மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
இரண்டாம் ஆண்டு

சாம்பல் புதன்
இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14 | 1 கொரிந்தியர் 11: 23-26 | யோவான் 13: 1-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் அழுக்காக இருக்கும் பாதங்களைக் கழுவுவது அன்பின் அறிகுறிதானே! (யோவா 13:1-15). பசியாயிருப்பவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் தருவது அன்பின் அறிகுறிதானே! (1 கொரி 11:23-26). இறையன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் குருத்துவத்தைக் கொடுப்பது அன்பின் அறிகுறிதானே!

இன்று இயேசு அன்புக்கு இலக்கணம் வகுத்த ஓர் இலக்கியவாதியாக, இலட்சியவாதியாகக் காட்சியளிக்கின்றார். அன்பே உருவான அவர் நம்மைப் பார்த்து: நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன். நான் செய்தது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் அன்பு செய்தது போலவே நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார் (யோவா 13:34). இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நாம் பிறரை அன்பு செய்தால் நமக்கு என்ன கிடைக்கும்? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை:

ஒருநாள் வானதூதர் ஒருவர் ஒரு பட்டணத்தில் வந்து இறங்கினார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அந்த வானதூதர் அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து: "நான் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்திருக்கின்றேன். பாலும் தேனும் ஓடும் அதிசய உலகம் அது! அங்கே துன்பம் இருக்காது, துயரம் இருக்காது. அங்கே உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். என் சிறகுகளில் நான்கு பேரை சுமந்து அங்கே செல்ல விரும்புகின்றேன். யாராவது நான்கு பேர் வாருங்கள்” என்றார்.

அந்தக் கூட்டத்திலிருந்த பெரிய பணக்காரன் அவன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறகின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். ஏறியதும் கையிலே கட்டியிருந்த தங்கக் கடிகாரத்தை எடுத்து எறிந்துவிட்டு ஒரு பழைய கடிகாரத்தைக் கட்டிக்கொண்டான். வானதூதர், "பற்றற்ற உன் நிலை கண்டு உன்னைப் பாராட்டுகின்றேன்" என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், "ஐயோ ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தக் கடிகாரத்துக்குள்ளேதான் சுவிஸ் பேங்க் கணக்கு இருக்கின்றது" என்றான்.

இரண்டாமவன் ஓர் இளைஞன். அவன் கையிலிருந்தது. அவனுடைய அன்புடையாளுக்கு அவன் எழுதிய முதல் அன்புக் கடிதம். மூன்றாமவர் ஒரு தாத்தா. அவர் கையிலே இருந்தது டி.ஏ.எஸ். இரத்தினம் பொடி. நான்காவதாக ஏற விரும்பியது ஒரு சிறுமி! அவள் கையிலே ஒரு நாய்க்குட்டி! வானதூதர் அந்தச் சிறுமியைப் பார்த்து, ஓர் இடம்தான் இருக்கின்றது! என்றார். அதைக் கேட்டதும் அந்தச் சிறுமி, அப்படியானால் என் நாய்க்குட்டியைக் கொண்டு போ, நான் வரவில்லை என்றாள் சிறுமி.

அதைக் கேட்டதும் அந்த வானதூதரின் சிறகுகள் சிலிர்த்தன! அந்தச் சிலிர்ப்பில் சிறகுகளின் மீதிருந்த மூன்று பேரும் கீழே விழுந்தனர். அந்தச் சிறுமியையும், நாய்க்குட்டியையும் சுமந்து கொண்டு வானதூதர் மேலே பறந்தார்.

நாம் அன்பு செய்தால் நாம் உயரமான இடத்திற்கு, வளமும், நலமும் நிறைந்த புதிய பூமிக்கு அழைத்துச் செல்லப்படுவோம் (மத் 25:31-40).

வாழ்வை இனிதாக்குவது அன்பு. வாழ்க்கையைச் சுவையாக்குவது அன்பு. அழகற்றதை அழகுள்ளதாக்குவது அன்பு. கசப்பானதை இனிப்பாக்குவது அன்பு. தடுமாற்றத்தை அமைதியாக்குவது அன்பு. சுதந்தரத்தைப் பெற்றுத் தருவது அன்பு. எல்லாவற்றையும் அள்ளிக்கொடுப்பது அன்பு. எதிர்நோக்கைவிட உயர்ந்தது அன்பு. நம்பிக்கையைவிடச் சிறந்தது அன்பு. கைம்மாறு கேட்காதது அன்பு. இமயத்தைத் தொடவைப்பது அன்பு.

இறைவனை அடைய வைப்பது அன்பு. இப்படிப்பட்ட அன்பு கேட்பவர்களுக்கு இறைவனால் அருளப்படும் (லூக் 11:9-13).

மேலும் அறிவோம்:

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (குறள் : 347).

பொருள்:
அகப்பற்றையும் புறப்பற்றையும் விடாமல் மேற்கொள்வோரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து அல்லல்படுத்தி அலைக்கழிக்கும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "அப்பா! காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டான். அப்பா அவனிடம். "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள். உன் அம்மா கத்தினால், வந்த விருந்தாளிகள் போய்விடுவார்கள்' என்றார். விருந்தோம்பல் சிறந்த நற்பண்பு, திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13). நமக்குள்ள உணவை பலருடன் பகுத்து உண்பது தலையாய அறம் என்கிறார் வள்ளுவர்.

பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)
கிறிஸ்து உணவுத் தோழமையைப் பெரிதும் விரும்பினார், ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் (மத் 14:13-21), ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் (மத் 15:32-39) உணவு அளித்தார். அனைவரும் வயிராற உண்டனர். வரி தண்டுவோரான மத்தேயு வீட்டில் பலருடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்தார், சீமோன் வீட்டில் உணவு அருந்தினார் (லூக் 7:36). வரிதண்டுவோரின் தலைவரான சக்கேயு வீட்டில் விருந்துண்டார் (லூக் 19:1-10).

தம் சீடர்களோடு இறுதிப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிகமிக ஆவலாய் இருந்தார் (லூக் 22:15). சீடர்களுடன் பந்தியில் அமர்ந்திருந்த போதுதான் அவர் புதிய உடன்படிக்கையின் அன்பு விருந்தாகிய நற்கருணையை ஏற்படுத்தி, அதைத் தம் நினைவாகச் செய்யும்படி சீடர்களிடம் கேட்டுக் கொண்டார் (லூக் 22:19-20).

பெரிய வியாழன் ஆகிய இன்று கிறிஸ்து திருச்சபைக்கு நற்கருணைத் திருவிருந்தை அளித்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தாதர் பவுல் ஆண்டவரின் திருவிருந்தைப்பற்றிய தொன்மை வாய்ந்த மரபை நமக்கு விவரிக்கின்றார் (1 கொரி 11:23-26).

அன்பின் அருளடையாளமாகிய நற்கருணை உலகிற்காகப் பிட்கப்படும் அப்பம்; அன்பின் மூலக் கூறு பகிர்வு, கிறிஸ்து தம்மையே பிட்டுக் கொடுத்தார், 'அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்." கிறிஸ்து தம்மையே பிழிந்து கொடுத்தார். "அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்."

முதல் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் 'அப்பம் பிட்டனர்', அதாவது, நற்கருணை விருந்தில் பங்கேற்றனர் (திப 2:46), அதே நேரத்தில் வீடுகளிலும் அப்பத்தைப் பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் பகிர்ந்து கொண்டனர் (திப 2:26), அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:32,34). இவ்வாறு அவர்கள் பொதுவுடமை வாழ்க்கை நடத்தினர்.

திருச்சபை ஒரு சமத்துவபுரமாகத் திகழ, அதில் சமபந்தி நடைபெற்றது. கிறிஸ்தவர்களுடைய வாழ்வுக்கும் வழிபாட்டுக்கும் இடையே எத்தகைய முரண்பாடும் இல்லை. வாழ்க்கை வழிபாடாகவும், வழிபாடு வாழ்க்கையாகவும் மாறியது. தொடக்கக்காலச் கிறிஸ்தவர்கள் நடத்திய அன்பு வாழ்க்கையை இன்றைய அன்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இக்கால அன்பியங்களில் இறைவார்த்தையைப் பகிர்கின்றனர். ஆனால் உணவை, குறிப்பாக ஏழைகளுடன் பகிர்கின்றார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

ஆதிக் கிறிஸ்தவர்களிடையே நிலவிய உணவுத் தோழமை வெறும் மனித நேய அடிப்படையில் அல்ல, நம்பிக்கை அடிப்படையில் நடைபெற்றது. ஏனெனில், ஏழைகளில் இயேசு இருக்கின்றார். ஏழைகளுக்கு நாம் உணவு கொடுக்கும்போது இயேசுவுக்கே உணவளிக்கிறோம். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்" (மத் 25:35). கிறிஸ்துவின் உடனிருப்பை நற்கருனையில் மட்டுமல்ல, ஏழை எளியவர்களிடத்திலும் காணவேண்டும். ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர், நற்கருணையில் உள்ள இயேசுவை மதிக்க முடியாது,

பணக்காரர் ஒருவர் வாழைப் பழத்தைத் தின்று அதன் தோலைச் சன்னல் வழியாக வீசி எறிந்தார். அத்தோலை எடுத்துத் தின்ற ஒரு பிச்சைக்காரனை அவன் முதுகில் தொடர்ந்து குத்தினார். அப்பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு, “தோலைத் தின்னவனுக்கு இந்தத் தண்டனை என்றால், பழத்தைத் தின்னவனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ?" என்றான். ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களுக்கு நரகத் தண்டனை காத்திருக்கிறது (மத் 25:41 - 45). பிச்சை கேட்பவர்களுக்கு பிச்சை கொடுக்கும் நல்ல உள்ளத்தையும், அவ்வாறு கொடுக்காமல் உணவைப் பதுக்கி வைப்பவர்களுக்கு நரகத்தையும் கடவுள் வைத்திருக்கிறார் என்று பாடியுள்ளார் அப்பர் அடிகளார்.

“இரப்பவர்க்கு ஈய வைத்தார்;
கரப்பவர்க்கு கடும் நரகம் வைத்தார்."
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தியாகமான பணி

இங்கிலாந்து நாட்டில் ஒரு காதல் இணைக்கு மணஒப்பந்த விழா நடந்தது. நிச்சயம் முடிந்த நிலையில் நாட்டில் எதிர்பாராத போர். எல்லா இளைஞர்களும் போர் முனைக்குச் செல்ல அரசு பணித்தது. மண ஒப்பந்தமாகியிருந்த அந்த இளைஞனும் போக நேர்ந்திட திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இளைஞன் கடிதத் தொடர்பு வழித் தன் காதலை வெளிப்படுத்தி வந்தான். மணமகளும் அந்தக் கடிதங்களைப் படித்துப் படித்தே தன் மனத்தில் நிறைந்தவன் விரைவில் வருவான் என்று காத்திருந்தாள்.

திடீரென்று கடிதத் தொடர்பு நின்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. முற்றிலும் பழக்கப்படாத கையெழுத்து. “கடுமையான போர் ஒன்றில் என் இரண்டு கைகளையும் இழந்து விட்டேன். என்னால் எழுத இயலாது. ஒரு நண்பரைக் கொண்டு எழுதுகிறேன். நீ எனக்கு மிகமிக அருமையானவள். எனினும் இந்த நிலையில் உன்னை மணந்து கொள்வது என்பது உனக்கு இழைக்கின்ற மிகப்பெரிய கொடுமையாகும். எனவே மணஒப்பந்தக் கட்டிலிருந்து உன்னை மனதார விடுவிக்கிறேன். ஏற்ற ஒரு துணையைக் கண்டு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய் என்ற செய்தியே எனக்கு நிறைவு தரும்",

அடுத்த கணமே அந்த இளம்பெண் புறப்பட்டாள். போர்ப் படை சார்ந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். தன் காதலனைக் கண்டதும் கண்களில் நீர் மல்க அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டுச் சொன்னாள்: “உங்களை விடமாட்டேன். இந்த என் இரு கைகளும் உங்கள் கைகளாக இயங்கும்" என்னே அவளுடைய தியாக அன்பு! இயேசு காட்டிய பேரன்பின் மங்கிய சாயல் அது! மனித அன்புக்கு வரம்பு உண்டு. இறைவன் அன்புக்கு எல்லை ஏது?

"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்”. (மத்.20:28) “எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (போ.6:51) என்ற இயேசுவின் கூற்றுக்கள் பெரிய வியாழனன்று இறுதி இரவு உணவுவேளையில் செயல்வடிவம் கண்ட நிகழ்வுகள் தாம். நற்கருணையை நிறுவியதும் சீடர்களின் காலடிகளைக் கழுவியதும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரு வேறு நிகழ்வுகள் அல்ல. ஒரே அர்ப்பண அன்பின் வெளிப்பாடு.

இயேசுவின் அன்புக்கு 2 பக்கங்கள்: 1) தியாகமான பணி, 2. தாழ்ச்சியான பணி.

பணி இணையாத அன்பு போலித்தனம்; அன்பு கலவாத பணி அடிமைத்தனம்! நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்பு என்பது அன்புப் பணியால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு இன்றைய வழிபாடு கொடுக்கும் அழைப்பு, விடுக்கும் சவால்:

- நற்கருணையாக வாழுங்கள் (Be Eucharists) - பணியாளர்களாகச் செயல்படுங்கள் (Be Servants) நற்கருணையில் இது இயேசுவின் உடல், இது இயேசுவின் இரத்தம் என்று அன்று, இது எனது உடல் என்று நொறுக்கப்படும். இது எனது இரத்தம் என்று சிந்தப்படும். இது குரு என்ற தனி மனிதனின் வார்த்தை அன்று. இயேசுவின் மறைஉடலான திருச்சபையின் வார்த்தை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கல்வாரிப் பலிக்கும், அதன் மறுபதிப்பாக இன்று ஆலயப் பீடத்தில் நடைபெறும் திருப்பலிக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அங்கே இயேசு தனியாகத் தனது ஊனுடலில் பலியானார். அது இயேசுவின் பலி. இங்கோ தனது மறையுடலில் பலியாகிறார். அதாவது இயேசு நம்மில் பலியாகிறார். நாம் இயேசுவில் பலியாகிறோம். எனவே இது நமது பலி. இந்த உண்மைக்கு நம் வாழ்வில் எப்படிச் செயல் வடிவம் கொடுக்கிறோம்?

என் உடலை உண்டு என் குருதியைக் குடியுங்கள் என்று இயேசு சொன்னதும் கசாப்புக் கடைதான் யூதர்களின் நினைவுக்கு வந்தது. இன்றுகூட இயேசுவின் உடல் குருதி என்றதும் அப்பமும் இரசமும் மட்டும் தானே நம் நினைவுக்கு வருகின்றன. அதோடு சேர்ந்து மண்ணில் வதைக்கப்படுவோரின் சிதைத்த உடலும் சிந்தும் இரத்த வியர்வையும் நம் உணர்வுகளில் எழுந்தால் அப்போது வாழ்வோடு இணைந்த பலியாகும்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோ.13;14) என்றார் இயேசு. இந்த நிகழ்வில் பேதுரு தயங்கினார். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படுத்தினார். யூதாசு தயங்கவில்லை. மறுப்புச் சொல்லவில்லை. இயேசு அந்தத் துரோகியின் காலடிகளையும் கழுவினார். அப்படி ஒரு தியாகமான, தாழ்ச்சியான பணிக்காகவே அந்த இரவில் பணிக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு (மார்க்.10:41-45). பதவி என்பது பணி என்பது மறைந்து, பணி ஒரு பதவியாகி விட்ட காலம் இது. “குருக்கள் தங்களைப் பணியாளர்கள் என்று இப்போது கூறிக் கொள்வது ஒரு மாய்மாலம், ஒரு பாசாங்கு என்றே எனக்குப் படுகிறது. குருக்களிடையே நிலவும் பதவிப் போட்டி அப்படி ஒன்றும் பரமரகசியம் அல்ல" என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டது நெஞ்சத்தை வேல் கொண்டு குத்துகிறது.

என் கடன் பணி செய்து கிடப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.

எவ்வாறு நற்கருணையில் இயேசு உடனிருந்து நமக்கு உணவளிக்கிறோரோ, அதேபோன்று நாமும் வாழ்விழந்து தவிப்பவர்களோடு உடனிருந்து, பயணித்து உயிரளிக்கும் ஆற்றலாக மாறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்புசெலுத்திய இயேசு

நிகழ்வு

தந்தை, தாய், சிறு வயதில் ஒரு மகள் என்று ஓர் எளிய கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. இதில் தந்தை மிகவும் கண்டிப்புள்ளவராகவும், எப்பொழுதும் எரிந்து எரிந்து விழுபவரகவும் இருந்தார். இதனால் அவருடைய அன்பிற்காக ஏந்தித் தவித்த மகளுக்கு அது கிடைக்காமலேயே போனது. இந்நிலையில் கிறிஸ்துப் பிறப்புப் பெருநாள் நெருங்கிவந்தது. அதற்காக மகள் வீட்டில் சிறியளவில் ஒரு குடில் செய்தாள். குடிலுக்கு வெளியே ஒரு சிறிய பெட்டியைத் தங்கநிறச் சரிகையால் சுற்றி வைத்தாள். இதைப் பார்த்த தந்தை, “பணத்திற்கு நான் திண்டாடிக்கொண்டிருக்கும்பொழுது, அதன் அருமை புரியாமல், நீ இப்படிப் பெட்டியைத் தங்க நிறச் சரிகையால் சுற்றிப் பணத்தை வீணடிக்கின்றாயே!” என்று அடி அடியென அடித்தார். மகளோ எதுவும் பேசாமல், அடிகளைப் பொறுமையோடு வாங்கிக்கொண்டு, அழுதுகொண்டே தன் அறைக்குள் சென்றாள்.

மறுநாள் குடிலுக்கு முன்பாகத் தங்க நிறச் சரிகையால் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டியைத் தன் சிறிய கைகளில் எடுத்துக்கொண்டு வந்தவள், அதைத் தந்தையிடம் கொடுத்து, “அப்பா! இது உங்களுக்குத்தான் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள். மகளிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஒரு வினாடி அதிர்ந்துபோன தந்தை, தன் மகள் அன்போடு கொடுத்த பரிசை ஆசையோடு திறந்துபார்த்தார். அவர் அதைத் திறந்து பார்க்கையில், அதில் எதுவுமே இல்லாமல், காலியாக இருந்ததால், சினத்தின் உச்சிக்கே சென்ற தந்தை, “காலியாக இருக்கும் பெட்டியைக் கொடுத்து என்னிடத்தில் விளையாடுகின்றாயா?” என்று மீண்டுமாக அவளை அடிக்கத் தொடங்கினார்.

அப்பொழுது மகள் அழுதுகொண்டே, “அப்பா! உங்களை நான் அன்போடு கட்டியணைத்துக்கொண்டு முத்தமிட நினைத்தேன். அது முடியாமல் போனதால்தான், இந்தப் பெட்டுக்குள் முத்தமிட்டு, அதை உங்களுக்குப் பரிசாகத் தந்தேன். உண்மையில் இந்தப் பெட்டி காலியாக இல்லை; என் முத்தங்களால் நிறைந்துள்ளது” என்றாள். இதைக் கேட்ட தந்தை, தன் தவற்றை உணர்ந்து, அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தந்தை தன் மகளை அன்பு செய்யாமல் இருந்தாலும், மகள் தன் தந்தையைத் தொடர்ந்து அன்புசெய்து வந்தாள். பாடுகளின் பெரிய வியாழனான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், “தமக்குரியவர்மேல் அன்புகொண்டிருந்த இயேசு, அவர்கள் மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார்” என்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன. இயேசு தமக்குரியவர்களிடம் எப்படி அன்பு செலுத்தினார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அன்பு என்பது சொல்ல, செயல்

பாடுகளின் பெரிய வியாழனான இன்று பல விதங்களில் முக்கியமானதொரு நாள். ஏனெனில், இன்றுதான் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்; இன்றுதான் அவர் நற்கருணையை ஏற்படுத்தினார்; இன்றுதான் அவர் அன்புக் கட்டளையைத் தந்தார். எல்லாவற்றைவிடவும், இன்றுதான் அவர் தனது சீடர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டார்.

தமக்குரியவர்மேல் அன்பு ண்டிருந்த இயேசு, அவர்கள்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு தான் தேர்ந்துகொண்ட பன்னிரு சீடர்களுள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகிறான் என்பது அவருக்குத் தொடக்கத்திலிருந்தே நன்றாகத் தெரிந்திருந்தது (யோவா 6: 64). ஆனாலும், இயேசு அவனை வெறுக்கவில்லை; தன் சீடர்கள் குழுவில் அவன் இருக்கவேண்டாம் என்று ஒதுக்கி விடவில்லை. மாறாக, இயேசு அவனை இறுதிவரைக்கும் அன்பு செய்தார். எந்தளவுகென்றால், விருந்தின்போது அப்பத் துண்டை முதன்முதலில் தோய்த்துக் கொடுக்குமளவுக்கு இயேசு அவனை அன்புசெய்தார் (யோவா 13: 26). அப்பத் துண்டைத் தோய்த்து, ஒருவருக்குக் கொடுப்பது என்பது அன்பின் உச்சக்கட்டம், அது நட்பின் அடையாளம். யூதாசு தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்தாலும், இயேசு அவனுக்கு அப்பத்தைத் தோய்த்துக் கொடுத்து, அவன்மீது தான் இறுதிவரை அன்புகொண்டிக்கின்றேன் என்பதை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு, தன்னை வெட்டுபவருக்கு நிழல்தரும் மரம், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாசிடம் உயர்ந்த அன்பினைக் காட்டுகின்றார்.

காலடிகளைக் கழுவிய இயேசு

மலைப்பொழிவில் இயேசு, “உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?” (மத் 5: 46) என்பார். இயேசு இவ்வார்த்தைகளை மக்களுக்குப் போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை; தன் வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார் என்றுதான் சொல்லவேண்டும். யூதாசு தன்னை காட்டிக் கொடுக்கவிருந்தார்; பேதுருவோ அவரை மறுதலிக்கவிருந்தார்; ஏனைய சீடர்களோ அவர் கைது செய்யப்பட்டபோது அவரை விட்டு ஓடவிருந்தார்கள். இவையெல்லாம் இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், இயேசு அவர்களை அன்புச் செய்யத் தவறவில்லை; மாறாக அவர் அவர்கள்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார்.

இயேசு தம் சீடர்கள்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் என்பதன் வெளிப்பாடுதான், அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவியது. அடிமைகள் செய்கின்ற வேலையைப் போதகரும் ஆண்டவருமான இயேசு தம் சீடர்களுக்குச் செய்து, நீங்கள் என்னைக் காட்டிக் கொடுத்தாலும், மறுதலித்தாலும், என்னை விட்டு ஓடிப்போனாலும் நான் உங்கள்மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்லாமல் சொல்கின்றார்.

தன்னையே தந்த இயேசு

“தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்” (நீமொ 10: 12) என்ற நீதிமொழிகள் நூலில் இடம்பெறும் இறைவார்த்தைக்கேற்ப இயேசு தனது சீடர்கள் தனக்கிழைத்த துரோகத்தை மன்னித்து, அவர்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார். அவரது அன்பின் உச்சக்கட்டம்தான் அவர் தன்னையே உணவாகவும் பானமாகவும் தந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் வாழ்வளிக்கும் உணவாகவும் பானமாகவும் தந்தது இடம்பெறாவிட்டால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் அது இடம்பெறுகின்றது. இவ்வாறு இயேசு தமக்குரியர்கள்மேல் இறுதிவரை செலுத்தினார்.

இயேசு தமக்குரியவர்கள்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார் எனில், நாமும் இயேசுவைப் போன்று ஒருவர் மற்றவர்மேல் இறுதிவரை செலுத்தவேண்டும். இயேசு நம்மீது செலுத்திய அன்பு வெறும் சொல்ல, அது செயல். எனவே, நாம் திருத்தூதர் புனித யோவான் சொல்வது போல், சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.

சிந்தனை

‘இறைவன் நம்மீது அன்புகொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அவருடைய குழந்தைகளாக நாம் நடந்துகொண்டால், நமது வாழ்வது அமைதியாலும் மகிழ்வாலும் நிறைந்து, முற்றிலும் புதியதொரு வாழ்வாக மாறும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, இறைவன், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னையே கையளிக்கும் அளவுக்கு நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தவர்களாய், மற்றவர்களை நாம் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறுதி வரை அன்பு

ஒரு கணவன் மனைவி. கணவன்மேல் அந்த மனைவிக்கு நிறைய மதிப்பு உண்டு. கணவனும் அவரை மிகவே அன்பு செய்தார். உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற ஒரு நாளில் கணவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என அறிகிறார்கள். இருவருக்குமே கவலை. கணவரின் உறவினர்கள் நடுவில் யாராவது ஒருவர் சிறுநீரக தானம் செய்வார்களா எனப் பார்க்கிறார்கள். யாருமே முன்வரவில்லை. ஒரு கட்டத்தில், மனைவி கணவருக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று தன் சிறுநீரகம் பொருந்துமா என்பதை அறிகின்றார். பொருந்தும் என்று தெரிந்தவுடன் தானே சிறுநீரக தானம் செய்ய முன்வருகிறார். தன் உடலின் ஒரு பகுதி குறைந்தாலும், தான் இதற்காக நிறைய மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் தன் கணவன்மேல் கொண்ட மதிப்பினால் அந்த மனைவி அவருக்காகத் துன்பம் ஏற்கின்றார். தன் கணவரை 'இறுதி வரை' - சிறுநீரகம் தானம் கொடுக்கும் அளவுக்கு - அன்பு செய்கிறார்.

அவர் ஒரு மகன். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென தாய்க்கு உடல்நலம் சரியில்லை எனக் கேள்விப்பட்டு, வீட்டிற்கு வருகின்றார். தன் தாயின் அருகிலிருந்து அவர் கவனித்துக்கொள்கிறார். தாய் இறக்கும் வரை அவரோடு உடனிருக்கிறார். தாயை அவருடைய 'இறுதி வரை' - இறப்பு வரை - அன்பு செய்கிறார்.

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் நாட்டில் சான் சால்வடோர் உயர்மறைமாவட்டத்தில் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ. சால்வடோர் குடியுரிமைப் போர் நடந்த போது சாதாரண மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவரை எதிர்த்தவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோகின்றார். தன் நாட்டின் மக்களை அவர் 'இறுதி வரை' - தன் இறப்பு வரை - அன்பு செய்கிறார்.

இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

ஒன்று, இந்த இரவில்தான் இயேசு, 'இது என் உடல், இது என் இரத்தம்!' என்று சொல்லி, நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.

இரண்டு, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார்.

மூன்று, 'இதை நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று தன் சீடர்களின் பாதங்கள் கழுவி பணிபுரியும் தலைமைத்துவத்தைக் கற்றுக்கொடுக்கின்றார்.

நான், 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அன்புக் கட்டளையை புதிய கட்டளையாக வழங்குகின்றார்.

இந்த நான்கு முக்கியத்துவங்களையும், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் சொல்லாட்சி வழியாகச் சிந்திப்போம்.

முதலில், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்னும் வாக்கியத்தின் பொருள் என்ன?

இங்கே, 'அன்பு' என்பதற்கு, யோவான் நற்செய்தியாளர், 'அகாபே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்க நான்கு சொற்கள் உள்ளன. முதல் சொல், 'ஈரோஸ்' என்பது. இது உடல்சார்ந்த ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'காதல்' எனலாம். இனிமைமிகு பாடல் நூலில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் இத்தகைய அன்பைப் பற்றியே பாடுகின்றன. நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களும் இத்தகைய பாடல்களைத்தான் கொண்டிருக்கின்றன. இரண்டாம் சொல், 'ஃபிலியா' என்பது. இது உள்ளத்து ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'நட்பு' எனலாம். விவிலியத்தில் நாம் காணும் யோனத்தான்-தாவீது அன்பு இத்தகையது. மூன்று, 'ஸ்டார்கே'. இது உடன்பிறப்புகள் மற்றும் இரத்த உறவுக்குள் நிகழும் அன்பு. எடுத்துக்காட்டாக, தன் சகோதரன் லோத்துக்கு எதிராகப் பகைவர்கள் புறப்பட்ட போது அவர்களை எதிர்கொண்டு தன் சகோதரனைக் காப்பாற்ற ஆபிரகாம் விரைந்து சென்றது இத்தகைய அன்பால்தான். நான்காவது சொல், 'அகாபே.' இரத்த உறவு, திருமண உறவிலும், அவ்விரு உறவுகளையும் தாண்டி, முழுக்க முழுக்க தன்னையே பிறருக்குக் கையளிக்கின்ற உடன்படிக்கை அன்பு இது. கிரேக்கர்கள் பெரும்பாலும் இதைக் கடவுள் அல்லது பிரபஞ்சம் மனிதர்களை அன்பு செய்வதைக் குறிக்கப் பயன்படுத்தினர். அதாவது, மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கதிரவன் அனைவர்மேலும் தன் ஒளியை அள்ளி வீசுகிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மழை யாவருக்கும் பொழிகிறது. கதிரவனும், கடவுளும், மழையும் அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளாமல், தங்களிடம் உள்ளதை அப்படியே எந்தவொரு நிபந்தனையும் இன்றி வழங்குகின்றார்கள். ஆக, 'அகாபே' என்பது நிபந்தனையற்ற, தற்கையளிப்பு செய்யும் அன்பு. இன்றைய நற்செய்தி வாசகத்தில், யோவான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இயேசுவின் தற்கையளிப்பைக் காட்டுவதற்கே. இதே தற்கையளிப்பையே நாம் முதலில் சொன்ன மூன்று எடுத்துக்காட்டுகளில் - கணவன் மனைவி, மகன் தாய், ஆஸ்கார் ரொமேரா மக்கள் - பார்க்கின்றோம்.

அடுத்ததாக, 'இறுதி வரை' (கிரேக்கத்தில், 'எய்ஸ் டெலோஸ்') என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. 'இறுதி' என்பது மூன்று பொருளைக் குறிக்கிறது. ஒன்று, நேரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் இறுதி வரை தேர்வு எழுதினான் என்று சொல்லும்போது, அவன் 10 முதல் 1 மணி வரை எழுதினான். இடையில் எழுந்து செல்லவில்லை என்பது பொருள். இரண்டு, இடம் அல்லது தூரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, நான் பேருந்து இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என்னைத் தன் காரில் ஏற்றிக்கொண்டவர் இறுதி வரை வந்தார். இதில், இறுதி வரை என்பது நாம் செல்ல வேண்டிய இடம் அல்லது கடக்க வேண்டிய தூரத்தைக் குறிக்கின்றது. மூன்று, நிறைவு அல்லது முழுமை சார்ந்தது. பிறந்த நாள் கொண்டாடுகிறோம். கேக் வெட்டுகிறோம். அழைக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு, ஆனால் கேக் பெரியதாக இருக்கிறது. அங்கிருந்த ஓர் இளவல் அந்த கேக்கை இறுதிவரை உண்கின்றார். அதாவது, முழுமையாக உண்கின்றார்.

'இறுதிவரை இயேசு அன்பு செய்தார்' என்பதை நாம் மேற்காணும் மூன்று பொருள்களிலும் எடுத்துக்கொள்ளலாம். தன் வாழ்வின் இறுதி நேரம் வரை அன்பு செய்தார். கலிலேயாவில் தொடங்கிய தன் பயணத்தின் இலக்கான எருசலேம் வரை அன்பு செய்தார். முழுமையாக, எந்தவிதக் குறையுமின்றி, 'தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு' அன்பு செய்தார்.

இயேசு யாரை அன்பு செய்தார்?

'உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர்' என எழுதுகிறார் யோவான்.

யோவான் நற்செய்தியில், 'உலகம்' என்றால் 'கடவுளுக்கு எதிரான நிலை' என்றும், 'கடவுள் இயங்கும்தளம்' என்றும் பொருள். இங்கே, இரண்டாவது பொருளில்தான் நாம் இந்த வார்த்தையை எடுக்க வேண்டும். 'தமக்குரியோர்' என்றால் அது திருத்தூதர்களையோ, தனிப்பட்ட யூத இனத்தையோ மட்டும் குறிக்கவில்லை. மாறாக, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைவரையும் - அதாவது, எல்லாரையும் - குறிக்கிறது. ஆனால், இந்த நிலை ஒரு சிறப்புரிமை மட்டுமல்ல. மாறாக, ஒரு பொறுப்புணர்வும் கூட. இந்தச் சிறப்புரிமையைப் பெறுபவர்கள் அதற்கேற்றாற் போல வாழ்ந்த அந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும். யோவான், தன் நற்செய்தியின் தொடக்கத்தில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' எனப் பதிவு செய்கின்றார். இங்கே, மக்கள் தங்களிடம் வந்தவருக்குச் செய்த எதிர்மறையான பதிலிறுப்பையே நாம் காண்கின்றோம்.

நாம் எல்லாருமே அவருக்கு உரியவர்கள். நம் அனைவரையும் அவர் இறுதி வரை அன்பு செய்கிறார்.

அவர் நம்மை இறுதி வரை எப்படி அன்பு செய்கின்றார்?

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் கொண்டாட வேண்டிய முதல் பாஸ்கா விருந்து அல்லது விழா பற்றி மோசே மற்றும் ஆரோன் வழியாக கடவுள் வழங்கும் அறிவுரையைக் கேட்கின்றோம். விருந்து எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் எனச் சொல்கின்ற ஆண்டவராகிய கடவுள் தொடர்ந்து, 'இது ஆண்டவரின் பாஸ்கா. ஏனெனில், நான் இன்றிரவே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்' என்று சொல்கின்றார். ஆக, ஆண்டவராகிய கடவுள் கடந்து செல்வதையும், அவருடைய கடந்து செல்தலால் தீமை அழிவதையும், கடவுளின் வல்லமை எதிரிகளின் முன் வெளிப்படுவதையும் நாம் காண்கின்றோம். ஆக, தீமையை அழிப்பவராக கடவுள் நம் முன் கடந்து சென்று நம்மை அன்பு செய்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் நடுவே, அப்பம் பிட்குதல் நிகழ்வில் நடந்த பிறழ்வுகளை - ஏற்றத்தாழ்வுகளை, ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றவர் தள்ளப்படுவதை, உணவு மற்றும் குடிவெறியை - கடிந்துகொள்கின்ற பவுல், இந்த அப்பம் பிட்குதலின் தோற்றுவாய் ஆண்டவராகிய இயேசு என்றும், இந்த வெளிப்பாடு தான் பெற்றுக்கொண்டது என்றும், இதற்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதையும் முன்மொழிகின்றார். 'பெற்றுக்கொண்டேன் - ஒப்படைக்கின்றேன்' என்று சொல்வதன் வழியாக, இந்த மரபு வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்கிறார் பவுல். இயேசு ஏற்படுத்திய நற்கருணை புதிய உடன்படிக்கை ஆகும். ஆக, இது உறவைக் குறிக்கின்றது. அப்பம் பிட்குதலின் இலக்கு என்னவென்றால், 'ஆண்டவருடைய சாவை - தற்கையளிப்பை - அவர் வரும் வரை அறிக்கையிடுவது. ஆக, கடவுள் நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டு, நமக்காகத் தன்னையே கொடையாகக் கொடுத்து நம்மை அன்பு செய்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், பாஸ்கா விழாவுக்கு முந்தைய நாளில் - யோவான் நற்செய்தியில் நாள் முரண்பாடு உள்ளது - தம் சீடர்களோடு உணவருந்துகின்ற இயேசு, அப்பமும் இரசமும் கொண்டு நற்கருணையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தண்ணீரும் துண்டும் கொண்டு 'பணிவிடை நற்கருiணையை' ஏற்படுத்துகின்றார். இது ஒரு பெரிய இடறலாக இயேசுவின் சீடர்களுக்கு இருந்திருக்கும். ஓர் அடிமை செய்கின்ற வேலையை, தங்களில் யாரும் அதைச் செய்வதற்கு முன் வராத நிலையில், தங்கள் தலைவர் அச்செயலைச் செய்தது குறித்து அவர்கள் பதறிப் போனார்கள். 'உங்களை நான் பணியாளர்கள் என்றல்ல, மாறாக, நண்பர்கள் என அழைத்தேன்' என்று சொன்ன இயேசு, நட்பின் அடையாளமாக பணிவிடையைக் கையில் எடுக்கின்றார். அவர் நமக்குப் பணிவிடை செய்து நட்பு பாராட்டினால் அன்றி, நாம் யாருக்கும் பணிவிடை செய்யவோ, யாரிடமும் நட்பு பாராட்டவோ முடியாது. ஆகையால்தான். தன் பாதங்களைக் கழுவ பேதுரு அனுமதிக்காதபோது, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' என்கிறார் இயேசு. ஆக, நமக்குப் பணிவிடை செய்வதன் வழியாக, பணிவிடை வழியாக, நம்மை நண்பர்கள் நிலைக்கு உயர்த்துவதன் வழியாகக் கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.

நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி நற்கருணை கொண்டாடுகின்றோம். அருள்பணி நிலையில் பணிக்குருத்துவத்திலும், பொதுநிலையில் பொதுக்குருத்துவத்திலும் பங்கேற்கின்றோம். இரண்டிலும் நாம் கற்க வேண்டியது ஒன்றே: 'அன்பு செய்தல்', குறிப்பாக, 'இறுதிவரை அன்பு செய்தல்.'

இறுதிவரை அன்பு செய்தல் என்பது, (அ) தீமைகளை அழித்து நாம் அன்பு செய்பவரோடு உடன் செல்வது, (ஆ) ஒருவர் மற்றவரோடு உடன்படிக்கை செய்துகொண்டு, உடன்படிக்கையின் உரிமைகள் மற்றும் கடமைகளை உணர்ந்து, நம்மையே கொடையாக மற்றவருக்குக் கொடுப்பது, மற்றும் (இ) ஒருவர் மற்றவருக்குக் கீழ் நம்மையே நிறுத்தி நம் முகம் உயர்த்தி அவரின் முகம் பார்ப்பது என்னும் மூன்று நிலைகளில் நம் வாழ்வில் வெளிப்படலாம்.

இந்த மூன்று நிலைகளையும் அடைய சில தடைகள் இருக்கின்றன: (அ) நாம் அன்பு செய்பவர்களுக்கே நாம் சில நேரங்களில் நாம் தீங்கு நினைக்கிறோம். அவர்களைத் தவறாகப் புரிந்துகொள்தல், புரிந்துகொள்ள மறுத்தல், நம் எதிர்பார்ப்புகளை அவர்கள்மேல் சுமத்துதல், குற்றங்காணுதல், பொறுப்புணர்வு துறத்தல், போன்றவற்றின் வழியாக, நாம் அவர்களுக்குத் தீங்கிழைப்பதோடு, அவர்களோடு உடன்செல்ல மறுக்கின்றோம். இறுதிவரை இருக்க வேண்டிய உடனிருப்பு இவ்வாறாக பாதியிலேயே முடிந்துவிடுகிறது. (ஆ) உடன்படிக்கையின் கடமைகளை மறந்து உரிமைகளை மட்டும் பிடித்துக்கொள்வது இரண்டாவது தடை. திருமண உறவின் உரிமையை நாம் விரும்புவது போல கடமையையும் உணர வேண்டும். அருள்பணி நிலையிலும் அவ்வாறே. உரிமையை முன்னிறுத்தி, கடமையை மறுக்கும்போது நாம் நம்மை நமக்குள்ளே வைத்துக்கொள்கின்றோம். மற்றும் (இ) மற்றவருக்குக் கீழ் அமர்ந்து அவரின் முகம் பார்ப்பதை விடுத்து, அவருக்கு மேல் அமர்ந்து அவரைப் பார்க்க விரும்புகின்றோம். கீழிருந்து மேல் பார்வையில் கண்கள் சந்திக்கும். கண்கள் சந்திக்க அங்கே உறவு உண்டாகும். நம் விருந்தி மேசையிலிருந்து எழுவதும், நம் ஈகோ என்னும் மேலாடையைக் களைவதும், அமர்வதும் கடினமே. ஆனால், கடினமானவையே வாழ்வின் இனிமையானவையாக மாறுகின்றன.

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (116), 'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரின் பெயரைத் தொழுவேன்' என்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நம்மை இறுதிவரை அன்பு செய்து நமக்கு நன்மை செய்தார். அவரைத் தொழுவது என்றால், அவரின் கிண்ணத்தைக் கையில் ஏந்துதல் என்றால் அவரைப் போல நாமும் இறுதி வரை அன்பு செய்ய முன்வருதலே.

இறுதி வரை அன்பு செய்தல் நலம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின் நினைவாகச் செய்வோமா?

வீட்டிலே அனைவரும் அமர்ந்து மகிழ்வுடன் திரைக்கு புதிதாய் வந்த திரைப்படத்தைக் கண்டுகொண்டிருந்தனர். அப்போது வாசலிலே ஒரு பிச்சைக்காரர் "அம்மா தாயே" என்று மிகவும் பரிதாபமான குரலில் அழைத்தார். வீட்டில் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. படம் பார்க்கும் ஆர்வத்தில் அப்பெரியவரின் சப்தம் அவர்கள் காதிற்கு எட்டவில்லை. அப்போது வேறு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்தப் பிச்சைக்காரரிடம் அப்பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவர் அனைவரையும் சற்று கோபத்துடன் பார்த்தார். பின் தன் பேரனை அருகில் அழைத்து " தாத்தா செய்ததைப் பார்த்தாய் அல்லவா. இனிமேல் யாராவது பிச்சை கேட்டு வந்தால் உடனே எதாவது கொடுக்க வேண்டும். அப்போது இந்த தாத்தாவையும், தாத்தா செய்த செயலையும் நினைத்துக்கொள் " என்று கூறிவிட்டு மீண்டுமாக தன் அறைக்குள் சென்றார்.

இன்று புனித வியாழன். இன்றைய நாளில் நாம் இயேசு தன் சீடர்களோடு பாஸ்கா உணவு அருந்திய நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.இந்நாளில் இயேசு தன்னையே தாழ்த்தி தலைவன் என்ற நிலையிலிருந்து இறங்கித் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வையும் நாம் நினைவு கூறுகிறோம். மேலும் இயேசு "இது என் உடல்.இது என் இரத்தம். இதைப் பெற்று உண்ணுங்கள்,பருகுங்கள் " என்று கூறி என்றும் அழியா தன் உடனிருப்பாக நற்கருணையையும், தன் நினைவாக பலியை நிறைவேற்ற குருத்துவத்தையும் ஏற்படுத்திய நாளிது.

இந்நாளில் இயேசு தாழ்ச்சியும் பணிவிடை புரிவதுமே உண்மையான தலைமைத்துவம் என்ற கருத்தையும் இயேசு நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கற்றுத்தருகிறார். அதிலும் குறிப்பாக தன்னையே உணவாகக் கையளித்து " இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்று தம் சீடரிடம் கூறுகிறார் இயேசு. அதே வார்த்தைகளை இன்று நம்மிடமும் கூறுகிறார் நம் ஆண்டவர் இயேசு.

இவ்வாறு கூறி இயேசு நம் உடலையும் இரத்தத்தையும் பிறருக்காக கையளிக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக நம் அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இயேசுவை நாமும் நினைவு கூர்ந்து பிறரும் நினைவு கூறும் வண்ணம் நாம் வாழ வேண்டும் என்பதையே அவர் கூறுகிறார்.

பிறரை அன்புடனும் கரிசனையுடனும் சிரித்த முகத்துடனும் நோக்குதல், தனிமையாய் இருப்பபவரிடம் சென்று சில மணித்துளிகள் உரையாடுதல், தாங்கித் தள்ளாடி நடப்பவர்களுக்கு கரம் கொடுத்து உதவுதல் , இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பகிர்ந்து கொடுத்தல், விழுந்தவரைத் தூக்கி விடுதல், தெரிந்தே நமக்கெதிராய் தீமை செய்பவர்களையும், நம்ப வைத்து ஏமாற்றுபவர்களையும் மன்னித்தல், பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பாசமாய்ப் பழகுதல், போன்ற சின்னச் சின்னக் காரியங்கள் கூட இயேசுவின் நினைவாகச் செய்யப்படும் காரியங்களே.

சுருங்க்கூறின் சுயநலம் துறந்த எல்லா பிறரன்புச் செயல்களும், சிறியதானாலும் பெரியதானாலும் இயேசுவின் நினைவாகச் செய்யப்படும் செயல்களே. ஏனெனில் இயேசு தன்னலம் நாடாதவர். மனித நேயம் கொண்டவர். அவருடைய மனநிலையை நமதாக மாற்றி பிறரன்புப் பயணிகள் செய்யும் போது நாம் அவரை நினைவு கூறுவதோடல்லாமல் பிறருக்கும் இயேசுவை நாம் நினைவூட்டுகிறோம். எனவே அதற்கான வரத்தை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா தன்னலம் துறந்த பிறரன்புப் பணிகளை இயேசுவின் நினைவாகச் செய்யும் வரம் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு