மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலம் முதல் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
தொடக்கநூல் 9:8-15;1 | 1பேதுரு 3:18-22 | மாற்கு 1:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
மாற்றிக் கொள்ளும் காலம்தான் இந்த தவக்காலம்

தொடக்கம்

கிறிஸ்தவ வாழ்வு என்பது புதிய தொடக்கங்களின் வரலாறு. நமது வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பானது இக்கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த தவக்காலம் நாம் மாறுவதற்காக வழங்கப்படுகிறது. நமது வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்து, மாற்றிக் கொள்ளும் காலம்தான் இந்த தவக்காலம்.

இன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு கூறும் இரு முக்கிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். காலம் நிறைவேறிற்று. கடவுளின் அரசு நெருங்கி விட்டது. மனம் திரும்புங்கள். இந்நற்செய்தியை நம்புங்கள் (மாற்கு 1:15) என்று அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் அரசு என்பது நீதியிலும், அமைதியிலும், மகிழ்ச்சியிலும் அடங்கியுள்ளது என்று புனித பவுல் அடிகளார் உரோ. 14:17ல் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சந்திக்க விரும்பினால் தன் பாவத்தை விட்டு விட்டு நலன்களுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவன் பக்கம் திரும்ப வேண்டும்.

பாவம் என்றால் என்ன?

கதை

ஒரு பாலைவனம். அதன் உள்ளே , நடுவே ஒரு சோலைவனம். அந்தச் சோலைவனத்தில் ஒரு சிறு குளம். அந்தக் குளத்தில் பல தவளைகள் வாழ்ந்தன. அந்தக் குளத்தில் மனித வார்த்தைகளில் சொல்லப்போனால், நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் களி நடனம் புரிந்தன.

ஒருநாள் நஞ்சு நிறைந்த நாகப் பாம்பு வழி தவறி அந்தப் பாலைவனத்தில் அகப்பட்டுத் தவித்தது. மணலின் வெப்பத்தைத் தாங்க முடியாது இளைப்பாற இடம் தேடி அலைந்தது. இடம் கிடைக்காத நிலையில் தன் உடலைச் சுட்ட மணலிலிருந்து தப்பிக்கத் தன் வாலை மணலில் ஊன்றி உடலைத் தூக்கி உயர்த்திப் படம் எடுத்தது. உடலின் நிழல் மணல்மீது பட்டது. குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குட்டித் தவளையின் கண்ணில் பட்டது இது. அந்தப் பாம்பின் நிழலில் இளைப்பாற ஆசைப்பட்டது. தன் தாய் தந்தை மற்ற தவளைகளை விட்டு அந்தக் குட்டித் தவளை பாம்பின் நிழலை அடைந்தது. நல்ல பசியோடு இருந்த பாம்பு தவளையைக் கவ்விப் பிடித்து விழுங்கி விருந்தாடியது.

இந்தக் கதையில் வந்த தவளையின் உள்ளத்தில் எழுந்த தவறான ஆசைக்குப் பெயர்தான் பாவம். இதேபோன்று மனிதர்கள் தங்கள் உரிமை வாழ்வை, மன அமைதியை, மகிழ்ச்சியை இழக்கக் காரணமாக இருப்பது அவர்களின் உள்ளத்தில் எழும் வேண்டாத ஆசைகளே. தவறான ஆசைகள் எப்போதும் அழிவிற்கே இட்டுச் செல்லும். ஊனியல்பின் செயல்களான பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை , சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் இவைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும்.

நாம் இரு காலங்களுக்கு இடையில் உள்ளோம். முதலாவதாக இது வளர்ச்சியின் காலம். நமது குற்றங்களில் நாம் மூழ்கிப் போகாது, இறைவன் தரும் நற்செய்தியை ஏற்று வளர்ச்சி பெற வேண்டிய காலம். தொடக்க நூலில் 9:13-15ல் குறிப்பிடுவதுபோல ஆண்டவர் பக்கம் திரும்புவோர் வாழ்வு பெறுவர். இறைவன் நோவாவையும், அவர் புதல்வர்களையும் நோக்கி, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். இது என் உடன்படிக்கையின் அடையாளம். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெரு வெள்ளமாக வராது என்றார். இந்த மீட்பைப் பெற்றுத் தரத்தான் கிறிஸ்து இறந்தார். எனவே முறையற்ற வாழ்வால் சோர்ந்து நம்பிக்கை இழந்து போகாதபடி நாம் வளர்ச்சி காணும் காலம். இரண்டாவது இது பயிற்சியின் காலம். இயேசு யோர்தான் நீரில் திருமுழுக்குப் பெற்று 40 நாட்கள் பாலைவனத்தில் தவமுயற்சியை மேற்கொண்டு தீமையை முறியடித்தார் (மாற். 1:12-13). நாமும் நம்மைப் பயிற்றுவிக்கப் பாலைவனம் அனுபவம் அடைய வேண்டும். குறையை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

பழைய ஏற்பாட்டிலே தாவீது அரசன் தவறான ஆசைக்கு இடம் கொடுத்து விபச்சாரம் செய்து அதை மறைக்கக் கொலையும் செய்தான். ஆன்மாவை இழந்தான். ஆனால் இறைவாக்கினர் நாத்தான் அறிவுரைக்குச் செவிமடுத்து (2 சாமு. 12:13) ஆண்டவரை ஏற்று மனம் மாறினான். அமைதி, மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டான். புதிய ஏற்பாட்டில் பாவியாக வாழ்ந்த மதலேன் மரியா இயேசுவின் பாதத்தைத் தொட்டுக் கண்ணீர் வடித்துப் பாவ ஆசைகளை விட்டு பரமனின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். திசை மாறிய பறவைக்குத் தன் அன்பு கூட்டில் அடைக்கலம் கொடுத்தார் இயேசு. அவள் இழந்த சமாதானத்தை மீண்டும் கண்டடைந்தாள். பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலுமிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு உரியவர், நேர்மையுள்ளவர் (1 யோவா. 1:8-9).

ஆகவே பாவ ஆசைகளை விட்டுவிட்டு, நமது மனதை எல்லா வரங்களுக்கும் ஊற்றாகிய இறைவன் பக்கம் திருப்புவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாவம் என்றால் என்ன ?

இயேசு சோதிக்கப்பட்டதாக புனித மாற்கு இன்றைய நற்செய்தியிலே கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவைச் சோதித்தான். புனித மத்தேயு எழுதிய நற்செய்தியின்படி இயேசுவை மூன்றுமுறை சாத்தான் சோதித்தான். முதல் சோதனை வெளிப்புலன்களுக்கு, குறிப்பாக வாய்க்கு எதிரான சோதனை (மத் 4:3). இரண்டாவது சோதனை உள்புலன்களுக்கு, குறிப்பாக அறிவுக்கு எதிரான சோதனை (மத் 4:6). மூன்றாவது சோதனை இறைநம்பிக்கைக்கு எதிரான சோதனை (மத் 4:9).

“அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது" என்று புனித லூக்கா கூறுகின்றார் (லூக் 4:13). அலகை ஏற்ற காலத்திற்காகக் காத்திருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. இயேசு பாடுபடப்போவதற்கு முன்னால் சிலுவையைச் சுமக்கப்போவதற்கு முன்னால் அவரை அலகை சோதித்தது. இயேசு, தான் துன்பப்பட வேண்டும் என்பதைத் தமது சீடர்களிடம் கூறியிருந்தார் (லூக் 9:22, 17:25, 24:26, 24:46). இயேசு துன்பப்படக்கூடாது, கொலை செய்யப்படக்கூடாது என்று புனித பேதுரு கூறியபோது, இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய்" (மத் 16:23) என்றார். ஆனால் அவரோ லூக் 22:42-இல், "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் ..." என்று கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவை நான்கு முறை சோதித்தான்.

சாத்தான் யார்?

பாவத்தின் மறு உருவம்தான் சாத்தான். சாத்தான் எங்கு இருக்கின்றானோ, அங்கே பாவமிருக்கும்; எங்கே பாவமிருக்கின்றதோ அங்கே சாத்தான் இருப்பான்.

பாவம் என்றால் என்ன? இறையாட்சிக்கு எதிராகச் செயல்படுவதே பாவம். சாத்தானின் வேலை, இறையாட்சிக்கு எதிராகச் செயல்பட நம்மைத் தூண்டுவதாகும். இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர் என்று புனித பவுலடிகளார் கூறுகின்றார் (உரோ 14:17-18).

இன்றும் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகின்றோம்.

பாவச் சோதனைகளிலிருந்து விடுதலை பெற வழி ஏதும் உண்டோ? உண்டு என்கின்றார் இயேசு.

இதோ இயேசு நம்மோடு பேசுகின்றார் : நோவா காலத்துத் தண்ணீர் (முதல் வாசகம்) மக்களை அழித்தது. நான் தரும் தண்ணீரோ உங்களை வாழ வைக்கும் (இரண்டாம் வாசகம், யோவா 7:37-39). தூய ஆவியாரே நான் தரும் தண்ணீர். அவரால் உங்களை அருள்பொழிவு செய்துகொள்ளுங்கள்; அவரில் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நான் முதல் மூன்று சோதனைகளையும் வென்றது எப்படி? தூய ஆவியாரால் நான் பாலைநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன் (மாற் 1:12). அவர் எப்போதும் என்னோடு இருந்தார். அவரை எதிர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எந்த சாத்தானுக்கும் கிடையாது. நான்காவது சோதனையை விண்ணகத் தந்தை மீது நான் வைத்திருந்த அளவிடமுடியாத அன்பால் (கலா 5:22-23) வென்றேன். என் வழியில் நடங்கள். உங்களை எந்தத் தீய சக்தியும் தீண்டாது; எந்தப் பாவமும் நெருங்காது.

இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி நடந்தால் “பேய்களின் விருந்து மண்டபமாய் உன் மனசு மாறியதெப்படி? மூளையில் எப்போது முள் முளைத்தது உனக்கு?” என்று இறைவனோ, இறையடிகளார்களோ நம்மைக் கேட்கமாட்டார்கள். மாறாக இறைவனும், இறையடியார்களும் நம்மைப்பார்த்து, "நீ செல்லும் பாதை சரியான பாதை ... சிகரங்களில் வசிக்க சிங்காரமாய் நடந்துசெல்” என்பார்கள்.

மேலும் அறிவோம் :


வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது ( குறள் : 865).

பொருள் :
செயலுக்குரிய நல்ல வழியினை நாடாமலும் வெற்றிக்குரிய செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு நாணாமலும் பண்பாடு இல்லாமலும் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இந்தச் சோதனை எதற்கு?

நடுக்கடலில் ஒரு பயணிகள் கப்பல். பயணிகளில் ஒருவர் துறவி - சாது. பெரும்பாலோனோர் இளைஞர் பட்டாளம். சாதுவைக் கேலி செய்து கிண்டல் அடித்தது அக்கூட்டம். சிலர் தங்கள் காலணிகளைக் கூட கழற்றி சாது மீது வீசி விளையாடினர். ஆனால் சாதுவோ அமைதியாய் இருந்தார். புன்னகை பூத்திருந்தார்.

திடீரென ஓர் அசரீரி கேட்டது. "சாதுவே, நீ விரும்பினால் இந்தக் கப்பலை மூழ்கடிக்கிறேன். உன்னை அவமானப்படுத்தியவர்களை இந்த ஆழ்கடலில் அமிழ்த்தி சாகடிக்கிறேன்” இதைக் கேட்ட கப்பலில் இருந்த அத்தனை பேரும் கதிகலங்கி சாதுவின் காலில் சரணாகதி அடைந்தனர். சாதுவானவர் வான் நோக்கிக் கைகளை உயர்த்தி, "என் அன்பான கடவுளே, நீர் ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறீர்? கப்பலைக் கவிழ்த்து என்ன பயன்? முடிந்தால் இவர்களின் மனத்தை மாற்றும்”. வானிலிருந்து கடவுள் பதிலளித்தார்: “என் அன்பு மகனே, உன்னில் நான் மகிழ்கிறேன். முன்பு ஒலித்தது என் குரல் அன்று! உண்மையிலேயே அது சாத்தானின் குரல் தான்! எவன் ஒருவன் சாத்தானின் குரலை இனம் கண்டுகொள்ள முடிகிறதோ, அவனே என்னுடைய குரலையும் புரிந்து கொள்ள முடியும்”.

கடவுளின் குரலையும் அலகையின் குரலைஸயம் தரம் பிரித்துக் காட்டும் கண்ணாடியே தவக்காலம்.

பேய் பேயாக வருவதில்லை. எடுத்த எடுப்பில் தீயவற்றில் வீழ்த்த தோன்றும் விதங்களிலும் சொல்லும் வார்த்தைகளிலும் உருமாறி, முகமூடி அணிந்துதான் வருகிறான். அந்தநேரத்தில் நம் அறிவு என்ன சொல்கிறது?

ஒவ்வொரு கணமும் நமது செயல், சொல், சிந்தனை அனைத்திற்குப் பின்னும் நம் உள்ளத்திலிருந்து எழும் ஒரு குரல் இருக்கும். இதனை உடல் ரீதியாக, அறிவியல் ரீதியாக மூளை கட்டளை இடுகிறது, உடலின் உறுப்புகள் இயங்குகின்றன என்பார்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்வதனால் தன் வீட்டைத் தானே இடிக்கிறது போல் (தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும், லூக்.11:17) நமது உடலையும், மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும் நாசப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டளையை நமது மூளை கொடுக்கக் கூடுமோ?

ஆன்மீகத்துக்கு முன்னே அறிவியல் கேள்விக்குறியாகிறது!

சிலர் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேறு சிலரோ தங்களது தீய செயலால் பிறரையும் கெடுத்துத் தாங்களும் அழிந்து போகிறார்கள். ஆகவே நம் செயல்கள் அனைத்தும் வெறும் மூளையின் கட்டளைகள் 11ன்று அல்லாது அதற்கும் மேற்பட்ட ஏதோ ஒன்று செயல் ஊக்கியாக இருப்பதை உணர முடிகிறது. பலரை வாழ வைக்கும் செயல்களைச் சிலர் செய்வதைக் காண்கிறோம். தாங்கள் நல்வழியில் நடப்பதோடு பிறரையும் நல்வழிப்படுத்துவதைக் காண்கிறோம். காரணம்? நம் உள்ளத்திலிருந்து இருவிதமான குரல்கள் எழும்புகின்றன. ஒன்று நற்செயல்களைச் செய்ய வைத்து நம்மை வாழவைக்கும் இறைவனின் குரல்! மற்றொன்று திசெயல்கள் மூலம் பிறரையும் நம்மையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் இலகையின் குரல்!

எனவேதான் “இதோ பார், வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30;15)... அவரது குரலுக்குச் செவிகொடு" என்கிறார் மோசே வழியாக இறைவன்!

மத்தேயுவோ லூக்காவோ போல இயேசுவின் சோதனைகளைப் பட்டியலிடாமல், இயேசு சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மார்க் மட்டும் குறிப்பிடுகிறார். "பாலை நிலத்தில் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார்” (மார்க்.1:13)

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய தீய சக்திகளான காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்றி நமக்குள்ளேயும் இருக்கின்றன. உயிரினங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றுக்கும் ஆயுள் காலத்தை 30 ஆண்டுகளாக நிருணயித்தார். அதில் திருப்தி அடையாத கழுதை, நாய், குரங்கு, மனிதன் மட்டும் திருப்தியின்றி முறையிட்டன.

கழுதை கடவுளிடம் "தினம் தினம் பொதிசுமக்கிற எனக்கு 30 ஆண்டுகள் என்பது வேதனையானது" என்றது. சரி என்று 18 ஆகக் குறைத்தார். "குரைத்துக் குரைத்து தொண்டை காய 30 வயதா?” என்ற நாய்க்கு ஆயுளை 12 ஆக்கினார். பிறகு குரங்கு "மரத்துல தொங்கித் தொங்கி ஆடுற என் பொழைப்புக்கு 30 தேவையா?” என்று கேட்க அதை 10 என்றாக்கினார்.

இறுதியாக வந்த மனிதன் “அனைத்தையும் அனுபவிக்க எனக்கு 30 ஆண்டுகள் எப்படிப் போதும்? அதனால் கழுதையில் ஒதுக்கிய 12, நாயில குறைத்த 18, குரங்கில் குறைத்த 20 எல்லாத்தையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கெஞ்ச “சரி அப்படியே ஆகட்டும்” என்றாராம் கடவுள்.

அதனால்தான் மனிதன் 30 ஆண்டு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அடுத்த 12 ஆண்டு கழுதை மாதிரி குடும்பப் பாரத்தை சுமக்கிறான். அடுத்த 18 ஆண்டு நாய் மாதிரி சொத்துச் சேர்க்கவோ, சேர்த்ததைக் காக்கவோ அலையோ அலையின்னு அலைகிறான். பிறகு 20 ஆண்டு வயதாகி வீட்டில் மரியாதை போய் யார் என்ன சொன்னாலும் குரங்காட்டம் ஆடித் தவிக்கிறான்.

நமக்குள்ளே மிருகக்குணம் நிறையவே இருக்கு. கடித்து குதறாத அளவுக்கு காட்டு விலங்குகளாக எதிர்த்து நிற்கும் தீய சக்திகளுக்கு முன்னே நிராயுதபாணியாக நிற்பதா? அந்தப் போராட்டச் சோதனைக் களத்தில் ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என்ன? எபேசியருக்கு எழுதிய திருமடலில் (6:11-17) தூய பவுல் இடைக்கச்சையாக உண்மை, மார்புக் கவசமாக நீதி, நற்செய்தி அறிவிப்பின் ஆயத்த நிலையாக மிதியடி, தலைச்சீராக மீட்பு, போர் வாளாக இறைவார்த்தை என்று பட்டியலிடுவார். இவற்றில் முதல் நான்கும் தற்காப்புக்கானவைகள். எதிரியை வீழ்த்தக் கூடிய போர் வாளாக இருப்பது இறைவார்த்தை ஒன்றே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர் இளைஞனின் தவக்காலக் கணிப்பு!

ஓர் இளைஞர் கூறினார்: "என்னைப் பொறுத்தமட்டில் ஓராண்டில் 325 நான்களே உள்ளன. ஏனெனில் தவக்காலத்தின் 40 நாள்களும் எங்கள் வீட்டில் சுத்த சைவ உணவு: முட்டையோ மீனோ கறியோ கிடையாது. எனவே அந்த 40 நாள்களையும் கணக்கில் சேர்ப்பதில்லை. ஓர் இளைஞனின் தவக்காலக் கணிப்பு!

தவக்காலமென்பது அசைவ உணவைத் தவிர்ப்பதிலோ, பூவும் பொட்டும் வைக்காமல் இருப்பதிலோ, திரைப்படங்கள், மதுபானங்கள், புகைபிடித்தல் ஆகியவற்றை விலக்குவதிலோ அடங்கவில்லை, செபமும் தபமும் ஒறுத்தல் முயற்சிகளும் தவக்காலத்தில் அடிப்படை நோக்கமான ஆழமான இதய மனமாற்றத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இவையனைத்தும் பயனற்றவை; வெளிவேடம்.

இதய மனமாற்றமென்பது புதுப்படைப்பாக மாறுவதாகும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார், பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ " (2 கொரி 5:17). கடவுள் உலகத்தைப் படைத்தபோது படைப்புகள் அனைத்துமே மிகவும் நன்றாயிருந்தது (தொநூ 1:31). ஆனால், மனிதர் தம் பாவத்தால் கடவுளின் படைப்பைர் சீரழித்தபோது, கடவுள் அதை மீண்டும் புதுப்படைப்பாக மாற்றினார்.

நோவாவின் காலத்தில் பாவர் சேற்றில் மூழ்கிக் கிடந்த உலகத்தை வெள்ளப் பெருக்கினால் அழித்துவிட்டு, நோவாலையும் அவருடைய குடும்பத்தையும் புதுப்படைப்பின் தொடக்கமாக விளங்கச் செய்தார். வெள்ளப் பெருக்கிற்குப்பின், கடவுள் தமது அருளன்பைப் புதுப்பித்து நோவாவுடன் உடன்படிக்கை செய்தார் (முதல் வாசகம்). கடவுள் தாம் நல்லவரென்றும், நேர்மையுள்ளவரென்றும், எளியோரை நேர்வழியில் நடத்தி, அவர்களுக்குத் தம் வழியைக் கற்பிப்பவரென்றும் எண்பித்தார் (பதிலுரைப்பாடல், திபா 25:8-9).

வெள்ளப் பெருக்கின்போது காப்பாற்றப்பட்ட தோவாவின் குடும்பத்தினர் எட்டுப் பேரும் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர், இத்தண்ணீர் திருமுழுக்கிற்கு முன் அடையாளம் என்கிறார் தூய பேதுரு (இரண்டாம் வாசகம், 1 பேது 3:20-21). தண்ணீ ருக்கு ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டு, வெள்ளப் பெருக்கு பாவ உலகை அழித்தது. ஆனால், பேழையில் இருந்த நோவாவின் குடும்பத்தைக் காப்பாற்றியது. செங்கடல் எகிப்தியன அழித்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு வழிவிட்டுக் காப்பாற்றியது. திருமுழுக்குத் தண்ணீருக்கும் ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டு. அது பழைய மனிதருக்குரிய பாவ இயல்பை அழிக்கிறது, கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை உருவாக்குகிறது (எபே 4:22-24).

தவக்காலத்தின் இறுதிக் குறிக்கோளான இதய மனமாற்றம் இயேசுவின் பாஸ்கா மறைபொருளில், அதாவது அவரது சாவிலும் உயிர்ப்பிலும் பங்குபெறுவதில் நிறைவடைகிறது. பெரிய சனிக்கிழமை திருவிழிப்புத் திருப்பலியின்போது மனம் திரும்புவோர் திருமுழுக்குப் பெறுவர்; ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்களது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வர். நாம் பெற்ற திருமுழுக்கு நம்மிடமிருந்து ஜென்மப்பாவத்தைப் போக்கியது. ஆனால் ஜென்மப் பாவத்தின் விளைவாக தம்முன் குடி கொண்டிருக்கும் பாவ நாட்டங்களையும் பாவத்தின் மீதுள்ள கவர்ச்சியையும் போக்கவில்லை. எனவே, நம் வாழ்வின் இறுதி மூச்சுவலா பாவங்களையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு போர், காயமில்லாத போருண்டா? வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி, தீயில்லாத வேள்வி உண்டா?

திருமுழுக்கு பெற்றும் நாம் சோதிக்கப்படுகிறோமே என்று வியப்படையவோ வேதனைப்படவோ தேவையில்லை. திருமுழுக்குப் பெற்றவுடனே இயேசு அலகையால் சோதிக்கப்படும்படி அதுவும் ஆவியானவரால் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (மாற் 1:12), இயேசு எல்லாவகையிலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார் என்று எபிரேயர் திருமடல் கூறுகிறது (எபி 5:15).

மத்தேயுவும் (மத் 4:1-11), லுக்காவும் (லூக் 4:1-13) இயேசுவை அலகை எவ்வாறு சோதித்தது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மாற்குவோ இயேசு அலகையால் சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மாற்கு மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இயேசு பாலைவனத்தில் காட்டு விலங்குகளிடையே இருந்தார் (மாற் 1:13). காட்டு விலங்குகள் தீயசக்திகளைக் குறிக்கின்றன. தூய பவுல் எபேசில் காட்டு விலங்குகளோடு போராடியதாகக் குறிப்பிடுகிறார் (1 கொரி 15:32).

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்று, தமக்குள்ளேயும் இருக்கின்றன. 'தெய்வம் பாதி மிருகம் பாதி சேர்த்துச் செய்த கலவை தான். உள்ளே தெய்வம், வெளியே மிருகம், விளங்க முடியாத புதுக்கவிதை நான் (திரைப்படப் பாடல்).

ஒரு பெண் குரங்கு குட்டியொன்றை என்றது. அக்குட்டியைப் பார்த்து அழுத்து. ஏன்? என்று ஆண் குரங்கு கேட்டதற்கு, அப்பெண் குரங்கு, 'நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக் கொண்டிருக்கிறது' என்றது. அதற்கு ஆண் குரங்கு, 'கவலைப்படாதே, போகப் போக நம் முகம் வந்துவிடும்' என்று அதைத் தேற்றியது! மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர், மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. "நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்" (கலா 5:15).

நம்மை மிருகமாக்கும் அலகையின் வஞ்சகத் தந்திரங்களை மன உறுதியுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அலகை இயேசுவைச் சோதிப்பதற்காகப் பயன்படுத்திய அதே மூன்று வழிகளைத்தான் நம்மையும் கெடுக்கப் பயன்படுத்துகிறது. கற்களை அப்பாமாக்கிச் சாப்பிட்டு உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள் (trust), கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்து வல்லமையை வெளிப்படுத்து (Power), அலகையை வழிபட்டு செல்வத்தைக் குவித்துக்கொள் (Moncy), 'உலகமனைத்தும் தீயோனின் பிடியிலிருக்கிறது' (1 யோவா 5:19) என்று கூறும் யோவான், உலகில் இருப்பது எல்லாம், "உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு" என்று (1 யோவா 2:16) உலகின் நாடிப்பிடித்துச் சொல்லுகிறார். யோவான் குறிப்பிடும் இம்மூன்று சக்திகளும் இயேசுவின் மூன்று சோதனைகளுடன் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

காமத்திற்காக, பதவிக்காக, பணத்திற்காக மனிதன் நாயாக அலைகிறான்; பேயின் வலையில் வீழ்கிறான்; தன்னையே இழக்கிறான். இயேசு மூன்று முறையும் விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டி, கடவுளுடைய வார்த்தையைக் கொண்டே அலகையை வெல்லுகிறார் (இச 8:3; 6:16; 6:13). நாமும் தூய ஆவி அருளும் கடவுளின் வார்த்தையைப் போர்வாளாக எடுத்து அலகையை வெட்டி வீழ்த்துவோம் (எபே 6:17). "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (மத் 4:4).

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் துணையால் சோதனைகளை வெல்வோம்

நிகழ்வு

அமெரிக்காவில் உள்ளாட்டுப் போர் ஏற்பட்டபோது, பருத்தியை (Cotton) ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி ஒருசிலர் தென் அமெரிக்காவிலிருந்து வடஅமெரிக்காவிற்குக் கப்பல்கள் வழியாகப் பருத்தியைக் கொண்டு சென்று, மிகுதியான இலாபம் அடைந்து வந்தனர்.

ஒருமுறை ஒருவர் ஒரு கப்பல் தளபதியிடம், “என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் நீங்கள் கொண்டுபோய் இறக்கி விடுங்கள், நான் உங்களுக்கு நூறு டாலர் தருகின்றேன்” என்றார். (அன்றைய காலத்திற்கு நூறு டாலர் என்றால் மிகப்பெரிய தொகை) அதற்குக் கப்பல் தளபதி, “முடியாது” என்றார். மீண்டுமாக அந்த மனிதர், “நான் உங்களுக்கு ஐநூறு டாலர் தருகிறேன். நீங்கள் என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடுங்கள்” என்றார். அப்பொழுதும் கப்பல் தளபதி முடியாது என்றே பதில் சொன்னார்.

வந்தவர் விடவில்லை. அவர் கப்பல் தளபதியிடம், “நான் உங்களுக்கு ஐயாயிரம் டாலர் தருகின்றேன். நீங்கள் என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் கொண்டு போய் இறங்கி விடுங்கள்” என்றார். இதைக் கேட்டதுதான் தாமதம் கப்பல் தளபதி தன்னிடமிருந்த துப்பாக்கி எடுத்து, வந்தவரின் நெற்றிப்பொட்டில் வைத்து, “நீ என்னை மிகவும் சோதிக்கின்றாய். ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. இல்லையென்றால், நீ என்னுடைய துப்பாக்கிக்கு இரையாகிவிடுவாய்” என்றார். உடனே வந்தவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார்.

இயேசு பேதுருவைப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்’ (மத் 16: 230. என்று சொன்னது போன்று, இந்த நிகழ்வில் வருகின்ற கப்பல் தளபதி தன்னிடம் வந்த மனிதரிடம், “நீ என்னை மிகவும் சோதிக்கின்றாய். ஒழுங்கு மாதிரியாக இங்கிருந்து ஓடிவிடு” என்று சொன்னது மிகவும் பாராட்டிற்குரியதாக இருக்கின்றது. தவக்காலத்தின் முதல்ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நம்முடைய வாழ்வில் வருகின்ற சோதனைகளை ஆண்டவரின் துணையால் வெற்றி கொள்வோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சோதிக்கப்பட்ட இயேசு

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் இடம்பெறுவது போன்று மாற்கு நற்செய்தியில் இயேசு சோதிக்கப்படுவது பற்றி விரிவாக இல்லையென்றாலும் அங்கு ஒருசில குறிப்புகள் காணக்கிடக்கின்றன.

‘இயேசுவும் சோதனைக்கு உட்பட்டாரா?’ என்று ஒருசிலர் தங்கள் புருவத்தை உயர்த்தலாம். இது குறித்து அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல். மூடி (1837-1899) என்பவர், “சோதிக்கப்படுவது ஒன்றும் பாவமில்லை; சோதனையில் விழுவதுதான் பாவம்” என்பார். ஆம், இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; ஆனால், அவர் சோதனையில் விழுந்துவிடவிலை. மாறாக அவர் இறைவார்த்தையின் துணையால் சோதனையை வெற்றிகொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது, புனித பேதுரு கூறுவது போல், “எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காமல் கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கின்றோம் என்று மகிழ்வோம் (1 பேது 4: 12).

சோதனையை வெற்றிகொண்ட இயேசு

இயேசு எல்லாரையும் போன்று சோதிக்கப்பட்டாலும், அவர் எல்லாரையும் போன்று சோதனையில் விழுந்துவிடவில்லை. மாறாக அவர் தனக்கு வந்த சோதனைகளை இறைவல்லமையால் துணிவோடு வெற்றி கொண்டார். இயேசுவுக்கு பாலைநிலத்தில் அல்லது அவரது பணிவாழ்வின் தொடக்கத்தில் மட்டுமல்ல, அவரது பணி இறுதிவரைக்கும் சோதனைகள் வந்துகொண்டுதான் இருந்தன. கெத்சமனித் தோட்டத்தில் இயேசுவுக்குத் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான சோதனை வந்தபொழுது (லூக் 22: 42), அவர் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தன்னையே கையளித்தார். இவ்வாறு அவர் தனக்கு வந்த சோதனைகளை வெற்றிகொண்டார்.

கிரகாம் ஸ்க்ரோக்கி (Graham Scroggie) என்ற அறிஞர் இது தொடர்பாகக் கூறும்பொழுது, “ஆதாமும் ஏவாளும் ‘ஏதேன் தோட்டத்தில்’ சோதனையில் விழுந்தபொழுது, இயேசு கெத்சமனி தோட்டத்தில் தனக்கு வந்த சோதனையை வெற்றிகொண்டார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் சோதனையில் விழுந்ததற்கும், இயேசுவால் கெத்சமணி தோட்டத்தில் சோதனையை வெல்ல முடிந்ததற்கும் முக்கியக் காரணம், ஆதமும் ஏவாளும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றியதும், இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியதே ஆகும். ஆதாமும் ஏவாளும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றியதால் ஆண்டவர் அவர்களோடு இல்லை, அதனால் அவர்களால் சோதனையை வெல்ல முடியவில்லை. இயேசுவோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். இதனால் ஆண்டவர் அவரோடு இருந்தார். ஆகவே அவரால் சோதனையை மிக எளிதாக வெற்றிகொள்ள முடிந்தது” என்பார்.

ஆம் நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்கின்றபொழுது, ஆண்டவர் நம்மோடு இருப்பார். அப்பொழுது நமக்கு வரும் சோதனைகளை மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும் என்பது உறுதி.

சோதிக்கப்படுவோருக்கு உதவும் ஆண்டவர்

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் எனில், நாமும் சோதிக்கப்படலாம். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருக்கு உகந்த வழியில் நடக்கும்பொழுது, கடவுளின் துணையால் நமக்கு வரும் சோதனைகளை நாம் மிக எளிதாக வெற்றி கொள்ளலாம் என்பதைக் குறித்து இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் “வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்” என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

வானத்தூதர் இயேசுவின் பிறப்பை ஒட்டியும், அவரது பணிவாழ்விலும் முக்கியப் பங்காற்றியதைப் பற்றித் திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது. இன்றைய நற்செய்தியில் வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள் என்ற வார்த்தைகள், இயேசு சாத்தனை வெல்வதற்கு வானதூதர் அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கக்கூடும் என்ற செய்தியை உணர்த்துவதாய் இருக்கின்றன. இன்றைய இரண்டாம் வாசகம் “இயேசு விண்ணகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்” (1 பேது 3: 22) என்கிறது. இயேசு கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கின்றார் எனில், அவர் சோதிக்கப்படுவர்களுக்கு உதவ வல்லவராகவும் (எபி 2: 18), அவர்களுக்காகப் பரிந்துபேசுபவராவும் இருக்கிறார் (எபி 7: 25) என்பது பொருள்.

ஆகவே, நாம் நமது வாழ்வில் வரும் சோதனைகளை, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது உடனிருப்பின் மூலம் வெற்றிகொள்வோம். அதை விடவும் ஆண்டவர் நாம் சோதிக்கப்படும்பொழுது நமக்கு உதவி செய்ய வல்லவர் என்பதில் நம்பிக்கை வைத்து சோதனைகளை வெற்றி கொள்வோம்.

சிந்தனை:

‘உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்’ (யாக் 1:3) என்பார் புனித யாக்கோபு. எனவே, நாம் சோதிக்கப்படும்பொழுது மனம் தளர்ந்துவிடாமல் அல்லது சோதனையில் விழுந்து விடாமல், இறைவனின் துணையால் மனஉறுதியோடு இருந்து சோதனையை வெற்றி கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இரண்டாம் தொடக்கம்

ஒலிம்பிக் புகழ் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் பற்றி ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுவதுண்டு. ஓட்டப் பந்தயத்தின் நம்பிக்கை நாயகராகக் களம் இறங்குகிறார் உசேன் போல்ட். ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டி. தங்கமா, வெள்ளியா என்பதைத் தீர்மானிக்கிற போட்டி. அந்தப் போட்டிக்கு ஓடத் தயாராக இருந்த வீரர்களில் ஒருவராக உசேன் போல்ட் இருக்கிறார். ஓடுவதற்குக் கொடுக்கப்படும் துப்பாக்கி ஒலி சமிக்ஞை கேட்பதற்கு முன் தன் காலை உயர்த்தியதால் அவர் அந்தப் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றார். அரங்கம் அமைதி காக்கின்றது. ஒரு மாவீரனுக்கு நேர்ந்த இந்த நிலை குறித்து ஸ்தம்பித்துப் போகிறது. ஆனால் அவர் சிரித்த முகத்துடன் வெளியேறுகிறார். அடுத்து ஐந்து ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டிய சூழல் வருகிறது. மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். 100 மீட்டர் தூரத்தை வெறும் 9 நொடிகளில் ஓடிக் கடக்கின்றார். அது அவருடைய வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக அமைகிறது.

தங்கள் வாழ்வில் முதல் தொடக்கத்தை இழந்துவிட்டு, இரண்டாம் தொடக்கத்தை இறுகப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் ஏராளம்.

தவக்காலம் நம் வாழ்வில் இரண்டாம் தொடக்கத்திற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது. முதல் தொடக்கம் சரியாக இல்லையென்றால், நம் வாழ்க்கைப் பாதையில் தடைகள் வருகிறதென்றால், மீண்டும் ஒருமுறை அனைத்தையும் 'ரீஸெட்' செய்து புதியதாகத் தருகிறது வாழ்க்கை.

இன்றைய முதல் வாசகத்தில், ஒட்டுமொத்த படைப்பே தன் இரண்டாம் தொடக்கத்தைக் காண்கிறது. அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், மனிதர்களைப் படைத்தவுடன், மிகவும் நல்லதெனக் கண்ட கடவுள், மனித உள்ளத்திலிருந்த தீய சிந்தனையின் பொருட்டு ஒட்டுமொத்த படைப்பையும் அழிக்க விழைகின்றார். நோவாவும் அவருடன் இணைந்து சில விலங்குகளும் பறவைகளும் அவரால் காப்பாற்றப்படுகின்றன.

முதல் வாசகம், பெருவெள்ளத்தைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் மிகவும் சுருக்கமாகப் பதிவிடுகின்றார். ஆனால், முக்கியமான சில தரவுகளைத் தருகின்றார்.

இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களை இணைத்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் நோவா தனியாக நிற்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு தனியாக நிற்கின்றார்.

அங்கேயும் அவரைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன. இங்கேயும் இயேசுவைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன.

அங்கே சுற்றிலும் தண்ணீர். இங்கே சுற்றிலும் பாலை.

அங்கே நோவாவுடன் உடன்படிக்கை செய்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே இயேசுவுடன் உடனிருக்கிறார் ஆண்டவரின் தூதர்.

அங்கே படைப்பு இரண்டாம் தொடக்கம் பெறுகிறது. இங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு அவருடைய பணி வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பேதுரு, துன்புறும் தன் திருச்சபைக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை நம்பிக்கை வாழ்வு என்னும் இரண்டாம் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.

நம் வாழ்வின் இரண்டாம் தொடக்கத்தை இன்று நாம் கண்டுகொள்ள என்ன செய்ய வேண்டும்?

இறைவன் நம்மை நினைவுகூர்கிறார் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பது.

சோதனைகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள் என ஏற்றுக்கொள்வது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவைப் போல் இறைவேண்டலால் சோதனையை வெல்வோமா?

நன்கு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் தேர்வுக்காகத் தன்னை நன்றாகத் தயார் செய்து தேர்வு அறைக்குச் சென்றார். நன்றாகத் தயார் செய்த போதும் அன்று அவருக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்பட்டது. விடைகள் அத்தனையும் மறந்து போனதைப் போல ஒரு உணர்வு. அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்த போது பலர் அருகிலுள்ளவரை பார்த்து எழுதுவதையும், துண்டு சீட்டுகளில் விடைகளை எழுதிவைத்திருப்பவதையும் கண்டார். தானும் யாரிடமாவது கேட்டு விடைத்தாளை வாங்கிப் பார்த்து எழுதிவிடலாம் என்று நினைத்தார் அவர். ஆனாலும் "அப்படி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவதை விட தோற்றுவிடுவது மேல். தெரிந்ததை எழுதுவோம் "என்று தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தன் மனதை சற்றே அமைதிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கினார். சிறிது நேரத்தில் தேர்வு கண்காணிப்பாளர்கள் பார்வையிட வந்தார்கள். அப்போது பார்த்து எழுதியவர்கள்,துண்டச்சீட்டு வைத்திருந்தவர்கள் அனைவரும் பிடிபட்டு தண்டனை பெற்றனர். தான் பெரிய சோதனையிலிருந்து விடுபட்டதாக எண்ணி நிம்மதியடைந்தார் அம்மாணவர்.

சோதனை என்று சொன்ன உடன் நாம் நினைப்பவை பெரிய அளவிலான சவால்களையும்,துன்பங்களையும் தான்.ஆனால் அன்றாட வாழ்வில் பல சோதனைகளை நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றை வெல்லும் போது நாம் வெற்றி அடைகிறோம். சோதனையில் வீழ்கின்ற போது அதற்கான விளைவுகளையும் சந்திக்கிறோம். உதாரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், இனிப்பு உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஒரு சோதனைக்கு உள்ளாகும் போது, அச்சோதனையை வென்று இனிப்பு உண்ணாதிருந்தால் அவர் ஆரோக்கியமாக இருப்பார். இனிப்பு உணவை உண்டால் நோய் தன்மை அதிகமாகி துன்பப்படுவார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சோதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. மத்தேயு, லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசு எவ்வாறெல்லாம் சோதிக்கப்பட்டார் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர். நாம் அவற்றை வாசித்தும் தியானித்தும் இருக்கிறோம். இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தடையை ஏற்படுத்தும் வண்ணம் அலகை அவரைச் சோதித்தது. அவ்வாறு சோதிக்கும் போது இனிமையான நேர்மறையான சொற்களைக் கூறி அவரைச் சோதித்தது. அவற்றையெல்லாம் கேட்டு இயேசு சோதனையில் வீழ்ந்திருந்தால் நாம் மீட்பையும் பாவ மன்னிப்பையும் பெற்றிருக்க முடியாது. நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளும் அவ்வாறு தான்.அவை நமக்கு இனிமையாகவும் நன்மையாகவும் தோன்றினாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் துன்பம் தருபவையாகவே இருக்கின்றன.

சோதனையை வெல்ல நமக்கு இறையருளும் மனத்திடமும் மிகவும் அவசியம். இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும் முன் நோன்பிருந்து இறைவேண்டல் செய்தார். தன்னுடைய இலக்கில் தெளிவாக இருந்தார். இறைவேண்டலால் அவர் பெற்ற அந்த மனத்திடமே அவருக்கு பாலைநிலத்திலிருந்து கல்வாரி சிலுவை இறப்பு வரையிலான அத்தனை சோதனைகளையும் வெல்ல ஆற்றல் அளித்தது என்பதை நாம் மறுக்க இயலாது.நம் வாழ்வில் சிறியது முதல் பெரியஅளவிலான சோதனைகளை வெற்றி கொள்ள நமக்கு இறையருள் நிச்சயம் அவசியமாகிறது.இறையருள் பெற நாமும் இறைவேண்டல் செய்ய வேண்டும். அவ்விறைவேண்டல் நமக்கு இலக்குத் தெளிவையும் சோதனையை வெல்லும் மனத்திடத்தையும் நிச்சயம் தரும்.சோதனையைக் கடக்கும் போது நாம் இடர்பல பட்டாலும் தொடர்ந்து போராடி ஜெயிக்கும் போது இன்னும் அதிக இறையனுபவத்தையும்,கடவுளின் உடனிருப்பையும் வாழ்வில் வரும் சோதனைகளைக் கண்டு கலங்காத உள்ளத்தையும் நாம் நிச்சயம் பெறுவோம்.

இன்றைய முதல் வாசகதத்தில் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்வதை வாசிக்கிறோம்.தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் உலக இன்பத்தில் மகிழ்ந்து பாவ வாழ்வில் வாழ்ந்த போதும் ,நோவா பாவச் சோதனையில் தன்னை உட்படுத்தாமல் நேர்மையாளராக,கடவுளுக்கு உகந்தவராக வாழ்ந்தார். அதனால் அவர் கடவுள் அவர் மூலம் மனுக்குலம் முழுவதுடனும் உடன்படிக்கை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்

.

இயேசு கற்பித்த இறைவேண்டலில் "எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் "என நாம் ஜெபிக்கிறோம். அதை உணர்ந்து ஜெபிப்போம். சோதனைகளை வென்று கடவுளின் உடன்படிக்கை மக்களாய் வெற்றியை நோக்கி பயணிப்போம்.

இறைவேண்டல்

எந்நாளும் துணை செய்யும் இறைவா! அன்றாட வாழ்வில் வரும் சோதனைகளை இறைவேண்டலுடனும்,மனத்திடத்திடனும் வெல்ல சக்தி தாரும் ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவன் என்றும் நம்மோடிருக்கிறார்

இயேசுவின் அன்புப் பிள்ளைகளே!

தவக்காலத்தின் முதல் ஞாயிறில் இருக்கிறோம். தவக்காலம் அருளின் காலம். புனிதமான காலம். ஏன்? அது, நம்மோடு என்றும் உள்ள கடவுளின் அன்பை உணர்ந்து தேடிவர அழைக்கும் காலம். எனவேதான் அது புனிதமான காலம். இந்தப் புனிதமானக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி ஆண்டவரிடம் இன்னும் நெருங்கி வர முயலுவோம். இன்று நாம் பல நிலைகளில் நம் தேவைகளின் பொருட்டு புலம் பெயர்கிறோம். யாருமே தெரியாத இடத்தில் ஆண்டவரே துணை என்று நம்பி வாழ ஆரம்பிக்கிறோம். காலப்போக்கில் அவ்விடங்களில் உறவுகளை சம்பாதித்தப்பின் ஆண்டவரை மறந்து விடுகிறோம். ஆனால் நமது வளர்ச்சியில் ஏதேனும் சுணக்கத்தையோ அல்லது எதிரிகளால் நாம் வீழ்த்தப்படும் சூழலில் இருந்தால் மீண்டும் ஆண்டவரையும், அவரின் பாதுகாப்பையும் தேடுவோம்.

பல நேரங்களில் எனக்குத் துணை யார்? எனக்காக யார் இருக்கிறார்? என எண்ணி தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறோம். வாழ்வைத் தொலைத்து விடுகிறோம். ஆனால், இன்றைய நாளின் வழி இறைவன் நமக்கு சொல்வது, உலகமே உதறினாலும் நான் என்றும் உங்களுடனே இருக்கிறேன் என நம்பிக்கையூட்டும் வாழ்வுச் சொல் தருகின்றார். இதனையே நாம் விவிலியத்திலும் வாசிக்கிறோம். இறைவன் எவ்வாறு தன் மக்களோடு இருக்கிறார்? என்றும் அதிலும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களோடு அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நமக்கு விவிலியம் சொல்லுகிறது.

முதலாவதாக, சாமுவேல் முதல் புத்தகத்தில் காணலாம். சாமுவேலை இறைவன் அழைக்கும்போது விவிலியம் சொல்கிறது, வளர்ந்த சாமுவேல் எப்போதும் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார். எனவே சாமுவேலுடன் இறைவன் இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை (1சாமு3:19). எனவேதான் சாமுவேல் அம்மக்களுக்கு தன்னிகரற்ற தலைவனாக இருக்க முடிந்தது. அவர் தலைமையில் சென்ற அனைத்து போர்களிலும் வெற்றி பெற முடிந்தது. அவர்களுக்கு அரசர்களை ஏற்படுத்த முடிந்தது. சவுலை அரச பதவியில் இருந்து நீக்கும் போதும் தைரியமாக செயல்பட காரணம் ஆண்டவர் அவரோடு இருந்தார். இவரும் ஆண்டவரோடு தன் சொல்லாலும், செயலாலும் இணைந்து இருந்தார். நாமும் சாமுவேலாக இருந்தால் கடவுளும் நம்மோடு பயணிக்க மாட்டாரா!

இரண்டாவதாக சாமுவேல் முதல் புத்தகம் 17-ம் அதிகாரத்தில் வரும் நிகழ்வு. சவுல் அரசராக இருந்த காலத்தில், பெலிஸ்திய படை கோலியாத்து தலைமையில் எருசலேமை முற்றுகையிடும் போது சவுல் போரிட பாளையத்திற்குள் இறங்கும் சொல்லும் வார்த்தைகள். “ இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்: நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்” எனச் சொல்லும் அளவுக்கு வீரமும் துணிவும் கிடைத்தது என்றால் அதற்கு அவரோடு ஆண்டவர் இருந்தார். அவரும் இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமுள்ளவாராக இருந்தார். நாமும் இறைவனுக்கு நம் வாழ்வால் பிரமாணிக்கமுள்ளவராக இருந்தால் இறைவனும் நம்முடன் இருப்பாரே!

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எல்லா உயிர்களையும் நேசிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளும் விதம், அன்பின் சான்றாக வானவில்லை அமைத்து நமக்கு தன் அன்பை உணர்த்திக் கொண்டு இருக்கிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்ததுகிறது. இந்த உடன்படிக்கை அன்பு இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்த்தும் இந்த உடன்படிக்கையினை என்றைக்காவது நினைத்துப் பார்த்துதுண்டா?

இயேசு திருமுழுக்கு அனுபவத்திற்குப்பின் இயேசு பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே அவர் சோதிக்கப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது. அவர் அங்கு சோதிக்கப்பட்டாலும் அவர் தந்தையோடு இருந்தார். எனவேதான் தூய ஆவியாரும் அவருடன் உடனிருந்தார். இயேசுவின் இந்த பாலைவன அனுபவம் நமக்குச் சொல்வது என்ன? இயேசுவின் வாழ்வைப் போன்று நமது வாழ்விலும் இன்பமும் துன்பமும் விரவி உள்ளது. சோதனைகள், துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் சோதனைகள் எனும் பாலை வனத்தில் தான் இறைவன் நம் அருகிலே இருக்கிறார். ஒசேயா இறைவாக்கினர் 2:14-ல் கூட பாலை நிலத்துக்கு கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம் என்பது போல் பாலைநிலமாகிய துன்பவேளைகளில் இன்னும் அதிகம் நம்மோடிக்கிருக்கிறார். எபி 2:18-ல் சொல்வதுபோல தாமே சோதனைக்குள்ளாகி துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர் என்பதற்கு ஏற்ப அவர் என்றும் நம்மோடே இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். எனவே நமது சோதனை, வேதனைக் காலங்களில் இறைவனை விட்டு அகன்ற நேரங்களை எண்ணிப் பார்ப்போம். இந்த தவக்காலத்தை சரியாகப் பயன்படுத்தி நாம் நமது இறைவனை நோக்கி வர முயற்சிப்போம்.

அவ்வாறு இறைவன் அன்பை புரிந்து அவர்பக்கம் திரும்பினால் தவக்காலம் நம் வாழ்வையே மாற்றி விட்டது எனலாம்.

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு