மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருக்காட்சித் திருவிழா
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60: 1-6|எபேசியர் 3: 2-3ஆ, 5-6|மத்தேயு 2:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஆண்டவரின்‌ திருக்காட்சிப்‌ பெருவிழா

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும்‌ சொந்தமல்ல. அவர்‌ எல்லார்க்கும்‌ சொந்தமானவர்‌ என்பதைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறது இன்றையப்‌ பெருவிழா.

எட்டுத்‌ திக்கு மக்களும்‌ இறைவனின்‌ மக்களே என்பதைச்‌ சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத்‌. 2:1) மூன்று ஞானிகள்‌ புறப்பட்டு இயேசுவைக்‌ காணச்‌ "சென்றார்கள்‌ என்று திருவிவிலியம்‌ கூறுகிறது.

இயேசு எல்லார்க்கும்‌ மகிழ்ச்சியூட்டும்‌ நற்செய்தியைக்‌ கொண்டு வந்தவர்‌. இதனால்தான்‌ அவர்‌ பிறந்தபோது விண்ணகத்‌ தூதர்‌ பேரணி, உன்னதத்தில்‌ கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!

உலகில்‌ அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக்‌. 2:13-14) எனக்‌ கடவுளைப்‌ புகழ்ந்தது! ஆம்‌. இயேசு நன்மனம்‌ படைத்த அனைவருக்கும்‌ சொந்தமானவர்‌.

அவர்‌ வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும்‌ அவர்‌ புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌, நான்‌ உங்களுக்கு இளைப்பாறுதல்‌ தருவேன்‌ (மத்‌. 11:28) என்றார்‌.

அவர்‌ சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும்‌ (லூக்‌. 23:84அ) எனச்‌ சொல்லி பாவிகள்‌ எல்லாருக்காகவும்‌ செபித்தார்‌.

இன்றும்‌ கேட்பவர்கள்‌ அனைவருக்கும்‌ தூய ஆவியைத்‌ தந்து (லூக்‌. 11:9-13) அருங்கொடைகள்‌ அனைத்திற்கும்‌ ஆதி காரணமாக விளங்கி வருகிறார்‌.

நமது ஆண்டவர்‌ அனைவரையும்‌ அன்பு செய்யும்‌ ஆண்டவராக விளங்குவதால்‌, நாம்‌ எந்த வேற்றுமையும்‌ பாராட்டாது அனைவருக்கும்‌ அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும்‌. பிற இனத்தாரும்‌ நமது பங்காளிகளே என்கிறார்‌ புனித பவுல்‌ (எபே. 3:6).

ஒளிவீசும்‌ ஞாயிறைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

குளிர்‌ சிந்தும்‌ திங்களைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

ஆடி வரும்‌ தென்றலைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஓடி வரும்‌ அருவியைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

மலர்‌, மணம்‌, தேன்‌, சுவை, கடல்‌, கரை இவை யாவும்‌ வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம்‌ மட்டும்‌ ஏன்‌ வேற்றுமை பாராட்ட வேண்டும்‌? நாம்‌ இயற்கையின்‌ மணி மகுடமல்லவா?

அன்று ஒளியாய்ப்‌ பிறந்து (எசா. 6:1) ஞானஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி "ஈர்த்தார்‌ இயேசு! வந்தவர்‌ அனைவரும்‌ அவரைக்‌ கண்டு அவரிடமிருந்து அமைதியும்‌, மகிழ்ச்சியும்‌, நம்பிக்கையும்‌ பெற்று வீடு திரும்பினர்‌! அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம்‌ மற்றவர்களை நம்பால்‌ ஈர்க்கும்‌, வாழ்வளிக்கும்‌ ஒளி விளக்காகத்‌ திகழ வேண்டும்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறைவா, எங்களுக்குப் போதுமான ஞானத்தைத் தாரும்!

சாதாரணமாக நம் வாழ்க்கையை இருள்மயமாக்குவது மூன்று வித நோய்கள் : உடல் நோய், உள்ள நோய், மரண நோய்.

எல்லா நோய்களிலிருந்தும் நமக்கு விடுதலையை அளித்து நமக்கு ஒளிமயமான வாழ்வை வழங்க நம் நடுவே இயேசு உலகின் ஒளியாகப் பிறந்திருக்கின்றார் (நற்செய்தி).

மத் 9:27-31: அங்கே பிறவியிலிருந்தே கண் தெரியாத இருவரைச் சந்திக்கின்றோம். பார்வையுள்ளோருக்கு 12 மணி நேரம்தான் இரவு; பார்வையற்றவர்களுக்கோ 24 மணிநேரமும் இரவு! பாவம்! அவர்கள் பகலைப் பார்த்ததே இல்லை! ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ இராகங்கள் ; அவர்கள் இதயச் சுரங்கத்திற்குள்ளே எத்தனையோ ஆசைகள். அந்த ஆசைகளுக்குள்ளே ஒன்று இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை! அவர்களை இயேசு தொடுகின்றார் ; அவர்களது கண்கள் திறக்கப்படுகின்றன : அவர்களது வாழ்க்கையிலே ஒளி பிறக்கின்றது.

லூக் 7:36-50 : அங்கே அவள் வாழ்க்கையிலே இருள் - உள்ளத்திலே இருள்! மின்னியதையெல்லாம் பொன்னென்று நினைத்தவள் அவள் ; வெளுத்ததையெல்லாம் பாலென்று நினைத்தவள் அவள் ; நிழலையெல்லாம் நிஜமென்று நினைத்தவள் அவள் ; ஏமாந்து போனவளாய், ஏமாற்றப்பட்டவளாய், எங்கே ஒளி கிடைக்கும் என்று ஒளியைத் தேடி அலைந்தாள்.

இறுதியாக காயப்பட்ட பறவையாக, ஒளிவிளக்காம் இயேசுவின் பாதத்திற்குக் கொண்டுவரப்பட்டாள் : மன்னிக்கப்பட்டாள் ; ஒளியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

யோவா 11:1-44 : அங்கே அந்தக் கல்லறையில் இலாசரை வைத்து நான்கு நாள்களாகியிருந்தன! இலாசர் இருளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். இயேசு. இலாசரே வெளியே வா என்றதும் அவர் எழுந்து வெளிச்சத்திற்கு வந்தார்.

இதோ. நோயின் இருளையும், பாவ இருளையும், மரண இருளையும் அகற்றி மக்களையெல்லாம் வாழ்வாங்கு வாழவைக்க இயேசு நம் நடுவே பிறந்திருக்கின்றார். உங்கள் அனைவரையும் நான் வளமுடன் வாழவைக்கின்றேன். நீங்கள் என்னைத் தேடிவந்து என்னிடமிருந்து உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுச் செல்லுங்கள் என்கின்றார்.

இன்று நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நம் நடுவே பிறந்திருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (இரண்டாம் வாசகம்]. அவர் அனைத்து ஆசிகளையும் நம்மீது பொழிய வல்லவர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்பிக்கை பிறப்பது அறிதலிலிருந்து. இயேசுவைப் பற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் அறிகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்மீது நம்பிக்கை வைப்போம். நாம் இயேசுவைப் பற்றி அறிய பல வழிகள் உள்ளன. அவற்றில் ஓர் அருமையான வழி,தூய ஆவியாரை நோக்கி, தூய ஆவியாரே உமது முதல் வரமாகிய ஞானத்தை [முதல் வாசகம்] எனக்குத் தாரும் என்று மன்றாடுவதாகும்.

இதுவரை எத்தனையோ வரங்களை நாம் கடவுளிடம் கேட்டிருக்கின்றோம். ஒரு பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு மாணவ, மாணவிகளைப் பார்த்து, கடவுள் உங்களுக்கு முன் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்? என்றேன். இரண்டு தேன் மிட்டாய்கள் என்றான் ஒரு சிறுவன். யாருக்கு? என்றேன். ஒன்று எனக்கு, இன்னொன்று என் தங்கச்சிக்கு என்றான். கடவுள்தான் உன் முன்னால் நிற்கின்றாரே, ஒரு மூட்டை மிட்டாய் வாங்கி எல்லாருக்கும் கொடுக்கலாமே என்றேன். அவனும், கொடுக்கலாமே என்றான்.

ஒரு நாள் ஒரு முதியோர் இல்லத்திலுள்ள தாத்தா, பாட்டிகளைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றேன். ஆளுக்கொரு பல்செட் வாங்கித் தாங்களேன் என்றார்கள்! இப்படி எத்தனையோ ஆசைகள் நமது மனத்திற்குள் எழுந்து மறைகின்றன.

இன்று. இயேசுவே, உம்மை வெறும் தலைவராக மட்டுமல்ல, பெரிய சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல. உம்மை ஆற்றல்மிக்க, எங்களை வாழவைக்கும் கடவுளாக, எங்கள் வாழ்வின் மையமாக. எப்படிப்பட்ட இருளையும் போக்கும் பரமனாக ஏற்றுக்கொள்ள எங்களுக்குப் போதிய ஞானத்தையும், இறையறிவையும் தாரும் என்று மன்றாடுவோம். மேலும் அறிவோம் :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).

பொருள் :
இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் திருக்காட்சி

இந்துக்களுக்கு ஒரு கடவுள், இஸ்லாமியருக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று மூன்று கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. அவர் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2: 4-5), மேலும் பேதுரு கூறுவதுபோல, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை; எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவர் அவருக்கு ஏற்புடையவர்" (திப 10: 34-35)

மீட்பு என்பது யூத இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல; மாறாக, அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடைமை என்பதை இன்றையப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. யூதர்கள் அவர்கள் மட்டுமே மீட்படைவர், மற்றவர் மீட்படையமாட்டார்கள் என்று தவறாக எண்ணினர். ஆனால் உண்மையில் பிற இனத்தவர் மீட்பரை ஏற்றுக் கொண்டனர்: யூத இனத்தார் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11),

இன்றைய அருள்வாக்கு வழிபாடு பிற இனத்தாரும் மீட்படைவர் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "பிற இனத்தார் உள் ஒளியை நோக்கி வருவார்கள்" (எசா 60:3). பதிலுரைப்பாடல் கூறுகிறது, "மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர்" (திபா 72:11). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "பிற இனத்தாரும் யூத இனத்தாருடன் ஒரே உரிமைப்பேற்றிற்கு வாரிசுகள்” (எபே 3:6). இன்றைய நற்செய்தியில், பிற இனத்தைச் சார்ந்த ஞானிகள் குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு. அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனர் (மத் 2:11).

நாம் அனைவரும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். கடவுள் தமது அளப்பரிய அன்பிலே நம்மையும் மீட்புக்குத் தகுதியுள்ளவர்களாகத் தேர்ந்து கொண்டார். எனவே அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்போம். "பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்ஆண்டவரைப் போற்றுங்கள்" (திபா 117:1),

ஓர் இளைஞள் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான். பெண் வீட்டார் அவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் காதலன் தன் காதலியிடம், "நீ கட்டிய புடவையுடன் வா: காலமெல்லாம் உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்" என்று உறுதி அளித்தான். ஆனால் அந்தப் பெண் 10 புடவைகளுடன் வந்தாள். ஏன் என்று கேட்டதற்கு, "இந்தப் பத்துப் புடவைகளும் நான் கட்டிய புடவைகள்" என்றாள்!

ஒரு பெண் தன் காதலனை நம்பித் தன்னுடைய பெற்றோர், உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் விட்டு விட்டுக் கட்டிய புடவையுடன் வர முடியும் என்றால், நாம் கடவுளை நம்பி அவரிடம் ஏன் சரண் அடையக் கூடாது? கீழ்த்திசை ஞானிகள் தங்களுடைய சொந்தம் பந்தம், சொத்துப் பத்து எல்லாவற்றையும் விட்டு விட்டு விண்மீனை நம்பி தங்கள் நம்பிக்கைப் பயணத்தை மேற்கொண்டனர். கிறிஸ்தவ வாழ்வு ஒரு துணிச்சலான பயணம். அதனை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா?

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளத் திருத்தூதர் பவுல் அனைத்தையும் குப்பையெனக் கருதினார் (பிலி 3:8). கடந்ததை மறந்துவிட்டு முன் இருப்பதைக் கண்முன் கொண்டு இலக்கை நோக்கி ஓடினார் (பிலி 3:13-14), இறுதியாக ஓட்டத்தை முடித்துக் கொண்டு வெற்றிவாகை சூடினார் ( 2திமொ 4:7-8), வேதனையோ நெருக்கடியோ, சாவோ வாழ்வோ எதுவுமே அவரைக் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியவில்லை (உரோ 8:35-39).

வாழ்க்கையில் எழும் தடைகளைக் கண்டு மலைத்துப்போய் மனமுடைந்து போகிறவர் மனிதர் அல்லர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஓடும் திசையில் செத்த பிணம்கூடச் சிரமமின்றிப் போகும். ஆனால் தண்ணீர் ஓடும் திசைக்கு எதிராக நீந்த வேண்டுமென்றால் அதற்குத் துணிச்சல் வேண்டும். இதுவரை பலர் தடந்த பழைய பாதையில் நடப்பது எளிது, ஆனால் இதுவரை எவருமே நடக்காத புதிய பாதையில் சென்றவர்கள்தான் சாதனையாளர்களாக மாறினார்கள். மற்றவர்கள் முகவரியில்லாமல் மறைந்தனர்.

கீழ்த்திசை ஞானிகள் பல தடைகளைச் சந்தித்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து தங்களது குறிக்கோளை அடைந்தனர். இலக்குத் தெளிவு உடையவர்கள். துணிச்சலுடன் செயல்படுபவர்கள், இலக்கை அடைவர் என்பது உறுதி.

எண்ணியார் எண்ணியாங்கு எய்துப எண்ணியாச்
திண்ணியர் ஆகப்பெரின் (குறள் 666)

கீழ்த்திசை ஞானிகள் கிறிஸ்துவைச் சந்திக்க விண்மீன் உதவியதுபோல, நம்மைச் சுற்றி வாழ்கின்ற பிற சமயத்தினர் கிறிஸ்துவிடம் வர நம் வாழ்வு ஒரு விண்மீனாக அமைவதாக, "உங்கள் ஒளி மனிதர்முள் ஒளிர்க" (மத் 5:16).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஓர் அழைப்பு-ஓர் அறைகூவல்

வேறுபட்ட சமயங்களைச் சார்ந்த மூன்று பேர் எந்தச் சமயம் சரியானது, உயர்வானது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகினர்.

அந்தப் பெரியவர் சொன்னார்: "அதோ, அந்தக் குன்றைப் பாருங்கள். அதன் உச்சியில் ஒரு மாவு ஆலை! அதனைச் சென்றடைய மூன்று வழிகள் இருக்கின்றன. நேரே தெரிகின்ற பாதை சுருக்கமானது. ஆனால் செங்குத்தானது. ஏறிச் செல்லச் சிறிது சிரமமானது. பக்கவாட்டில் ஒரு பாதை. அகலமானது. ஆனால் குண்டும் குழியுமாகக் கரடுமுரடானது. இடதுபக்கமாகச் சென்றால் இன்னொரு பாதை. மலையைச் சுற்றி வளைந்து செல்லும். தூரமானது. அதே வேளையில் எளிதானது. மூன்று வழிகளுமே மாவு ஆலையில்தான் சென்று முடிகின்றன” சிறிதுநேரம் மௌனம் காத்த பெரியவர் தொடர்கிறார்: "மாவு ஆலையை அடைந்ததும் அந்த ஆலை முதலாளி “நீ எந்த வழியில் வந்தாய்?" என்று கேட்கமாட்டார். கேட்கவும் அவருக்குத் தோன்றாது. "நீ கொண்டு வந்திருக்கும் கோதுமை நன்றாக விளைந்ததா? நன்கு காய்ந்து உலர்ந்ததா? அரைப்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உள்ளதா?” என்று மட்டுமே கேட்பார்.

மேலே காணும் கதையாகட்டும், கீழ்த்திசை ஞானிகளின் வருகையாகட்டும் உணர்த்துகின்ற உண்மை ஒன்றே! எந்த ஒரு சமயமும் கடவுளைத் தனி உடைமையாக உரிமை கொண்டாட முடியாது. இஸ்ரயேலரோ, பிற இனத்தவரோ எல்லா மக்களுக்கும் உரியவர் கடவுள். அவர் தரும் மீட்புக்கும் விடுதலைக்கும் எல்லாச் சமயத்தினரும் உரியவரே. உண்மையோடும் நேர்மையோடும் திறந்த மனத்தோடும் கடவுளைத் தேடுபவர்கள் அவரைக் கண்டடைகிறார்கள் என்பதே கீழ்த்திசை ஞானிகள் நமக்குச் சொல்லும் செய்தி,

இந்த உணர்வைத்தான் விடுதலை தந்த மகிழ்ச்சிக் கீதமாக இறைவாக்கினர் எசாயா இசைக்கிறார்: "ஆண்டவரின் மாட்சி உன் மீது தோன்றும். பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர். மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்" (எசாயா 60:2-3). இதே உணர்வுக்குத் தனி அழுத்தம் கொடுத்துத் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நற்செய்தியின் வழியாக, பிறஇனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்" (எபேசி.3:6)

இயேசுவைச் சந்திக்க வந்த கீழ்த்திசை ஞானிகள் யூதர்களே அல்லர்; மாறாகப் பிற இனத்தவர்தாம்! இன்னும் சொன்னால் ஆன்மீகவாதிகளோ, சமயத்தின் பிரதிநிதிகளோ கூட அல்லர். ஆனால் முழுதும் கற்ற, மெய்யுணர்ந்த சான்றோர்கள். உலகத்தின் தலைசிறந்த வரலாற்று நிகழ்வைத் தேடி கண்டுபிடித்தவர்கள். வெறுமனே தங்கள் கடமைகளையும் வாடிக்கையான நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் அல்ல. ஆனால் நிறை உண்மையின், நிலை வாழ்வின் முழுப் பொருளையும் தேடிக் கண்டடைந்தவர்கள்!

அந்தத் தேடலின் பயனாக அவர்களுக்குத் தென்பட்டது வெறும்

வால் நட்சத்திரம் அன்று; அதற்குப் பின்னால் ஒரு மாபெரும் நற்செய்தி. விண்மீன் வெளிப்படுத்திய இறைமாட்சிமை! (It was more a theologi- cal star than an astronomical star)

கீழ்த்திசை ஞானிகள் சென்ற பாதையே கிறித்தவ வாழ்க்கை. அது அவர்கள் கால்போன பாதை அல்ல அது கரடு முரடானது, பாலை பள்ளத்தாக்கானது. மலை நதியானது! அது அவர்கள் மனம் போன பாதை, அது மூன்று படிகள் கொண்டது. தேடுதல், கண்டடைதல், அனுபவித்தல்.

1. தேடுதல் : தேடலே ஞானத்தின் தொடக்கம். வீட்டில் தொலைத்த சாவியை நினைத்து வெளிச்சம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வீதியில் தேடிய முல்லா அல்ல கீழ்த்திசை ஞானிகள் வானியல் நூற்கள் ஆய்வு, இரண்டாண்டுப் பயண முயற்சி, ஏரோது மாளிகையில் தகவல். அவர்கள் விண்மீனை அன்று, அதில் ஒரு செய்தியை, ஓர் அடையாளத்தைக் கண்டனர். தேடுதல் எல்லாமே உண்மையை நோக்கி இருப்பதில்லை. ஏரோதும் தேடினான் உண்மையை அறிவதற்கல்ல; உண்மையைக் கொல்வதற்கு! ஞானிகளை வழிநடத்தி வந்த விண்மீன் எருசலேம் வரவும் மறைந்து விட்டது. காரணம்? அவர்கள் தேடியது ஏரோது மாளிகையை. அங்கே உண்மை அன்று. ஏரோதின் சூழ்ச்சியும் பரிசேயரின் அகந்தையுமே இருந்தன.

2. கண்டுபிடித்தல் : வெளித்தோற்றத்தில் ஓர் ஏழைக் குழந்தைதான். அக்குழந்தையில் எப்படி இறைவனைக் கண்டு தூபத்தையும் (எண்.16:40) அரசனைக் கண்டு பொன்னையும் (1 அர.7:51) மனிதனைக் கண்டு வெள்ளைப் போளத்தையும் (யோ.19:39) காணிக்கையாக்க முடிந்தது, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்க முடிந்தது! (மத்.2:11) உண்மையின் கண்டுபிடிப்பும் மனித முயற்சி அன்று; ஆவியின் செயலே!

3. அனுபவித்தல்: நம்பிக்கை வாழ்வு வார்த்தைக்குள் அடங்காது. வாழ்ந்து பார்க்க வேண்டியது. புதிய திருப்பத்தை, புதிய மனமாற்றத்தை, புது வாழ்வை, புது வழியை உணர்த்தும். "ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டதால் வேறுவழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்" (மத்.2:12). "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு... அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" (தி.பா.37:5)

திருக்காட்சித் திருவிழா ஒர் அழைப்பு - அதே சமயம் ஓர் அறை கூவலும் கூட.

1. நம்மை அவரை நோக்கி ஈர்க்கிறது. ஆகையால் அது ஓர் அழைப்பு.

2. நம்மை மாற்றுப் பாதையில் செல்லப் பணிக்கிறது. ஆகையால் அது ஒரு சவாலான அறைகூவல்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

திருக்காட்சிப் பெருவிழா

சிறுவயதில் நான் பார்த்த கிறிஸ்மஸ் நாடகங்களில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் யார் தெரியுமா? மூன்று இராஜாக்கள். அந்த மூன்று பேரும் பளபளப்பாய் உடை அணிந்து, தலையில், தங்கக் காகிதத்தால் செய்த மகுடம் சூடிக்கொண்டு வருவார்கள். மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, இடையர்கள் என்று அந்த நாடகத்தில் பங்குபெறும் எல்லாரையும் விட, இவர்களது தோற்றம் பிரம்மாதமாக இருக்கும். தங்கள் ஆடம்பர உடையால், சின்ன வயதில் என்னைக் கவர்ந்த இந்த அரசர்கள், இன்று, வேறு சில காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளனர். எனக்கு ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகின்றனர்.

மூன்று அரசர்கள், மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரும் யார்? வரலாற்றுப்பூர்வமான, துல்லியமான பதில்கள் இந்தக் கேள்விக்கு எளிதில் கிடைக்காது. மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூவரும், கடந்த 20 நூற்றாண்டுகளாக பல கோடி மக்களின் மனங்களில், பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்... முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும், இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.

இன்று நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள் திருநாள், இறைவன், தன்னை, அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சித் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு, இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும், அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக, தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சி திருநாள்.

கடவுளின் பெயரால், பிரிவுகளையும், பிளவுகளையும் உருவாக்கி, அவர் பெயரால், வன்முறைகளை வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்களை, இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்போம். 2023ம் ஆண்டு பிறந்ததும், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலில் மதமாற்றம் நிகழ்ந்தது என்ற காரணத்தைக் கூறி, வன்முறை கும்பல், அந்தக் கோவிலை தாக்கியுள்ளது. இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், 2021ம் ஆண்டைவிட, 2022ம் ஆண்டில் அதிகமாக இருந்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன. உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகம் இருந்ததாகவும், எண்ணிக்கையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ம் ஆண்டு இந்த தாக்குதல்கள், 511 என்ற அளவில் இருந்ததாகவும், ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, வழிபாட்டுத் தலங்களில், மக்கள் கூடிவரும் வேளைகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கள், அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கிவருவதை நாம் அறிவோம். நம்மை ஒரே குடும்பமாய் இணைக்க விரும்பும் இறைவனின் இல்லமே, நம்மைச் சிதைக்கும் போர்க்களமாக மாறிவருவது மிகவும் வேதனை தரும் ஒரு போக்கு. கடவுளின் பெயரால், பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கும் எண்ணங்கள், இந்த புத்தாண்டில், வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம்.

மனிதக் குடும்பம் அனைத்திற்கும் பொதுவானவர் இறைவன். திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித் தரும் முதல் பாடம் இது. உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். இது நாம் கற்றுகொள்ளக்கூடிய இரண்டாவது பாடம். இன்னும் இதில் அழகு என்னவெனில், இறைவனைத் தேடி, ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டிச்செல்லத் தேவையில்லை. அவர் எப்போதும், எங்கும், நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக்கண்களை மூடிக்கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப்போல் உணர்கிறோம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில், இந்த ஞானிகள் வழிநடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும், நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்று சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும்போதும், சந்தித்தபின்னரும் நம் வாழ்வுப் பாதையில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்கள் என்றதும், மனதில் நட்சத்திரங்கள், ‘ஸ்டார்கள்’ என்ற சொற்கள் பல எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. மழலையர் பள்ளியில் நான் பயின்ற Twinkle, twinkle little star என்ற பாடல் வரிகளில் ஆரம்பித்து, வாழ்க்கையில் ஸ்டார்களைப் பற்றி எனக்கு ஊட்டிவிடப்பட்ட கருத்துக்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. இந்தியாவில், அதிலும் முக்கியமாக, தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு, தங்கள் வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை – குறிப்பாக, இளைய தலைமுறையினரை - நினைத்து கவலையாய் இருக்கிறது.

இன்று நாம் கொண்டாடும் ஞானிகளை, "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. இந்த ஞானிகள், இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது, ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஞானிகள், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள். 

இந்தியாவில், கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம், அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக, நம்மில் பலர் நம்பி வருகிறோம். இவ்வாறு, கோள்களும் விண்மீன்களும் நம் வாழ்வை நடத்துவதாக நம்பி, நம்மையும், நம் குடும்பத்தையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம்.

திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்' நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த விழா நமக்குச் சொல்லித் தருகிறது.

வானில் தோன்றிய ஒரு விண்மீனை தங்கள் எண்ணங்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஞானிகள் தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள், அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்டதும், அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்வி கேட்டு வதைத்திருக்கலாம், கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. அவர்கள் விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் அதிகம் இல்லாத அந்த யுகத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும், தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே, மீண்டும், மீண்டும், அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது, அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, அவர்கள் நடந்திருக்க வேண்டும்! அத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், இரவு நேரங்களில், பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் பொறுமையும், மன உறுதியும், நமக்கெல்லாம் நல்ல பாடங்கள்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. நாம் வாழும் நகரங்களில், இரவும், பகலும், எரியும் செயற்கை விளக்குகளின் ஒளியில், நாம் வானத்தையே மறந்துவாழ்கிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள. சந்தேகம் என்பது கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும்.

சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் விடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு, நமது உடல் கண்கள் பயனற்றவை. மனக் கண்கள் தேவை.

அன்பு மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr Love) என்று புகழ்பெற்ற அமெரிக்க பேராசிரியரும், எழுத்தாளருமான லியோ புஸ்காலியா (Leo Buscaglia) அவர்கள் பகிர்ந்துகொண்ட ஓர் நிகழ்வு இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம், Joel என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் Joel. பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச் சென்றார் Joel. ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப்போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.

யார் தடுத்தும் கேட்காத அவர், தான் சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியா அவர்களைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தான் எடுத்திருந்த முடிவைச் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை Joel புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ அவருக்கு விளக்கிக் கூறினார். "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்க வேண்டும்." "இதயக் கண்களா?" என்று Joel அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்கம் தந்தார். "அந்த முதியோர் இல்லத்தில் வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்திருக்கும் அந்த முதியோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப் பார். அந்த நிலையில் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடி... அங்குள்ளவர்களில், யார், எந்த ஓர் உறவினரும் வராமல், பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ, அவர்களைச் சென்று பார்." என்று லியோ சொன்னதும், Joel, "அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும் எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன் வழியாக நாம் வாழ்வில் அர்த்தத்தைப் பெறமுடியும் என்பதே லியோ கொடுத்த இந்த ஆலோசனையில் பொதிந்திருந்த இரகசியம்.

இந்த சந்திப்பிற்குப் பின், Joelக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்க்கொண்டிருந்தபோது, Joel ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கினர். அவர்களில் மூன்று பேர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தனர். Joel தன் ஆசிரியர் லியோவிடம் வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்." என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளைப் பிடித்தபடி Joel பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார்.

விரக்தியால் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட Joel, அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இவ்வுலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனஉறுதியைத் தந்து, இறைவன் வழிநடத்த வேண்டுவோம்.

இசைக் கலைஞரும், பாடலாசிரியருமான Joe Darion அவர்கள் எழுதிய ‘The Impossible Dream’ அதாவது, ‘முடியாது எனத் தோன்றும் கனவு’ என்ற புகழ்பெற்ற பாடலின் சில வரிகள் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்...

முடியாது என தோன்றும் கனவை நான் காணவும்,
வெல்லமுடியாத எதிரிகளுடன் போரிடவும்
தாங்கமுடியாத துயரங்களைத் தாங்கவும்
வீரர்களும் துணியாத இடங்களுக்குச் செல்லவும்
சரிசெய்ய இயலாத தவறுகளை சரியாக்கவும்
தொடமுடியா தூரத்தில் இருக்கும் விண்மீனைத் தொடவும்...

இதுவே என் தேடல்
வெகு தூரத்தில் இருக்கும் அந்த விண்மீனைத்
தொடர்வதே என் தேடல்...

கேள்வியோ, தயக்கமோ இன்றி
நேரிய ஒன்றிற்காக போராடவும் 
உன்னதமான ஒரு காரணத்திற்காக
நரகத்திற்குள்ளும் நடக்கும் துணிவைப் பெறவும்
இறுதியில் என்னை அடக்கம் செய்யும்போது
நிறைவான அமைதியுடன் விடைபெறவும்...

இதுவே என் தேடல்
வெகு தூரத்தில் இருக்கும் அந்த விண்மீனைத்
தொடர்வதே என் தேடல்..

உடலெங்கும் காயங்கள் நிறைந்தாலும்
பிறரது ஏளனங்கள் சூழ்ந்தாலும்
தன்னிடம் எஞ்சியிருக்கும் சக்தியைக் கொண்டு
தொடமுடியாத தூரத்தில் இருக்கும் விண்மீனைத்
தொடர்ந்த அந்த ஒரு மனிதரால்
இவ்வுலகில் நலம் நிறைந்திருக்கும்
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்

நிகழ்வு
இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், "கடவுள் இருக்கிறாரா?" என்றார். "ஆம். இதில் என்ன சந்தேகம்?" என்றார் மற்றவர். உடனே முதலாமவர், "கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்... அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை" என்றார். இரண்டாமவரோ, "எல்லாருக்கும் தென்படவேண்டும் என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்" என்றார்.

"நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்" என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, "இந்த மின்விசிறியில் எத்தனை இறக்கைகள் உள்ளன?" என்றார். அதற்கு முதலாமவர் "மூன்று" என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார். அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, “இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய கண்களுக்குத் தெரிகின்றனவா?"என்றார். "தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது" என்றார் முதலாமவர்.

"மிகச் சரியாய் சொன்னீர்" என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம் பேச தொடங்கினார்: "மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள் இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம், மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள். கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால், உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது."

ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும் பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக் கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற, “மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்ற இறைவார்த்தை எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப் பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார்.

லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம். இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது. அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும். ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும் சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை வெளிப்படுத்திகின்றார்.

இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவனுடைய திருக்காட்சியைக் கண்டார்கள்; ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள். கொடுங்கோலன் ஏரோதைச் சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை. நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத் தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.

பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்
ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.

பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நர்செஇதியிநால் இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும் முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில் கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு அவர், "விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்" (மத் 12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.

ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி
ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும்.
கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம் யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும் இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால் திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, “சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத் நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது” (திபா 34: 10) என்று கூறுவார்.
ஆகவே, நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று ஆண்டவரை தேடிச்செல்வோம். அதன் மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிரம்பப் பெறுவோம்.

சிந்தனை
“ஆண்டவரைத் தேடுங்கள்; வாழ்வீர்கள்” (ஆமோ 5:4) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகவே நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று நல்ல மனத்தோடு ஆண்டவரை தேடிச் செல்வோம் அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சிறியதில் பெரியதைக் காண்பது

ஜென் மடாலயத்திற்கு இளவல் ஒருவர் வந்தார். அவருக்கு ஞானம் பெற வேண்டும் என்ற ஆசை. மடலாயத்தின் தலைவரைச் சந்திக்கின்றார் அவர். 'ஐயா! நான் ஞானம் பெற வேண்டும்!' 'வருக! இதோ, இந்த கைப்பிடி அரிசியில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை அறுத்து வருக!' என்று சொல்லி, ஒரு கைப்பிடி அரிசையைக் கொடுக்கின்றார் தலைவர். 'கைப்பிடி அரிசியில் நெற்கதிர்களா?' - வியக்கின்றார் இளைஞர். 'இது எப்படி ஐயா இயலும்?' - கேட்கின்றார் இளைஞர். 'நீ வீட்டிற்குப் போகலாம். ஞானம் பெறும் ஆசை உன்னிடம் பேரார்வமாக மாறும் வரை அங்கேயே இரு!' - அனுப்புகின்றார் தலைவர். 'பேரார்வம் வந்ததை நான் எப்போது உணர்வேன்?' - கேட்கின்றார் இளைஞர். 'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும். அப்போது வா!'

நிற்க.
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக இன்று கொண்டாடுகிறோம்.'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது.

இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

திருக்காட்சிப் பெருவிழாவின் பொருள் என்ன? இவ்விழா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம் ரொம்ப எளிதான ஒன்று: 'சிறியதில் பெரியதைக் காண்பது'. 'நட்சத்திரத்தில் மெசியாவின் பிறப்பு அடையாளத்தைக் காண்பது'. 'முன்பின் தெரியாத ஒருவரில் உடன்பயணியைக் காண்பது'. 'குழந்தையில் யூதர்களின் அரசரைக் காண்பது'. 'கனவில் இறைவனைக் காண்பது'- இப்படியாக சிறியதிலும் பெரியதைக் காண்பது.

மனித குலத்தில் எவ்வளவோ பேர் ஞானிகளாக வாழ்ந்து மறைந்தாலும் உலகம் முழுவதும் ஞானியர் என்று கொண்டாடப்படுபவர்கள் கீழ்த்திசை ஜோதிட நிபுணர்கள் அல்லது வானியல் அறிஞர்கள் மட்டுமே.
'சிறியதில் பெரியதைக் காண்பதே ஞானம்' என்று உணர்ந்தனர் இவர்கள். அல்லது 'சிறியதில் பெரியதைக் காண்பதே' ஞானம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:1-2) மூன்று வகையான மனிதர்களைப் பார்க்கின்றோம்:

 1. அ. ஏரோது - இவர் பெரியதில் சிறியதைக் பார்க்கின்றார் - 'யூதர்களின் அரசர்' அல்லது 'மெசியா' என்று சொல்லப்பட்டவரை, 'குழந்தை' என்று பார்க்கின்றார்.
 2. ஆ. மறைநூல் அறிஞர்கள் - இவர்கள் 'சிறியதில் சிறியதையும் பெரியதில் பெரியதையும் பார்க்கின்றனர்' - விண்மீனை வெறும் விண்மீனாகவும், மெசியா பற்றி மறைநூலில் எழுதப்பட்டதை மெசியா பற்றிய குறிப்பு என்றும் பார்க்கின்றனர்.
 3. இ. ஞானியர் - இவர்கள் சிறியதில் பெரியதைப் பார்க்கின்றனர் - குழந்தையில் யூதர்களின் அரசரையும், விண்மீனில் மெசியாவின் வருகையயும், மனித வலுவின்மையில் இறைவனையும், கனவில் கடவுளையும் பார்க்கின்றனர்.

நாம் பல நேரங்களில் பெரியதில் சிறியதையும், நன்மையானவற்றில் தீமையானதையும், நல்லவற்றில் கெட்டதையும், அல்லது மனிதர்களிடம் குறைகளையும் காண்பது ஏன்?
இதற்குக் காரணம் மூன்று பண்புகள். இந்த மூன்று பண்புகளையும் ஏரோது கொண்டிருக்கின்றார்:

1. அச்சம் அல்லது கலக்கம்
ஞானியரின் வார்த்தைகளைக் கேட்டதும் 'ஏரோது அஞ்சினான் அல்லது கலங்கினான்' எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. இந்த அச்சம் என்பது கரப்பான் பூச்சியைப் பார்த்தோ, அல்லது இருட்டைப் பார்த்தோ கொள்ளும் அச்சம் அல்ல. மாறாக, வாழ்வா? சாவா? என்ற சூழலில் - எடுத்துக்காட்டாக, புயலால் பாதிக்கப்பட்டு - கொள்ளும் அச்சம். ஒருவரின் அச்சம் அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும் என்பதுபோல ஏரோதுவின் அச்சம் எருசலேம் நகரத்தாரையும் பற்றிக்கொள்கிறது - 'அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று!' அச்சம் வரும்போது மூளை தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு கவசம் ஒன்றை அணிந்துகொண்டு, 'வெளியில் இருக்கும் பெரியதை சிறியது போல' நமக்குக் காட்டும். அதனால்தான், அச்சம் கொண்ட ஏரோதுவுக்கு 'யூதர்களின் அரசர்' ஒரு 'குழந்தையாகத்' தெரிகின்றார்.

2. விசாரணை
தன்னுடைய கலக்கத்திலும் அச்சத்திலும் தான் கேட்டது உண்மையா? என்று பார்க்க உடனடியாக மறைநூல் அறிஞர்களை விசாரிக்கின்றார் ஏரோது. 'தான் கேட்கின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேதான் விசாரித்திருப்பார் ஏரோது. ஏனெனில், நாம் அச்சப்படுகின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றே நம் மனம் விரும்புகிறது. சில நேரங்களில் சிலர் தாம் கேட்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தே விசாரிப்பது உண்டு. இந்த விசாரணை அச்சத்தினால் அல்ல, மாறாக, ஒருவரின் தீய எண்ணத்தால் வருவது. ஏரோது முதல் வகை மனிதராக இருக்கிறார். ஆனால், பொய்யாய் இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது உண்மையாகிவிடுகின்றது.

3. பொய்
இது அச்சத்தின் அடுத்த குழந்தை. அச்சம் வந்தவுடன் பொய் வந்துவிடுகிறது. தன் அம்மா அடிப்பாள் என்று அச்சப்படுகின்ற குழந்தை தான் செய்த ஒன்றை, 'செய்யவில்லை' என்று பொய் சொல்லிவிடுகின்றது. 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துக் கேட்டு எனக்கு அறிவியுங்கள் ... நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்கிறார் ஏரோது. ஆனால், நிகழ்வின் பிற்பகுதியில் ஏரோது குழந்தையை வணங்குபவராக அல்ல, மாறாக, குழந்தையைக் கொல்பவராக மாறுகின்றார். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் வைத்திருக்கிறார்.

இதற்கு மாறாக, சிறியதில் பெரியதைக் காணவும் நமக்கு மூன்று பண்புகள் தேவை. அவற்றை கீழ்த்திசை ஞானியர் கொண்டிருக்கின்றனர்:

1. இறைக்கண்களால் காணுதல்
இறைவனே ஒன்றை வெளிப்படுத்தினால் அன்றி நாம் சிறியதைப் பெரிதாகக் காண முடியாது. இறைவெளிப்பாடு என்பது திடீரென்று தோன்றும் வெளிச்சம் அல்ல. மாறாக, இறைவனின் கண்கள் கொண்டு நாம் மற்றவர்களையும் மற்றதையும் பார்ப்பதே இறைவெளிப்பாடு. ஞானியர் தங்களுடைய கண்களால் அல்ல, மாறாக, இறைவனின் கண்களால் பார்த்ததால்தான், 'விண்மீனில் மெசியாவின் பிறப்பையும்,' 'மனிதக் குழந்தையில் கடவுளையும்' காண்கின்றனர். இறைவெளிப்பாடு பெற்றவர்கள் தீமையைக் கண்டு வணங்கமாட்டார்கள். ஆகையால்தான், யூதர்களின் அரசரை பெத்லகேம் குடிலில் வணங்கிய அவர்கள் ஏரோதிடம் திரும்பிச்செல்லவில்லை.

இன்று நான் மற்றவரிலும், மற்றவற்றிலும் சிறியவற்றில் பெரிதானதைக் காண வேண்டும் என்றால் எனக்குத் தேவை இறைவனின் கண்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-6), பாபிலோனியாவில் அடிமைகளாக, இருளிலும் குளிரிலும் நொறுங்குண்ட நிலையிலும் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களிடம், 'ஒளிரும் மக்களை, தோளில் தூக்கிவரப்படுதலை, பிற இனத்தாரின் தேடி வருதலை' காண்கின்றார் கடவுள். சிறியவற்றில் பெரியவற்றைக் காணவும், சிறியவற்றில் பெரியவற்றைக் கொண்டாடவும் கடவுளின் கண்கள் தேவை.

2. ஏற்றுக்கொள்ளுதல்
விசாரிக்கும் மனம் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளும் மனம் விசாரிக்காது. ரொம்ப எளிதான லாஜிக். சிறிய குழந்தையில் கடவுளையும், வலுவற்ற குழந்தையில் யூதர்களின் அரசரையும், யூதர்களின் அரசரில் தங்கள் அரசரையும் ஏற்றுக்கொள்கின்றனர் ஞானியர். 'எங்கே?' என்று ஏரோதிடம் கேட்ட கேள்விகூட, விசாரணை அல்ல, தேடலின் நீட்சி அல்லது ஏற்றுக்கொள்தலின் நீட்சி.

இன்று நான் மற்றவர்களை அவர்கள் இருப்பதைவிட பெரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இருப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேனா? என்பது நான் கேட்க வேண்டிய கேள்வி.

3. வணங்குதல்
'வணங்குதல்' என்பதில் 'ஒருவரின் மதிப்பைக் கண்டுணர்தல்' அடங்கியிருக்கிறது. நாம் வணங்குகின்ற ஒன்றை மிகுந்த மதிப்போடு வைத்திருக்கின்றோம். ஒன்று சிறியதாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இருக்கின்றது என்று அறியும் ஒருவரே சிறியதை இரசிக்கவும், வணங்கவும் முடியும். 'நாங்கள் வணங்க வந்திருக்கிறோம்' என்று ஏரோதிடம் அவர்கள் சொன்னது, குழந்தையை வணங்குவதில் நிறைவேறுகிறது. வணங்குதலில் உண்மையும் அடங்கியிருக்கிறது. தாங்கள் எதற்காக வந்தார்களோ அதைச் செய்கிறார்கள் ஞானியர்.

இன்றைய உலகத்தில் நாம் சிறியதில் பெரியதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, அல்லது வன்முறை, வயது வந்த முதியவர்களுக்கு எதிரான ஒதுக்குதல்கள் போன்றவற்றுக்குக் காரணம் நாம் இவர்களில் பெரியதைப் பார்ப்பது இல்லை. இன்றைய நம் நாட்டின் அரசியல் சூழல் பெரிய நாடு, பெரிய மொழி, பெரிய மதம் என்று ஒற்றைமயமாக்கும் முயற்சியில் இருப்பதால், அரசியல் தலைவர்கள் ஏரோது போல அனைத்திற்கும் அஞ்சுகின்றனர். அல்லது அச்சுறுத்துகின்றனர். சிறிய மதம், சிறிய பொருளாதாரம், ஏழைகள், எளியவர்கள் போன்றோர் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலையில் அனைவரையும் அழித்துவிடுவதில் மும்முரமாயிருக்கிறது நாடு.

இன்றைய திருவிழா நமக்குக் கற்றுத்தரும் இந்த மேலான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றால் - சிறியதிலும் பெரியதைப் பார்த்தால் - நான் என்னைப் பற்றிய, பிறரைப் பற்றிய, இறைவனைப் பற்றிய நேர்முகமான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்நேர்முகப் புரிதலின் பின்புலத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நானும் ஞானியாக விளங்க முடியும்.

ஞானியரின் வாழ்வில் 'நிலா உள்ளவரை மிகுந்த சமாதானம் நிலவும்' என்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 72:7). சிறியதிலும் பெரியதைக் காணும் ஞானியருக்கு ஒவ்வொரு காட்சியும் திருக்காட்சியே!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கடவுளே வழிகாட்டுவார்!

இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருகாட்சி திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த பெருவிழா நமக்கு பல நல்ல ஆழமான நம்பிக்கையூட்டும் சிந்தனைகளைத் தருவதாய் உள்ளது. அதில் இன்று நாம் "கடவுளே வழிகாட்டுவார் " என்ற மையக்கருத்தை சிந்திக்கலாம் என விழைகிறேன். 

கடவுள் வழிகாட்டுவார். எதற்கு? அவரை சென்று அடைவதற்கு.கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடிப்படை இலக்கு என்வெனில் கடவுளை அடைவது. ஆங்கிலத்தில் "To reach God" என்போம்.கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார். ஆகவே அவரை நாட முற்படுவோம் என நாம் பல முறை கேட்டிருக்கிறோம். இன்று நாம் கொண்டாடும் விழா இதனை எண்பிப்பதாக இருக்கின்றது. 

கிழக்கு திசை ஞானிகள் காலக் குறிகளை கணித்தவர்களாக மெசியா பிறந்திருப்பதை உணர்ந்து அவரைத் தேடி அவரைக் கண்டு வணங்க தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். இப்போது போல அக்காலத்தில் பயணங்கள் எளிதல்ல. நாம் ஆழ்ந்து யோசித்தால் பயணத்திற்கு அவர்கள் எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் , எவ்வளவு தயாரிப்புகள் செய்திருப்பார்கள் எனத் தெரியாது. ஆனால் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஒரு தாகம், அவரை வணங்கி காணிக்கை செலுத்த வேண்டும் என்ற ஆசை அவர்களை உந்தித் தள்ளியது. அவர்கள் எடுத்த முன்னெடுப்பை பூர்த்தியாக்க கடவுள் வழிகாட்டுகிறார்.

எவ்வாறு வழிகாட்டினார் என்பது நாம் அறிந்ததே. ஆம். விண்மினை அவர்கள் முன்பே அனுப்பி தன் மகனைச் சென்றடைந்து வணங்க வழிகாட்டினார். அவர்களும் சென்றார்கள். கண்டார்கள். வணங்கினார்கள். பரிசளித்தார்கள். அவர்கள் பாதுகாப்பாக தங்களிடம் சேர்வதற்கும் ஏரோதிடமிருந்து அவர்களைக் காப்பதற்கும் கனவின் வழியாக கடவுள் மீண்டும் வழிகாட்டினார். 

அன்புக்குரியவர்களே! இறைவனின் தரிசனத்தை நம் வாழ்வில் பெற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் அல்லவா. அப்படியெனில் அவரை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் போதும் , அவரைச் சென்றடையும் வழியை அவரே நமக்குக் காட்டிவிடுவார். இன்று நாம் அவரைச் சென்று அடைய இறைவார்த்தையும்,இறைவேண்டல் வழிமுறைகளும், அருட்சாதனங்களும், ஆன்மீக முதிர்ச்சிபெற்ற மூத்தோரின் வழி காட்டுதல்களும் கடவுளால் நமக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட விண்மின்களே. இதை நாம் உணர்ந்து நம் ஆழ்மனத்திற்குள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால் இறைவனின் தரிசனத்தைப் பெற முடியும். கடவுள் வழி காட்டுவார். அதைக் கண்டுணர நாம் தயாரா?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser