மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்கநூல் 12:1-4|திமோத்தேயு 1:8-10|மத்தேயு 17:1-9

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இயேசு இறைமகனாய் இருந்தபோது துன்பங்களை அனுபவித்துத்தான் மீட்பை, விடுதலையை அளிக்க வேண்டும் என்பதைத் தன் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கின்றார். விதை மடிந்தால்தான் பயிர். பயிர் விளைந்தால்தான் பலன். பூ கருகினால்தான் காய். காய் கனிந்தால்தான் கனி என்பதை இயேசுவின் உருமாற்றம் நமக்கு நினைவுபடுத்துகிறது. கரைய விரும்பாத உப்பினால் உணவுக்குச் சுவை தர முடியாதே! அழிய விரும்பாத மெழுகினால் இருளைப் போக்க முடியாதே! இழக்க விரும்பாத மனிதரால் இறைவனிடமிருந்து எதையும் பெற முடியாது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குத் தெளிவாக்குகிறது. ஆபிரகாம், நாடு, வீடு இவைகளை விட்டுவிட்டு அறியாத புதிய நாட்டிற்குச் செல்லும்போது பல துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் கிடைத்த பரிசு விசுவாசத்தின் தந்தை ஆனார்.

இயேசு தபோர் மலையில் உருமாற்றம் அடைந்தார். இந்த ஒளிமயமான காட்சியைக் கண்டு இங்கே மூன்று கூடாரம் அமைப்போம் என்றார் பேதுரு. ஆனால் தபோர் மலை அனுபவம் அடையும் முன் ஒலிவ மலை அனுபவமும் (இரத்த வியர்வை அனுபவம்), கல்வாரி மலை அனுபவமும் (பாடுகள் படுதல்) பெற வேண்டும் என்பதை சீடர்கள் அறியவில்லை. ஆனால் வரப்போகும் துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவுக்கு முன் அச்சாரமாக இந்த மகிமையான ஒளிமயமான உருமாற்றத்தைக் காட்டுகிறார் இயேசு.

இலையுதிர்ந்த மரங்களில்தான் வசந்தம் பிறக்கும். இழந்து பெறும் வாழ்க்கையில்தான் சுகம் இருக்கும். உலக மாற்றம் காண உளமாற்றம் முதன்மையாகும். எனவே நமது வாழ்க்கையில், நாம் நடந்துகொள்ளும் முறையில் மாற்றம் தேவை. நமது பேச்சில் திருத்தம் வேண்டும். எண்ணத்தில் புதிய எழுச்சி வேண்டும். வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்த இன்பம். சோகம் நிறைந்த சுகம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

துன்பத்திற்குப் பிறகே இன்பம்

இந்த உண்மையை இன்றைய நற்செய்தியின் வழியாக நமக்கு இயேசு எடுத்து இயம்புகின்றார். வாழ்க்கையில் துன்பப்படத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ மூன்று உவமைகள் :

 முதல் உவமை : இரண்டு முட்டைகளைப் பற்றியது 
 இரண்டாவது உவமை : இரண்டு கற்களைப் பற்றியது 
 மூன்றாவது உவமை : இரண்டு விதைகளைப் பற்றியது
 

இதோ முதல் உவமை: இரண்டு கோழி முட்டைகள்! அவற்றிற்குச் சொந்தக்காரர் அவற்றைப் பார்த்து, உங்கள் இரண்டு பேரையும் அடைவைக்கப் போகின்றேன் என்றார்.

முதல் முட்டை, ஐயையோ அது எனக்கு சரிபட்டு வராது. 21 நாள்கள் நான் அமைதியாக ஓரிடத்திலே அமர்ந்திருக்கவேண்டும். 21 நாள்களுக்குப் பிறகு நான் உடைபட வேண்டும். பிறகு எனக்குள்ளேயிருந்து ஒரு குட்டிக் கோழிக்குஞ்சு வெளியே வரும். அதை சூப் வைத்து குடித்துவிடுவார்கள் அல்லது சிக்கன் 65 செய்து விடுவார்கள். இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. நான் துன்பப்பட தயாராக இல்லை என்று சொல்லிவிட்டது.

இரண்டாவது முட்டையோ, எனக்குள்ளேயிருந்து ஒரு புதிய பிறவி வெளியே வரட்டும் ; அது வாழ்வாங்கு வாழட்டும் என்றது. இப்படிச் சொன்ன இரண்டாவது முட்டையை அடைவைத்துவிட்டு முதல் முட்டையை அந்த வீட்டுக்காரர் ஆம்லெட் போட்டு சாப்பிட்டுவிட்டார்.

இதோ இரண்டாவது உவமை : ஒரு சிற்பி இரண்டு கற்களைப் பார்த்து, உங்களுக்குள் தேவதூதர்கள் இரண்டு பேர் ஒளிந்திருக்கின்றார்கள். உங்களைச் செதுக்கி அவர்களை வெளியே கொண்டுவர விரும்புகின்றேன் என்றார். அதற்கு முதல் கல். ஐயையோ என்மீது உளிபட்டால் எனக்கு வலிக்கும். என்னைச் செதுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டது. இரண்டாவது கல்லோ. என்மீது உளி விழட்டும். நான் துன்பப்பட, செதுக்கப்பட தயாராக இருக்கின்றேன் என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து அந்தச் சிற்பி ஓர் அழகான தேவதூதரைச் செதுக்கி எடுத்தார். முதல் கல்லையோ அவரது வீட்டுக்குள் செல்ல படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொண்டார். அது ஒரு நாளில் பலமுறை மிதிபட்டது.

இதோ மூன்றாவது உவமை : ஒரு விவசாயி இரண்டு விதைகளை மண்ணில் விதைத்தார். ஒன்று, நான் முளைக்க மாட்டேன். முளைத்தால் நான் பல பாடுகளைப் படவேண்டியிருக்கும். நான் முளைத்து செடியாகி, மரமாகி, பூவாகி, காயாகி, கனியாவேன். எல்லாரும். குறிப்பாக குழந்தைகள் என்னைக் கல்லால் அடிப்பார்கள் என்றது. இன்னொரு விதை முளைத்து பூவாகி, காயாகி. கனியாகி. உள்ளூர் பழுத்த மரமாகத் திகழ்ந்தது. எல்லாரும் அந்த மரத்தை வாயார, மனமாரப் போற்றினார்கள்.

முதல் விதை முளைக்காமல் மண்ணில் கிடந்தது. அப்பக்கமாக இரைதேடி வந்த கோழி ஒன்று அதை விழுங்கிவிட்டது. துன்பப்படத் தயாராக இல்லையென்றால் இந்த உலகம் நம்மை ஆம்லெட் போட்டுச் சாப்பிட்டுவிடும்; அல்லது அதன் காலடியில் போட்டு நம்மை மிதிக்கும்; அல்லது நம்மை விழுங்கிவிடும்.

வாழ்க்கை ஒரு காசு. அதற்கு இரு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தின் பெயர் துன்பம். மறு பக்கத்தின் பெயர் இன்பம். ஒரு பக்கமுள்ள காசை நம்மால் பார்க்கமுடியாது. அதுபோலவே இன்பம் மட்டும் உள்ள வாழ்க்கையை நம்மால் பார்க்க முடியாது.

இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இதனால்தான் இயேசு, யோவா 12:24 - இல் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பலன் தராது என்கின்றார். அதனால்தான் ஆண்டவரே, நீ துன்பப்படக்கூடாது, பாடுபடக்கூடாது என்ற பேதுருவைப் பார்த்து, போ அப்பாலே சாத்தானே. உன் கருத்துக்கள் கடவுளுடைய கருத்துக்கள் இல்லை என்றார் இயேசு.

இதனால்தான் திப 5:40, 41-இல் சாட்டையால் அடிக்கப்பட்ட பிறகு திருத்தூதர்கள் இறைவனைப் புகழ்ந்தார்கள் என்று படிக்கின்றோம். இதனால்தான் கொலோ 1:24-இல் பவுலடியார் துன்பத்தைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறுகின்றார்.

துன்பம் எதிர்மறையானது என்ற எண்ணத்தை இன்றோடு விட்டுவிடுவோம். எந்தத் துன்பமும் எதிர்மறையானது அல்ல. ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்னும் ஓர் இன்பம் மறைந்திருக்கும்.

ஒவ்வொரு வியாதிக்குப் பின்னும் ஏதாவது ஓர் இன்பம், ஒரு நல்ல செய்தி மறைந்திருக்கும். சிறு பிள்ளைகள் சில சமயங்களிலே கசப்பான மருந்தைச் சாப்பிட மறுப்பார்கள். அப்போது அம்மா, அப்பா அந்தக் குழந்தையின் கால்களையும், கைகளையும் பிடித்துக் கொண்டு, சங்கிலே மருந்தை ஊற்றி வாய்க்குள்ளே ஊற்றுவார்கள். அந்தக் கசப்பான மருந்துக்குப் பின்னால் இனிப்பான உடல் சுகம் மறைந்திருக்கின்றது. அந்தக் குழந்தையின் அழுகைக்குப் பின்னால் சிரிப்பு மறைந்திருக்கின்றது.

ஆம். துன்பத்திற்குப் பின்னால்தான் இன்பம் மறைந்திருக்கின்றது. இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும்:

இறைவா, இன்று ஒரு மறைபொருளை நாங்கள் தெரிந்து கொண்டோம். துன்பத்தைத் துன்பமாக பார்த்தால் அது துன்பமாகத்தான் தோன்றும். துன்பத்தை இன்பத்தின் மறுபக்கமாகப் பார்த்தால் துன்பத்தை விட்டு ஓடி ஒளியமாட்டோம். துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை, ஆற்றலை. வல்லமையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
மேலும் அறிவோம் :

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள் : 267).

பொருள்:
பொன்னைப் புடம் போடுவதால் அதன் ஒளி மேலும் மிளிரும் ; அதுபோன்று தவமாகிய நோன்பு மேற்கொள்பவர் துன்பம் வந்து தாக்கும்போதெல்லாம் அதனைத் தாங்கிக் கொண்டு உள்ளொளி ஆகிய ஞானம் பெறுவர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு திருமணத் திருப்பலியில் மணமகன் மணமகளுடைய கழுத்தில் தாலி கட்டும் முன்பு இழுத்துப் பெருமூச்சு விட்டான். ஏன்? என்று கேட்டதற்கு, "என் வாழ்வில் கடைசி முறையாக நான் விடும் சுதந்தர மூச்சு" என்றார். திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் தங்கள் சுதந்தரத்தை இழக்கின்றனர். பெண்கள் தங்களின் பிறந்த வீட்டை இழக்கின்றனர். ஆனால் இருவரும் ஒரு புதிய உறவில் சங்கமிக்கின்றனர். வாழ்க்கையில் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும் என்னும் உண்மையை கிறிஸ்துவின் உருமாற்ற நிகழ்வு உணர்த்துகிறது.

இயேசு ஓர் உயர்ந்த மலையில் தோற்றம் மாறினார்; ஒரு மேகம் வத்து அவர்கள் மேல் நிழலிட்டது. மலையும் மேகமும் கடவுளுடைய உடனிருப்பின் அடையாளங்கள். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஒரு திருக்காட்சி, தொலைக்காட்சிக்காண முகக்கண் போதுமானது; ஆனால் திருக்காட்சியைப் பார்க்க அகக்கண் (விசுவாசக் கண்) தேவைப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படும் தொலைக்காட்சி நிழல் உலகம்: கண்ணுக்குப் புலப்படாத திருக்காட்சி நிஜ உலகம். நிழல் உலகத்தை நம்பி நிஜ உலகத்தை மறப்பது அறிவுடைமையாகுமா?

கிறிஸ்துவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர். மோசே சட்டத்தின் பிரதிநிதி; எலியா இறைவாக்கினர்களின் பிரதிநிதி. இவ்வாறு சட்டமும் இறைவாக்கும் கிறிஸ்து மெசியா என்பதற்குச் சான்று பகர்கின்றன. அத்துடன், "இவரே என் அன்பார்ந்த மைந்தர்" என்று கூறி வானகத் தந்தையும் சாட்சியம் பகர்கிறார். மனித சாட்சியத்தைவிடக் கடவுள் தரும் சாட்சியம் மேலானது (1 யோவா 5:9). கடவுளின் சாட்சியத்தை ஏற்க மறுப்பவர்கள் நிலைவாழ்வைக் காண முடியாது.

கிறிஸ்துவும் மோசேயும் எலியாவும் "எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்" (லூக் 9:31)- பாடுகளின் வழியாகவே கிறிஸ்து உலகை மீட்க வேண்டும், அவரும் மகிமை அடைய வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். அத்திட்டத்தைக் கிறிஸ்து முழுமையாக ஏற்று அதை நிறைவேற்றினார்.

துன்பமின்றி இன்பமில்லை. பேறுகால வேதனையின்றிப் பிள்ளைப்பேறு இல்லை. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாமல் விளைச்சலைக் கொடுக்க முடியாது (யோவா 12:24). மெழுகு திரி எரிந்து கரைந்தால்தான் ஒளி கொடுக்க முடியும். சாம்பிராணி நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டால்தான் அது நறுமணப் புகையை எழுப்ப முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது 75-ஆம் வயதில் கடவுளுடைய அழைப்பை ஏற்றுத் தன் வீட்டையும் நாட்டையும் இனத்தையும் இழக்க முன்வந்தார். அதன் விளைவாக அவர் கடவுளுடைய ஆசியைப் பெற்றதோடு, அவரே ஆசியாக மாறினார் (தொநூ 12:1-4). தனது ஒரே மகன் ஈசாக்கையும் கடவுளுக்குப் பலியிடத் தயங்கவில்லை. எனவே அவர் விசுவாசத்தின் தந்தையாக உருமாற்றம் அடைந்தார், ஒன்றை இழந்தே மற்றொன்றைப் பெறமுடியும். துன்பம் நம்மைச் சுட்டுத் தூய்மைப்படுத்துகிறது. அழிந்து போகும் பொன்கூட நெருப்பில் புடமிடப்படுகிறது. அவ்வாறெனில் அழியாத நம் விசுவாசம் சோதிக்கப்படுவது முறையே என்கிறார் பேதுரு (1 பேது 1:7). பொன்னைச் சுடச்சுட அதன் ஒளி அதிகமாகும். அவ்வாறே துள்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு உண்டாகும்.

கூடச்சுடரும் பொள்போல் ஒளிவிடும் துன்பம்
ஈடச்சுட நோற்சிற்பவர்க்கு (குறன் 627)

துன்பப்படாமல் வாழ்க்கையில் எளிதாகக் குறுக்கு வழியில் முன்னேற விரும்புகின்றனர் இன்றைய இளைஞர்கள். திரைப்படப் பாடல் பாணியில் ஓர் இளைஞர் பின்வருமாறு கூறுகிறார்:

Exanisation இல்லாத Degree கேட்டேன்: Grunner இல்லாத English கேட்டேன்; Problean இல்லாத Physics கேட்டேன்; Equation இல்லாத Chem- istry கேட்டேன்; Programme இல்லாத Computer கேட்டேன்; இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை. எனவே பரீட்சைக்குப் படிக்கவில்லை.

அதே பாணியில் ஒருசில கிறிஸ்தவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்: சிலுவை இல்லாத கிறிஸ்து கேட்டேன்; நிறுவனம் இல்லாத திருச்சபை கேட்டேன்; அன்பியம் இல்லாத பங்கு கேட்டேன். உண்டியல் இல்லாத ஆலயம் கேட்டேன்; பத்துக் கட்டளை இல்லாத வேதம் கேட்டேன்; இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை; எனவே நான் ஆலயம் செல்வதில்லை. இவ்வாறு கேட்கின்றவர்களுக்கு கிறிஸ்து கூறுவது: - "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெளில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவர். மாறாக என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்" (மத் 16:24-25).

ஒரு கணவர் கண் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரை கண்ணாடி அணியச் சொன்னார். அவர் வீட்டில் மனைவியைப் பார்க்கும் போது மட்டும் கண்ணாடி அணிந்தார். அவருடைய மனைவி அவரிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது கணவர் கூறியது: "எப்போதெல்லாம். தலைவலி வருகின்றதோ அப்போதெல்லாம் கண்ணாடி போடச் சொன்னார் டாக்டர்." ஒவ்வொருவருக்கும் தலைவலி வீட்டிலேயே இருக்கிறது. அது மனைவி வடிவிலோ, கணவன் வடிவிலோ, பிள்ளைகள் வடிவிலோ வரலாம். அதை நாம் ஏற்றுக்கொண்டு உருமாற்றம் அடைய வேண்டும். இல்லையென்றால் தடுமாற்றமே ஏற்படும். வீட்டின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக, திருச்சபையின் நலனுக்காக ஒரு சிலர் தங்களையே அழித்துக் கொள்ள வேண்டும். அது ஏன் நாமாக இருக்கக்கூடாது?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உருமாற்றத் திருக்காட்சி

உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா. 150க்கும் மேற்பட்ட அடி உயரம். கீழே கடல் போலத் தண்ணீர்ப் பரப்பு. கலங்க வைக்கும் நீர்ச்சுழல்கள். பார்க்கும்போது அச்சம் கலந்த பிரமிப்பு ஏற்படுமே தவிர குற்றாலத்து அருவியில் செய்வது போல குளித்து மகிழ முடியாது. அங்கு அகன்ற இரு மலைகளுக்கிடையில் ஒரு கயிற்றைக் கட்டி அந்தக் கயிற்றில் கழைக் கூத்தாடி போல நடக்கப் போவதாகச் சொன்னான் ஒருவன். பைத்தியக்காரன் பிதற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டவர்கள் எள்ளி நகைத்தார்கள், ஏளனம் செய்தார்கள்.

ஆனால் அறிவித்தபடி ஒருநாள் சாதித்துக் காட்டினான். கண்டவர் எல்லாரும் வியந்து வாய்பிளந்து நின்றார்கள். அவன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்: “என்னால் நடக்கமுடியும் என்று இப்பொழுதாவது நம்புகிறீர்களா?”. “ஆம்!” என்றனர் அத்தனைபேரும் ஒரு வாய்ப்பட. கண்ணால் கண்டதாயிற்றே, எப்படி மறுக்கமுடியும்?

“சரி, நாளையும் நடக்கப் போகிறேன்”, அவன் தொடர்ந்தான். "ஆனால் ஒரு வேறுபாடு. நான் தனியாக அல்ல, உங்களில் யாரையாவது ஒருவரை என் தோளில் ஏற்றிக்கொண்டு, யார். வேண்டுமானாலும் என் தோளில் ஏறிக் கொள்ளலாம். யார் முன் வரப் போகிறீர்கள்?".

அங்கிருந்த எவருக்கும் துணிவில்லை. தயங்கினார்கள். பின் வாங்கினார்கள். உயிரைப் பொருத்தவரை அது ரிஸ்க் அல்லவா! ஆபத்தானதல்லவா!

“உம்மாலே முடியும்”, “உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றெல்லாம் அறிக்கை இடுவோம். அல்லேலூயா கூத்தடிப்போம். ஆனால் இயேசுவின் அழைப்பை உணர்ந்து ஏற்று அவர் கையைப் பற்றிக் கொண்டு அவரது அடிச்சுவட்டில் நடக்க எத்தனை பேர் முன்வருவர்?

விசுவாசத்தில் எங்கோ கோளாறு. குறைபாடு.

"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பேதுருவால் விசுவாச அறிக்கையிட முடிந்தது. ஆனால் அந்த "மெசியா வாழும் கடவுளின் துன்புறும் ஊழியன்” என்ற உண்மையைச் செரிமானம் செய்ய முடியவில்லையே!

சீடர்களின் தவறான எதிர்பார்ப்புகள், வேண்டாத வீணான கனவுகள், இஸ்ரயேலுக்கு அரசியல் விடுதலை தருவார், புதிய அரசில் தங்களுக்கு முக்கிய பதவி தருவார் என்ற அவர்களின் எண்ணத்துக்கு மாறாக முற்றிலும் வேறானவை பற்றியல்லவா இயேசு பேசுகிறார். "இயேசு தாம் எருசலேமுக்குப்போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப் படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப் படவும் வேண்டும்" (மத்.16:21) என்று மட்டுமல்ல "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத்.17:24) என்றல்லவா இயேசு சொல்கிறார்!

சீடனுக்குரிய வழி சிலுவை வழியே! சீடர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் இல்லை. சிலுவை அவர்களுக்குப் பெரிய இடறல். சிலுவையின் இடறலை நீக்கி தமது மாட்சிமையை வெளிப்படுத்தவே இயேசு உருமாறினார். துன்புறும் மெசியாவே மகிமையின் மெசியா என்பதை உணர்த்தினார். "மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா! (லூக்.24:26)

"கல்வாரி மலையில் நீந்தனைகளையும் அவமானங்களையும் தாங்கிய உருவாக எல்லார் முன்னும் தன்னைக் காண்பித்த இயேசு, தம் மகிமையை மட்டும் மூவருக்கே காண்பித்தார்" என்பார் பேராயர் புல்டன் ஷீன். அந்த மூவரில் பேதுரு சிலுவையையே வெறுப்பவர். யாக்கோபும் யோவானும் அதிகார இருக்கையில் அமர விரும்பியவர்கள். மறைந்திருக்கும் தமது மகிமை சிலுவையின் நிந்தனைகளுக்குப் பின்னரே வெளிப்படும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவே இந்த உருமாற்றம்.

உருமாற்றத்துக்கு முன்னும் பின்னும் பாடுகள் பற்றிய சிந்தனையே. இந்த மகிமையில் நம்பிக்கையைப் பார்க்கிறார் இயேசு. இந்த மகிமையில் நம்பிகையைப் பார்க்க வேண்டும் நாமும். ஆனால் அந்த மகிமையை எண்ணிக் கொண்டே அந்தப் பகற்கனவில் நின்று விட முடியாது. “ஆண்டவரே, சிலுவை வேண்டாம்" என்ற பேதுருவின் மனித இயல்பு சந்தித்த சோதனையே வேறு வடிவம் எடுத்து “நாம் இங்கேயே இருப்பது எத்துணை நன்று” என்ற வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. மோர் விற்கப் போன மோர்க்காரி, கற்பனையில் மிதந்தவளாய் காஞ்சிப்பட்டுக் கட்டிக் கொண்டு நடக்கிறேன் என்ற எண்ணத்தில் கைவீசிப் போனாளாம்! தலையில் மோர்ப்பானை இருந்ததை மறந்தாளாம்! பானை தரையில் விழுந்து உடையவே, மனக்கோட்டை மணற்கோட்டையானது! அடையப் போகும் மகிமை என்ற நம்பிக்கையில் எழ வேண்டும். மலையினின்று கீழே இறங்க வேண்டும். அதாவது எதார்த்த வாழ்க்கைக்கு வரவேண்டும். அங்கே நமக்கு இருப்பது போராட்டங்கள், பாடுகள்! அவை வழியாகத்தான் உண்மையான மகிமை.

அந்த மகிமையைக் காணும் வரை ஆபிரகாமைப் போல் நம்பிக்கை வழியில் நடப்போம். ஆபிரகாமைப் போலக் கடவுள் போகச் சொல்லும் இடத்துக்குப் போவோம். நமக்கு முன்னே அவர் சென்று அங்கே நமக்காகக் காத்திருப்பார்.

தூய ஜான் போஸ்கோ தன் நம்பிக்கைக்குரிய இளங்குருவை" ஜெனோவா நகரில் புதிய இல்லம் அமைக்க அனுப்பினார். கையில் போதிய பணம் இருக்கிறதா என்று தன் பாணியில் கேட்டிருக்கிறார். "கொஞ்சம் வைத்திருக்கிறேன்'' என்று இளம் குரு சொன்னதும் "அதுகூடத் தேவையில்லை. ஜெனோவாவில் தெய்வப் பராமரிப்பும் உண்டு" என்றாராம் சிரித்துக் கொண்டே ஜான் போஸ்கோ.

எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் யார் காத்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மாற்றத்தைத் தடுக்கும் சுயநல அணை

எல் சால்வதோர் நாட்டில், இரத்தம் சிந்தி, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த இருவர், நம் ஞாயிறு சிந்தனையை இன்று துவக்கி வைக்கின்றனர் இவர்களில் ஒருவர், 1917ம் ஆண்டு பிறந்தார் என்பதால், இவரது பிறப்பின் முதல் நூற்றாண்டு நினைவு, உலகின் சில நாடுகளில், இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. மற்றொருவர், சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், இதே நாள், அதாவது, 1977ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, எல் சால்வதோர் அரசின் கூலிப்படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

48 வயதான இயேசுசபை அருள்பணியாளர், ருத்திலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், மார்ச் 12, மாலை 5 மணியளவில், தன் பணித்தள மக்களைச் சந்திக்க ஜீப்பில் சென்ற வேளையில், கூலிப்படையினரால் சூழப்பட்டு, 12 முறை சுடப்பட்டு, உயிரிழந்தார்.

1917ம் ஆண்டு பிறந்து, 1977ம் ஆண்டு, தன் 60வது வயதில், சான் சால்வதோர் பேராயராகப் பொறுப்பேற்ற, ஆஸ்கர் ரொமேரோ (Oscar Romero) அவர்கள், அருள்பணி ருத்திலியோ அவர்களின் நெருங்கிய நண்பர். எல் சால்வதோர் நாட்டில் நிகழும் அநீதிகளைக் குறித்து, இருவருக்கும் கடுமையான விவாதங்கள் நிகழ்வதுண்டு. இருப்பினும், இருவரும், இயேசுவின் நற்செய்தியை தங்களுக்கே உரிய வழிகளில் பின்பற்றி வந்தனர். ரொமேரோ அவர்கள், பேராயராகப் பொறுப்பேற்ற 18ம் நாள், அவரது நண்பர் அருள்பணி ருத்திலியோ அவர்கள், படுகொலை செய்யப்பட்டார். அதுவரை, தன் நாட்டில் நிகழ்ந்த அநீதிகளை, கண்டும் காணாமல், 'கோவில் காரியங்களில்' கவனம் செலுத்தி வந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இந்தக் கொடூரக் கொலையால் மாற்றம் பெற்றார். நாட்டில் நிலவிய அநீதிகளை எதிர்த்து, குரல் கொடுக்கத் துணிந்தார்.

பேராயர் ரொமெரோ அவர்கள் எடுத்துரைத்த உண்மைகள், மிகவும் கசந்ததால், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, அவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, அரசின் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர், குறிவைத்து சுட்ட குண்டு, பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, உயிரிழந்தார், பேராயர் ரொமேரோ.

மார்ச் மாதத்தில், தவக்காலத்தில், கொல்லப்பட்ட இவ்விரு சாட்சிகளையும், எல் சால்வதோர் மக்கள், புனிதர்களென, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருதி வருகின்றனர். இவர்களில், பேராயர் ரொமேரோ அவர்கள், 2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, அருளாளராக உயர்த்தப்பட்டார். இறையடியாரான அருள்பணி ருத்திலியோ அவர்களும், விரைவில் மக்களின் வணக்கத்தைப் பெற பீடமேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன், எல் சால்வதோர் மக்கள் காத்திருக்கின்றனர்.

வறுமைப்பட்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்த ருத்திலியோ அவர்கள், தன் நாட்டு மக்கள், தங்களது வறுமையை, இறைவனின் திருவுளம் என்று ஏற்று வாழ்ந்ததைக் கண்டு மனம் வருந்தினார். நாட்டில் நிலவும் வறுமை, இறைவனின் திருவுளம் அல்ல, அது, ஒரு சிலரின் அநீதியால் உருவானது என்பதை, மக்களுக்கு உணர்த்திவந்தார். நாட்டில் நிலவும் அநீதிகளைப்பற்றி தான் உணர்ந்த உண்மையை, அச்சமின்றி பறைசாற்றினார். ஒருமுறை, எல் சால்வதோர் அரசுத் தலைவர், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஒரு திருப்பலியில், "உருமாற்றம் பெறவேண்டும் என்று, நற்செய்தி விடுக்கும் அழைப்பினை, இந்நாட்டில், திருமுழுக்கு பெற்றுள்ள பலர், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மாற்றம் பெற அழைக்கும் இயேசுவின் நற்செய்தி என்ற வெள்ளம், தங்களை நெருங்கிவிடக் கூடாது என்ற குறிக்கோளுடன், இவர்கள், தன்னலம் எனும் பெரும் அணைகளை எழுப்பியுள்ளனர். இவர்களது தன்னலத்தை, திருஅவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்" என்று, அருள்பணி ருத்திலியோ அவர்கள் வழங்கிய மறையுரை, அவரது மரணத்திற்கு நாள் குறித்தது. நற்செய்தி கொணரும் மாற்றத்தை ஏற்க மறுத்தது, எல் சால்வதோரின் ஆதிக்க வர்க்கம். மாற்றத்தைக் குறித்து நமது நிலை என்ன?

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது. அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின் இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் உருமாற்றம், மத்தேயு நற்செய்தி, 17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள வேளையில், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும் (தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார். மாற்றங்களை சந்திக்க, இளவயது பொருத்தமானது; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4)

ஆபிரகாமைவிட இன்னும் இரண்டு வயது கூடுதலாக, அதாவது, தன் 77வது வயதில், அர்ஜென்டினா நாட்டின் புவனஸ் அயிரெஸ்ஸில் (Buenos Aires) பிறந்து, அங்கேயேப் பேராயராகப் பணியாற்றிய, கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டார். தன் பணிஒய்வைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், கர்தினால் பெர்கோலியோ அவர்கள் பெற்ற இந்த அழைப்பு, மாற்றங்களை வலியுறுத்தும் தவக்காலத்தின்போது நிகழ்ந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.

மார்ச் 13, திங்களன்று, திருஅவையின் தலைமைப் பணியில் தன் 4ம் ஆண்டை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றங்களைப்பற்றி ஒருசில பாடங்களைச் சொல்லித்தந்துள்ளார். அவர், திருஅவையில் மாற்றங்களைக் கொணர்வார் என்ற எதிர்பார்ப்பிற்கு, அவர் அவ்வப்போது அளித்துவரும் பதில் இதுதான்: "திருஅவையில் மாற்றங்கள் உருவாக, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் நிகழவேண்டும்" என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். தனிப்பட்ட மனிதர் என்ற முறையில், அவர், இதுவரை கொணர்ந்துள்ள மாற்றங்கள், நம் அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாய் அமைந்துள்ளன

.

கடந்த நான்காண்டுகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சொன்னவை, செய்தவை பலவும், அவர் ஒரு மனிதப்பிறவி என்பதை, நம் மனதில் ஆணித்தரமாகப் பதித்துள்ளன.

 • அவர் வாழ்ந்துவரும் சாந்தா மார்த்தா இல்ல குழுமத்தில், தன் உணவை தானே பரிமாறிக்கொண்டு, மற்றவருடன் உண்பது...
 • எதிர்பாராத வகையில் தொலைபேசியில் பலரை அழைத்து, ஆனந்த அதிர்ச்சி அளித்துவருவது...
 • பங்குத்தளங்களிலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைகளையும், நோயுற்றோரையும் பரிவோடு அணைத்து முத்தமிடுவது... பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்களைச் சென்று சந்திப்பது...
 • தானும் ஒரு சாதாரண மனிதன், ஒரு பாவி என்றும், தன்னையும் தனிமை, வெறுமை, ஐயங்கள் ஆகியவை வாட்டுகின்றன என்றும் ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணல்களில் கூறுவது... என்று...

நீண்டுசெல்லும் இப்பட்டியலில், நாம், மீண்டும், மீண்டும், காண்பது ஒரே ஒரு மாற்றம்தான்... திருத்தந்தை என்பவர், வெகு, எளிதாக தொட்டுவிடக்கூடிய ஒரு சாதாரண மனிதர் என்பதை நிலைநாட்டும் அர்த்தமுள்ள ஒரு மாற்றம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பணியில் நீடிக்கும் காலத்தில், பெரும் சாதனைகள் எதையும் ஆற்றாமல் போனாலும் கவலையில்லை. திருஅவையின் தலைவர், ஏனைய மனிதர்களைப்போல், ஒரு சாதாரண மனிதர்தான் என்ற உண்மையை, அவர், மக்கள் மனங்களில் ஆழப்பதித்தால், அதுவே, ஒரு பெரும் சாதனைதான். திருத்தந்தையே ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை, இவ்வுலக மக்கள், குறிப்பாக, கத்தோலிக்க மக்கள் புரிந்துகொண்டால், திருஅவையில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை என்று, பணி நிலைகள் உயர, உயர, அந்நிலைகளை அடைவோரைச் சுற்றி சுவர்களை எழுப்பி, அவர்களை, எட்டாத உயரத்தில் பீடமேற்றும் பழக்கங்கள் மாறும்போது, அச்சுவர்கள் வீழும்போது, திருஅவை, இன்னும் நலமுள்ள ஓர் இயக்கமாக மாறும். இதைத்தான், போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை போன்ற உருவகங்களால், திருத்தந்தை பேசி வருகிறார்.

உலகக் கவனத்தை ஈர்க்க, இயேசு தன் தோற்றத்தை மாற்றவேண்டும் என்று அலகை தூண்டியதை சென்றவாரம் சிந்தித்தோம். அலகையின் யோசனையைப் பின்பற்றி, இயேசு எருசலேம் கோவிலிலிருந்து குதித்திருந்தால், யூதர்கள் மத்தியில், உரோமையர்கள் மத்தியில் பரபரப்பான மாற்றங்களை உருவாக்கியிருப்பார். அத்தகைய மாற்றங்களை விரும்பாத இயேசு, தன் மூன்று சீடர்களுக்கு முன் உருமாற்றம் பெறுகிறார் என்று, இந்த வார நற்செய்தி சொல்கிறது. இந்த மாற்றம், சீடர்களின் உள்ளங்களில் நலமிக்க மாற்றங்களைக் கொணரும் என்ற நம்பிக்கையில், இயேசு, உருமாற்றம் என்ற அருளை, சீடர்களுக்கு வழங்குகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது நான்கு ஆண்டுகள் பணிவாழ்வில், ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்த பல மாற்றங்கள், வெளிப்படையாக உருவாகியுள்ளன. அதேநேரம், விளம்பரங்கள் ஏதுமில்லாத மாற்றங்கள் பலவற்றிற்கும் அவர் காரணமாக இருந்தார். இவற்றை, முக்கியமான மாற்றங்களாக நாம் எண்ணிப்பார்க்கலாம். பல ஆண்டுகளாகக் கோவில் பக்கமே செல்லாத கிறிஸ்தவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியை ஏற்ற ஒரு சில வாரங்களில், கோவிலுக்குத் திரும்பியுள்ளனர் என்பது, அதிகம் விளம்பரம் ஆகாத ஓர் உண்மை.

திருத்தந்தை அவர்களின் எளிமையான பணிவாழ்வால், திருஅவைத் தலைவர்களைப் பற்றி, மக்களின் பார்வை, தெளிவு பெற்றுள்ளது என்பது, வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். தலைவர்கள் என்று தங்களையே எண்ணிவந்தவர்கள், இன்று தங்களை, திருஅவையின் பணியாளர்கள் என்று சிந்திக்க முயற்சி செய்து வருகின்றனர். திருஅவைப் பணியாளர்களின் உறைவிடங்கள், உடைகள், பயன்படுத்தும் வாகனங்கள், சாதனங்கள், மாற்றம் பெறவேண்டும் என்ற எண்ணங்கள், மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றன. ஒரு சில நாடுகளில், ஆயர்கள், தங்கள் இல்லங்களை அழகுபடுத்த செய்த செலவைப்பற்றி, மக்கள் கேள்விகள் எழுப்பிள்ளனர். இவை யாவும், வரவேற்கத்தக்க மாற்றங்கள். மக்கள் மத்தியில் உருவாகிவரும் இந்த மாற்றங்கள் தொடரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

வத்திக்கான் என்ற நீர்நிலையில் திருத்தந்தை பிரான்சிஸ் வடிவத்தில் விழுந்த ஒரு கல், அலைகளை உருவாக்கி வருகின்றது என்பது ஆனந்தம் தரும் நற்செய்தி. அலைகள் ஒரு நேர்கோடாகச் செல்வதில்லை; வளைவுகளாய், மேலும், கீழுமாய் நகர்கின்றன. மேலிருக்கும் புள்ளி கீழாகவும், கீழிருக்கும் புள்ளி மேலாகவும் நகர்வது, அலைகளின் அழகு. ஓரிடத்தில் நின்றுவிடாமலும், பின்னோக்கிச் செல்லாமலும், தொடர்ந்து முன்னேறுவதும் அலைகளின் மற்றோர் அழகு. "திருத்தந்தை பிரான்சிஸ் அலை" இன்னும் பல ஆண்டுகள், நலமிக்க மாற்றங்களை, திருஅவையிலும், இவ்வுலகிலும், உருவாக்கவேண்டும் என்று, இறைவனை இறைஞ்சுவோம்.

தன் உருமாற்றத்திற்குப் பிறகு, இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு: "எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்." தாங்கள் கண்ட அதிசயக் காட்சியிலிருந்து அவர்கள் எழுந்து, மலையைவிட்டு இறங்கினர். அடுத்தநாள் பிரச்சனைகளைச் சந்திக்கத் துணிந்தனர். இயேசுவும், மகிமையின் உச்சத்தில், உருமாற்றம் பெற்ற மலையைவிட்டு இறங்கி, கல்வாரி என்ற மற்றொரு மலை மீது ஏறத் துணிந்தார். அந்த மலை மீது அவர் மீண்டும் தன்னையே உருகுலைத்ததால், நாம் உருமாற்றம் பெறுவதற்கு வழி வகுத்தார்.
நம் தனிப்பட்ட வாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவையிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், மனித சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்க, முதலில் நம்மிடம் மாற்றங்களை உருவாக்குவோம். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக, நாம் ஏறி நிற்கும் மமதை மலையிலிருந்து இறங்குவோம். நம்முன் மலைபோல் குவிந்திருக்கும் பிரச்சனைகளைக் கண்டு மலைத்துவிடாமல், நம்பிக்கையோடு, நலமிக்க மாற்றங்களைத் துவக்குவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

துன்பமும் மாட்சியும்

நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!

அமெரிக்கக் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்று, அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர் ரோஜர் ஸ்டாபக் (Roger Staubach).
ஒரு சமயம் இவர் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, கடுமையாகக் காயப்பட்டு, மிகவும் துன்புற வேண்டியதாயிற்று. அப்போது இவரைச் சந்தித்த செய்தியாளர் ஒருவர் இவரிடம், “நாட்டிற்காக விளையாடி இப்படிக் காயப்பட்டுத் துன்புறுகின்றீர்களே! இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்றார்.
“கால்பந்தாட்டம் ஆடும்போது காயம் படத்தான் செய்யும். காயம் படாவிட்டால், நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!” என்று தீர்க்கமாய்ச் சொல்லி முடித்தார் ரோஜர் ஸ்டாபக்.
மிகப்பெரிய கால்பந்தாட்ட வீரரான ரோஜர் ஸ்டாபக் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தி இதுதான்: ஒரு நாட்டிற்கு அல்லது ஓர் அரசருக்குப் பணிபுரிகின்றபோது துன்பங்கள் வரத்தான் செய்யும். துன்பங்களைச் சந்திக்க வில்லை என்றால், நாம் அரசருக்கு உண்மையாய்ப் பணிபுரியவில்லை என்று பொருள்.
தவக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவின் துன்பத்தில் பங்குகொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

புறப்பட்டுச் செல்!

இன்று பலரும் தங்களுக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை (Comfort Zone) உருவாக்கிக் கொண்டு, அதற்குள்ளாகவே ‘சொகுசாக’ வாழப் பழகிக் கொண்டார்கள். ஒருவேளை பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வர நேர்ந்தால், துன்புற நேரிட முடியோ? என்று, அவர்கள் கூண்டுக் கிளியாய் அதனுள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றார்கள். கடவுளின் மக்கள் அல்லது அவரது அடியார்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வாழ அழைக்கப்பட்டவர்கள் அல்ல; மாறாகப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வரவும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து வாழவும் அழைக்கப் படுகின்றார்கள்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்கிறார். சொந்த நாட்டையும் இனத்தையும் வீட்டையும் விட்டுச் செல்வது எவ்வளவு கடினம்! இன்றைக்கு எத்தனையோ பேர் சொந்த நாட்டையும் இனத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு அன்னிய மண்ணில் அகதிகளாய் – ஏதிலிகளாய் – வாழ்கின்ற கொடுமையைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆபிராமும் இத்தகைய வாழ்க்கையை வாழ ஆண்டவரால் அழைக்கப்படுகின்றார்.
ஆண்டவர் ஆபிராகாமை அழைத்தபோது காரான் (தொநூ 11:31) என்ற இடத்தில் அவர் இருந்தார். அங்கிருந்து அவர் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்ல அழைக்கப்பட்டார். ஆண்டவர் இவ்வாறு சொன்னதற்கு ஆபிராம் அப்படியே கீழ்ப்படிந்து, கானான் நாட்டிற்கு நம்பிக்கையோடு புறப்பட்டுச் செல்கின்றார் (எபி 11:8). இதனால் ஆண்டவர் கூறியது போன்று ஆபிராம் பெரிய இனமாகி, எல்லாருக்கும் தந்தை ஆகின்றார். ஆசி பெறுகின்றார். ஆபிரகாம் என்ற சிறப்புப் பெயரைப் பெறுகின்றார். இத்தகைய ஆசிகளெல்லாம் ஆபிராம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் காட்டிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதால்தான்.

துன்பத்தில் பங்குகொள்!

உறவினர்களிலும் சரி, நண்பர்களிலும் சரி நமது இன்பத்தில் பங்கு கொள்ளப் பலரும் முன்வருவதுண்டு. இவர்கள் நமது துன்பத்தில் பங்குகொள்ள முன்வருவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறி
கடவுளின் வார்த்தையைப் பிறவினத்தாருக்கு அறிவித்து, அவர் பொருட்டுச் சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார் பவுல். அப்படிப்பட்டவர் எபேசு சபையில் ஆயராக இருந்த திமொத்தேயுவிடம், “கடவுளின் வல்லமைக்கேற்ப, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” என்கிறார். பவுல் திமொத்தேயுவிடம் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் இருந்தது. தொடக்கக் காலகட்டத்தில் எபேசு சபையில் ஏற்பட்ட அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் யாவற்றையும் என பார்த்துவிட்டுத் திமொத்தேயு அச்சத்தோடு இருந்தார். இதனாலேயே பவுல் அவரிடம், “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்” (2 திமொ 1:7) என்று சொல்லிவிட்டு, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னோடு பங்கு கொள் என்கிறார்.
திமொத்தேயு என்று இல்லை; நாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் ஏன் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பவுல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டுள்ளார். அதனாலேயே நாம் துன்பத்தில் அவரோடு பங்குகொள்ள வேண்டும். அப்படி நாம் துன்பத்தில் பங்குகொள்ளவில்லை என்றால், நாம் கிறிஸ்துவின் பணியாளர்களே அல்ல!

செவிசாயுங்கள்!

கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டார் எனில், அவர் நம்மை எப்படி மீட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
இயேசு தம் சாவை முதன்முறை அறிவித்தபோது, அவரது சீடர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மெசியா எதற்குத் துன்புற வேண்டும்? மெசியாவாம் இயேசு துன்புற்று இறக்கப் போகிறார் என்றால், அவர் மெசியா இல்லையா? என்றெல்லாம் நினைத்துச் சீடர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். அவர்களுக்குத் தாம் யார் என்பதை விளக்கும்பொருட்டு, இயேசு அவர்களில் மூவரை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்று, அவர்கள் முன்னே தோற்றமாற்றம் அடைகின்றார்.
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தின் அடையாளமாக மோசேயும், இறைவார்த்தையின் அடையாளமான இறைவாக்கினர் எலியாவும் தோன்றி, எருசலேலில் இயேசு படவிருந்த பாடுகளைப் பற்றிப் பேசுகின்றார்கள் (லூக் 9: 31) அப்போது, மேகத்திலிருந்து ஒலிக்கும் குரல், “என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன். இவருக்குச் செவி சாயுங்கள்” என்கிறது.
இயேசுவை முழுமையாய் அறியாமலும், அவர் எதற்குத் துன்புறவேண்டும் என்று தெரியாமலும் சீடர்கள் இருந்த வேளையில், கடவுள், தம் அன்பு மகனுக்குச் செவிசாய்த்து வாழ வேண்டும் என்ற அழைப்பினைச் சீடர்களுக்கு விடுக்கின்றார்.
இயேசுவுக்குச் செவிசாய்ப்பது என்பது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது; அவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்வது. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர்களாய் பின்னாளில் பேதுரு, யாக்கோபு, யோவான் மட்டுமல்லாமல், மற்ற திருத்தூதர்களும் இயேசுவுக்காகத் தாங்கிக் கொண்டார்கள்.
ஆதலால் நாம் ஆபிரகாமைப் போன்று, திருத்தூதர்களைப் போன்று நாமும் கடவுளின் திருவுளம் நிறைவேறத் துன்புறுத் தயாராகவேண்டும். ஏனெனில், துன்பத்தின் வழியாகவே பேரின்ப வீடாம் விண்ணகத்தை அடைய முடியும்.

சிந்தனைக்கு

“கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” (1 பேது 2:21) என்று திருத்தூதர் பேதுரு கூறுவார். எனவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவர் பொருட்டு துன்பத்தில் பங்குகொள்ள முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உள்ஒளி

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கிடக்கிறார் எனவும், அவர் மிகவும் மெலிந்து விட்டார் எனவும், அவரது முதுகு தண்டுவடம் கூட வெளியே தெரிகிறது எனவும் சொன்னார். நம் கண்முன்னாலேயே மனிதர்களின் உருவம் மாறுகின்றது.

ரொம்ப ஆண்டுகளாகப் பார்க்காத ஒருவரை திடீரென பார்க்கும்போது அவரின் தலைமுடி வெள்ளையாகவும், ஆள் ஒல்லியாகவும் அல்லது குண்டாகவும் இருந்தால், அவரை நாம் முன்னால் பார்த்த முகம் உடனே வந்து போகிறது. 'என்ன அப்படியே மாறிட்டீங்க!' என ஆச்சர்யப்படுகிறோம்.

இன்னும் சிலர் முன்னால் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள். இன்று ஏதோ ஒரு காரணத்தால் நம்மிடமிருந்து விலகி இருப்பார்கள். அவர்களைப் பற்றி யாராவது நம்மிடம் விசாரித்தால், 'அவர் முன்னால் மாதிரி இல்ல. மாறிட்டார்' என ஆதங்கப்படுகிறோம்.

ஆக, நாமும் நம் கண்முன் நடக்கும் உடல் மாற்றங்களையும், உணர்வு மாற்றங்களையும், உறவு மாற்றங்களையும் பார்க்கின்றோம்.

மாற்றத்தை திடீரென்று பார்க்கும்போது நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளாக இருந்த நாமே வளர்ந்தோம். சிறுவர்கள் ஆனோம். இளமை வந்தது. வளர்கிறோம். மாறிக்கொண்டே இருக்கிறோம். நம்மில் நிகழும் இந்த மாற்றம் மெதுவாக நடப்பதால் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர்.

மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல் அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல. ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல், இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்:
'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?'

பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார்.
அதாவது ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். நாம் இன்று நிறைய ஃபோட்டோக்கள் எடுக்கிறோம். நம்மை நாமே செல்ஃபி எடுக்கிறோம். அல்லது பிறரை எடுக்கிறோம். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் செய்கிறோம். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது. நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம். ஆகையால்தான் ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்துவிடுகிறது.

பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார்.

பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேயோ, எலியாவோ பதில் சொல்லவில்லை.

ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்'

பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது.

அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள்.

புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம்.

முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும், அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்துகிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!' என்கிறார்.

அத்தோடு, 'இங்க நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!' என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது. எப்படி?

இங்கே தாபோர் மலை. அங்கே கல்வாரி மலை.

இங்கே அவரின் முகம் ஒளிர்கிறது. அங்கே அவரின் முகம் தூசி படிந்து இருக்கிறது.

இங்கே அவரின் ஆடைகள் வெண்ணிறமாக இருக்கின்றன. அங்கே அவரின் உடலில் ஆடைகள் இல்லை.

இங்கே மோசேயும் எலியாவும் உடன் நிற்கின்றனர். அங்கே இரண்டு கள்வர்கள் உடன் நிற்கின்றனர்.

இங்கே பேதுரு இருக்க விரும்புகிறார். அங்கே அவரை விட்டு ஓடிவிடுகின்றார்.

இங்கே வானகத் தந்தையின் குரல் கேட்கிறது. அங்கே மக்கள் மற்றும் படைவீரர்களின் ஏளனம் கேட்கிறது.

இங்கே சீடர்கள் முகத்தை மூடிக்கொள்கின்றனர். அங்கே கதிரவன் தன் முகத்தை மூடிக்கொள்கிறது.

இங்கே வெளிச்சம். அங்கே இருள்.

இங்கே சீடர்களை எழுந்திருக்கச் சொல்கின்றார் இயேசு. அங்கே தானே உயிர்த்து எழுகின்றார்.

ஆனால்,

இரண்டிற்கும் ஒரே ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது.

இங்கேயும், அங்கேயும் மாட்சி பெறுகின்றார் இயேசு.

ஆக, இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு வழியாக இறைமகன் என்னும் மாட்சி பெறுகின்றார். அந்த இறைமகனுக்குச் செவிகொடுங்கள் என்ற செய்திதான் இங்கே சீடர்களுக்குத் தரப்படுகிறது.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை சீடர்கள் எப்படி புரிந்திருப்பார்கள்?

மாற்கு நற்செய்தியாளர் சீடர்களின் புரியாத தன்மையை அடிக்கடி பதிவு செய்கிறார். இயேசுவும், அவருடைய மெசியா அடையாளமும் சீடர்களுக்கு இறுதிவரை மறைபொருளாகவே இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் உள்ள முரண் என்னவென்றால் கதிரவன்போல வந்த வெளிச்சம்கூட சீடர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கவில்லை.

நம் நம்பிக்கை வாழ்விலும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதிரவன் போல ஒளிர்ந்தாலும் நம் உள்ளத்தில் இருக்கும் தயக்கம் அல்லது சந்தேகம் என்னும் இருள் களைவதில்லை. மற்றவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்வதெல்லாம் நமக்குப் புரிந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயக்கம் காட்டுகிறது.

சீடர்களின் தயக்கம் இயேசுவின் உயிர்ப்பில்தான் மாறுகிறது. அதுவரை அவர்கள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கின்றனர். ஆக, நம்பிக்கை வருவதற்கும், வளர்வதற்கும் வெளி ஒளி தேவை அல்ல. மாறாக, உள் ஒளியே தேவை.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 1:8-10), 'அழியா வாழ்வை நற்செய்தி வழியாக ஒளிரச் செய்தார்' என திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் தூய பவுல். நற்செய்தி என்பது நாம் வெளியே இருந்து வாசிக்கக் கேட்பது அல்ல. மாறாக, இயேசுவே நற்செய்தி. அந்த நற்செய்தியை நாம் நம் உள்ளத்தில் உணர்தலே ஒளி.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல் 12:1-4) நம் முதுபெரும் தந்தை ஆபிராம் இறைவனால் அழைக்கப்படுகின்றார். 'உன் நாட்டிலிருந்தும், உன் இனத்திலிருந்தும், உன் தந்தைவீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் காட்டும் நாட்டிற்குச் செல்' என்று கட்டளை இடுகின்றார் கடவுள். ஆபிராமும் அவ்வாறே புறப்பட்டுச் செல்கின்றார். இந்த நிகழ்வையே எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்' (எபி 11:8) என எழுதுகின்றார். வெளியே இருளாக இருந்தாலும், தன் உள்ளத்தில் ஒளி இருந்ததால் புறப்பட்டுச் செல்கின்றார் ஆபிராம்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் கருத்து 'உள் ஒளி.' இந்த உள் ஒளியைக் கண்டுகொள்வதே உருமாற்றம். உள் ஒளி நம்மில் எப்போதும் இருக்கிறது. இந்த உள் ஒளியை நாம் எப்படிக் கண்டுகொள்வது?

1. இறைவனின் குரலைக் கேட்பது

காரானில் வாழ்ந்து வந்த ஆபிரகாமை ஆண்டவர் அழைக்கின்றார். ஆண்டவரின் குரலை அவர் எப்படி கண்டுகொண்டார்? என்று நினைத்துப்பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. உள்ளத்தின் குரல் என்பது நாம் அனுபவிக்கும் ஒன்று. 'இதைச் செய்! இதைச் செய்யாதே! இதைப் பார்! அதைப் பார்க்காதே!' என்று ஏதோ ஒரு குரல் நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கிறது. இதை நாம் மனம், மனச்சான்று என்றழைக்கின்றோம். சில நேரங்களில் இந்தக் குரல் - மூளையிலிருந்து எழும் இந்தக் குரல் - நம்மை ஏமாற்றியும்விடுகிறது. சில நேரங்களில் நாம் இக்குரலை வெளியிலிருந்து கேட்கின்றோம் - நண்பர்கள் வழியாக, பெற்றோர்கள் வழியாக, முன்பின் தெரியாதவர்கள் வழியாக. ஆனால், இந்த எல்லாச் சப்தங்களிலிருந்தும் இறைவனின் சப்தத்தை, குரலை எப்படி உணர்ந்துகொள்வது? உருமாற்றத்தில் சீடர்கள் கேட்கின்ற குரலில், 'இவருக்குச் செவிகொடுங்கள்' என்று சொல்லப்படுகிறது. ஆக, அவருக்குச் செவிகொடுப்பதே, அவரின் குரலைக் கேட்பதே நம் உள் ஒளியைக் கண்டுகொள்ள முடியும் என்றால், அவரோடு நாம் ஏற்படுத்தும் நெருக்கமே அவரின் குரலுக்கு அருகில் நம்மைக் கொண்டுசெல்லும்.

2. நற்செய்தியின் பொருட்டு துன்புறுவது

உள்ஒளியைக் காணுதல் என்பது துன்பத்தின் வழி. துன்பம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. நாம் எடுக்கின்ற முடிவுகள் சில நேரங்களில் நமக்குத் துன்பத்தைத் தரலாம். நம்மைத் தழுவிக்கொள்கின்ற நோய்கள், வறுமை, முதுமை துன்பத்தைத் தரலாம். ஆனால், நற்செயல் செய்ய அல்லது நற்செய்தி கேட்க என்று நாம் ஒரு தெரிவை மேற்கொள்ளும்போதும் அது நமக்குத் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தை உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு தன் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் பவுல்.

3.எழு - அஞ்சாதே - பொறுமையாய் இரு

தன்னுடைய உருமாற்றத்தைக் கண்ட சீடர்களுக்கு இயேசு அடுத்தடுத்து மூன்று கட்டளைகளை இடுகின்றார்: 'எழு,' 'அச்சம் தவிர்,' 'பொறுiமாய் இரு'. 'எழுவது' என்பது நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதையும், 'அஞ்சாதே' என்பது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும், 'சொல்லாதே' என்பது பொறுமை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. வேகமான இந்த உலகத்தில் நாம் இந்த மூன்றையும் செய்யத் தவறிவிடுகின்றோம். எனது வீடு, எனது குடும்பம், எனது வேலை, எனது படிப்பு என அப்படியே அமர்ந்துவிடுகிறோம். அவற்றிலேயே அமிழ்ந்துவிடுகிறோம். அல்லது இவற்றைக் குறித்து கலக்கம் கொள்கிறோம். அல்லது பொறுமையற்று அனைத்தையும் அனைவரிடமும் புலம்பித் தள்ளிவிடுகிறோம். 'ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு' என்பதை மறக்காமல் இருப்பதே உள் ஒளி. தாபோருக்கு ஒரு நேரம், கல்வாரிக்கு ஒரு நேரம்.

இறுதியாக, 'உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள்மேல் இருப்பதாக' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 33:22). அவர்மேல் நம்மேல் காட்டும் பேரன்பே உள்ஒளி. அதை அடைவதே நம்முடைய நம்பிக்கைப் பயணம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசுவைப் போல மாறுவோம்!

கிறிஸ்தவர்களாகிய நம் எல்லாருக்கும் உள்ள மிக முக்கிய இலக்கு நாமும் கிறிஸ்துவாக மாறுவதே. எனவேதான் நமக்குக் கிறிஸ்து அவன், கிறிஸ்து அவள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை நாம் பல தடவை சிந்தித்திருக்கிறோம். பல முறை கிறிஸ்துவாக மாற முயற்சித்திக்கிறோம். பலமுறை தோற்றும் இருக்கிறோம்.
இருப்பினும் மனம் தளராமல் நாம் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தத் தவக்காலம்.

பொதுவாக நாம் யாரையாவது பின்பற்ற விரும்பினால் அவர்களுடைய ஏதாவது ஒன்றை நமதாக்க முயலுவோம். எடுத்துக்காட்டாக அவரின் நடை, உடை, அணுகுமுறை, பேச்சு, கொள்கை, போன்றவை. இன்றைய காலத்து இளம் தலைமுறையினர் இதனைப் பெரிதும் பின்பற்றுவதை நாம் காண்கிறோம். தனக்குப் பிடித்தவர்களைப் போல உடை அலங்காரம் செய்வது. முடி வெட்டுவது. இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளைப் போல நடனமாடுவது, நடிப்பது போன்றவற்றை இணையத்தில் காண்கிறோம் அல்லவா. இவற்றை எல்லாம் செய்யும்போது தங்களுக்குப் பிடித்த நபர்களைப் போலத் தாங்களும் மாறுவதாக அவர்கள் உணர்கிறார்கள். நாமுமே இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
அவ்வாறிருக்க இயேசுவைப் போல நாம் மாற ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மலைமேலே தோற்றம் மாறும் நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மாட்சியை இயேசு அங்கே வெளிப்படுத்துகிறார். இன்னும் சற்று ஆழமாக யோசித்தால் மனிதனான இயேசு கடவுளின் சாயலை உள்வாங்கி அவரைப் போல மாறத் தான் ஒவ்வொருநாளும் முயல்வதை அங்கே வெளிப்படுத்துகிறாரெனச் சொன்னால் அது மிகையாகாது. இறைத்தன்மையை அவர் வெளிப்படுத்தியது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு அவருக்கு உதவியவை அவருடைய கீழ்படிதலும், இறைவேண்டலும். இந்த உருமாற்றத்தைத் தன் சீடர்கள் முன் வெளிக்காட்டியது எதற்காக? சீடர்களும் தன்னைப் போல இறைவேண்டலிலும் கீழ்பப்படிதலிலும் இறைஉளத்தை ஏற்றுத் தன்னைப் போல அவர்களுள் இருக்கும் கடவுள் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக.

கடவுளும் இதையே வலியுறுத்துகிறார் சீடர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் தான். "என் அன்பார்ந்த மகன் இவரே. இவரில் நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற கடவுளின் வார்த்தை நமக்குச் சொல்லது "இயேசுவின் சொல் கேட்டு அவரைப் போல மாறுங்கள். உங்களில் நான் மகிழ்வேன்" என்பதே. நாம் இயேசுவுக்குச் செவிசாய்க்க தயாராய் இருக்கிறோமா? அவரைப் போல மாற முயல்கிறோமா?இயேசுவைப் போலத் தந்தையோடு இறைவேண்டலிலும் கீழ்படிதலிலும் ஒன்றித்து இருக்கிறோமா? ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

வெறும் கவர்ச்சியின் அடிப்படையில் இவ்வுலகம் சார்ந்த சிலரைப் போல நாம் மாறுவதை விட்டுவிட்டு நம் ஆன்மாவைக் கவரும் இயேசுவைப் போல நாம் மாறினால் கடவுளின் மாட்சி நம்மிலும் வெளிப்படும். முதல் வாசகத்தில் ஆபிராம் கடவுள் சொன்னவுடன் கீழ்ப்படிந்தார். கடவுள் அவரை உலகிற்கே ஆசிர்வாதமாய் மாற்றினார். நாமும் இயேசுவைப் போல மாறினால், கடவுளின் பேரன்பு எப்போதும் நம்மீது நிலைத்திருக்கும்.

இறைவேண்டல்
எம்மைப் படைத்தவரே இறைவா! உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் மாறி உமது மாட்சியை வெளிப்படுத்த வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser