மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்கால -ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு

சாம்பல் புதன்
இன்றைய வாசகங்கள்:-
| |

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
என்‌ தந்தையின்‌ இல்லம்


அன்பார்ந்தவர்களே!

இன்றைய நற்செய்தியில்‌ நாம்‌ கண்ட நிகழ்ச்சியின்‌ வாயிலாக இயேசு அனுப்பப்பட்டவர்‌ என்பதை நாம்‌ கண்டு கொள்ளுகிறோம்‌. அலங்கோலமாக வியாபாரக்‌ கூடம்‌ போன்று காட்சி அளித்த தன்‌ தந்தையின்‌ இல்லத்தைக்‌ கண்டதும்‌ இயேசு அங்கிருக்கும்‌ வியாபாரிகளைக்‌ கடிந்துகொண்டு, அதிகாரத்தோடு அவர்களை விரட்டுகின்றார்‌. தந்தையின்‌ இல்லமாகிய அந்த ஆலயத்தின்‌ புனிதத்தைக்‌ கெடுக்கக்‌ கூடியது எதுவாக இருந்தாலும்‌ அதைக்‌ கண்டித்தார்‌. அவரது அதிகாரத்தைப்‌ பார்த்து, நீதான்‌ அனுப்பப்பட்டவர்‌ என்றால்‌ எங்களுக்கு ஒரு அடையாளம்‌ காட்டு என்று யூதர்கள்‌ கேட்டபோது, அவர்களின்‌ வெளிவேடத்தைக்‌ கண்ட இயேசு இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள்‌. மூன்றே நாளில்‌ கட்டி விடுகிறேன்‌ என்று மறைமுகமாகத்‌ தான்‌ மரித்து உயிர்க்கப்‌ போவதை வெளிப்படுத்துகிறார்‌.

வியாபாரம்‌ செய்வோர்‌ மக்களை ஏமாற்றி உண்மை தெய்வத்தையும்‌, சகோதர அன்பையும்‌ மறந்ததால்தான்‌ இயேசு அவர்களை கடிந்துகொள்ளுகிறார்‌. இதே கருத்தைத்தான்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்குத்‌ தருகிறது. அடிமைத்தனத்தில்‌ இருந்த இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்களை மீட்டு வந்த உயிருள்ள இறைவனை விட்டு விட்டு, 10 கட்டளைகளையும்‌ கடைப்பிடிக்க மறந்து, நன்றி கெட்டவர்களாக மாறினார்கள்‌ என்பதை எடுத்துரைக்கிறது. இன்றும்‌ நம்மில்‌ பல பேர்‌ அவ்வாறே இறைவன்‌ நமக்குத்‌ “தந்த கட்டளையை மறந்து நம்‌ கடமையில்‌ தவறி விடுகிறோம்‌. இறைவன்‌ தந்த 10 கட்டளைகள்‌ ஒரே நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல இரண்டு கட்டளைகளில்‌ அடங்குகிறது. இந்த இரண்டு கட்டளைகளும்‌ நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல உள்ளன. அதாவது இறைவனை அன்பு செய்கிறேன்‌ எனக்‌ கூறிக்‌ கொண்டு தன்‌ சகோதரனை வெறுப்பவன்‌ பொய்யன்‌ (1 யோவா. 4:20). எவ்வாறு நம்மைத்‌ துன்புறுத்தியவர்களை நேசிக்க முடியும்‌? நடைமுறையில்‌ இது மிகவும்‌ கடினம்தான்‌. ஆனால்‌ இந்த சகோதர அன்பில்தான்‌ இறையன்பு மிளிர்கிறது.

நமது உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ இறைவன்‌ குடி கொள்ளத்‌ தயாராக உள்ளார்‌. இந்த தவக்காலம்‌ நம்மைத்‌ தகுந்த முறையில்‌ தயாரிக்க ஏற்ற காலம்‌. நம்‌ வானகத்‌ தந்தையை அன்பு செய்ய வேண்டுமெனில்‌ நம்‌ சகோதரர்களுக்குச்‌ சேவை செய்து அன்பு செய்ய வேண்டும்‌. எனவே நம்மைப்போல பிறரையும்‌ நேசிக்க நம்‌ வானகத்‌ தந்‌தை நம்‌ உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ நிறைவாகத்‌ தங்கிட நம்மைத்‌ தகுந்த முறையில்‌ இந்த தவக்காலத்தில்‌ தயார்‌ செய்வோமாக.

ஆண்டவர்‌ வாழும்‌ இல்லம்‌ நம்‌ உள்ளமாக இருக்கின்றபடியால்‌ நம்‌ ஒவ்வொருவருடைய உள்ளமும்‌ இறைவன்‌ வாழும்‌ ஆலயமாகும்‌. ஆண்டவர்‌ நம்‌ உள்ளத்திலே உறைகின்றபடியால்‌ நாம்‌ ஒவ்வொருவருமே ஆண்டவராகின்றோம்‌. எனவே ஆலயத்திற்கு வருகின்றவரெல்லாம்‌ ஆண்டவராகவே மாறிட முயற்சி எடுப்போம்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பாவங்களின் இருப்பிடம் சுயநலம்

இயேசு - அவர் மிகவும் அன்பானவர்.
அவர் - அழுதால் அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதறும்
அவர் இருக்கும் இடத்திலே
காலையிலே பூபாளம் ஒலிக்கும்
மதியத்திலே கல்யாணி ஒலிக்கும்
இரவினிலே நீலாம்பரி ஒலிக்கும்
அவர் கண்ணுக்குள் கங்கை உண்டு!
கைக்குள் காவிரி உண்டு!
இதயத்துக்குள் இமயம் உண்டு!

இப்படிப்பட்ட இயேசு இன்றைய நற்செய்தியிலே சாட்டை பின்னி. கோயிலில் வியாபாரம் செய்பவர்களை துரத்துவதைப் பார்க்கின்றோம்.
தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் (மத் 5:22) என்றவர் இங்கே சினங்கொள்வதை, கோபப்படுவதைப் பார்க்கின்றோம். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவை, மக்களைத் துரத்தும் இயேசுவாக இன்று சந்திக்கின்றோம்.
சினத்திலே இரண்டு வகை : பாவமான சினம், பாவமில்லாத சினம். சுயநலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமான சினம்; பிறர்நலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமில்லாத சினம். அனைத்துப் பாவங்களின் இருப்பிடமாகத் திகழ்வது சுயநலம்; அனைத்துப் புண்ணியங்களுக்குத் தாயாக விளங்குவது பிறர் நலம்.

இதோ பாவமான கோபத்திற்கு விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்:
நல்ல சமாரியர் உவமையையும் (லூக் 10:25-37) காணாமற்போன மகன் உவமையையும் (லூக் 15:11-32) நமக்குத் தந்த கருணை முகில் இயேசு இடியாக மாறி வியாபாரிகள் மடிமீது விழுவதை இங்கே காண்கின்றோம்.
கோயிலில் வியாபாரம் செய்பவர் மீது கோபப்பட்டது போல நீதிக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் (உரோ 14:17) எதிராகச் செயல்பட்ட சில பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் மீது இயேசு சினங்கொண்ட நேரங்கள் உண்டு (மாற் 3:1-6).
இந்த இடத்திலே, இயேசுவைப் போல நாமும் சினம் கொள்ளலாமா? கோபப்படலாமா? என்ற கேள்வி நம்மில் பலரது மனத்திலே எழுந்து மறையலாம்.
இந்தக் கேள்விக்கு புனித பவுலடிகளார் பதில் கூறுகின்றார். சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தெளியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் (எபே 4:26-27) என்கின்றார்.
காயினையும், அவன் காணிக்கையையும் கடவுள் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே காயின் கடும் சினமுற்றான். கடவுள் அவனைப் பார்த்து, நீ ஏன் சினமுற்றாய்? என்று கேட்டார் (தொநூ 4:5-7). காயினின் கோபம், அவனுடைய தம்பி ஆபேல்மீது கொண்டிருந்த பொறாமையிலிருந்து பிறந்த பாவமாகும்.
காணாமற்போன மகன் உவமையில், மூத்த மகன் சினமுற்று விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புக விருப்பமின்றி நின்றான் (லூக் 15:28). அவனது சினம், கோபம் அவனது சகோதரன்மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிலிருந்து பிறந்தது.
இப்படி பொறாமையிலிருந்து, வெறுப்பிலிருந்து, பாவத்திலிருந்து, சுயநலத்திலிருந்து பிறக்கும் சினத்திற்கு, கோபத்திற்கு கிறிஸ்தவ மறையில் இடமே கிடையாது.
இயேசுவிடம் நின்று நிலவிய கோபம் சுயநலத்திலிருந்து பிறந்தது அல்ல; அது பிறர் நலத்திலிருந்து பிறந்தது; அவர் அவரது தந்தையின் மீது கொண்டிருந்த மாறாத அன்பிலிருந்து பிறந்தது (யோவா 2:16).

ஆகவே பிறர் நலத்திற்காக, பிறரன்புக்காக, நீதிக்காக, அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, இறையரசின் மதிப்பீடுகளுக்காக நாம் கோபப்பட வேண்டும். சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே நாம் சினம் கொள்ளவில்லை என்றால், நாம் கடமையில் தவறிய பாவத்தைப் புரிந்தவர்களாகிவிடுகின்றோம்.
பத்துக் கட்டளைகள் (முதல் வாசகம்) கேள்விக் குறிகளாகும் போது நாம் கோபப்படலாம்; குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடிக்க நினைத்தால் பூனையின் மீது கோபப்படலாம்; பாமரர்கள் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றுகிறவர்கள் மீது கோபப்படலாம்.
எப்போது சினம் கொள்ளலாம், எப்போது சினம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ள போதிய ஞானத்தை (இரண்டாம் வாசகம்) இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம். மேலும் அறிவோம்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (குறள் : 310).

பொருள் : வரம்பு கடந்த கோபம் கொள்பவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே கருதப்படுவார்! கோபத்தை முழுமையாக நீக்கியவர் பற்றற்ற துறவிக்கு ஒப்பாவார்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு வீட்டிற்கு நான் சென்றபோது, அவ்வீட்டில் டோனி என்ற ஒரு சிறுவன் தட்டிலிருந்த உளுந்தவடைகளைத் தின்றுகொண்டிருந்தான். நான் அவனிடம், 'இதுவரை எத்தனை வடைகள் தின்றாய்?' என்று கேட்டதற்கு அவன் ஏழு என்று பதில் சொன்னான். நான் அவனிடம், 'அருள் அடையாளங்களே ஏழுதான்; நிறுத்திக்கொள்' என்று சொன்னேன், அவன், 'என்ன பாதர் பத்துக்கட்டளைகளை மறந்துவிட்டீர்களே!' என்று கேட்டபோது வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர், அச் சிறுவன் வேடிக்கையாகச் சொன்னதில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளது. வழிபாட்டில் ஏழு அருள் அடையாளங்களைக் கொண்டாடிவிட்டு வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய உலகம் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்க மறந்துவிட்டதால்தான், காமம். குடிவெறி, களியாட்டம், கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல், பாலியல் பலாத்காரம், சிசுக்கொலை முதலிய பாதகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளன. இன்றைய உலகை அழிவிலிருந்து பாதுகாக்கப் பத்துக்கட்டளைகள் தேவை. தனி மனிதருடைய நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் (முதல் வாசகம்). பத்துக்கட்டளைகள் உறவை மையமாகக் கொண்டுள்ளன. முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப்படுத்துகின்றன. எஞ்சியுள்ள ஏழு கட்டளைகளும் மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப் படுத்துகின்றன, பத்துக்கட்டளைகள் வாழ்வு தரும் வார்த்தைகள், "ஆண்டவரே முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (பதிலுரைப்பாடல், யோவா 6:68), முடிவில்லா வாழ்வடைய பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி இயேசு பணக்கார இளைஞனிடம் கூறினார் (மத் 19:16-19),

பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள், சீனாய் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக்கட்டளைகளாகும். எனவே, பத்துக்கட்டளைகளை மீறுவது வெறும் பாவம் மட்டுமன்று; உடன்படிக்கையை மீறுவதாகும், கிறிஸ்து பத்துக் கட்டளைகளை அழிக்காமல் அதை நிறைவு செய்தார் (மத் 5:17) கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, கொலையின் காரணமான கோபத்தையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:21-22). விபச்சாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, விபச்சாரத்திற்குக் காரணமான காம இச்சையுடன் கூடிய பார்வையையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:27-28). ஒரு நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால். அந்நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

"நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்" (குறள் 948)

கட்டளைகளை வெறும் எழுத்து வடிவத்தில் கடைப்பிடிப்பது பரிசேயரின் ஒழுக்கம். ஆனால், கட்டளைகளை அவற்றின் உள் நோக்கம் அறிந்து கடைப்பிடிப்பது கிறிஸ்துவ ஒழுக்கமாகும். முந்தைய ஒழுக்கம் சாவையும், பிந்தைய ஒழுக்கம் வாழ்வையும் விளைவிக்கும். எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு (2 கொரி 3:6). எனவே, பத்துக் கட்டளைகளை கிறிஸ்து தமது மலைப்பொழிவில் விளக்கியதற்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிப்பது நமது முதன்மையான கடமையாகும், பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையோ மனித இதயத்தில் எழுதப்பட்டது (எரே 31:33). புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்து கொண்டு வந்தது புதிய வாழ்வு, புதிய ஆலயம், புதிய வழிபாடு, புதிய கட்டளை. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தாமே புதிய ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு ஆலயம் என்றாலே ஒருவகையான ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. ஒருவர் ஆலயத்திற்குச் செல்வதில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "என் மனைவியை முதன் முதல் ஆலயத்தில்தான் பார்த்தேன். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணை ஆலயத்தில் எனக்குக் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டேன்! "பாவம் கசப்பான அனுபவம். இத்தகைய கசப்பான அனுபவங்களால் ஒருசிலர் ஆலயம் செல்வதில்லை. இது தவறான முடிவாகும். ஏனெனில், நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி! கிறிஸ்து ஆலயத்தையோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. அவருடைய பெற்றோர்கள் ஆண்டு தோறும் பாஸ்கா விழாவிற்கு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றனர். இயேசுவும் பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார், ஆலயத்தை அவருடைய தந்தையின் இல்லமென்றார் (லூக் 2:41-42, 49). ஆனால் ஆலயத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். செபவீடாகிய கடவுளின் இல்லத்தைச் சந்தையாகவும் (யோவா 2:16), கள்வர் குகையாகவும் (மாற் 11:17) மாற்றப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம், "கடவுளை மற, மனிதனை நினை' என்று சொல்லுமளவிற்கு இன்று ஆலயமும் ஆலய வழிபாடும் தரம் தாழ்ந்து, தறிகெட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் வாணிபக் கூடமாகக் காட்சியளிக்கின்றன. திருத்தலங்களில் பணம் மையப்படுத்தப்படுகிறது.

குழந்தை இயேசுவின் கையில் என்ன இருக்கின்றது? என்று சிறுவர்களை நான் கேட்டபோது அவர்கள் உண்டியல் பெட்டி என்றார்கள்.
குழந்தை இயேசுவின் திருத்தலப் பங்குத் தந்தையிடம் நான் சிரித்துக் கொண்டே குழந்தை இயேசுவை வயசுக்கு வர விடமாட்டார்களா? என்று கேட்டதற்கு அவரும் சிரித்துக்கொண்டே குந்த இயேசு வயசுக்கு வந்துவிட்டால் வருமானம் போய்விடும். என்றார். ஆலய வழிபாட்டில் பண ஆதிக்கம் செலுத்தாமல், பக்தி நெறி ஆதிக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தீமையா?... சீறி

தாவோசு என்பது தனி மாநிலம். மலைப் பகுதி, அங்கே உலகப் பொருளாதார மாநாடு (World economic forum) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறும். World economic forum என்பது ஒரு மிகப் பெரிய கழகம். உலகின் தலைசிறந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் இவர்களை ஒன்று கூட்டி உலக அளவில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும், வழிகாட்டும் மாபெரும் மன்றம் அது. 819 உலகக் கம்பெனிகள் இதில் உறுப்பினர்கள். Everybody who is somebody இந்த ஆண்டுக் கூட்டத்துக்கு வருவார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது வெளிச்சமிட்டு நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைக் கவனித்து அன்றைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை இறுதிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள்.

அப்பொழுது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வீசல்லின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்னார்: ''உண்மைக்கு எதிரி பொய் அல்ல, நன்மைக்கு எதிரி தீமை அல்ல. முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கு அல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு பொது எதிரி உண்டு. அதுதான் அலட்சியப் போக்கு (Indifference). அதுவே நமது மிகப் பெரிய எதிரி. பணக்காரர்கள் ஏழைகளை அலட்சியப்படுத்துவது, முன்னேற்ற நாடுகள் பின்தங்கிய நாடுகளை அலட்சியப்படுத்துவது... எந்தப் பாவத்திலும் பொது அம்சம் இந்த அலட்சியம்” அருமையான உன்னதமான பேச்சு! ஒருவன் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை அவனுடைய சினம் - சீற்றம் - சீறி எழும் ஆவேசம் வெளிப்படுத்தும்.

ஒரு சிற்றூரை ஒட்டிய முட்புதரில் ஒரு பாம்பு நடமாடியது. அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கடித்துத் துன்புறுத்து - வதாகப் பரவலாக ஒரு பேச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்தப் பாம்மைப் பார்த்தார். ''ஏன் இப்படிக் கடித்து மக்களைத் துன்புறுத்துகிறாய்? உன் இயல்பைக் கொஞ்சம் மாற்றி எவருக்கும் தீங்கு செய்வதை விட்டுவிடு" என்று முனிவர் கேட்டுக் கொள்ள அந்தப் பாம்பும் பணிந்தது.

சில நாட்களுக்குப் பின் மீண்டும் முனிவர் அந்த வழியே வந்தார். அந்தப் பாம்மைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. அதன் உடம்பு முழுவதும் இரத்தக் காயங்கள். குற்றுயிராய் நகரக் கூட முடியாத படி கிடந்தது. "என்ன ஆச்சு?" என்று கேட்டதற்கு, அந்தப் பாம்பு முணங்கியது: ''நீங்கள் சொன்னபடி நடந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது. நான் கடிப்பதில்லை என்று கண்டதும் கண்டவன் எல்லாம் கல்லெறிந்து காயப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைக் கேட்ட முனிவர் கோபத்தோடு சொன்னார்: "கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் குமுறக் கூடாது என்றேனா? தீங்கு இழைக்காதே என்றுதான் சொன்னேன் . தீங்கு இழைப்பதைக் கண்டு நீ சீறி எழுந்திருக்க வேண்டாமா?

பொய்மை காணும் போது கோபம் வேண்டும். தீமை எதிர்ப்படும் போது கோபம் வேண்டும். அநீதி ஆட்சி செய்யும் போது கோபம் வேண்டும்.

எருசலேம் ஆலயம் கள்வர் குகையானபோது, வணிகக் கூடமான போது இயேசுவுக்குக் கோபம் வந்தது. கைக்குச் சாட்டை வந்தது. சிறுமை கண்டு பொங்கினார். சீறி எழுந்தார். ஆலயம் என்பது ஆண்டவனின் உறைவிடம். மனிதனும் இறைவனும் சந்தித்து உறவாடும் ஆன்மீக அனுபவத்தளம். உலகக் கடமைகள், பொறுப்புகள், தடைகள், சவால்கள் இவற்றிற்கிடையே சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தாயின் மடியில் தலை சாய்ப்பது போல ஒரு சுக அனுபவம் தரும் புனித தலம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்கள் மணம் பரப்பும் மலர்த்தோட்டம்.

ஆலயம் இருப்பது இறைவழிபாட்டுக்காக, இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக, வழிபாடுகள் நம்மை வாழ்வு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக. அந்த நோக்கம் நிறைவேறாத போது வாழ்வு வேறு வழிபாடு வேறு என்று ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நிலையில் “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை" (ஆமோசு 5:21) என்று வெறுப்பை உமிழ்கின்றார் இறைவன்.

இயேசு வெகுண்டெழுந்தது தந்தையின் இல்லத்தைச் சந்தை யாக்குகிறார்களே என்பதற்காக மட்டுமா? கடவுளின் பெயரால் ஏழைகளின் வயிற்றில் அடித்து அநியாயமாக அவர்களைத் துன்புறுத்தியதற்காக "நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோசு 5:24) என்ற வேட்கையில் இயேசுவின் கோபம் தகுதியான முறையில் வெளிப்படுத்திய நியாயமான உணர்வு.

கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான வழியில் கோபப்படுவது அவ்வளவு எளிதல்ல. மூன்று வகையான கோபம் பற்றி தந்தை மைக்கிள் ஜெயராஜ், சே.ச. குறிப்பிடுகிறார். ) அகச்சினம் (தன்னையே கடிந்து கொள்வது) 2. புறச்சினம் (பிறர்மீது கோபம் கொள்வது) 3. அறச்சினம் (ஒடுக்கப் பட்டோருக்கு ஆதரவாக அநீதி கண்டு சீறி எழுவது). அறச்சினம் பிறர் நலத்தில் பிறக்கும் அன்பின் வெளிப்பாடு. சமுதாய அக்கறையின் சின்னம். விடுதலை வாழ்வின் ஆணிவேர்.

கோபம் ஓர் உந்து சக்தி. கோபம் கொடிது என்று கூறினும் கோபம் கனலைப் போன்று பலனளிக்க வல்ல எரிசக்தி. எனினும் ''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபே.4:26)

கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும் என்பார்கள் - ஏதோ கோபமும் குணமும் மாறுபட்டதுபோல. கோபமே குணமாகலாம் என்பது இயேசுவின் வெளிப்பாடு - நிலைப்பாடு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறையன்பு – பிறரன்பு

நிகழ்வு

ஓர் ஊரில் மாதா பக்தர் ஒருவர் இருந்தார். இவர் நாள்தவறாமல் கோயிலுக்குச் சென்று, மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றி, வேண்டிவிட்டு வருவார். இதைக் கவனித்த பங்குப்பணியாளர் அவரிடம், “உங்களுக்கு மாதாவின்மீது அவ்வளவு நம்பிக்கையா...? நாள்தவறாமல் கோயிலுக்கு வருவதும், மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றுவதுமாக இருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு அந்த மாதா பக்தர், “ஆமாம், எனக்கு மாதாவின்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு... அடிப்படையில் நான் ஒரு விவசாயி. எனது நிலத்திற்குப் பக்கத்தில் ஒரு காலி இடம் இருந்தது. அதைப் பத்திரப் பதிவாளருக்கு இலஞ்சம் கொடுத்து, என்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டேன். இப்பொழுது அந்தக் காலி இடத்திற்குச் சொந்தக்காரர் எல்லாவற்றையும் அறிந்து, என்மீது வழக்குத் தொடுத்திருக்கின்றார். நீதி மன்றத்தில் தீர்ப்பு என் சார்பாக வரவேண்டும். அதற்காகத்தான் நான் நாள் தவறாமல், கோயிலுக்கு வந்து, மாதாவின் திருவுருவத்தின் முன்பாக மெழுகுதிரி ஏற்றிவிட்டுச் செல்கின்றேன்” என்றார். அந்த மனிதர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட பங்குப் பணியாளர் அதிர்ந்துபோனார்.

பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற மாதா பக்தரைப் போன்றுதான் கடவுள்மீது அன்பு அல்லது நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தங்களோடு வாழும் சகோதரர் சகோதரிகளைப் பகைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் இறையன்பு, பிறரன்பு என்றால் என்ன, இவற்றிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலாய் இருக்கின்றது. இது குறித்து நாம் சிந்திப்போம்.

கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகள்

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், பத்துக்கட்டளைத் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்தப் பத்துக் கட்டளைகளில் முதலில் வருகின்ற நான்கு கட்டள்கள் கடவுளை அன்பு செய்வதைக் குறித்தும், அடுத்து வருகின்ற ஆறு கட்டளைகள் அடுத்திருப்பவரை அன்பு செய்வதைக் குறித்தும் இருக்கின்றன.

ஆண்டவராகிய கடவுள் இந்தப் பத்துக் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்களுக்குத் தருவதற்கு முன்பாக மோசேயிடம் பேசுகின்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்..... நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப 19: 5). இதுதான் கடவுள் மோசேயிடம் பேசிய வார்த்தைகளாகும். இதன்படி இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வார்த்தைகளைக் – பத்துக் கட்டளைகளைக் - கடைப்பிடித்து, அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடியாமல், அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள்; மட்டுமல்லாமல், அவர்கள் தங்களோடு இருந்த வறியவர்களை ஒடுக்கினார்கள். இதனால் “அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது, தன்னை அன்புசெய்வது போல பிறரையும் அன்பு செய்வது” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கும் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், கடவுள் தங்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள்.

எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய இயேசு

இறையன்பையும் பிறரன்பையும் வலியுறுத்தும் பத்துக்கட்டளைகளைக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருக்க, அவர்களோ அவற்றைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தார்கள் என்று சிந்தித்தோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துகின்ற நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம். இந்த நிகழ்வுகூட இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் எதிராக மக்கள் நடந்துகொண்டதாலேயே நடந்து என்றுகூடச் சொல்லலாம்.

கி.மு. 949 ஆம் ஆண்டு சாலமோன் மன்னர் முதல் கோயிலைக் கட்டியெழுப்பினார். இக்கோயிலானது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. அத்தோடு எருசலேமில் இருந்தவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் (2அர 25). இவ்வாறு பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் திருக்கோயிலானது எஸ்ரா மற்றும் நெகேமியா ஆகியோரின் தலைமையில் 515 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டியெழுப்பட்டது; இது செருபாபேல் கோயில் என அழைக்கப்பட்டது.. இக்கோயிலானது பின்னர் ஏரோது மன்னனால் நாற்பத்து ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய நீண்டநெடிய பாரம்பரியம் கொண்ட எருசலேம் திருக்கோயிலைத்தான் இயேசு தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலம் திருக்கோயிலைத் தூய்மைப்[படுத்துவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு காரணங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஒன்று, எருசலேம் திருக்கோயிலில் நடந்த முறைகேடு. ஆண்டுதோறும் பாஸ்காவிழாவைக் கொண்டாட எருசலேமிற்குச் செல்கின்றவர்கள் திருக்கோயிலில் பலியிட ஆடுமாடுகளை கொண்டுசெல்வர் (இச 12: 5-7); ஆனால், திருக்கோயிலின் வளாகத்திலேயே ஆடு மாடுகளின் விற்பனை நடைபெற்றதால், மக்கள் தங்களோடு ஆடுகளைக் கொண்டு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. இவ்வாறு திருக்கோயிலின் வளாகத்திற்குள் விற்கப்பட்ட ஆடு மாடுகளின் விலை மிகுதியாக இருந்தது. மேலும் நாணய மாற்றுதலிலும் முறைகேடுகள் நடந்தன. எவ்வாறெனில் பல இடங்களிலிருந்தும் வந்த மக்கள் கோயில்வரியினைச் செக்கேலில் செலுத்தவேண்டியிருந்தது. இதன்மூலம் நாணய மாற்றுவோர் மிகுதியாக இலாபம் அடைந்தனர்.

இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துவதற்கான இரண்டாவது காரணம், பிற இனத்தாருக்கான வழிப்பாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் ஆகும். சாலமோன் மன்னர் எருசலேம் திருக்கோயிலைக் கட்டிமுடித்து, அதை அர்ச்சிக்கின்றபொழுது, அன்னியர் அல்லது பகைவர் இத்திருக்கோயிலை நோக்கி வேண்டிக்கொண்டால், நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, நீதி வழங்குவீராக (1 அர 8: 48-49) என்று கடவுளிடம் வேண்டியிருப்பார். மேலும் எருசலேம் திருக்கோயில் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என்று ஆண்டவரே சொல்லியிருப்பார் (எசா 56: 7). உண்மை இப்படியிருக்கையில், எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் பிற இனத்தார் வழிபடும் இடத்தில் வாணிபம் செய்ததால்தான் இயேசு அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார்.

எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் அதிலும் குறிப்பாக அதை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிற இனத்து மக்களையும் அன்பு செய்திருந்தால் அங்கு வாணிபம் செய்திருக்கமாட்டார்கள். இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாதாலேயே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

இறையன்புக்கும் பிறரன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இயேசு

இஸ்ரயேல் மக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, எருசலேம் திருக்கோயிலை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, இயேசு இறைவனையும் பிறரையும் அன்பு செய்கின்றார். அவர் இறைவனையும் பிறரையும் அன்பு செய்தார் என்பதன் அடையாளம்தான், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு.

இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தும்பொழுது சொல்லக்கூடிய வார்த்தைகள், “என் தந்தையின் இல்லம்” என்பதாகும். தந்தைக் கடவுளின்மீது, அவரது இல்லத்தின் இயேசு உண்மையான அன்பு கொண்டிருந்ததாலேயே அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது. அதைப்போன்று இப்பகுதியை மாற்கு நற்செய்தியில் படிக்கும்பொழுது, “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு” (மாற் 11: 17) என்று இயேசு சொல்வதாக வரும்.. மக்கள் எல்லாரையும் அன்பு செய்ததாலேயே அவரால் ‘மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என்று சொல்ல முடிந்தது. இவ்வாறு இயேசு இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கினார். நாமும் இறைவனையும், அதேநேரத்தில் சக மனிதர்களையும் முழுமையாக அன்புசெய்ய வேண்டும். ஏனெனில் இறையன்புக்கு இணையான கட்டளை பிறரன்பு ஆகும் (மத் 22: 39)

சிந்தனை:

‘தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1யோவா 4: 20). என்பார் யோவான். எனவே, நாம் நம்மோடு வாழும் சகோதர் சகோதரிகளை அன்பு செய்து, இறைவனை அன்பு செயபவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பொன்னினும் தேனினும்


ஆண்டவரின் நெறிமுறைகளின் மேன்மை பற்றி இன்றைய பதிலுரைப்பாடலில் பாடுகின்ற திருப்பாடல் ஆசிரியர், 'அவை பொன்னினும் பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை. தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை' (காண். திபா 19) என்கிறார்.

பொன்னும் தேனும் விவிலியத்தில் அடிக்கடி வரும் வார்த்தைப் படங்கள். இவ்விரு வார்த்தைப் படங்களும் இன்றைய வாசகங்கள் முன்வைக்கும் இருபெரும் இணைப்புகளை நமக்கு உருவகப்படுத்துகின்றன: நமக்கும் இறைவனுக்கும் உள்ள இணைப்பு பொன் போலவும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும் உள்ள இணைப்பு தேன் போலவும் இருக்க வேண்டும்.

மேல்நோக்கிய நம் உறவு பொன் போல ஒளிர்வதும், சமநோக்கிய நம் உறவு தேன் போல இனிப்பதும் எப்படி?

விடுதலைப் பயண நூலில் அழகானதொரு பதிவு உண்டு. இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் செங்கடலைக் கடந்து பாலைவனத்தில் சீனாய் மலை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகின்றனர். அங்கே அவர்கள் சந்திக்கின்ற முதல் எதிரிகள் அமலேக்கியர். அமலேக்கியரோடு நடக்கின்ற அந்தப் போர் இரு தளங்களில் நடக்கிறது. மோசே ஒரு குன்றின்மேல் ஏறி நின்று தன் கைகளை உயர்த்திக்கொள்கின்றார். கீழே யோசுவாவின் தலைமையில் வீரர்கள் போரிடுகின்றனர். மோசேயின் கை கீழே தாழும்போதெல்லாம் அமலகே;கியரின் கை போரில் ஓங்குகிறது. இதைக் காணுகின்ற ஆரோனும் கூரும் மோசேயின் கைகளை உயர்த்திப் பிடிக்க, யோசுவாவின் படை அமலேக்கியரை வெல்கின்றது. இங்கே இஸ்ரயேல் மக்கள் பெற்றது ஒரு பெரிய வெற்றி மட்டுமல்ல. மாறாக, அவர்கள் பெரிய மற்றும் முதன்மையான ஒரு வாழ்க்கைப் பாடமும் அதுவே. அது என்ன வாழ்க்கைப் பாடம்? அவர்களின் கரங்கள் இறைவனை நோக்கி மேல் நோக்கியும், ஒருவர் மற்றவரை நோக்கிச் சம நிலையிலும் இணைந்திருந்தால் அவர்கள் வெற்றியும், வளமும், நலமும் பெறுவர்.

அவர்களின் பயணம் பாலைவனத்தில் தொடர்கிறது. சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இப்பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை மையப்படுத்தியதாகவும், மற்ற ஏழு கட்டளைகள் மக்களுக்கு இடையேயுள்ள உறவை மையப்படுத்தியதாகவும் அமைந்துள்ளன. அல்லது, முதல் மூன்று கட்டளைகள் மேல்நோக்கிய உறவை நெறிப்படுத்தவும், மற்ற ஏழு கட்டளைகள் சமநோக்கிய உறவை நெறிப்படுத்தவும் துணை செய்கின்றன.

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற பத்துக்கட்டளைகளை தங்களுடைய மிகப் பெரிய அடையாளமாகக் கருதினர். கடவுள் நேருக்கு நேர் பேசியதாக வேறெந்த மக்களும் இல்லை என்று பெருமை கொண்டனர்.

ஆனால், காலப்போக்கில், தங்கள் இறைவனுக்கும் தங்களுக்கும், தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உள்ள உறவை மறந்துவிட்டு, வெளிப்புற அடையாளங்களைப் பற்றிக்கொள்கின்றனர்.

அதன் விளைவு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் காட்சி. எருசலேம் ஆலயத்துக்குள் நுழைகின்ற இயேசு அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிறார். இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவின் அடையாளமாக இருக்க வேண்டிய ஆலயம், ஒருவர் மற்றவரை அந்நியப்படுத்தும், அடிமைப்படுத்தும், வேறுபடுத்தும் அடையாளமாக மாறிவிட்டதை அறிந்த இயேசு, தலைகீழ் புரட்டிப் போடுதலைக் கொண்டுவருகின்றார். மேலும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில் மனிதர் உள்ளத்தை அறிந்தவராக இயேசு இருந்தார் என்று பதிவு செய்கின்றார் யோவான். இடம் சார்ந்த பிரசன்னம் என்று இருந்த ஆலயத்தை நபர் சார்ந்த பிரசன்னம் என்று மாற்றுகிறார் இயேசு. இவ்வாறாக, தன்னில் மேல்நோக்கிய உறவும் சமநோக்கிய உறவும் சந்திக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், சிலுவை என்ற அடையாளத்தைக் கையில் எடுக்கின்ற பவுல், அது இடறலான அடையாளமாக கிரேக்கருக்குத் தெரிந்தாலும், அதில் இறைவல்லமை வெளிப்பட்டது என முன்மொழிகின்றார்.

ஆக, மேல்நோக்கிய மற்றும் சமம்நோக்கிய உறவுநிலை இணைப்பு பொன் போலவும் தேன் போலவும் இருத்தல் நலம். பொன் போல அரிதாகவும், தேன் போல இனிமையாகவும் இருத்தல் நலம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"தவக்காலம் தூய்மையின் காலமா! "


தவக்காலம் ஒரு தூய்மையின் காலமாகும். தவக்காலத்தில் கடவுளின் அருளும் இரக்கமும் நமக்கு நிறைவாகக் கிடைக்கின்றது. கடவுளின் அருளையும் இரக்கத்தையும் முழுமையாக நாம் பெற்றுக் கொள்வதற்கு தூய்மை நிறைந்த வாழ்வு மிகவும் அவசியமான ஒன்றாகும். தூய்மை என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல ; மாறாக, உள்ளம் சார்ந்ததும் கூட. தூய வாழ்வு வாழுகின்ற பொழுது நாம் கடவுளோடு நெருங்கி வாழுகின்றோம். தூய்மையற்ற வாழ்வு வாழ்கின்ற பொழுது கடவுளை விட்டு விலகி வாழ்கின்றோம். கடவுளோடு இணைந்து வாழும் பொழுது நாம் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாக பெறுகின்றோம். கடவுளை விட்டுப்பிரிந்து வாழ்கின்ற பொழுது நாம் கடவுளின் இரக்கத்தையும் அருளையும் இழந்து விடுகிறோம். கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெறுவது நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கின்றது.

மனிதர்கள் இயல்பிலேயே பலவீனமானவர்கள். பாவம் செய்யக்கூடாது என்று என்னதான் முடிவு எடுத்தாலும் பலவீனத்தின் காரணமாக பற்பல பாவங்கள் செய்யக்கூடிய சூழல் ஏற்படும். ஆனால் சூழலின் காரணமாக பாவம் செய்தாலும் அவற்றிலே விழுந்து கிடக்காமல், எழுந்து கடவுளிடம் திரும்பி வருவதுதான் உண்மையான நிறைவைக் கொடுக்கும்.

தவக்காலத்தில் சிறப்பான விதத்தில் நாம் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அறச்செயல்களான இறைவேண்டல், நோன்பு, மற்றும் தானம் போன்றவற்றின் வழியாக நம்மையே தூய்மைப்படுத்திக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

புனித ஜான் மரிய வியான்னி என்ற புனிதர் தூய்மையான நிறைந்த வாழ்வுக்குச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றார். ஆர்ஸ் என்ற நகரத்தில் பங்குப்பணியாளராகச் சென்ற பொழுது, அந்த நகர மக்கள் பாவத்திலும் இவ்வுலக மாய கவர்ச்சிகளிலும் சிக்குண்டு கடவுளின் அருளையும் இரக்கத்தையும் உணராதவர்களாக இருந்தனர். இப்புனிதர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இறைப்பணியைச் சிறப்பாகச் செய்தார். ஒப்புரவு அருள்சாதனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இறைவேண்டல் வழியாகத் தன்னை முழுமையாகத் தூய்மைப்படுத்தி பிறரும் தூய்மை பெற வழிகாட்டினார். ஒரு கட்டத்தில் இந்த ஆர்ஸ் நகரம் தூய்மையின் நகரமாக மாறியது. நிறைவான விண்ணக வாழ்வை பெற்றுக்கொள்ள பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் ஆர்ஸ் நகரத்திற்கு வந்தனர். அந்த இடத்திற்கு வந்த புனித ஜான் மரிய வியான்னியின் வழியாக விண்ணகத்தில் புனிதர் கூட்டத்தோடு இணைய மக்கள் தெளிவையும் தகுதியையும் பெற்றுக்கொண்டனர். இதற்கு மனமாற்றமும் ஒப்புரவும் அடிப்படையாக இருந்தது. புனித ஜான் மரிய வியான்னியைப் போல ஒவ்வொரு குருவும் தூய்மையோடு வாழ அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கு மிகச்சிறந்த ஒரு ஆயுதமாக ஒப்புரவு என்ற அருள்சாதனத்தைப் பயன்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர். இறைமக்களும் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ள ஆர்ஸ் நகர மக்களைப் போல் மனமாற்றம் பெற்று ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த தவக்காலம் தூய்மை வாழ்வை வாழ கடவுளின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் காலம். இன்றைய வாசகங்கள் தூய்மையான வாழ்வைப் பெற்று கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேயின் வழியாக கட்டளைகளை வழங்குகிறார். திருஅவை கடவுள் தந்த பத்து கட்டளைகளையே மிகவும் ஆழமாக வலியுறுத்துகிறது. கடவுள் தந்த இப்பத்து கட்டளைகள் கடவுளையும் பிறரையும் தூய்மையான உள்ளத்தோடு அன்பு செய்ய அழைப்பு விடுக்கின்றன. கடவுள் இயல்போடு வாழத் தூய்மையான மனம் வேண்டும். கடவுள் இஸ்ராயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பொழுதும், கடவுளைப் பல நேரங்களில் மறந்து கடவுளுக்கு எதிராக பல பாவங்களைச் செய்தனர். கடவுளையும் அவர்களை வழிநடத்திய மோசேயையும் சினமூட்டினர். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை அன்பு செய்தார். எனவேதான் கடவுள் மோசேயின் வழியாக பத்து கட்டளைகளை வழங்கி தூய உள்ளத்தோடு வாழ வழிகாட்டினார்.

இன்றைய நாள் பதிலுரைப் பாடல் ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது ; அது தேனினும் இனிமையானது என்ற கருத்தினை சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவரின் வார்த்தையை தூய்மையான உள்ளத்தோடு உள்வாங்கி, அவற்றை வாழ்வாக்கும் பொழுது நிறைவான வாழ்வை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த நிறைவான வாழ்வு தான் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நமக்கு கொடுக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம். யூதர்கள் அடையாளத்தை அதிகமாகக் கேட்டுப் பெரும்பாலும் இறை அனுபவத்தை பெறத் தவறினர். கிரேக்கர்கள் ஞானம் தான் இந்த உலகத்திலே சிறந்தது எனக் கருதினர். ஆனால் உண்மையான ஞானம் கிறிஸ்து இயேசுவிடம் தான் இருக்கின்றது என்பதை அவர்கள் தேட மறந்தனர். கிறிஸ்துவே நம்முடைய ஞானம் என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த ஞானத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள நம்மையே தூய உள்ளத்தோடு ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். தூய்மை நிறைந்த வாழ்வு தான் இறையச்சத்தை கொடுக்கும். இறையச்சம் தான் நமக்கு ஞானத்தை கொடுக்கும். எனவே இந்தத் தவக்காலத்தில் இறை ஞானத்தை சாலமோன் அரசரைப் போல பெற்றுக்கொள்ள தூய உள்ளத்தோடு வாழ முயற்சி செய்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்திய நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு ஒரு யூதர் என்ற முறையில் பாஸ்கா விழாவினை கொண்டாட எருசலேம் வந்தார். ஆனால் எருசலேம் கோவில் ஆன்மீகத் தளமாக இல்லாமல் ; வியாபாரத் தளமாக இருந்தது .சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் சாதாரண பாமர மக்களை ஒடுக்கிய யூதக் குருக்கள் தங்களுடைய சுயலாபத்திற்காகக் கோவிலை வியாபாரச் சந்தையாக மாற்ற அனுமதித்தனர். கடவுளுக்கு மக்கள் பலி செலுத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியதே, வியாபாரம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான். இயேசு எருசலேம் கோவிலை நோக்கி வந்த பொழுது ஆடு, மாடு, புறா விற்பவர்களும் , நாணயம் மற்றவர்களும் கோவிலில் இருந்தனர். கடவுளை உண்மையாக வழிபட வந்தவர்களுக்கு இத்தகைய வியாபாரம் தடையாக இருந்தது. அன்பை அதிகம் போதித்த ஆண்டவர் இயேசு, இன்று அறச்சினத்தின் வழியாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அங்கு பலிக்கான மிருகங்களை விற்பவர்களையும், நாணயம் மாற்றுபவர்களையும் சாட்டையால் அடித்து வெளியேற்றினார். இயேசு கோவிலில் கோபப்பட்டது அவரின் இறைவாக்கினர் பணியினைச் சுட்டிக்காட்டுகிறது. இறைவாக்கினர்களைப் போல இங்கு செயல்பட்டு ஆன்மீக வாழ்வில் இருக்கும் இருளை தூய்மைப்படுத்தினார் இயேசு. உண்மையான ஆலயம் என்பது நம் உள்ளம் தான். அதில் கடவுளைக் கண்டால் மட்டுமே, நாம் செல்லும் ஆலயத்திலும் கடவுளைக் காண முடியும். "யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். இயேசு கூறிய கோவில் தனது உள்ளமே. நம் உள்ளம் தூய ஆவியாரின் உறைவிடம். அந்தத் தூய ஆவியின் உறைவிடத்தைத் தீய ஆவியின் உறைவிடமாக மாற்றுவது நம் பாவம். தூய ஆவி நம்மில் செயல்பட, நாம் தூய வாழ்வை வாழ வேண்டும். நம் உள்ளத்தை அசுத்தம் செய்யாமல், தூய்மைப்படுத்த வேண்டும்.

இந்த தவக்காலம் தூய வாழ்வை பெற்றுக்கொள்ள வழிகாட்டும் சிறப்பான காலம். தூய்மையாக இருப்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் இருக்கின்றனர்.நாம் கடவுளுக்கு நெருக்கமாய் இருக்கும்பொழுது, கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். தூய வாழ்வு மட்டுமே நம்மைப் புனிதர்கள் கூட்டத்தோடு இணைத்து கடவுளை முகமுகமாய் தரிசிக்க வழிகாட்டும். தூய வாழ்வு மட்டும்தான் நமக்கு நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே இந்த தவக்காலத்தில் வெளிப்புற அடையாளங்களை மட்டும் தூய்மைப்படுத்தாமல், கடவுளுக்குப் பயந்து ஊதாரி மைந்தனுக்கு இருந்த மனமாற்ற மனநிலையில் கடவுளிடம் முழுவதுமாக மன்னிப்பு கேட்கமுயற்சி செய்வோம். ஒப்புரவு அருட்சாதனம் திருஅவையால் நமக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. இந்த உன்னதமான கொடையை முழுவதுமாக பயன்படுத்தித் தூய வாழ்வு வாழ முயற்சி செய்வோம்.அதன் வழியாகக் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாகப் பெறுவோம். தூய உள்ளத்தோடு கடவுளை சந்திக்க தயாரா?

இறைவேண்டல் :

தூய வாழ்வு வாழ வழிகாட்டும் இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்வைத் தூய உள்ளத்தோடு வாழத் தேவையான அருளைத் தாரும். அதற்கு தடையாயுள்ள பாவ வாழ்வை விட்டொழிக்கும் நல் மனதைத் தாரும். சோதனைகளை அறச்செயல்கள் வழியாக வென்று தூய வாழ்வுக்குச் சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?


தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறில் இருக்கிறோம். தவக்காலம் அருளின் காலம். புனிதமான காலம். ஏன்? அது, நம்மோடு என்றும் உள்ள கடவுளின் அன்பை உணர்ந்து தேடிவர அழைக்கும் காலம். இந்த காலத்தில் நம் வாழ்க்கையில் எது முக்கியம் என உணர்ந்து அதனை தேடி வர அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

நாகரீக உலகு என்று சொல்வதால் என்னவோ நாம் பலவற்றை இழந்து வருகிறோம். பொருளை இழந்தால் கூட ஈட்டி விடலாம். ஆனால் வாழ்வின் பொருளை அல்லவா நாம் இழந்து வருகிறோம். வாழ்வு என்றால் என்ன என மறந்த தலைமுறைகளாக நாம் மாறி வருகிறோம். இவ்வாறு எது முக்கியமோ அதனை நாம் இழக்க காரணம் என்னவாக இருக்கும்?

காரணம் - முக்கியமானதாக இருக்கலாம்: அது பழக்கப்பட்டதாக இருப்பதால் நாம் அதனையோ, அதன் பொருளையோ எளிதாக மறந்து விடுபவர்களாக மாறிவிடுகிறாம். இதுதான் காரணம்.

எடுத்துக்காட்டாக

 1. தந்தையும் தாயும் மனித வாழ்வில் மிக முக்கியமானவர்கள். என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அவர்கள் நன்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பதால் அவர்களின் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஆனால் காதல் நம் கண்களை மறைக்கும் போது எளிதாக பெற்றோரை இழக்கத் துணிகிறோம் அல்லது வாழ்வை இழக்கத் துணிக்கிறோம்.
 2. கடவுள் நமது வாழ்வில் மிக முக்கியமானவர். நம்மைப் படைத்தவர். ஆனால் என்ன செய்கிறோம்? அவரின் கட்டளைகளையும், அவர் பிரசன்னத்தை நினைவுபடுத்தும் ஆலயத்தையும் மறந்து இந்த இரண்டையும் மையப்படுத்தி சண்டைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். இதில் முக்கியத்துவம் அடிபடுகிறது. ஆனால் இன்றைய இறைவாக்கு நம்மை பொருளுக்கு ஏற்ற முக்கியத்துவம் கொடுக்க அழைக்கிறது. எதையும் அதனதன் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் கொடுக்க இறைவன் நம்மை அழைக்கிறார்.

இன்றைய முதல் வாசகமானது நான் உங்கள் கடவுள்: நீங்கள் என் மக்கள் என்ற சீனாய் மலை உடன்படிக்கை நிறைவாக கடவுள் கொடுத்த கட்டளைகளை கொண்டுள்ளது. கடவுள் தன்னை இந்த மக்கள் மறந்துவிடக் கூடாது என்று கூட கட்டளைகளை கொடுத்திருக்கலாம். கடவுள் கொடுத்த கட்டளைகளை விவரித்துப் பார்த்தால் கடவுளும், அவர் வாழும் இந்த சமூகமும் முக்கியம் என உணர்த்துகிறது. கடவுள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த சமூகமும் முக்கியம் சமூக மாற்றம். சமூக நீதி இல்லாமல் சமய வாழ்வு மாற்றமோ, முழுமையோ பெறாது எனும் செய்தியை இக்கட்டளைகள் வழி உணர்த்துகிறார்.

எ.காவாக

 1. ஓய்வு நாளை தூயதாய் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு – கடவுள் சொல்வது என்ன? ஓய்வு நாளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொன்னார்? – அது கடவுளின் நாள். அதே வேலையில் அன்றைய நாளில் தலைவர், அவரின் மகனும் மகளும், அடிமை, அடிமைப் பெண், கால் நடைகள், அந்நியர்கள் போன்றோர் ஒய்வு எடுக்க வேண்டும் என்பதே. இவர்களுக்காகன முக்கியத்துவம் விடுபட்டுவிடக் கூடாதென்பதாலே கடவுள் ஓய்வு நாளை தூயதாய் கடைபிடிக்க கட்டளையிடுகிறார். இவர்களுக்காகவே கடவுள் அந்நாளுக்கு ஓய்வு வழங்கி ஆசி கூறினார் எனவும் எண்ணலாம்.
 2. கொலை, களவு, பொய் சான்று - இவையெல்வாம் மாந்த நேயத்துக்கு மாறுபட்டது. மனித உயிரும், அவன் உழைப்பும் பிறருக்கு பெரியதென தெரியாததால் பல்வேறு குளறுபடிகள், விரும்பதகாத நிகழ்வுகள் இவர்களின் பாலைவன பயணத்தில் நடந்தது. என்னைப் படைத்த இறைவனே என் அயலவரினுள்ளும் வாழ்கிறார் எனும் எண்ணம் இல்லாமல் போனதால், மனித உயிர், உறவு முக்கியம் இல்லாமல் போனது. எனவேதான் யாவே கடவுள் கொலை செய்யாதே, பொய் சான்று சொல்லாதே, என்கிறார். இதே சிந்தனையில் பார்க்கும் போது ஆண்டவர் உறையும் ஆலயமானது இச்சமூகத்தின் அனைவரும் கூடும் இடம். ஒற்றுமையின் இடம். எல்லோரும் சகோதர சகோதரிகள், உறவினர்கள் என்பதை அறிவிக்கும் இடமானது இயேசுவின் காலத்தில் அது ஒரு வியாபார சந்தையாக மாறிவிட்டது. அப்படி என்னதான் நடந்தது எனப் பார்க்கையில், எருசலேம் ஆலயம் கள்வர்களின் குகையாய் மாறக் காரணம் அதற்குப் பொறுப்பாய் இருந்த தலைமைக் குருக்களே. இவர்கள் பணம் கொடுத்து தலைமைக் குருத்துவ நிலையை வாங்கிக் கொண்டார்கள். பெரிய ஏரோது பதவியேற்றதிலிருந்து எருசலேம் தேவாலயம் அழிவு வரை 28 பேர் பணம் கொடுத்து பெரிய குருத்துவப் பணியை அடைந்திருந்தார்கள். இவர்களில் அன்னா தமக்கும் தன் 5 மகன்களுக்கும் தன் மருமகன் கயபாவுக்கும் பெரிய குருத்துவப் பணியை பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார். வரி என்பதின் பேரில் நடந்த கொள்ளை: பதினெட்டு வயது வந்த யூத ஆண்கள் ½ செக்கல் ஆலய வரி செலுத்த வேண்டும். ஆனால் செக்கல் புழக்கத்தில் இல்லாத நாணயம். அப்படியெனில் திராக்மா அல்லது தெனாரியத்தை கொடுத்து அவர்கள் நாணயம் மாற்றும் போது 1ஃ6 மாற்றுக் கூலியாகப் பறிக்கப்பட்டது. இது ஒரு நேர்மையற்ற செயல், பணப்பறிப்பு.

காணிக்கைகள் பெயரில் நடந்த கொள்ளை: யூதர்கள் பல்வேறு வேளைகளில் பல்வேறு காணிக்கைப் பொருட்கள் செலுத்த வேண்டும் என்பது சட்டம். அதற்கேற்ப அவர்கள் தங்கள் வீடுகளிலிலிருந்து கொண்டு வரும்போது அதை தகுதியற்றவை எனக்கூறிக் கோயில் வளாகத்திலேயே காணிக்கைப் பnhருள் வாங்க வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கினார்கள். சில வேளைகளில் ஆலய வளாகத்தில் விற்கப்படும் பொருட்கள் அதன் உண்மை விலையை விட 20 மடங்கு அதிகமாக இருந்தது. இது முழுக் கொள்ளைதானே! ஆண்டவரின் கட்டளையும், இல்லமும் கேலிக் கூத்துதானே! இயேசு ஆலயத்தில் கோபப்பட இன்னும் முக்கியமானதொரு காரணம் உண்டு. அது, கயபா தலைமைக் குருவாகும் முன் இந்த வியாயாரங்கள் அனைத்தும் கெதரோன் பள்ளத்தாக்கில் மட்டுமே நடந்தது. அந்த வியாபாரிகள் இவர்கள் கேட்ட அளவிற்கு அதிகமான தொகையை கையூட்டாக கொடுக்க முடியவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்க புதிய வியாபாரிகளைக் கொண்டு வந்து எருசலேம் தேவாலயத்திலே வியாபாரம் நடத்தினார். இயேசுவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுதான் இயேசு சாட்டையை சுழற்றக் காரணம்.

எது முக்கியமோ அதனை மறந்து, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இழக்க கூடாத பிரசன்னத்தை இழந்தார்கள். அதுவே இயேசுவைக் கோப்பட வைத்தது. இதனால் இழந்த முக்கியத்துவத்தை கண்டறிய வைத்தது.

நாமும் என்ன செய்து கொண்டு இருக்கிறொம். இன்றும் அN;த நிலைதானே தொடர்ந்து வருகிறது. ஆலயம் சார்ந்த பொறுப்புகளில் ஏழை எளியவர்கள் வர முடியவில்லையே. கடவுளின் விலைமதிக்க முடியாத பிரசன்ன உள்ள ஆலயம் பிரச்சினைகளின் மையமாகவும் அதே வேளையில் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் கடை போன்றவை வைத்து அதிக விலைக்கு விற்று இன்றும் கள்வர் குகை போலே மாற்றிக் கொண்டுதானே இருக்கிறோம். என்று திருந்த போகிறோம். நாமும் யூதர்களைப் போல் எது முக்கியமென்பதை அறியாமல்தானே செயல்படுகிறோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? எனவே அன்பு நணபர்களே! வாழ்வில் எது முக்கியமென்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு தெளிவாக உணர்த்துகிறது. இதன் முக்கியத்துவத்தை இந்த தவக்காலத்தில் உணர்ந்தால், நாமும் வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ளலாம். சிறிது சிறிதாக நம்மை மாற்றுவோம்.

உதாரணமாக,
 1. ஆலயம் அதன் புனிதத் தன்மைக்கு ஏற்ப நம் செயல்பாடுகளை மாற்றலாம்.
 2. முதல்வாசகம் கூறுவது போல கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 3. கடவுள் சார்ந்த அனைத்தின் புனிதத் தன்மைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
 4. எளியவருக்கும் இடம் கொடுக்கலாம்.
 5. மனித நேய செயல்பாடுகளில் சட்டம் பேசாமல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன் வரலாம்.

இவ்வாறு சின்னஞ்சிறிய செயல்கள் நம்மை புடமிட அனுமதிப்போம். அந்த செயல்கள் பென்னம்பெரிய மாற்றத்தை உண்மையில் நமக்குள் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வாழ்வின் பொருளையும், முக்கியத்துவத்தையும் அறிந்து செயல்படுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக…

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு