மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்கால 5-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
எரேமியா 31:31 - 34 | எபிரேயர் 5:7-9 | யோவான் 12:20-33

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
நிகழ்ச்சி

இமய மலையின்‌ மீது ஏறிய இரு நண்பர்கள்‌, கடுமையான குளிர்‌ காற்று வீசியதால்‌ மேற்கொண்டு மலை ஏற முடியாமல்‌ தரையில்‌ அமர்ந்தனர்‌. அவ்வேளையில்‌ சற்று தூரத்திலிருந்து ஐயோ! நான்‌ சாகிறேன்‌ - என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌ என்ற அபயக்குரல்‌ கேட்டது. இருவரில்‌ ஒருவர்‌ மட்டும்‌ அபயக்குரல்‌ எழுப்பியவருக்கு உதவி செய்யப்‌ புறப்பட்டார்‌. மற்றவரோ போக மறுத்துவிட்டார்‌. அபயக்குரல்‌ எழுப்பியவரின்‌ அருகில்‌ சென்று அவரது உடலை நன்றாகத்‌ தேய்த்துவிட்டார்‌. அதன்‌ விளைவாக அவரது உடல்‌ சூடேறியது. புத்துயிர்‌ வந்தது. தன்னிடமிருந்த சூடான காப்பியையும்‌ கொடுத்து அவரைத்‌ தன்‌ தோள்‌ மேல்‌ சுமந்துகொண்டு தன்‌ நண்பரிடம்‌ வந்தார்‌. ஆனால்‌ அவர்‌ நண்பரோ ஏற்கெனவே இறந்து கிடந்தார்‌. இது கதை அல்ல. உண்மையான நிகழ்வு.

 • தன்‌ உயிரைக்‌ காத்துக்கொள்ள விரும்புபவன்‌ அதை இழந்து விட்டான்‌. பிறருக்காகத்‌ தன்‌ உயிரை இழக்க முன்‌ வந்தவர்‌ அதை காத்துக்கொண்டார்‌. இதுதான்‌ இன்றைய நற்செய்தி (யோவா. 12:25-26).
 • பிறருடைய துன்பத்தைத்‌ தன்‌ துன்பமாகக்‌ கருதாவிட்டால்‌ நமக்குப்‌ பகுத்தறிவு இருந்தும்‌ என்ன பயன்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌.

மாட்டிற்கும்‌, மனிதனுக்கும்‌ உள்ள வேறுபாட்டைக்‌ குறிப்பிடும்‌ அறிஞர்‌ சாக்ரட்டீஸ்‌, ஒரு மாடு மற்றொரு மாட்டைப்‌ பற்றி அக்கறை கொள்ளாது. ஆனால்‌ மனிதனோ அடுத்த மனிதனைப்‌ பற்றி அக்கறை கொள்வான்‌. இல்லையேல்‌ அவன்‌ நன்றாகத்‌ தின்று கொழுத்த பன்றி ஆவான்‌ என்கிறார்‌.

ஆண்டவர்‌ இயேசு கோதுமை மணி மண்ணில்‌ விழுந்து மடிய வேண்டும்‌ (யோவா. 12:24) என்கிறார்‌.

இழப்பை இழப்பாகக்‌ கருதினால்‌ இழப்பு இழப்புதான்‌. ஆனால்‌ இழப்பை இலாபமாகக்‌ கருதினால்‌ இழப்பு இலாபமே!

 • மரம்‌ பூவை இழக்கிறது அது மரத்திற்கு இழப்பா? இல்லையே. பூ காய்ந்தால்‌ தானே காய்‌ பிறக்கும்‌ - கனியும்‌ கிடைக்கும்‌.
 • மணமகன்‌, மணமகள்‌ ஒருவர்‌ ஒருவரிடம்‌ தங்களை இழக்கிறார்களே! அது இழப்பா? இல்லையே - இழந்தால்தானே இல்லறம்‌ நல்லறமாகப்‌ பிறக்கும்‌.

தங்கம்‌ நெருப்பில்‌ புடம்‌ போடப்படுகிறதே! சந்தனக்கட்டை அரைக்கப்படுகிறதே! அதனால்‌ மணம்‌ பரவுகிறதல்லவா! கோதுமை மணி மண்ணில்‌ விழுந்து தன்‌ உருவத்தை இழக்கிறதே அது இழப்பா! இல்லையே - இழந்தால்தானே 30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்கு பலன்‌ தரும்‌ மணியாக மாறுகிறது. எனவே தான்‌ இயேசு கோதுமை மணி மண்ணில்‌ விழுந்து மடியாவிட்டால்‌ அது அப்படியே இருக்கும்‌. மடிந்தால்தான்‌ மிகுந்த விளைச்சலை அளிக்கும்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌ (யோவா. 12:24) என்கிறார்‌.

இயேசு தான்‌ போதித்ததைச்‌ சாதித்துக்‌ காட்டியவர்‌. இரண்டாம்‌ வாசகத்திலே சிலுவையிலே உரத்த குரல்‌ எழுப்பியதாகவும்‌, கண்ணீர்‌ சிந்தி மன்றாடியதாகவும்‌ வாசிக்கக்‌ கேட்டோம்‌. ஆம்‌ தன்னை இழந்து நமது மீட்பின்‌ காரணரானார்‌.

கதை

ஓர்‌ அழகிய தோட்டம்‌. அழகான மரங்கள்‌. இலையுதிர்‌ காலம்‌ பிறந்தது. எல்லா மரங்களும்‌ இலைகளை இழந்து பட்ட மரங்கள்‌ போல்‌ காட்சி தந்தன. அந்த மரங்களைக்‌ காண வந்த குயில்‌ ஒன்று ஐயோ! உங்களைப்‌ பார்க்கப்‌ பாவமாக உள்ளதே! எங்களுக்குப்‌ புகலிடம்‌ கொடுக்கும்‌ உங்களிடமிருந்து இலைகளை இறைவன்‌ எடுத்துக்‌ கொண்டாரே - இழந்துவிட்டீர்களே என்றது.

அதற்கு அந்த மரங்கள்‌ இது இழப்பு அல்ல. வசந்த காலத்திற்குரிய தயாரிப்பு இது. இன்னும்‌ ஒரு மாதம்‌ சென்று வாருங்கள்‌. என்றும்‌ காணாத வனப்பான அழகை இலைகளோடடும்‌, பூக்களோடும்‌ காண்பீர்கள்‌ என்றன அந்த மரங்கள்‌.

முடிவரை

அருமையான சகோதரனே, சகோதரிகளே, பசுவானது உயிரோடு இருக்கும்‌ போது மக்களுக்குப்‌ பால்‌ கொடுத்து பலவிதத்தில்‌ பயன்‌ தருகிறது. ஆனால்‌ பன்றியோ செத்த பிறகுதான்‌ மக்களுக்குப்‌ பயன்படுகிறது. எனவேதான்‌ பசுவை மக்கள்‌ விரும்புகின்றனர்‌. அன்பார்ந்தவர்களே உயிரோடு இருக்கும்போதே நாம்‌ பிறருக்குப்‌ பயன்பட. வேண்டும்‌. செத்த பிறகு நாம்‌ தேடி வைத்த செல்வம்‌ யாருக்குப்‌ போகும்‌? அறிவிலியே! இன்றிரவே உன்‌ உயிர்‌ உன்னை விட்டுப்‌ பிரிந்துவிடும்‌. அப்போது நீ சேர்த்து வைத்தவை யாருடையதாகும்‌? (லூக்‌. 12:20).

உலகிற்கு நாம்‌ எதையும்‌ கொண்டு வந்ததில்லை. உலகத்தில்‌ இருந்து எதையும்‌ கொண்டு போகவும்‌ முடியாது (1 திமொ. 6:79. எனவே செல்வம்‌ உள்ளவர்கள்‌ நல்லதை செய்து நற்செயல்கள்‌ என்னும்‌ செல்வத்தைச்‌ சேர்ப்பார்களாக தாராள மனத்தோடு பகிர்ந்து கொள்வார்களாக (1 திமொ. 6:18).

இன்றைய முதல்‌ வாசகத்திலே கடவுள்‌ புதியதோர்‌ உடன்படிக்கைச்‌ செய்யப்‌ போவதாக எரேமியாஸ்‌ வாயிலாக வாக்களிக்கிறார்‌ (எரே. 31:31). இது இயேசுவின்‌ இரத்தத்தில்‌ நிறைவேறியது. இதன்‌ தனி முத்திரை பிறரை அன்பு செய்ய வேண்டும்‌ என்பது. அந்த அன்பின்‌ உச்சக்‌ கட்டம்தான்‌ உயிர்த்‌ தியாகம்‌ (யோவா. 15:13).

புனித அன்னை தெரெசா சொன்ன வார்த்தைகள்‌: என்னிடமிருப்பது எதுவும்‌ எனக்குச்‌ சொந்தமல்ல. என்னைத்‌ துண்டு துண்டாக வெட்டிப்‌ போடுங்கள்‌. ஒவ்வொரு துண்டும்‌ இயேசுவுக்கே சொந்தம்‌ என்றார்கள்‌.

எனவே விசுவாசம்‌ உள்ளவர்கள்‌ மட்டும்தான்‌ இழக்க முடியும்‌. இழப்பவர்‌ வாழ்வு பெறுவர்‌ என்பதே நம்‌ ஆண்டவர்‌ நமக்கு இன்று விடுக்கும்‌ செய்தி. அவரது பராமரிப்பில்‌ நம்பிக்கை கொண்டு பிறருக்காக நம்மையே இழக்கத்‌ தயாராக இருப்போம்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

துன்பத்தின் வழியாய் இன்பம்

அது ஒரு மலையடிவாரம். அங்கு அந்த ஊர் மக்கள் ஆண்டவனுக்கு ஓர் அழகான கோயிலைக் கட்டினார்கள். அந்தக் கோயிலுக்குள் வைக்க கடவுளின் சுரூபம் ஒன்று தேவைப்பட்டது. சுரூபம் செய்யும் பணியை ஒரு சிற்பியிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தச் சிற்பி சுரூபம் செய்யப் பொருத்தமான கல்லைத்தேடி அலைந்தான். அவனுடைய கண்களிலே அந்த மலையடிவாரத்தில் கிடந்த இரண்டு கற்கள் தென்பட்டன. முதல் கல்லிடம் தனது விருப்பத்தைச் சொல்லி, அதன் சம்மதத்தைக் கேட்டான். அந்தக் கல்லோ: என்னை நீ உளியால் உடைப்பாய். நீ அப்படிச் செய்யும்போது என் உருவமும் சிதைந்து போகும். எனக்கு வலியும் ஏற்படும். நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். நான் மடிய வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நான் தயாராக இல்லை. நானிருக்கும் நிலையிலேயே சுகமாக வாழ விரும்புகின்றேன். என்னை விட்டுவிடு என்றது. ஆகவே அந்தக்கல்லின் மீது அந்தச் சிற்பி கைவைக்கவில்லை. பக்கத்தில் கிடந்த கல்லோ: என்னை நீ பயன்படுத்திக்கொள். எனக்காக நான் வாழவிரும்பவில்லை ! இந்த ஊர் மக்களுக்காக நான் வாழ ஆசைப்படுகின்றேன். என் மீது உன் உளி விழட்டும்! வலியால் என் உடல் அழலாம்; ஆனால் என் உயிர் அழாது என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து ஓர் அழகான கடவுளின் சுரூபம் உருவானது; அது கோயிலின் மையப் பகுதியில் வைக்கப்பட்டது.

அந்தக் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தவர்கள் தேங்காய் உடைப்பதற்காக உளி விழ மறுத்த, சிற்பிக்கு ஒத்துழைப்பு தர விரும்பாத முதல் கல்லைப் பயன்படுத்திக்கொண்டார்கள்! ஒரு கல்லிலே கலை வண்ணம் பிறக்கவேண்டுமானால் அந்தக் கல் தன்னையே ஒரு வகையிலே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியிலே, கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்; தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர்; இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் (யோவா 12:24-25) என்ற வார்த்தைகளால் சுட்டிக்காட்டுகின்றார்.

இறப்பிற்குப் பிறகுதான் உயிர்ப்பு! துன்பத்திற்குப் பிறகுதான் இன்பம்! இரவுக்குப் பிறகுதான் பகல்!

இது இயற்கையின் சட்டம், இறைவனின் திட்டம். இயற்கையின் சட்டத்திற்கும், இறைவனின் திட்டத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றவர்களுக்குப் புதுவாழ்வு, நிலைவாழ்வு கிடைக்காது !

துன்பத்தின் வழியாகத்தான் இன்பம் என்ற இறைத்திட்டத்தை நிறைவேற்ற இயேசு கடைசி மூச்சுவரை துன்பப்பட, பாடுபடத் தயாராக இருந்தார் (எபி 5:8). இந்தத் தவக்காலத்தில் துன்பங்களை உதறித்தள்ளிய, துன்பங்களை விட்டு ஓடிய, துன்பங்களுக்காக இறைவனைத் தூற்றிய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். மனம் வருந்தும் நமது பாவங்களை மன்னிக்கவும், மறக்கவும் இறைவன் தயாராக இருக்கின்றார் (எரே 31:34).

மேலும் அறிவோம் :

துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி (குறள் : 1299).

பொருள் : ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இமயமலையின் மீது ஏறிய இரு நண்பர்கள், கடுமையான குளிர்காற்று வீசியதால், மேற்கொண்டு மலைமேல் ஏற முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவ்வேளையில் சற்றுத் தூரத்திலிருந்து, "ஐயோ! நான் சாகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்" என்னும் அபயக் குரல் கேட்டது. இருவரில் ஒருவர் மட்டும் அபயக்குரல் எழுப்பியவருக்கு உதவி செய்யப் புறப்பட்டார்; மற்றவரோ அவருடன் செல்ல மறுத்து விட்டார். உதவி செய்யச் சென்றவர் அபயக் குரல் எழுப்பினவரின் உடலை நன்றாகத் தேய்த்து விட்டார். அதன் விளைவாக அவரது உடல் சூடேறியது: அவருக்குப் புத்துயிர் வந்தது. தன்னிடமிருந்த சூடான காப்பியையும் அவருக்குக் கொடுத்து, அவரைத் தன் தோள்மேல் சுமந்துகொண்டு மற்ற நண்பரிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது கதையல்ல. நிஜம்! இந்நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி: "தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பியவர் அதை இழந்து விட்டார். பிறருக்காகத் தன் உயிரை இழக்க முன் வந்தவர் அதைக் காத்துக் கொண்டார் "

மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்த கிறிஸ்து. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று. தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணமான கிறிஸ்து (எபி 5:8-9), இன்றைய நற்செய்தியில் நமக்கு வழங்கும் செய்தி: "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" (யோவா 12:25-28).

பிறருடைய துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதாவிட்டால் பகுத்தறிவினால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவர்,

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை! (குறள் 315).
மிருகத்திற்கும் மனிதருக்குமிடையே உள்ள வேறுபாட்டை பின்வருமாறு விளக்குகிறார் தத்துவமேதை சாக்கரட்டீஸ்: "ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள் ளாது. ஆனால் ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான் - அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி."

பன்றியும் பசுவும் சந்தித்தன. பன்றி பசுவிடம், "உன்னை எல்லாரும் வீட்டில் வரவேற்கின்றனர். என்னையோ துரத்துகின்றனர் " என்றது. அதற்குப் பசு பன்றியிடம், "நான் உயிருடன் இருக்கும் போதே மக்களுக்குப் பால் தந்து பயன்படுகிறேன். நீயோ செத்த பிறகு தான் மக்களுக்குப் பயன்படுகிறாய்" என்றது.

உயிரோடு இருக்கும்போதே நாம் பிறர்க்குப் பயன்பட வேண்டும். செத்த பிறகு நாம் தேடி வைத்த செல்வம் யாருக்குப் போகும்? "அறிவிலியே, இன்றிரவே உன்னுயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்போது நீர் சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20).

"உலகிற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1திமொ: 6:8), எனவே, செல்வம் உள்ளவர்கள், "நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக, தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்து கொள்வார்களாக" (1திமொ 8:18).

"இவ்வுலகை அழிக்க முடியாது; ஏனெனில் இவ்வுலகை அழிக்கும் அளவுக்குப் பெரிய 'ரப்பரை' இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை" என்றாராம் ஒரு மாணவர், இவ்வுலகம் ஏன் இன்றும் அழியாமல் இருக்கிறது? *உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற கேள்வியைப் புறநானூற்றுப் பாடல் எழுப்பி, அக்கேள்விக்கு அப்பாடல் தரும் பதில்: "இவ்வுலகில் தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றவர்கள் ஒருசிலர் இன்றும் இருப்பதால்தான்." "தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மையானே' (புறம் 182)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார் (எரே 31:31). இந்தப் புதிய உடன் படிக்கையானது கிறிஸ்துவின் இரத்தத்தில் நிறைவேறியது (லூக் 22:20). இப்புதிய உடன்படிக்கையின் தனி முத்திரை பிறரன்புக் கட்டளையாகும். கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போலவே தாமும் பிறரை அன்பு செய்ய வேண்டும் (யோவா 13:34). கிறிஸ்து தம்மவர்களை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 13:1). அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம் (யோவா 15:13).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தனது நேரம்' (யோவா 12:27) என்று குறிப்பிடுவது அவர் சிலுவையில் மானிட மீட்பிற்காகத் தம் உயிரைக் கையளித்த நேரமாகும். நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி எல்லாரையும் அன்பு செய்ய, இறுதிவரை அன்பு செய்ய, தேவையானால் பிறருக்காக நமது உயிரையும் கையளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்மால் நமது வீட்டுக்கும் நாட்டுக்கும் தினையளவாவது நன்மை கிடைக்குமென்றால், நாம் இறக்கும் நாளைத் துக்கநாளாக அல்ல. திருநாளாகக் கொண்டாட வேண்டும்,

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு நாக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்,
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும், -
-பாரதிதாசன்
பெரிய வியாழனன்று பசிப்பிணி ஒழிப்பிற்காகச் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும், தவக்காலத்தில் தேவையற்றச் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு நாம் சேமிக்கும் பணத்தை அந்த நல்ல காரியத்திற்காகத் தாராளமாகக் கொடுக்க மனமுவந்து முன்வருவோமாக, தியாக உணர்வு இல்லாத வழிபாடு நாட்டுக்குச் சாபக் கேடாகும் - காந்தி அடிகள்

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உடன்படிக்கை ஆன்மீகம்

“கல்வாரி மருத்துவமனை " ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. சாதாரண நோயாளிகளையெல்லாம் அங்கே அனுமதிப்பதில்லை. ஆறு வார காலத்திற்குள் நிச்சயமாய் மரணமடையப் போகும் நோயாளிகள் மட்டுமே அதில் சேர்க்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் நுழையும் போது வாழ்வு முடியப் போகிறது என்ற துயரத்துடன் சேருபவர்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் மரணத்தைப் பக்குவமான மனநிலையில் எதிர்நோக்கி இருப்பவர்களாகி விடுகின்றனர். இத்தகைய மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது வியப்பானது.

அம்மருத்துவமனையின் உள்சுவர்களில் ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தைக் காட்டும் படங்கள் வெளிக் கோடுகளால் (Line drawing) வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் சித்திரங்கள் கோட்டுக்குள் காலியாக இருக்கின்றன. அப்படங்களுக்கு அடியில் “இயேசுவின் பாடுகளில் இன்னும் குறைவாய் இருப்பதை நிறைவு செய்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆம், அந்த மருத்துவமனையில் சேருகின்றவர்கள் அப்படங்களைப் பார்க்கின்றனர். தங்கள் உடல் வேதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்று இயேசுவின் பாடுகளோடு ஒப்புக் கொடுத்து இயேசுவின் பாடுகளை நிறைவு செய்கின்றனர்.

இவ்வாறுதான் மரணத்தின் வாயிலில் நிற்பவனை மகிழ வைத்து சொல்லொண்ணா வேதனையுறுபவனைச் சிரிக்க வைத்து அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொள்கிறார்.

திருவிவிலியம் முழுவதுமே இரு உடன்படிக்கைகளின் வரலாறாகும். ) பழைய உடன்படிக்கை - மோசே வழியாக, 2) புதிய உடன்படிக்கை - இயேசு வழியாக.

1. அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. (முதல்வாசகம் எரே 31:31). அது சீனாய் மலையில் செய்ததுபோல கற்பலகைகளில் அல்ல, மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கிய சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். “நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”. நெருக்கமான நேரடி உறவு!

2. அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி (நற்செய்தி: பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது. (வி.ப.24:3-8). புதிய உடன்படிக்கையோ பாவ மன்னிப்புக்காக இயேசுவின் இரத்தத்தில் நிலைப்படுத்தப்படுவது (லூக்.22:20, 1 கொரி.11:25), புதிய இஸ்ரயேலைப் பிறப்பிக்கும் புதிய உடன்படிக்கை இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே! "என் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் என் நாட்டுக்காகச் சிந்துவேன்” என்று சொன்ன ஓரிரு நாட்களில் இந்திரா காந்தி கொடுமையாகக் கொல்லப்பட்டார். தன் சாவை நினைத்துத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாரா? சந்தேகம்தான். ஆனால் இயேசு “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் சர்த்துக் கொள்வேன்" (யோ.12:32) என்றார். அடுத்துவரும் வசனத்திலேயே தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார் என்பார் யோவான்.

இயேசு மாட்சிபெறும் நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் விந்தையானது. அந்த நேரத்தில் எல்லாமே எதிர்மாறான முரண்பாடாகவே பொருள்படும். இறப்பு என்பது வாழ்வாகும். இழப்பு என்பது ஆதாயமாகும். ஒன்றின் இறப்பு என்பது இன்னொன்றின் பிறப்பு என்பது இயற்கை நியதி. மலரின் மரணம் கனியின் பிறப்பு. “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்”.

மரணத்தின் வழியாக மாட்சி பெறும் அந்த நேரத்தைச் சந்திப்பது இயேசுவுக்கு எளிதாகப்படவில்லை. யோவானின் பார்வையில் இது கெத்சமெனிப் போராட்டம். “இப்பொழுது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது” (யோ.12:27). தான் மடிந்தால்தான் மனித இனம் வாழ்வு பெறும் என்ற உணர்வில் இறைத் திருவுளத்திற்குத் தன்னையே கையளிக்கிறார்.

கிறிஸ்துவின் மீட்பை உலகம் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அங்கு அநீதி ஒழிந்து நீதி நிலவ வேண்டும். பாவம் மறைந்து அன்பு அரியனை ஏறவேண்டும். துக்கம் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும். பகைமை வற்றிப் பாசம் துளிர்க்க வேண்டும். அடிமைத்தனம் அகன்று விடுதலை மலர வேண்டும். இதற்கு விதையாக நாம் மண்ணில் விழுந்து மடிய வேண்டும். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து இறப்பதுதான் கிறிஸ்தவம். இதுவே புதிய உடன்படிக்கையின் சாரம்.

அந்தியோக்கு நகரின் ஆயரான தூய இஞ்ஞாசியார் கி.பி.108இல் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இயேசுவின் இரத்த சாட்சியான கதை நாம் அறிந்ததே. ஒருவேளை ரோமையில் இருந்த சில கிறிஸ்தவர்களின் செல்வாக்கால் தான் விடுதலை பெற்று இயேசுவுக்காக உயிர்ப்பலியாகும் பொன்னான வாய்ப்பை இழக்க நேருமோ என்று அஞ்சி ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது: "காட்டு விலங்குகளுக்கு இரையாகும்படி என்னை விட்டுவிடுங்கள். என் இறைவனைச் சென்றடைய எனக்குள்ள வழி அது ஒன்றே. இறைவனுக்குரிய கோதுமை மணி நான். காட்டு விலங்குகளின் பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு நான் கிறிஸ்துவுக்கு எற்ற தூய அப்பமாக (பலிப் பொருளாக) மாற வேண்டும். இக்காட்டு விலங்குகளே எனக்குக் கல்லறையாகுமாறு அவற்றைத் தூண்டிவிடுங்கள்', இத்தகையோரது இரத்தத்தில் செழித்ததே தொடக்க காலத் திருச்சபை.

நமது மன அரியணையில் சுயம் அமர்ந்திருந்தால் இயேசு சிலுவையில் தொங்குவார். இயேசு நம் மன அரியணையில் அமர வேண்டுமா? சுயம் சிலுவையில் தொங்க வேண்டும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோரும், தமக்கென்றே வாழ்வோரும்

நிகழ்வு

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சமூக சேவர் ஜான் டி ராக்பெல்லர் (John D Rockefeller 1839-1937). ஒரு காலத்தில் இவர் பணமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக உழைத்தார்; அதற்காக இவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர்களைக் கசக்கிப் பிழித்தார். இதனால் இவர் தனது 33 வது வயதில் மில்லியனராகவும், 43 வது பில்லியனராகவும் ஆனார். தனக்குக் கீழ் வேலைசெய்து வந்த பணியாளர்களை இவர் தொடர்ந்து கசக்கிப் பிழிந்ததால் அவர்கள், “யாருக்கெல்லாமோ சாவு வருகின்றது... இவருக்குச் சாவு வராதா?” என்று சாடைமாடையாகப் பேசத் தொடங்கினார்கள். இதனாலோ என்னவோ இவருக்கு 53 வது நடக்கும்பொழுது அலோபேசியா (Alopecia) என்ற நோய் வந்தது. இந்த நோயின் காரணமாக இவருடைய இமைகளில் இருந்த முடியும், தலையில் இருந்த முடியும் கொட்டத் தொடங்கியது; இவர் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போனார். இதைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்கள் இவருடைய இறப்புச் செய்தியைத் தயார் செய்துவிட்டார்கள்.

இதையெல்லாம் அறிந்த இவர், தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தினார். ‘இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காக வாழ்ந்துவிட்டேன்; இனிமேல் நான் ஏன் மற்றவருக்காக வாழக்கூடாது’ என்று முடிவுசெய்தார். இதற்குப் பிறகு ராக்பெல்லர் பவுண்டேஷன் என்றோர் அமைப்பை இவர் தொடங்கி, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் கோயில்கள், ஆகியவற்றிற்கு கோடிக்கணக்கில் உதவி செய்தார். மட்டுமல்லாமல் மலேரியா, காச நோய், டிப்திரியா ஆகிய நோய்களுக்கு இவர் தந்த உதவியினால் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு இவர் தனக்காக வாழாமல், பிறருக்காக வாழத் தொடங்கியதால் இவரது உடல்நலம் தேறி, 98 வயது வரை வாழ்ந்தார்.

ஆம், ராக்பெல்லர் தனக்காக வாழ்ந்தபொழுது சாவின் விளிம்புவரை சென்றார். எப்பொழுது அவர் பிறருக்காக வாழ்ந்தாரோ, அப்பொழுது அவர் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையானது, நமக்காக அல்ல, இயேசுவைப் போன்று பிறருக்காக வாழவேண்டும் என்ற சிந்தினையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கோதுமை மணியாய் மண்ணில் மடிந்த இயேசு

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண விரும்புவதோடு தொடங்குகின்றது. இயேசுவைக் காண விரும்பும் கிரேக்கர் பிலிப்பிடம் வருகின்றார்கள். ஒருவேளை பிலிப்பு பிறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவைச் சார்ந்தவர் என்பதால், அவர்கள் இயேசுவைக் காண விரும்பிப் பிலிப்பிடம் வந்திருக்கலாம். பிலிப்போ தன்னிடம் வந்த கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் செல்ல, மக்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்திரேயா (யோவா 1: 42; 6:9) அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றார். இவ்வாறு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் இயேசு பேசுகின்ற வார்த்தைகள்தான், “மானிடமகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.....கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்பதாகும்.

இயேசு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் சொல்லும் இவ்வார்த்தைகளின்மூலம், அவர் தான் பாடுபட்டு இறந்து உயிர்த்தெழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது, இன்றைக்கு இவ்வுலகில் வாழும் பலரைப் போன்று தனக்காக வாழவில்லை; மாறாக, அவர் தான் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்து (திபா 10: 38), பிறருக்காக வாழ்ந்தார். இதைவிடவும் அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார் (யோவா 4: 34). இப்பொழுது தன் பாடுகளின் வழியாக தந்தையை மாட்சியைப்படுத்தவேண்டிய நேரம் வந்ததும்தான், அவர் தன்னைக் கோதுமை மணிக்கு உருவகப்படுத்தி, “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்கின்றார்.

தன்னைப் பின்பற்றுவோர் தன்னைப் போன்று வாழ அழைக்கும் இயேசு

கவிக்கோ அப்துல் இரகுமான் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெறும் இருவரிக் கவிதை இது: “மனிதர்கள் இந்த உலகிற்குப் பிச்சைக்காரர்களாக வருகின்றார்கள்; ஆனால் கடன்காரர்களாகச் செல்கின்றார்கள.” எவ்வளவு வேதனை மிகுந்த வரிகள் இவை. இந்த உலகத்திற்கு எதையுமே கொண்டு வராத மனிதர்கள், இங்குள்ள எல்லா வசதிகளையும் ஆண்டு அனுபவித்துவிட்டு, இந்த உலகத்திற்கு எதையுமே கொடுக்காமல் போனால், அவர்கள் கடன்காரர்கள்தானே!

நற்செய்தியில் இயேசு, இந்த உலகம் வாழ்வு பெறுவதற்காய்த் தான் கோதுமைமணியாய் மடியப்போவதைச் சுட்டிக்காட்டிவிட்டு, “தமக்கென வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்” என்கின்றார். அவ்வாறெனில், இயேசுவுக்குத் தொண்டுவோர், அவர் வழியில் நடப்போர் அவரைப் போன்று, தன்னையே இவ்வுலகம் வாழ்வு பெறத் தந்து, அவரைப் பின்பற்றவேண்டும். இது சீடர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையாக இருக்கின்றது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மற்றும் யூதா வீட்டாரோடு புதிய உடன்படிக்கை செய்துகொள்ளப்போவதாகச் சொல்கின்றார். இப்புதிய உடன்படிக்கையின் மூலம், தான் அவர்களுக்குக் கடவுளாகவும், அவர்கள் தன் மக்களாகவும் இருப்பார்கள் இருப்பார்கள் என்கின்றார். நாம் கடவுளின் மக்களெனில், அவரது திருமகன் இயேசுவைப் போன்று நாமும் இவ்வுலகம் வாழ்வு பெற நம்மையே தரவேண்டும்.

தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமாகும் இயேசு

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற, இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்த நிகழ்வு (மத் 26: 36-46; மாற் 14: 32-42; லூக் 22: 38-45), யோவான் நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும், அதையொத்த நிகழ்வு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இடம்பெறுவதாகத் திருவிவிலிய அறிஞர்கள் சொல்வர்கள்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன செய்வேன்?” என்கின்றார். இது குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்..... கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்” என்பார். இயேசு இவ்வாறு துன்பக் கிண்ணம் தன்னைவிட்டு அகலவேண்டும் என்று கண்ணீர் சிந்தி, மன்றாடினாலும், பின்னர் கடவுளுக்குச் செவிசாய்த்து, துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். ஆகவே, இயேசு இறைமகனாக இருந்தபொழுதும், துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோன்று, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் நம்மோடு செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப வாழவேண்டும். “கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது” (1 சாமு 15: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகவே, நாம் இயேசு எப்படித் தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றினாரோ அப்படி நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றி வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘அரைகுறைக் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள். புனிதப் பாதையில் விடாமுயற்சியோடு நடங்கள்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில் திருப்தியடைந்து விடாமல், கடவுளோடு நாம் செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப, இயேசுவைப் போன்று கடவுளுக்குக் கீழ்ந்ப்படிந்து பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

துன்பமும் தூய்மையும்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு விழாக் கொண்டாட்டங்கள் நெருங்கிவந்துவிட்ட வேளையில் இன்றைய வாசகங்கள், இயேசுவின் பாடுகள் மற்றும் துன்பம் நோக்கி நம் உள்ளங்களைத் திருப்புகின்றன.

துன்பம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் எதார்த்தம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) இஸ்ரயேல் மக்கள் இறைவனிடமிருந்து தூரமாகிப் போகின்றனர். அவர்களுடைய பாவத்தாலும், ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளை மீறியதாலும் அவர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். தங்களுடைய பாவத்தாலும் கீழ்ப்படியாமையாலும் அந்நியப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை மீண்டும் தன்னருகே அழைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்கின்றார். இந்த உடன்படிக்கை மனித உள்ளத்தில் எழுதப்படுவதால் இறைவனும் இஸ்ரயேல் மக்களும் ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமானவர்களாக மாறுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 5:7-9), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கெத்சமெனியில் பாடுகள் பட்டதை இறையியலாக்கம் செய்யும் ஆசிரியர், 'மன்றாடி வேண்டினார்' மற்றும் 'நிறைவுள்ளவரானார்' என்னும் இரு சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார். 'மன்றாடி வேண்டுதல்' என்பது பலி ஒப்புக்கொடுத்தலையும், 'நிறைவுள்ளவராதல்' என்பது பலி ஏற்றுக்கொள்ளப்படுதலையும் குறிக்கிறது. இங்கே, 'கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்' என்னும் சொல்லாடல் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இயேசு தன் துன்பங்கள் வழியாகத் தலைமைக்குருவாக உயர்கின்றார்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 12:20-33) மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) இயேசுவைக் காண கிரேக்கர்கள் சிலர் ஆர்வம் தெரிவிக்கின்றனர்ளூ (ஆ) இயேசு தன் இறப்பு பற்றியும், சீடத்துவம் பற்றியும் போதிக்கின்றார்ளூ மற்றும் (இ) வானிலிருந்து ஒரு குரல் இயேசுவின் செய்தியை ஆமோதிக்கிறது. இயேசு தன் இறப்பை கோதுமை மணி உருவகம் வழியாக எடுத்துரைக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. இங்கே, விதை போல இயேசு பாடுகள் படுகின்றார். விதை நிலத்தில் ஊன்றப்படுவது போல இயேசு அடக்கம் செய்யப்படுகின்றார். விதை புத்துயிர் பெற்று வெளியே வருவது போல இயேசு கல்லறையிலிருந்து வெளியெ வருகின்றார். இதுவே மாட்சிப்படுத்தப்படுதல். இந்த நிலையை அடைந்தவுடன் இயேசு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார்.

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் துன்பம் இறைவன் செயலாற்றும் தளமாக மாறுகிறது. இரண்டாம் வாசகத்தில், துன்பத்தின் வழியாக இயேசு நிறைவுள்ளவர் ஆகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு துன்பங்கள் வழியாக உயிர்க்கின்றார்.

இன்றைய நம் உலகம் துன்பத்தைத் தவிர்க்கவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. துன்பத்தைத் தவிர்ப்பதற்காக நாம் இரண்டு பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்துகிறோம்: ஒன்று, துன்ப மறுப்பு. இரண்டு, மற்றவரைக் குற்றம் சுமத்துதல். இக்கவசங்களை அகற்றிவிட்டு, நேருக்கு நேராக நாம் துன்பத்தை ஏற்கும்போது நம் உள்ளம் தூய்மை பெறுகிறது.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 51), இறைவன்முன் தன் பாவம் உணர்கின்ற தாவீது, 'தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!' என்று உருகுகின்றார். தாவீது தன்னுடைய துன்ப அனுபவத்தை இறை அனுபவமாக மாற்றுகின்றார். துன்பத்தின் வழியே தூய்மை. துன்பத்தின் வழியே உயிர்ப்பு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் - உறவின் காலமா!

உறவு மனித வாழ்வுக்கு அடிப்படையான ஒன்றாகும். இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதரும் உறவோடு வாழ்வதில்தான் நிறைவான மகிழ்வைக் கண்டடைய முடியும். இந்த தவக்காலத்தில் பலவகையில் கடவுளின் பிள்ளைகளாக மாற ஆயத்தப்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக கடவுளோடும் பிறரோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். உறவோடு வாழ்வதுதான் மனிதத்தின் இயல்பு. இத்தகைய சிந்தனையை தான் இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றன.

கடவுள் இந்த உலகத்தைப் படைத்து மனிதரை அவரை உருவிலும் சாயலிலும் படைத்ததன் வழியாக இறை மனித உறவுக்கு அடித்தளமிட்டார். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு நல்லுறவு கொள்வதென்பது அவரின் சாயலில் படைக்கப்பட்ட எல்லா மனிதரையும் முழு பௌஉள்ளத்தோடு அன்பு செய்வதாகும். கடவுளின் படைப்பை ஒரு வார்த்தையில் சொன்னால் அது அன்பு என்பதாகும். கடவுளின் அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த உலகமானது படைக்கப்பட்டது. எனவே நாம் ஒவ்வொருவரும் கடவுளை முழு உள்ளத்தோடு அன்பு செய்து பிறரையும் அன்பு செய்து இறை மனித உறவில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

கடவுள் சீனாய் மலையில் நடந்த உடன்படிக்கையின் வழியாகத் தன் மக்களோடு நல்லுறவு கொண்டார். ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையை மறந்து கடவுளுக்கு எதிராகப் பற்பல பாவங்களைச் செய்தனர். அதன் விளைவாக இஸ்ரயேல் மக்கள் கோவிலை இழந்தார்கள். அரசர்களின் ஆட்சியை இழந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உடன்படிக்கைப் பேழையை இழந்தார்கள். இறைவனின் அருளால் தூண்டப்பட்டு இறைவாக்கினர் எரேமியா இன்றைய முதல் வாசகம் புதிய உடன்படிக்கையின் சின்னமாகிய கடவுளின் மகனான இயேசுவின் கல்வாரி மலையில் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை முன்னறிவிப்பதைப் போன்று அமைந்துள்ளது.

பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் மட்டுமே கடவுளின் மக்களாகக் கருதப்பட்டனர். ஆனால் கடவுள் கொடுத்த வாய்ப்பையும் அருளையும் அவர்கள் இழந்தனர். ஆனால் கடவுளின் உடன்படிக்கையையானது கல்வாரி மலையில் தான் புதிய உடன்படிக்கையாக நிறைவுற்றது. இந்த உடன்படிக்கையில் இஸ்ராயேல் மக்களைத் தாண்டி எல்லா மக்களையும் கடவுள் தன் மக்களாக ஏற்றுக் கொண்டார். எல்லா மக்களிடமும் நல்லுறவு கொள்ள தன் மகனையே கையளித்தார். எல்லா மக்களும் மீட்பு பெற்று புது வாழ்வு பெற இந்தப் புதிய உடன்படிக்கையின் வழியாக வாய்ப்பு கொடுத்தார். கடவுளின் இயல்பே மனிதரோடு உறவுகொண்டு அவரோடு இணைந்திருக்கச் செய்வது தான்.

ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அருட்சகோதரர் ஒருவர் சந்திப்புக்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு முதியவரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அந்த முதியவர் சாலையோரத்தில் படுத்து கிடந்து உண்ண உணவு இல்லாமலும் உடுத்த உடை இல்லாமலும் இருக்க இடமில்லாமலும் இருந்தவர். ஒரு தன்னார்வத் தொண்டர் அந்த முதியவரைக் கண்டார். அந்த முதியவரை அருட்சகோதரிகள் நடத்திவந்த ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்த்தார். அந்த அருள்சகோதரிகளும்அந்த முதியவரை அன்போடும் பாசத்தோடும் தன் சொந்த தந்தையை போல கவனித்து வந்தனர். ஒரு மாதம் கழிந்த பிறகு முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்த்த அந்த தன்னார்வ தொண்டர் முதியவரிடம் "உங்களுடைய அனுபவம் எப்படி இருக்கின்றது? "என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் "எனக்கு அனைத்தும் நிறைவாக இருக்கின்றது.உறவுக்காக இவ்வளவு நாள் ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இழந்த உறவை இப்பொழுது நிறைவாகப் பெற்று வருகிறேன். என்னை அன்பு செய்வதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் வழியாக கடவுள் எனக்கு நல்ல உறவினைக் கொடுத்துள்ளார். உண்மையிலேயே இந்த அருள்சகோதகரிகளி வழியாக கடவுள் மிகவும் அன்பானவர். உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வழிகாட்டியவர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது " என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

உறவோடு வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. அந்த உறவு வாழ்விலே நாம் வாழ்வின் நிறைவை அனுபவிக்க முடியும். கிறிஸ்தவ மதிப்பீடுகள் இந்த உலகத்தில் அதிகம் பரவியதற்கு காரணம் உறவு மட்டுமே. பல்வேறு அருள்பணிகள் நம்முடைய திருஅவையில் இருக்கின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் உறவு மட்டுமே. உறவை உடன்படிக்கையின் வழியாக ஆழப்படுத்த கடவுள் இஸ்ராயல் மக்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் கடவுளின் உடன்படிக்கையை மறந்து கடவுளுக்கு எதிராக பற்பல பாவங்கள் செய்தனர். எனவேதான் எரேமியா இறைவாக்கினர் புதிய உடன்படிக்கையின் அடையாளமான இயேசுவின் உறவை முன்னறிவித்துள்ளார்.

இன்றைய இரண்டாம் வாசகம் பாடுகள் வழியாகத்தான் இயேசு தன்னை முழுமையான தலைமை குருவாக வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இயேசு பாடுகளை ஏற்றது நம்மோடு புதிய உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த புதிய உடன்படிக்கை உறவின் அடையாளமாகும்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை கோதுமை மணியாக மாறி பலன் கொடுக்க அழைப்பு விடுக்கின்றது. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும் "(யோ: 12:24) என்று இயேசு கூறியுள்ளார். இயேசு ஒரு கோதுமை மணியாக இந்த மண்ணுலகத்தில் விதைக்கப்பட்டார். விதைக்கப்பட்ட இறையாட்சி மதிப்பீடுகள் உயிர்ப்பின் வழியாக அனைவருக்கும் சென்றடைந்தது. இன்றும் அவரின் மதிப்பீடுகள் பல்வேறு வகையில் வாழ்வாக்கப்பட்டு வருகின்றது. இயேசுவின் மதிப்பீடுகள் நாம் நல்லுறவோடு வாழ அழைப்பு விடுக்கின்றன. இயேசுவின் வாழ்வே உறவின் அடித்தளமாக இருக்கின்றது. இதைத்தான் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் "பலமுறை பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார் " (எபி: 1: 1-2)என்று வாசிக்கிறோம். கடவுள் தன் மகன் வழியாகப் பேசுவதன் காரணம் நம்மோடு நல்லுறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். அதேபோலதான் ஆண்டவர் இயேசுவும் தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும் பாடுகள் உயிர்ப்பின் வழியாகவும் நம்மோடு நல்லுறவு கொண்டார். இந்த உறவு உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கின்றது. உறவின் உச்சத்தை நற்கருணையை ஏற்படுத்துவதன் வழியாக இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தவக்காலத்தில் நம்மையே சற்று ஆழமாகச் சிந்தித்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நல்லுறவோடு வாழ புதிய உடன்படிக்கையின் சின்னமாகிய இயேசுவைப் போல நாமும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நல்ல உறவுதான் நம்மை நல்ல ஒரு மனிதராகவும் கிறிஸ்தவராகவும் உருமாற்றும். உறவோடு வாழ்வதில்தான் மனித வாழ்வு நிறைவு பெறும். எனவே இந்தத் தவக்காலத்திலிருந்து நாம் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட கைவிடப்பட்ட அடையாளம் காணப்படாத மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்து நல்லுறவு கொள்ள முயற்சி செய்வோம். நாம் பிறரை குறை சொல்வதை நிறுத்திவிட்டு நிறைவான மனநிலையோடு இறையாட்சி பணி செய்திட முயற்சி செய்வோம். உறவின் வழியாக இயேசு நமக்கு விட்டுச்சென்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய வாழ்வில் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது உம்முடைய மதிப்பீடுகள் இந்த உலகத்தில் வாழ்வாக்கப்பட அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு