மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

மூவொரு கடவுளின் பெருவிழா
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
நீதிமொழிகள் 8:22-32 |உரோமையர் 5:1-5 |யோவான் 16:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களைப் பார்த்து அவர்களுக்கு சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு என்கிறார். அவருக்குப் பின் வரப் போகிறவர் ஒருவர் உண்டு, அவர் பெயர் தூய ஆவியார் என்கிறார். மேலும் தந்தையுடையதெல்லாம் அவருடையதே என்கிறார்.

ஆக, இங்கே நாம் மூவொரு கடவுளைச் சந்திக்கின்றோம். தந்தை, மகன், தூய ஆவியார்.

கடவுளின் ஞானம்தான் கிறிஸ்து (மத். 11:19). புனித பவுலும் இயேசுவைக் கடவுளின் ஞானம் என்று அழைக்கின்றார் (1 கொரி. 1:30).

முதல் வாசகத்தில் வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது. நான் அங்கே இருந்தேன்.... நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்.... (நீ.மொ. 8:27-30) என்று ஞானம் கூறுவதை நாம் படிக்கின்றோம். ஆக, இயேசு என்றும் இறைவனோடு இருப்பவர்.

நமது காலத்தில் மனுவுரு எடுத்தது இந்த ஞானமே, இந்த இயேசுவே. இயேசு மட்டுமல்ல, தூய ஆவியாரும் மீட்புப் பணியிலே, படைப்பிலே பங்கு கொள்கிறார் என்பதைத் திருப்பாடல்கள் நமக்குக் கற்பிக்கின்றன: உமது ஆவியை நீ அனுப்ப அவை படைக்கப்பெறுகின்றன. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் (தி.பா. 104:30).

ஆக, தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் இந்த உலகம் உண்டாகக் காரணமாயிருக்கிறார்கள் என்பது தெளிவு.

படைப்புப் பொருள் ஒவ்வொன்றிலும் மூவொரு தேவனின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்லா உயிர்களும் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் சான்று பகரக் கடமைப் பட்டுள்ளன.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகின்ற எந்த தனி மனிதனும், சமுதாயமும் பிரிவினையைப் பற்றி, பிளவைப் பற்றி, சண்டை, சச்சரவுகள் பற்றி, வைராக்கியம், வர்மம் பற்றி கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் எப்படி நிறைவான உறவில் நிலைத்திருந்து, ஆக்கப் பணியில் ஈடுபடுகிறார்களோ அதேபோல மனிதர்கள் அனைவரும் அருள்நிலையில் வாழ்ந்து அனைவரோடும் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்.

புனித பவுல் கூறுவதுபோல மூவொரு இறைவனின் உண்மைக் குழந்தைகளாக வாழ பரம தந்தை நமது இதயத்திற்குள் அன்பின் ஆவியைப் பொழிந்துள்ளார்.

ஒருவேளை நம்முடைய ஆற்றலால் நாம் மூவொரு தேவனின் முத்தான குழந்தைகளாக வாழ முடியாமல் தவிக்கலாம்! ஆனால் நம்மை நாளும் வழிநடத்தும் ஆவியாரின் அன்புக் கடலில் நமது இதயத்தை, நமது உணர்வுகளை கலக்கவிட்டால் நாம் நீதிக் கடலில், நேர்மைக் கடலில், மகிழ்ச்சிக் கடலில், சமாதானக் கடலில், சமத்துவக் கடலில் சகோதரத்துவக் கடலில், சுதந்திரக் கடலில் சங்கமமாகப் போவது உறுதி.

நீல நிற மை கலந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு. அதற்குள் தண்ணீரை ஊற்றிக் கொண்டேயிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

அங்கே என்ன நிகழும்? ஓர் சங்கமம் நிகழும்.

ஊற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க பாத்திரத்திலிருக்கும் நீரிலுள்ள நீல நிறம் மறைந்து, பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் நிறமற்ற நிலையை அடைவதை நாம் காண்போம்.

இவ்வாறே அன்பே உருவான தேவ ஆவியின் அருளை நாம் நமது இயத்திற்குள் ஊற்ற, ஊற்ற நமது இதயத்தில் நிறமாற்றம் ஏற்பட்டு நமது இதயம் ஆவியாரின் இதயமாக மாறிவிடும். அதாவது நமது குணம் ஆவியாரின் குணமாக மாறிவிடும். குணமே வாழ்வு!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுளுக்கு சமாதானம் பிடிக்கும்

இன்று தந்தை, மகன், தூய ஆவியராய் வாழும் ஒரே கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மூன்றுபேருக்கும் எது பிடிக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்து, நமக்கு எது பிடிக்குமோ அதை மூவொரு கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம்!

நம்மிலே சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்குப் பணம் பிடிக்கும்!
சிலருக்குப் பதவி பிடிக்கும்!
சிலருக்குப் பட்டம் பிடிக்கும்!
சிலருக்குப் பரிசு பிடிக்கும்!
சிலருக்குப் பாதாம்கீர் பிடிக்கும்!
சிலருக்கு ரோஸ்மில்க் பிடிக்கும்!
சிலருக்குப் பழைய பாடல்கள் பிடிக்கும்!
சிலருக்குப் புதிய பாடல்கள் பிடிக்கும்!
மூவொரு கடவுளுக்கு எது பிடிக்கும்? சமாதானம் பிடிக்கும்!
திருப்பாடல் 120:7 இறைவன் விரும்புவது சமாதானமே என்று கூறுகின்றது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேருக்கும் சமாதானம் என்றால் பிடிக்கும்! அதுவும் மகனுக்கு, இயேசுவிற்கு சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்!

சண்டையை சச்சரவை, சமாதானமின்மையை இயேசு ஒருபோதும் விரும்புவதில்லை.

இயேசு எல்லா பாவத்தையும் மன்னித்தார். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அவர் மன்னிக்கத் தயங்கினார்!

யோவான் 8:1-8: பாவத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை இயேசுவின் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். இயேசு அந்தப் பெண்ணை பார்த்து, நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர் என்றார்.

லூக் 19:1-10: சக்கேயு ! அவர் ஒரு தேசத் துரோகி! உரோமையர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்தார்கள்! சக்கேயு -அவர் ஒரு யூதர்! அவர் யூத மக்களிடையே வரி வசூலித்து அதை உரோமையர்களிடம் கொடுத்து அவர்கள் கொடுத்த பணத்தில் பணக்காரராக வாழ்ந்து தனது சொந்த மக்களையே சுரண்டியவர்.

ஆனால் அப்படிப்பட்ட பாவியைக் கூட இயேசு மன்னித்து அவர் வீட்டில் விருந்தாடினார்.

லூக் 23:38-43: சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த திருடன்! அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரன் ! ஆனால் அவன் அவனது குற்றத்தை ஒப்புக்கொண்டபோது அவனை இயேசு மன்னித்து அவனுக்கு விண்ணக வாழ்வை அளித்தார்.

யோவா 21:15-19: தன்னை மூன்று முறை மறுதலித்த பேதுருவை இயேசு மன்னித்தார்.

இப்படிப் பெரும் பாவிகளையெல்லாம் மன்னித்த இயேசு ஒரு சிலரை மட்டும் பார்த்து, என் அருகில் வராதீர் என்றார்! யாரைப் பார்த்து இயேசு அப்படிச் சொன்னார்? யார் மற்றவர்களோடு சமாதானத்தோடு வாழவில்லையோ அவர்களைப் பார்த்து. நீங்கள் காணிக்கை செலுத்த வரும்போது யாராவது உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டு வாழ்வதாக உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையை பீடத்தின் முன்னால் வைத்துவிட்டு யார் உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டுள்ளனரோ அவர்களோடு சமாதானம் செய்துகொண்ட பிறகு வந்து எனக்குக் காணிக்கை செலுத்துங்கள் என்கின்றார் [மத் 5:23-24).

ஆம். இயேசு விரும்புவது சமாதானமே! இயேசுவுக்குச் சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்! இயேசு பிறந்தபோது விண்ணவர், உலகில் அவருக்கு (கடவுளுக்கு) உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தனர்.

அவர் உயிர்த்த போது சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார் இயேசு. இன்று நமக்குள் எத்தனைச் சண்டை சச்சரவுகள் ! பல சமயங்களிலே நாம் சமாதானத்தோடு வாழ விரும்பினாலும் நம்மால் வாழ முடிவதில்லை ! என்ன செய்யலாம்? உலகம் தராத சமாதானத்தை உங்களுக்கு நான் தருகின்றேன் என்ற இயேசுவிடம் சமாதானத்தை இன்று வரமாகக் கேட்போம்.

இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
மூவொரு இறைவா, எங்களுக்கு உங்களது சமாதானத்தைத் தந்தருளும்! ஆமென்.

மேலும் அறிவோம் :

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்(று) உலகு (குறள் : 874).

பொருள்:
பகைமை பாராட்டுபவரையும் நண்பராகக் கருதிப் பழகும் பெருந்தகையின் பண்புச் சிறப்பை இவ்வுலகம் போற்றிப் பாராட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் பக்தியற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கடவுள் பக்தியுள்ள ஒரு விவசாயிடம், "நீங்கள் கடவுளை நம்புவதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். இக்கேள்விக்கு விவசாயி கொடுத்த பதில்: "நான் மேய்த்துக் கொண்டிருக்கும் இம்மாட்டின் நிறம் கருப்பு: அது மேய்கின்ற புல்லின் நிறம் பச்சை; அது கொடுக்கின்ற பாலின் நிறம் வெள்ளை, கருப்புநிறப் பசு பச்சை நிறப்புல்லைத் தின்று, வெள்ளை நிறப்பாலைக் கொடுக்கிறது. இது போதாதா கடவுளை நம்புவதற்கு? பேராசிரியர் விவசாயின் பதிலைக் கேட்டு வியப்படைந்தார்.

இயற்கை இருக்கும் வரை எவரும் இறைவனை மறுக்க இயலாது. வானகமும் வையகமும் அவருடைய மாட்சிமையால் நிறைந்துள்ளன. தாயின்றிச் சேயில்லை, படைத்தவரின்றிப் படைப்பு இல்லை, வானம், நிலா. விண்மீன்கள் அனைத்தும் கடவுளுடைய கைவேலைப்பாடு என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 8).

கடவுள் ஒருவர் இருப்பதைப் பகுத்தறிவால் அறியமுடியும். ஆனால் ஒரே கடவுள் மூன்று ஆள்களாக (தந்தை-மகன் ஆவி) இருப்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு தேவை. மூவொரு கடவுளைப் பற்றிக் கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

"தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27). "நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்; இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்" (யோவா 16:28). "என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்" (யோவா 14:26). "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:20). எனவே, கிறிஸ்துவே மூவொரு கடவுளைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளதால், நாம் அதை நம்பிக்கையின் மறையுண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? கடவுள் தந்தையாக இருந்து நம்மை அன்பு செய்து. நம்மைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறார். கடவுள் மகனாக, வார்த்தையாக இருந்து நம்மோடு பேசி, நமக்காகத் தன் உயிரையே பலியாக்கி, நம்மைப் பாவத் தளையிலிருந்து விடுவித்து நம் மீட்பராகத் திகழ்கிறார். கடவுள் ஆவியாராக இருந்து நம்மைப் புனிதப்படுத்தி நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்; நிறையுண்மையை நோக்கி வழிநடத்துகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளது அன்பு தூய ஆவியின் வழியாக நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் திருத்தூதர் பவுல் (உரோ 5:5). தந்தையாகிய கடவுள் தமது அருளன்பை நம்மீது என்றும் பொழிந்து கொண்டேயுள்ளார். வானம் பொய்த்தாலும் கடவுளுடைய அன்பு ஒருபோதும் பொய்க்காது.

இவ்வுலகில் மிகவும் நெருக்கமான அன்பாகக் கருதப்படும் காதல் கூட மாறிவிடுகிறது. ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். பிறகு அவளைக் கைவிட்டுவிட்டு அவளின் தங்கையைக் காதலித்தான், மூத்தபெண் அவனிடம் ஏன் அவன் அவ்வாறு செய்தான் என்று கேட்டதற்கு அவன் கூறியபதில்: "உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன். உன் தங்கையைப் பார்த்த போது உன்னை மறந்தேன்". மனித அன்பு மாறக் கூடியது.

ஆனால், கடவுளன்பு ஒருபோதும் மாறாது, மறையாது. குன்றாது. குறையாது. "மலைகள் நிலை சாயினும், குன்றுகள் இடம் பெயரினும். உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10). கடவுள் நம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; நம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். அவர் நாம் வெளியே போகும் போதும் உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் நம்மைக் காத்தருள்வார். (திபா 121).

இன்றைய முதல் வாசகம் ஞானத்தை ஓர் ஆளாக உருவகப்படுத்துகிறது (நீமொ 8:22-31). "கிறிஸ்துவே கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்" (1 கொரி 1:24). ஞானம் இருவகைப்படும்: ஒன்று பசு ஞானம்; மற்றொன்று பதி ஞானம். பசுஞானம் மண்ணைச் சார்ந்தது; பதிஞானம் விண்ணைச் சார்ந்தது. முன்னது வளர்ந்து கொண்டே போகிறது, பின்னது தேய்ந்து கொண்டே போகிறது. விஞ்ஞானம் வளர்கிறது. விசுவாசம் தேய்கிறது. "இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாக உள்ளது" (1 கொரி 3:19).

கடவுள் தரும் விண்ணக ஞானம் இம்மண்ணக நலன்களை வெறுக்கச் சொல்லவில்லை; மாறாக இம்மண்ணக நலன்களை விண்ணக நலன்களோடு தொடர்புபடுத்துகிறது. உலகம் இருப்பது நமக்காக; நாம் இருப்பது கிறிஸ்துவுக்காக; கிறிஸ்து இருப்பது கடவுளுக்காக (1 கொரி 3:21-23) இப்படி முறை நிலையக் காண்பது தான் உண்மையான ஞானம். விண்ணகத்தை மண்ணகத்தோடு இணைத்தவர்தான் கிறிஸ்து, இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, கிறிஸ்துவே மனித வரலாற்றின் இறுதிக் குறிக்கோள்; அவரே மனித குலத்தின் மையம் (இன்றைய உலகில் திருச்சபை, எண் 45) கிறிஸ்துவைக் கடவுளின் ஞானமாக ஏற்று அவர் காட்டிய அன்பு நெறியில் நடப்போமாக.

தூய ஆவி நம்மைப் புதுப்பிக்கிறார், "உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படும். மண்ணகத்தில் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் (திபா 104:30), உலர்ந்து போன எலும்புகளுக்கு உயிர் கொடுத்து வாழ வைப்பவர் தூய ஆவியார் (காண். எசே 37:1-14). எந்நிலையிலும் மனவிரக்தி அடையாது தூய ஆவியாரின் துணை கொண்டு வாழ்க்கைச் சவால்களை மனஉறுதியுடன் சமாளிப்போம்.

மூவொரு கடவுளிடையே ஆள்வகையில் தனித்தன்மை நிலவினாலும், கடவுள் தன்மையில் அவர்களிடையே சமத்துவம் நிலவுகிறது. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்; "தந்தையுடையவை யாவும் என்னுடையவையே" (யோவா 16:15). தந்தை மகனை மகிமைப்படுத்துகிறார்; மகனோ தந்தையையும் , ஆவியானவரோ மகனையும் மகிமைப் படுத்துக்கின்றனர். மூவொரு கடவுளிடையே நிலவும் அன்புறவைப் பின்பற்றி, மற்றவரின் தனித்தன்மையை மதித்து பன்மையில் ஒருமையை நிலைநாட்டுவோம்.

திருப்பலியின் உச்சக்கட்டமாகி “ இறுதிப்புகழுரையில்” தந்தையாகிய கடவுளுக்கு, கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஒன்றிப்பில் மகிமை செலுத்துகின்றோம். இதுதான் இறைஅஞ்சலி, நிறைஅஞ்சலி மூவொரு கடவுளை அறிக்கையிடும் இப்புகழுரையை குரு மட்டுமே முன்மொழிய, மக்கள் 'ஆமென்' என்று கூறி வழிமொழிகின்றனர். எனவே இப்புகழுரையை அனைவரும் சேர்ந்து பாடுவதும்,

அல்லது இப்புகழுரைக்குப்பின் வேறொரு புகழுரையைப் பாடுவதும் ஒரு முறைகேடான செயலாகும் என்பதை அறிந்திருப்பது நல்லது. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாகுக (திவெ 1:8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சூரியன் ஒளிர்வது எதற்காக?

கற்றது ஒரு துளியளவு. கல்லாதது பெருங்கடலளவு. அறிவியல் ஞானி ஐசக் நியூட்டன் சொல்வாராம்: “எனக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்படாத உண்மைகள் சமுத்திரம் போல் இருக்கின்றன. நானோ கடற்கரை அருகில் சில கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்".

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை மனதில் எழுப்பி ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையில் நடந்து பெற்ற தூய அகுஸ்தினாரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. சிறுவன் ஒருவன் கடல் கிளிஞ்சலைக் கொண்டு கடல்நீரை அள்ளி சிறுகுழி ஒன்றில் ஊற்றிக் கொண்டிருந்தான். என்ன செய்கிறாய்? என்று கேட்ட போது அவன் சொன்னான்: "இந்த கடல் நீர் முழுவதையும் இந்தச் சிறு குழிக்குள் ஊற்றப் போகிறேன்”, இதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே "இது முடிகிற காரியமா? கடல் எவ்வளவு பெரியது. இந்தக் கிளிஞ்சல் எவ்வளவு சிறியது. கடலின் கொள்ளளவு என்ன, இந்தக் குழியின் கொள்ளளவு என்ன?" என்று கேள்விக்குமேல் கேள்வியாக அடுக்க அந்தச் சிறுவன் உருவில் தோன்றிய வானவர் அகுஸ்தினாரிடம் சொன்னார்: "ஒருக்கால் இந்தச் சிறிய கிளிஞ்சலைக் கொண்டு இவ்வளவு கடல்நீரையும் சிறுகுழியில் நிரப்பினாலும் உம் அற்ப சொற்ப அறிவைக் கொண்டு மூவொரு கடவுளை முழுமையாக அறிந்து உணர முடியாது”. சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்த கதை அனைவரும் அறிந்ததே.

மூவொரு கடவுள் என்ற கோட்பாடு புரியாத புதிராகத் தோன்றினாலும், நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையான, ஆழமான பொருள் செறிந்த உண்மைகளில் முதன்மையானது.

தந்தை மகன் தூய ஆவி - மீட்புத் திட்டத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் இணைந்து செயல்படுகிறார்கள். ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை என்பது மூவரிடமும் விளங்கிய அன்புறவை, தனித்துவத்தை, சமத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஒரே மரத்தினைப் பகுத்துப் பார்த்தால் அதில் வேர், தண்டு, கனி என்ற கூறுகள் உண்டு ஆனால் மரம் என்று கூறும் போது வேர், தண்டு, கனி அனைத்தையும் சேர்த்துத்தான் மரம் என்கிறோம்.

சூரியன்-அதன் கதிர் - அதன் வெப்பம் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சூரியன் என்று கூறுகிறோம், உணர்கிறோம். தந்தை, மகன், ஆவி இவர்கள் மூன்று ஆளாக இருந்தாலும் ஒரே இறைவன் தான். சூரியனின் இயக்கத்தைப் புரிந்து கொண்டாலும் கூட, மூவொரு கடவுள் என்ற மறைபொருளைப் புரிந்து கொள்வது கடினம்தான். அதனால்தான் “கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?” (யோபு 11:7) என்று வியந்து நிற்கிறார் யோபு.

சூரியன் ஒளிர்வது எதற்காக? தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவா? அல்ல. மாறாக அதன் ஒளியில் நாம் மற்ற பொருட்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவன்றோ! மூவொரு கடவுள் சூரியனைப் போலத்தான். தான் மூன்று ஆட்களாய் இருப்பதை வெளிப்படுத்தியது எதற்காக? அவர் எப்படி மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதை ஆராய்வதற்காக அல்ல. நடுவானில் சுடரும் சூரியனைக் கண்களால் காண முடியுமா? மூவொரு கடவுளின் மறையுண்மையை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது. எனவே இறைவனின் இவ்வொளியில் மனிதன் தன் வாழ்வை ஆராய வேண்டும்.

ஒருமையில் பன்மை, ஒற்றுமையில் வேற்றுமை, தனித்துவத்தில் சமத்துவம். இதுதானே மூவொரு கடவுளின் வெளிப்பாடு. இது எப்படி இயலும் என்று சிந்திப்பதை விடுத்து இவ்விழா தருகின்ற செய்தி என்ன, அதுவிடுக்கும் அழைப்பு என்ன என்று தேர்ந்து தெளிந்து செயல்படுவதே சிறப்பானது, அறிவார்ந்தது.

மூவொரு கடவுள் பற்றிய வெளிப்பாடு வெறும் கோட்பாடு அல்ல. அது அன்புறவில் எழும் தெய்வீக வாழ்க்கை முறை. ஓர் அறையில் மூன்று மெழுகுதிரிகள் தனித்தனியாக எரிந்தாலும், அவற்றின் ஒளியைப் பிரித்துப் பார்க்க முடியுமா? ஒரே ஒளியைத்தான் கொடுக்கின்றன. அதேபோல் மூன்று ஆட்களாக இருந்தாலும் இறைத்தன்மை ஒன்றுதான்.

தனித்துவம் மதித்துச் சமத்துவம் வளர்க்க வேண்டிய உறவுகள் எப்படியெல்லாம் சீரழித்து கிடக்கின்றன. சீராக்கின் ஞானம் சொல்கிறது: “என் மனத்துக்குப் பிடித்தமானவை மூன்று. அவை ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. அவை:
1.உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை.
2. அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு.
3. தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவர் மனைவியர்” (சீராக்.25:1)

மூவொரு கடவுள் என்ற பேருண்மை இதயம் தொடர்பானது. மூளைதொடர்பானதல்ல. மூவொரு கடவுளை நினைந்து சிலுவை அடையாளம் வரையுங்கள். இதயம் மூளை தொடர்பான கோளாறுகள் நீங்கும். தூய்மைபெறும்.

எல்லா செபங்களிலும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அதிகமாக நினைவு கூறும் மூவொரு கடவுள் மறையுண்மையும் சிலுவை அடையாளமும் நாம் எத்தகைய மனநிலையோடு வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

தந்தை என்று சொல்லி நம் நெற்றியில் கைவைக்கிறோம். நெற்றி என்பது நமது மூளையின் இருப்பையும் செயல்பாட்டையும் கொண்ட இடம். எனவே தந்தையாகிய இறைவனிடம் நமது மூளை எண்ணங்கள், சிந்தனைகள், மனக்காயங்கள் முதலியவற்றை முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

மகன் என்று சொல்லி நமது நெஞ்சில் கைவைக்கிறோம், இதயம், அது தொடர்பான அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, பழி வாங்கும் உணர்வு முதலியவற்றை ஆண்டவர் இயேசுவிடம் முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

தூய ஆவி என்று சொல்லி நம் தோள் பட்டைகளில் நம் கையை வைக்கிறோம். தோள்பட்டை உடல்வலிமையின் அடையாளம். எனவே தூய ஆவியிடம் நமது உடல், அதன் வலிமை, ஆற்றல் பலம், பலகீனம், திறமைகள், நோய்கள் அனைத்தையும் முழுமையாக ஒப்புக் கொடுத்து வாழ அழைக்கப்படுகிறோம்.

இவ்வாறு நமது மனம், இதயம், உடல் மூன்றையும் மூவொரு கடவுளிடம் ஒப்புக் கொடுத்து அவரது ஆற்றலாலும் சக்தியாலும் வல்லமையாலும் நம்மை நிரப்பிக் கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பேரன்பைப் பொழியும் கடவுள்!

பெயருக்குக்கேற்ற இளைஞன்:
தனது கணவர் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டி தனியாகத்தான் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையானாள்.

இந்நிலையில் அவளைக் கவனிக்க யாருமே இல்லை என்பதை அறிந்த, அதே பகுதியில் வசித்து வந்த அன்பு என்ற இளைஞன் மருத்துவரை அவளிடம் அழைத்து வந்து, அவளுக்குச் சிகிச்சை அளித்தான். தவிர, அவளுக்கு அருகிலேயே இருந்து, வேண்டிய உதவிகளைச் செய்தான்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, அவனுடைய வீட்டில் இருந்தவர்களும், அவனுக்கு அறிமுகமானவர்களும் அவனிடம், “மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை, உனக்கு மட்டும் ஏன்?” என்று கேட்டதற்கு, அவன் தன் கண்களில் ஒளி மின்ன, “கடவுள் என்மீது பேரன்பு காட்டுகின்றார். அதில் பாதியாவது இந்த மூதாட்டியிடம் காட்ட வேண்டாமா?” என்றான்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் அன்பு பெயருக்கேற்றாற்போல் அன்பாய் இருந்தான். அவன் காட்டிய அன்பினால் மூதாட்டி விரைவில் நலம்பெற்றாள். இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு கடவுள் அன்பிற்கு இலக்கணமாக இருக்கின்றார். நாம் எப்படி மூவொரு கடவுளைப் போன்று அன்பிற்கு இலக்கணமாக இருப்பது என்று சிந்திப்போம்.

அன்பைப் பொழியும் கடவுள்
இறையடியார் ஒருவரிடம் இளைஞன் ஒருவன், “மூவொரு கடவுளைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!” என்று சொன்னதற்கு அவர், அவனிடம், “ஒரு புழுவினால் மனிதனைப் புரிந்துகொள்ள முடியுமென்றால், உன்னால் மூவொரு கடவுளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார். அந்த இளைஞன் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டான்.

மூவொரு கடவுளை விளக்குவதற்குப் பலரும் பலவிதமான உருவகங்களைப் பயன்படுத்தினாலும், அவையெல்லாம் முழுமையில்லாத விளக்கங்களாக இருக்கின்றன. ஏனெனில், மூவொரு கடவுள் ஒரு மறைபொருள். அவரைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வதற்குப் பதில், அன்பு செய்வதே தலைசிறந்தது. மூவொரு கடவுளை அன்பிற்கு இலக்கணம் என்றால் அதில் மிகையில்லை. காரணம், அன்பிற்கு அன்பு செலுத்துபவர், அன்பைப் பெறுகின்றவர், அவர்கள் நடுவில் இருக்கும் அன்பு என மூவர் தேவைப்படுகின்றனர். இங்கு அன்பு செலுத்துபவரைக் கடவுள் எனவும், அன்பைப் பெறுகின்றவர் இயேசு எனவும் கொண்டால், அவர்கள் நடுவில் இருக்கும் அன்பைத் தூய ஆவியார் எனக் கொள்ளலாம். இதனால்தான் திருத்தூதர் புனித யோவான், “கடவுள் அன்பாய் இருக்கின்றார்” (1 யோவா 4:8) என்கிறார்.

மூவொரு கடவுள் அன்பாய் இருப்பதால், தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் ஒருவர் மற்றவரை மாட்சிப்படுத்துகின்றனர். முதலில், இயேசு தந்தை தன்னிடம் ஒப்படைத்த செயல்களைச் செய்து முடித்ததன் மூலம் அவரை மாட்சிப் படுத்தினார் (யோவா 17:4) அடுத்ததாக, கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்துகின்றார் (யோவா 12:28). நிறைவாகத் தூய ஆவியார் இயேசுவை மாட்சிப்படுத்துகின்றார். இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கக்கேட்ட, “..... அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்” என்ற வார்த்தைகளிலிருந்து இதை அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு தந்தை மகன், தூய ஆவியார் ஒருவர் மற்றவரை மாட்சிப்படுத்துவது அவரிடம் இருக்கும் அன்பையும், ஒற்றுமையையும் காட்டுகின்றது. இப்படித் தந்தை, மகன், தூய ஆவியார் ஒருவர் மற்றவரை அன்பு செய்வது மட்டுமல்லாது, அந்த அன்பை நம் உள்ளங்களிலும் பொழிகிறார்கள். அதை இரண்டாம் வாசகத்த்தின் இறுதியில் வருகின்ற, “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது” என்ற வார்த்தைகளின்மூலம் அறிந்துகொள்ளலாம். ஆதலால், மூவொரு கடவுள் அல்லது தந்தையாம் கடவுள் கடவுள் நம்மீது அன்பைப் பொழிபவர் என்று சொல்லலாம்.

ஒப்புரவாக்கும் இயேசு:
கடவுளோடு நல்லுறவில் இருந்த மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையால் அவ்வுறவை முறித்துக்கொண்டான். இவ்வாறு முறிந்துபோன உறவு என்றும் தொடரவேண்டும் எனக் கடவுள் விரும்பவில்லை. மாறாக, அவர் மீண்டுமாக மனிதரோடு நல்லுறவு கொள்ள விரும்பினார். ஆதலால் அவர் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் கடவுளோடு மனிதரை ஒப்புரவாக்கினார் (உரோ 5:10; 2 கொரி 5:18). இதைத்தான் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நாம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்” வாசிக்கின்றோம்.

இதில் இன்னொரு முக்கியமான செய்தி என்னவெனில், இயேசு கடவுளையும் மனிதரையும் ஒப்புரவாக்கியது மட்டுமல்லாது, யூதர், பினவினத்தார் எனப் பிரிந்து கிடந்தவர்களையும் சிலுவையின் வழியாக ஒப்புரவாக்கினார் (எபே 2:16). இத்தகைய ஒப்புரவுப் பணியை இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போல இயேசு, மகிழ்ந்து செயலாற்றினார். எனவே, மூவொரு கடவுளில் மகனாம் இயேசுவை ஒப்புரவை அல்லது நல்லுறவை ஏற்படுத்துகின்றவர் என்று சொல்லலாம்.

வழிநடத்தும் தூய ஆவியார்
தந்தையாம் கடவுள் நம்மீது அன்பைப் பொழிகிறவர் என்றால், மகனாம் இயேசு நம்மைக் கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாக்குகின்றவர் என்றால், தூய ஆவியார் (முழு உண்மையை நோக்கி) வழி நடத்துகின்றவர் என்று சொல்லலாம்.

இன்றைக்குத் தங்களை ‘வழிகாட்டிகள்’ என்று சொல்லிக்கொள்ளும் பலர் மற்றவருக்கு நல்வழி காட்டாமல் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றார்கள். ஆங்கிலத்தில் Daddy’s Footprints என்றொரு பிரபலமான கவிதை உண்டு. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இக்கவிதை ஒரு மகன் தந்தையிடம் பேசுவது மாதிரி உள்ளது.

“அப்பா! கொஞ்சம் மெதுவாக நடங்கள். உங்கள் காலடிகளைப் பின்தொடர்ந்து வரும் நான் உங்கள் வேகத்திற்கு நடக்க முடியவில்லை! சில சமயங்களில் நீங்கள் என்னுடைய பார்வையை விட்டு மறைந்துபோய் விடுகின்றீர்கள். நீங்கள்தான் என்னுடைய உலகம் என்று வாழும் நான் வளர்ந்து பெரியவனாகும்போது வழிதவறிப் போய்விடக் கூடாது. மேலும் எனக்குப் பிறக்கும் மகன் நிச்சயம் என்னைப் பார்த்து வளர்வான். அப்போது வழிதவறிப் போன என்னைப் பார்த்து வளரும் அவன் இன்னும் வழிதவறிப் போவான். அதனால் மெதுவாக நடங்கள்” என்று அந்தக் கவிதை முடியும்.

வழிநடத்துகிறவர்களின் பணி (அது பெற்றோராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், தலைவராக இருக்கலாம்) எத்துணை முக்கியமானது என்பதை இந்தக் கவிதை நமக்கு உணர்த்துகின்றது இயேசு தூய ஆவியாரைக் குறித்துக் கூறும்போது, “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” என்கிறார். இங்கே முழு உண்மை என்பது கடவுளே. ஆகவே, தூய ஆவியார் நம்மைக் கடவுளை நோக்கி வழிநடத்துவார் என்று சொல்லலாம்.

இப்படித் தந்தையாம் கடவுள் நம்மீது அன்பைப் பொழிபவராகவும், மகன் இயேசு ஒப்புரவாக்குபவராகவும், தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவராகவும் இருக்கின்றார் எனில், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பைப் பொழிபவர்களாகவும், ஒப்புரவாக்குபவராகவும், முழு உண்மையை நோக்கி வழி நடத்திச் செல்பவர்களாகவும் இருக்கவேண்டும். இத்தகைய பணிகளை நாம் செய்யும்போது மூவொரு கடவுளின் பணிகளைத் தொடர்ந்து செய்பவர்களாவோம். அப்போது அன்பான கடவுள் நமக்கு எல்லா ஆசிகளையும் வழங்குவார்.

சிந்தனைக்கு:
‘அன்பு ஆன்மாவின் அழகு’ என்பார் புனித அகுஸ்தின். எனவே, அன்பிற்கு இலக்கணமாய், அன்பாய் இருக்கும் மூவொரு கடவுளின் விழாவில் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, ஆன்மாவிற்கு அழகு சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களைச் சந்திக்கும்போது, 'எப்படி இருக்குற?' என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், 'ஏன் இருக்குற?' என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். 'தண்ணீர் உருவாவது எப்படி?' என்று கேட்டால், 'ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது' என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, 'தண்ணீர் ஏன் உருவாகிறது?' என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் மற்றும் இயற்பியல்சார் உலகில், 'எப்படி?' என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, 'ஏன்?' என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, 'ஏன்?' என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, 'எப்படி?' என்ற கேள்விக்கு விடையில்லை. 'ஏன் விண்ணேற்றம்?' என்று கேட்கலாம். 'எப்படி விண்ணேற்றம்?' என்று கேட்க முடியாது. 'ஏன் நற்கருணை?' என்று கேட்கலாம். 'எப்படி நற்கருணை?' என்று கேட்க முடியாது. 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம். 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'இவ்வாறு உண்மையான, நிலையான கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும் மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்' என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், 'ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?' என்று கேட்டார்.

'வாட் டஸ் இட் மேட்டர்?' என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

'தந்தை-மகன்-தூய ஆவியார்' என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல. இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், 'மூவொரு இறைவன்' என்பது 'கடவுளைப் புரிந்துகொள்வதற்கான' ஓர் 'ஒர்க்கிங் மாடல்.' அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை 'ஒர்க்கிங் மாடல்' என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த 'மாடலை' வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது 'மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்' எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்பதை விடுத்து, 'ஏன் இறைவன்?' அல்லது 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?
நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம். 'என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்' என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை. விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்து, இருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்வதண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு. கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும் 'கடவுள் என்றால் இது அல்லது இவர்' என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை நம் கேள்விகள் அல்ல. வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியல் இடுகிறது: (அ) இணைச்சார்புநிலை, (ஆ) இணைவுநிலை, மற்றும் (இ) உள்முகப்பார்வை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) 'ஞானம் என்னும் பெண்' தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல. உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், 'ஏற்புடையவராதல்' என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, 'நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்' (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளக்கும் நமக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமதிருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறது. வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை?
அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்புநிலைக்கு
இன்று நம் உறவுகள் - குடும்பம், சமூகம் - சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு
பாவத்தால் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்று நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு
நாம் அனைவரும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, 'தத்வமசி' என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை நான் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல. நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ஏன் கடவுள்? என்ற கேள்வியிலிருந்து என் கடவுள் யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"மூவொரு இறைவனின் அருளைப் பெறுவோமா?!

இணைந்து இருப்பதில் தான் இனிமை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் இணைந்து இறைவனிடம் பிறரோடும் நம்மோடும் வாழ்வதில்தான் உண்மையான வாழ்வின் இனிமை இருக்கின்றது. ஏனெனில் திராட்சைச் செடியோடு இணைந்துள்ள கொடிதான் முழுமையான பலனை கொடுக்க முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் இணைந்து வாழ்வதில் இனிமையைக் காண முயற்சி செய்வோம்.

கத்தோலிக்கத் திருஅவையில் மிகப்பெரிய நம்பிக்கை மூவொரு இறைவனின் மறைபொருள் மீது கொண்டிருக்கும் அளவுகடந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கை கத்தோலிக்கத் திருஅவையின் அடித்தளமாகவும் ஆணிவேராகவும் இருக்கின்றது. நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் அனைத்து திருவழிபாட்டு கொண்டாட்டங்களும் மூவொரு இறைவன் வைத்தே தொடங்கப்படுகிறது. மூவொரு இறைவனை வைத்தே நிறைவு பெறுகின்றது என்பதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்.

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்தான் ஒவ்வொரு கட்டளையை கிறிஸ்தவரின் வாழ்வும் தொடங்குகிறது. வாழ்வு முடிவு பெறுவதும் இதில்தான். மனித அறிவை தாண்டி மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாக இருப்பது மூவொரு இறைவன் மீது கொண்ட நம்பிக்கை. மூவொரு இறைவன் ஒரே திருவுளம் கொண்டவர்களாகவும் ஒரே மனநிலை கொண்டவர்களாகவும் ஒரே ஒன்றிப்பு கொண்டவர்களாகவும் ஒரே வல்லமை கொண்டவர்களாகவும் ஒரே தன்மை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். உடம்பிலிருந்து ஒரு மனிதனுடைய இதயத்தை இவ்வாறு பிரிக்க முடியாதோ, அதேபோல மூவொரு இறைவன் ஒருவர் மற்றவரிடம் இருந்து பிரிக்க முடியாது. இதுதான் நமது திருஅவையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் வழியாகத்தான் நாம் உயிருள்ள கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்.

மூவொரு இறைவன் நம் ஒவ்வொருவரையும் கண்ணின் கண்மணி போல வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தந்தையான கடவுள் உலகைப் படைக்கிறார். மகன் இயேசு அதனை மீட்கிறார். தூய ஆவி அதனை புனிதப்படுத்தும் பணி செய்கிறார். இவ்வாறாக மூவரும் ஒரே ஆள் தன்மையோடு மக்களின் மீட்பு பணியை செய்வதை பார்க்கிறோம்.

எனவே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் மூவொரு இறைவனின் தெய்வீக தன்மையில் பங்குகொள்ள அழைக்கப்படுகிறோம். ஒரு இறைவன் வெளிப்படுத்துகின்ற அன்புறவில் அகமகிழ நாம் அழைக்கப்படுகிறோம். ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை என் உறுதியான நம்பிக்கை என்மீது வாழ்வைக் கட்டி எழுப்பும் போது நம்முடைய வாழ்வில் மகிழ்வும் நிறைவும் கிடைக்கிறது.

நாம் வாழும் இவ்வுலகத்தில் சாதி, மொழி, கலாச்சாரம் என பல்வேறு பிரிவுகளை சந்தித்து ஒற்றுமை இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். எனவே அவற்றையெல்லாம் களைந்துவிட்டு மூவொரு இறைவன் வெளிப்படுத்தும் நம்பிக்கையை நமதாக்குவோம். அன்பு உறவிலும் ஒற்றுமையிலும் இணைந்திருத்தலிலும் மகிழ்ச்சியிலும் இனிமை காண முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக இந்த உலக வாழ்விலே நிறைவை காணமுடியும். நிறைவாழ்வை நோக்கி பயணித்து மீட்பின் கனியை சுவைக்க முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! மூவொரு இறைவனாகிய நீர் எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து திடப்படுத்த வேண்டுமாய் செபிகின்றோம். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு