மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

குருத்து ஞாயிறு
இரண்டாம் ஆண்டு

சாம்பல் புதன்
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 50: 4-7 | பிலிப்பியர் 2: 6-11 | மாற்கு 14: 1-15: 47

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
குருத்துவக்‌ கல்லூரியிலே விவிலியப்‌ பாடம்‌ எடுத்துக்‌ கொண்டிருந்த ஒரு பேராசிரியர்‌ குருமாணவர்களைப்‌ பார்த்து இவ்வாறு கூறினார்‌: நற்செய்தியை எடுத்துரைக்க ஏழை, எளியவர்‌ வாழ்ந்த கலிலேயாவுக்கு இயேசு சென்றார்‌. சிலுவையில்‌ அறையப்பட பணக்காரர்களும்‌, படித்தவர்களும்‌ வாழ்ந்த யூதேயாவிற்குச்‌ சென்றார்‌. உங்கள்‌ வாழ்க்கையில்‌ நீங்கள்‌ நற்செய்தியைப்‌ போதிக்க விரும்பினால்‌ ஏழைகளைத்‌ தேடிச்‌ செல்லுங்கள்‌. சிலுவையில்‌ அறையப்பட வேண்டும்‌ என விரும்பினால்‌ பணக்காரர்களைத்‌ தேடிச்‌ செல்லுங்கள்‌ என்றார்‌.

எருசலேம்‌ பெரு நகர்‌. அது பணம்‌ படைத்தவர்கள்‌ நிறைந்த நகர்‌. குற்றம்‌ புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்‌ அளவுக்கு அதிகாரம்‌ படைத்தவர்கள்‌ வாழ்ந்த நகர்‌ அது. அங்கே தலைமைக்‌ குருக்களும்‌, மறைநூல்‌ அறிஞரும்‌ இயேசுவை எப்படிச்‌ சூழ்ச்சியாய்‌ பிடித்துக்‌ கொலை செய்யலாம்‌ என்று வழி தேடிக்‌ கொண்டிருந்தனர்‌ (மாற்‌. 14:1). தான்‌ படப்போகும்‌ பாடுகள்‌ அனைத்தையும்‌ பற்றி இயேசு மூன்று முறை முன்னறிவித்‌ திருக்கிறார்‌ (லூக்‌. 22:1 24:46). எனவே தனக்கு நடக்கப்போகும்‌ அனைத்தையும்‌ அறிந்த இயேசு கோவேரிக்‌ கழுதையில்‌ ஏறி, எபிரேயச்‌ சிறுவர்கள்‌, தாவீதின்‌ மகனுக்கு ஓசான்னா! என்று பாடிப்‌ புகழ எருசலேம்‌ நுழைகிறார்‌. எருசலேமில்‌ தனக்குச்‌ சிலுவை மரணம்‌ காத்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்தும்‌ அந்தச்‌ சவாலைச்‌ சந்திப்பதற்காகப்‌ புறப்பட்டார்‌.

இத்தகைய துணிச்சல்‌ இயேசுவுக்கு எங்கிருந்து வந்தது? உலகில்‌ வாழ்ந்த காலம்‌ முப்பத்து மூன்று ஆண்டுகள்‌. அதிலும்‌ தாம்‌ புரிந்த பொதுப்பணி மூன்று ஆண்டுகள்‌ மட்டுமே! ஆனால்‌ எல்லாம்‌ தந்தையின்‌ மகிமைக்காகவும்‌, உலகத்தின்‌ மீட்புக்காகவும்‌ என்ற உயர்ந்த இலட்சிய நோக்கோடு புறப்பட்டார்‌. அந்த இலட்சிய பிடிப்பே அவருக்கு எதிர்ப்புகளைத்‌ துச்சமென மதித்து சிலுவையில்‌ மரிக்கும்‌ துணிச்சலைத்‌ தந்தது.

குருத்தோலைகளைக்‌ கையிலே பிடித்துக்கொண்டு கோவிலை, அல்லது வீதியை வலம்‌ வந்த நாம்‌ நம்மையே கேட்க வேண்டிய சில கேள்விகள்‌ உண்டு.

அதில்‌ முதலாவது, என்‌ வாழ்க்கைக்கென்று ஓர்‌ இலட்சியம்‌ உண்டா? அவ்வாறெனில்‌ அது என்ன? இலட்சியம்‌ இல்லாத வாழ்க்கையென்றால்‌ திசைக்கருவி இல்லாத கப்பல்‌ பயணம்‌ போன்றதல்லவா! இலட்சியமே நம்மைச்‌ சரியான வழியில்‌ நடத்தும்‌. இல்லாவிடில்‌ திக்குத்‌ தெரியாத காட்டில்‌, தெளிவில்லா இருட்டில்தான்‌ நாம்‌ சிக்கித்‌ தவிக்க நேரிடும்‌.

இரண்டாவது நாம்‌ கேட்க வேண்டிய கேள்வி, என்‌ ஆயுட்காலம்‌ குறுகியதோ . . . நீண்டதோ .. . . கிடைத்த வாழ்வை ‌... எப்படிப்‌ பயன்படுத்துகிறேன்‌ என்பதாகும்‌.

இயேசுவைப்போல குறுகிய காலமானாலும்‌ பெருமைக்குரியது செய்து வருகிறேனா? அல்லது ஏனோ தானோவென்று இழுத்துக்‌ கொண்டு காலத்தை விரயமாக்குகிறேனா?

மூன்றாவதாக, நாம்‌ கேட்க வேண்டிய அடுத்த கேள்வி, சமுதாயத்தில்‌ இன்று புரையோடிக்‌ கிடக்கும்‌ தீமைகளைப்‌ பார்த்து நான்‌ பயந்து ஒதுங்குகிறேனா? அல்லது அவற்றோடு எதிர்த்துப்‌ போராடி அவற்றை களைய முன்‌ வரும்‌ துணிவு எனக்கு உண்டா?

தந்‌தை பெரியார்‌ நாத்திகர்‌ என்ற பட்டம்‌ பெற்றவர்தான்‌. ஆனால்‌ அவர்‌ ஒரு தன்னிகரற்ற தலைவர்‌. கடும்‌ எதிர்ப்புகளுக்கு மத்தியில்‌ இயேசுவைப்போல கடுகளவும்‌ கவலைப்படாது, தன்‌ கருத்துகளை மக்கள்‌ முன்‌ வைத்தவர்‌. ஒரு பொதுக்‌ கூட்டத்தில்‌ அவர்‌ பேசும்போது ஒரு செருப்பு அவர்‌ மீது வீசப்பட்டது. அவர்‌ தயங்கினாரா? நகைச்சுவையோடு, ஒரு செருப்பை வீசினா எப்படி? இன்னொன்றையும்‌ வீசு. ஜோடியாகப்‌ பயன்படுத்தலாம்‌. அல்லது உனக்கும்‌ பிரயோசனம்‌ இல்லை. எனக்கும்‌ பிரயோசனம்‌ இல்லை என்று சொன்னார்‌. அன்று சாதித்‌ துவேசம்‌, தீண்டாமை போன்ற சமுதாயத்‌ தீமைகளைக்‌ களைவதில்‌ துணிச்சலுடன்‌ போராடியவர்தான்‌ தந்‌ைத பெரியார்‌. இத்தகைய துணிச்சலுடன்‌ அவர்‌ போராடி இருக்காவிடில்‌ இந்நேரம்‌ திமிங்கலங்கள்‌ அளவுக்கு அவை வளர்ந்திருக்கும்‌. ஆகவே தீமைகளை எதிர்த்து இறையரசை நிறுவ இயேசு மரணம்‌ வரைப்‌ போராடிய வீரத்தில்‌ நமக்கும்‌ ஒரு பங்கு அவசியம்‌ தேவை.

இறுதியாக, இயேசு எருசலேம்‌ நுழையும்‌ நிகழ்ச்சி உலக மக்களுக்கு இரு மாபெரும்‌ உண்மைகளை எடுத்துரைக்கிறது.

முதலாவதாக, கடவுள்‌ இந்த உலகத்தை எவ்வளவு அன்பு செய்கிறார்‌ என்பதை இயேசுவின்‌ மரணத்தின்‌ வழியாகக்‌ காட்ட விரும்புகிறார்‌. உயிரைக்‌ கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை (யோவா. 15:13) என்பதை வெளிப்படுத்துகிறார்‌.

இரண்டாவதாக, மன்னிப்பு வழங்க சிலுவையில்‌ மன்றாடி மனிதன்‌ எந்த அளவுக்கு மன்னித்து அன்பு செய்ய வேண்டும்‌ எனவும்‌ காட்டுகிறார்‌ (லூக்‌. 23:34).

இந்த மறை உண்மைகளை நாம்‌ உணர்ந்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக்‌ கொள்வோம்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒசான்னாவின் உட்பொருள் என்ன?

ஒருமுறை எங்கள் குருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: "நற்செய்தியை எடுத்துரைக்க ஏழை எளியவர்கள் வாழ்ந்த கலிலேயாவிற்கு இயேசு சென்றார். சிலுவையிலே அறையப்பட பணக்காரர்களும், படித்தவர்களும் வாழ்ந்த யூதேயாவிற்குச் சென்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் நற்செய்தியைப் போதிக்க விரும்பினால் ஏழைகளைத் தேடிச்செல்லுங்கள்; சிலுவையிலே அறையப்படவேண்டும் என விரும்பினால் பணக்காரர்களைத் தேடிச்செல்லுங்கள்.”

எருசலேம் பெருநகர். அது பணம் படைத்தவர்கள் நிறைந்த நகர். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் வாழ்ந்த நகர் அது! அங்கே "தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்" (மாற் 14:1).

எருசலேமில் படப்போகும் பாடுகள் அனைத்தையும் பற்றி இயேசு மூன்று முறை முன் அறிவித்திருந்தார் (லூக் 22:15; 24:26; 24:46). தமக்கு நடக்கப்போவது அனைத்தையும் அறிந்துதான், தெரிந்துதான் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தார்.

இதோ இன்று தன்னையே சிலுவைச் சாவுக்குக் கையளிக்க இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகின்றார்.

ஏன் இந்தச் சாவு? (முதலாம், இரண்டாம் வாசகங்கள், மாற் 11:9-10).

இன்று ஓசான்னா பாடுகின்றவர்கள் நாளை இவனைச் சிலுவையில் அறையும் (மாற் 15:14) என்று கூக்குரலிடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவா?

இன்று நமது பாத்திரத்தில் தொட்டு உண்பவன் (மாற் 14:20) நாளை காட்டிக்கொடுப்பான் (மாற் 14:44) என்பதை எடுத்துரைக்கவா?

சீடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் துணிவான் (மாற் 14:66-72) என்பதைப் படம்பிடித்துக்காட்டவா?

பதவியிலிருப்பவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள கடவுளைக் கூட கல்லறைக்கு அனுப்பத் தயங்கமாட்டார்கள் (மாற் 15:15) என்பதைப் பறைசாற்றவா?

எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு மாபெரும் உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்க இயேசு இன்று எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்கின்றார்.

முதல் உண்மை : கடவுள் இந்த உலகத்தை எவ்வளவு அன்பு செய்கின்றார் என்பதை இயேசு தம் மரணத்தின் வழியாக உலகிற்குப் போதிக்க விரும்பினார். உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு ஒன்று இருக்க முடியாது. தம் உயிரைக் கொடுத்து, இதுதான் அன்பின் ஆழம், அகலம் என்கின்றார் இயேசு.

இரண்டாவது உண்மை : "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ” (லூக் 23:34) எனச் சொல்லி ஒரு மனிதன் எந்த அளவுக்கு இந்த உலகை அன்பு செய்ய முடியும் என்பதை இயேசு சிலுவையில் தொங்கியபோது அவர் நிகழ்த்திய மறையுரை வழியாக சுட்டிக்காட்ட விரும்பினார்.

இன்றைய ஆரவாரத்திற்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைக் கண்டுபிடித்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்வோம்.

மேலும் அறிவோம் :

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒர் அப்பா தனது சிறிய மகனைத் தன் வீட்டிற்கு முன் இருந்த மரத்தின் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் உட்காரச் சொல்லி, அவனிடம், "மகனே! கீழே குதி! நான் உன்னைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அவன் முதலில் மறுத்தாலும், அப்பாவின் வாக்குறுதியை நம்பி கீழே குதித்தான். ஆனால் அப்பா அவனைப் பிடித்துக் கொள்ளாமல் விட்டு விட, அவள் தரையில் விழுந்து கால் பிசகிக் கொண்டு அழுதான், அப்பா அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "மகனே, உலகில் யாரையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்றார்.

இவ்வுலகில் நாம் யாரையும் எளிதில் நம்பிவிட முடியாது. உன் பகைவன் உன்னைக் கைகூப்பி வணங்கினால் அவனை நம்பாதே; ஏனெனில் அவனுடைய கூப்பிய கைகளிலே கத்தியை வைத்திருப்பான் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர், "தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” (குறள் 828)

கிறிஸ்து பல அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்தபோது பலர் அவரை நம்பினர், ஆனால் கிறிஸ்துவோ அவர்களை எளிதில் நம்பிவிட வில்லை. "இயேசு அவர்களை நம்பி விடவில்லை. ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்” (யோவா 2:25)

மனிதர்களைப் பற்றிய இயேசுவின் கணிப்புச் சரியானதே. ஏனெனில், குருத்து ஞாயிறு அன்று. "ஓசன்னா; ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக' (மாற் 11:9) என்று ஆர்ப்பரித்த அதே மக்கள், பெரிய வெள்ளிக்கிழமையன்று, 'அவனைச் சிலுவையில் அறையும்" (மாற் 15:13) என்று கூச்சல் இட்டனர், எலும்பில்லாத நாக்கு எப்படியும் பேசும், "போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன" (யாக் 3:10).

கிறிஸ்துவோ, “போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்" என்ற மனநிலையுடன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமச்சீர்நிலையில் வாழப் பழகிக் கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா சித்தரிக்கும் துன்புறும் இறை ஊழியனாக, கிறிஸ்து தம்மை அடிப்போர்க்கு முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் கையளித்தார்; நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தமது முகத்தை மறைக்க வில்லை (எசா 50:6). அவர் மனிதர் தருகின்ற மகிமையைத் தேடாமல் (யோவா 5:41), அவரது தந்தை அவருக்கு அளிக்கவிருந்த மகிமை ஒன்றையே நாடினார் (யோவா 8:54), இன்றைய இரண்டாம் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது போல, கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மாட்சிமைப்படுத்தினான் (பிலி 2:6-11).

உலக வாழ்வின் எதார்த்தநிலை: பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா; வேதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லை பந்தமில்லை " (திரைப்படப்பாடல்), நாம் வசதியாக வாழும்போது நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், நாம் நொடித்துப் போகும்போது தலை மறைவாகிவிடுகின்றனர். எனவே, இன்பத்தில் தலை கால் தெரியாமல் அலையவோ, துன்பத்தில் மனமுடைந்து போகவோ கூடாது." வளமையிலும் வாழத் தெரியும்; வறுமையிலும் வாழத் தெரியும். நிறைவோ குறைவோ, எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12) என்று கூறிய புனித பவுலின் மனநிலையைப் பெறவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் மாற்கு எழுதியுள்ள படி நமது ஆண்டவரின் பாடுகள் வாசிக்கப்பட்டன. இந்நற்செய்தியில் வருகின்ற இருவர் நாம் இயேசுவை எப்படி பின்பற்றக்கூடாது, எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.

இயேசு பிடிபட்டபோது, ஓர் இளைஞர் வெறும் உடம்பின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவின் பின்னே சென்றார். அவரைப் பிடித்தபோது, அவர் போர்வையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார் (மாற் 14:51-52). இந்த இளைஞரைப் போல நாம் இயேசுவைப் பின்பற்றக்கூடாது.

சிலர் இயேசுவின்மீது உண்மையான பற்றுறுதியின்றி. ஒருசில கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்களுடைய உயிருக்கு ஆபத்து வரும்போது, அக்கொள்கைகளையும் இலக்குகளையும் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பி ஓடிவிடுகின்றனர்.

இன்று ஒரு சில போலி இறையியலார் உள்ளனர். இவர்கள் இறையியல் சந்தையில் பேரம் பேசுகின்றவர்கள்: மலிவுச் சரக்குகளை விலைக்கு வாங்குபவர்கள், விற்பவர்கள், பங்குதாரர்கள், இவர்களின் இறையியல் அங்காடி இறையியல்". ஓர் இறையியல் சந்தையில் சரிவு ஏற்பட்டால், தயங்காமல் மற்றோர் இறையியல் சந்தையைத் தேடிச் செல்வார்கள்.

பொதுநிலையினர்களிலும் ஒருசிலர் பல்வேறு பிரிவினைச் சபைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு உறுதியான நிலைப்பாடில்லை. திசைமாறிய பறவைகள், இவர்களுக்கு இயேசு கூறுவது: “கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62)

கிறிஸ்து சிலுவையில் உரக்கக் கத்தி உயிர் நீத்த போது, அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார் (மாற் 15:39). இவர் பிற இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரயேல் மக்களும், மறைநூல் அறிஞர்களும், மக்களின் மூப்பர்களும், தலைமைச் சங்கமும், ஆளுநரும், ஏன், வானகத் தந்தையும் கூட இயேசுவைக் கைவிட்ட நிலையில், (என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?), நூற்றுவர் தலைவர் இயேசுவைக் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட்டார்.

'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (மாற் 1:1) என்று தமது நற்செய்தியைத் தொடங்கிய மாற்கு, "இயேசு கடவுளின் மகன்" (மாற் 15:39) என்ற நூற்றுவர் தலைவரின் விசுவாச அறிக்கையுடன் தமது நற்செய்தியை முடிக்கிறார்.

இயேசுவின் இறைத்தன்மையைக் கூட மறுதலிக்கும் இறையியலார் வாழும் இக்காலத்தில், நூற்றுவர் தலைவரைப் பின்பற்றி இயேசுவின் இறைத்தன்மையில் அசையாத நம்பிக்கை வைப்போம், வேதனையோ நெருக்கடியோ, பசியோ ஆடையின்மையோ, சாவோ வாழ்வோ, வேறு எந்தச் சக்தியோ இயேசுவிடமிருந்து ஒருபோதும் நம்மைப் பிரிக்கவிடக் கூடாது (உரோ 8:38-39).

"இறக்கும் வரை நம்பிக்கையோடு இரு, அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்" (திவெ 2:10).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நிறம் மாறுவதும் நிலை மாறுவதும்

குருத்து ஞாயிறு நிகழ்வு மக்களின் நிலையற்ற தன்மையின் தெளிவான வெளிப்பாடு. ஒருநாள் ஓசன்னா' பாடி வாழ்த்தும் மந்தைத்தன மக்கள் கூட்டம் மறுநாளே ஒழிக' என்றும் கூச்சலிடத் தயங்காது.

ஆனால் கிறிஸ்துவின் பாடுகளோ அவரது நெஞ்சுறுதியின் நிலைப்பாடு. தலைமைக் குருக்களின் சதித்திட்டமாகவோ அல்லது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த விதியின் விளையாட்டாகவோ பார்த்தல் தவறு. சிலுவை மரணம் என்பது தந்தை கடவுளின் நித்திய திட்டம். அதனால்தான் இயேசு சிலுவைப் பாடுகளை, கல்வாரி மரணத்தை -

 1. மனமுவந்து ஏற்றார் இறைவாக்கினர் எசாயாவின் துன்புறும் ஊழியனாக. இறைவாக்கு அவரில் நிறைவு காண வேண்டும்.
 2. நெஞ்சுறுதியுடன் ஏற்றார் இலக்குத் தெளிவு இருந்த காரணத்தால். இறைவனின் திருவுளம் அவரில் நிறைவு பெற வேண்டும்.
"ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் 
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் 
இஸ்ரயேல் மக்களை ஆளவாரும்- எம்
இயேசுவே தேவனே எழுந்தருளும்" 

- பட்டி தொட்டிகளில் எல்லாம் இன்று ஒலிக்கும் பழந்தமிழ்ப் பாடல் இது! "ஓசன்னா, தாவீதின் புதல்வா ஓசன்னா" உலகின் மூலை முடுக்கெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கும். இந்த ஓசன்னாவின் பின்னணி என்ன?

அன்று யூதர்களுக்குக் கூடாரத் திருவிழா. வீதியெல்லாம் விழாக்கோலம். விண்ணைப் பிளந்தன வெற்றி முழக்கங்கள். அந்த வெற்றி முழக்கச் சுலோகம் என்ன? “ஆண்டவரே, மீட்டருளும். ஆண்டவரே, வெற்றி தாரும்" (தி.பா.118:25). ஆண்டவரே மீட்டருளும் என்பதற்கு எபிரேயச் சொல் "ஓசன்னா"

போருக்குப் புறப்படும் போது ஓசன்னா ' அபயக் குரலாக எழும்பும். வெற்றி பெற்றுத் திரும்பும் போது ஒசன்னா' வெற்றி முழக்கமாக அதிரும். ஆக ஓசன்னா என்பது ஒரு செபம், ஓர் அபயக் குரல், ஒரு வெற்றியின் வீரமுழக்கம், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு, புகழ்ச்சியின் கூக்குரல்.

அந்நியர் ஆட்சியில் அடிமைகளாக அல்லலுக்கும் அவலத்துக்கும் ஆளாகிய சூழலில் இறைவன் தலையிட்டுத் தங்களைக் காப்பாற்றுவார் என்பது இஸ்ரயேலரின் நம்பிக்கை அனுபவம். எகிப்தில் மோசே வழியாக விடுதலை கண்ட பாலஸ்தீனப் பாமரர்கள் இயேசுவின் உருவில் புதிய மோசேயைக் கண்டார்கள். இயேசுவின் பணிவாழ்வுக் காலமாகிய மூன்று ஆண்டுகளும் அந்த எளிய மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் பூத்திருந்த அரசியல் மெசியா' என்ற எதிர்பார்ப்பு, திடீரென உணர்ச்சிப் பிழம்பாகக் கொப்பளித்ததன் விளைவுதான் குருத்தோலைப் பவனி.

ஆன்மீக மீட்பராக அல்ல, அரசியல் மீட்பராக, பலியாகும் தியாகச் செம்மலாக அல்ல, பவனி வரும் மகிமையின் மன்னராக அரச மரியாதையைச் செலுத்தினர். 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா! யூதர்களின் அரசே வாழி!” (இவைகள் எல்லாம் மெசியாவுக்கான அடைமொழிகள்) என்று விண்ணதிர முழங்கினர். இந்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டமும் நமது உள்ளத்தையும் நெகிழ வைக்கின்றன. இயேசு கூட இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கல்வாரிச் சிலுவையைத் தவிர்த்து அரசியல் அரியணை நோக்கிச் சென்றிருக்கலாமோ என்று நினைக்கக் கூடத் தோன்றுகிறது.

இயேசுவைப் பொருத்தவரை அவரது மகிமை, மாண்பு, உயர்வு எல்லாம் கோதுமை மணியாக மடிவதில் மட்டுமே, எனவே எருசலேம் நோக்கிய இயேசு இறுதிப் பயணத்தில், மக்களுக்காகத் துன்புறும் ஊழியனாக, பலருடைய பாவங்களைச் சுமந்து செல்லும் செம்மறியாக, நம்மை நலமாக்கும் தண்டனையைத் தன்மேல் ஏற்றுக் கொள்பவராக வருகிறார். இது இஸ்ரயேல் மக்களின் எண்ணத்தைக் கடந்தது, எற்றுக் கொள்ளக் கடினமானது. எனவே பெரிய வெள்ளி அன்று ஓசன்னா பாட இயலவில்லை, கொல்லும் கொல்லும் என்று தான் கூக்குரலிட முடிந்தது.

இயேசுவை மூன்று நிலைகளில் தொடக்கக் காலத் திருச்சபை காண்கிறது. (பிலிப்.2:5-11)

 1. தந்தைக்கு ஈடான தெய்வீக நிலை. விண்ணகத் தந்தையோடு தெய்வீக சமத்துவத்தில் வாழ்ந்த நிலை.
 2. அடிமையின் தன்மை பூண்டு சிலுவைச் சாவு வரை அர்ப்பணித்துத் துன்புறும் மண்ணக வாழ்வு நிலை.
 3. மூவுலகும் மண்டியிட இயேசுவே ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கையிடத் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மகிமை நிலை.

இவற்றில் முதலாவது, மூன்றாவது நிலைகளில் இயேசுவைக் கண்டு பெருமிதம் கொள்ள நாம் தயார்; ஆனால் இரண்டாவது நிலையை ஏற்றுக் கொள்ளத் தயக்கம்!

முதல் உலகப் போர் முடிந்த நேரம். பிரான்சும் இங்கிலாந்தும் பயங்கரமாக மோதிக் கொண்ட போர் அது. பிரான்சு நாட்டு வீரன் ஒருவன் காயமுற்று இங்கிலாந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தான். சிகிச்சை பெறும் வீரர்கள் தனது நாட்டினர்தானா என்று அறிய ஒவ்வொரு வீரனையும் உன் தலைவன் யார்?' என்று கேட்டான் இங்கிலாந்து நாட்டுத் தளபதி. பிறநாட்டு வீரன் என்றால் அந்த இடத்திலேயே அந்தக் கணத்திலேயே கொன்றுவிடக் கட்டளையிட்டான், பிரான்சு நாட்டு வீரனிடம் கேட்ட போது அவனது பதில் இங்கிலாந்து நாட்டுத் தளபதியை வியக்க வைத்தது. “எனது நெஞ்சைக்குத்திப் பிளந்து பாருங்கள் அங்கே என் தலைவன் நெப்போலியன் இருப்பான்” என்று கூறினானாம். அவனது அரச பக்தியை, அசாத்தியத் துணிவைக் கண்டு அவனை விடுவித்து விட்டனராம்.

தன் உயிர் போய்விடும் என்ற நிலையிலும் கூட, தன் தலைவன் நெப்போலியன் என்று நெஞ்சுறுதியுடன் சொன்ன வார்த்தைகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஓசன்னா என்று உண்மையில் பாடினால் இயேசுவின் பாடுகளிலும் பங்கேற்க வேண்டும் அவருடைய சீடன்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சாவை ஏற்றுக்கொண்ட இயேசு

நிகழ்வு

2001 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், அமெரிக்காவில் இருந்த இரட்டைக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானக்கோர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தார். ‘மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின்மீதே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்களா?’ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கின; தங்களது பாதுகாப்பைக் குறித்து எல்லா நாடுகளும் கேள்வி எழுப்பத் தொடங்கின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு நடுவில், தனது உயிரைத் துச்சமென நினைத்து 2700 பேர்களுடைய உயிர்களைக் காப்பாற்றி, இறுதியில் தன் உயிரை இழந்த ரிக் ரெஸ்கோர்லா (Rick Rescorla) என்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.

இந்த ரிக் ரெஸ்கோர்லா இரட்டைக் கோபுரத்தின், தெற்குக் கோபுரத்தின் தலைமைக் காவலராக இருந்தவர். வடக்குக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்ட இவர், தெற்குக் கோபுரத்தில் இருந்தவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்தவர்களிடம், நேரிடப்போகும் ஆபத்தைச் சொல்லி, அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார். இவ்வாறு அவர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக் குறித்துச் சொல்லிக்கொண்டு போகும்போது, அந்தக் கோபுரத்தின்மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அவர் இறந்து போனார்.

ஆம், தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிக் ரெஸ்கோர்லா தன்னையே சாவுக்குக் கையளித்தார். ஆண்டவர் இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்புப் புதுவாழ்வளிக்க தன்னையே தியாகமாகத் தந்தார். அதைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்ற பாடுகளின் குறித்து ஞாயிறு உணர்த்துகின்றது. இயேசு ஏன் பாடுகள் படவேண்டும், அவருடைய பாடுகளால் நாம் அடையும் பேறுபலன் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு

இவ்வுலகில் எதுவுமே இல்லாதவர்களும், எந்தவோர் அதிகாரத்திலும் இல்லாதவர்களும் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில் எந்தவொரு வியப்புமில்லை; ஆனால் எல்லாம் இருந்தும் ஒருவர் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில்தான் வியப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தவர், அப்படிப்பட்டவர் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). மேலும் அவர் கடவுள் வடிவில் விளங்கினார்; எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார் (மத் 28: 18). அப்படிப்பட்டவர் தம்மையே வெறுமையாக்கி, மனிதருக்குக் ஒப்பாகி, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.

சிலுவைச்சாவானது நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் தரப்பட்டது. இத்தண்டனையானது முதலில் பாரசீக மன்னன் முதலாம் தாரியுஸ் என்பவனால் கி.மு 519 ஆம் ஆண்டு, பாபிலோனில் தனக்கெதிராகக் கலகம் செய்த மூவாயிரம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கி.மு. 88 ஆண்டு யூதேயாவைச் சாந்த தலைமைக்குருவான அலெக்சாண்டர் ஜன்னேயுஸ் (Alexander Janneaus) என்பவரால் பரிசேயச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எண்ணூறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் உரோமையர்களால் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனையானது, கி.பி நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்த முதலாம் காண்டண்டைன் என்பவரால் நிறுத்தப்பட்டது.

இத்தகைய கொடிய தண்டனையை கடவுள் வடிவில் விளங்கியவரும், எல்லா அதிகாரமும் தன்னகத்தே கொண்டவருமான இயேசு தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் வியக்குரியதாக இருக்கின்றது. இயேசு சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டதன் மூலம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி 5: 8)

கடவுளால் மிகவும் உயர்த்தப்பட்ட இயேசு

சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திகொண்ட இயேசுவை தந்தைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுகின்றார். அப்படியெனில், நாம் இயேசுவைப் போன்று கீழ்ப்படிதலுடனும் தாழ்ச்சியுடனும் வாழ்கின்றபொழுது கடவுள் நம்மை மிகவும் உயர்த்துவார் என்பது உறுதி.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியரைக் குறித்துப் பேசுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் துன்புறும் ஊழியர் “கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்; ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்” என்கின்றார். ஆண்டவருக்குச் செவிகொடுப்பதாகவும் அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும் துன்புறும் ஊழியர் சொல்கின்ற இந்த வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இஸ்ரயேல் மக்களிடம் கடவுள், “மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி இருந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்” (எசா 1: 19-20) என்பார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு இணங்கவோ, அவருக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியோ இல்லை. இவ்வாறு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் வாளுக்கு இரையானார்கள்; ஆனால் துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால், அவர் கடவுளால் மிகவே உயர்த்தப்பட்டார். ஆகவே, நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவரால் நிச்சயம் உயர்த்தப்படுவோம்.

துணை நிற்கும் இறைவன்

ுன்புறும் ஊழியராம் இயேசுவைப் போன்று, கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் நம்மையே கையளிக்கின்றபொழுது இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் சொல்லப்படுவதுபோல் அடிக்கப்படலாம்; காறி உமிழப்படலாம். அவமானப்படுத்தப்படலாம். இன்னும் பல்வேறு துன்பங்களை நாம் அனுபவிக்கலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனந்தளர்ந்து போய்விடாமல் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழலாம் என்கிறது இன்றைய முதல் வாசகம், இதை, “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்” என்று இன்றைய முதல்வாசகத்தின் இறுதியில் வருகின்ற வார்த்தைகளில் காணலாம். இயேசுகூட இதையேதான், “நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16: 32) என்பார். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் அர்ப்பணித்து வாழ்கின்றபொழுது, சவால்களையும் துன்பங்களையும் வரலாம். அவற்றைக் கண்டு அஞ்சாமல், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், அவர் தரும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

‘வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்கவேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும்’ என்பார் சி. என். அண்ணாத்துரை. எனவே, இந்த உலகை மீட்க வந்த இயேசு அதற்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தம்மையே தந்தது போன்று, நாமும் இந்த உலகை உய்விக்க நம்மையே தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்மோடு துன்பத்தில்

'அவர் அடிமையின் உருவை ஏற்றி தம்மையே வெறுமையாக்கினார்' (காண். பிலி 2:7) என்னும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். இன்று இயேசுவோடு இணைந்து நாமும் எருசலேமுக்குள் நுழைகிறோம். எருசலேம் என்பது இயேசுவின் வாழ்வில் அவருடைய நொறுங்குநிலையின் உச்சகட்ட இயங்குதளமாகவும், அவருடைய பணி வாழ்வின் இலக்காகவும், உயிர்ப்பு என்னும் மாற்றத்தின் தளமாகவும் இருந்தது.

இயேசு ஓர் அடிமை போல நம்முன் நிற்கிறார். பெரிய வியாழன் அன்று தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் பணியாளர் அல்லது அடிமை போலவும், புனித வெள்ளி அன்று, துன்புறும் மற்றும் வெற்றிபெறும் பணியாளனாகவும் இருக்கின்றார். நமக்குப் பணிபுரிவதன் வழியாகக் கடவுள் நம்மை மீட்டுக்கொண்டார். நாம்தான் இறைவனுக்குப் பணிபுரிகிறோம் எனப் பல நேரங்களில் நினைக்கிறோம். இல்லை! அவரே தாமாக முன்வந்து நமக்குப் பணிபுரிகிறார். ஏனெனில், அவரே நம்மை முதலில் அன்பு செய்தார். பதிலன்பு பெறாமல் அன்பு செய்வது என்பது கடினம். கடவுள் நமக்குப் பணிபுரியமாறு நாம் அனுமதிக்கவில்லை என்றால் அது இன்னும் கடினம்.

கடவுள் நமக்கு எப்படிப் பணி செய்தார்? தன் உயிரை நமக்காகக் கொடுப்பதன் வழியாக. நாம் அவருக்கு மிகவும் பிரியமானவர்கள், நெருக்கமானவர்கள். அவர் நம்மேல் கொண்ட அன்பினால் தன் உயிரை நமக்காகப் பலியாக்கினார், நம் பாவங்களைத் தன்மேல் ஏற்றுக்கொண்டார். எந்தவொரு முணுமுணுப்பும் இன்றி, தாழ்ச்சியோடும், பொறுமையோடும், அடிமையின் கீழ்ப்படிதலோடும், அன்போடும் ஏற்றுக்கொண்டார். தந்தை அவருடைய பணியில் அவரை உயர்த்தினார். அவர்மேல் விழுந்த கொடிய தீமையை தந்தை விலக்கவில்லை. மாறாக, தன் மகனை உறுதிப்படுத்தினார். இதன் வழியாக, நன்மையால் தீமையை வென்றார் கடவுள். அன்பினால் அவர் அப்படிச் செய்தார். அந்த அன்பே இறுதிவரை நீடிக்கிறது.

அன்பு செய்பவர்கள் அனுபவிக்கும் இரண்டு கொடிய துன்பநிலைகளை ஏற்கும் அளவுக்கு ஆண்டவர் நம்மை அன்பு செய்தார். அவை எவை? துரோகமும் கைவிடப்பட்ட நிலையும்.

(அ) துரோகம். தன்னோடு இருந்த சீடர்களில் ஒருவரே தன்னைப் பணத்திற்கு விற்கும் நிலையில் துரோகம் அனுபவித்தார் இயேசு. 'ஓசன்னா!' என்று பாடிய மக்கள் கூட்டம், 'சிலுவையில் அறையும்' என்று முழங்கி அவருக்குத் துரோகம் இழைத்தது. அநீதியாக அவருக்குத் தீர்ப்பிட்ட அன்றைய சமய அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. அவர்மேல் கைகளைக் கழுவிய அரசியல் அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. சிறிய மற்றும் பெரிய நிலைகளில் நாம் அனுபவித்த துரோகங்களும் இன்று நம் நினைவில் நிற்கலாம். நம் ஆழ்மனத்திலிருந்து எழுகின்ற ஒரு வகையான ஏமாற்றம் வாழ்வின் பொருளையே சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்குகிறது. நாம் அன்பு செய்யப்படவும், அன்பு செய்யவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆகையால், நமக்கு அருகில் இருக்கும், நம்மை அன்பு செய்யும், நமக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் ஒருவரால் ஏமாற்றப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அன்பே உருவான கடவுளுக்கு ஏமாற்றம் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும்!

நம்மை நாமே உற்றுப் பார்ப்போம். நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் நம்முடைய பிரமாணிக்கமின்மை நமக்கத் தெரியும். எவ்வளவு பொய்மை, வெளிவேடம், இரட்டைத் தன்மை! நாம் மறுதலித்த நன்மைத்தனங்கள் எத்தனை! நாம் உடைத்த வாக்குறுதிகள் எத்தனை! நாம் நிறைவேற்றாத முடிவுகள் எத்தனை! நம்மை விட நம் இதயத்தை நன்கு அறிந்தவர் நம் ஆண்டவர். நாம் எவ்வளவு வலுவற்றவர்கள் என்பதும், எவ்வளவு இருமனம் கொண்டவர்கள் என்பதும், எத்தனை முறை தவறி விழுகிறோம் என்பதையும், எழுந்து நிற்பது எத்தனை கடினம் என்பதையும், சில காயங்களை நாம் குணமாக்கவே இயலாது என்பதையும் அறிந்தவர் அவர். இறைவாக்கினர் ஓசேயா வழியாக அவர் நமக்குச் சொல்கிறார்: 'அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன். அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்' (ஓசே 14:4). நம் பிரமாணிக்கமின்மையையும் துரோகங்களையும் அவர் தன்மேல் சுமந்துகொண்டு நம்மைக் குணமாக்குகிறார். பயம் மற்றும் ஏமாற்றத்தால் நாம் நழுவிச் செல்வதற்குப் பதிலாக, சிலுவையின்மேல் நம் கண்களை நாம் பதிய வைக்கலாம். அவரை நோக்கி நாம் சொல்வோம்: 'இதோ! என் பிரமாணிக்கமின்மை! நீர் அதை எடுத்துக்கொண்டீர் இயேசுவே! உம் கரங்களை விரித்து அன்பினால் நீர் எனக்குப் பணி புரிகிறீர். நீர் எனக்குத் தொடர்ந்து உறுதியளிக்கிறீர். உம் உடனிருப்பால் நான் தொடர்ந்து முன்னேறுவேன்!

(ஆ) கைவிடப்படுதல். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு சிலுவையிலிருந்து ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றார்: 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?' (மாற் 15:34. மேலும் காண். மத் 27:46). இவை மிகவும் வலிமையான வார்த்தைகள். இயேசுவோடு உடனிருந்தவர்கள் அவரைக் கைவிட்டு ஓடினர். ஆனால், தந்தை அவரோடு இருந்தார். இப்போது தனிமையில் முதல் முறையாக, 'இறைவனே!' 'கடவுளே!' எனப் பொதுப்படையாக அழைக்கிறார் இயேசு. 'ஏன்?' என்ற வாழ்வியல் கேள்வியைத் தொடுக்கின்றார். 'ஏன் என்னைக் கைவிட்டீர்?' எனக் கேட்கின்றார். 'நீரும் என்னைக் கைவிட்டது ஏன்?' என்று கேட்பது போல இருக்கிறது இக்கேள்வி. இவ்வார்த்தைகள் திருப்பாடலின் வார்த்தைகள் (திபா 22:1). இயேசு தன் விவரிக்க இயலாத துன்பத்தை இறைவேண்டலுக்கு எடுத்துச் செல்கிறார். இருந்தாலும், அவர் வறண்ட நிலையை அவர் உணர்ந்தார் என்பதே எதார்த்தம். கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை உணர்கின்றார் இயேசு.

இது ஏன் நடந்தது? நமக்காகவே இது நடந்தது. நமக்குப் பணிபுரியவே இப்படி நடந்தது. நம் கண்முன் பெரிய சுவர் எழும்பி, பாதைகள் அடைக்கப்படும்போது, வெளிச்சம் இல்லா வழியில் நாம் நின்று தப்பிக்கும் வழியறியாமல் நிற்கும்போது, கடவுளும் நமக்கு மறுமொழி தராத போது நாம் தனியாய் இல்லை என்று நமக்கு நினைவூட்டவே இது நிகழ்ந்தது. அனைத்திலும் நம்மைப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே, தான் அனுபவித்திராத இந்த உணர்வையும் அனுபவிக்கிறார் இயேசு. நமக்கமாகவே இதை அனுபவித்த அவர் நம்மிடம் சொல்கிறார்: 'அஞ்சாதே! நீ தனியாக இல்லை. உன் வறண்ட நிலையை, தனிமையை நானும் அனுபவித்துள்ளேன்!' இந்த அளவுக்கு அவர் நமக்குப் பணிவிடை புரிந்தார். துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை அறியும் அளவுக்கு நம் துன்பத்துக்குள் அவர் தன்னையே ஆழ்த்தினார். இன்று, பெருந்தொற்று நம்மை விட்டு அகலாத நிலையில், தேர்தல் என்ற பெயரில் போலி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் நிலையில், அரசு என்ற நிலையில் மக்கள் துன்பங்கள் பல அனுபவிக்கும் நிலையில், நாமும் துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலை சூழ்ந்து செய்வதறியாது நிற்கின்றோம். இயேசு இன்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்: 'துணிவோடிரு! உன் இதயத்தை என் அன்பிற்குத் திற! உனக்கு வலுவூட்டும் கடவுளின் ஆறுதலை நீ கண்டுகொள்வாய்!'

துரோகத்திற்கு ஆளாகி, கைவிடப்பட்ட நிலையை ஏற்று நமக்குப் பணிபுரிய ஓர் அடிமையான நம் கடவுளோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்ய முடியும்? நாம் அவரை இனியும் காட்டிக்கொடுக்க வேண்டாம். பிரமாணிக்கமில்லாமல் இருக்க வேண்டாம். வாழ்வின் முக்கியமானவற்றை நாம் புறந்தள்ளிவிட வேண்டாம். நாம் அவரை அன்பு செய்யவும் அயலாரை அன்பு செய்யவும் படைக்கபட்டோம். மற்றதெல்லாம் மறைந்துவிடும். இது ஒன்றே நிலைத்து நிற்கும். வாழ்வின் முக்கியமானவற்றையும் முதன்மையானவற்றையும் கைக்கொண்டு, மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவோம். அடுத்தவர்களுக்காகப் பணிபுரியாத வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை என்பதை மீண்டும் கண்டறிவோம். ஏனெனில், அன்பினாலேயே வாழ்க்கை அளக்கப்படுகிறது. ஆகவே, இந்த நாள்களில், நம் இல்லங்களிலும் ஆலயத்திலும் சிலுவையில் அறையுண்ட நம் ஆண்டவர் முன் நிற்போம். சிலுவையில் அறையப்படும் அன்புக்குத் தன்னையே தாழ்த்தி அவர் நம்மை அன்பு செய்தார். பணிபுரிவதற்காகவே நான் வாழ வேண்டும் என்னும் வரத்தை அவரிடம் கேட்போம். துன்புறுகின்ற அனைவருக்கும் நம் கரம் நீட்டுவோம். நம்மிடம் என்ன குறைவாக இருக்கிறது என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். நாம் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதைப் பற்றிக் கவலைப்படுவோம்.

'இதோ! நான் பற்றிப் பிடித்துப் பாதுகாக்கும் என் ஊழியன்!' என்று தன் மகனுடைய துன்பத்தில் உடனிருந்த தந்தை, நம்மோடு உடனிருந்து பணிபுரிவதற்கான நம் முயற்சிகளில் துணைசெய்கின்றார். அன்பு செய்தல், இறைவேண்டல் செய்தல், மன்னித்தல், அக்கறை காட்டுதல் என்பவை நம் குடும்பத்தில் தொடங்கி எங்கும் தொடரட்டும். இவை உண்மையாகவே கடினமானவை. இவை சிலுவைப் பாதையாக நமக்கு இருக்கலாம். பணிவிடையின் பாதை வெற்றியானது, வாழ்வு தருவது. அதன் வழியாகவே நாம் மீட்கப்படுகிறோம். இன்றைய நாள் இளைஞர்களின் நாள் என்று திருஅவை கொண்டாடுகிறது. வாழ்க்கை உங்களை அழைக்கிறது. இறைவன் உங்களை அழைக்கிறார் என்பதை உணருங்கள். உங்கள் வாழ்வைக் கடவுளுக்காகவும் ஒருவர் மற்றவருக்காகவும் பயப்பட வேண்டாம். நாம் நம்மையே மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை என்பது ஒரு கொடை என்பதை நாம் உணர முடியும்.

நிபந்தனைகள் இல்லாமல் அன்பிற்கு ஆம் என்று சொல்லும்போது மட்டுமே ஆழ்ந்த மகிழ்ச்சி நமக்குச் சொந்தமாகும். அப்படிப்பட்ட 'ஆம்!' என்பதுதான் இயேசுவின் வார்த்தைகயாக இருந்தது.

இறுதியாக,

நம்மோடு துன்பத்தில் அவரோடு நிற்பதால் துன்பத்தில் நாம் தனிமையில் இல்லை!

புனித வாரம் நமக்கு அருளின் காலமாக இருப்பதாக!

(மேற்காணும் மறையுரை, கடந்த ஆண்டு திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு அன்று நம் மதிப்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் மொழிபெயர்ப்பும் தழுவலும் ஆகும். நன்றி!)

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் - துன்பத்தின் வழி மீட்பின் காலமா?

ஒரு சிறுவன் மூளையில் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தான். சிறுவன் என்பதால் அவனுக்கு அந்த நோயைப்பற்றி விளக்க இயலாத நிலை பெற்றோருக்கு ஏற்பட்டது. மேலும் அந்நோய்க்கான மருத்துவமும் மிகவும் கடினமானது என்பதையும், வலி மிகுந்தது என்பதையும் எவ்வாறு விளக்குவது என்று அறியாத மனநிலையில் பெற்றோரும் ஒருபுறம் மிகுந்த வேதனை அடைந்தனர். ஒரு நாள் அச்சிறுவனின் தாயானவள் அப்பையனை தன் மடியில் அமர வைத்து அவன் தலைமுடியை வருடிக்கொண்டே "என் செல்லமே உனக்கு சீக்கிரம் உடல் சரியாகிவிட அம்மா உனக்கு சிறந்த மருத்துவ முறையை ஏற்பாடு செய்துள்ளேன். அம்மருத்துவ முறை உன்னை குணமாக்கிவிடும். ஆனால் கொஞ்சம் அதிகமாக வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது " நான் குணமாகிவிடுவேன். இதற்கு பின் எனக்கு வலிக்காது" என்று மனதில் நினைத்துக்கொண்டு வலியைத் தாங்கிக் கொள். நாங்கள் எல்லாரும் உன்னோடு இருக்கிறோம்" என்று கூறினார். அதை உள்வாங்கிக் கொண்டான் அச்சிறுவன். தன் தாய் கூறியவாறே என் வலிகளெல்லாம் இத்துடன் மறைந்து விடும் என்று தைரியத்தோடு சிகிச்சை முறைக்கு முழுமையாக ஒத்துழைத்து குணமடைந்தான் அச்சிறுவன்.

இன்று நாம் இயேசுவின் பாடுகளை நினைவு கூறுகிறோம். இயேசு இவ்வுலகத்தை மீட்க பாடுகளை ஏற்றுக்கொண்டார். இன்றைய முதல் வாசத்தில் இறைவாக்கினர் எசாயா இவ்வாறு இயேசுவைப்பற்றி கூறுகிறார். "அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை." (50:6) ஆம் கடவுள் வழங்கும் மீட்பை அனைவரும் பெரும்பொருட்டு அவமானங்களையும்,இழிசொற்களையும் உடல் வாதைகளையும் அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார். உடலும் மனதும் அவருக்கு வலித்தது. "என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என மனித இயல்பில் கடவுளை நோக்கி கதறினார். ஆனால் அவர் ஓடி ஒளிந்துகொள்ள வில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு எவ்வாறு துன்பங்களைச் சகித்துக்கொண்டார் என்பதை நம் மனக்கண்முன் மிக அழகாகச் சித்தரிக்கின்றது. கெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தும் அளவுக்கு மனதால் துன்பத்தை அணைத்துக் கொண்டார். தன் அன்புச் சீடர்கள் இருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் மறுதலிக்கப்பட்டும் வலியை அனுபவித்தார். தலைமமைக் குருக்கள், பிலாத்து போன்றோர் முன் விசாரணை என்ற பெயரில் துன்பத்தைத் தழுவினார். சிலுவையின் பயணத்தில் கசையடிகளும் ஏளனமும் அவரின் வேதனைகளைப் பெருக்கின. சிலுவை மரணம் அவரின் துன்பத்தின் உச்ச கட்டம்.

ஆனால் அத்தனை துன்பங்களும் நமக்கு மீட்பைக் கொண்டுவந்தன.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் இச்செய்தியை விளக்குகிறார்.
கடவுள் வடிவில் அவர் விளங்கினாலும் மீட்புத் திட்டத்திற்காய். மனிதனாய்ப் பிறந்து தன்னை முற்றிலும் தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்கின்ற அளவிற்குத் தன்னைக் கீழ்படுத்திக்கொண்டார் இயேசு. ஆனால் அவர் ஏற்ற துன்பங்கள் அவரை அப்படியே ஆழ்த்திவிடவில்லை. மாறாக உயர்த்திவிட்டது.

ஆங்கிலத்தில் "No pain no gain" என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். துன்பத்தின் வழியாகத்தான் நாம் நம் வாழ்வில் பல நன்மைகளை அடைய முடிகிறது. உடல் வலிக்க உழைத்தால்தான், ஊதியம் கிடைக்கும். நேரத்தைச் செலவிட்டு கேளிக்கைகள் பொழுதுபோக்குகள் சிற்றின்ப ஆசைகளையெல்லாம் கடந்து படித்தவர்கள் இன்று நல்ல IAS அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும் இன்னும் பல அரிய துறைகளில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்கள். ரேசன் கடையில் கால் வலிக்கக் காந்திருந்து பொருட்களை வாங்கும் ஏழைகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் காய்ச்சல் குணமாக கசப்பான மருந்தையும் ஊசியின் வலியையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாலும் அந்த வலிகளையும் துன்பங்களையும் இயேசுவைப் போல ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் நம்மால் மீட்பை அடைய இயலும்.

பல சமயங்களில் நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்பங்களைக் குறித்தத் தெளிவான புரிதல் இல்லாத போதும் நாம் துன்ப வாழ்வுக்குத் தள்ளப்படுகின்றோம்.அத்தகைய துன்பங்களை நாம் ஏற்றுக்கொள்ளவும் சிரமப் படுகின்றோம். ஆனால் இயேசு இதைப் பற்றிய மிகத்தெளிவான மனநிலையைப் பெற்றிருந்தார். அவருடைய அருஞ்செயல்களை மட்டும் கண்டு அவர்பால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை ஆரவாரத்தோடும் ஒலிவக்குருத்துக்களோடும் மன்னரைப் போல வரவேற்றார்கள். இயேசு அதை ஏற்றுக்கொண்டாலும் இதே மக்கள் தன்னை துன்பத்திற்கு உள்ளாக்குவார்கள் என முற்றிலும் உணர்ந்திருந்தார். இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையான மனநிலையோடு ஏற்றுக்கொண்டார் இயேசு. உலக காரியமானாலும் ஆன்மீகக் காரியமானாலும் இயேசுவின் இத்தகைய மனநிலை நமக்கு மிக அவசியம். எனவே துன்பங்களை நல்ல அணுகுமுறையோடு ஏற்று மீட்பினை அனுபவிக்க வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல் மீட்பின் இறைவா! அன்றாட வாழ்வில் உலகம் மற்றும் ஆன்மீக காரியங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை மீட்பை அடையும் வாயில்களாக மாற்ற எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு