வானத்தில் கழுகு உயரப் பறப்பதைக் கண்டு, தாய்க் கோழியிடம், “உயரப் பறக்கும் பறவையின் பெயர் என்ன?" என்று கேட்க, தாய்க்கோழி கூறியது, "அதுதான் கழுகு. அதைப்போல நாம் உயரப் பறக்க முடியாது. நாம் பூமியைக் கிளறிப் புழுவைச் சாப்பிட வேண்டும்." கழுகுக் குஞ்சும் அமைதியாகி விட்டது. அது, தான் கழுகு இனத்தைச் சார்ந்தது என்பதையும், தன்னால் உயரப் பறக்க முடியும் என்பதையும் அறியாமல் தனது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டது.

அவ்வாறே நாமும் நமக்குள்ள ஆற்றலையும் சக்தியையும் அறியாமல் நாம் இருக்கும் நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். இச்சூழலில் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நம்மிடம் கூறுகிறார்: "உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத் 5:48). இன்றைய முதல் வாசகத்திலும் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கூறுகிறார்: "தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்" (லேவி 19:1-2), கடவுளைப்போல் தூயவராகவும் நிறைவுள்ளவராகவும் வாழ்வது நமக்கு இயலுமா?

கடவுளைப்போல நாமும் நிறைவுள்ளவராய் இருப்பது நமது இலக்காக இருத்தல் வேண்டும். நமது இலக்கு எப்போதும் உயர்வாக இருப்பது இன்றியமையாதது. "சிகரத்தை நோக்கி” என்பது நமது இலக்கு, இலக்கை அடையவில்லையென்றாலும் இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடலாகாது.

"உள்ளுவதெல்பால் உயர்வு உள்ளல் மற்றஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து" (குறள்596)

கடவுளைப்போல் நிறைவு உள்ளவராய் இருங்கள் (மத் 5:48) என்று மத்தேயு கூறுவதை, லூக்கா தனது நற்செய்தியில் கடவுளைப்போல் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6:36) என்று குறிப்பிட்டுள்ளார். எனவே யார் கடவுளைப்போல் இரக்கம் உள்ளோராய் இருக்கிறாரோ அவரே கடவுளைப்போல் நிறைவுள்ளவராய் இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.

கடவுளது தனிப் பண்பு அவர்தம் இரக்கமே. இன்றையப் பதிலுரைப்பாடல் கூறுகிறது: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை" (திபா 103:8,11).

கடவுள் தமது இரக்கத்தை அனைவர்க்கும் காட்டுகிறார். அவர் தமது கதிரவனை நல்லோர்மேலும் தீயோர்மேலும் உதிக்கச் செய்கிறார். அவ்வாறே நேர்மையுள்ளோர் மேலும் நேர்மை அற்றோர்மேலும் தமது மழையைப் பொழிகிறார் (மத் 5:45). கடவுளைப்போல, நாமும் எவரையும் நமது அன்பு வட்டத்தில் இருந்து ஒதுக்காமல் அனைவரையும், பகைவரையும் அன்புசெய்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டும் பக்குவம் அடையும்போது (மத் 5:43) நாமும் அவரைப்போல் நிறைவுடையோராய் உயர்கிறோம். "சிகரத்தை நோக்கிச் செல்வோமா?"

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார்: "பழிக்கும்பழி வாங்க வேண்டாம்" (லேவி 19:18); நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். உங்கள் வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத் 5:39).

1981-ஆம் ஆண்டு மே திங்கள் 13-ஆம் நாள் முகமது அலி ஆஃகா என்ற இளைஞர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைத் துப்பாக்கியால் சுட்டார். இதே ஆண்டு டிசம்பர் திங்கள் திருத்தந்தை தம்மைக் கொல்ல முயற்சி எடுத்த அந்த நபரைச் சிறைச்சாலையில் சந்தித்து தமது மன்னிப்பை அவருக்கு வெளிப்படுத்தி, அதன் மூலம் வானகத் தந்தையின் இரக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கணவர் தம் மனைவியின் காரில் சென்றார். கண் மண் தெரியாமல் அவர் கார் ஓட்டுவதைக் கண்ட அவரது மனைவி அவரிடம், "கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்க" என்று கேட்டார். கணவர் அவரிடம், "இது என் கார்; அதை எப்படியும் ஓட்டுவேன். அதைப்பற்றிக் கேட்க நீயார்?” என்று கேட்டார். வீடு திரும்பியதும் மனைவி தோசை சுட்டு கணவருக்குப் பரிமாறினார். தோசையெல்லாம் கறுப்பாக இருந்தது. கணவர் மனைவியிடம், "என்ன இது! தோசையெல்ாம் கறுப்பாக இருக்கிறது" என்று கேட்டதற்கு. மனைவி அவரிடம், "தோசை என் தோசை; அதை எப்படியும் சுடுவேன்; அதைப்பற்றிக் கேட்பதற்கு நீயார்?" என்று பதிலடி கொடுத்தார். இவ்வாறு ஒருவர் மற்றவரைப் பழிதீர்த்துக்கொள்ள ஆரம்பித்தால். வீடு வீடாக இருக்காது; அது சுடுகாடாகக் காட்சியளிக்கும். புனிதம் என்பது அன்பின் நிறைவு. திருச்சட்டத்தின் நிறைவு என்ன? திருத்தூதர் பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13:10). நமது அன்பு எவரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அன்பாக அமையும்போது, நாம் புனிதராகிறோம். கடவுளுக்கு நிகராகின்றோம்.

பூமியானது தன்னை மண்வெட்டி கொண்டு தோண்டும் விவசாயியைத் தாங்குவதோடு அவருக்கு வேண்டிய உணவையும் விளைவிக்கின்றது. அவ்வாறே தீமை செய்வோரைப் பொறுத்துக்கொள்வதோடு அவருக்கு நன்மை செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"(குறள் 151).

நமது இலக்கு 'சிகரத்தை நோக்கி' என்பதை நினைவில் நிறுத்தி, வானகத் தந்தையைப்போல் இரக்கம் உள்ளவர்களாய்த் திகழ்ந்து, கடவுளைப்போல் நிறைவுள்ளவராய் மாறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவனின் இதயத்தோடு...

வாழ்க்கையில் உங்களுடன் நீங்கள் பழகும்போது மூளையை அதாவது அறிவைப் பயன்படுத்துங்கள். பிறருடன் பழகும்போது இதயத்தை அதாவது அன்பைப் பயன்படுத்துங்கள். அதுவும் இறைவனுடைய இதயத்தோடு வாழுங்கள் என்று அழைக்கிறது இன்றைய வழிபாடு.

கேரளாவில் சங்கனாச்சேரி மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்தந்தை பெனடிக்ட் ஒனங்குளம். மரிய குட்டி என்ற பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கீழ்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றார். 1966ஆம் ஆண்டு ஜுன் 16ஆம் நாள் மரியகுட்டி கத்திக்குத்துக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தாள். அருள்திரு பெனடிக்ட் வாழ்ந்த குருக்கள் இல்லத்தில் இரத்தக்கறை படிந்த சில ஆடைகள் கிடந்தன என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது கேரளாவை மட்டுமல்ல, இந்தியக் கிறிஸ்தவ உலகத்தையே அதிர வைத்தது.

பிறகு கேரள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றார். விடுதலை கூட அவர் குற்றமற்றவர் என்பதற்காக 'அல்ல. நேரடி சாட்சியம் இல்லை என்பதற்காகவே. அந்த நிலையில் கூட தந்தை பெனடிக்ட் தப்பிக்க, திருச்சபையின் செல்வாக்கும் பணச் செழிப்புமே காரணம் என்பது போலத்தான் எல்லோரும் பார்த்தார்கள். இந்தச் சூழலில், விடுதலை பெற்றிருந்தாலும் தந்தை எவ்வளவு மன உளைச்சலுக்கும் தலைக்குனிவுக்கும் ஆளாகி இருப்பார்!

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சோகமான நிகழ்வுக்கு மகத்தான ஒரு திருப்பம் கி.பி. 2009 ஜனவரியில் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட மரியகுட்டியின் குடும்பத்தினர் சாலக்குடி டிவைன் சென்டரில் தியானம் செய்தனர். வறுமைக்கும் பல்வேறு நோய்களுக்கும் ஆளான நிலையில் குற்ற உணர்வு உறுத்த தியானம் கொடுத்த தந்தையிடம் அருள்திரு. பெனடிக்ட் ஒனங்குளம் குற்றமற்றவர் என்றும் ஓர் எஸ்டேட் முதலாளிதான் கற்பழித்துக் கொலை செய்ததாகவும், பணம் கொடுத்துப் பழியைக் குருவானவர் மேல் போடச் சொன்னதாகவும் பாவ அறிக்கை செய்திருக்கின்றனர். குருவானவர் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அருதிரு. பெனடிக்ட் அவர்களிடம் சென்று மன்னிப்புக் கோருமாறு பணித்திருக்கிறார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

இந்தச் செய்தி கேட்டு பத்திரிகையாளர்கள் கூடி அருள்திரு. பெனடிக்ட் அவர்களைப் பேட்டி கண்டனர். அவர் சொன்னவற்றில் இரு கேள்விகளுக்கான பதில்கள் உள்ளத்தைத் தொடும்.

நிருபர்: “அவர்கள் மன்னிப்பு கேட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
குரு: “நான் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மன்னித்துவிட்டேன்.”
நிருபர் : "எனினும் இத்தனை ஆண்டுகளாக உங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து சீரழிந்து பாதிப்புக்குள்ளானது?”
குரு : "நான் அப்படி நினைக்கவில்லை. இறை ஊழியத்திற்காக கையளித்தல் செய்யப்பட்டவன் நான். எனவே என்னை அழைத்து ஆட்கொண்ட என் கடவுள் தன் பணியில் என்னை எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவார். அவர் என்னைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பார். அவரது திருவுளத்தை ஏற்றுக் கொள்கிறேன்."

"நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்: 5:44) என்ற இயேசுவின்அழைப்பு, அருள்தந்தை பெனடிக்ட் ஒனங்குளம் அவர்களின் வாழ்வில் எப்படி ஓர் அற்புதமான வடிவம் எடுத்திருக்கிறது!

பகைவர்களை அன்பு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. இயல்பானதும் அல்ல. ஆனால் இயல்புக்கு அப்பாலானது என்றாலும் இயேசுவின் கட்டளை தெளிவானது. "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்" (யோ. 15:12) என்றவர் அல்லவா இயேசு! "நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்" (உரோமை 5:8).

பகைவனுக்கும் அருளும் பண்பு மகிழ்ச்சிக்கு அடிப்படை. எடுத்ததெற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் மனத்தில் அமைதி இருக்காது. புயல் பாதித்த வயல்போல் வாழ்க்கை சிதைந்துவிடும். புகை கண்ணை எரிக்கும்; பகை கண்ணை மறைக்கும்.

ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறீர்கள். திடீரென அந்த மரத்தின் கிளை ஒன்று உங்கள் மேல் முறிந்து விழுந்து காயப்படுத்துகிறது. உடனே கோபம் கொண்டு அந்த மரத்தை எதிர்த்தா தாக்குவீர்கள்? அவ்வாறு தாக்குவது பைத்தியக்காரத்தனம் என்பீர்கள். எந்த மனிதனாவது உங்களுக்குத் தீங்கு செய்யும்போது மரத்தைப் போல அவனை நினைத்து மௌனமாகக் கூடாதா? செருப்பு நம் காலைக் கடிக்கிறது என்பதற்காக பதிலுக்கு அதைப் போய்க் கடிக்க முடியுமா?

"தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்” (மத். 5:39) என்பது கூட இயேசுவின் பார்வையில் நீதியின் வெளிப்பாடோ! வலது கன்னத்து அறை நீ ஏதோ ஒரு வகையில் தவறு செய்திருக்கிறாய் என்பதன் நிரூபணம். அது அன்பு செய்யாத தவறு. இல்லையென்றால் ஏன் அந்த அறை? அப்படி ஒரு தவறு நிரூபணமாகிறதென்றால் அதற்குத் தண்டனை வேண்டாமா? அதுதான் இடது கன்னத்து அறை!

ஆங்கிலேயர் ஒருவர், "சத்தியாக்கிரகம் என்ற கொள்கை வடிவம் எடுத்தது எப்படி?" என்று காந்தியாரிடம் கேட்டார். “என் பள்ளி நாட்களிலே நான் படித்த குஜராத்தி மொழிப்பாடல்தான் என் உள்ளத்தில் விதைத்தது" என்று சொல்லி, “தண்ணீர் கொடுப்பவனுக்குக் தண்ணீர் கொடுப்பது பெரிய காரியமல்ல. தீமை செய்தவனைத் தீமையால் எதிர்ப்பதும் சாதாரண ஒன்றே! இதை விலங்குகளும் செய்யும். தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதின் மூலம் தீமை செய்தவனுடைய தீமையை உணர வைப்பதே போற்றத்தக்கது” என்று அந்தப் பாடலை விளக்கினார் காந்தி.

“தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்" (உரோமை 12:21). அது எதிரி மனமாற்றம் அடைய வாய்ப்பாக அமையலாம்.

1983ஆம் ஆண்டு இரசல் தெண்டால் என்பவரைக் கொரில்லாப் படையினர் பணயக் கைதியாகச் சிறைப்பிடித்தனர். தென் அமெரிக்காவின் கொலம்பிய மாநில அடர்ந்த காடுகளுக்குக் கொண்டு சென்றனர். ஏறத்தாழ ஐந்து மாதங்கள் எதிரிகளை அன்பு செய்வதன் அருத்தத்தைக் கற்றுத் தெளிந்தார். தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் : "என் உயிரை இழக்கும் ஆபத்துத்தான் எனக்கு. ஆனால் அவர்களோ தங்கள் ஆன்மாவை இழக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள்”. அவர் காட்டிய பாசமும் பரிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் படைத்தலைவன் அவரைப் பார்த்துச் சொன்னான்: "முகத்துக்கு முகம் பார்த்து உம்மைக் கொல்ல எங்களால் முடியவில்லை. உமது உறக்கத்தில்தான் உம்மைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறோம்”. அதனால் அவர் படுத்திருந்தபோது கொசு வலைக்குக் கீழே கைத்துப்பாக்கியைத் திணித்து அவரது தலையைக் குறிவைத்துக் காத்திருந்தனர். அடுத்த 10 நாள்கள் அவரால் உறங்கவும் முடியவில்லை. அவர்களால் துப்பாக்கியை அழுத்தவும் இயலவில்லை. 1984ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் இரசல் விடுதலை செய்யப்பட்டார். பிரியா விடையின்போது கொரில்லாக்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனராம். பகைவரையும் நண்பராகக் கருதும் பண்பாளனால்தான் உலகத்தை வசப்படுத்த முடியும்!

இருட்டை இருட்டால் விரட்டியடிக்க முடியாது
 ஒளிதான் அதைச் செய்யும் - அதுபோல 
 வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது 
 அன்புதான் அதைச் சாதிக்கும்!
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வெறுப்பிலிருந்து அன்பிற்கு...

கடந்த ஓராண்டிற்கு மேலாக (2022, பிப்ரவரி 24 முதல்) விளாடிமிர் புடின் என்ற ஒரு மதியற்ற தலைவனின் ஆணவ வெறியினால், இரஷ்ய படை உக்ரைன் நாட்டின் மீது தொடுத்துவரும் போரின் விளைவுகளை நாம் அறிவோம். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அங்கு கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், ஐரோப்பிய மற்றும் உலகத் தலைவர்கள் 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்ற பாணியில் இரஷ்யப் படையினரை வெல்லும் வழிகளை பேசி வருகின்றனர். அதே வேளையில், உக்ரைன் நாட்டின் மதத் தலைவர்களும், சாதாரண மக்களும் மன்னிப்பைக் குறித்து பேசி வருகின்றனர், செயல்படுத்தியும் வருகின்றனர்.

இரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்து இரு வாரங்களுக்குப் பின், 2022, மார்ச் 6ம் தேதி, இரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் 'மன்னிப்பு ஞாயிறு' கடைபிடிக்கப்பட்டது. அவ்வேளையில், Lviv என்ற நகரில் இருந்த கிரேக்க கத்தோலிக்க ஆலயத்தில், ஆயர் Stepan Sus அவர்கள் மன்னிப்பைக் குறித்து தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்: "இரஷ்யா செய்வது மிக மோசமான செயல். இருப்பினும், நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதால், நாம் சக்தியற்றவர்கள் என்று பொருள் அல்ல, மாறாக, போர் என்ற தீமை நம் உள்ளங்களில் நஞ்சை புகுத்தாமல் இருக்க நாம் மன்னிப்பை செயல்படுத்த வேண்டும்" என்று ஆயர் Sus அவர்கள் கூறினார்.

கைது செய்யப்பட்ட படைவீரருக்கு ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்டபோது, கைம்பெண் Shalipova அவர்கள், அந்த வீரரை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கு இணையாக, இரஷ்ய படையால் கைது செய்யப்பட்டுள்ள உக்ரைன் படைவீரர்கள் சிலரை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் அரசியல் தலைவர்கள், 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்ற பாணியில் இரஷ்ய படையின் மீது கடும் தாக்குதல்களை மேற்கொள்ளும் வழிகளை சிந்தித்து வருகின்றனர். ஆனால், ஆயர் Sus மற்றும் கைம்பெண் Shalipova போன்றவர்கள் மன்னிப்பின் வழியே - மறு கன்னத்தைத் திருப்பும் வழியே - உயிர்களை காக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய நற்செய்தி வழியே இயேசு, ஆழமாய் சொல்லித்தருகிறார். இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும், திறந்த மனதைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

'பழிக்குப் பழி' என்பது, இஸ்ரயேல் மக்களிடமும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த பல இனத்தவரிடமும் பழக்கத்தில் இருந்த வழிமுறை. எந்த அளவுக்கு, பழிக்குப் பழி வாங்கலாம் என்பதை, பாபிலோனிய அரசன், ஹம்முராபி உருவாக்கியச் சட்டங்கள், தெளிவாக விளக்கின. மோசே வழங்கிய சட்டங்கள், ஹம்முராபியின் சட்டங்களை ஓரளவு எதிரொலித்தன. தனக்கு ஓருவர் தீங்கிழைக்கும்போது, அதற்கு பதிலாக, தவறு செய்தவரின் குடும்பத்தையே அழிப்பது சரிதான் என்ற அளவில், பழிக்குப் பழி என்ற வெறி, கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த அன்றைய காலக்கட்டத்தில், ஒருவருக்கு மற்றொருவர் இழைத்த தீங்கிற்கு ஈடாக, தவறிழைத்தவருக்கு மட்டும் தண்டனைகள் வழங்கலாம் என்பதை, மோசேயின் சட்டம் நிலைநாட்டியது. அதுவே, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மந்திரமாக இஸ்ரயேல் மக்கள் நடுவே நிலவிவந்தது. இந்த மந்திரத்தை மாற்றி எழுத முன்வந்தார் இயேசு. தீங்கு, இழப்பு, ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அன்பை, மன்னிப்பை முன்னிறுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கியுள்ளார். இன்று நாம் வாசிக்கும் நற்செய்தி பகுதி - மத்தேயு நற்செய்தி 5: 38-48 - மலைப்பொழிவின் உயிர்நாடியான பகுதி என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்:

மத்தேயு நற்செய்தி 5: 38-41
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.”

இயேசுவின் இந்தக் கூற்றில், அவர், 'வலக்கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் காட்டுங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதே, இயேசு வழங்கும் சவால்.

நம்மில் பலர், வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதை அறிவோம். இதை மனதில் வைத்து சிந்தித்தால், நமக்கு முன் இருக்கும் ஒருவரை, வலது கையால் அறைந்தால், அவரது இடது கன்னத்தில்தான் அறை விழும். ஆனால், நமக்கு முன்னிருப்பவரை புறங்கையால் அறையும்போது, அவரது வலது கன்னத்தில் அறை விழும். புறங்கையால் அறைவது என்பது, வெறும் உடல் வேதனையை மட்டுமல்ல, அத்தோடு, அவமானத்தையும் கலந்து வழங்கும் ஓர் அறை.

Paul Penley என்ற விவிலிய ஆய்வாளர், “Turning the Other Cheek”: Jesus’ Peaceful Plan to Challenge Injustice - அதாவது, "'மறுகன்னத்தை திருப்பிக் காட்டுதல்': அநீதிக்கு சவால் விடும் இயேசுவின் அமைதி நிறைந்த திட்டம்" என்ற தலைப்பில் எழுதியள்ள கட்டுரையில், இயேசு கூறிய இந்த வரிகளை சிறிது ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.
யூதேயாவை ஆக்கிரமித்திருந்த உரோமை அரசின் படைவீரர்கள், இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும் சீண்டிப்பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். யூதர்கள் உடுத்தியிருந்த உடைகளையும், உடைமைகளையும், பறித்துச்செல்வது, ஏதாவது ஒரு பொருளை வீரர்கள் சுமக்கவேண்டியச் சூழலில், எதிரே ஒரு யூதர் வந்துவிட்டால், அவர் அந்த சுமையைச் சுமந்து, தன்னுடன் வருவதற்கு கட்டாயப்படுத்துவது என்று, பல அநீதிகள் அரங்கேறின. அந்நேரங்களில், யூதர்கள், உரோமை வீரர்களை எதிர்த்தால், அவர்களிடையே கைகலப்பும் உருவானது.

பொதுவாக, ஒரு கைகலப்பு நிகழும்போது, உரோமை வீரர்கள், தங்களுக்குச் சமமான மற்றொரு உரோமையரை அறைய வேண்டியிருந்தால், வலது கரத்தின் உள்ளங்கையால் அறைவார், எனவே, தாக்கப்பட்ட உரோமையரின் இடது கன்னத்தில் அறை விழும். ஆனால், ஒரு யூதர், தனக்குச் சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டும் வகையில், உரோமை வீரர், வலது கரத்தின் புறங்கையால் அவரைத் தாக்குவார், எனவே, அவரது வலக்கன்னத்தில் அறை விழும்.

இந்த அநீதிகள் அனைத்தையும் அனுபவித்திருந்த இயேசு, அநீதிகளை ஒழிப்பதற்கு வழிகளைச் சொல்லித்தருகிறார். உரோமையர்களுக்கு மட்டுமல்ல, தங்களை, தாழ்ந்தவர்கள் என்று கருதி, புறங்கையால் அறைபவர்கள் அனைவருக்கும், யூதர்கள் தங்கள் மறுகன்னத்தைக் காட்டுவதால், சொல்லித்தரக்கூடிய பாடத்தை, வார்த்தைகளில் வடித்தால், இவ்விதம் இருக்கும் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்: "என்னை இரண்டாம்தர மனிதராக எண்ணி, புறங்கையால் அறைந்துவிட்டீர். இதோ, என் மறு கன்னம். முடிந்தால், இங்கு அறையும். அப்படி அறைவதால், என்னை உமக்குச் சமம் என்று நீர் ஏற்கவேண்டியிருக்கும். உம்மால் முடியுமா?" என்று, சவால் விடுக்கும் ஒரு செயல் இது.அதேபோல், தன் அங்கியைப் பறிப்பவருக்கு மேலாடையையும் சேர்த்து வழங்குவது; ஒரு கல் தொலை, சுமை சுமக்க வற்புறுத்துபவருடன், இரு கல் தொலை நடப்பது என்ற வழிகளைப் பின்பற்றினால், நீதியற்ற முறையில் நடந்துகொள்பவர்கள் நீதியை உணர்வதற்கு அது வழி வகுக்கும் என்பதை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்கள் வழியே இயேசு ஒரு சவாலாக நம்முன் வைக்கிறார்.

மறுகன்னத்தைக் காட்டுவது, மேலாடையையும் சேர்த்துத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள், நாம் புண்ணியத்தில் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியில், ஒரு நாளில் வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.

'மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.
'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார். இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். ஆயினும், அதுதான் இயேசு நமக்குமுன் இன்று வைக்கும் உன்னதமானதொரு சவால்.

"கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதுபோல், தமிழ் பழமொழி ஒன்று சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா? துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித்தருகிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார். பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டியுள்ள பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில் நூற்றில் ஒன்று, அல்லது, ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்டவேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக, இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது, என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங் என்பவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். “மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும்” என்று Gladys அவர்கள் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றக்கூடிய அளவு நமக்கு கனிவையும், துணிவையும் இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இவர்களே கடவுளின் மக்கள்!

துன்புறுத்துவோருக்காக வேண்டியவர்:
கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடம் மிகுந்த பற்றுக் கொண்டவர். அவரிடம் ஒரு பட்டியல் இருந்தது. அந்தப் பட்டியலில் இருந்தவர்களுக்காக அவர் தொடர்ந்து மன்றாடி வந்தார். பட்டியலில் அவரது உடன்பிறந்த சகோதரரின் பெயரும் இருந்தது.

சில மாதங்கள் கழித்து அவரது சகோதரை ஒருவர் வெட்டிக் கொன்றுவிட்டார். அந்த இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு அறிமுகமான சிலர் கொலையாளியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அவருக்குத் தண்டனை வாங்கித் தருமாறு கேட்டனர். அவரோ கொலையாளிக்க்குத் தண்டனை வாங்கித் தரவில்லை. மாறாக, அவர் தான் வைத்திருந்த பட்டியலில் இருந்த இறந்துபோன தன் சகோதரின் பெயரை நீக்கிவிட்டுத் தன் சகோதரரைக் கொலை செய்த கொலையாளியின் பெயரைச் சேர்த்து, அவரின் மனமாற்றத்திற்காகக் கடவுளிடம் மன்றாடி வந்தார். கடவுளும் அவரது மன்றாட்டைக் கேட்க, கொலையாளி நல்லதொரு மனிதனாக வாழத் தொடங்கினான்.

தன் சகோதரனைக் கொலை செய்த கொலையாளியைப் பழிக்குப் பழி வாங்காமல், அவருக்காகக் கடவுளிடம் மன்றாடி, அவரை மனந்திரும்பச் செய்து, கடவுளின் மகனாக மாறினார் இந்த நிகழ்வில் வருகின்ற கல்லூரிப் பேராசிரியர். பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் கடவுளின் மக்களாக மாற வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. கடவுளின் மக்களாக மாறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

பழிப்புக்குப் பழி பாபிலோனின் அரசராக இருந்தவர் ஹமுராபி. நாற்பத்து இரண்டு ஆண்டுகள் (கிமு 1792-1750) பாபிலோனை ஆட்சி செய்த இவர் சட்டங்களை வழங்கிவிட்டுப் போனார். இச்சட்டங்களுள் ஒன்றுதான், “கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்.

இச்சட்டத்தைப் பார்க்கும்போது, காட்டுமிராண்டித்தனமாக நமக்குத் தோன்றலாம்; உண்மையில், அந்தக் காலத்தில் இது பெரிய சட்டமாகக் கருதப்பட்டது. எப்படியெனில், ஓர் இனக்குழுவில் இருக்கும் ஒருவர், இன்னொரு இனக்குழுவில் இருக்கும் ஒருவரைக் கொன்றுவிட்டால், அந்த இனக்குழுவில் இருந்தவர்கள் கொலையாளியின் இனக்குழுவைக் கூண்டோடு அழித்தனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஒருவரின் கொலைக்காக ஒட்டுமொத்த இனக்குழுவே அழிக்கப்பட்டது. இத்தகையதொரு போக்கை ஒழிக்கவே பாபிலோன் அரசன் ஹமுராபி இச்சட்டத்தைக் கொண்டு வந்தான். இச்சட்டம் யூதர்கள் நடுவிலும் இருந்தது (விப 21: 24).

நற்செய்தியில் இதைப் பற்றிப் பேசும்போது, “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்கள் வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்கிறார். பழிக்குப் பழி என இருந்த சூழலில், தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் என்று சொல்லி, இயேசு உலகில் வன்முறைகள் அகன்றுபோவதற்கான முதல் வழிமுறையை முன்மொழிகின்றார்.

அன்புக்கு அன்பு யூதர்கள் தொடக்கத்தில் ஹமுராமியின் சட்டத்தைப் பின்பற்றி வந்த சூழலில், ஆண்டவராகிய கடவுள் அவர்களிடம், “பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!” என்கிறார்.

யூதர்கள், “உனக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு கூர்வாயாக” என்பதில் உள்ள, ‘அடுத்திருப்பவரைத் தன் இனத்தார்தான் என்று நினைத்து அவர்களை மட்டும் அன்புசெய்து, பிற இனத்தாரை வெறுத்து வந்தார்கள். நற்செய்தியில் இயேசு இதைப் பற்றிப் பேசும்போது, அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு கூர்வீர்களானால், அல்லது சொந்த இனத்தாரையே நீங்கள் அன்புகூர்வீர்களானால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? என்கிறார்.

உரோமையருக்குக் கீழ் பணியாற்றி வந்த வரிதண்டுபவர்கள் தங்கள்மீது அன்பு செலுத்தியவர்களிடம் அன்பு செலுத்தினார்கள். அது தொழில் தொடர்பானதாக இருந்தது. இது ஒன்றும் பெரியதில்லை என்கிற பொருளில், அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்தினால் உங்களுக்கு எந்தவொரு கைம்மாறும் கிடைக்காது என்கிறார் இயேசு.

வெறுப்புக்கு அன்பு பழிக்குப் பழியென வாழக்கூடாது, அன்பு செலுத்துவோரிடம் மட்டும் அன்பு செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று சொன்ன இயேசு, இறுதியாக, “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று சொல்லி, உண்மையான அன்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுகின்றார். இதற்கு அவர் கடவுளை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார்.

கடவுள், ஒருவர் தீயவராக இருக்கின்றார் என்பதால் அவர்மீது தம் கதிரவனை உதித்தெழச் செய்யாமல் இருக்கவில்லை; அல்லது ஒருவர் நேர்மையற்றவராய் இருக்கின்றார் என்பதற்காக அவர்மீது மழை பெய்யச் செய்யாமலும் இருக்கவில்லை. அவர் தீயவர்மேலும் கதிரவனை உதித்தெழச் செய்கின்றார்; நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கின்றார். அதுதான் கடவுளின் இயல்பே!

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 103, ஆண்டவர் இரக்கமும் அருளும் நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்டவராய் இருக்கின்றார்; அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை” என்பதைப் பறைசாற்றுகின்றது. தாவீது மன்னரால் பாடப்பட்ட இத்திருப்பாடல், அவரது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பாடப்பட்ட பாடல் என்று உறுதியாகச் சொல்லலாம். இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீது உரியாவின் மனைவியோடு பாவம் செய்தார். தொடக்கத்தில் அவர் தன் பாவங்களை மறைக்க நினைத்தாலும், இறைவாக்கினர் நாத்தான் அவரது பாவங்களைச் சுட்டிக் காட்டியதும், மனம் வருந்தி அழுது, கடவுளின் மன்னிப்புக் கேட்க, கடவுளும் அவரது பாவங்களை மன்னிக்கின்றார்கள். இதனாலேயே தாவீது, “அவர் நம் பாங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கேற்ப நம்மைத் தண்டிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு, இத்தகைய ஆண்டவரை போற்றிப் பாடச் சொல்கின்றார்.

கடவுள் அருளும் இரக்கமும் பேரன்பும் நீடிய பொறுமையும் கொண்டவராய் இருப்பதனால், அவரின் மக்கள் அவரைத் தங்கள் சொல்லாலும் செயலாலும் அவரைப் பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடவுளின் மக்களாக முடியும். மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்வது போல, ஒவ்வொருவரும் கடவுளுடைய கோயில், அதனால் மற்றவரை அன்புசெய்வது கடவுளை அன்பு செய்வதைப் போன்றது. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய்ப் பழிக்குப் பழி என வாழாமல், அன்பு செய்பவரை மட்டுமே அன்பு செய்யாமல், கடவுளைப் போன்று எல்லாரையும் அன்பு செய்து, அவரது அன்பு மக்களாவோம்.

சிந்தனைக்கு: கடவுளின் மன்னிப்பை உணராத வரையில் நாம் மற்றவரை முழுமையாய் அன்பு செய்ய முடியாது. எந்த அளவுக்கு நாம் கடவுளின் மன்னிப்பை உணர்ந்திருக்கின்றோமோ, அந்த அளவுக்கு நாம் மற்றவரை அன்பு செய்வோம்’ என்பார் பால் திலிச் என்ற அறிஞர். நாம் கடவுளின் மன்னிப்பையும் பேரன்பையும் உணர்ந்தவர்களாய் அவற்றை மற்றவர்களுக்கு வழங்கி, கடவுளின் அன்பு மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நிறைவுள்ளவராக!

இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று மூன்று கட்டளைகளை - 'கொலை செய்யாதே,' 'விபசாரம் செய்யாதே,' 'பொய்ச்சான்று சொல்லாதே' - கையாண்ட இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:36-48), 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' (காண். விப 21:22-25, லேவி 24:17-22), 'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு, பகைவருக்கு வெறுப்பு' (காண். லேவி 19:18) என்னும் மோசேயின் விதிமுறைகளை எடுத்துக் கையாளுகின்ற இயேசு அவற்றின் உள்பொருளை நீட்டுகின்றார்.

இந்த நீட்சியின் நோக்கம் என்ன? நிறைவுள்ளவராதல்!
'தூய்மை' அல்லது 'நிறைவு' என்னும் வார்த்தைகள் இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் வருகின்றன. கடவுளைப் பற்றி பேசும் நாம் மனித வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றோம். 'தூய்மை' என்ற வார்த்தை விவிலியத்தில் கடவுளைப் பற்றிப் பேச அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 'தூய்மை' என்றால் என்ன? முதலில், 'தூய்மை' என்பது 'ஒதுக்கிவைக்கப்படுதலை' - அதாவது, எல்லாவற்றிலுமிருந்து பிரித்துவைக்கப்படுதல்' - குறிக்கிறது. இரண்டு, தூய்மை என்பது கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் காட்டிய நன்மைத்தனத்தைக் குறிக்கிறது. கடவுளுக்கு சொந்தமான மக்களும் இதே தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2,17-18), 'தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்' என்னும் ஆண்டவரின் கட்டளையோடு தொடங்குகிறது. மனிதர்களோ, மனித சமூகமோ எப்படி தூய்மையாக இருக்க முடியும்? தூய்மையாக இருப்பதற்கான விதிமுறைகளை எபிரேய விவிலியத்தின் முதல் பகுதியான தோரா அல்லது ஐநூல்கள் கற்பிக்கின்றன. குறிப்பாக, 'தூய்மைச் சட்டம்' என்று சொல்லப்படுகின்ற லேவி 17-26 என்னும் விவிலியப் பகுதி இதற்கான நிறைய வழிமுறைகளை எடுத்தியம்புகிறது. அனைத்து நாடுகளிலிருந்து இஸ்ரயேலைத் தனக்கென 'ஒதுக்கிவைத்து' கடவுள் தேர்ந்துகொண்டதால் தாங்களும் 'ஒதுக்கிவைக்கப்பட்ட' அல்லது 'தூய்மையான' மக்கள் என்ற மனநிலையிலேயே வளர்ந்தனர் இஸ்ரயேல் மக்கள். மேலும், இத்தூய்மைநிலை தங்களுடைய சமூகத்திற்குள் நிகழும் உறவுப் பரிமாற்றத்திலும் துலங்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி குறிப்பிடுவதுபோல, எந்த வகையான பகையுணர்வையும், காழ்ப்புணர்வையும் ஒதுக்கி வைப்பதே தூய்மை என்ற புரிதலும் உருவானது. தாங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் உறவில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளைப்போல இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. இஸ்ரயேல் ஒருவர் மற்றவர்மேல் காட்டக் கூடிய அக்கறையை 'அன்பு' என வரையறுக்கிறது வாசகம். தோராவில் இந்த அக்கறை அல்லது அன்பானது இஸ்ரயேல் மக்கள் குழுமத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்டது.

ஆக, கடவுளின் நிறைவு என்பது அவருடைய தூய்மை எனக் குறிக்கப்பட்டு, இத்தகைய தூய நிலைக்கு அழைக்கப்படுகின்ற இஸ்ரயேல் மக்கள் பிறரன்பின் வழியாக நிறைவுள்ளவராகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 3:16-23) கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், அவர்களைக் கோவிலுக்கு ஒப்பிடுகிறார் பவுல். 'கோவில்' என்று பவுல் குறிப்பிடுவது எருசலேம் ஆலயத்தின் கருவறை என்று சொல்லப்படுகின்ற 'திருத்தூயகத்தை.' இங்கேதான் கடவுள் குடியிருந்ததாகச் சொல்லப்பட்டது. இதே உருவகத்தைக் கையாளுகின்ற பவுல் கொரிந்து குழுமத்தை கடவுளின் குடியிருப்பு என்று அழைக்கின்றார். பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் மலிந்து கிடந்த கொரிந்து சமூகத்திற்கு எதிராகவே இந்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றார் பவுல். குழுமத்தில் ஏற்படுகின்ற பிரிவினைகள் கடவுளின் கோவில் என்ற நிலையிலிருந்து குழுமத்தைத் தாழ்த்திவிடும் என்று எச்சரிக்கைவிடுப்பதோடு, அவர்கள் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு கடவுளிடம் ஒப்புரவாக்கப்பட்டார்கள் என்பதையும் நினைவூட்டுகின்றார்.

ஆக, பிரிவினைகளை அகற்றி ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுதல் வழியாக, ஒருவர் நிறைவுள்ளவராக முடியும். மேலும், நிறைவுள்ளவராக வேண்டும் என்ற அழைப்பு இயல்பாகவே நம்மிடம் இருக்கின்றது. ஏனெனில், கடவுளே நம்மில் குடிகொண்டிருக்கிறார் - தனிநபரிலும் நம்முடைய குழுமத்திலும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:38-48) இரண்டு வேவ்வேறான விடயங்களைப் பற்றிப் பேசுகிறது.

முதலில், வன்முறை மற்றும் இகழ்ச்சி பற்றி. இயேசுவின் சமகாலத்தில் 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்ற நிலையில்தான் வன்முறை மற்றும் இகழ்ச்சி தொடர்பான பிரச்சினைகள் சட்டரீதியாக எதிர்கொள்ளப்பட்டன. குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை இது உறுதி செய்வதால் சமூகத்தில் வன்முறை வளராமல் தடுத்தது இது. இவ்வகை நீதியை இயேசு ஒதுக்கித்தள்ளவில்லை. மாறாக, மூன்று எடுத்துக்காட்டுக்கள் வழியாக, தன்னுடைய சீடர்கள் இன்னும் ஒரு படி முன்னேறிச் சென்று வன்முறை மற்றும் இகழ்ச்சியையே அழித்துவிடுமாறு கற்பிக்கின்றார் இயேசு. இயேசு பயன்படுத்தும் மூன்று எடுத்துக்காட்டுக்களும் - வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னம், அங்கியை எடுத்துக்கொள்கிறவருக்கு மேலாடை, ஒரு கல் தொலை வற்புறுத்தப்பட்டால் இரு கல் தொலை - ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றன: பழிக்குப் பழி வாங்காமல் இருப்பதன் வழியாக வன்முறையின் வேகத்தைக் குறைப்பது. இயேசுவைப் பொறுத்தவரையில் சமூக மாற்றம் என்பது பழிவாங்குதலில் அல்ல, மாறாக, பழிவாங்குவதற்குப் பதிலாக நன்மை செய்வதில்தான் அடங்கியுள்ளது. தண்டனைக்கு ஏற்றாற்போல வழங்கப்படும் நீதி இன்னும் அதிக வன்முறையையே வளர்க்கும். அமைதியையும் இகழ்ச்சியையும் மாற்றும் ஒரே வழி தாராள உள்ளம் - இன்னும் ஒரு படி நடப்பது.

இரண்டாவதாக, கிறிஸ்தவ அன்பின் வரையறை அகலமாக்குகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் பிறரன்பு என்பது இஸ்ரயேலர் சமூகத்தினருக்கு மட்டும் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. மேலும், பகைவர்கள் - அந்நிய நாட்டினர், புறவினத்தார், சமாரியர்கள் போன்றோர் - வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற புரிதலும் இருந்தது. ஆனால், இது ஐநூலில் இல்லை. இயேசு இவ்வகை வரையறைகளை உடைக்கின்றார். கடவுள் ஒருவரையே முன்மாதிரியாகக் கொண்டு, தன்னுடைய சீடர்கள் அன்பை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. அடுத்தவர்கள் தங்களிடம் உறவுபாராட்டும் நெருக்கத்தைப் பொருட்படுத்தாமல், அடுத்தவரின் இயல்பு அல்லது மனநிலையை விமர்சிக்காமல் அனைவரையும் முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறார் இயேசு. ஒருவர் மற்றவருக்கு நன்மை செய்து அதற்கேற்ற கைம்மாறை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற சமூகத்திற்கு ஒரு மாற்றுச்சமூகத்தை முன்மொழிகிறார் இயேசு. நிறைவுள்ளவராக இருப்பதற்கான மாதிரி கடவுளே. மேலும், அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. அது ஒரு செயல். அது ஒரு தெரிவு அல்லது முடிவு.

ஆக, நிறைவுள்ளவராக ஒருவர் மாறுவதற்கு இரண்டு வழிகள்: ஒன்று, கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடப்பது. இரண்டு, வரையறைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் பதிலிறுப்புக்களையும் கடந்து அன்பு பாராட்டுவது.

இன்றைய மூன்று வாசகங்களும் நிறைவுள்ளவராக மாற நம்மை அழைப்பதோடு, நிறைவுள்ளவராதல் மனிதர்களால் எட்டி அடைய முடிய தூரத்தில்தான் இருக்கிறது என்ற ஆறுதலையும் தருகிறது. முதல் வாசகத்தில், நிறைவுள்ளவராதல் என்பது கடவுளைப் போல தூய்மையாக இருந்து, ஒருவர் மற்றவர்மேல் அன்பு காட்டுவது. இரண்டாம் வாசகத்தில் நிறைவுள்ளவராக இருத்தல் என்பது பிரிவினைகளைக் களைந்துவ வாழ்வது. நற்செய்தி வாசகத்தில் நிறைவுள்ளவராதல் என்பது பகைமையைத் தாண்டுவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய அன்பிலும் சாத்தியமாகிறது.

'நிறைவுள்ளவராதல்' சாத்தியமா? ஏன் நாம் நிறைவுள்ளவராக வேண்டும்? கடவுளைப் போல நிறைவுள்ளவராக முடியுமா? குறைகளோடு நாம் இருந்தால்தான் என்ன? - இப்படி நிறைய கேள்விகள் நம்மில் எழலாம்.

நிறைவுள்ளவராக வேண்டும் என்றால் இன்று நம்மிடமிருக்கும் குறைவு மனப்பான்மை விடுக்க வேண்டும்.

அது என்ன குறைவு மனப்பான்மை?

தன் வீட்டிற்கு வெளியே இருந்த பொற்கிழியில் 99 தங்க நாணயங்கள் இருக்க, 'இன்னும் 1 நாணயம் இருந்தால் 100 நாணயங்கள் ஆகியிருக்குமே' என்ற முல்லாவைப் போல புலம்புவதுதான் 'குறைவு மனப்பான்மை.' குறைவு மனம் அடுத்தவரிடம் மட்டுமல்ல, தன்னிடமே குறையை மட்டும்தான் பார்க்கும்.

'நான் என்னிலேயே நிறைவானவன், நிறைவானவள்' என்ற மனநிலையை முதலில் உருவாக்க வேண்டும். என்னை நிறைவுள்ளவராக்குவது நான் அணியும் ஆடையோ, எனக்கருகில் நிற்பவரோ அல்ல. நான் என்னிலேயே நிறைவானவன். ஆனால், இந்த மனநிலை என்னிடம் மறந்துபோகக் காரணம் என்ன?

மூன்று காரணங்கள்:

அ. என் மீது அன்புகூர மறுப்பது பிறரன்பைப் பற்றிப் பேசுகின்ற முதல் வாசகம் அதன் அடிப்படையான தகுதியாக தன்மேல் ஒருவர் காட்ட வேண்டிய அன்பைக் குறிப்பிடுகிறது. தன்னை அன்பு செய்யாத ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியாது. எனக்கு எது பிடிக்கும்? என்று நான் தெரியாமல் இருந்துகொண்டு, மற்றவருக்குப் பிடிப்பது எது? என்பதை ஆராய்ச்சி செய்ய முடியாது. பல நேரங்களில் தன்அன்பு என்பதை நாம் தன்னலம் என்று தவறாகக் கருதுகிறோம். தன்அன்பு என்பதில்தான் நம்முடைய தன்மதிப்பும், தன்னம்பிக்கையும் அடங்கியுள்ளது.

ஆ. பிரிவினைகளை வளர்ப்பது அடுத்தவரையும் என்னையும் எது இணைக்கிறது என்று பார்ப்பதற்குப் பதிலாக, அடுத்தவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டு இருக்கிறேன் அல்லது உயர்ந்து நிற்கிறேன் என்று பார்த்தது பவுல் காலத்துக் கொரிந்து குழுமம். இந்த மனநிலையில் நான் என்னை மற்றவரோடு ஒப்பீடு செய்வதால் என்னால் அடுத்தவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், ஒப்பீடு விரைவில் பொறாமையாகவும் குறுகிய எண்ணமாகவும் மாறிவிடும்.

இ. மற்றவர்களைப் போல இருக்க நினைப்பது என்னுடைய அன்பை நிர்ணயிக்கும் கடமையை நான் சில நேரங்களில் மற்றவர்களிடம் விட்டுவிடுகிறேன். அவருடைய செயல்கள் என்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்த நான் விட்டுவிடுவதால், அவர் எனக்குத் தலைவராகவும் நான் அடிமையாகவும் மாறிவிடுகிறேன். மாறாக, அவர் எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான இருப்பேன் என்று வரையறை செய்தால் நிறைவு மனநிலை அடைந்துவிடலாம்.

இறுதியாக, மேற்காணும் மூன்று காரணிகளை நான் அகற்றிவிட நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என வாழ்வது. எக்ஸ்ட்ரா கண், காது, புரிதல், நடத்தல் என என் வாழ்வை நானே நீட்டிப்பது. நிறைவு என்பது நிலையான நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது மாறிக்கொண்டே இருப்பது. நிறைவு என்று ஒன்றை நான் அடைந்துவிட்டால் அது இன்னும் வளர ஆரம்பிக்கும். இன்னும் நான் தேட ஆரம்பிப்பேன். அந்தத் தேடுதலில் நானும் உருவாகிக்கொண்டே இருப்பேன். ஏனெனில், உருவாகிக்கொண்டே இருப்பதுதான் நிறைவு. என்னை நானே எனக்குப் போட்டியாக வைத்து நான் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மகிழ்ச்சிக்கான சாவி என்னிடமே இருக்கின்றது. மனிதர்கள் எல்லாவற்றையும்விட மேலானவர்கள். இம்மனிதர்களைக் கைக்கொள்ள நாம் எந்த எதிர்மறை எண்ணத்தையும் விடலாம். ஏனெனில், இவர்கள் கடவுளின் சாயல், கடவுளின் கோவில்.

பதிலுரைப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல (காண். திபா 103), இவர்களில் குடிகொள்ளும் கடவுள், 'இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்'. அப்படியே நாமும் இருப்போம் நிறைவுள்ளவராக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தேவையற்ற வைராக்கியங்களைக் களைவோம். தேவனின் பிள்ளைகளாவோம்!

சகோதரர் இருவருக்கிடையே பயங்கரமான பிரச்சினை. ஒருவர் "நீ எனக்கு அண்ணனே இல்லை " எனவும் மற்றவர் "நீ எனக்கு தம்பியே இல்லை" எனவும் சொல்லிக்கொண்டு பிரிந்து சென்றனர். நாட்கள் கடந்தது. இருவர் வீடுகளிலும் நல்ல நிகழ்வுகளும் துயர நிகழ்வுகளும் நடந்தன. இருவர் வீட்டிலும் உள்ளவர்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. நேரில் பார்க்க நேர்ந்தாலும் முகத்தைப் பார்ப்பதில்லை. பிறரிடம் ஒருவர் மற்றவரைப் பற்றி குறைகூறிக்கொண்டே காலத்தைக் கழித்தனர். ஒருமுறை இளைய சகோதரன் சாலையில் செல்லும் போது சிறிய விபத்துக்குள்ளாக நேர்ந்தது. சாலையில் செல்வோர் அதைக் கவனித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்செய்தி அண்ணனின் காதுக்கு எட்டவே அவர் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதோடல்லாமல் செலவுக்கு பணம் கொடுத்து தன் தம்பியின் அருகிலே இருந்து கவனித்து விட்டு வீட்டிற்கு வந்தார். தம்பி கண்விழித்தவுடன் இச்செய்தி அறிவிக்கப்பட்டது. அவருக்கு மகிழ்ச்சி ஒருபுறம். தன் அண்ணனோடு பகையாக இருந்துவிட்டோமே என்ற மனவருத்தம் மறுபுறம். எங்கே போனது இருவரின் வைராக்கியமும்?

அன்புக்குரியவர்களே இன்றைய மூன்று வாசகங்களுமே நாம் கடவுளின் பிள்ளைகளாக அவர் வாழும் கோவில்களாக தூய வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களாக வாழவே படைக்கப்பட்டுள்ளோம் என்ற கருத்தை மிக ஆழமாக எடுத்துரைப்பதாக உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய நற்செய்தி தேவையற்ற வீணான வைராக்கியங்களையும், பகை உணர்வுகளையும் களைவதே நாம் விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாவதற்குரிய தகுதி என்பதைச் சுட்டிக் காட்டுக்கிறது.

நம் உள்ளத்தில் எழுகின்ற பகை உணர்வுகளே நம் வாழ்வில் ஏற்படும்பல பிரச்சினைகளுக்கு காரணம். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, என் பகைவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற மனநிலை நம்மிலே பலருக்கு உண்டு. இந்த எண்ணம் நம்மை தீமைக்கு மேல் தீமை செய்யத் தூண்டுகிறது. நம் சிந்தனை சொல் செயல் அனைத்தும் தீமையால் நிறையும் போது நமது உடல் மனம் ஆன்மா அனைத்தும் அமைதியை இழக்கிறது. தூய்மையை இழக்கிறது. இவ்வாறு நாம் கடவுளின் ஆலயம் என்ற மேன்மையை இழக்கிறோம்.

மாறாக இயேசு கூறுவதைப் போல பகைவரை அன்பு செய்யவும் சபிப்பவருக்கு ஆசி கூறவும் முயன்றால் நம்மை பகைவராக பிறர் நினைத்தாலும் நமக்கு பகைவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இம்மனநிலை நம்மை அமைதிக்கு இட்டுச்செல்லும்.நம் வாழ்வில் தீமைகள் குறையும். நன்மைகள் நிறையும். நம் வீண் வைராக்கியங்களும் பகை உணர்வுளும் அற்று போகும். நமது இதயம் கடவுளின் ஆலயமாய் மாறும்.

தவக்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இக்காலம் அருளின் காலமாக மாற வேண்டுமென்றால் நமக்கு உண்மையான மனமாற்றம் மிக மிக அவசியம். மனமாற நாம் பகையைத் துறந்தவர்களாக வீண் வைராக்கியங்களை விட்டொழித்தவர்களாக மாற வேண்டும். பிறர் பிழையைப் பொறுக்க வேண்டும்.நிச்சயம் நம் பிழைகளும் மன்னிக்கப்படும். இவை நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றும். முயல்வோமா?

இறைவேண்டல்
அன்பு இறைவா! பகை சூழ்ந்த எம் இதயங்களை மாற்றும். உமது பிள்ளைகளாக வாழும் வரமருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser